Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

மிஸ் பண்ணப் போவதில்லை

இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை....

விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உணரும் இளஞ்சூடு, நாய்க்குட்டின் பரிஸம்ஈ பல்துலக்காமல் உண்னும் காலையுணவு இப்படியாக தொடரும் என் மழைநாள் பணிகளை ஒரு கணம் நினைத்தவளாக கட்டிலை விட்டு இறங்குகின்றேன். புதிதான இப்புதிய நாளை வரவேற்பதற்கு....

ஆனாலும்  இன்று மாலை அடைமழையிலான எனது நனையலையோ தேங்கி நிற்கும் நீரில் காகித கப்பல்களை விடுவதையோ அம்மாவின் தொலைபேசியினூடான ஏச்சுக்களையோ காய்ச்சல் வராமல் தலையில் ஓடிகொலோன் போட்டு பனடோல் குடிக்கப்போவதையோ நிச்சயம் மிஸ் பண்ணப்போவதில்லை....

என்ன செய்வான் கடவுள்?

அதிகாலை வேளை பறவைகளின் கீதங்களோ சூரியனின் அழகிய பொற்கதிர்களோ அக்கிராமத்தில் விடியலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராமங்களுக்கே உதித்தான பசுமை கூட அங்கில்லை. எல்லா மக்களினுடைய முகத்திலும் ஓர் எதிர்பார்ப்பு.... பலரிடம் கடன் வாங்கி பயிரிட்டு களையகற்றி உரமிட்டு வளர்த்த பயிர்கள் தாய் முகம் பார்க்கும் மழலைகளாக நீர் வேண்டி நிற்கின்றன. மழை தான் பொய்த்துவிட்டது. கிணற்றில் ஊறவது குடிப்பதற்கே போதாமல் இருக்கிறது. ஆறு குளங்களை கேட்கவே தேவையில்லை. நீரற்ற குளத்திலே ஓர் பறவை கூட பறக்கவில்லை. கொடும்பாவியும்; எரித்தாகிவிட்டது. குல தெய்வங்களை கூப்பிடுவதை தவிர வேறு நாதியுமில்லை.
ஒவ்வொரு மனித விழிகளும் மேலே அண்ணாந்த வண்ணம் கருமுகில்களை தேடுகின்றன. பெருமூச்சுக்கள் வரிவடிவாகி இறைவன் திருவடியில் வினாவாகிறது....”இறைவா மழை பொழியாதா? ஏம் பஞ்சம் தீராதா?”
.................................................................................................
யுத்த காலனால் விரட்டப்பட்டு புலம் பெயர்ந்தோர் வாழும் அகதி முகாம்... நனைந்த பறவைகளாக தம் செயற்பாடுகளை நிறுத்தி கூடாரங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள் மக்கள். முழங்காலளவிற்கு பாய்ந்தோடுகிறது வெள்ளம். கால்கள் மரத்துப்போய் கழன்று விட்டது போன்றதொரு பிரமை. பொருட்களை காப்பாற்ற அவற்றை கூடார வளைகளில் கட்டியதில் கூன் விழுந்து நிற்கும் கூரைகள். குழந்தைகளின் ஓலங்கள் ஒரு புறம். ஓரு வாரமாக நீடித்திருக்கும் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட குப்பைகளினால் ஏற்பட்ட நுளம்புப் பெருக்கம் ஒரு புறம். வீட்டிற்கு வீடு நோயாளர்களும் அவர்களின் இருமல் ஈழை ஒலியும் கூட ஓர் சங்கீதமாக ஒலிக்கிறது. அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள்  பார்த்து உதவிகள் வழங்குகின்றன. அவர்களின் உலர் உணவுகளும் இலவச வைத்திய சேவைகளும் அன்றாட நிகழ்வுகளாகிட முடியுமா?
வானமோ விரிசல் கண்டதைப் போன்று குடம் குடமாக நீரைக் கொட்டுகிறது. எல்லோருடைய மனங்களிலும் வேண்டுதல்கள் அலையாகி இறை பாதம் நனைக்கின்றன...”இறைவா மழை ஒழியாதா? எம் அவலம் தீராதா?”
.......................................................
தன் படைப்பின் விந்தையை எண்ணி இறைவனின் மனதில் கூட குழப்பம். 

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை