இது என்ன அபர்த்தம் என் அழைப்பு மணியை கேட்பதற்காகவா சந்திக்கவுள்ளீர்கள்? குயிலிசைக்கும் குயிலுக்கும் நெடும்தூரம் என்று பலர் சொல்லிவிட்டார்கள். குரலை கேட்கும் போது தகரபேணியால் நிலத்தை உராய்வது போல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அவ்….
எனது தொலைபேசியின் அழைப்பொலி தாண்டவம் படத்தின் தீம் மியூசிக் தான். இதனை வீட்டிலிருக்கும் பியானோவில் தட்டிப்பழகி பழகி என்னால் நன்றாக வாசிக்க முடியும். இனிமையான ஒலி! இது வீட்டவர்களுக்கு, என்னவர் இலக்கத்திற்கு மட்டும் Apna Bana Le https://www.youtube.com/watch?v=UEvOsQBu1jY&list=RDUEvOsQBu1jY&start_radio=1 பட பாடலை வீணையில் வாசித்து பதிவுசெய்துள்ளேன். (இது அவருக்கே தெரியாது. ஆனால் என் கணிப்பில் இசையார்வமுள்ள அவருக்கு இது பிடிக்கும் என நான் நம்புகின்றேன். இது வராளி இராகம். கடினமானது இதனை வீணையில் வாசிப்பது மிகமிக கடினமானது. ஆனால் பிடித்தவர்களுக்கு வழமையானதை கொடுப்பதை விட கிடைத்தற்கரியதை கொடுப்பது தானே காதல்! ஆனால் இதில் டிவிஸ்ட் ஒன்றும் வைத்துள்ளேன். அவர் அருகில் இருக்கும் போது தொலைபேசியில் அழைக்கமாட்டார் தானே! எனவே அவர் கேட்பதும் அரிதானது. வராளி மாதிரியே இலகுவானதல்ல…. எப்படியிருக்கின்றது இது? இதனை அனுப்ப கேட்காதீர்கள். முடியாது! சில ஒருவருக்கு மட்டுமானது!
ஏனைய அழைப்பாளிகளுக்கு வெறும் மணியோசை தான்! என்னை சந்திக்க நீங்கள் ஆயத்தமாவது சரி. நானும் ஆயத்தமாக வேண்டுமே, யாரை எப்போது சந்திக்க வேண்டும் என நான் தான் தீர்மானிப்பதுண்டு நண்பரே!
நான் ஒரு பெண்ணின் பின்னால் பல வருடங்களாக சுற்றுகின்றேன். பல வழிகளிலும் சொல்லி பார்த்து விட்டேன். பல உதவிகளும் அவளுக்கு செய்துள்ளேன். ஆனால் இன்னும் என் காதலை ஏற்கவில்லை. என்ன செய்யலாம்?
முதலில் அன்பென்பது வியாபாரமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உதவிசெய்தால் அதற்கு பிரதியுபகாரமாக காதலை ஏற்கவேண்டுமென்பதில்லை. பலவந்தப்படுத்தி, பரிதாபம் உண்டாக்கியெல்லாம் ஒரு அன்பை நிலைக்கச்செய்ய முடியாது. நம்மை பிடிக்கவில்லை என்றால் விலகுங்கள், அல்லது தூரத்தில் நின்று பாருங்கள், அல்லது உங்களை நேசிப்பவளை தேடுங்கள். காதல் என்பது மொட்டு முகிழ்வது போன்ற சத்தமற்ற, ஆரவாரமற்றதாக அனிச்சம் பூவின் மென்மையுடன் இருக்க வேண்டும் நண்பரே! I Love U! Do u love me? என்று கேட்பதை விடவும் வன்முறை வேறில்லை, கேவலமான விடயம் வேறில்லை. அன்பு என்பது உணர்தல் + உணர்த்துதல்.
என்னை யாராவது பலவந்தப்படுத்தினால் எனக்கு பயங்கர வெறுப்பும் கோபமும் வருவதுண்டு. அதனால் எனக்கும் யாரையும் வற்புறுத்துவதில் உடன்பாடில்லை. இது தான் அடுத்தவர்களுக்கும். நம் அன்பை புரிந்துகொண்டால் நேர்மையாக , பற்றிய கைகளை விலக்காமல் வாழ்நாளெல்லாம் அன்பாக வாழ்வோம். இல்லையா அழுத்தி பிடித்து அதை கொல்ல வேண்டாம்! நம்மை பதிலுக்கு நேசிக்கவில்லை என்பதற்காக அவர்களை பொதுவில் அவமதிப்பது, முதுகில் குத்துவது, அடுத்தவரிடம் அவரைப்பற்றி அவதூறு பேசுவதெல்லாம் கீழ்த்தரமானது. என்றாவது நம்முடைய அன்பின் வெம்மை அவர்களை தீணடாமலா போய்விடும். உங்களை அதே அன்புடன் நேசிக்கின்ற அருமையான பெண் கிடைப்பாள் கவலை வேண்டாம், வியாபார பேரம் வேண்டாம்.
நான் என்றால் என்னை ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அக்கணமே சொல்லிவிட்டு விலகிவிடுவேன். ஒரு வார்த்தை கூட பேமாட்டேன் என் அன்பை உணரும் வரை! நான்…….. நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர், நல்ல வியாபாரி ஆனால் அன்பில் இதெல்லாம் வைத்துக்கொள்வதில்லை. மனம் தான் கணக்கு எனக்கு!
அன்புத்தங்கைக்கு! உங்கள் ஆயுதங்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்தேன். பெண் ஆயுதங்கள் பற்றி எழுதி நான் வாசித்த முதல் கட்டுரை இது. அருமை! நாம் இருந்திருந்தால் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுத்திருப்போம்.
நன்றியண்ணா, உங்கள் நீண்ட நெடிய கேள்விகளை சுருக்கியிருக்கின்றேன். ஆங்கிலத்தில் இருந்ததை மொழிமாற்றம் செய்துள்ளேன் மன்னியுங்கள். எனக்கு சிறுவயதில் இருந்தே ஆயுதங்களை பிரித்து மேய்வதில் ஆர்வமுண்டு. மோட்டோர்கள் வைத்து வடிவமைப்பதுண்டு. என் தாயார் கூட இதனை நீ கருவில் தான் கற்றிருப்பாய் என்று செல்லமாக கண்டிப்பதுண்டு. …. ஆண்டு நான் தரம் ஆறில் கற்றுக்கொண்டிருந்த போது ……. இல் பெற்ற பெறுபேறுகளை வைத்து அழைப்பு வந்தது. நாம் நிறைய இழந்திருக்கின்றோம் என்பதால் இந்த பாதையை அம்மா விரும்பவில்லை. அன்று அம்மாவுடன் பேசிய பின் என்னை வைத்து உங்களவர்கள் எடுத்த புகைப்படத்தினை உங்களுடன் பகிர விரும்பகின்றேன். உங்கள் மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள் அண்ணா! உயர்தரத்தின் பின்னரும் விமானம் தொடர்பில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது குடும்பத்திற்கு இருந்த நெருக்கடியால் முடியவில்லை. ஆனாலும் வெளி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஆயுத வடிவமைப்பு பற்றி குறுங்கால பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ளேன். தற்போது பூமியதிர்வு சார் படிப்பும் குற்றவியல் துறையில் பட்டப்பின் படிப்பும் தொடர்கின்றது. முடித்த பின் இதனை தான் தொடர நினைத்துள்ளேன். காலம் எனக்கு எதனை வைத்துள்ளதோ தெரியவில்லை.;. ஒருவேளை தோற்றால் எமது மகள் அல்லது மகன் இதனை தொடர்வார்கள். சேர்ந்து பயணிப்போம். முடிந்தால் இது சார்ந்த துறையில் இருப்பவர்களை எனக்கு அறிமுகம் செய்து வையுங்கள் அண்ணா!
அன்பே… அன்பே உந்தன் பெயர் சொல்லி நெஞ்சில் பச்சை குத்திக்கொள்ள போகிறேன்.
நல்லது உங்கள் நெஞ்சு இதில் எதை வேண்டுமானாலும் குத்துக்கள். ஆனால் பச்சை குத்தினால் இலகுவில் அழியாது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.. எதிர்காலத்தில் உங்கள் நெஞ்சில் சாய்பவள் உங்கள் மூக்கில் முஷ்டியால் குத்தாமல் இருந்தால் சரி. அல்லது என் பெயரில் உள்ள ஒருத்தியை தேட வேண்டியிருக்கும் பரவாயில்லையா? இது ஏதொவொரு பாட்டின் வரி போலும் தோன்றுகின்றது.
நான் செய்தது பிழை தான். அது தான் தூது அனுப்பிவிட்டேனே…..
இந்த புறாத்தூது, இப்படி புனைப்பெயரில் மன்னிப்பு கேட்பதெல்லாம் என்ன டிசைன் என்று புரியவில்லை. நீங்கள் பிழை செய்தால் நீங்கள் தான் நேரடியாக மன்னிப்பு கேட்கவேண்டும். நீங்கள் தான் கெஞ்ச வேண்டும்………
உங்களை காதலிக்கலாம் என்றிருக்கின்றேன்…..
என் மூக்கு நுனி வரை உங்களுக்கு சுதந்திரம் உண்டு. தாராளமாக “…லாம்”! ஆனால் நினைத்த நேரம் பார்க்க வேண்டும் என்பேன். மிஸ் யூ சொல்லென்பேன்…. கறுப்பில், கருநீலத்தில் சேட் போடென்பேன்….. கண்ட கண்டதெல்லாம் சமைத்து சாப்பிடென்பேன்….. உங்கள் அறை முழுவதும் என் வர்ணங்கள் தெளித்திருப்பேன்....... குட்டி குட்டியாக நிறைய சண்டை போடுவேன்.... வீணை நிகழ்வில் முன்வரிசையில் இரு என்று கூப்பிடுவேன்….. 12 மணிக்கு எழுப்பி குட்மோனிங் சொல்வேன்… ஒக்கீட், கள்ளிச்செடிகள் வாங்கித்தா என்று தொல்லைபடுத்துவேன்…. யாராவது பிள்ளை ஹார்ட்டின் போட்டால் அழுது சண்டை போடுவேன்….. எப்போது பிஸி என்கின்றீர்களோ அப்போதெல்லாம் வேண்டுமென்றே கோல் பண்ணி அரியண்டப்படுத்துவேன்…. புத்தகங்கள் வாங்க கூட்டிப்போய் மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பேன்… திருமணத்திற்கு முன்னர் சந்திக்க கூடாதென்றெல்லாம் சொன்னாலும் சம்பிரதாயங்கள் தாண்டி உன்னை பார்க்க வேண்டும் வா என்று பிடிவாதம் பிடிப்பேன்….. இன்னும்…. இன்னும்… நிறைய இம்சைகளுக்கு தயாரா……. ? இப்போது சொல்லுங்கள் டீல்?
No comments:
Post a Comment