அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……05

All i want is to hold your hand forever..!! 🤌❤, . , . , . , #holdinghands  #love #couplegoals #family #loveyou #lovequotes #relationshipgoals #hands  #togetherforever #iloveyou #kiss #iloveyousomuch ...

Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care  

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention 

உறவொன்றில் முக்கியமான இரு அம்சங்கள் நம்பிக்கையும் நோக்கமும். இதனை அன்பு மொழியில் சொல்வதென்றால் பற்றும் ஈர்ப்பும் என்றும் மொழிபெயர்க்கலாம். நம்மை எத்தனையோ பேர் கடந்திருப்பார்கள். ஆனால் சிலரிடம் மட்டும் தான் இந்த ஈர்ப்பு நம்மை இழுத்துப்போகும். உறவொன்றில் ஈர்ப்பு எவ்வளவு முக்கியமோ அதேயளவு நம்பிக்கையும் சற்றும் குறைந்ததொன்றில்லை. 
ஒருவர் மீது வைக்கின்ற நம்பிக்கையும், ஒருவர் மீதான ஈர்ப்பும் இருவழிப்பாதையானது. இருவரில் ஒருவருக்காவது இதில் சற்று பிசகல் வந்துவிடின் அந்த உறவு நீண்ட தூரம் பயணிப்பதில்லை. நம் தோள் மிது சாய்கின்ற ஒரு உறவுக்கு நம்பிக்கையையும் அவர்கள் ஏன் நமக்கு முக்கியமானவர்கள் என்கின்ற ஈர்ப்பையும் வெளிப்படுத்தாவிடில் இந்த உறவு என்ன கூந்தலுக்கு? 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1051  

இனிய டைரியே,
உலகின் மிகவும் ரொமாண்டிக்கான நகரத்தின் நள்ளிரவு நேரம் உன்னில் என் நாளினை பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றேன். நாளைய நாளை நினைக்கும் போதே ஒருவித இனிமை பரவிக்கொண்டிருக்கின்றது. என்னுடை கனவு தினம் இது. நாளை உலகத்திலுள்ள அத்தனை கட்டட வடிவமைப்பாளர்களும் வந்து குவியவுள்ளார்கள். உலகின் முதல் நூறு வடிவமைப்பாளர்களுள் இளமையான, தமிழ் என்கின்ற இரு பெருமைகளை நாளை சுமக்க இருக்கின்றேன். இனிய சுமையிது. ஆனால் ஏதோவொரு ஓரத்தில் வலித்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் என் தொலைபேசியில் சத்தம் வரும் போதெல்லாம் அவரிடமிருந்து அழைப்பாகவிருக்கும் அல்லது குறுஞ்செய்தியாகவிருக்கும் என்று இருபது தடவையாவது இன்று ஏமாந்திருப்பேன். ஒரு சிறு வாழ்த்துசெய்திக்காக தான் இந்த வெட்கம்கெட்ட மனம் தவிர்த்துக்கொண்டிருக்கின்றது. 

இன்று கிறுக்கிட வேறெதுவுமில்லை. பதினாறு மணிநேர பயணம் என் கண்களை இறுக மூட அழைக்கின்றது….. வழமை போன்று என் ஏமாற்றத்தை கவிதையாக கிறுக்கிவிட்டு தூங்கப்போகின்றேன்.சில நேரங்கள் எல்லாம் என்னிடம் இருப்பதாக தோன்றுகின்றது. சிலநேரம் ஏதோவொன்றினை இழந்திருப்பதாக தோன்றுகின்றது….. 

பக்கம்: 1097

இனிய நாட்குறிப்பே!
இன்று அவருடைய பிறந்த நாள். என்னுடனான திருமண நிச்சயார்த்தத்தின் பின்னர் வருகின்ற மூன்றாவது பிறந்தநாள் இது. முதல் இரு பிறந்த நாளிலும் நான் இங்கு அவர் அங்கு என்று தொலைபேசியில் வாழ்த்தும் அங்கிருக்கும் நண்பர்கள் மூலம் பூங்கொத்து, பரிசுகள் என்று
ம் கடந்து விட்டது. இம்முறை அருகில் இருப்பதால் முடிந்தளவு சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்து கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டாயிற்று. இதற்கு என் குட்டித்தம்பியும் உடந்தை. 

இங்கு ……சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நிகழ்வு அவர்கள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டிருந்ததால அண்ணா மூலமாக தெரியவந்து அவரும் வருவதை உறுதிப்படுத்திய பின்னர் ஆயத்தவேலைகளை தொடங்கியிருந்தேன். காலை முதல் மாலை வரை நிகழ்வில் இருந்தாக வேண்டும். ன்று இவர் உரை நிகழ்த்தும் நாள். எனவே விடுமுறை எடுக்க அல்லது வீட்டிற்கு வந்து போக சொல்ல முடியாது. ஆனால் இன்று நான் ஒரு நேரமாவது அவருடன் அமர்ந்து சாப்பிட்டாக வேண்டும். அண்ணாவும் பங்குபற்றுவதால் அவர் வரும் போதே அம்மாவும் நானும் தம்பியும் வந்துவிட்டதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. 

ழமை போன்று 12 மணிக்கு முதல் ஆளாக வாழ்த்திவிட்டேன். காலையிலிருந்து நாள் பரபரப்பாகவிருக்கின்றது. நானும் தம்பியும் மார்க்கெட் போய் தேவையானவற்றினை வாங்கி வந்து அவருக்கு பிடித்தவைகளை சமைத்து, அங்கு வந்திருப்பவர்களுக்கும் ஏதாவது கொண்டு போகவேண்டும் என்று இனிப்பும் செய்து பிந்தினால் கொதியர் கத்துவார் என்று 12.30ற்கே போய்விட்டேன். போய்ச் சேர்ந்து காத்திருப்பதை மெசேஸஜ் பண்ணியும் விட்டேன். “Wait Honey” என்று பதில் வந்தது

ன்னால் மாற்ற முடியாமல் போனவற்றுள் இதுவும் ஒன்று. எனக்கு இந்த ஆங்கில கொஞ்சல்கள் பிடிப்பதில்லை. “செல்லம்” “கண்ணம்மா|” என்று எத்தனை தமிழ் வார்த்தைகள் உண்டு. பல தடவை சொல்லிவிட்டேன. அல்லது என்னுடைய பெயரையே சொல்லி கூப்பிடுங்கள் என்று எத்தனை தரம் தான் சொல்வது. இது தான் ஸ்டைல் என்று ஹனி, டார்லிங், சுவீட் ஹார்ட்….. ஓ எனக்கு பிடிப்பதேயில்லை….. 

ந்ததிலிருந்து போனில் பாட்டுக்கேட்டு, Games விளையாடி , நண்பிகளுக்கு அழைப்பெடுத்து அலட்டி , முகநூல் பார்த்து நேரம் பார்த்தால் 2 ஆகிவிட்டது. அண்ணாவும் இன்று இங்கில்லை. வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை. முன்னரே பதியப்பட்டு விட்டது என்பதால் மாற்ற முடியாது. யாரிடம் கேட்பது?. சரியாக 2.40 அவர் வந்துவிட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு கூட்டி போனார். நிகழ்வு பற்றி பேசினார் தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி பேசினார். சரி சாப்பிடுவமா:? பரிமாறவா? என்று கேட்டேன். நான் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டேன் என்றார். முகங்கழுவி வெளிக்கிட்டு மீண்டும் நிகழ்விற்கு போய்விட்டார்.  

ஏற்கனவே நாம் திட்டமிட்ட விடயம் இது. சரி ஒருவேளை நண்பர்களுடன் தவிர்க்க முடியவில்லை என்றால் அதை சொல்லியிருக்கலாம்…. இல்லை எனக்காக கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாம். குறைந்த பட்சம் சாப்பிட்டியா என்று கேட்டிருக்கலாம். காலையில் இருந்த மனநிலை தீர்ந்துவிட்டது. பசியும் தான் சாப்பிடாமலேயே….  மாலை வரை இந்த அறையில் தான் இருந்தாக வேண்டும். வழமை போன்று அவரது கலைந்திருந்த அறையை சரிசெய்தேன்….. கையிலிருந்த புத்தகத்தை விரித்து கடற்கரை பக்கமுள்ள ஜன்னல் அருகில் இருந்து வாசிக்க முயன்றேன். பக்கங்கள் மட்டும் தான் புரண்டன. கருத்தில் எதுவும் பதியவில்லை. பாட்டாவது கேட்போம் என்று கேட்டுக்கொண்டு அழுதபடி தூங்கிவிட்டேன். திடீரென Hello  என்ற சத்தத்தில் முழித்துப்பார்த்தால் அவர். ஏன் தூங்குகின்ற ஒருவரை மென்மையாக எழுப்பகூட இவரால் முடிவதில்லை…….

“முகங்கழுவி வாரும் நண்பர்கள் காத்திருக்கின்றார்கள்…” என்றார்.  நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, கேக் வெட்டி…..அவர்களுக்காக செய்துகொண்டு போனவைகளை அவர்களுக்கு பகிரசொல்லி, அவர்கள் சொன்னவற்றினை பெருமையுடன் கேட்டு, அட்டகாசமாக சிரித்து…. இவ பேசாம Chef ஆகினால் நல்லா சம்பாதிக்கலாம் என்று புகழ்வது போன்று மட்டந்தட்டி…. கண்கலங்கி போனதற்கு “ என் வருங்கால மனைவி சரியான அழுமூஞ்சி” என்று கிண்டலடித்து… தனியே கூட்டிப்போய் ஆங்கிலத்தில் கத்தி…. போதுமா…… ? இப்போதெல்லாம் நான் பதில் பேசுவதையெல்லாம் குறைத்துவிட்டேன். பேசி பயனில்லா விடயங்களை பேசி என் வார்த்தைகள் தானே தீர்ந்து போகின்றன.

அண்ணா வரும் போது 7 மணி… வந்ததும் அணைத்தபடி கேட்ட முதல் கேள்வியே… “சாப்பிடலயா….” என் மௌனம் அண்ணாக்கு என்ன சொல்லியதோ தெரியவில்லை. அவரிடம் 30 நிமிடத்தில் வருகின்றேன் என்று என்னை கூட்டிப்போய் டீ குடித்து வரும் வரை அண்ணா பொதுவான விடயங்களைத்தான் பேசினார். ஒரு வார்த்தை கூட இன்றைய நாள் பற்றி கேட்கவில்லை. மீண்டும் போய் எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மணி 10.30. அண்ணாவுடன் வெளிக்கிடும் போது அவர் கையில் ஒரு பாசலை திணித்தார். 

வீட்டாக்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி கேட்டதற்கு விட்டுக்கொடுக்காமல் அல்லது வீட்டாக்களை கவலைப்படுத்தாமல் பொய்கள் பேசி மொழுகி… அவர் கொடுத்த பரிசை பிரித்தால் மேக்கப் செட். கண் மையைத்தவிர நான் வேறேதும் அலங்காரங்கள் பாவிப்பதில்லை என்பது இத்தனை வருடங்களில் தெரிந்திருக்கவில்லை என்பது கையிலிருந்த பொருளின் பாரத்தினை விடவும் மனதில் கனக்கின்றது. அலங்காரங்கள் என் முகத்திலும் இருப்பதில்லை என் எழுத்திலும் இருப்பதில்லை. யாரை கவர்வதற்கு அலங்காரங்கள்? இது தான் நான்…. இவ்வளவு தான் நான்….  

சின்ன சின்ன அன்பில் தான் ஜீவனே இருக்கின்றதன்றி பொருட்களின் பெறுமதியிலில்லை. ஒரு பிடியாவது நான் சமைத்ததை நீ சாப்பிட்டிருந்தால்..... நன்றாயிருக்கின்றது என சொல்லியிருந்தால்.... ஒரு உணவு வேளையாவது என்னுடன் இருந்திருந்தால்... சாப்பிட்டாயா என கேட்டிருந்தால்..... 

எல்லாம் "ஆல்" விகுதிக்குள் தான் அடங்கிப்போகின்றது. என் எதிர்பார்ப்புக்கள் உட்பட.... ஒருவேளை இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் கிறுக்கல்களில்.... வர்ணங்களில்.... சேமித்து வைத்திருப்பேன் நான். போதும் இன்றைய நாள்…..

பக்கம்: 1098

வணக்கம் நாட்குறிப்பே!
அம்மா எப்போதும் எமக்கு சொல்கின்றதொரு விடயம் தம்பதிகள் இருவர்களுக்கிடையான எதுவும் மூன்றாம் நபருக்கு தெரியக்கூடாதென்பது. இது தான் இல்லறத்தின் இரகசியம் என்று அடிக்கடி சொல்லுவார். 
னக்கும் இக்கருத்தில் உடன்பாடுண்டு. எப்போது இருவருக்கிடையான உறவு நிலையின் நிலைப்பாடு வெளியில் தெரிகின்றதோ அப்போது அந்த இடைவெளில் வெளிநபர் நுழைவதற்கு முயல்வது இலகுவாகின்றது. இதுவே பொதுவெளியில் இருக்கின்ற இருவராயின் சமூகப்பார்வையும் வேறாயிருக்கும். அம்மா சொல்வதன் பொருள் இன்று விளங்கிய நாள் இது…..

காலையில் எழும்பி என் கைத்தொலைபேசியை பார்த்தால் பல குறுங்செய்திகள், தவறவிட்ட அழைப்புக்கள்….

 “Hey Sweet heart, I really enjoyed your meal, but it was a bit too much for me.”

 “My friends say I’m the luckiest person. I’m so proud of you.”

 “Darling, shall we go out for lunch this weekend? I’m free.”

 “Sweet heart, are you sleeping… or are you upset? Please reply.”“Hey, you said you had a surprise gift. Where is it?”

இவையனைத்தும் அவரிடமிருந்து தான்! “உணவு அதிகமாயிருப்பது நான் சாப்பிடாமல் போனதும் சேர்த்து தான். தருவதாக சொன்ன அந்தப்பரிசு இன்னும் என்னிடம் தானுள்ளது. தரும் மனநிலை இல்லை. உன் கண்களை நான் பார்த்து வரைந்திருக்கின்றேன். இதனை தருவதற்கும் ஒருவித மனநிலை வேண்டும். மனதுள் காதல் வேண்டும். இனி தரும் நிலையில் நான் இல்லை… வாங்கும் தகுதி உனக்கில்லை” என்று தட்டச்சு செய்துவிட்டு அனுப்பாமல் விட்டுவிட்டேன். ஒருவேளை “நீ சாப்பிடவில்லையா…? என்று கேட்டிருந்தால் என் வானிலை நேற்று மாறியிருக்கும்….. 


புதிய எண்ணிலிருந்து மூன்று குறுஞ்செய்திகள். அதன் தமிழாக்கம்

“ நான்…….. இன் நண்பன். நேற்று அவன் உங்களை ஏசுவதை பார்த்தேன். இது வெறும் கல்யாண பேச்சு தானே… விருப்பமில்லாவிட்டால் விலகி விடுங்கள். என்னுடன் பேசவிரும்பினால் இருவரும் சந்திப்போம்.எனக்கு உங்களைப் பிடித்திருக்கின்றது ” 

என்னயிது… யாரிது…. ? குழப்பமாயிருக்கின்றது. நண்பனின் வருங்கால மனைவியிடம் இதென்ன பேச்சு… இது என்னவிதமான கேவலமான மனநிலை…. ஆனால் தவறு இவர் மீது தான். அம்மா சொல்வது சரி தான். துக்கமோ சந்தோசமோ நான்கு சுவற்றினுள் இருக்க வேண்டும்.

பக்கம்: 1107 

என் இனிய நாட்குறிப்பே…
இப்போதெல்லாம் மனம் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிட்டது. இது உறவுநிலையில் ஆபத்தான நிலை என்று எனக்கு புரிகின்றது. ஆனால் என் சிறிய மூளைக்கு புரியவில்லை. ஒருவருக்கு நல்ல நண்பியாகவிருந்து ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புக்களை தெரிந்துகொண்டு, உணர்வுகளை பரிமாறி நீயில்லையென்றால் வலிக்கும் என்ற நிலையில் அன்பைச்சொல்லி , முதன் முதல் இரு வீட்டாருக்கும் அறிமுகம் செய்து பின்னர் நண்பர்களுக்கு தெரிவித்து திருமணம் வரை உறவைகொண்டு செல்ல வேண்டும் என்று பருவ வயது முதல் நினைத்ததுண்டு. அந்த ஒருவனுக்காக தான் பருவ வயதிலும் பல்கலைக்கழகத்திலும் அலை பாயாமல் இருந்தது இந்த மனம். ஆனால் கடவுள் அதற்கெனக்கு கொடுப்பினை தரவில்லை. சரி நம்மை விரும்பி வந்தவரையாவது அறிந்துகொண்டு புரிதலை உருவாக்க நினைத்தால் அந்த நினைப்பும் அரை வழியில் என்னைப்பார்த்து நகைக்கின்றது. 

யாராவது என்னை விரும்புவதாக சொன்னாலோ, பாசமாக குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஓடிப்போய் அவர்கள் அருகில் நிற்க யோசிக்கின்றது மனம். எதை எதிர்பார்க்கின்றது இது….? பணம்…..பதவி…… கம்பீரமான தோற்றம்……. இல்லையென்று தான் தோன்றுகின்றது. நம்மை ஒருவர் கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்ள மாட்டாரா… சாப்பிட்டீயா என்று கேட்க மாட்டாரா… வீடு போய் சேர்ந்தாயா என்று விசாரிக்க மாட்டாரா என்று இப்போதெல்லாம் யோசிக்கின்றேன்.

ஒருவருக்கு என் குடும்பம் கொடுத்து விட்ட வாக்கு, அந்த உறவில் காட்ட வேண்டிய நேர்மை, நம்மை விரும்பி அன்பை வெளிப்படுத்துபவர்களுக்கு நான் நிச்சயிக்கப்பட்டுவிட்டவள் என்று வெளிப்படையாக சொல்லிவிட வேண்டிய நேர்மை, வீடு தேடி வந்த நல்ல வாழ்க்கையை நான் வாழ்வதாக நம்புகின்ற என் குடும்பம் இதற்கு நடுவில் குழும்பித் தவிர்க்கின்றேன் நான். இதையெல்லாம் மறைக்க தான் வர்ணங்களுள்ளும், கிறுக்கல்களிலும் கட்டடங்களுள்ளும் தொலைய நினைக்கின்றேன் நான்……. என்னை எவரும் நெருங்காமல் இருப்பதே நல்லது என மனம் என் மண்டையை குட்டிச்சொல்கின்றது! 

இலட்சுமணன் சீதைக்கு வரைந்தது வெறும் கோடு தான். அதை தாண்ட கூடாதென நினைத்தது தான் ஒழுக்கம். அது தான் அன்று சூழ்ந்த தீ……வாக்கு கொடுத்தாயிற்று வாழ்ந்தாகத் தானே வேண்டும். 

இன்று வேறெதுவுமில்லை! குட்நைட்!! 




 



 






 

 

Comments