Showing posts with label கட்டடப்பொறியியல். Show all posts
Showing posts with label கட்டடப்பொறியியல். Show all posts

Ainthinai Eco Habitat - ஐந்திணை இயற்கை வாழ்விடம்

கட்டட வடிவமைப்புத்துறையில் பலருக்கும் வடிவமைப்புக்களை செய்திருந்தாலும் இன்னும் செய்துகொண்டிருந்தாலும் நமக்கானது நிச்சயம் வித்தியாசமானதாக புத்தாக்கமானதாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக எதிர்காலத்தில் என்னவனுடன் வாழப்போகும் வீடு எம்முடைய குழந்தைகள் தவழப்போகும் வீடு என எனக்குள் நிறை;த கற்பனை இருக்கின்றது. தற்போது எத்தனை வீடுகள் சொந்தமானதாக இருந்தாலும் என்னவனும் நானும் இணைந்து கட்டப்போகும் இல்லம் இருவரும் பார்த்துப்பார்த்து நிர்மாணிக்க வேண்டும் என்பது என்னுடைய பேரவா. அதேபோன்று தொழில்ரீதியாக நாம் தொடங்கவுள்ள நிர்மாணங்களும் அ;வதறு இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காகவே என்ன தொனிப்பொருளினை எடுத்துக்கொள்ளலாம் என சிந்தித்த போது தட்டுப்பட்டதொரு விடயம் "ஐந்திணை" 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளையும் ஒருங்கிணைத்து நான் வடிவமைத்துள்ளது தான்  "Ainthinai Eco Habitat". 

  • குறிஞ்சி குடில் 
  • முல்லை மண்டபம் 
  • மருத நில மாளிகை 
  • நெய்தல் நீல இல்லம் 
  • பாலை பரப்பு 

என பெயரிட்டு அதனதன் இயல்புகளுக்கமைய அந் நிலங்களுக்கேயுரிய நுட்பங்களுடன் வடிவமைத்து வருகின்றேன். இதில் மருதநில மாளிகை வாகரைப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. சுற்றிலும் இயற்கையான சூழல் , மிருகங்களையோ சுற்றுச்சூழலையோ குழப்பாத உருக்குலைக்காத வடிவமைப்பு. இதில் பரிமாறப்படுகின்ற உணவுகளும் அந்நிலத்திற்கே உரியவை. என்னது உணவா? என ஆச்சர்யமாகவிருக்கின்றதா? ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு உணவு உண்டு. இன்று இந்தியன் உணவு இத்தாலியன் ரெஸ்டோரன்ட் என்று நாம் நாடுகள் சார்ந்து உணவுப்பதார்த்தங்கள், பதப்படுத்தல்களை பேசும் போது ஏன் அது நிலம் சார்ந்து அமையக்கூடாது? நிலம் சார் உணவுகள் எம் இலக்கியங்களில் உண்டு.   

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றித்து  வாழ்ந்தவர்கள். அவர்கள் உணவு முறையும் அவர்கள் வாழ்ந்த நில அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இதை “ஐந்திணைப் பகுப்பு” (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) என்று ஐந்திணை இலக்கியத்தில் விளக்குகின்றனர்மேலும், எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் உணவுப் பழக்கங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 குறிஞ்சி நிலம் (மலைப்பகுதி)

வாழ்வு: வேட்டை, காட்டு வாழ்க்கை
உணவு:

  • காட்டு விலங்குகளின் இறைச்சி (மான், காட்டு பன்றி)
  • தேன்
  • கிழங்கு வகைகள்
  • காட்டு பழங்கள்

இயற்கையில் கிடைக்கும் உணவுகளை நேரடியாக பயன்படுத்தினர். அதிகமாக வேட்டையாடி உணவுபெற்றனர்.

முல்லை நிலம் (காடு/மேய்ச்சல் நிலம்)

வாழ்வு: இடம்பெயரும் மாடு மேய்ப்பவர்கள்
உணவு:

  • பால், தயிர், நெய்
  • இறைச்சி
  • கம்பு, சோளம் போன்ற தானியங்கள்

பால்வள உணவு முக்கியம். மெதுவான வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவு

மருதம் நிலம் (வயல்வெளி)

வாழ்வு: விவசாயம்
உணவு:

  • அரிசி (முக்கிய உணவு)
  • காய்கறிகள்
  • பருப்பு வகைகள்
  • மீன் மற்றும் இறைச்சி

நாகரிகமான மற்றும் செழிப்பான உணவுமுறை. பலவகை சமையல் முறைகள் இருந்தன.

நெய்தல் நிலம் (கடற்கரை)

வாழ்வு: மீன்பிடி
உணவு:

  • மீன், நண்டு, இறால்
  • உப்பு
  • உலர்ந்த மீன்
  • கடல் உணவுகள்

கடல்சார் உணவுகள் அதிகம். உப்புச் சேர்க்கை முக்கியம்.

பாலை நிலம் (வறண்ட நிலம்)

வாழ்வு: பயணம், போரியல்
உணவு:

  • உலர்ந்த உணவுகள்
  • வறுத்த தானியங்கள்
  • எடுத்துச் செல்லக்கூடிய உணவு

கடின சூழலுக்கேற்ற எளிய உணவு. நீண்ட பயணங்களுக்கு ஏற்ற உணவு

இவ்வாறு நிலத்தன்மைகேற்ப வாழ்வியல், அந்த வாழ்வியல் சார் உணவு என வாழ்ந்தவர்கள் எம் முன்னோர்கள். மேலும் குறிப்புகளில் உணவில் சேர்க்ப்படுகின்ற காரம் அல்லது உறைப்பு குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. எமது அறுசுவைகளிலும் இது அடங்குவது அனைவரும் அறிந்ததே.சங்ககாலத்தில் மிளகாய் (chili) இல்லை. காரத்திற்கு மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உப்பு, புளி போன்றவை சுவைக்காக பயன்படுத்தப்பட்டன. இது உணவின் இயற்கை சுவையை அதிகமாக வைத்தது என குறிப்புகள் உள. மொத்தத்தில், சங்ககால உணவு என்பது
“இயற்கை + நிலம் + வாழ்க்கைமுறை” என்ற மூன்றின் இணைப்பாக இருந்தது.

இதன் அடிப்படையில் வாகரை உணவகத்தில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. கட்டடங்களும் வடிவமைப்பும் வெறும் கல் , மண்ணாலானவை அல்ல. இவை எம் மண் சார்ந்தவை, எம் கலாசாரம் சார்ந்தவை எம் வாழ்வியல் சார்ந்தவை. என்னுடைய அடுத்த இலக்கு மருதம் நிலம் சார்ந்தது. இதற்காக வயல்பரப்பிற்கிடையிலானதொரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. விரைவில் யாழ் நோக்கி கனவுகளுடன் நகர இருக்கின்றேன்;. இன்னும் கட்டடம் சார் எம் வாழ்வியலை நாம் பேசிக்கொள்வோம்.



 

 

 

கட்டடங்களும் பேசுவதுண்டு - 02

ஒவ்வொரு விடயத்திலும் முதல் என்பதற்கான மதிப்பே தனி தான். முதல் காதல், முதல் முத்தம், முதல் விபத்து, மூத்த பிள்ளை என்று முதல் என்பதே ஒரு இனிமையான விடயம் தான். மனித மனதில் முதல் என்பது விதைத்து விடுகின்ற விம்பம் தான் பின்வரும் அனைத்திலும் தேடவைத் தொடங்குகின்றது.  என்னுடைய பொறியியல் வாழ்க்கையின் முதல் குழந்தை வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ளது. LandMark கம்பனியில் களப்பயிற்சியினை ஆரம்பித்த நான் ஆறு மாதகாலத்தின் பின்னர் அதனை நிறைவுசெய்த பின்னர் அங்கேயே உதவிப்பொறியியலாளராக இணைந்தேன். இதில் அதியம் என்னவென்றால் பல்கலைக்கழகத்தினால் களப்பயிற்சிக்கான தேடலில் சிக்கிய முதலாவது நிறுவனம் இது தான். கடிதத்தினை சமர்ப்பித்து இரு நாட்களில் நேர்காணலுக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நானும் என்னுடைய சக பல்கலைக்கழக நண்பனும் நேர்காணலில் தெரிவுசெய்யப்பட்டோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் வெவ்வேறு கட்டுமானங்களில் எமக்கான பயிற்சி ஆரம்பமாகியது. 

 பயிற்சிக்கான முதல் நாளன்று எமது விடுதியின் தேவாலயத்திற்குச் சென்று வணங்கி, இன்னும் பல சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து சைட்டுக்கு போன நாள் இன்னும் பசுமையாக உள்ளது. இதில் மிகவும் முக்கியமான புள்ளி அன்று தான் அந்த சைட் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டாவது நாள். ஆக கிட்டத்தட்ட இரண்டு நாள் தான் நான் பிந்தியிருந்தேன். இதுவும் நான் அந்தக்கட்டடத்தினை இன்று வரை நேசிக்க முக்கிய காரணம். எதுவும் அப்படித்தானே அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் போது ஆழமான பற்றுதலை உருவாக்கி விடுகின்றது. 

அத்திவாரத்திற்கு தோண்டிய குழியில் சறுக்கி விழுந்து உடம்புமுழுக்க சேறாகிப்போனது, கட்டடம் ஒரு நிலைக்கு வரும் வரை அலுவலகம் இன்றி மரத்திற்கு கீழ் மேசை , கதிரையைப் போட்டு இருப்பது, இரவில் மையிருட்டுக்கு நடுவில் தட்டுத்தடுமாறி இடறி விழுந்து வேலை பார்ப்பது என அத்திவாரம் எழும்பும் வரை எம் நிலையிருந்தது. இதற்கிடையில் நான் இணைந்தது நவம்பர் 01 ஆம் திகதி. எனவே இணைந்து இரு வாரங்களில் என்னுடைய பிறந்தநாள் வந்துவிட்டது. வழமை போன்று அம்மா உடுப்பெடுத்து அனுப்பியிருந்தார். பொதுவாக சைட்டில் வேலை இலகுவிற்காகவும் மரியாதைக்காகவும் ஜீன்ஸ்- டொப் தான் அணிவதுண்டு. ஆனால் அம்மா சல்வார் அனுப்பிவிட்டார். புளுகு குணத்தில் அதை அன்று போட்டுப்போய் விட்டாகிட்டு. போதாக்குறைக்கு சைட்டில் இருக்கும் அலுவலகர்களுக்கு மதிய உணவு வாங்கிக்கொடுக்கும் படி வங்கியில் பணம் வேறு போட்டுவிட்டார். அத்துடன் கேக் மற்றும் பலகாரங்கள் செய்தும் அதை பஸ்ஸில் கொடுத்து விட்டிருந்தார். (அம்மா எப்போதும் அப்படித்தான்) இதற்குப்பிறகு சொல்லவா வேண்டும்… கலக்கலாக சைட்டுக்கு போயாயிட்டு. காலை தேநீர் இடைவெளியின் போது பிரதான பொறியியலாளர் கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகளை எனக்குத் தெரியாமல் செய்திருந்தார். ஆக கலகலப்பாக கேக் வெட்டி அலுவலகர்களுக்கு பகிர்ந்த பின் அம்மா அனுப்பியிருந்த கேக்கினை கூலிவேலை செய்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது புதியதொரு நபர் எமது சைட்டுக்குள் நுழைந்தார். வந்ததும் வராததுமாக ஹலோ இது சைட் இப்படி உடுப்பு போட கூடாது. கையில் கேக் வைத்திருக்கின்றீர் எனக்குத் தாரும் என்று வலுக்கட்டாயமாக கையிலிருந்து தட்டை இழுத்து கட கடவென்று சாப்பிட ஆரம்பித்தார். இதென்னடா புதுசா இருக்கென்று அலறியடித்து அலுவலக அறைக்குள் புகுந்து பிரதான பொறியிலாளரான அண்ணாவிடம் சொன்னேன். அண்ணா வெளியில் வந்து அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். அப்போது தான் அந்தாளும் வெறொரு பல்கலைக்கழகத்திலிருந்து பயிற்சிக்கு வந்தவரென்று அறியக்கிடைத்தது. 

நுழைந்தவுடனேயே அதிரடியான வேலைகளைச் செய்த அந்த நபரை எனக்கு முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது. அன்று ஆரம்பித்த சண்டை இன்று வரை தொடர்கின்றுத. இந்த ஆளுக்கு மணிக்கொரு தரம் டீ குடிக்க கொடுக்க வேண்டும். அதுவும் நான் போட்டுக்கொடுக்க வேண்டும். மதியம் சாப்பிடும் போது சடாரென்று என்னுடைய சாப்பாட்டில் கைவைத்து எடுப்பார். சைட்டில் ஒவ்வொருவருடைய தலைக்கவசத்திலும் பெயரிடப்பட்டிருக்கும். அடுத்தவருடையதை மாற்றிப் போடாமல் இருக்க இந்த ஏற்பாடு. ஆனால் இவர் என்னுடைய தலைக்கவசத்தினைத் தான் எப்போதும் எடுப்பார். கேட்டால் ஓ… பெயரைப்பார்க்காமல் எடுத்துவிட்டேன் என்பார். யாராவது தன்னுடைய நண்பர்கள் வந்தால் இவர் என்னுடைய கேர்ல் பெரண்ட் என்று தான் என்னை அறிமுகம் செய்யும் அந்த கழுதை. எனக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்று தெரிந்தும் வேண்டும் என்று என்னருகில் நின்று தான் ஊதும். யுhராவது எனக்கு கோல் எடுத்தால் யாரது? பெயரைக் காட்டும் என்று என்னை வதைக்கும். எமது நிறுவனத்திற்கு 5 தளங்கள் அப்போது இருந்தன. அவற்றிலுள்ள பொறியியலாளர்களும் மாத கூட்டத்தில் ஒன்றுசேர்வதுண்டு. நான் மட்டும் தான் பெண் பொறியியலாளர். யாராவது வந்து என்னுடன் கதைத்தால் போதும். சடாரென்று நடுவில் புகுவார். அல்லது நாகரீகமற்ற முறையில் அருகில் கதிரையை இழுத்துப்போட்டு அமர்வார். நான் மீதம் வைத்த உணவுகளை எடுத்து சாப்பிடுவார்.   இவரை நான் வெறுத்தளவு வேறு யாரையும் என் வாழ்வில் நான் வெறுத்ததேயில்லை. தினமும் சண்டை தான் கடைசியில் அண்ணா தான் நாட்டாமை வேலை பார்த்து சண்டைகளுக்குத் தீர்ப்பு வழங்குவார். தீர்ப்பு சாதகமானால் சரி நீர் பெரிய சிவாஜி அவ சரோஜா ரெண்டும் பாசமலர்கள் என்று மீண்டும் சண்டை ஆரம்பமாகும். ஆனால் ஒருவகையில் உண்மை இல்லாமலுமில்லை. நிவேதன் அண்ணா எப்போதும் எனக்கு இன்னுமொரு அண்ணா தான். எனது பாதுகாப்பை உறுதிசெய்வது தொடக்கம் தெரியாத விடயங்களை சொல்லித் தருவது வரை மிகவும் அக்கறை எடுத்துக்கொள்வார். பாசக்கார பயபுள்ள. ஓரு மிட்டாய் கூட என்னை விட்டுவிட்டு சாப்பிட மாட்டார். 

இப்படி பலவிதமான பாசம், கோபம், சண்டை, பொறாமை என இருந்தாலும் வேலையில் சேட்டை விடுவதில்லை. இதுவும் பொறியியலாளர்களின் இன்னுமொரு பக்கந்தான். வெள்ளவத்தை தமிழ் சங்கத்திற்கு போகும் போது பாருங்கள் அதன் அருகிலேயே நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது எமது முதல் குழந்தை. இன்றும் வெள்ளவத்தை போனால் அதனருகில் போகாமல் வருவதில்லை. எப்போதும் முதல் என்பது ஸ்பெஷல் தானே.  அடுத்த பதிவில் கட்டடப்பொறியியலாளர்களது வாழ்க்கைத்தெரிவு எவ்வாறிருக்க வேண்டும் என்பது குறித்து அலசுவோம். 

 

 

  கட்டடங்களும் பேசுவதுண்டு - 01

கட்டடங்களும் பேசுவதுண்டு


 

வணக்கம் நண்பர் ஒருவர் ஏன் நீங்கள் பொறியியல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில்லை என கேட்டிருந்தார். எழுதிக்கொண்டிருக்கின்றேன் நண்பரே கட்டட அழகியல் மற்றும் அதில் உள்ள உளரீதியான தாக்கங்கள், இயற்கை சார் பிரச்சினைகள் என்பன குறித்து ஆங்கிலத்தில் எழுதி வருகின்றேன். எனக்கு ஆங்கில … இல்லை. எனவே தான் என்னுடைய ஆங்கில மற்றும் சிங்கள கட்டுரைகளை இதில் பதிவிடுவதில்லை. இனிமேல் இது குறித்து கவனஞ்செலுத்துகின்றேன். அதில் முதல் படியாக நேற்று ஆங்கில கட்டுரையொன்றினை பதிவிட்டுள்ளேன். 

இன்று பொறியியல் என்பது என்னுடைய வாழ்வியலின் பெரும் பகுதியாகிவிட்டது. ஆனால் இத்துறைக்கு நான் வந்தமையே ஒருவித விபத்து தான். நான் உயர்தரத்தில் சட்டதுறையில் செல்வதற்கான பாதையை அல்லது கலை குறித்த பாதையை தெரிவுசெய்ய நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய தாயார் என்னை மருத்துவம் சார் துறையில் ஈடுபட ஆலோசனை கூறினார். ஆனால் எனக்கு இரத்தத்தினை கண்டால் போதும் மயங்கிவிடும் பழக்கம் உண்டு. எமது கல்வி முறைமையில் தரம் ஒன்பதில் படிக்கும் போது தவளையை அறுத்து பார்க்கும் பாடசெய்முறை விஞ்ஞானத்தில் உண்டு. அன்று அந்த தவளையை ரெஜிபோம் துண்டில் மல்லாக்கப்படுத்தி நான்கு கால்களுக்கும் குண்டூசி குத்தி அது துடிக்கும் போது வயிற்றில் பிளேட்டால் அறுத்த நேரம் நான் வகுப்பில் மயங்கி விழுந்ததை இன்றும் என் நண்பர்கள் நினைவுகூர்ந்து என்னை பகிடிசெய்வதுண்டு. இப்படி மனித இரத்தம் என்றாலும் சரி விலங்கு இரத்தம் என்றாலும் சரி பார்த்தால் போதும் எனக்கு தலைசுற்றல் ஆரம்பித்துவிடும். ஏன்னுடைய மாதவிடாய் இரத்தம் மட்டும் பார்த்தால் மயக்கம் வருவதில்லை. இதனை ஹீமோபோபியா (Hemophilia / Haemophobia) என்று அழைக்கின்றார்கள்.  இப்படிப்பட்ட பிரச்சினை உள்ள நான் எவ்வாறு மருத்துவம் படித்து நோயாளர்களை பார்ப்பது. இது எனக்குள் கணிதத்துறையை தெரிவுசெய்ய தூண்டியது. அதனைத்தொடர்ந்து பொறியியல்துறையை தெரிவுசெய்தேன். அதிலும் எனக்கு வரைதல், உருவாக்குதல் திறன்களில் ஈடுபாடு இருந்தமையினால் பொறியியலிலும் கட்டடப்பொறியியலினை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஏன் இதனை தெரிவுசெய்தேன் என விதி என்னை தலையில் குட்டிக்கேட்டது என்னுடைய விரிவுரையாளர் வடிவில். 

முதல் நாள் வகுப்பறையில் நுழைந்தாயிற்கு. வழமை போன்று பெண்கள் தானே முன்வரிசையில் இருப்பது. அவ்வாறே நானும் முதல் வரிசையில் போய் அமர்ந்துவிட்டேன் . ஆனால் நேரமாகியதே தவிர வேறு பெண்பிள்ளைகள் என்னருகில் வந்து அமரவில்லை. பின்னாலுள்ள வரிசைகளில் ஆண் மாணவர்கள் நிமிடத்திற்கு நிமிடம் நிரம்பிக்கொண்டிருந்தார்கள். வயிற்றில் இனந்தெரியாத உணர்வு உருவாக ஆரம்பித்தது. திடீரென நான்கு விரிவுரையாளர்கள் வகுப்பினுள் நுழைந்தார்கள். அதிலும் பெண்களைக் காணவில்லை. அவர்களை அறிமுகப்படுத்திய பின்னர் எம்மை நாம் அறிமுகப்படுத்தினோம். அப்போதும் என்னுள் யாராவது வந்தமர்வார்கள் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இறுதி வரிசையும் முடிந்துவிட்டது இன்னொரு பெண் வரவில்லை. மீண்டும் எமது விரிவுரையாளர் மொஹான் அவர்கள் என்னை நோக்கி முன்னுக்கு வருமாறு கூறினார். மனதுள் யேசு முதல் பிள்ளையார் வரை மன்றாடியபடி தான் என்னுடைய இருக்கைக்கும் முன்மேடைக்கான சில மீற்றர்கள் தூரத்தினை கடந்தேன்.


"வழமையாக பெண்கள் இதற்கு வருவதில்லை. காடு, மலையெல்லாம் போகவேண்டி வரும். உயரங்களுக்கு ஏறவேண்டி வரும். வெய்யிலில் நிற்கவேண்டியிருக்கும். இரவிலும் சைட்டில் நிற்கவேண்டி வரும். உங்களுக்கு இது பொருந்துமா? இது பெண்களுக்குறிய பகுதியில்லை. ஏன் வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். தட்டுத்தடுமாறி இறந்தகாலம் நிகழ்காலம் எல்லாம் கலந்து பிழையான சொற்றொடரில் “எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சமாளிப்பேன்| என்று கூறியவுடன் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது.  அந்த நேரம் பார்த்து வயதான பெண்ணொருவர் உள்நுழைந்தார். தன்னை விரிவுரையாளர் என அறிமுகம் செய்தார். அந்த நிமிடம் அவர் தான் என்னுடைய ஏஞ்சல். வுpரைவாக நடந்து என்னுடைய இருக்கைக்குத் திரும்பிவிட்டேன். ஏப்படா முடியும் என்றிருந்து விடுதி திரும்பியது அம்மாவிற்கு அழைப்பெடுத்து அழ ஆரம்பித்தேன். 


“எப்பவும் வரம்புகளை உடைக்க வேண்டும் என்பீர்களே மகள் இப்ப என்ன பயம்? இரவில் பெண்ணும் வேலைக்கு போகலாம், காடு மலைக்கும் போகலாம். மனதில் கம்பீரமும் துணிவும் இருந்தால் போதும் ராஜாத்தி (அம்மா என்னை பெரும்பாலும் இவ்வாறு தான் அழைப்பார்). பகலில் போனால் மட்டும் பெண்ணுக்கு பாதுகாப்பிருக்கின்றதா?. வீட்டிலும் சிலநேரம் பாதுகாப்பு இருப்பதில்லை. உங்களால் முடியும். போய் குளித்து சாப்பிட்டுவிட்டு படிக்க தொடங்குங்கள்” என்று அம்மா சொன்ன வரிகள் இன்றும் நினைவிலிருக்கின்றது. 


இப்படித்தான் ஆரம்பித்தது என்னுடைய பயணம். ஆனால் அந்த முதல் அனுபவத்திற்கு பின்னர் எனக்கும் மொஹான் சேருக்குமிடையில் ஒருவித இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எப்போதும் என்னில் பிழை பிடிப்பார். சிறுசிறு தவறுகளுக்கும் எல்லோர் முன்னிலையிலும் திட்டுவார். ஏதாவது சந்தேகம் கேட்கப் போனாலும் ஏதாவது நக்கலாக கதைப்பார். விடுதி வந்தால் அம்மாவிடம் சொல்லி அழுவேன். அம்மா எப்போதும் யாரையும் இலகுவில் பிழையாக பேசமாட்டார். நீங்கள் நன்றாக அவதானிக்கவில்லை, இன்னும் படித்திருக்கலாம் என்று என்னை நோக்கியே தன் விரல்களை நீட்டுவார். 


எனக்கு தமிழிலக்கியத்தில் ஈடுபாடுண்டு. அதில் வரும் துரோணர் தான் இங்கு என் கதையில் மொஹான் சேர் என்று எனக்குப்புரிய ஆரம்பித்தது. அவர் தான் என்னுடைய குரு. அவர் வாயால் ஏதாவதொரு நாள் வாழ்த்து வாங்கவேண்டும் என்பதற்காகவே தேடித்தேடி படிப்பேன். சுக மாணவன்கள் எம்மிடையான முறுகல்களைப் பார்த்து “ஆ உன்னோட டார்லிங் வருதுடி…” என்றும் பழிப்பதுண்டு. நான் ஏகைலைவனின் பெண் வேர்ஷன். கட்டை விரலை கேட்டாலும் கொடுக்கத் தயாராகவிருந்தேன். எங்கள் முரண்கள் இறுதியாண்டில் தந்தை- மகள் உறவாக பரிணமித்திருந்தது. அவருடைய மகன் எங்களுக்கு சுப்பர் சீனியர். அவரை எனக்கு அறிமுகம் செய்து உதவிகளை பெற்றுத்தந்தார். மேலும் பொறியியல் சார் வாய்ப்புக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் தான். நிறைய பொறியியல் கழகங்களில் உறுப்புரிமை பெறச்செய்தது முதல் என்னுடைய துறைசார் கண்டுபிடிப்பினை வெளிநாட்டிற்கு சென்று அங்கு அறிமுகஞ்செய்ய வைத்தவரும் அவர் தான். ஒருமுறை வீதியில் கண்டு தன்னுடைய மனைவி மகளுக்கும் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் அழைத்ததற்கிணங்க அவருடைய மகளின் திருமணத்திறகு அண்ணாவுடன் சென்றிருந்தேன்;. அவர் என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ததெல்லாம்  பெருமையான தருணங்கள். இன்றும் என்னுடைய முகநூலில் இருக்கின்றார். என்னுடைய வடிவமைப்புக்கள்,  உருவாக்கல் திறனை வைத்து என்னை பிரம்மா என்று தான் அழைப்பார். சில நேரங்களில் "லேடி பிரம்மா". அவரைப் பின்பற்றி  கட்டடப்பொறியியல் நண்பர்களும் அவ்வாறே பெரும்பாலும் அழைப்பதுண்டு. என்னுடைய பின்னல் கூந்தல் ஹெல்மட் போடுவதற்காக உச்சிக்கொண்டையாக மாறியதும் “பிரம்மா” அடைமொழிக்கு பொருந்திப் போய்விட்டது. 

எனக்கு இன்னுமொரு உளவியல் பிரச்சினை இருந்தது. அதாவது உயரங்களைப் பார்த்தால் பதற்றமாகிவிடுவதுண்டு. இதற்கு Acrophobia" (அக்ரோபோபியா) என்று பெயர். என்னுடைய பல்கலைப்படிப்பு முடிந்த பின்னர் களப்பயிற்சியின் போதும் உதவிபொறியியலாளராக பணியாற்றும் போதும் இது பெரியதொரு சவாலாக இருந்தது. யாராவது என்னுடைய கையைப்பிடித்திருக்க வேண்டும். அப்போது தான் என் பதற்றம் போகும். யாருடைய கையைப்பிடிப்பது, சைட்டில் பலர் வேலைபார்ப்பதுண்டு. பொறியியலார்கள் முதல் கூலியாட்கள் வரை இருப்பர். நான் சகபொறியியலாளரின் கையைப்பிடித்துக்கொண்டு மேலேறினால் அவர்களது பார்வை எவ்வாறிருக்கும்? ஆனாலும் நாம் ஏதாவதொன்றினை தகர்த்து வெளிவர முயலும் போது பிரபஞ்சம் யாரையாவது அனுப்பி வைக்கும். எனக்கும் அவ்வாறு ஒருவரை அனுப்பி வைத்தது. என்னுடைய நல்ல நண்பர் அவர். மோதலில் ஆரம்பித்த உறவு. பின்னர் அது நல்லதொரு உறவாகிப்போனது. மேலேறும் போது இசையைக் கேட்டுக்கொண்டு ஏறுங்கள். மேலேறிய பின்னர் விளிம்பில் நின்று கீழே பார்க்காதீர்கள் என என்னை தொலைபேசியில் வழிநடத்துவார். இன்றும் என் நண்பனை நினைவுகூறுகின்றேன். 


சரி சைட்டுக்கு வந்த பின்னாவது பெண் துணை கிடைக்கும் என்ற பார்த்தால் நான் மட்டும் தான் பெண். பொதுவாக கட்டடப்பொறியியலினை பெண்கள் தெரிவது ஒப்பீட்டளவில் குறைவு. ஆப்படியே தெரிந்தாலும் அரசாங்க திணைக்களங்களில் உள்ளக வேலைகளில் அமர்ந்துவிடுவர். சைட் வாழ்க்கை என்பது ஒரு வகையில் மிலிட்டரி வாழ்க்கை. 7 -11 வேலை. பேரும்பாலான என் நாட்கள் காலை 4.30 ஆரம்பித்துவிடும். சைட்டில் பொறியியலாளர்களுக்கான அலுவலக அறையில் ஒரே பெண் என்பதால் சுத்தப்படுத்தல், பணிப்பெண் இல்லாதவிடத்து டீ, கோப்பி போடுதல் எல்லாம் என் தலையில் தான். பொங்கல் வந்தால் சைட் வாசலில் கோலமிடுவதும் நான் தான். ஆடிக்கூழ் காய்ச்சுவது, சோளன், கடலை, கச்சான் அவிப்பது எல்லாம் என் பொறுப்புத்தான். படிக்கும் போது போன Surveying Camp, மாதவிடாய் நாட்களை கடப்பது, சைட்டில் நடக்கும் அலப்பறைகள், ஹெல்மட் சண்டைகள், பாதுகாப்பு பிரச்சினைகள், உடைக்கலாசாரம், ஒரு பெண் பொறியியலாளரான என்னுடைய குணவியல்புகள், இணையர் தேர்வு, குழந்தை தொழிலாளிகள் பிரச்சினை, போதைப்பொருள் பாவனைகள் என எழுத பல விடயங்கள் உள்ளன. 
 

மூன்று வருடங்கள் உதவிப்பொறியியலாளராக பணியாற்றிய பின்னர் கட்டுமான நிறுவனமொன்றினை ஆரம்பித்து நடாத்தி வருகின்றோம். இதனை ஆரம்பித்த போதும் பின்னர் பிளவுபட்ட போதுமான விடயங்கள் நிறையவுண்டு. எனக்கு சவாலாகவிருந்த உளரீதியான இரு பிரச்சினைகளை வெற்றிகொள்ள இந்த துறைதான் எனக்கு உதவியிருக்கின்றது. இந்த துறை வெறும் கல், மண், கம்பி மட்டும் சம்மந்தப்பட்டதல்ல. மனித மனத்துடன் நெருக்கமானது என தான் நான் இதனை பார்க்கின்றேன். இலங்கையில் கட்டடநிர்மாண நிறுவனம் ஆரம்பித்த பெண் என்ற பெருமையும் விருதும் இரு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. தற்போது நான்கு மாவட்டங்களில் கிளைகள் உண்டு. தொடர்ந்தும் வியாபிக்கும் எண்ணமுண்டு. கடல் கடந்து சேவை வழங்கும் வாய்ப்பும் நெருங்கிவருகின்றது.  தற்போது கடலான இத்துறையில் தேடித்தேடி படித்துக்கொண்டே இருக்கின்றேன். போதுமா என்னுடைய அறிமுகம்.? 


இனிமேல் இத்துறை குறித்த அனுபவங்களையும் சம்பவங்களையும் சந்திக்கும் மனிதர்களையும் பற்றி எழுதுகின்றேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அனுப்பினால் என்னுடைய ஆக்கங்களின் இணைப்புக்களை அனுப்பி வைக்கின்றேன். தூண்டி எனை துலங்க வைத்தமைக்கு நன்றி 






பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை