கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சக ஊழியர் ஒருவர் தொடர்புகொண்டு இவரின் மூத்த மகள் திடீரென இறந்துவிட்டதாகவும் கொழும்பிலிருந்து சடலம் மட்டக்களப்பிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. அதிகாலை சடலம் கொண்டுவரப்பட்டதால் என்னால் செல்ல முடியவில்லை. அன்றைய தினம் மிகவும் முக்கியமான கலந்துரையாடலும் தூதுவராலயத்தில் இருந்திருந்தது. இதனையும் மாற்ற முடிந்திருக்கவில்லை. எனவே நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். நான்கு நாட்களுக்கு முன்னர் சந்தித்திருந்தவருக்கும் நான் நேற்று சந்தித்தவருக்குமிடையில் நிறைய மாற்றங்கள். இழப்பென்பது இலகுவானதற்றதல்லவா? அவர்களது முறைப்படி பெண்கள் உள்சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவியை அழைத்து எம்மையும் உள்ளனுப்பி வைத்தார். அவரிடம் விசாரித்த மட்டில் இறந்த அன்று தான் அந்த பெண்ணின் பிறந்த நாளும் கூட. 12 மணிவரை வாழ்த்திவிட்டு தான் உறங்க சென்றிருக்கின்றார்கள். மீண்டும் அதிகாலை தொழுகைக்காக இந்த பெண் எழுந்திருக்கின்றார். தொழுகையை முடித்த பின்னர் பரீட்சைக்காக படிக்க ஆரம்பித்த போது தான் வலது பக்க தோளில் நோவினை உணர்ந்திருக்கின்றார். தாயை எழுப்பி “உம்மா வலிக்கின்றது” என்று சொல்லியிருக்கின்றார்கள். தாயும் தடவும் போது மகளின் தலை சாய்வதை உணர்ந்து கணவரை எழுப்பி சொல்லியிருக்கின்றார். அவரும் தெரிந்த வைத்தியருக்கு அழைப்பெடுத்து சொல்லியிருக்கின்றார். முதலுதவியை செய்த படியே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கும் ஆரம்பகட்ட சிகிச்சையை தொடங்கும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டது. வெறும் 40 நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டதாக தாய் சொல்லியழுதார். விடைபெறும் போது என் சக ஊழியரை மீண்டும் சந்திக்க கிடைத்தது. என்ன ஆறுதல் சொல்வது என புரியவில்லை. எனக்கே கேள்விப்பட்டதில் இருந்து இவ்வளவு வலி என்றால் அவர்களுக்கு எவ்வாறிருக்கும்? அதுவும் புத்திஜீவியானதொரு மகளை இழந்திருக்கின்றார்கள். எவ்வளவு கனவுகளை சுமந்திருப்பார்கள்? இவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லிட முடியும். காலத்திற்கு மட்டுமே இவர்கள் வலியை குறைக்கும் சக்தியிருக்கின்றது.
இரு வாரங்களுக்கு முன்னர் நான் வேறொரு நாட்டில் நிகழ்விற்காக சென்றிருந்த போது அழைப்பெடுத்த வீட்டவர்கள் எம்முடைய தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணொருவரின் கணவர் இறந்துவிட்டதாக சொல்லியிருந்தார்கள். அங்கிருந்து உடனே வரமுடியாத நிலையில் அழைப்பெடுத்த மட்டும் பேசியிருந்தேன். உதவியாளரிடம் அவர்களுக்கான உதவிகளையும் அடக்க ஒழுங்குகளையும் கவனிக்கும் படியும் கூறியிருந்தேன். இந்த கணவனை இழந்த அம்மா எம்மிடம் வந்ததே தனிக்கதை. இரு வருடங்களுக்கு முன்னர் நாம் குடும்பமாக சுற்றுலா சென்றிருந்த போது இந்த அம்மா தூரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். நானும் தம்பியும் அருகில் போய் பேசிய போது குடும்ப பிரச்சினை என்று மட்டும் சொல்லிவிட்டார். நாமும் அவர் பகிர விரும்பவில்லை என்றால் வற்புறுத்த முடியாது என்று திரும்பிவிட்டோம். வீடு வந்த பின்னும் இருவருக்கும் இது குறித்து ஒருவித பதற்றம் இருந்திருந்தது. எனவே மீண்டும் நாமிருவர் மட்டும் பைக்கில் சென்ற போது அந்த அம்மா தற்கொலை செய்வதற்கு தயாராக நின்றிருந்தார். அவரை இழுத்த வந்து கதைத்து வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டோம். தனக்கு விட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்ததில் நான்கு பி;ள்ளைகள் என்றும் தற்போது கணவருக்கு வேறொருவருடன் தொடர்பென்றும் குடிப்பழக்கமும் சேர்ந்திருக்கின்றது என்றும் இதனால் வீட்டில் சாப்பிடுவதற்கு கூட வறுமை என்று அழுதார். நீங்கள் இறந்துவிட்டால் அந்தக்குழந்தைகள் என்னாவார்கள் என்றெல்லாம் சமாதானப்படுத்தி அவருக்கும் வேலை கொடுத்திருந்தோம். பண்ணை வீட்டிற்கும் குடும்பத்துடன் வந்துவிட்டார். மூத்த இரு பிள்ளைகளையும் விடுதியில் சேர்த்துவிட்டிருந்தோம். இளையவர்கள் இருவரும் சிறுவயதாகையால் தாயுடன் இருந்தார்கள். மூன்று மாதங்களின் பின்னர் பண்ணை வீட்டை கண்டுபிடித்து வந்து விட்டார் அந்த குடிகார கணவர். வந்து சண்டை போட்டு சென்றவர் விபத்தாகி காலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தம்மா தான் அவரை பொறுப்பெடுத்துக்கொண்டார். கணவனின் வருமானத்தித்தை உறிஞ்சிக்கொண்ட அவர் தொடர்பு வைத்திருந்த பெண் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்த்திருக்கவில்லை. இதன் பின்னரான கடந்த ஒன்றரை வருட காலம் படுக்கையிலிருந்த கணவரையும் பிள்ளைகளையும் பராமரித்தது அந்த அம்மா தான்.
மரணம் என்பதும் மழை போன்றது என்று தோன்றுகின்றது. வரண்ட நிலத்தில் பெய்யும் மழையும் நெல் முற்றியிருக்கும் போது பெய்யும் மழையும் ஒன்று தான். ஆனால் கால, நேரம் தவறி பெய்யும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது. அவ்வாறே மரணமும் அது நிகழும் களத்தினை பொறுத்தே வலி தீர்மானிக்கப்படுகின்றது. அல்லது இறந்தவர் வாழ்ந்த நாட்களே சுற்றியிருப்பவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தி போகின்றது


No comments:
Post a Comment