Thursday, June 27, 2013

மௌன அஞ்சலி


செய்த பின் தான்
ஞானம் உதித்தது - கூடவே
மனதும் வலித்தது…
எனக்குத் தெரியும்
உன்னைப் இனிப்பெறுவதென்பது
முயற்கொம்பென்று…
திட்டமிட்டு செய்யவில்லை
திடீரென்று தான் நிகழ்ந்தது…

மலரைப் பறித்தாலும்
மனம் பதைபதைப்பவள்… - இன்று
உன்னை…..
மன்னித்துவிடு!
என் ஒரு நொடித் தவறு…
நொடித்து விட்டது
உன் வாழ்வை…

என் சமாதானங்கள்….
சமாளிப்புக்கள்…
வாதங்கள்…. – உன்னை
மீட்டுத் தந்திடுமா….?

என் கண நேர அவசரம்….
எத்தனை கனவுகளோ உனக்குள்….?
காதலியிருக்கிறாளா…?
கறுப்பான உனக்குள்ளும்
என்னனென்ன கவலைகளோ…?



உன் இறுதி நிமிடங்களில்
என்ன நினைத்தாய்...?
சாபமிட்டாயா?
இல்லை சாதித்த
திருப்தியுடன் போய் சேர்ந்தாயா...?


என் தவறா…?
படைப்பின் புதிரா…?
பேனை புள்ளியென்று…
தொட்டுவிட்டேன் - சிறு
பூச்சி நீ…. செத்துவிட்டாய்…
கொலை செய்திட்ட
உறுத்தலுடன் மூடுகிறேன்
நாட்குறிப்புடன் கூடவே
என் விழிகளை….- உன்
அகால மரண
மௌன அஞ்சலிக்காக….





(அண்மையில் புத்தகத்தில் இருந்த புள்ளியென்று நினைத்து பூச்சியை நசுக்கிவிட்டேன். அன்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது அதன் விளைவே இது..)









Tuesday, June 25, 2013

மனப்பொருத்தம்....



என்னவர்களே…
எப்படியோ எடுத்துவிட்டீர்கள்….
எனக்கான மாப்பிள்ளை..
என் வைரக் கூண்டை
தெரிந்துவிட்டீர்கள்……

செல்வாக்குக்கேற்ப செருக்கானவன்
பதவியுடன் பவிசானவன்
பார்த்தவுடன் பத்திக்கொள்ளும்
ஆணழகன்…
சாதி சமயத்திலும்
சரிநிகரானவன்…
பல்லிடங்கள் விசாரித்தளவில்
பண்பானவன் - ஜாதகத்தில்
பத்துக்கு ஒன்பது பொருத்தம் வேறு…

அன்று - என்
பிடிவாதங்கள்
பட்டினிகள்
பிராத்தனைகள்…. - மீறி
பந்தல் வரை வந்துவிட்டீர்கள்
பல மைல் தூரத்திற்கு
அனுப்பியும் விட்டீர்கள்….

பத்தில் குறைந்த
அந்த ஒன்று….
மனப்பொருத்தம்
என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிகாலையில்
அம்மாவின் நெற்றி முத்தத்தில்
பூக்குவியலாய்
கண்மலரும் நான்… - இன்று
தினமும் கசங்கிய மலராய்
திடுக்கிட்டுத் தான் முழிக்கின்றேன்…

அப்பா ஊட்டும்
கவளச் சோற்றுக்கு
ஆவென வாய் திறக்கும்
செல்லப்பெண்…… - இன்று
கண்ணீருடன்….
யாருமற்ற அரண்மணையில்
தனியாக பிசைந்து
கொண்டிருக்கின்றேன் கண்ணீருடன்
காலையுணவை….

வைத்தியரிடும் ஊசிக்கு
ஊரைக் கூட்டிய நான்….
உப்பில்லையென்று எந்;நேரம்
உணவுத்தட்டு என்னைத் தாக்குமோ.. –என்று
உணர்வற்று நிற்கின்றேன்…

தெரியாமல் என்னை உரசியதற்கே
அண்ணா பலரை
வதம் செய்திருக்கின்றான்….. - இன்று
வாங்கிய கன்னத்து
அறைகள் வலித்தாலும்
வரைகின்றேன் மடல்
நலம் என்று…..

தம்பி எத்தனை
தடவை என்னைச் சீண்டுவான்
ஒரு நாளில்……
இப்போதெல்லாம் என்
பொழுதுகளை
தனிமைகளும்
மௌனங்களுமே
அலங்கரிக்கின்றன…

என்னை
மீண்டும் நம்
வீட்டிற்கு கூட்டிப் போக மாட்டீர்களா?
இந்த வைரக்கூண்டு
எனக்குப் பிடிக்கவில்லை…















பிளேட்டோவின் மூவகை அரசாங்கம்

அண்மையில் அரசறிவியல் துறை பேராசிரியர் அம்பலவாணர் சிவராசாவின் “ஒப்பீட்டு அரசியல்" (Comparative Politics) எனும் நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆதில் குறிப்பிட்டிருந்த பிளேட்டோவின் கருத்தொன்று என் சிந்தையினை தூண்டியிருந்தது. பிளேட்டோவின் “குடியரசு”(Republic) “அரசியல் சான்றோன்” (The Statesmen) போன்ற நூல்களில் இருந்தான ஒரு விடயத்தினை ஆசிரியர் மேற்கோள் காட்டியிருந்தார்.

அரசாங்கத்துறைகளை பிளேட்டோ வகைப்படுத்தியிருந்ததான அக் கருத்துக்களை ஆராயும் போது என் நாடு “இலங்கை எவ்வகையில் சேர்த்தியாகின்றது?” என்ற மாபெரும் வினா தோன்றியுள்ளது. என் சிந்தை தூண்டிய அக்கருத்துக்கள் பற்றியும் அதற்கு முன் சிறிதாக பிளேட்டோ பற்றி அறிமுகத்தினையும் பதிகின்றேன்.

பிளேட்டோ

ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார்.

பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன.

கி.மு. 387 ஆம் ஆண்டில் "கலைக்கழகம்" (Academy) என்று அழைக்கப்படுகின்ற புகழ் பெற்ற பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளி 900 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்தது. பிளேட்டோ தமது வாழ்நாளில் கடைசி 40 ஆண்டுகளை ஏதென்சில் கழித்தார். அப்போது அவர் கல்வி கற்பித்தார். தத்துவம் பற்றி நூல்கள் எழுதினார். இவருடைய மாணவர்களில் மிக்க புகழ் பெற்றவர் அரிஸ்டாட்டில் ஆவார். பிளேட்டோ 60 வயதை எய்திருந்த போது அரிஸ்டாட்டில் தமது 17 ஆம் வயதில் பிளேட்டோவிடம் கல்வி பயில்வதற்காக வந்தார். பிளேட்டோ கி.மு. 347 ஆம் ஆண்டில் தமது 80 ஆம் வயதில் காலமானார்.பிளேட்டோ 36 நூல்கள் எழுதினார். அவை பெரும்பாலும் அரசியல், அறவியல் பற்றியவை.

பிளேட்டோ வகைப்படுத்தியுள்ள அரசாங்கத்துறைகள்
  1.  பூரண அறிவு மிகுந்த அரசு
  2.  பூரண அறிவற்ற அரசு
  3. அறிவற்ற அரசு
பூரண அறிவு மிகுந்த அரசு (The State of Perfect Knowledge)

இவ்வாறான அரசின் இறைமையை இவ்வரசு பாதுகாத்துக்கொள்ளும். முpகச் சிறந்த இலட்சிய நோக்கம் கொண்ட அரசாக செயற்படும். இதனால் இவ்வாறான அரசுடன் ஒப்பிட்டுத் தான் ஏனைய அரச முறைமைகளை மதிப்பீடு செய்ய முடியும்

பூரண அறிவற்ற அரசு  (State where there is Unprotected Knowledge)

இவ்வாறான அரசுகளால் மனிதன் தன் பூரண சுதந்திரத்தினை இழந்தவனாயிருப்பான். இவ்வரசின் சட்டங்கள் மிக அழுத்தம் கொடுப்பனவாகவிருக்கும். இருந்த போதிலும் இவ்வரசின் சட்டமுறைகளுக்கு மனிதன் அடிபணிந்து நடப்பான்.

அறிவற்ற அரசு (State of Ignorance)
இவ்வகையரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட மக்கள் மறுப்பர்.

.......மேற்கூறிய பாகுபடுத்தல் தான் பாரியதொரு வினாவை சிந்தையில்  புகுத்திப் போயுள்ளது. பதில் தேடவேண்டியது மிக முக்கியம்....

பிற்குறிப்பு - வினாக்கள் தோன்றும் போது தான் விடைகள் பல கிடைக்கும் தீர்வுகள் பிறக்கும்

Thursday, June 20, 2013

மௌனம் ஓர் மந்திரம்

“பேசாமல்” இருப்பது என்பது உண்மைக்குமே ஒரு பெரிய கலைங்க… நம்ம வடிவேல் சொல்வத போல “சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்” தெரியுமா…? அதுவும் சில நேரம் கதைக்க வேண்டிய இடங்களில் கதைக்காமல் கண்ணாடிக்கு முன் புலம்புவமே… (இது எனக்கு நானே சொல்லிக்கொள்றனுங்க) அந்நேரம் ஏற்படுமே கடுப்பு… ஆனாலும் பாருங்க பல பிரச்சினைகளுக்கு இந்த பேச்சு தாங்க காரணம். கடுப்பில் சில நேரம் பேசிடுவோம். ஆனால் அதன் பின் ஆறுதலாக சிந்திக்கும் போது மௌனமாக இருந்து பல புதினங்களை பார்த்திருக்கலாம் என்று கூட தோன்றும். என்றாலும் பல வாய்ப்புக்களை அந்நேரம் இழந்திருப்போம்.

அண்மைய சில பிரச்சினைகளுக்கு பின் என்னுடைய தாயாரும் உற்ற நண்பியுமான அம்மாவிடம் அவற்றை பகிர்ந்து கொண்ட போது அறிவுரைகளுடன் கூடவே ஓர் மந்திரமும் சொன்னார். “மௌனமாக இரு” என்பது தான் அந்த மந்திரம்…. இன்று யோசிக்கும் போது மௌனம் ஓர் மந்திரம் தான் என்பது புரிகிறது…. கூடவே மௌனத்தினை பற்றி பா.விஜயின் என்னைத் தொட்ட வரிகள் சில……..

மௌனமாக இருங்கள்
புலன்களை பேசவிடுங்கள்
மலர்கள் எல்லாம்
மௌனமாகத் தானே
மந்திரம் சொல்கின்றன…
அதனால் தான்
அதில் வாசம் வசிக்கின்றது….
.....................................

மௌனம் தான் எவ்வளவு
அழகான மொழி!
மௌனத்தை
மொழியாக கொண்டுள்ள
அனைத்துமே
பாக்கியசாலிகள்
பராக்கிரமசாலிகள்….
......................................

ஆமைக்கு ஓடு
அலங்காரமுமல்ல
சுமையுமில்ல..
மனிதனுக்கு மௌனமும்
அப்படித் தான்…..

பிற்குறிப்பு - இனி மேலாவது மண்டைக்குள் “மௌனம்” மந்திரத்தினை ஏற்றிக்கொள்ள வேண்டும்


இல்லாதிருக்கிறாய்….(இல்லை + இருக்கிறாய்)







நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுவைக்கின்றேன்

பக்கத்தில் இருக்கும் போது
ஸ்பரிசிக்கின்றேன்
தொலைதூரமாகும் போது
உன் நினைவுகளை
சுவாசிக்கின்றேன்

நேரில் நீ தருகின்ற
பூக்களை இரசிக்கின்றேன்
இல்லாத போது
உன் புகைப்பட
சிரிப்புக்களுள் சங்கமமாகின்றேன்

இருக்கும் போது
கார் சத்தம் கேட்டு
விடுதி கதவருகில்…..
இல்லாத போது
வரும் நாளுக்காய்
கலண்டரருகில்……..

அருகிலிருக்கும் போது
காதோரம் கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்…
இல்லாத போது
காது வரை மூடிய
கம்பளிக்குள் கற்பனைகளின் தொல்லை….

நீ உள்ள போது
உன் துணி துவைக்கின்றேன்
இல்லாத போது
உடைகளில் - உன்
வாசம் பிடிக்கின்றேன்

இரவில்…
உனக்குள் தொலைகின்றேன் - நீ
இல்லா ராத்திரிகளில்
தலையணைகளை
இறுக்கிக் கொள்கின்றேன்

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……










Wednesday, June 19, 2013

மடிப்பிச்சை கேட்டு நிற்கின்றேன்…..




அன்பே
பிரியங்களை புரிய வைக்க
பொருட்களை – அதன்
தரங்களை
பெறுமதியை….. தேடாதே!
உன் அருகிலான நொடிகளின்றி
வேறு விலைமதிப்பற்ற பொருள்
எனக்கேது….?

உன் காதலை காட்ட
கார்ப் பயணங்கள் வேண்டாமே…..
சாரதியாக நீயும்
சற்றுத் தள்ளி நானும்…
சிறு இடைவெளிகள் கூட
அண்டத்தின் இரு
அந்தங்களாக….
பேரூந்து போதுமே
உன் தோளில்
செல்லமாக சாய்ந்து …
நான் கண்ணயர்வதற்கு..
உன் வாசத்தினை
உள்ளிழுத்துக் கொள்வதற்கு…

நம் சந்திப்புக்களுக்கு கூட
நட்சத்திர சத்திரங்களுக்கு
கூட்டிப் போகிறாய்….
நுனி நாக்கு ஆங்கிலமும்
பெயரறியா உணவுகளும்….
அதிரும் இசையும்…- நம்
உணர்வுகளுக்கு
கடிவாளமிடுவதை
கண்டுகொள்ள நீ மறுப்பதேன்?
சாலையோரத்தில்
மழைச்சாரலில்
ஒற்றைக் குடையில்
முட்டிக் கொள்ளும்
ஸ்பரிசத்தின் இன்பம் - ஏசி
அறையிலில்லை அன்பே…..

உன்
மேல்த்தட்டு நண்பர்களிடம்
என் திறமைகளைச் சொல்லி
மார்தட்டிக்கொள்கிறாய்…..
என்றாவது என்னை – நீ
வாய்விட்டு
வாழ்த்தியிருக்கின்றாயா?
ஆயிரம் பேர்
அவையில் புகழ்வதை விட
உன் ஒற்றைச் சொல்லில்
இருக்கிறது எனக்கான விருது…

உன்னவர்கள்
என்னழகை விமர்சிப்பதை
இரசிக்கின்றாய்…
காலையிலிருந்து
கண்ணாடி முன்னான
என் தவம்-  உன்
வர்ணனைகளுக்காக
மட்டுமே….
என் விழி பார்த்து – "நீ
அழகியடி" என்று
சொல்லப்போகும் கணத்திற்காகவே
காத்திருக்கின்றன – என்
கண்களின் மைதீட்டல்கள்…

இன்னொருவன்
காதலியான பின்பும்
காதல் கடிதங்களுடன் - பலர்
என்னருகில்…
நீ மட்டும் உன்
நிமிடமொன்றைக் கூட
தரமறுக்கின்றாய்…
வெட்டி வேளைகளிலான
பல மணி பேச்சுகளை விடவும்
வேலைப்பளுவின் போது – என்
சிறு நினைப்பாவது
உனக்கு வராதா….?
கேட்டால் கடமை என்கிறாய்
காதலிலும் கடமையிருக்கின்றதல்லவா?
கண் கெட்ட பின்
நமஸ்காரமும் - காலத்தில்
தோன்றா காதல் நினைவுகளும்
பயனற்றதன்பே…

என்னிடம் நீ
ஒரு வேளை
என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால்…
உன் அருகாமை கேட்டிருப்பேன்
உன்னுடனான தனிமை கேட்டிருப்பேன்
உன் ஒற்றை முத்தம் கேட்டிருப்பேன்
உன் விரல்களின் ஸ்பரிசம் கேட்டிருப்பேன்
என் இரவுகளில் உன் கனவுகள் கேட்டிருப்பேன்…
கேட்கும் அந்த நொடி கூட
என் கவியின் கருவாயிருக்கும்….

ஆனால் நீ தான்
கேட்கவேயில்லையே….
இதைக் கேட்கக் கூட
உனக்குத் தான் நேரமில்லையே…
இறுதியாய்
உன் ஒரு நொடியையாவது
எனக்காக – நம்
காதலிற்காக
மடிப்பிச்சை கேட்டு
நிற்கின்றேன்…..



















Tuesday, June 18, 2013

படைப்பின் விந்தை

பிடி மணல் கூட
தனக்கின்றி ஒரு சமூகம் - பல
மனைகளை கட்டி
வாடகையில் வாழ்கிறது
தனவந்த குடும்பங்கள்

பாடப்புத்தகம் வாங்க முடியாமல்
பாதியில் நிற்கிறது பையனின் படிப்பு
பாதித்தூரம் படித்த பின்
படிப்பையே மாற்றிக்கொள்கிறான்
பணக்காரன்

கந்தல் துணியின்
கிழிசலை மறைக்க
அவசரமாக நடக்கிறாள் குடிசைப் பெண்…
இடை முதல் தொடை வரை
அரை குறை உடையில்
பூனை நடை பயில்கிறாள்
ஒருத்தி மேடையில்….

பட்டினியால் சாகின்றது
தெருவோர குழந்தை
தீண்டுவாரற்று கிடக்கிறது
பணக்காரன் வீட்டு மேசை
பதார்த்தங்கள்

பணத்தால் பாதை மாறுகின்றனர்
சிலர் - பணமின்றி
பாடை கூட தூக்குவாறின்றி
பல பிணங்கள்

அறமற்ற காதல்
அரங்கமேறுகிறது
உயிர்வரை வலிக்கின்ற காதல்
உலை வைக்கப்படுகிறது

சீதனமில்லாமல் சிதைகிறது
சில பெண்களின் காதல்
கொட்டிக்கொடுத்த வீட்டில்
காதலின்றி அழுகின்றாள்
ஒரே பெண்….

குடிசையில் பிள்ளைகளின்
ஓலம் தாங்காமல் ஒளிகின்றனர் அம்மா – அப்பா
டாடி மம்மி கிளப்பிலிருந்து
வரமாட்டார்களா என்று ஏங்குகிறது
ஆயா மடியில் மாடிக்குழந்தை…

தின்ற உணவுகள் செமிக்க
கூடவே கொழுத்த நாய்களுடன்
நடைப்பயிற்சியில் சிலர்…
சத்துக்குறைபாடினால்
சத்திரசிகிச்சைக்கு
அனுமதிக்கப்படுகின்றனர் சிலர்…

அடுப்பு மூட்ட வழியில்லை
அடுத்த பிள்ளை நமக்கெதுக்கு…
கருக்கலைப்பிற்கு காத்திருக்கின்றாள் ஒருத்தி…
பரம்பரை பெயர் சொல்ல
பிள்ளை ஒன்றின்றி
வாடகைத்தாய்க்கு வாரிக் கொடுக்கின்றாள்
ஒருத்தி….

அடுத்தவன் பொருள்
கவர்பவன் வாழ்ந்து
கொண்டிருக்கின்றான் - இழந்தவன்
இருந்ததும் கொடுத்து
இருட்டுக்குள் தள்ளப்படுகின்றான்…

இருப்பவனுக்கு இரசிக்க நேரமில்லை
இரசிப்பவனுக்கு இல்லாதிருக்கின்றது இருப்பு...
இருப்பின்மையால் இன்பமின்றி ஒரு சமூகம்
இருந்தும் இயலாமையில் ஒரு சமூகம்
படைப்பின் விந்தையை தான் என்னவென்பது….






Thursday, June 13, 2013

உன் மடி மீது நான் உறங்க......

நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல்.
நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல்.

கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன்.
கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன்.

காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால்
எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன்.

சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன்.

சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக..

உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.
 ....................................................................................................................
 நிதமும் சேகரிக்கிறேன்
என் இரவுகளை
என்றேனும் ஓர் நாள்
உன் மடி மீது நான் உறங்க......

இமைகளிலே வலி
கண்ட போதும்
உறங்கவில்லை எனது நினைவுகள்...

என் நினைவுகள் அனைத்தும்
உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்....

என் விழிகளோ
இமை மூட மறுக்கின்றது... - அந்த
இமை மூடும் நொடி பொழுதிலாவது
உன் முகம் காண்பேனா என்று....

விடியும் இரவு போல..
விழி மூடா கனவு வேண்டும் - அக்
கனவிலும் உன் முகம் வேண்டும்.....
 எனக்காக (என் வேண்டுகோளிற்காக) என் நண்பன் எழுதிய கவிகள் இரசித்ததில் பிடித்தது....... நன்றி வாசு

Wednesday, June 12, 2013

பூவெல்லாம் உன் வாசம்.....

ஒவ்வொரு மனிதர்களுக்கும் தமக்கான நண்பர்களையும், துணையினையும் தேடிக்கொள்கின்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் துணையினை தேடிக்கொள்ளும் போது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவதானமாகவும், பொருத்தமானவராகவும் தெரிய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. ஏனெனில் வாழ்க்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர். எமக்கு துணையாக வருபவர் நமது முன்னேற்றங்களுக்கு படிகள் அமைத்துத் தருபவராக இருப்பதோடு நம்மைக் கண்கலங்காமல் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல நம்மவர்களின் “குடும்பம்” கூட நல்லதாக அமையும் போது தான் நம்மவர்களின் குணம், பண்பும் நல்லதாக இருக்கும். தமது குடும்பத்தில் பற்று, பாசம், பயம் உள்ள ஒருவன் அல்லது ஒருத்தி நிச்சயம் அமைக்கும் குடும்பத்தினையும் சிறப்பாக அமைப்பார்கள்.

அண்மையில் என் ஆருயிர் நண்பன் (சிடு மூஞ்சி – நான் வைத்துள்ள பெயர்) என்னிடம் ஒரு திரைப்படத்தினை பார்க்கும் படி கூறியிருந்தார். சினிமாவில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லாவிடினும் அன்பு நண்பனின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து அத்திரைப்படத்தினை பார்த்தேன்

திரைப்படம் - “பூவெல்லாம் உன் வாசம்”
2011 இல் ஆஸ்கார் பிலிம் தயாரிப்பில் எழில் கதையமைத்திருந்ததார். அஜித்குமார், ஜோதிகா, சிவக்குமார், நாகேஷ், கோவை சரளா, விவேக் . வையாபுரி நடிப்பில் வெளிவந்திருந்தது. வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

மூன்று தலைமுறையாக நட்புறவுடன் இருக்கும் இரு குடும்பங்கள் பற்றிய அருமையான குடும்பப்படம். மூன்றாவது தலைமுறையான ஜோவும் அஜித்தும் சிறுவயது முதல் நண்பர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய போதும் சொல்லிக்கொள்வதற்கு தயங்குவதும் (இப்போ தான் புரிகிறது ஏன் பார்க்க சொன்னார் என்று) இடையில் புகும் வில்லன் கபட நாடகம் ஆடுவதும் (நிஜத்திலும் வில்லன்கள் உண்டு) பின் உண்மை அறிந்து ஈகோவை விட்டு இருவரும் சேர்வதும் தான் கதை. சில விடயங்கள் இதில் மனதை தொட்டிருந்தது
  • கண்களால் இருவரும் பேசிக்கொள்வது
  • ஒருவருக்கொருவர் செல்லச் சண்டைகள் பிடிப்பதும் அடுத்த நிமிடம் மறந்து விடுவதும்
  •  தன் நண்பனின் முன்னேற்றத்திற்கு ஜோ கஷ்டப்படுவதும். முதலில் மறுத்தாலும் பின் ஜோவிற்காக அந்த கட்டடத்தினை வடிவமைப்பதும்
  • ஒருவருக்கொருவர் அடுத்தவர்களிடம் விட்டுக்கொடுக்காமை
  • ஒருவருக்கொருவர் விரும்புகின்றார்கள் என்று தெரிந்தும் அவர்களிடையான ஊடல்கள் 
  • வில்லன் கூட ஓரிடத்தில் “இவனை கட் பண்ணினால் தான் இவளை நான் அடையலாம்” என எண்ணுவது கூட இருவருக்குமான அன்னியோன்யத்தினை காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் அருமையான நட்பு ஆழமான காதலுக்கு வித்திடுவதை அழகாக கூறுகிறது பூவெல்லாம் உன் வாசம்….

அதிலும் கீழ்வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பெண் தன் பிறந்த வீடே புகுந்த வீடாகும் போது உண்டாகும் மகிழ்வுடன் பாடுவதாக அமைந்திருந்தது இப்பாடல். உண்மை தாங்க பெண்களைப் பொறுத்தளவில் புகுந்த வீட்டுப்பயம் என்பது மறுக்க முடியாததொன்று. அந்த பயம் இல்லாமல் கல்யாண சந்தோஷத்துடன் பாடுவதாக அமையும் இப்பாடலில் என்னைத் தொட்ட சில வரிகள்….

திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்து பூச்செடியே…
தினமொரு கனியை தருவாயா வீட்டிற்குள் நான் வைத்த மாதுளையே…
மலர்வாய் மலர்வாய் கொடியே கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கதிரும் அருகே நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறுயில்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமில்லை…

தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் பெண்கள் போது
கண்ளோடு குற்றாலம் காண்பதுண்டு……

அந்த நிலை இங்கேயில்லை… அனுப்பி வைக்க வழியேயில்லை
அழுவதற்கு வாய்ப்பேயில்லை அது தான் தொல்லை…

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா இது போல் சொந்தம் பார்த்ததுண்டா?

பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…

தெய்வங்களும்; எங்களை நேசிக்குமே….
தேவதைகள் வாழ்த்துமடல் வாசிக்குமே….


இதன் ஒலிவடிவம் - http://isaithooval.com/flies/2001/Poovellam%20Un%20Vaasam/Thirumana%20Malargal.mp3

பிற்குறிப்பு – கையில் நெய்யை வைத்துக்கொண்டு வெண்நெய்க்கு அலைவானேன்…. ஆருயிர் நண்பன், அவனது அருமையான குடும்பம் நமக்காக காத்திருக்கும் போது மூன்று முடிச்சு போடுவதற்கு தலைகுனிய ஏன் தயங்க வேண்டும்….

"பாவாடை அவிளும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்…
" (Super)


அசைய மறுக்கிறது என் மனம்…….





அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன்
வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த
ஐந்து ரூபா மிட்டாயின்
சுவை மிகுந்திருந்தது என்னளவில்

ஆயிரம் அன்புமொழிகளை
முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன்
கோபத்தில் கூறிய “என்னடா”வின்
அர்த்தம் அன்பின் எல்லை…

கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில்
நடக்கும் போது உரசுகின்ற – அவன்
மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம்
அழகிய கவிதை…
முன் நடந்தாலும்
பின் தொடர்கின்ற – அவன்
பார்வை அலாதியானது

என்னவனுக்கு
பதவியில்லை பண்பிருக்கின்றது
பையில் பணமில்லை
மனதில் பாசமிருக்கின்றது..
தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில்
பட்டும் படாமலும் தொடர்கின்ற
கரிசனைகள் சொல்லும்
ஆயிரம் தத்துவங்கள்
இடையில் நிற்பவைகளை விடவும்
இடையறாது தொடர்வது சுகமல்லவா?


அப்பாவின்
அரண்மனையை விடவும் - அவன்
அருகாமை வேலியாகின்றது
அவன் அன்பிற்காக மட்டுமே
அருகில் மண்டியிட்டு
அசைய மறுக்கிறது
என் மனம்…….

Friday, June 7, 2013

பொருத்தம்....


வாழ்க்கை என்பது ஒன்றுக்கொன்று அல்லது ஒருவருக்கொருவர் பொருந்திப்போவதில் தான் இருக்குது…  கொஞ்ச ஜோடிகளைப் பார்த்துவிட்டு விடயத்திற்கு வருவோமா….?

 முதல்ல நம்ம சூர்யா – ஜோ ஜோடி. என்னா பொருத்தம்.. இருவரும் கண்களையும் பார்த்தே கண்படப்போகுது…. தான் விரும்பிய பொண்ணை ஒத்தக்காலில் நின்றே கைபிடித்தவர்…. ஹட் முதல் வெயிட் வரை அப்படியொரு அம்சம்…. கெமிஸ்ட்ரி இருவருக்குள்ளும். (சூர்யாவின் விசிறி என்பதில் அவர் ஜோவை கைப்பிடித்தில் கொஞ்சம் கடுப்பாகிய கதையும் இருக்கிறது. ம்ம்ம்ம்… அவர் தான் என்னை மிஸ் பண்ணிட்டார்… என்டு சமாதானமாகிட்டன்).


அடுத்து 50 கேஜி தாஜ்மஹால்…. நம்ம ஐஸ் பற்றி சொன்னன்… ஆண்கள் மட்டுமல்ல பெண்களின் தூக்கத்தையும் கெடுத்தவர். வேறென்ன இவர பார்த்தில இருந்து நம்மளயும் ஸ்லிம் ஆக சொல்லி சிலதுகள் பண்ணிய அழிச்சாட்டியத்தில் பல பெண்களின் பகல் தூக்கம் (உடம்பு போட்டுடுமாம்) போனது பழைய கதை. இன்று பிரபலமானதொரு குடும்பத்தின் மருமகள். ஜோடிய பாருங்களேன் என்னதொரு களை….

நெக்ஸ்ட் தலயும் - ஷாலினியும். பேபி ஷாலினியாக வந்து இன்று ஒரு கியூட் பேபிக்கு மம்மி ஆகிட்டாங்க… விட்டுக்கொடுத்து போவதிலும் உடுக்கும் உடையில் கூட நிறம் பார்த்து போடுவதிலும் என்னா ஒற்றுமை. குடும்பத்திற்கே திருஷ்டி சுத்தி போடனும்.. அதிலும் தலயோட பொண்ணுக்கு தனிய சுத்தி போடனும். ஸ்வீட் கண்ணா…



இலங்கையின் மருமகன் அடுத்து. நம்ம தளபதிய சொன்னன். மனைவியுடன் போஸ் குடுப்பது குறைவென்றாலும் எந்தவித இடையூறுகளும் இல்லாம போகுது வாழ்க்கை. படம் காட்டுவதா முக்கியம். இவங்க போல புரிந்துணர்வுடன் வாழ்வது தான் முக்கியம். தளபதி படத்தில மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் தளபதி தான்…

 அடுத்து வருவது… நம்ம உத்தமபுத்திரன். சூப்பர் ஸ்டாரின் சூப்பர் மருமகன்… ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கும் பின் ஒரு பெண் இருப்பா என்று சொல்லுவாங்க. (குடிக்கும் பின்னால தான். உண்மையை ஒத்துக்கொண்டு தான் ஆகனும்) தனுஷின் வெற்றிக்குப் பின் அவரது மனைவி இருக்கின்றார். அலட்டல் இல்லாத அமைதியான வாழ்க்கை.

ஓகே அடுத்தவங்க வீட்ட எட்டிப்பாத்திட்டம் நம்ம வாழ்க்கைக்கு வருவமா…?

வாழ்க்கையில் பெற்றோர் இறைவன் தந்த வரம். ஆனால் நமது வாழ்க்கைக்கான துணையினை தெரிகின்ற உரிமை, பொறுப்பு நமது கையில் தான் இருக்கிறது. இந்த துணைக்கான தகுதி எமக்குப் பொருத்தமானதாக தெரியும் போது நம் மணவாழ்க்கை சிறப்பது மட்டுமன்றி நம் குழந்தைகளுடைய வாழ்க்கையும் நன்றாக அமையும் என்பதை மறக்காதீர்கள். 


நமக்குப் பொருத்தமாக இருக்கும் ஒருவன் அல்லது ஒருத்தியை காணும் போது சாதி,மதம் எல்லாம் பார்த்து கோட்டை விட்டுடாமல் நேர்மையான வழியில் அவர்களை கரம்பிடியுங்கள். ஆனால் அங்கே மனப்பொருத்தம் தான் மணப்பொருத்தம் என்பதை மறவாதீர்கள்.


ஆண் பெண்ணின் கழுத்தில் போடுகின்ற மூன்று முடிச்சுகளுக்கும் அர்த்தங்கள் மூன்று

•    முதல் முடிச்சு உரிமைக்கு
•    இரண்டாவது உறவிற்கு
•    மூன்றாவது ஊருக்காக


இவை வெறும் முடிச்சுகளாக மட்டுமல்லாமல் வாழ்விற்கான அத்தியாயங்களையும் எழுதட்டும்.

பிற்குறிப்பு - ஹன்சிக்காவிற்கு எப்பங்க கல்யாணம்… அந்த குளுகுளு ஜோடிய பார்க்கனும்னு ரொம்ப ஆசையாயிருக்கே..



Tuesday, June 4, 2013

தாய்மை

அண்மையிலான ஒரு அனுபவப்பகிர்வைப் பற்றியும் அந்த அனுபவம் எவ்வாறானதொரு தாக்கத்தினை என்னுள் ஏற்படுத்தியிருந்தது என்பதையும் பற்றி இந்தப் பதிவில் கூறவிருக்கின்றேன்.

என்னுடைய அம்மாவினுடைய தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவிற்கு அலுவலக நண்பிகள் என்று பலருள்ள போதும் அம்மாவின் நெருங்கிய வட்டத்தில் மூவர் இருக்கிறார்கள். (நளீன்ஸ் ட ஹாங்) நால்வரும் தான் எப்போதும் ஒன்றாக திரிவார்கள்;. வீட்டு விசேஷங்களிலும் கூட நான்கு குடும்பமும் இணைந்திருக்கும். இந்த நிமிடத்தில் இவர்கள் பற்றி ஒன்று கட்டாயம் சொல்லியே தீரவேண்டும். நால்வரும் ட்ரான்ஸர் கூட ஒரே அலுவலகத்திற்கு தான் எடுப்பார்கள். (இவர்கள் தொல்லைகளை எமது வீடுகள் மட்டுமின்றி மட்டுநகரே அறியும்) சம்பள நாட்களில் சின்ன பிள்ளைகள் (????) எங்களையெல்லாம் டியூஷனுக்கு அனுப்பிவிட்டு கடையில் ஜஸ்கிறீம் குடிப்பார்கள் (அப்பாவிடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்).

அம்மாவினுடைய இந்த நண்பி வட்டத்தில் தோழி ஒருவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். எனது பல்கலைக்கழகம் , வேலை நிமிர்த்தம் நான் மட்டக்களப்பிற்கு செல்வதெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் தான். அம்மா என்னிடம் தனது நண்பியின் நோய் பற்றிக் கூறி அழுதிருந்த போதும் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு மார்பகத்தினை அகற்றிய பின் தான் கிடைத்திருந்தது. சும்மாவே வைத்தியசாலை , ஊசியென்றாலே இனம் புரியாத நடுக்கம் இந்தக் கோழை மீராவிற்கு. டொக்டர்கள் அனைவருமே யமன் தான் என் கண்களுக்கு. அதையும் தாண்டி அண்ணாவின் கையைப்பிடித்துக்கொண்டு சென்றிருந்தேன்.

என்னைக்கண்டவுடன் பாய்ந்து கட்டிப்பிடித்து அழத்தொடங்கிவிட்டார். ஏன் அன்டா அழறீங்க? எல்லாம் முடிந்து ஒன்று பிரச்சினையில்லை என்று சொல்லிட்டாங்க தானே என்று கேட்டேன்…. இல்லடா …… சாமத்தியப்பட்டுட்டா நான் பக்கத்தில இல்ல பிள்ள என்ன செய்தோ தெரியாது… என்று விம்மி வெடித்தழுதார். (இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தான் இவரது பொண்னு பருவமெய்திருந்திருந்தாள்) இப்போது இவர் ஆண்டவன் கிருபையால் குணமாகிவிட்டார்.

அன்று வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் ஏன் அம்மா இதற்கு அவ அழனும் மற்றவங்க பார்த்துக்கொள்வாங்க தானே என்று கேட்டேன். “ஒரு தாய் மூன்று சந்தர்ப்பத்தில் தன் பெண் அருகில் இருக்க விரும்புவாராம்” என்று அம்மா சொன்னார்…. அந்த மூன்றும் (கொஞ்சம் வெட்கமாயிருக்கு…..)


1.    பருவமெய்தும் போது – (தாயாகும் தகுதி பெறுகிறாள்)
2.    புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது – (தாரமாகிறாள்)
3.    தன் மகள் பிரசவ வலியில் துடிக்கும் போது – (தாயாகின்றாள்)


இப்போதும் குட்டி மீரா அன்று பருவமெய்து திருதிரு என்று முழித்துக்கொண்டு நின்றதும் அம்மாவும், அம்மம்மாவும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழுததும் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றது. (அதன் பின் வேப்பணெய், பச்சை முட்டை குடிக்கச் சொல்லி அதற்கு நான் அழிச்சாட்டியம் பண்ணியது வேறு கத). அண்ணாமார், தம்பி பார்வையில் கூட ஒரு வித்தியாசத்தினை உணர்ந்த அந்த நாள் மறக்குமா? (அண்ணாக்கள் தங்கச்சியை கடலைகளிடம் சொறி விடலைகளிடமிருந்து காப்பாற்ற அலட் ஆகிய நாள்), பிறந்ததிலிருந்து சேர்ந்து விளையாடிய என் நண்பனிடம் திடீர் விலகலும் ஒருவிதமான உரிமைக் கோபமும் ஒட்டிக்கொண்ட அந்த தினம்….(நடக்கட்டும் நடக்கட்டும்…. )

உண்மைதாங்க ஒரு பெண் உடல் , உளரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகின்ற மறக்கமுடியாத ரொம்ப….. சென்டிமெனட் நிறைந்த நாட்கள் இவை…. நிச்சயம் ஒரு பெண் தன் தாய் அருகில் இருக்க வேண்டுமென நினைக்கின்ற தினங்கள். அன்று தான் ஒவ்வொரு பெண்ணுள்ளும் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், ஒருவித பயம் குடியேறியிருக்கும். பொண்னைக் கொடுக்கப்போகின்றோம் என்ற கவலையும் கூடவே அவள் வாழ்க்கைக்கான ஆரம்பம் என்கின்ற ஆனந்தமும் இணைந்ததான கலவையுணர்வுகள் நிறைந்த தருணங்கள் இவை…. தாய்மை என்பது உண்மைக்கும் சுவீட் தானுங்க…. எங்கள் அதிகாரமும் அது தான் அந்தஸ்தும் அதுதான் பெண்ணுக்கான அடிப்படையும் அது தாங்க.

பிற்குறிப்பு – கிடைக்கும் கணவரிடமும் என் அன்னையின் சாயல் இருக்க வேண்டுமென இப்போதெல்லாம் கடவுளிடம் அப்ளிகேஷன் போட தொடங்கிவிட்டேன். (அப்ப தான் ஊசி போடக்குள்ள கட்டிப்பிடிச்சி அழலாம்)



Monday, June 3, 2013

தோல்வி.....

குரு ஒருவர் தன் சிஷ்யன் ஒருவனுக்கு வில்வித்தை கற்பித்து வந்தார். ஒரு மாலை வேளை அந்த சிஷ்யனுடன் திறந்த வெளியொன்றிற்கு வந்த குரு அவன் முன்னால் பொருள் ஒன்றை நிறுத்தினார். பின் தன் சிஷ்யனைப் பார்த்து “உனக்கு விரும்பியளவு எத்தனை அம்புகள் உபயோகித்தாயினும் குறிபார்த்து அம்பெய்” என்று கூறினார். சிஷ்யனும் விளையாட்டாக அம்பெய்ய ஆரம்பித்தான். அவன் எய்த அம்புகளுள் பெரும்பாலானவை குறியை அடைந்ததுடன் சில அக்குறிக்கருகில் குத்திட்டு நின்றன.

சிறிது நேரத்தின் பின் அவனை அழைத்த குரு “ உனக்கு பத்து பொற்காசுகள் தருகின்றேன். விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும்” என்று கூறினார். சிஷ்யனும் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் கூடவே பத்து பொற்காசுகளை பரிசாக பெறவேண்டும் என்ற அவாவுடன் அம்பெய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்த அம்புகள் குறி தவிர்ந்த அதனைச் சுற்றியிருந்த இடத்திலேயே குத்திட்டு நின்றன. பரிதாபத்துடன் குருவை திரும்பிப் பார்த்தான். (கண்ணில் பத்து பொற்காசுகளை மிஸ் பண்ணிட்டம் என்ற ஆற்றாமையும் அந்த பார்வையிலிருந்தது.)

அவனை அருகில் அழைத்த குரு மீண்டும் அவனிடம் “ விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும். உன் திறமைக்கு பரிசாக என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவேன்” என்று கூறினார். உடனேயே கண்ணை மூடி கற்பனையில் ஆழ்ந்தான் சிஷ்யன். “ சிவந்த நிறம், கூர் நாசி , மெல்லிடை, கருங்கூந்தல்…….. யப்பா….. என்னா அழகு…. நமக்கா அந்த அழகுப்பெட்டகம் கிடைக்கப்போகிறது.?....... குருவின் கனைப்பு கற்பனைக்கு கடிவாளமிட அம்புகளை எடுத்து வில்லேற்ற ஆரம்பித்தான்.

ஒன்று…

இரண்டு…

மூன்று…

ஐம்பது…

நூறு….

சை… ஒன்று கூட குறியைத் தாக்கியிருக்கவில்லை. (வட போச்சே…)

இப்படித்தாங்க நம் இலட்சியங்களும். நாம் நிபந்தனையற்ற இலட்சியங்களை கொண்டிருக்கும் போது அவை நேர் பாதையில் இடையூறின்றி பயணிக்கின்றன. ஆனால் என்று மனதில் அவற்றை முன்னிருத்தி வேறு விடங்களை பெற்றுக்கொள்ள நினைக்கின்றோமோ அப்போது நம் இலட்சியங்கள்  சிதற ஆரம்பிக்கின்றன. நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கி கவனத்தினை கலைக்காது செல்லும் போது நம் பயணங்கள் வெற்றி பெறுகின்றன. பாதையிலுள்ள கானல்நீரைக் கண்டு அவற்றினை நெருங்குவதற்காக பாதை மாறும் போது நாம் செல்ல வேண்டிய தூரங்கள் அதிகரிக்கின்றன. கானல்நீரினாலும் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

ஆகவே இலட்சியங்களை மனமாற காதலியுங்கள். பாதைகளில் ஆயிரம் முட்கள் இருக்கலாம். பலவித மிருகங்கள் பயமுறுத்தலாம். பல பள்ளத்தாக்குகள், புதைகுழிகள் இருக்கலாம். ஆனால் சிந்தையில் தெளிவு, மனதில் கடவுள், செயலில் நேர்மை , வார்த்தையில் உண்மை இருக்கும் போது எதுவும் நம்மை , நமது இலட்சியங்களைத் தடுத்திட முடியாது.

நமது இலட்சிய முடிவில் கூட முள் கொண்ட ரோஜா தான் தரப்படும் அதாவது தோல்வியை அருகில் நிறுத்திய வெற்றி தான் கிடைக்கும். முள் குத்தாமல் கவனமாக ரோஜாவினை இரசிக்க வேண்டுமே அன்றி ரோஜாவை எறியவும் முடியாது. முள்ளைப் களைந்திட்டால் ரோஜாவை வைத்திருக்கும் சுவாரஸ்யமும் போய்விடும்.

“தோல்வியைப் பற்றிய பயமே
தோல்வியைக் கொண்டு வருகிறது.
வெற்றியைப்  பற்றிய மிகைப்பட்ட
ஆசை தான் உன் சக்தியை உறிஞ்சுகிறது”



பிற்குறிப்பு
- சிஷ்யன் கடுப்பாகி அம்பெய்தலில் தோற்கடித்து மகளை மிஸ் பண்ண வைச்சிட்டாயே மாமா சொறி குரு என்று கத்தியதும் அது கத்திச் சண்டையாக மாறியதையும் பற்றி நமக்கு இங்கே தேவையில்லை என்பதால் இதை பற்றி நான் விரிவாக சொல்லவில்லை.

“வன்முறையில்லாத உலகம்”


மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த தினத்தினை நினைவுகூறும் வகையில் “வன்முறையில்லாத உலகம்” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டிற்கு பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டவர் மகாத்மா காந்தியின் பேரனான அருண்காந்தி.

இவர் இளைஞனாக இருந்த பொழுது தனது பாட்டனாரின் ஆச்சிரமத்திற்கு மேற்கொண்ட விஜயம் தன் வாழ்க்கையை மாற்றியமைத்ததாகவும் அதுவே இந்தத் தொகுப்பு நூலை வெளியிடுவதற்கு தூண்டியிருந்தது என்றும் கட்டுரையாளர்களிடம் கூறியிருந்தார். அத்துடன் எளிமையான உதாரணங்கள் ஊடாக தன்னுடன் சில அடிப்படைக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் இவர் குறிப்பிடுகின்றார். சமூகத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைக்கான காரணங்கள் சிக்கலானவை அல்ல என்றும் ஆயினும் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் பரியவை என்றும் மகாத்மா அருண்காந்தியிடம் தெரிவித்திருந்தார். அவர் சுட்டிக்காட்டுகின்ற “எட்டுத் தவறுகள்” வருமாறு

1.    வேலை செய்யாமல் கிடைக்கும் செல்வம்
2.    மனச்சாட்சி இல்லாமல் அனுபவிக்கும் இன்பம்
3.    ஒழுக்கமற்ற அறிவு
4.    நேர்மையற்ற வியாபாரம்
5.    மனிதநேயமற்ற விஞ்ஞானம்
6.    தியாகமற்ற வணக்கம்
7.    கொள்கையில்லாத அரசியல்
8.    பொறுப்புகளற்ற உரிமைகள்



அருண்காந்தி இவ் விடயங்களின் விரிவாக்கத்தின் தொகுப்பாக “வன்முறையில்லா உலகம்” என்ற ஞாபகார்த்த தொகுப்பினை நெறிப்படுத்த கருதுகோளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஜோன் றிச்சட்ஸன் இனால் எழுதப்பட்ட “போரின் படிப்பினைகள்” என்ற நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதைப்படித்ததில் பிடித்தது……

அதிகம் வாசிக்கபட்டவை