Thursday, April 10, 2014

ஊடகப்பெண்களும் ஊரார் பார்வையும்....

சுயம் - 01
அன்று காலையில் எனது தொலைபேசிக்கு வந்த அழைப்பு நான் எதிபாராத ஒன்று மட்டுமல்ல. ஊடகபெண்கள் எவ்வாறெல்லாம் ஊரார் பார்வைக்கு தீனியாகின்றார்கள் என்று எனக்கு சொல்லிய முதல் அழைப்பும் கூட

நான் ஹலோ சொன்னதுமே மறுமுனையிலிருந்த பெண்குரல் கேட்ட கேள்வி நீ நேற்று இரவு ….. என்பவருடன் தங்கினாயா? என்பதே. இந்தக்கேள்வியை இன்று கேட்டிருந்தால் என் பதில் வேறாயிருந்திருக்கும். ஆனால் இது கேட்கப்பட்டது இரு வருடங்களுக்கு முன்னர். அதாவது நான் ஊடகதுறையில் காலடிவைத்த நேரமது. வாயில் வார்த்தைகள் வரும் முன் கண்களுள் கண்ணீர் தான் முதலாக வந்தது அந்த நிமிடத்தில். மறக்க மட்டுமல்ல மனதிலிருந்து மறக்க முடியாத நிமிடங்கள் அவை. என்னுள் ஏற்பட்ட பதற்றத்தில் தொலைபேசியை நிறுத்தி விட்டு என்னுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட நபருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். அதன் பின்பு அந்தப்பெண்ணுடன் பேசினேன்.

இப்படி பல அழைப்புக்கள் ஏற்படுத்தியதன் விளைவாக இறுதியில் “ அவர் தனது காதலர் என்றும், பல வருட காதலில் தானும் அவரும் பல தடவை உடலுறவு வைத்து கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது அவர் சாதியைக்காட்டி தன்னை உதறிவிட்டு வீட்டில் பார்க்கின்ற வேறு பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் இல்லாமல் தன்னால் வாழமுடியாது தற்கொலை செய்ய போகின்றேன்” என்று பெண் தெரிவித்தாள். தான் “பத்திரிகை ஆசிரியராக இருந்த போது வறுமையால் மேடையில் பாடிய அந்த பெண்ணை தான் பத்திரிகை அலுவலகத்தில் இணைத்ததாகவும்  தன் பணத்திற்காக அவள் தன் பின் அலைவதாகவும்,  அப்படி தன்னை அடுத்தவர்களுடன் இணைத்து பேசும் அந்தப்பெண்ணுடன் என்னால் சேர்ந்து வாழமுடியாது. நான் அவளை காதலிக்கவும் இல்லை” என்று அந்த நபர் சொன்னார். இருவரது வாக்குமூலங்களும் இவ்வாறிருக்க நான் எங்கே இதில் வந்தேன்? என்று ஆராய ஆரம்பித்தேன்

என்னுடன் பணிபுரிகின்ற பெண்ணொருவர் எனக்கும் அந்த நபருக்கும் தொடர்புடையதாக சொல்லிய தகவலே இந்த தொலைபேசி அழைப்பிற்கு மூலம் என்பதை பின்னர் அறிந்தேன். இது உயர்மட்டம் வரை போய் மன்னிப்பு கேட்க வைத்ததுடன் முற்றுப்பெற்றது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாதல்லவா? இதற்கு நெருப்பு என்ன தெரியுமா? அவர் என் நண்பர் என்பதுடன் இருவரும் ஊடகத்தில் இருக்கின்றோம் என்பதே.

ஆண் - பெண் என்கின்ற நட்பினைத்தாண்டி ஊடகப்பெண்கள் குறித்த ஊரார் பார்வை தான் இன்று என்னை எழுத்தத்தூண்டியுள்ளது. அன்று ஒரு நண்பி பேசும் போது “நான் ஊடகத்துறையில் இருக்கின்றேன். அதனால் என் திருமணம் தள்ளிப்போகின்றது” என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் என்னிடம் பேசிய ஒருவர் ஒரு பெண்ணைப்பற்றி விமர்சிக்கும் போது “ இது மீடியாவில இருக்கிறது தானே… அப்படித்தான் இருக்கும்” என்றார். அன்றைய நிலையில் என்னால் பேசமுடியவில்லை. அப்போதிருந்த சூழ்நிலை அப்படி. ஆனாலும் பல தடவை மனதுள் செருப்பினால் அடித்திருக்கின்றேன். ஒருவேளை அந்த நபர் இந்தப்பதிவினை முகநூலில் பதியும் போது பார்க்கவும் கூடும்.

இவ்வாறு ஆண்களின் பார்வையில் ஊடகப்பெண்கள் இருக்கும் போது சில பெண்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். குறிப்பிட்ட என் நண்பனுடைய முகநூல் Hack  பண்ணப்பட்டிருக்கிறது. இந்த கைங்கரியத்தினை செய்த நபர் முகநூலில் உள்ள என் நண்பனுடன் பணிபுரிகின்ற ஊடகபெண்களின் படத்தினையே Copy பண்ணி என்னுடைய நண்பனின் முகநூலில் போட்டிருக்கின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் என் நண்பனின் தங்கையின் படத்தினையும் “காதலிகள்” என்ற பெயரில் போட்டிருப்பது…. ஆக சகோதர உறவினை மதிக்க தெரியாத கயவரிடம் நட்பை புரிவார் என எதிர்பார்ப்பது மடத்தனம் என்பது ஒருபுறமிருக்க தமது தனிப்பட்ட உறவுகளினால் அடுத்தவர் வாழ்வினை எவ்வாறு நாசமாக்குகின்றோம் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியதான விடயம்.

இன்னுமொரு விடயமும் இருக்கு பாருங்கோ இன்று சில முன்னணி ஊடக நிறுவனங்களில் பாலியல் இலஞ்சங்கள் கோரப்படுகின்றதுடன் முன்னுக்கு வர எத்தனிக்கும் பெண்களுக்கு பின்னால் கதைகளும் கட்டப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் ஒன்று தமது வலையில் குறிப்பிட்ட பெண் சிக்காமை… இன்னொன்று எங்கே தம்முடைய இடம் பறிபோய் விடுமோ என்கின்ற பயம்.. அல்லது தாம் எட்டமுடியா இடங்களை எட்டிவிடும் அடுத்தவர்களை மானபங்கப்படுத்தி பார்க்கின்ற ஒருவித குரூரமானநிலை….

ஊடகத்தில் பணிபுரியிறது என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயம். அதிலும் பெண்களை ஊடகத்தில் பணிபுரிய அனுப்ப பெரும்பாலான குடும்பங்கள் விரும்புவதில்லை… காரணம் அரசியல் பிரச்சினை என்பதை தாண்டி தம் பிள்ளைகள் அசிங்கப்பட்டு நிற்குமோ என்ற பயம்…. குறிப்பாக பெற்றோருக்கு தம் மகளை ஊடகப்பணிக்கு விடுவது என்பது இலங்கை கலாசாரத்தில் வேப்பங்காய் போன்றதொன்று. இதையும் தாண்டி பல பெண்கள் தம் இலட்சிய கனவிற்காக ஊடகப்பணியில் இணைவதுண்டு. இவ்வாறு பல தடைகளையும் தாண்டி தமது இலட்சியத்திற்காக போராடுகின்ற பெண்கள் தம் இலக்கினை அடைகின்றார்களா என்பது பெரியதொரு வினா?

பெண் என்பதால் குட்டப்பட்டார்கள்... இன்று ஊடகப்பெண் என்பதால் குட்டப்படுகின்றார்கள் ... நாம் குரங்கிலிருந்து கூர்ப்படைந்துவிட்டோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் நிலைக்கண்ணாடி  முன்னால் நின்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.

பிற்குறிப்பு - என்னுடைய அடுத்த பதிவில் இவ்வாறான சில சம்பவங்களினை பெயர்களுடன் பதியவுள்ளேன். ஆதாரங்களும் முன்வைக்கப்படும்.
 


Wednesday, April 2, 2014

என்னை ஏமாற்றியவள் பற்றி உங்களுக்கு சொல்லி நியாயம் கேக்கலாம்.....

கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து பல இணையத்தளங்களிலும் வெளிவந்து கொண்டு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்த ஒரு விடயம் இளைஞன் ஒருவனின் தற்கொலையும் அவன் முகநூலில் இறக்கும் முன் இட்டிருந்த பதிவும்…. இங்கு அவன் தற்கொலை பற்றிய விமர்சிப்போ அல்லது அந்தப்பெண் பற்றிய நியாயப்படுத்தல்களோ பற்றியதில்லை இப்பதிவு. அந்த இளைஞர் பதிவிட்டிருந்த விடயத்தில் காணப்படுகின்ற சில நெருடல்கள் பற்றி பேசுவதே இதன் நோக்கம்.

இவள் பத்தாம் வகுப்பு(2006) படிக்கும் போது இவளுடைய உறவினர் ஒருவரை காதலித்தால் அவனுக்கு அச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது இவள் அதற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளிநாடு செல்லும் படியும் சொன்னதை கேட்டு அவனும் இவளது விருப்பப்படியே வெளிநாடு சென்றுள்ளான்  இந்த பந்தியினை எடுத்துக்கொள்ளுங்கள் அந்தப்பெண் பத்தாம் ஆண்டு படிக்கும் பொது கூறியதை கேட்டு ஒரு இளைஞன் முடிவெடுத்திருக்கின்றான் இது தான் இப்பந்தியின் சாராம்சம். புத்தாம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கு வயது நிச்சயம் 15 இனை தாண்டியிருக்காது. புதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒருவரைத்தான் “வயது வந்தவர்” என்ற வரப்பிற்குள் சேர்க்கின்றோம். அதற்கு கீழ்ப்பட்டவர்கள் குழந்தைகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடக்கப்படுகின்றனர். பல்கலைக்கழக அனுமதி பெறுகின்ற ஒருவர் 18 வயதினை தாண்டியிருப்பார் என்பது இலங்கை கல்வி அமைப்பின் கட்டாய நிகழ்வு. ஆக வயது வந்த நபர் ஒருவர் குழந்தை ஒன்றின் சொல்லுக்கு இணங்கி தனது முடிவினை மாற்றியிருக்கின்றார். ஒரு குழந்தை நம்மிடம் நஞ்சு போத்தலை கேட்டோ அல்லது பாலத்திலிருந்து குதித்து காட்டு என்றோ அடம்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதனை நாம் செய்வோமா?

பின்னர் 2013 March மாதம் முதல் Phone இல் தொடர்புகளை ஏற்படுத்தினோம். ஆனாலும் பிரதீபனுடன் கதைப்பதால் என்னுடன் கதைப்பது மிகக்குறைவு. பின்னர் May மாதத்திலிருந்து பிரதீபன் இவளை விட்டு செல்ல என்னுடன் கதைப்பது அதிகமாயிற்று   இதில் இரண்டாவது வரியை பாருங்கள் “குறிப்பிட்ட நபருடன் கதைப்பதால்….” இதை வாசிக்கும் போது தற்கொலை செய்த இளைஞனுக்கு இந்தப்பெண்ணின் காதல் பற்றி முன்னரே தெரிந்துள்ளது என்பது தெளிவாகின்றது. ஒருவேளை "காரணம் தெரியாது இருந்திருக்கும். இங்குள்ள காலவிகுதிகள் அவசரத்தில் டைப்செய்ததால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம்" என்று நீங்கள் சாதிக்க கூடும். ஆனால் இந்த இளைஞர் மாதங்களையும் குறிப்பிட்டு கூறியுள்ளதால் இவர் அந்தப்பெண்ணுடனான உறவில் ஏற்பட்டிருந்த விரிசலினை மனதால் ஆவது உணர்ந்துள்ளார் என்பதை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அவர் குறிப்பிட்டுள்ளதன் படி தனது காதல் அந்தப்பெண்ணுடன் அரும்பி இரு மாதங்களுள் வித்தியாசத்தினை உணர்ந்த இந்த இளைஞன் ஏன் உடனேயே விலகவில்லை என்பது இங்கு பெரியதொரு கேள்விக்குறி.

இவ்வாறு இருந்த போது 2013 September இல் இவளுடைய முதல் காதலனின் நண்பி ஒருவர் மூலம் இவளைப்பற்றி தெரிந்து கொண்டேன். (அப்போது இவளுடைய முதல் காதலனுடனும் கதைத்தேன் அவனும் இவள பற்றி சொல்லிஇ இன்னொரு கசநைனெ கிடைக்க உங்களையும் விட்டிடுவாள் எண்டு சொன்னான். நான் இல்லை அவள் என்னோடு ஒழுங்காக பழகுகின்றாள் அப்படி செய்ய மாட்டாள் என்றுசொன்னேன்.)
  இதற்கு முன்னராக நான் மேற்கோள் காட்டியுள்ள இளைஞனின் கூற்றுக்கும் இந்தப்பந்தியில் சுட்டியுள்ள பகுதிக்குமான விலகலினை நன்கு அவதானிக்கலாம். முன்னர் விலகலினை உணர்ந்ததாக கூறும் இளைஞர் இந்தப்பந்தியில் “என்னுடன் ஒழுங்காக பழகினாள்” என்று பல்டி அடித்துள்ளார். இன்னொரு விடயம் ஏப்ரலில் ஹோமா ஸ்டேஜ் க்கு போனதாக சொன்ன முன்னாள் காதலனுடன் செப்டெம்பரில் பேசியுள்ளார் என்பதினையும் கவனிக்குக.

இப்படி எத்தனையோ புரியாத கேள்விகளும் நெருடல்களும் உள்ள போதும் தந்தையுடன் பேசிய போது அவர் சொல்லியதாக சுட்டப்படுகின்ற “செல்ல பிள்ளை” என்கின்ற விடயத்தினை வாசிக்கும் போது பல பிள்ளைகளை வழிநடத்துகின்ற பாடசாலை அதிபர் ஒருவரின் பொறுப்பற்ற பதில் அவர் மீது ஆத்திரத்தினை தான் ஏற்படுத்துகின்றது. எல்லாப் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு “செல்லமானவர்கள்” தான் ஆனால் தன் பிள்ளையை கண்டித்தும் அவளது நடவடிக்கைகள் குறித்து விழிப்பாயிராததுடன் அவள் பிழையை நியாயப்படுத்தும் ஒரு தந்தை எவ்வாறு பல்லாயிரம் மாணவர்களை வழிநடத்தப்போகின்றார்?

கிருத்திகா ராஜசேகரம்!  எத்தனையோ பெண்கள் அநியாயமாக உடல் உள சமூக ரீதியாக சிதைக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்காக எத்தனையோ பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வினையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவ்வாறான அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் உன் போன்றவர்களது கேவலமான நடவடிக்கைகளால் தான் இன்றும் “பெண்” என்றால் இப்படித்தான் என்று ஒட்டுமொத்த சமூதாயமுமே முத்திரை குத்தப்படுவதாக நினைக்கின்றேன். இப்படியிருக்கும் நிலையில் உனது தந்தையின் பதவி, பண, அரசியல் செல்வாக்கில் உன் சுயங்கள் மறைக்கப்படலாம். ஏன் ஒருவேளை வெளிநாட்டிற்கு வாழ்க்கைப்பட்டு போய் கணவன் பிள்ளைகள் என்று வாழக்கூடும் ஆனால் மனதுள் நீ தினம் தினம் தூக்குக்கயிற்றில் தொங்கப்போகின்றாய் என்பது மட்டும் உண்மை

நிரூபனிடம் இறுதியாக சில வினாக்கள்…. ஒரு வருடம் பழகிய காதலை மறக்க முடியாமல் தூக்கிட்டு உன்னை மாய்த்துக்கொண்டாயே பல மாதம் வயிற்றிலும் பல வருடங்கள் மனதிலும் சுமந்த பெற்றோருக்கு நீ என்ன கொடுத்துள்ளாய்? நீ மட்டும் செய்தது துரோகமில்லையா? என்று கேட்க தோனுகின்றது.

தற்கொலை என்பது ஓரிரு நிமிட உந்ததலின் முடிவென்று உளவியல்  சொல்கின்ற போது தகவல்களை திரட்டி , அதை மின்னஞ்சலில் அனுப்பி, முகநூலில் 188 போட்டோக்களை பதிவேற்றி விட்டு தொங்கிய இந்த இளைஞனின் “நிதான தற்கொலை” பெருவியர்ப்பே! காதலில் ஏமாறாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. தோல்விகளுக்கு “தற்கொலை” தான் முடிவெனில் உலகில் யாருமே 19 வயதினை தாண்டிட முடியாது. (முதல் தோல்வி அநேகமாக நம்மை தொடும் வயது எல்லை இது என்பது என் கணிப்பு)

என் மனதுள்ளான கேள்விகள், இளைஞனின் கோழை முடிவு , பெண்ணின் சுயம் குறித்த விமர்சனங்களை தாண்டி நேற்று அவனது இறுதி கிரியை செய்யும் அவன் தகப்பனை பார்த்த போது மனதுள் ஏதோவொரு இனம் புரியாத வலி பரவியது மட்டுமல்ல அவனது தோற்றத்தினை பார்க்கும் போது என் தம்பியின் விம்பமும் மனதுள் வந்து போனது.

அந்த மூன்று நாட்கள்…..

(என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை)

அப்போது நான் பாடசாலையில் தரம் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கான சுகாதார புத்தகத்தில் “பூப்படைதல்” பற்றிய பாடம் இருந்தது. ஆனால் எங்கள் சுகாதார ஆசிரியர் அதைப்பற்றி படிப்பித்தில்லை. அந்தப்பாடத்தி;ல் இருந்த படங்களை யாருமில்லா நேரத்தில் புரட்டிப்பார்த்துக்கொள்வதுண்டு. வகுப்பு நண்பிகள் யாரும் கண்டால் என்னை பகிடிபண்ணுவார்கள் என்பதே இந்த இரசிய புரட்டல்களுக்கான காரணம்.

என்னுடைய சக தோழிகள் அனேகர் தரம் ஒன்பதற்கு வரும் முன்னரே பெரியபிள்ளைகளாகிவிட்டனர். வகுப்பாசிரியர் இடாப்பு மார்க் பண்ணும் போது எமது பெயர்களை சத்தமாக தான் வாசிப்பார். ஆந்த நேரங்களில் பெரியபிள்ளையாகியதால் பாடசாலை வராமல் இருக்கும் பிள்ளைகளின் பெயர் வரும் போது “அவ ஏஜிடன்ட் பண்ணிட்டா” என்று சொல்லிக்கொள்வார். அப்படியான நாட்களில் வீட்டுக்கு வந்ததும் என் அம்மம்மாவிடம் அதைப்பற்றி கேட்பதுண்டு. “நீங்க இன்னம் வளரனும்” என்று மழுப்பிவிடுவார். பின்னேரம் அம்மா வேலைவிட்டு வந்ததும் அவவிடமும் கேட்பன். “பிறகு சொல்றன் மகள்” என்டு சொல்லுவா… ஆனால் ஒரே பார்த்திருக்கின்றேன் இதை சொல்லும் போது அம்மாவின் கொஞ்சம் வாடிடும். ஏன் என எனக்கு அப்போது புரியவில்லை. 

இப்படியிருக்கும் போது ஒரு நாள் குட்டிப்பெண்ணாக வலம் வந்த நான் எல்லாப்பெண்களையும் போன்று ஒரு நாள் “பெரிய பிள்ளை” ஆகிட்டன். நான் பாடசாலையில் வைத்துத்தான் பெரிய பிள்ளையாகினன். காலையில் விளையாட்டுப்பயிற்சி முடிந்து வகுப்பறைக்குள்ள போன போது என்னுடைய நண்பி ஒருத்தி என்னை அருகில் அழைத்து என்னை பின்னால் திரும்ப சொன்னாhள். நானும் என்னவென்று யூனிபோமை பார்த்தேன். அதில் கசறு போல ஏதோ சிகப்பாக பட்டிருந்தது. ஆவள் உடனேயே வகுப்பாசிரியரிடம் சொல்லிவிவிட்டாள். வகுப்பாசிரியரும் என்னை பாடசாலை Sick Room க்கு கூட்டிப்போனார். என்னிடம் அம்மாவின் போன் நம்பர் வாங்கி அவருக்கு கோல் பண்ணி வரவழைத்தார். பதினைந்து நிமிஷத்தில் அம்மாவும் பாடசாலைக்கு வந்துவிட்டார். வந்ததும் வராததுமாக என் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சம் அழுதாங்க. எனக்கு ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க என்பது புரியவேயில்லை. என் வயிற்றிலும் சற்று வலியை உணர்ந்தேன். 

கொஞ்ச நேரத்தில் என்னுடைய முழுக்குடும்பமுமே பாடசாலைக்கு வந்திட்டுது. என்னை வெள்ளைத்துணியால் மூடி கையில் இரும்புத்துண்டு தந்து வாகனத்தில் வீட்டுக்கு கூட்டிப்போனார்கள். நான் என்னுடைய அறைக்குள் போவதற்கு முன்னரே பல மாற்றங்கள் அதனுள் ஏற்பட்டிருந்தது. ஏன் படுக்கை விரிப்புக்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மாற்றப்பட்டிருந்தன. அறை வாசலில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா என்னை Wash Room  க்குள் கூட்டிப்போய் Pad வைக்கச்சொல்லித்தந்தாங்க.

இன்று பின்னேரம் பக்கத்து வீட்டாக்கள், நெருங்கிய உறவுகள் எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். புடைவையால் சதுரமாக மறிப்பு கட்டி நடுவில் விளக்குமாறும் அதற்கு மேல் குப்பையும் வைக்கப்பட்டிருந்தது. என்னை அதற்கு மேல் இருத்தினார்கள். பக்கத்தில் தண்ணீர்த்தொட்டியில் மல்லிகைப்பூ போட்டு வைக்கப்பட்டிருந்தது. உறவுக்காரப் பொம்பளைகள் எல்லாம் அந்த தண்ணியல் அள்ளி எனக்கு ஊற்றினார்கள். பிறகு என்னை மீண்டும் வெள்ளைச்சீலையால் மூடி என்னுடைய அறைக்கு கூட்டிப்போனார்கள். அவர்கள் பேசியதை வைத்து இச்சடங்கிற்கு பெயர் “கண்ட தண்ணீர் வார்த்தல்” என்று புரிந்துகொண்டேன்.

என்னுடைய அப்பாவின் தங்கை “முறை மாமி” என்று சொல்லி எனக்கு பச்சை முட்டையும் வேப்பண்ணையும் பருக்கினா. எனக்கு அப்போதிருந்த நிலையில் குமட்டலும் அழுகையும் தான் வந்தது. வந்தவர்கள் எல்லாம் போன பிறகு என்னுடைய அம்மம்மா வந்து “ இனி வெளிய வரக்கூடாது. ஏதும் அவசரம் என்டால் இந்த கத்தியுடன்தான் வரவேண்டும்” என்று சொல்லி ஒரு கத்தியை கையில் தந்திட்டு போய்விட்டாங்க.

என்னுடைய அண்ணா, தம்பிக்கு கூட நானிருந்த அறைக்குள் போகக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணா முகத்தில் ஒருவித எச்சரிக்கை உணர்வையும் தம்பி முகத்தில் இனம்புரியாத ஒரு சிரிப்பையும் நான் பார்த்தன். பிறகு அண்ணா என்னுடைய அறைக்கு வரவேயில்லை. தம்பி தான் சிலவேளை யாருமில்லாத நேரம் பார்த்து அறை வாசலில் நின்று எட்டிப்பார்ப்பான். அன்றிலிருந்து பலர் என்னை பார்க்கவென்று வந்தார்கள். ஆனால் அவர்களுள் பெண்கள் மட்டும் தான் என் அறைக்குள் வருவார்கள். எள்ளு,வேப்பபெண்ணை, உளுந்து, நல்லெண்ணெய் போத்தல், நாட்டு கோழி முட்டை என்று இந்த பட்டியலில் ஏதோவொன்றினை கொண்டு வருவார்கள்.
காலையும் மாலையும் என் முறை மாமி வந்து பச்சை முட்டை, வேப்பெண்ணெய் பருக்கிட்டு போவார். மூவேளையும் நல்லெண்ணெய்யில் பொரித்த முட்டை, கத்தரிக்காய் என்பன சாப்பாடாக தரப்படும். தினமும் அம்மம்மா உழுந்து மா புட்டுக்குள் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சீலையில் கட்டி சூடாக இடுப்பிற்கு ஒத்தடம் தருவா. பிறகு அதையே முடிச்சினை அவிழ்த்து என்னை சாப்பிட வைப்பாங்க. அடிக்கடி வெள்ளை உழுந்து கஞ்சி, எள்ளுருண்டை எனக்கு கட்டாயப்படுத்தி உண்ணுவதற்கு தருவாங்க. தினமும் மஞ்சள் பூசித்தான் என்னை குளிக்கவிடுவார்கள்.

மூன்று கிழமை இப்படித்தான் என் நாட்கள் நகர்ந்தன. அதுக்குப்பிறகு என் ருதுவான நேரத்தினை சாத்திரியிடம் கொடுத்து சடங்கு செய்ய நாள் குறித்தாங்க. அவர் சொன்னதன் படி குறிப்பிட்ட நிறத்தில் தான் எனக்கு புடவை எடுத்தாங்க. சடங்கு நாளன்றும் கண்ட தண்ணி நிகழ்வு போலவே நடந்தது. ஆனால் இம்முறை குளிப்பாட்டி முடித்தவுடன் சாமியறைக்கு அழைத்துப்போய் விளக்கேற்ற வைத்தார்கள். அதுக்கு பிறகு புடவை கட்டி தலையலங்காரம் முகவலங்காரம் எல்லாம் செய்து மண்டபத்தில் சோடிக்கப்பட்ட கதிரையில் இருக்க வைத்தாங்க.

வீடு முழுவதும் விருந்தினர்கள். சாப்பாடெல்லாம் தடபுடலாக இருந்தது. என் அம்மாவின் அண்ணன் , தம்பி இருவரும் வேட்டி கட்டி தலைப்பாகை அணிந்து எனக்கு நகை அணிவித்தார்கள். இதனை “தாய் மாமன் சடங்கு” என்பார்களாம். என் முறைமாமி ஆராத்தி எடுத்தார்கள். இவ்வாறு பல்வேறு சடங்குகளுக்கு பின் அருட்சகோதரர் ஒருவர் என்னை ஆசீர்வதித்து ஜெபம் செய்தார். பிறகு மதிய உணவு சாப்பிட்டார்கள். அதற்கு பின்னர் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பரிசுகள் தந்து என்னுடன் நின்று புகைப்படம் பிடித்தார்கள்.என்னையும் தனியே பல கோணங்களில் அலங்காரங்களில் படம்பிடித்துக்கொண்டார்கள்

ஒருவாறு இதெல்லாம் முடிந்த பிறகு நான் இனி வெளியில் போகலாம் என்று அம்மா சொன்னாங்க. எனக்கு இப்படி அவர் சொன்னது ஏதோவொரு விடுதலை உணர்வினைத்தான் மனதளவில் கொடுத்தது. இரு நாட்கள் கழித்து பாடசாலைக்கு அனுப்பப்பட்டன். வகுப்பு மாணவிகளுக்கு கொடுக்க சொக்லட்டுக்களும் தந்து தான் அனுப்பினார்கள். இன்று வகுப்பிற்கு வந்த பாட ஆசிரியர்கள் எனது முகத்தோற்றம் மாறி சற்று வளர்ந்திருப்பதாக சொன்னார்கள். அன்றிரவு என் படுக்கையில் விழுந்தவுடன் “பெரிய பிள்ளை” ஆவது இனி எனக்கு வரக்கூடாது என்று தான் நினைத்துக்கொண்டேன்.
இப்படி நினைத்து ஐந்தாறு நாட்களில் எனக்கு திடீரென வயிற்றுவலி வந்தது. பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகு உடைமாற்றும் போது தான் பார்த்தேன். என் சட்டையின் பின்பக்கம் இரத்த கறை படிந்திருந்தது. எனக்கு உடல் வலியுடன் கூடவே சொல்ல முடியாத மன உளைச்சலும் ஏற்பட தொடங்கியது.

அம்மாட்ட ஓடிப்போய்  சொன்னன். ஒவ்வொரு மாதமும் இப்படி வரும் என்று சிரித்தவாறு சொன்னார். அன்றிலிருந்து மாதம் தோறும் இதனை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்த மூன்று நாட்களில் எனக்குள் ஒருவித விரக்தியும், வயிற்று வலியும் பரவியிருக்கும். இள நிற உடைகளை இந்நாட்களில் வெறுத்தொதுக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படியெல்லாம் இரத்தம் வருகிறது? எங்கிருந்து வருகிறது என்று எனக்கு யாரும் சொல்லித்தரவும் இல்லை….

இன்று பல்கலைகழக மாணவியாக “மாதவிடாய்” என்பது பற்றியும் “பூப்படைதல்” குறித்தும் எனக்கு நிறைய விடயங்கள் தெரியும். நாளை நான் தாயாகும் போது நிச்சயம் என் மகளுக்கு இவை குறித்த அறிவை முன்னரே கொடுத்து அவளை “அந்த மூன்று நாட்களுக்கு” தயார்படுத்த வேண்டும் என்று இப்போதெல்லாம் நினைத்துக்கொள்கின்றேன். நான் அனுபவித்த “மன உளைச்சல்” அவளுக்கும் வரக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். ஒரு வேளை அவளும் என்னைப்போன்று “சடங்குகள்” தான் “பெரிய பிள்ளை” ஆதல் என்று புரிந்துகொள்ளக்கூடாது! 

அவளுக்குள் ஏற்படவுள்ள உடல், உள மாற்றங்களை அவள் உணர்ந்து அந்த மூன்று நாட்களுக்கு தன்னை தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

அதிகம் வாசிக்கபட்டவை