Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

அம்மா கணக்கு!

                  Is A Level Maths Hard? | Tutorful 

நேற்றைய தினம் முகநூலில் பிரபலமானதொரு ஊடகம் வினாவொன்றினை பகிர்ந்திருந்தது. “நீங்கள் கணிதபாடத்தில் வாங்கிய குறைவான புள்ளி என்ன?” என்கின்ற கேள்வி. எனக்கு கணக்கு என்றாலே முதலில் வந்து நிற்பது அம்மாவின் முகம் அடுத்தது சசி சேரின் முகம். அதுவும் தெரிகின்ற இரு முகங்களுக்கும் பக்கத்தில் கூடவே அவர்களது மூங்கில் கம்பும் வந்து நிற்கும்.  

எங்கள் வீட்டில் பொங்கல், கிறிஸ்மஸ் போன்று தான் ரிப்போட் தரும் நாளும். அவ்வளது சம்பவங்கள் அன்றைய நாளில் காத்திருக்கும். வழமையாக எல்லா வீடுகளிலும் தங்களுடைய பிள்ளைகள் வகுப்பில் முதலாவதாக வந்தால் எப்படியெல்லாம் பூரித்து போவார்கள். ஆனால் நளினிக்கு (அம்மா) மட்டும் வாய்ப்பேயில்லை. அம்மாவின் கணக்கே வேறு. முதலாம் பிள்ளை என்பதை விட புள்ளி மேல் தான் கவனம் இருக்கும். அநேகமாக நாமனைவரும் மூன்றாம் பிள்ளைக்குள் வந்துவிடுவதுண்டு. ஆனாலும் வாங்கிக்கட்டுவதுண்டு. காரணம் புள்ளி! 

ரிப்போட் தரும் நாளின் பாதிப்பு வகுப்பில் வினாத்தாள் காட்டத்தொடங்கியதுமே ஆரம்பித்துவிடும். ரிப்போட் தரும் நாளின் காலையில் எல்லா மாணவர்களும் அன்றிலிருந்து தொடங்கும் பள்ளி விடுமுறையில் குதுகலிப்பில் இருக்கும் போது நமக்கு மட்டும் வேப்பிலை உருண்டை சாப்பிட்டது போல ஏதோவொன்று தொண்டைக்குள் வந்து போகும். ஆனால் வீட்டில் இருவர் மட்டும் வழமை போன்றே இருப்பார்கள். அவர்களுக்கு பாடங்களின் புள்ளியும் 95 விட்டு இறங்குவதில்லை. ஜீனியஸ்! அவர்களை பற்றி சொல்லத்தேவையே இல்லை. புத்தகம்- விளையாட்டு, புத்தகம்- சாப்பாடு, புத்தகம் - இசை என்று புத்தகத்ததையே கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்போது நரம்பையும், மூளையையும் வெட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இருவர் தவிர்ந்த மற்றவர்களுக்கு கனவிலும் அம்மா கம்போடு தான் நிற்பார். 

ரிப்போட் நாளன்று மதியம் பாடசாலை விட்டு வந்ததும் முன் மேசையில் அனைவரது ரிப்போட்டும் வைக்கப்படும். புத்தகங்களின் ஓரம் மட்டுமல்ல ரிப்போட்டின் ஓரமும் கசங்கியிருந்தாலோ அல்லது ஊத்தை பட்டிருந்தாலோ அதற்கு வேறு கேர்ணல் நளினியிடம் வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும். அன்று மதிய உணவின் போது வழமை போன்று சேட்டைகள் இருக்காது. மாலை 4.30 மணியிலிருந்து எப்போது அம்மாவின் பைக் சத்தம் கேட்கும் என்று காது உன்னிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். கிறிக்கட் கொமன்றி மாதிரி வந்து விட்டார், பைக்கை வைத்துவிட்டார், ரிப்போட்டை பார்க்கின்றார், விளாசப் போகின்றார் என்று மனம் வாசித்துக்கொண்டேயிருக்கும். 

வந்ததும் தன்னுடைய கைப்பையை வைத்துவிட்டு சாறியை தூக்கி இடுப்பில் ஒரு சொருகி சொருகிவிட்டு ரிப்போட்களை கையிலெடுப்பார் பாருங்கள் அப்படியே சொர்ணாக்கா தான். பிறகென்ன அகரவரிசைப்படி விழும். கையால் கிள்ளுவது நுள்ளுவது எல்லாம் கிடையாது. நல்ல மூங்கில் பிரம்பொன்று அந்த நாட்களில் வீட்டில் இருந்தது. கிட்டத்தட்ட நாட்டாமையின் அங்கவஸ்திரத்திற்கான மதிப்பு அதற்கிருந்தது. அதனை இரகசியமாக கைப்பற்ற சூழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.   

முழங்காலுக்கு கீழ் தான் அடிவிழும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி மெனு. 90 எடுத்தாலும் மிச்ச 10 என்னாகிட்டு என்று தான் விழும். நளினியின் நல்ல காலம் அந்த காலத்தில் “சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்” என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களுள் ஒரு சிறுமி தான் நான். அம்மாவிடம் தங்களுடைய கைகளை நீட்டி டீசன்டாக அடி வாங்கிய ஒருசிலரும் இருந்தார்கள். ஆனால் கம்மை ஓங்கும் போதே கத்த ஆரம்பிப்பவர்களாகிய நாங்களும் இருந்தோம். இதற்கிடையில் அடிவாங்கி கத்தும் போது தன்னார்வத்தில் எம்மை காப்பாற்ற நடுவில் புகுந்து அடிவாங்கவும் அம்மம்மா என்றொருவர் இருந்தார். அம்மா அடித்த தடங்கள் அழியும் வரை “பிள்ளைகளுக்கு எருமைமாட்டை அடிப்பது போல ஏன் பிள்ளை அடிக்கிறாய்…?” என்று சட்டம் பேசி ஆஜராகின்ற வக்கீலும் அவரே!

இப்படியான நேரத்தில் தான் ரிப்போட் தருவதற்கு முன்னர் பெற்றோர்கள் திருத்திய வினாத்தாளினை பார்ப்பதற்கானதொரு முறைமை ஏற்பட்டது. ஏற்கனவே படிப்பித்த ஆசிரியர்களுள் பலர் அம்மம்மா அதிபராகவிருந்த காலத்தில் அவரிடம் படித்தவர்கள், மீதம் சிலர் அம்மா வலயக்கல்வி பணிப்பகத்தில் இருப்பதால் அவருக்குத் தெரிந்தவர்கள். இனி கேட்கவா வேண்டும். பள்ளி வாழ்க்கையே கத்தி விளிம்பு போல தான். சின்ன பிழை விட்டாலும் அவ்வளவு தான். போதாததற்கு இந்த முறைமை வேறு வந்து தொலைத்தது. 

அப்போது நான் 6 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் திருத்திய வினாத்தாள்கள் பார்க்க வந்திருந்தார். பிழை விட்ட இடங்களில் என்ன பதிலளித்திருக்க வேண்டும் என்று சொல்லித்தந்துகொண்டிருந்தவர்கள் கணித வினாத்தாளில் புள்ளியை பார்த்ததும் விட்டார் பாருங்கள் ஒரு அறை. என்னுடைய 6ஆம் ஆண்டு வகுப்பறையே சுற்றி வந்தது. அதன் பின் அம்மா கதைத்தவைகளும் விளங்கவில்லை. பெருத்த அவமானமாக போய்விட்டது. அம்மா வீட்டில் என்னை ஊறவைத்து அடித்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு நோ வந்திருக்காது. ஆனால் அன்று கொடுத்த அறை அவமான அடி. சக மாணவிகள், அவர்களது பொற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முன் விழுந்த அவமான அடி. ஆனால் சத்தியமாக அன்று தான் என் வாழ்க்கை மாறியது. 

நான் சின்னனில் இருந்தே கொஞ்சம் ஈகோ பிடித்த ஆள். அலப்பறை பிடிச்ச ஆள். பிடிவாதம் பிடிச்ச ஆள்,  யாராவது சொன்னால் அதை மட்டும் செய்ய மாட்டேன்.  இப்படிப்பட்ட அழிச்சாட்டியங்கள் நிரம்பிய என்னை உசுப்பிட்ட புள்ளி இது தான். பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள், கொஞ்சம் சிவப்பு கலந்த வெள்ளை என்றிருப்பேன். அதனால் அம்மா அறைந்ததில் அவரது விரல்கள் தெளிவாக என் கன்னத்தில் பதிந்துவிட்டன. மதியம் வீட்டிற்கு வந்த பின்னும் அம்மம்மா இதனை பார்த்து பார்த்தே அம்மாவை திட்டிக்கொண்டிருந்தார்கள். 

மாலை அம்மா வரும் போது எனக்கு பிடித்தவற்றினை வாங்கி வந்திருந்தார். (அந்தக்காலத்தில் தேன்குழல் தான் என் உயிராகவிருந்தது என்பதை இங்கு பதிவு செய்கின்றேன்.) உடை மாற்றிய பின் அருகில் வந்து கன்னத்து தழும்பை தொட்டுப்பார்த்தார். அமைதியாக கணக்கில் என்ன பிரச்சினை என்று கேட்டார். நாளையிலிருந்து டியுசன் கிளாஸ் போகவேண்டும் என்றார். இப்படி அறிமுகமானவர் தான் சசி சேர். லெப்டினன் கேர்ணல் சசி சேர்.

அம்மா கொண்டு போய் சேர்த்த அடுத்த நாள் முதல் வகுப்பு. ஒரு நீண்ட கொட்டகை ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம். ஏறத்தாழ ஒவ்வொரு வகுப்பிலும் 100 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள். வகுப்பிற்குள் வாத்தியார் நுழைந்தவுடனேயே கேட்ட முதல் கேள்வி டியுட் செய்து வராதவர்கள் எழுந்து நில்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் தானே வந்திருக்கின்றேன். எனவே செய்து வரவில்லை தானே என்று எழுந்து நின்றேன். கையை நீட்டச்சொல்லி விழுந்தது அடி. இதென்ன அக்கிரமம். போனன்றே அடியா? அன்றைய நாள் அழுதழுதே வகுப்பு போனது. வகுப்பு முடியும் போது தன்னை வந்து சந்திக்கச் சொன்னார் சசி வாத்தியார். தனியே சந்திக்க போனேன். ஏன் பிள்ளை அழுது கொண்டிருந்தனீ? ஏன்று கேட்டார். நான் இன்று தான் முதல் நாள் வருகின்றேன். டியுட் பற்றி தெரியாது. ஆனால் அடி வாங்கினேன் அது தான் அழுகின்றேன் என்றேன். அதை அப்போது சொல்லிருக்கலாமே என்றார். பிறகு தவணையில் பெற்ற புள்ளியை கேட்டார். இறுதியில் கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான் என்றார். இனி விளங்கவில்லை என்றால் கேட்டு படிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். 

அன்று ஆரம்பித்தது கணக்கு மீதான பைத்தியம், பித்து, இன்னும் என்ன வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இது தான் அம்மா ஆரம்பித்து வைத்த என்னுடைய கால கணக்கும் கூட. அம்மாவின் அறையும் சசி சேரின் வழிகாட்டலும் இல்லாட்டி இன்று இங்கு நின்று கொண்டிருக்க மாட்டேன். அம்மாவும் சேரும் என்னை அடித்த போது அவ்வளவொரு ஆற்றாமை கோபம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று இவ்வளவு தூரம் வந்த பின் திரும்பிப்பார்த்தால் கடந்த தடங்கள் எல்லாவற்றிலும் என்னை செதுக்கியது இவை தான் என்று தோன்றுகின்றது. அம்மாவிடம் அன்று வாங்கிய அறைக்கு பின்னர் இதுவரை கணக்கின் பெயரில் அடிவாங்கியதில்லை. ஒரு கட்டத்தில் கணிதம் என்றாலே என் பெயரை அடுத்ததாக நினைக்குமளவிற்கு கணக்கும் என் வசப்பட்டு போய்விட்டது.  

           Thenu - Combined A/L Maths, Electronics and Robtics Tuition Class 

இப்போது சசி சேருக்கு வயதாகிவிட்டது. அவ்வப்போது காணுவதுண்டு. நானாக போய் தான் கதைக்க வேண்டும். அவருக்கு எம்மை ஞாபகமிருப்பதில்லை. ஒவ்வொரு தடவையும் யார் பிள்ளை நீ என்று புதிதாக காணுவது போல் தான் கேட்கின்றார். மறக்க கூடிய மனிதரா இவர். நான் பல்கலைக்கழகத்தில் திரவ இயற்பியல் மற்றும் நீரியல் இயந்திரவியல் (hydraulic and fluid mechanics) இனை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றேன். கணிதத்துறையில் மிகவும் சிரமமான பகுதியிது. ஆனால் முதல் வகுப்பில் மறக்காமல் என் ஆசான் எனக்கு கற்றுத்தந்த “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்” என்பதை மறக்காமல்… மறைக்காமல் சொல்கின்றேன். 

இவையொரு பக்கமிருக்க அநேகமாக மட்டக்களப்பில் நான் பங்குபற்றுகின்ற விமர்சன அரங்குகள், புத்தக வெளியீடுகளுக்கு அம்மாவும் என்னுடன் வருவதுண்டு. அதே போன்று அம்மாவினை அழைக்கும் சந்தர்ப்பங்களில் நானும் செல்வதுண்டு. இப்படியானதொரு நிகழ்வில் நம்முடை தாயார் செய்ததொரு அலப்பறையும் நான் கணக்கு பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஞாபகம் வருவதுண்டு. 

கேர்ணல் நளினிக்கு நேரம் மிக முக்கியமானது. வேலைக்கும் காலை 7.20 க்கே போய்விடுகின்ற ஆள் அவர்.  சிலர் நளினா மிஸ் வருகின்றார் என்றாலே நேரம் இது தான் என்று அடித்துப் பேசமளவு நேர ஒழுங்கில் சுத்தபத்தமானவர். பற்றரி பழுதாகி கடிகாரம் கூட அப்பப்போ பிந்தும் ஆனால் நளினி…..  Never! Ever! 

இப்படியான ஆளை சொந்த காசில் சூனியம் வைப்பது போல் வீட்டிற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து வருந்தி கூப்பிட்டிருந்தார்கள். வழமை போன்று நிகழ்விற்குரிய நேரத்திற்கு முன்னரே காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் அடித்துப்பிடித்து அம்மாவும் நானும் போய் விட்டோம். நிகழ்வு தொடங்க இருந்த நேரத்திற்குத் தான் ஒழுங்கமைப்பாளர்களே வர ஆரம்பித்தார்கள். நிகழ்வு ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட நேரத்திலும் 40 நிமிடங்கள் பிந்திவிட்டன. அம்மா தான் அதிதி வேறு. துனது உரையின் போது அம்மா போட்ட கணக்கு இருக்குதே அது வரலாற்றில் பதியப்பட வேண்டியது.

இங்கு ஏறத்தாழ 100 ற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளீர்கள். சரி நூறு என்று வைத்துக்கொண்டால் 100 ஐ 40 ஆல் பெருக்கினால் 4000 நிமிடங்கள். 4000 ஐ 60 பிரித்தால் 66.6 மணித்தியாலங்கள். 66 என்று எடுத்துக்கொண்டு 24 ஆல் பிரித்தால் ஏறத்தாழ 3 நாட்கள். இன்று 40 நிமிட தாமத்தினால் 3 மனித நாட்களை வீணாக்கிவிட்டோம்” என்றார். சபையில் சத்தமே இல்லை. இவ்வாறு பொன்னான நேரத்தினை வீணடித்த இந்த நிகழ்வில் நான் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்று வெளியேறி விட்டார். இது தான் என் அம்மாவின் கணக்கு! 

பிற்குறிப்பு 01: கன்னத்தில் அறை வாங்கும் முன்னர் எடுத்திருந்த ஆகக்குறைந்த புள்ளி 72! 

பிற்குறிப்பு 02: “பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள்…..” என்று எழுதியிருக்கின்றேன். ஆனால் இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. மிகவும் அரிதான நேரங்களில் மட்டும் கன்னக்குழி தென்படும். இதனை அண்மையில் நண்பரொருவர் அழகாக படம் பிடித்துள்ளார். 

பிற்குறிப்பு 03: என்னுடைய அடுத்த கற்கையினை (seismology)  நிலநடுக்கம் சார் விடயமாக மேற்கொள்ளவுள்ளேன். துல்லியமான கணக்கிடல் உள்ளவர்கள் இதனை மேற்கொள் முடியும். நீங்களும் முயற்சியுங்கள் ஏன் என்றால்  “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்”

உலகில் எல்லாமே கணக்கு தான் அன்பு உட்பட 
 










அம்மாவின் ராஜாத்தி


என் உற்ற நண்பி, ஆலோசகர், பாதுகாவலர், குரு என அனைத்துமான என் அம்மா பற்றி இன்றைய பதிவில் எழுதவுள்ளேன். என் அப்பா காடாறு மாதம் நாடாறு மாதம் என விக்கிரமாதித்தன் போல (அப்பா இதை பார்க்க மாட்டார் என்ற தைரியம் ஒன்று, இதை வாசிக்க முடியாதளவு….. வேலைப்பளு இருக்கும் இது இரண்டு) வெளிநாட்டிலும் வீட்டிலுமாக இருப்பதால் என் தற்காலிக தந்தையாகவும் இருக்கின்ற என் அம்மா பற்றி சில வரிகள் நிச்சயம் இந்த பெண்கள் தினத்தில் எழுதியாக வேண்டும். மேடையேறி பேசுகின்ற, படித்து சாதிக்கின்ற, சமவுரிமைக்காக போராடுகின்ற பெண்கள் மத்தியில் மௌனமாக ஒரு குடும்பத்தலைவியாக, சாதித்துக்கொண்டிருக்கின்ற எனதன்பின் “நளீன்ஸ்” பற்றி பேசியே ஆகவேண்டும்.

என்னை எனது அம்மா அன்பாக “ராஜாத்தி” என்று தான் அழைப்பார். சின்ன வயதிலிருந்தே பாடசாலையிலோ , விடுதியிலோ , அலுவலகத்திலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ எனக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் என்று யாருமே இருந்ததில்லை. என்னைத் தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றவர்களாகவே நான் இவர்களை இனங்காண்பதால் எப்போதும் நம்பிக்கையான ஒருவராக நான் நண்பியாக நான் நம்புவதும் பழகுவதும் என்னுடைய நளீன்ஸ் தான். எனக்கும் அம்மாக்குமிடையில் இரகசியங்கள் எதுமே இல்லை என்று தான் சொல்வேன். சொல்லாவிட்டால் என் மண்டை சுக்குநூறாகி விடும் நான் டொபி சாப்பிடுவதிலிருந்து Boys உடன் கடலை போடுவது வரை அனைத்தையும் நளீன்ஸ் இடம் தான் சொல்வேன். இப்போது ஊடகதுறையில் இருப்பதால் அவர் பயப்படுவதை தவிர்ப்பதற்காக சிலதை மறைக்கின்றேன். Sorry  மா கொஞ்சம்….. தான் நளீன்ஸ். இன்றும் ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டுச் சென்றவுடன் நளீன்ஸ் உடன் பேசாவிட்டால் நாளே ஓடாது. 

என்னுடைய கல்வி வாழ்க்கையிலும் எனக்கு தேவையான புத்தகங்கள் என்று கேட்டு அவர் வாங்கி தராதது என்று எதுவும் இல்லை. அது என்ன விலையானாலும். School Report பார்த்து என் அழகான இராட்சசியிடம் பிரம்பால் நிறையவே சாத்தும் வாங்கியிருக்கின்றேன். முதல் மாணவியாக வந்து பரிசும் வாங்கியிருக்கின்றேன். இன்று நான் சாதிப்பதாக அடுத்தவர்கள் கூறும் போது அன்று வாங்கிய அடிகள் வலித்தாலும் என்னை செதுக்கியுள்ளதை ஒவ்வொரு நிமிடமும் உணர்கின்றேன். (ஆனாலும் ஒரு சண்டை இருக்குது 5 ஆம் ஆண்டு பரீட்சை பாஸ் பண்ணிணதுக்கு பென்குயின் இன்னும் வாங்கி தரவில்லை நளீன்ஸ்)



என்னுடைய வலிகளை கூட அம்மாவிடம் மட்டும்தான் சொல்லியழுவேன். (அவரும் சேர்ந்து அழுவது வேறு கதை) தோல்விகளையும் பகிர்ந்து கொள்வேன் நிறைய ஆலோசனைகளை கூறுவார். சில விடயங்கள் பற்றி எதிர்வுகூறல்களும் சொல்வார். என்னளவில் அவை பொய்த்தில்லை. நான் நேர்மையை கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். அரசாங்க அலுவலகர்கள் அலுவலகத்தில் சலுகைகள் பெற்றுக்கொண்டு ஐஸ் அடிக்கின்ற போது வீட்டிலும் Personal file பற்றி கவலைப்படுபவர். “ஏன் அம்மா இப்படியெல்லாம் ஓவராக செய்து காட்றீங்க?” அல்லது “அவர்கள் தரும் இலஞ்சங்களை ஏன் வாங்கவில்லை?” என்று கேட்டால் அடுத்தவர்கள் நெருப்பு நமக்கு வேண்டாம் என கூறும் எனது குரு அவர். அப்பாவிடம் அம்மா இறங்கிப் போகும் போது என்னிடம் உறங்குன்ற பாரதி விழித்துக் கொண்டு கேள்வி கேட்பான். அப்போதெல்லாம் “மகள் ஒரு பெண் வெளியில் எந்த உயரத்தில் நின்றாலும் வீட்டில் ஆணுக்கு அடங்கும் போது தான் இல்லறம் சிறக்கும்” என போதிக்கின்ற எனது ஆசிரியர்.

என்னுடைய அம்மாவிற்கு சமையலறையில் 3 விடயங்கள் செய்ய பிடிக்கும். தேங்காய் துருவுவது, மா அரிப்பது மற்றது கோப்பி வறுத்து இடிப்பது. இவரது “கோப்பி’ பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். அடிக்கடி கோப்பி இடித்து போத்தலை நிரப்பி வைக்காவிட்டால் நளீன்ஸ் க்கு தூக்கமே வராது. காலையில் முதல் வேலையாக கோப்பி போட்டு எமக்கும் தந்து அவரும் குடிக்காமல் விட்டால் நாளே விடியாது. அங்கு தான் எமது யுத்தமும் ஆரம்பமாகும். “சீனி” போட்டுக் குடிப்பதில். எனக்குத் தெரியாமல் அடிக்கடி கள்ளத்தனமாக சொக்கலேட்டும் சாப்பிட்டுக்கொள்வார். வீட்டில குறிஞ்சா சுண்டல், பாகற்காய் கறி என்றால் அவருக்கு சீனி கூடி விட்டது என்று அர்த்தம். என்னிடம் மாட்டுப்பட்டு நான் கோபமாக கேட்டால் “கொஞ்சக்காலம் தானே வாழ போறோம்” என்ற தத்துவம் வேறு….

நளீன்ஸ் ஐ நம்பி இரு விடயங்களில் தலையிடக்கூடாது. ஒன்று அண்ணா தம்பி சென்டிமென்ட் அடுத்தது என் குட்டிச் சாத்தான் தம்பியுடனான சண்டை. இரண்டும் எப்போது என்னை நோக்கித் திரும்பும் என்று கூற முடியாது. (இந்தியா போல எப்போது மாறும் என்று யாருக்குமே தெரியாது)
எனக்கு அம்மாவுடன் கடுப்பாகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்காவது வெளிக்கிடும் போது அல்லது எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது கேட்பார் பாருங்கள் ஒரு கேள்வி “நாய்களுக்கு என்ன மகள் சாப்பாடு?” நமக்கு கூட சில வேளை கடையில் சாப்பாடு எடுப்போம் ஆனால் நாய்களுக்கு சமைக்காமல் விட்டதாக அம்மாவின் சரித்திரத்தில் இல்லை. வாய்பேசா மிருகங்களாம்….. அம்மா அம்மா…(குடுத்து வைத்த என் வீட்டு நாய்கள்)
உலகத்திலேயே நான் மெலிவது பற்றி கவலைப்படும் ஒரே ஜென்மம் அம்மா தான். மற்றவரெல்லாம் மெலிந்தால் அழகாகிவிடுவேன் என்று சொல்லும் போது (இப்பவும் அழகு தான்) நேரத்திற்கு சாப்பிட என்னை வற்புறுத்துகின்றவர். நான் வீடு செல்லும் நாளன்று இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டு கூடவே தம்பியை இம்சை செய்யும் அம்மா….இப்போதும் அடிக்கடி பஸ்சில் சாப்பாட்டு பாசல் அனுப்புகின்ற அன்புள்ள அம்மா. என்னுடைய வாகனத்தில் அம்மாவை ஏற்றிப் போகும் போதெல்லாம் ஒரு காலத்தில் அவர் என்னை ஏற்றிச்சென்ற நாட்களை நினைத்துக்கொள்வேன்… அவர் என்னுடைய தோள்களை பற்றிக்கொள்ளும் போது எத்தனையோ தடவைகள் சிலித்திருக்கின்றேன். நான் என்னுடைய பிடிவாதங்களை காட்டாத ஒருவர் என்றால் அதுவும் அம்மா தான்.. ஏனோ அவரிடம் அப்படி காட்ட முடிவதில்லை. நான் பொய் சொன்னால் கண்டுபிடிக்கின்ற ஒருவரும் அவர் தான்… எனது கவிதைகளில் கூட என்னை இனங்காண்பவர். எனது வீணையிசையை, கவிதையை இரசிக்கின்ற முதலாவது இரசிகரும் அவர் தான். எனது வேலைப்பளுக்களின் மத்தியிலும் பதிவுகளை பதிவது கூட என்னுடைய அம்மா வாசிக்க வேண்டும் என்பதால் தான்.




இன்று நான் நல்லதொரு நிலையில் இருப்பதற்கும் மேலும் வளர்வதற்கும் என் பின்னால் இருக்கின்ற சக்தி எனது அம்மா தான். அன்பான அம்மாவாக, நண்பியாக என்னை செதுக்கிய அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கடவுளிடமும் சிலதை வேண்டிக் கொள்வேன். எனக்கு வரும் கணவர் (என்னவன்) எனது அம்மாவிற்கு மருமகனாக இல்லாமல் இன்னொரு மகனாக அன்பானவனாக அமைய வேண்டும். என் குழந்தைகளையும் அம்மா வளர்க்க வேண்டும். அவர்களையும் அம்மா தான் செதுக்க வேண்டும்.
வாசித்தறிந்த சாதனைப் பெண்களை விடவும் என் வீட்டில் என்னுடன் வாழ்கின்ற சாதனைப் பெண்ணாக எனது அம்மாவினை நான் பார்க்கின்றேன். என்னுடைய அம்மாவினை நான் எழுதுவதை போன்றே என் பிள்ளையையும் நான் செதுக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.

I LOVE U MA! I MISS UR COFFEE

உங்கள் ராஜாத்தியின்  “மகளீர் தின வாழ்த்துக்கள் அம்மா” கூடவே ஆயிரம் அன்பு முத்தங்கள்





பெற்ற வயிறு


என் பெற்ற வயிறு குளிர்ந்தது – நான்
ஈரைந்து மாதங்கள் சுமந்தவனை
என்னுள் இருந்து கொண்டு
அவன் அசைவுகளால் சிறுகதை பேசி – தான்
என்னுள் இருப்பதை - சிறு
உதைகள் மூலம் உணர்த்தியவனை
எனக்கும் என்னவனுக்குமான - அன்பின்
பரிசாக வந்துதித்தவனை – என்
தாய்மையை நிரூபித்து – அம்மா
என்ற ஸ்தானம் தந்தவனை
துணிகளில் சுற்றி - உதிர
மணம் மாறாமல் சிறு மலராக
தந்த போது -என்
பெற்ற வயிறு குளிர்ந்தது

அவன்
சிறு நெளிவுகள்...
திணுக்கிடல்கள் - நான்
பட்ட வேதனைகள்,
வலிகளை - கூட
சுகமான சுமைகளாக்கின

என் கைகளில் தவழ்ந்தவனை
கண்ணுறக்கம் தொலைக்க வைத்தவனை – என்
கரம் பற்றி நடை பயின்றவனை
சுட்டித்தனங்களால் பிறரை கவர்ந்தவனை
முதலாம் மாணவனாக பரிசுகளுடன் - என்
முத்தங்களையும் வென்றவனை
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி
வைத்தியராகிடுவான் - என
எதிர்பார்க்க வைத்தவனை
இப்போதும் தந்தார்கள்....
இரத்தம் தோய்ந்த துணியில் சுற்றி – என்
கரங்களிலல்ல சவப்பெட்டியில் - வெறும்
சதைப்பிண்டமாக.....

(பெண்கள் அமைப்பொன்றினால் நடாத்தப்பட்ட கவிதையில் பரிசு பெற்று பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை - 2012 இதை அரசியல் கைதிகளாக இருந்து உயிர் நீத்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் . இதன் கருப்பொருள் கூட அரசியல் கைதி நிமலரூபனின் மரண சடங்கினை பார்த்த போது உதிர்த்ததே.)







நானும் ஒரு தாய்

ஆலயத்தில் புறமுதுகு காட்டி
விளக்கேற்றிக் கொண்டிருந்தேன்
என் சேலை நுனியில் - ஓர்
தூண்டில் இழுவை
திரும்பிப் பார்த்தேன்
யாருமில்லை – சற்றே
குனிந்து பார்த்தேன்…
ஓர் பூக்குவியல் என்
சேலையை தொட்டபடி…

யாரிந்த செல்லக்கண்ணன்…
மீராவின் சேலை தொடுவது..
வாரியெடுத்து உச்சிமோர்ந்து – அதன்
கூர் விழிகளை பார்த்தேன்
மூளையில் சிறு மின்னல்
இந்தக்கண்கள்….?
இதனுடன் கனவுகளில் வாழ்ந்திருக்கின்றேன்
இதே கண்களுடன்
மௌமொழிகள் பேசியிருக்கின்றேன்.
எங்கே…..? – என்
சிந்தைத்தேடலுக்கு பதிலாக
குழந்தையை தேடியபடி
அதன் அன்னை…

சந்தேகமேயில்லை..- இக்
கண்கள் என்னுடையவனுடையது….
அட இது என்னவனின்
குழந்தையா…?

உன் குழந்தைக்கு கூட
தெரிகிறது என்னை..-
என் நினைவுகளுடன் - உண்மையில்
ஒருநாளாவது – நீ
வாழ்ந்திருந்தால்…- மனதால்
நானும் உன் குழந்தைக்கு
தாய் தான்…

இதோ உன் மனைவி – அன்று
உன்னிடமிருந்து என் நினைவுகளை
கொள்ளை கொண்டவள் - இன்று
அவள் குழந்தைக்காக
கரம் நீட்டுகின்றாள்

உனக்கான என்
கனவு முத்தமொன்றை – அவன்
பட்டுக்கன்னங்களில் கொடுத்து
அதன் மொட்டு உதடுகளினால்
செல்லக்கடி வாங்கி
என் கன்னத்து
எச்சில் துடைத்தபடி கலைகின்றேன்….

அன்று போல் இன்றும்
தூரத்தில் - கைகளை
கட்டியபடி நீ……

மிஸ் பண்ணப் போவதில்லை

இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை....

விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உணரும் இளஞ்சூடு, நாய்க்குட்டின் பரிஸம்ஈ பல்துலக்காமல் உண்னும் காலையுணவு இப்படியாக தொடரும் என் மழைநாள் பணிகளை ஒரு கணம் நினைத்தவளாக கட்டிலை விட்டு இறங்குகின்றேன். புதிதான இப்புதிய நாளை வரவேற்பதற்கு....

ஆனாலும்  இன்று மாலை அடைமழையிலான எனது நனையலையோ தேங்கி நிற்கும் நீரில் காகித கப்பல்களை விடுவதையோ அம்மாவின் தொலைபேசியினூடான ஏச்சுக்களையோ காய்ச்சல் வராமல் தலையில் ஓடிகொலோன் போட்டு பனடோல் குடிக்கப்போவதையோ நிச்சயம் மிஸ் பண்ணப்போவதில்லை....

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை