Thursday, February 20, 2014

உள்ளங்கவர் கள்வன்

முதல் காதல்
அழியாக்காதல்
அவனோடு….

ள்வனின் பெயர்?
என் முதல்
கவிதையின் தலைப்பு

னம்?
அவனிடம் கேட்டதில்லை

மொழி?
இதுவரை நேரில்
கதைத்ததில்லை
மௌனங்கள் பேசியதுண்டு
காதலுக்கு மொழியேது....

முதல் சந்திப்பு?
தனிமையின் ஒரு கணத்தில்
கண்ணுக்குள் விழுந்தவன்
இன்று இதயத்துள்
நிறைந்துள்ளவன் - என்
கவியின் கதாநாயகன்

ந்திக்காத நாட்கள்?
திங்கள் ஒரு தடவை
தொலைகின்றவன்…. கூடவே – என்
நினைவுகளை
தொலைக்க வைப்பவன்

காதல் பரிசு?
அவனிடமிருந்தான
இனிய இராப்பொழுதுகள்….
அவனுக்கு நான்
கொடுத்த என்னாலான
முதல் பரிசு கவிதை!!

முத்தம்?
பல முத்தங்கள் பறக்கவிட்டதுண்டு
தீண்டிடாத அசைவக்காதல்
எம்முடையது!!

சீண்டல்?
சீ…சீ…. எம் - தூரம்
போதும்
விரதத்திற்கு….

வனை பிடிக்காதவர்கள்?
என் அம்மா – அப்பா
அவன் குறித்தான
தனிமைகளை திட்டியதுண்டு
ஓரிரவில் அவனுடன்
பேசியதற்கு – என்
அண்ணா கன்னத்தில்
அறைந்ததுண்டு!!

நிச்சயார்த்தம்?
குழந்தையே உண்டு!!

குழந்தை?
என் குழந்தைக்கு
அவனைக்காட்டி தான்
சோறூட்டுகின்றேன்

வன்?
சூரியனின் பகைவன்
அல்லியின் காதலன்
தினமும் என்னவனின்
முகவரி சொல்லும்
சந்திரன்!!!

ட?
உள்ளங்கள் தான்
மோதிக்கொள்ளுமா…- என்
இனிய தனிமை
இரவு
விடுதி முற்றம் - அவனை
காதலிக்க இது போதாதா….??


Friday, February 14, 2014

எது அது???

அழகியதொரு விடயத்திற்கான நாளுக்காக எல்லோருமே காத்துக்கொண்டிருக்கின்றோம். அதாங்க பெப்ரவரி 14… 
ஒரு கொண்டாட்ட நாள் என்றால் எமக்கு சிரிக்க தோன்றும். அதுவே மரண வீடென்றால் அழவைக்கும், இன்னும் சில நிகழ்வுகள் நம்மை சிந்திக்க வைக்கும்…… ஆனால் நினைக்கும் போதே பலரை சிரிக்கவும், பலரை அழவைக்கவும், பலரை சிந்திக்க வைக்கவும் என பலவித குணவியல்புகளை உருவாக்க கூடிய சக்தி ஒரு தினத்திற்கு முடிகின்றதென்றால் அது இந்த நாள் தான்.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பலரை கடக்கின்றோம். சின்ன வயசில கூடப் படித்த குட்டீஸ் (நாமளும் அப்ப குட்டியா தான் இருந்திருப்பம்) , பாடசாலை போகும் போது பார்க்கின்ற பெடியன்கள், பெட்டையள் (அண்ணாவின் நண்பனையும், நண்பியின் அண்ணாவையும் இரகசியமாக லுக்கு விட வைக்கும்….. அவ்…அவ்), யுனிவசிட்டி விடலைகள் , எம்முடன் வேலை பார்ப்பவர்கள் என்று 1000 ஆண்களையும் பெண்களையும் கடந்திருப்பம்… ஆனா யாரோ ஒருத்தியிடமோ அல்லது ஒருவனிடமோ மட்டும் குழந்தையாக நம் மனம் தாவி ஓடுமே அது தாங்க காதல்….

பிறந்ததிலிருந்து நம்மை கண்ணும் கருத்துமாக பார்க்கின்ற அப்பாவை எதிர்த்து பேச வைக்கும்… மடியில் போட்டு தூங்க வைக்கின்ற அம்மாவை தூக்கியெறிய வைக்கும்… எங்கிருந்திருந்தாலும் நம்மை கண்ணால் தொடர்கின்ற அண்ணாவின் அக்கறையை துச்சமாக நினைக்க வைக்கும்….. செல்லமாக நம்முடன் சேட்டை விடுகின்ற குட்டித் தம்பியிடம் கோபம் கொள்ள வைக்கும். நம்மை சூழவுள்ள அனைத்தையும் மறக்க செய்து தனித்தீவாக்கி விடும் இந்த காதல்…

ஆனால் காதலிக்கின்ற நாம் எம் காதலில் எப்படியிருக்கின்றம்?? ஒருவரிடம் காதலை சொல்லும் போது இருக்கின்ற வேகம், பாச அளவு கடைசி வரைக்கும் இருக்கின்றதா என்பதில் தான் “காதல்” முழு பரிணாமடைகின்றது.“செல்லம்” ஆக இருந்தவள் “தொல்லை” ஆவதும் “நல்லவன்” ஆக தெரிந்தவன் “நரகமாக” தெரிவதும் எதனால்?? நம்முள் இல்லாத தெளிவின்மைகளாலேயே…. இந்த காதல் என்கின்ற உணர்வில் கூட பலவகையுண்டு.

ஒரு பதினெட்டு – பத்தொன்பது வயசில் தன் கட்டுப்பாட்டை விட்டு மனசு ஒரு தாவு தாவிவிட்டு, “அய்யய்யோ! இது நடக்காது” என்று போன வேகத்தில் திரும்பிவந்து கொஞ்சம் பரவசத்தோடும் கொஞ்சம் பரிதவிப்போடும் “அது ஒரு காலம்” என்று காலமெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருக்குமே… அதுதான் “அது”.

ஓர் ஆணும் பெண்ணும் உறவுகொள்ள, சடங்குகள், சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது.

பெண் மீது ஆண் மட்டுமோ ஆண் மீது பெண் மட்டுமோ ஆசைப்பட்டு, கனவுகளையும் ஆசைகளையும் நெஞ்சில் கரணை கரணையாகக் கட்டிவைத்திருந்தால் இலக்கியம் அதை “ஒருதலைக் காதல்” என்கிறது.

ஓர் ஆணின் மனசும் பெண்ணின் மனசும் ஒன்றோடுடொன்று இடறிவிழுந்து, இடறிவிழுந்த மனசுகளின் சம்மதத்தோடு உடம்புகளும் தொட்டுக்கொண்டு, இன்பம் போல ஒரு துன்பத்தையும் துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் உலகம் அதைக் “காதல்” என்கிறது.

“இதோ பார்! நீ எனக்கில்ல: நான் உனக்கில்ல. ஆனா நீ எனக்கு வேணும்: நான் உனக்கு வேணும். உன்னால் சுகம் எனக்கு: என்னால் சுகம் உனக்கு. போகிற போக்கில் போவோம். காலம் எங்கே நம்மைப் பிரியச் சொல்கிறதோ அங்கே லாபநட்டக் கணக்குப் பார்க்காமல் பிரிந்து கொள்வோம்.” இந்த ஒப்பந்தத்தோடு நடக்கிற உறவுக்குக் “காமம்” என்று பெயர்.

“உனக்குள்ளும் அது இருக்கிறது. எனக்குள்ளும் அது இருக்கிறது. நான்கு கண்களுக்குள் மட்டும் மினுக் மினுக் என்று அது மின்னுகிறது. வட்டமிட்டுச் சுற்றிவரவுமில்லை: திட்டமிட்டுச் சொல்லவும் முடியவில்லை. ரெண்டு மனசிலும் கனக்கிறது ஒரே பாரம். இறுதிவரை இறக்கி வைக்கவே இல்லை. கடைசியில் பிரிகிறோம் - இதயங்களுக்குள் குழிவெட்டி பாரங்களைப் புதைத்துக் கொண்டு” இந்த அனிச்சப்பூவின் அரும்பு போலிருக்கும் அந்த மெல்லிய உறவுக்கு எந்தப் பெயரை வைக்கலாமோ அந்தப் பெயரை வைக்கலாம்…..

முதலில் உங்களுள் தோன்றியுள்ள உணர்வினை எவ்வகையினது என்று கண்டுகொள்ள முயற்சியுங்கள். அதன் பின் காதலியுங்கள்… காதல் என்ற ஒன்றிணை தெரிந்த பின் கோழைத்தனமாக விட்டோடி விடாதீர்கள்…. ஒருவேளை தோற்றுவிட்டாலும் உங்கள் காதல் உண்மையென்றால் வாழ்ந்து காட்டுங்கள்!!! காதல் என்பது கல்யாணத்தில் முடிவதல்ல… காலமெல்லாம் தொடர வேண்டும்…  கல்யாணத்தில் மட்டுமே முடிவதுமல்ல… தோற்றாலும் நம் மனங்களில் இருக்க வேண்டும். “காதலில் யாருமே தோற்பதில்லை… காதலர்களை தெரிவதில் தான் தோற்கின்றோம்” அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, February 11, 2014

கழுவப்படுகின்ற அடுத்தவர் சுயங்கள்......


கிட்டடியில  எந்த சமூக ஊடகத்திலும் பதியப்படுகின்றதொரு விடயம் “இசையமைப்பாளர் யுவன் மதம் மாறிவிட்டார்” என்பது. இது பற்றி பலரும் பலவாறு விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலயும் சிலதுகள் “கள்ளக்காதலி”க்காக தான் அவரு மதம் மாறினாரு என்று வேறு பதியுதுகள். இந்த பதிவ வாசித்த பின் தான் இத பற்றி நாலு வார்த்த சொல்லனும் என்டு இத நான் பதியிறன்….

இந்த மதமாற்றம் என்ற விஷயம் என்னளவில் அவரவர் மனம் சார்ந்ததொன்று என்பது என் கருத்து. நாம் சிலவேளை யாராவது ஒரு வயதானவரையோ அல்லது ஒரு தாயைப்போல நம்மை கவனிப்பவரையோ “அம்மா” என்று அழைப்பதில்லையா? அல்லது அவருக்கு தாய் ஸ்தானத்தினை அளிப்பதில்லையா? அதற்கான நாம் கட்டாயம் அவர் வயிற்றில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது போல் தான் மதமும். எமக்கு பிடித்தால் அதை ஏற்பதில் தவறென்ன…? அதற்கு கட்டாயம் ஏதேனும் காரணம் தான் இருக்க வேண்டுமா……?
 
இதவிட முக்கியமானது ஓருவர் என்ன மதத்திலிருந்து மாறினாரோ அம் மதத்தவர் அவரை இகழ்வதும் அவர் மாறிய புதிய மதத்தவர் அவரை புகழ்வதும்….. 

ஒருவனுக்கு “மதம்” என்பது அவன் பிறப்பினால் வருவதொன்று. இந்து தாய் தந்தைக்கோ அல்லது கிறிஸ்தவ தாய் தந்தைக்கோ அல்லது வேறேதும் மத தாய் தந்தைக்கோ பிறப்பதால் தான் எமக்கு எமது பெற்றோரின் மதம் அடையாளமாக்கப்படுகிறது. இதையே நாம் வளர்ந்த பின்போ அல்லது வேறு மதங்களை புரிந்த பின்போ அல்லது வேறு மதம் எம்மை கவர்ந்த பின்போ மாற்றிக்கொள்வதில் தவறென்ன இருக்கிறது??? மதங்கள் என்பது வழிகளே அன்றி சேரும் இடம் ஒன்று தான். எந்த வழியில் போனால் என்ன அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை அது ஒருவரது சுதந்திரம்.

இந்து மதத்தினை விட்டு விலகி புத்தர் கட்டியவளை கைவிட்டுட்டு போதி மரத்தின் கீழ் பரிநிர்வாணம் அடைந்ததை கொண்டாடி அவர் தம் கருத்துக்களை “அஹிம்சை” வழிநடத்தல்கள் என்று பின்பற்றும் நாம் யுவனின் மதமாற்றத்தினை பற்றி அவதூறு பேசுவது ஏன்?

பொதுவாகவே நமக்கெல்லாம் இருக்கும் ஒரு பழக்கம் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வு குறித்து விமர்சிப்பது. நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் ஏழெட்டு மனைவி வைத்திருப்பார்…. முன் வீட்டு ஆன்டி மதம் மாறியிருப்பா…. ஏன் நம்ம வீட்டில யாராவது கூட ராவா குடிக்கிறவங்க இருப்பாங்க… இவங்களை கேட்க நமக்கு முடியாது! ஆனா ரஹ்மான் மதம் மாறினா பிரச்சினை, யுவன் மாறினா பிரச்சினை, வாலி குடிச்சா பிரச்சினை… நம்ம கண்ணுல இருக்கிற தூசிய துடைக்க முடியல இதுக்குள்ள அடுத்தவன் கண்ண ஆராயனுமா? இதுக்கு இன்னொரு காரணமும் இருக்குங்க பக்கத்து வீட்டிலயோ இல்ல நம்ம வீட்டுலயோ சவுண்ட உயர்த்தினா பெரிய சிக்கலாயிடும் ஆனா ரஹ்மான், யுவன், வாலி எல்லாம் நம்ம பதிவ பார்க்கப்போவதும் இல்ல மறுப்பு சொல்லப் போவதும் இல்ல!!!

ஆக அமேசன் காட்டில மரம் வெட்டுறத பற்றி யோசிக்கிறம்…. நடக்கிற வழியிலுள்ள புல்ல புடுங்க முடியல என்பது தான் நிஜம். பிழை (ஒருவருக்கு பிழை என்பது இன்னொருவருக்கு சரி) விடாத மனிதன் உண்டா? அல்லது தன் இஷ்டப்படி சுதந்திரமாக வாழ முடியாதா??

ஒருவனது சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி வரை உள்ளது. அந்த சுதந்திரம் சமூகத்தினையோ அல்லது தனிமனிதனையோ பாதிக்காதவரை அவனது சுயம் பற்றி ஆராய நமக்கு என்ன தகுதியிருக்கிறது??? ஒருவரது திறமைகளை இரசிப்போம், உள்வாங்குவோம், பாராட்டுவோம்!!!

அடுத்தவர் சுயங்களை விமர்சிக்க வெளிக்கிட்டு நம் சுயங்களை தொலைக்காமல் இருந்தா சரி!! மற்றவன் சீலய வெளுக்க முதல் நம்ம உடுப்ப முதல்ல பார்க்கனும்….. அதில இருக்கிற கறைய கழுவவே நமக்கு நேரமில்ல…. இதுக்குள்ள……. தேவையா மச்சான்ஸ்???

Thursday, February 6, 2014

புலம்பெயர்ந்தும் குணம்பெயரா தமிழர்கள்!


நம்ம தமிழ் மக்கள் இனவழிப்பு இயக்கத்தொடர்பு என்று பல காரணங்களுக்கு பல அழுத்தங்களுக்கு மத்தியில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இங்கு வேட்டியுடன் அல்லது அரைக்காற்சட்டையுடன் திரிந்தவர்கள் இன்று நல்லா டெனிம் உடுத்தி, குளிர் கண்ணாடி போட்டு தலைமுடியை ஏதோவெல்லாம் செய்து (சில அங்கிள்களுக்கு முடியில்லை என்பது வேறு விடயம்) சும்மா சொல்லக்கூடாது சினிமா நடிகர் போல் தானிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் என்ன இங்கு சுடிதார், சாறி என்று திரிந்தவை அங்கு நல்லா மொடன் ட்ரஸ் போட்டு அம்சமாகதானிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த எந்த தமிழ் பிள்ளையல்ட கேட்டாலும்….. இங்கு ஒன்று கவனிக்கனும் நாம கதைக்கிற தமிழ் விளங்கும் அதுகளுக்கு ஆனா பதில் இங்கிலீஸ் அல்லது தங்கிலீஸ் அதாங்க தமிழ் பிளஸ் இங்கிலீஸ் ல தான் வரும்…  அது ஒரு புறமிருக்க நான் சொல்ல விஷயம் என்னென்றால்…..???

இலங்கையின் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் விளம்பரப் பக்கங்களில் பார்த்தீர்கள் என்றால் மணமகள் தேவை மணமகன் தேவை என்ற பகுதியும் வருகுது. ஆத ஒருக்கா புடிட்டிப்பாத்தீங்க என்டா அப்பயே ஷாக் ஆகிடுவீங்க……

அழகான, சிவந்த, படித்த , மெல்லிய (இதில எனக்கு கொஞ்சம் கடுப்பு தான்)….. குறிப்பிட்ட வயதெல்லைக்குட்பட்ட என்று பட்டியல் நீளுது…. இதுக்கெல்லாம் முன்னுக்கு பாத்தீங்க எண்டா… “வேளாளர்” “உயர் வேளாளர்” “நாடார்” ….. இப்படியென்று சாதிப்பெயர் போட்டிருப்பாருங்க.. நம்ம சனங்க எங்க தான் போனாலும் கொண்டு போற விஷயங்கள்ல சாதியொன்று மற்றது சீதனம். இது அமெரிக்கா,லண்டன், கனடா என்று போனாலும் மாறவேயில்லைங்க.

“ விவசாயம் செய்றவை – வேளாளர், மரம் ஏறுனா – நளவன், மீன் பிடிச்சா – கரையாரவன்….” இப்படி இந்த சாதிப்பெயரெல்லாம் தொழிலடிப்படையில் தான் அந்தக்கால கிழடுகள் உருவாக்கிச்சு… பரவாயில்ல பழசுகள் ஏதோ தெரியாம செய்துட்டுகள் என்று விட்டுட்டு போவம் என்று இல்லாம இப்ப கொம்பியூட்டர் என்ஜீனியர் தொடக்கம் லண்டன் ஹொட்டல்ல வேல செய்றது முதல் இந்த சாதிய ஏதோ யூனிவசிட்டி டிகிரி மாதிரியே கொண்டு திரியுதுகள். தெரியாமத் தான் கேட்கிறன் தொழிலடிப்படை தான் சாதியென்டா வைத்தியர் எப்படி வேளாளன் ஆகலாம்? அல்லது என்ஜினியர் எப்படி கரையாரவன் ஆகலாம்… இதென்னங்க நியாயம்???

 அடுத்த விஷயம் இந்த டவரி…. அதாங்க ஆம்பிள்ள வீட்டாக்கள் பொண்ணு வீட்டில கௌரவமா எடுக்கிற பிச்சை! மாப்பிளையும் என்ஜினியர் பொண்ணும் என்ஜினியர் ஆனா மாப்பிளைக்கு சீதனம் கொடுக்கனும். கேட்டா அவர படிப்பிக்க செலவாச்சாம். அடிங்கொய்யால அப்ப பொண்ணுக்கு மட்டும் என்ன படிப்பு செலவுக்கு டிஸ்கவுண்டா கொடுக்கிறாங்க…. வீட்டில எதிர்காலத்தில செய்ய போற வேலைகளுக்கும்… வாரிச பத்து மாதம் சுமப்பதற்கும் ஆம்பிள்ள தாங்க பொண்ணு வீட்டுக்கு கொடுக்கனும். இத விட கொடுமை என்னன்டா நம்ம அப்பாக்கள் கொடுக்கிற காசிலேயே தாலிய வாங்கி நம்ம கழுத்திலேயே கட்டிட்டு “தாலி பொண்ணுக்கு வேலியாம்” அத எப்ப சொல்லனும் தெரியுமா? நம்ம காசில நம்ம மனைவிக்கு அரைப்பவுண் என்டாலும் நாமாக செய்து போட்டுட்டு அதுக்கப்புறம் சொல்லனும்…

இந்த பிரச்சினையை கேலியாக எழுதியிருந்தாலும் இவ்வாறான பிரச்சினைகள் உயர் மட்டத்திலிருப்பவர்களையோ அல்லது மேல்மட்ட பெண்களையோ பாதிப்பதில்லை. ஆனால் கீழ்மட்டத்தில் உள்ள (இந்த மட்டங்கள் பொருளாதார அடிப்படையிலானவை) பெண்களை நிறையவே பாதிக்கின்றது என்பதுவே உண்மை. ஆரசியலில் சமவுரிமை கேட்கும் நாம் என்று சமையலறையில் இருந்து பெண்ணுக்கு விடுதலை கொடுக்க போறம்???? என்னதான் தமிழன் புலம்பெயர்ந்தாலும் அவனை விட்டு பெயராத குணங்கள் இவை…..

இதென்ன புலம்பெயர்ந்தவர்களை மட்டும் சுட்டுகின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம்.. அதுக்கும் காரணம் இருக்குங்க இந்த அடிபாடுகளுக்கு பின் நம்ம நாட்டு சனங்கள் கொஞ்சம் திருந்திட்டினம் ஆனா இந்த புலம்பெயர்ந்தவை தான் இன்னும் கொஞ்சம் திருந்த வேண்டியிருக்கு... போடுற உடுப்பிலயும் செண்டிலயும் தான் மாறியிருக்கினம் ஆனா இந்த பாரம்பரியங்கள மட்டும் உடும்பா இன்னும் பிடிச்சிருக்கினம்.....

அதிகம் வாசிக்கபட்டவை