Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

சுருளிடு தாடி.....

அண்மையில் ஒரு ஆடைவடிவமைப்பு நிறுவனத்திற்கு சில ஆடைகளில் வடிவமைப்புக்களை வரைந்துகொடுத்திருந்தேன். இந்நிறுவனத்தின் தலைமை என் தமையனார் என்பதாலும் அவருக்கு தங்கையின் இரசனை மேல் இருந்த நம்பிக்கையிலும் வடிவமைப்புகளுக்கான மொடல்களையும் தெரியும் குழுவில் என்னையும் உள்வாங்கியிருந்தார். என்னுடைய பரிந்துரைகள் அல்லது தெரிவில் பெரும்பாலும் தாடி வைத்த ஆண்களை தேர்ந்தெடுத்திருந்தேன். என் கற்பனையிலும்  ஆண்களுக்கான உடை வடிவமைப்பில் கற்பனை பண்ணும் போது ஆண் என்பவன் தாடியுடன் தான் உலா வந்திருந்தான். அண்ணா உட்பட குழுவில் இருந்தவர்கள் இது குறித்து கேட்ட போது ஆண்கள் எப்போதும் தாடியுடன் இருக்கும் போது மிக அழகாகின்றார்கள். மீசையுடன் இருக்கும் போது பேரழகாகின்றார்கள் என்று குறிப்பிட்டேன்.  சரி தாடி பற்றி நம்முடையவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போமா?    

 தாடிக்கு அணல் என்ற பெயரும் உண்டு, தாழ்ந்திருப்பதால் தாடி எனப்பட்டது, எனவே தாடி என்பது தூய தமிழ்ச்சொல்தான்!

  • ' சுருளிடு தாடி... ' - (சிலப்பதிகாரம் ) .
  • ' மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி... ' - (கலித்தொகை ).

கலித்தொகையில் வரும் "மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி" என்ற தொடர், யானையின் வளைந்த தந்தங்கள் தாடி போலத் தொங்குவதை விவரிக்கிறது. இத்தொடரின் மூலம் சங்க காலத்திலேயே 'தாடி' என்ற சொல், தாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது. 

  • கம்பராமாயணத்தில் 'தாழ்சடை' - என்று தாடியைக் குறிப்பிடுகிறார் கம்பர். தாழ்தல் - என்றால் தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழ் கழுத்து மயிர் = தாடி. தாழ்ந்து, தொங்கும் மயிர் = தாடி.
  • தாடி என்பது அன்றைக்கு ஆண்மையின் அடையாளமாக விளங்கியதை புறநானூறு குறிப்பிடுகிறது. 
  • சங்க இலக்கியங்கள் தாடியை 'அணல்' என்றும் குறிப்பிடுகிறது. அணல் - என்ற சொல் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், கோழி, சேவல், மந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது. 
     
    தாழ் என்பது எப்படி மருவி தாடி ஆகியுள்ளது என்பதற்கும் எமது இலக்கணங்களுள் விளக்கமுண்டு
    தாழ் > தாழி > தாடி.

    தாழ் > தாழை > தாடை.

    தாழ் + வாய் = தாழ்வாய் > தாவாய். ( தாவாங்கட்டை).

    (ஒப்பு நோக்குக : தாவாய், மோவாய்) .

    ( ழகரம் > டகரம் ஆவது இயல்பான திரிபே!
     
    இதே போன்றே  மீசை - மேலிட மயிர். மீ - என்றால் மேலிடம் /மேல்புறம்
தாடி - என்ற தமிழ்ச்சொல்லே திரிந்து வடமொழியில் 'தாடிகா' - ஆகிவிட்டது.
சேவலின் கழுத்தில் அமைந்த தொங்கு சதைக்கும் தாடி என்று பெயர். ஆடு, மாடுகளின் கழுத்தின் கீழே தொங்கும் சதைக்கு 'அலைதாடி' - என்று பெயர். (ஆங்கிலத்தில் dewlap).
 
நம்முடைய தமிழ் ஆண்கள் மூன்று தருணங்களில் தான் அழகாகின்றார்கள். ஒன்று வேட்டியுடுத்தி கம்பீரமாக வலம் வரும் போது, இரண்டாவது மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் போது மூன்றாவது ஒரு பெண்ணை மட்டும் முழுதாக நேசிக்கும் போது.... என்ன நான் சொல்வது சரிதானே... விரைவில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் புகைப்படங்களை எதிர்பார்த்திருங்கள். 
 
பிற்குறிப்பு: நம்முடைய ஆள் சூர்யாவை கறுப்பு சேட் வேட்டியுடன் தேடித்தேடியே என்னுடைய டைப்பண்ணின விரல்கள் சற்று தேய்ந்து போய்விட்டன. 

 

இறுகப்பற்றிக்கொள்!


நான் உன்னை மறுத்த 
நிமிடத்தின் 
நினைவில் அழும் போது 
அழுகையை நிறுத்த என்ன செய்வாய் அன்பே? 
என்று கேட்டேன்

முதலில் புன்னகைத்தான்
பின் அலட்சியமாக - தன்
தலைமுடியை கோதிக்கொண்டான்.
தலையை சற்றே சாய்த்து
திரும்பிக் கேட்டான்
காற்றில்லா இடத்தில் எப்படி சுவாசிப்பாய் நீ?

தடுமாறி நான் 
வார்த்தைகளை கோர்க்கும் முன்பே
அவனே பதிலளித்தான்
காற்றில்லாவிடத்தின் சுவாசம் நின்று விடும்
நீ இல்லாவிடத்தில் நான் 
அசையாமல் நின்று விடுவேன்.... -என் 
கைகளை இறுகப்பற்றிக்கொள்.....என்னருகில்  

மௌனமாக அமர்ந்துவிடு...- அல்லது 
நான் நினைவுகளின் அரூபமாகவேனும் இருந்துவிடு 
என்றான்....
 

அவன் மட்டுமா தொலைந்து போனான்.... - அவன் 
கைளை இறுகப்பற்றிக்கொண்டே நானும்...
வா அன்பே நாம் தொலைந்து போய்விடலாம் -  நீ

என்னை - இறுகப்பற்றிக்கொள் 

 

சிங்கம்!

கடந்த சில நாட்களாக எனது சட்டத்தரணி நண்பனும் நானும் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகளை வலுப்படுத்தல் நிகழ்வில் வளவாளராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பல மாவட்டங்களிலும் இந்நிகழ்வுகள் இடம்பெறுவதாலும் நாமிருவரும் துணை வளவாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. நாமிருவரும் சேர்ந்து வளவாளர்களாக பல வருடங்களாவே செயற்படுகின்றோம். எப்படியும் ஆறேழு வருடங்களுக்கு மேற்பட்ட நட்பு. பல்கலைக்கழகக்காலத்தில் இருவரும் பால்- பாலின விடயங்கள் குறித்த ஐ.நாவின் தன்னார்வதொண்டர்களாக தான் பயணிக்க ஆரம்பித்திருந்தோம். நீண்டகால பயணம் என்பதாலோ என்னவோ இருவரும் இணைந்து பயிற்சிகளை அல்லது கொள்ளளவு விருத்தி நிகழ்வுகளை முன்னெடுத்தால் நிகழ்வு முடிவில் நிறைவுத்தன்மை எமக்கும் பங்குபற்றுநர்களுக்கும் ஏற்படுவதுண்டு. நிகழ்வுகளின் போது சிறு சறுக்கல் வந்தாலும் இருவரும் ஆளாளுக்கு முட்டுக்கொடுத்துக்கொள்வோம். எமது நண்பர்கள் கூட இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி என்று பகிடி பண்ணுவதுண்டு. நமக்குள்ளான இரசாயம் இதில் மட்டுமல்ல ஏதாவது சட்டம் சார் விடயங்கள், புலமைபரிசில் நிகழ்வுகள் வந்தால் நானும் ஊடகத்துறை அல்லது பொறியியல்சார் விடயங்கள் தொடர்பில் அவரும் பரிமாறிக்கொள்வோம்.  
 
நிகழ்வுகளின் போது இந்தாள் கடும் கொதியன். தான் பேசும் போது யாராவது பேசினாலோ அல்லது பராக்கு பார்த்தாலோ பயங்கர கோபம் வந்துவிடும். நான் இதற்கு நேர் எதிர்மாறு. இந்த குணவியல்பும் நம்மிருவருக்குள்ளும் இரசாயனம் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அடுத்தவர்களிடம் தான் இந்த பாய்ச்சலும் கொதித்தனமும் என்னிடம் இதுவரை ஒரு தடவை தான் கோபப்பட்டுள்ளார். இதுவும் நண்பர்கள் எம்மை இணைத்து பேச இன்னுமொரு காரணம். நாமிருவரும் சில வெளிநாட்டுப்பயணங்களையும் ஒன்றாக மேற்கொண்டுள்ளோம். பொது நிகழ்வுகளில் நான் ஒருவருக்காக காத்திருந்து உணவு உட்கொண்டதென்றால் அது இருவருக்காகத்தான். அதில் ஒருவர் இவர். அவரும் அப்படியே நானிருக்கும் நிகழ்வுகளில் என்னைவிட்டுவிட்டு சாப்பிடவே மாட்டார். அது ஒழுங்குபடுத்துனர்களே கூப்பிட்டாலும் அவர்களிடம் முகத்திலடித்த மாதிரி சொல்லிவிட்டு காத்திருப்பார். அநேகமாக எனக்கும் பரிமாறி எடுத்து தன்னருகில் வைத்திருப்பார். அந்தளவு எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது கூட அவருக்கு தெரியும். சில நேரங்களில் சாப்பிடும் போது நான் இது நல்லாயிருக்கின்றது என்று சொன்னால் தன்னுடையதை எனக்கும் வைத்துவிடுவதுண்டு. அதேபோன்று ஏதாவது பிடித்திருந்தால் சடாரென்று என்னுடைய தட்டில் கைவைப்பதுண்டு. சில நேரங்களில் இது எனக்கு அந்தரமானதாகவும் இருப்பதுண்டு. அடுத்தது பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நான் பதற்றமாவதுமுண்டு. இவை ஒரு பக்கமிருக்க!

கடந்த சில வாரங்களாக ஒன்றாக பயணிக்கின்றோம் என்று சொன்னேனில்லையா? நான் சில நாட்களாக நல்ல மனநிலையில் இல்லை. இதை என்னுடைய முகத்தையோ என்னத்தையோ வைத்து இந்தாள் கண்டு பிடிச்சுட்டுது. நூறு தரம் குறுஞ்செய்தி, அழைப்பு என்றும் கேட்டுப்பார்த்தார். எனக்கு அந்தவிடயத்தினை பகிர மனமில்லை. நான் வெள்ளைச்சட்டையுடன் வீதியில் போகின்றேன். சேறு சட்டையில் பட்டுவிட்டது. இதனை நீரில் கழுவிப்பார்த்தாகிட்டு, சவக்காரம் போட்டும் பார்த்தாகிட்டு கறை போகவில்லை. இனி சலவைக்குத்தான் போடவேண்டும். இந்த மனநிலையில் நானிருக்கும் போது ஏன் சேறுபட்ட இடத்தை மறைக்கின்றாய் என்று இவர் கேட்டால் நான் என்ன பதிலளிப்பது? இப்படிப்பட்ட மனநிலையை நாமிருவரும் கடந்துகொண்டிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன்னரான பயிற்சியின் போது எனக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. ஏன் இன்று சரியில்லை என்று பயிற்சி நாளன்று காலையில் கேட்ட போது நானும் சொல்லிவிட்டேன். எனவே தான் அன்றைய பயிற்சியை முழுமையாக பொறுப்பேற்பதாகவும் அமாந்திருந்து பார்க்கும் படியும் ஏதாவதென்றால் தான் கேட்பதாகவும் வற்புறுத்தி கூறிவிட்டார். எனக்கும் சொல்லிக்கொள்ளா விட்டாலும் இந்தாளுக்கு கொஞ்சம் பயம். இதனாலேயேயும், அந்த கண்டிப்பில் இருந்த அன்பிலும் அருகில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

அழகான அர்த்தமானதொரு கதை! 

அவர்: ஒருவன் காட்டில் இருக்க வேண்டுமென்றால் என்ன தேவை?

பங்குபற்றுநர்கள்: அறிவு இருக்க வேண்டும், உடல் வலிமையாக இருக்க வேண்டும், விரைவாக ஓட வேண்டும், எதிரிகளை தாக்கும் திறன் வேண்டும், தந்திரமாக இருக்க வேண்டும்.

அவர்: நமக்குத் தெரிந்து காட்டுக்கு யார் ராஜா? 

பங்குபற்றுநர்கள்: சிங்கம்

அவர்: சிங்கத்திற்கு இருக்கும் அறிவை விட, பலத்தை விட யானைக்கு அறிவும் பலமும் உண்டு. சிறுத்தை சிங்கத்தை விட விரைவாக ஓடும். ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை விட உயரம், மான் சிங்கத்தை விட அழகானது. இப்படி எல்லாமே சிங்கத்தை விட ஏனைய விலங்குகளுக்கு அதிகமுண்டு. பின்னர் எப்படி சிங்கம் அரசனாகவிருக்கின்றது? 

பங்குபற்றுநர்கள்: ………..

அவர்: கர்ச்சிப்பதால் தான் சிங்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்கின்றது. கர்ஜனை என்பது குரல் உயர்வு, உரத்துக்கத்துதல், கத்துவதன் மூலம் அடுத்தவரை அடக்கியாள்கின்றது. 

நான்: ஆக இவ்வளவு நாளும் அடுத்தவர்களை நோக்கி கத்தியது, முறைத்தப்பார்த்தது, கோபப்பட்டது எல்லாம் இதற்கு தானா…. அடப்பாவி (எல்லாம் மை மைன்ட் வொயிஸ் தான் நண்பர்களே… முகத்திற்கு நேரே சொல்லவில்லை. சொல்லி சிங்கம் எல்லோர் முன்னிலையிலும் என்னை நோக்கி கர்ஜிக்கவா…? ) ஆனால் ஒன்று ஆண் சிங்கம் அழகு தான். முடியெல்லாம் சடையாக இருக்கின்றது தான். ஆனால் பெண் சிங்கம் தான் வேட்டையாடுகின்றது என் இனிய நண்பனே!

சரி கதையிருக்கட்டும் முன்னுக்கு சொன்ன   Intro எல்லாம் என்னத்திற்கு என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு விளங்குகின்றது. அதனை விரைவில் நாம் உத்தியோகபூர்வமாக சொல்கின்றோம். இன்னுமொரு கொசுறு தகவல். கடந்த வருடம் இருவரும் பாரீஸ் போய் வந்தோம். மீண்டும் நண்பனும் நானும் விரைவில் வெளிநாடொன்றிற்கு பயிற்சிக்காக பயணிக்கின்றோம். அதுவும் வளவாளர்களுக்கான பயிற்சி தான். எப்போதும் எதிலும் நம்முடன் பயணிப்பவர்களுக்கும் நமக்குமிடையில் இரசாயனம் வேண்டுமல்லவா..? 

கொழு கொழு கன்னங்கள்

நேற்று ஒரு முகநூல் நண்பி மிகவும் மனவழுத்தில் தான் இருப்பதாகவும், தன்னுடைய உடற்பருமனைக்காட்டி ஒருவர் தன்னை நிராகரித்துவிட்டதாகவும் பதிவினை எழுதியிருந்தார். அண்மைக்காலமாக பலரும் இவ்வாறான பதிவுகளின் பின்னர் தம்மை மாய்த்துக்கொள்வதால் சற்று உள்பெட்டியில் போய் உரையாட ஆரம்பித்தேன். தான் ஒருவரை விரும்பியதாகவும் அவரும் தன்னை விரும்புவதாக தான் செய்கைளை மேற்கொண்டதாகவும் ஆனால் தான் நேரடியாக இவ்விடயத்தினை அணுகும் போது அந்தப்பெண்ணின் உடல் பருமனைக்காட்டி மறுத்துவிட்டதாகவும் இது தன்னுள் மிகவும் உளரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். உடனடியாக தொலைபேசி இலக்கத்தினை வாங்கி உரையாடத்தொடங்கினேன். இது உடனடியாக மனவழுத்தத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்ய வேண்டியது. உன்னுடன் நானிருக்கின்றேன் என்று முதலில் கொடுக்கின்ற நம்பிக்கை தான் மிகப்பெரியது. இப்படி ஆரம்பித்து இரவும் கதைத்து இன்று ஓரளவு தெளிவாகிவிட்டார். இப்பதிவு இவர்களைப் போன்றவர்களுக்கானது!

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எம்முடைய கட்டடடப்பொறியியல் பிரிவில் நாம் இரு பெணகள் தான் இருந்தோம். அடுத்த மாதத்திலிருந்து மற்ற பெண் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை இடைநிறுத்திவிட்டார். ஆக ஆண்கள் குழுவில் தனித்த பெண் நான் தான். எனவே எங்கு போனாலும் என்ன செய்தாலும் கைகோர்த்து திரிய பெண் துணை இருந்திருக்கவில்லை. விரிவுரையுள்ள நாட்களில் கன்டீனில் சாப்பிடுவது, நூலகம் போவது எல்லாமே இந்த தடியன்களுடன் தான். அப்படி ஒன்றாக இருக்கும் நேரங்களில் யாராவது பெண் பிள்ளைகள் போனால் , அல்லது நம்மைக் கடந்தால் சில பிள்ளைகளைப் பார்த்து “முள்ளுக்குத்தும் வேண்டாம்” என்பான்கள். ஏன்டா அப்படி சொல்றீங்க என்று கேட்டால் நீ வளரல இன்னுமு; என்று பகிடி பண்ணுவதுண்டு. இதுவொரு வயது வந்தோருக்கான 18+ கதை, உடலுறவை வைத்து சொல்லப்படுகின்றதொன்று என நான் அறிந்துகொள்ள சில நாட்களாகியிருந்தது. அதாவது மெல்லிய பெண்களது எலும்பு குத்தும் என்ற நோக்கிலேயே இந்த கதையாடல் அமைந்திருந்திருக்கின்றது. 

ஒரு வகையில் இந்த மனநிலை இலங்கையை தாண்டி பயணிக்கும் போது என்னாலும் அவதானிக்க முடிந்திருக்கின்றது. “மெலிந்த” பெண்களை தேடுவது நம்முடைய சமூகத்தில் தான். திருமணத்திற்கு பெண்தேடும் விளம்பரங்களையும் பாருங்களேன். ஆனால் பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் Chubby யான பெண்களையே விரும்புவதை அவதானித்திருக்கின்றேன். அவ்வாறு அணுகப்பட்டுமிருக்கின்றேன். 


இதுவொரு கற்பிதம் தான். பெரும்பாலும் காதல், திருமணம் என்றவுடன் நமக்குள் முதலில் கட்டில் தான் நினைவுக்கு வந்து நிற்கின்றது. இதன் நீட்சி தான் மெலிந்த பெண் தேடும் படலம். இன்னும் மேலே பாய்வதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் பலர். ஆனால் பல பொசிஷன்கள் வந்துட்டு. இன்னுமொரு கற்பிதம் இருக்கின்றது சாப்பாடு தான் உடலளவினை தீர்மானிக்கும் என்று . ஆனால் அப்படியல்ல மகிழ்ச்சியும் உள ஆரோக்கியமும் தான் உடல் பருமனை திர்மானிக்கின்றது. சிலர் பானை கணக்கில் சாப்பிட்டாலும் வெண்டைக்காய் போல் தான் எப்போதும் இருப்பார்கள். 

அதே போல் தான் என்னுடைய நண்பிகள் சிலர் “மொட்டையான” ஆண்களை நிராகரிப்பதுமுண்டு. ஆனால் பாருங்கள் மெலிந்த பெண் திருமணத்தின் பின் குண்டானால் என்ன செய்வது? அல்லது நிறைந்த தலைமுடியுடன் இருப்பவருக்கு திருமணத்தின் பின் முடியுதிர்ந்தால் என்ன செய்வது?  என்னைப்பொறுத்தளவில் மெலிவாகவோ குண்டாகவோ இருப்பது என்று பேசிக்கொள்வதை விட BMI சரியாக இருக்கின்றதா என்று கணக்கிட்டுக்கொள்வது தான் முக்கியம். குளுகுளுவென்று இருந்தாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும் பெண்கள் இருக்கின்றார்கள். Zero சைசில் உள்ள சோம்பேறிகளும் இருக்கின்றார்கள் (இது எல்லா விடயத்திலும் தான்…. செக்ஸ் டூ)

முக்கிய விடயம் குளுகுளுவென்றிருக்கும் பெண்களை துணையாக கொள்ளும் ஆண்கள் மிகவும் சந்தோசமான மனநிலையில் இருப்பதாகவும் இவ்வாறான இணையங்கள் விவாகரத்தினை பெருமளவில் நாடுவதில்லை எனவும் ஆய்வுகளும் சொல்கின்றன. எங்கள் வீட்டில் வயதானதொரு பெண்மணி இருந்தார். அவர் மெலிந்த பெண்களைக்கண்டால் வஞ்சம் பிடித்தவர்கள் என்பார். இப்போது நினைக்கும் போது இரண்டுக்கும் தொடர்புள்ளதாக படுகின்றது). ஆண்களிலும் பாருங்கள் குண்டான பெடியன்கள் தன்னுடைய பெரும்பாலும் இணையர்களுடன் பாசமாக  இருப்பார்கள். 

எனவே பெண்களே யாராவது உங்களைப்பார்த்து சொல்வதற்கு முன்னர் நீங்களும் வாடலான, சப்பென்றிருக்கின்ற, ஒல்லியான ஆண்களை நிராகரித்துவிடுங்கள். கேட்டால் முள்ளுக்குத்தும் என்று சொல்லிவிடுங்கள். குளுகுளுவென்றிருந்த இட்லி நடிகைக்குத்தானே கோவில் கட்டப்பட்டது. யாராவது அசினுக்கோ இலியானாவிற்கோ கட்டியிருக்கின்றார்களா என்ன? 

குளுகுளுவென்று இருந்தால் தான் நெஞ்சில் சாயலாம், கன்னத்தை கிள்ளலாம், வயிற்றில் செல்லமாக குத்தலாம். நானெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பேன். வாடலாயிருந்தால் நமக்கும் சோடிப்பொருத்தம் சரி வராது.. பிள்ளைகளும் எலும்பும் தோலுமாகவிருக்கும். நமக்கு எல்லாமே குளுகுளுவென்று இருக்க வேண்டும் . இல்லாட்டி நமக்கும் முள்ளுக்குத்தும் தானே. 

பாத்திரமறிந்து......

மீரா என்றாலும் அந்தப்பெண் அவரை Block செய்திருக்க கூடாது. இருவரும் பேசினாலே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட்டுவிடும். இருவருக்கும் நடுவில் பலரும் தலையிட்டு குழப்புவதாக படுகின்றது. பல உண்மைக்காதல்கள் பிரிவது இவ்வாறான பிரச்சினைகளால் தான். இது குறித்து சிந்தித்துப்பாருங்கள். 

வணக்கம் நண்பரே உங்களைப் போன்று நால்வர் https://veenaganam.blogspot.com/2026/04/blog-post_23.html இந்தப்பதிவிற்கு இவ்வாறான பதிலூட்டங்கள் அளித்துள்ளனர். நீங்கள் இச்சம்பவத்தினை படர்க்கையில் பேசியிருப்து ஒருவகையில் நல்லாதாகவும் பேசுவதற்கு இலகுவானதாகவுமிருப்பதாக எனக்குப்படுகின்றது. நிற்க

முதலாவது நீங்கள் கவலைப்படுமளவு அந்தப்பக்கத்தில் கவலையோ இல்லை தேடலோ இருக்கும் என அந்தப்பெண் நினைக்கவில்லை. அன்று Block பண்ணிய பின்பு ஒரு தடவை கூட அந்தப்பெண் திரும்பிப் பார்க்கவில்லை. உங்களுக்கு அடித்துச்சொல்கின்றேன் முடிந்தால் அவரது சமூக ஊடகங்களுக்கு போய் பாருங்கள் வழமை போன்று பதிவுகள், பகிடிகள், சிலவேளை தன்னுடைய படங்களை மாற்றுதல் என தான் கடந்திருப்பார். காரணம் பாதிப்பு இதனால் ஏற்படவில்லை என்பது தான். ஆனால் அந்தப்பெண்ணின் சகல சமூக ஊடகங்களும் அந்த நிமிடத்திலிருந்து இயக்கப்படவில்லை. நம் அன்புக்குறியவர்களை காணவில்லை என்றாலோ அல்லது நம்மை விட்டு தூரப்போய் விட்டார்கள் என்றாலோ நம்மில் பாதிப்பு எப்போது தெரியுமா வரும்? நாம் அவர்களை மனமாற நேசிக்கும் போது தான். 

இப்படி சிந்தித்து பாருங்களேன். ஒரு பெண் ஒரு நபரை விரும்புகின்றாள். அவருக்கு சொல்லவில்லை. அவர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்யவிருக்கின்றார் எனும் போது தானாக விலகிவிடுகின்றாள். அவளது குடும்பத்திற்கான அரசியல் அழுத்தத்தினாலும் மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு போய்விடுகின்றாள். இதற்கிடையில் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றது.  சில வருடங்களின் பின்னர் எதேச்சையாக மீண்டும் சந்திக்கின்றார்கள். சந்தத்தித்த பின் தான் அவரது திருமணவாழ்க்கை முறிந்துவிட்டது தெரிய வருகின்றது. அதேவேளை இங்கு அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வாழ்வில் பெரிதான ஈர்ப்பு இல்லை. ஐந்து சகோதரன்களுக்கு ஒரே பெண்ணாக பிறந்து வளர்ந்த அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டவரது அழுத்தமான போக்கு, மண் மீதான பற்றற்றதன்மை என வேறுபாடுகள் அதிகம். இப்படிப்பட்ட நிச்சயார்த்ததை நிறுத்த அந்தப்பெண் யோசித்துக்கொண்டிருக்கும் போது இவ்விடயம் தெரிய வருகின்றது. இப்போது என்ன முடிவினை அந்தப்பெண் எடுக்க வேண்டும்? பொதுவாழ்வில் இருக்கும் மூவரது தன்மானம், சுயகௌரவம், எதிர்காலம் குறித்த விடயம் இது. நிதானமாகத்தான் கையாள வேண்டும். 

அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் முதல் வாழ்க்கை , முறிவு பற்றி தெரிந்திருந்தும் அவருடன் பழகிய நாட்களில் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. காரணம் காயப்படுத்திவிடக்கூடாது எனும் நோக்கம், பழைய வாழ்க்கை அல்லது முடிந்த விடயம் பற்றி பேசுவதால் இருபக்கமும் ஏற்படுகின்ற மனக்காயம் என தவிர்த்திருந்தாள். அந்த நபரின் அனுகுமுறைகள், பதிவுகளை வைத்தும் அவரும் தன்னை விரும்புவதாக தான் நினைத்து தாயிடம் பேசியிருந்தாள். அந்தப்பெண் தன் தாயிடம் இதனை குறித்து பேசும் போது தான் மேற்குறிப்பிட்ட நபர் தன்னுடைய அவசர புத்தியில் அரைவேட்காடு ஒன்றுடன் இதனை பகிர அது பொதுவெளியில் பேச அதனை அந்தப்பெண்ணின் குடும்பம் பிழையாக பார்க்க ஆரம்பித்துவிடுகின்றது. 

“அவர் விருப்பம் கேட்டார், நான் இல்லை என்று விட்டேன்” என்பதில் பல அர்த்தங்கள் உள. ஒன்று அந்த நபர் இவ்வளவு நாட்களும் அந்தப்பெண்ணின் மன உணர்வுகளுடன் தான் விரும்புவது போன்று காட்டி விளையாடியிருக்கின்றார். அல்லது பல பெண்களுடன் பழகிய ஒருவரால் தான் இவ்வாறு ஏதுமறியாத ஒருவர் மேல் பழி போட்டு கரி பூசிவிட்டு பொதுவெளியில் சந்தோசமாகவிருக்க முடியும். அல்லது அவர் பகிர்ந்துகொண்ட பெண்ணுடன் அவருக்கு இருந்த நெருக்கதில் தன்னை நல்லவனாக காட்ட நடந்த நாடகம் இது.  எதுவாகிலும் அடுத்தவருக்கு செய்த களங்கம் குறித்த சிறிதளவு கூட வெட்கம் இன்றி, கவலையின்றி இந்த கூட்டணி நன்றாகத்தானிருக்கின்றது. 

இந்த விடயத்தினை முதலில் 43 க்கும் 30 வயதுக்குமான வயதிடைவெளி தான் காரணம், போகப்போக இந்த இடைவெளி குறையும் புரிதல் வரும் என்று என்று அந்தப்பெண் நினைத்திருந்தாள். அதேவேளை பொது வாழ்வில் இருக்கும் இருவர் தம் தனிப்பட்ட வாழ்க்கைக்காக சமூக அந்தஸ்த்தை இழக்க கூடாது என்று நினைத்து பொதுவாகவுள்ளவொரு பெண்ணை சில மாதங்களுக்கு முன் அணுகியிருந்தாள். கதைத்த போது தான் அந்தப்பெண்ணுக்கும் அந்த நபருக்கும் கூட இருந்த உறவு அவளுக்கு தெரிய வந்திருந்தது. இதற்குள் இந்த பெண்ணுக்கு வளர்ந்த இரு பிளளைகளும் உண்டு. எனினும் அதனை கூட அந்த பெண் நம்பவில்லை. எப்போதும் ஒருவரை நேசிக்கும் போது குறைகள் தெரிவதில்லை தானே. ஆனால் அந்த பெண் அனுகியிருந்த நபர் மூலம் பலருக்கும் இவ்விடயம் பரவி கடந்த மாதம் சில பெண்கள் அந்தப்பெண்ணுக்கு தங்களுக்கும் அந்த நபருக்கும் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்தரங்கமான விடயங்களின் … அனுப்பியிருந்தனர். இந்த வினையெல்லாம் யாரால்? 

வயது வேறுபாடு, அதுவும் வேற்று இனத்தவருடன் மணவாழ்க்கை முறிந்தவர் பற்றி அந்தப்பெண் அவள் குடும்பத்தில் பேசுவதே எவ்வளவு அபர்த்தமானது அதையும் தாண்டி போராட நினைக்கும் போது அதனை மதிக்க வேண்டும். குறைந்த பட்சம் மிதிக்க நினைக்க கூடாது. வாழ்க்கையென்பது வெறும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதல்ல. நிதானம் முக்கியம் .அதுவும் ஒருமுறை தோற்றவர்கள் இன்னும் நிதானமாக அனுகவெண்டும். அதைவிடவும் வயது வித்தியாசம் 13 வருடங்கள். அப்படியிருக்கும் போது முதிர்ச்சியாக நடந்துகொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக தற்போது கட்டுரை எழுதல் வேறு தொடங்கியிருக்கின்றது. 

நூறு நேர்காணல் கொடுத்தென்ன? ஆங்கிலம் பேசியயென்ன பயன்? ஒரு மனிதனுக்குள் தெளிவையும் முதிர்ச்சியையும் தராத அனுபவம் என்னத்திற்கு? கல்வி என்னத்திற்கு? கௌரவமாக வாழ்கின்ற எந்த குடும்பத்தினை சேர்ந்தவர்களும் இவ்வாறான விடயங்களை விரும்புவதில்லை. ஒருவரது முன்னைய வாழ்க்கை முறிவடைந்து மீண்டும் அவரை புரிந்துகொண்டு வாழ்வது என்பது வேறு அதேவேளை பல பெண்களுடன் பதினொரு மணிக்கு நெளிவு பற்றி பேசுகின்றவருடன் நம்பி ஏமாறுவது வேறு. இது மீதியிலைக்கும் எச்சியிலைக்குமான வேறுபாடு. இதில் மிக முக்கியமானது அனுப்பப்பட்டவற்றிலுள்ள திகதிகள். கடந்த ஆவணியில் ஆரம்பமாகிய இப்பிரச்சினையில் தான் அவரை ஏதோவொரு கோபத்தில் காயப்படுத்திவிட்டோம் என்று என்று அந்தப்பெண் கவிiயெழுதிக்கொண்டிருக்க இங்கே பலருடன் “பரந்த மனது” பற்றி பேசிக்கொண்டிருந்திருக்கின்றார். இனியும் அந்தப்பெண் சுணங்க வேண்டுமா? 

உங்களுக்கு தெரியுமா அந்தப்பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவரில் உள்ள ஒரேயொரு பிரச்சினை எந்நேரமும் இயந்திரத்தனமாக இருப்பது மட்டும் தான். அந்த ஆணை இந்த பெண்ணை தவிர எந்த பெண்ணாலும் அனுகமுடியாது. அந்தளவு பெண் விடயத்தில் நேர்மையுண்டு. எந்தபெண் தானாக போய் விழுந்தாலும் கூட தள்ளிப்போ என்று சொல்கின்ற பக்குவமுண்டு. ஆனால் இங்கு அடிப்படையே தவறு. வறட்டு கௌரவம், அடுத்தவரை காயப்படுத்தி பார்த்து மகிழ்கின்ற வக்கிரம், வழிஞ்சல் தனம்…. இவருடன் வாழ நினைக்கும் அந்தப்பெண் எதிர்காலத்தில் நிம்மதியாகவிருக்க முடியாது. முன்னைய நாட்களில் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் கூட ஒருவருடன் இருக்கும் போது மற்றவருடன் வழிவது என்னவொரு வழிஞ்சல் புத்தி. முதல் வாழ்க்கையிலும் இது தான் நிகழ்ந்திருக்கின்றது. இதுவரையான அறிந்த தெரிந்த விடயங்கள் இவை தான்.

அந்தப்பெண் தேடுவது தனியே துணை மட்டுமல்ல. எதிர்காலத்தில் அந்த குடும்பம் கட்டியெழுப்பவுள்ள விடயங்களுக்கான ஆளுமையுள்ள ஒருவரை. அவர் நிதானமும் ,முதிர்ச்சியுமுள்ளவராக இருத்தல் முக்கியம். அடுத்தது அந்தப்பெண்ணின் அண்ணா அண்ணி மரணத்தின் பின் அவர்களது மூன்று குழந்தைகளும் அந்தப்பெண்ணின் பொறுப்பிலுள்ளார்கள். அவர்களையும் அணைத்துக்கொள்கின்ற முதிர்ச்சியான தந்தையையும் தான் அவள் தேடுகின்றாள். அடுத்தது பிரத்யேகம் என்பது ஒரு உறவில் மிக முக்கியம். 

எல்லோரும் நனையும் மழை தான்!
ஒருவரோடு நடக்கும்போது மட்டும் கவிதையாவது ப்ரத்யேகம்!

எத்தனை குரல்கள் ஒலித்தாலும் 
ஒரு குரல் மட்டும் இதயத்தின் கதவை நேரடியாகத் தட்டுவது ப்ரத்யேகம்..!

நீங்கள் பெரிதாக கவலைப்படவே தேவையில்லை. அவர் அப்படியொன்றும் கவலைப்பட்டிருக்க மாட்டார். முடிந்தால் அந்தப்பெண்ணுக்கு மறைந்திருந்து சேறு பூச அல்லது ஏட்டிக்குபோட்டியாக கட்டுரை எழுதிக்கொண்டிருப்பார். அன்பு உணரப்படாதவிடத்து சுணங்கிடவே கூடாது. 

இன்னுமொன்று தெரியுமா அந்தப்பெண்ணிற்கு அந்த நபரின் வட்டத்திலுள்ள இன்னுமொரு வளர்ந்து வருகின்ற ஒருவரே காதலை சோல்லியிருக்கின்றார். எல்லாவற்றிலும் பொருத்தமாகவுள்ள அவரை அந்த பெண் தற்போது நிராகரித்துக்கொண்டிருப்பதே அந்த வட்டத்தில் இணைந்து வாழும் போது இவரை காயம் செய்யக்கூடாது என்பது தான். நினைத்திருந்தால் பார் நான் வாழ்ந்து காட்டுகின்றேன் என்று ஏட்டிக்கு போட்டியாக அந்தப்பெண்ணால் நடந்துகொள்ள முடியும். ஆனால் இது வாழ்க்கை. பல மனங்கள் சம்பந்தப்பட்டது. நிதானமாகத்தான் அனுகவேண்டும்.  

ஒரு பக்கம் நீ தான் வேண்டும் என்று நிற்கின்ற நிச்சயிக்கப்பட்டவர், இன்னொரு பக்கம் பிரச்சினைக்குறியதொரு மேற்கூறிய நிலை,  மற்றப்பக்கம் பதிலை எதிர்பார்த்திருக்கும் ஒருவர் என நாட்கள் சிக்கலாகிக்கிடக்கின்றது. முடிச்சுக்கள் அவிழவும் காயங்களை ஆற்றவும் காலம் தேவை. அநியாயம் நியாயம் அவனே அறிவான் அவனிடமே அந்தப்பெண் விட்டுச்செல்கின்றது.  

அடுத்தது அந்தப்பெண் கதைத்துப்பார்க்கலாமே என்று கேட்டிருந்தீர்கள். அவளாகப் போய் பேசினால் அவள் அவளது குடும்பம் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். அது தான் முறையும் கூட. ஆனால் அப்படி பேசி அவளது பின்னணி தெரிந்து தான் ஒரு ஆண் நேசிக்க வேண்டுமென்பதல்ல. உண்மையில் அவர்கள் நாட்கள் சமூகமாகச் சென்று இருவரும் அன்பை பரிமாறியிருந்தால் நிச்சயம் அந்தப்பெண் சில நாட்களிலேயே தன் குடும்பம் பற்றி சொல்லியிருப்பாள், ஏன் அறிமுகம் கூட செய்து வைத்திருப்பாள். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அணுகுவது? அந்தப்பெண்ணின் பக்கம் இருந்து நகர்த்திட இனி வழியில்லை. வலித்தாலும் உண்மையை உண்மையாகத்தானே சொல்ல வேண்டும்

அந்தப்பெண்ணின் குடும்பம் விரைவில் புலம்பெயரவுள்ளது. அந்தப்பெண்ணும் அடுத்த மாதம் படிப்பிற்காக செல்லவுள்ளாள். இதற்கு மேலும் நடந்தவை பொய்யாகவிருந்து இருவருக்குமிடையில் அன்பென்பது தூய்மையானதும் நேர்மையானதுமாயிருந்தால் சேருவார்கள். ஆனால் அது வரை அந்தப்பெண் இனி இது பற்றி பேசவிரும்பவில்லை. இத்துடன் இது குறித்து நாமும் பேசிட வேண்டாம். 

 பிச்சை மட்டுமல்ல அன்பையும் பாத்திரமறிந்து இடவேண்டும் !!! 

புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும்!

நீங்கள் நமக்கு முந்தைய தலைமுறையினருடன் பேசும் போது அந்தக்காலத்தில் அவர்களது அன்பு பரிமாறல்கள் குறித்து கேட்டுப்பார்த்துள்ளீர்களா…. ? நான் என் தாயாரிடம் கேட்ட போது என் அம்மாவிற்கு அப்பா குறித்த நினைவுகளாக இருப்பதில் ஒன்று குறிப்பிட்டதொரு பாடல் என்றார். அடுத்தது சில கடிதங்கள் , வாழ்த்து அட்டைகள் சேர்த்து வைத்திருக்கின்றார். அப்பாவின் கைகுட்டையொன்றிருக்கின்றது.  அவர்கள் அந்தக்காலத்தில் கைத்தொலைபேசி, சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் ஒருவரையொருவர் நேசித்தவர்கள். அந்த நாட்களில் கண்கள் தான் செய்தியனுப்பும் ஊடகம். அதையும் தாண்டி பேசுவதென்றால் கடிதம். இதனால் தவறாது கண்களால் தகவல்களை பரிமாறிக்கொண்டேயிருப்போம் என அம்மா சொல்லிக்கொள்வார். இதை தாண்டி ஊரில் திருவிழாக்கள், விளையாட்டுப்போட்டிகள் நடந்தால் போதுமாம் நாள் முழுக்க கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம். இப்படியானதொரு நாளில் தான் பாடல் கேட்பது ஆரம்பித்திருக்கின்றது. அக்காலகட்டங்களில் இவ்வாறான நிகழ்வில் பாடல்களை ஒலிபரப்புவதற்கென்றே ஓரு குழு பாட்டுப்பெட்டி, மைக்செட்டுடன் வந்துவிடுவார்களாம். பெரும்பாலும் ஆண்கள் தான் அக்குழுவினரிடம் சென்று பணம்செலுத்தி தம்முடைய காதலிகளுக்கு பிடித்த அல்லது அந்நேரத்தில் பிரபல்யமாயிருக்கின்ற காதல் பாடல்களை ஒலிபரப்புசெய்வார்களாம். ஊரே பாடலை கேட்டாலும் அதன் பின்னுள்ள காதல் கதை பற்றி குறிப்பிட்ட பெண்ணுக்கு தெரிந்திருக்குமாம். இப்படியானதொரு நாளில் தான் அப்பாவும் அம்மாவிற்கு பாடல்களை ஒலிபரப்புச்செய்திருக்கின்றார். “காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…” , “வான் நிலா ….” ஏன்கின்ற இரு பாடல்கள் தம் காதல் கதையின் பசுமையில் எப்பொதும் எஞ்சியிருப்பதாக அம்மா கூறிக்கொள்வதுண்டு.  பதிலுக்கு தான் எம்ரோயிட் செய்த கைக்குட்டை, வாழ்த்து அட்டைகள் பரிசளிப்பதாக சொல்லுவார். இதனை எம்முடன் பகிரும் போது அம்மாவின் முகத்தில் தெரிகின்ற பெருமை படர்கின்ற செம்மை சொல்லிச்செல்லும் அவர்கள் அன்பை. என்னதான் சொல்லுங்கள் இன்று ஒருவரை தொடர்புகொள்ள ஆயிரம் வழியிருந்தும் இவ்வாறான சின்ன சின்ன பரிமாறல்கள், நினைவுகள் என்பவற்றை தொலைத்துவிட்ட தலைமுறை நாம் தான். 

பொதுவான திருமணம் பேசப்பட்டு அச்சடங்கு நடைபெறும் வரை இணையர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காலம் இருக்கின்றதே இது அலாதியானது. இருவர் நட்பிலிருந்து பின் காதல் செய்யும் போது ஓரளவாவது ஒரவரையொருவர் புரிந்திருப்பார்கள், அல்லது தெரிந்துவைத்திருப்பார்கள்.  ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இதற்கான அவகாசம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு படிப்பு, குடும்ப நிலையை முன்னிருந்தி சிலநேரங்களில் இவ்வதிஷ்டம் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட இருவரின் கதையிது. இனம், சாதி, குடும்ப நிலை, படிப்பு, பதவி என்று நீண்ட வரிசையான விடயங்கள் ஒப்பிட்டு பார்த்து இருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜாதகம் பார்த்த சோதிடர் கூட ஆபூர்;வ பொருத்தம் 10 இல் 9 பொருந்துகின்றது என்று சொல்லிவிட்டார். பங்குத்தந்தையும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி விட்டு பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டுங்கள் பிரச்சினையில்லை என்று பச்சைகொடி காட்டிவிட்டார். ஆனால் இந்த 10 இலும் சரி முன்னர் ஆராயப்பட்ட வரிசையிலும் சரி “மனம்” இருந்திருந்ததா என்பது குறித்த கேள்வியை காலம் போக போக தான் ஆராயத்தொடங்கியது.  

சதாசர்வ காலமும் மருத்துவமனையின் (ஒருமையில்லை பன்மை)  சத்திரசிகிச்சை பிரிவில் நோயாளிகளின் மூளையை கிளறிக்கொண்டும், மிஞ்சிய நேரங்களில் பணத்தினை எண்ணிக்கொண்டும் புத்தாண்டில்லை, பொங்கலில்லை, முக்கிய நாட்களில்லை எல்லா நாட்களுமே சத்திரசிகிச்சை மிஞ்சினால் டிவிட்டர் , பிடித்த இடங்களிலிலெல்லாம் சொத்து  வாங்க வேண்டும் என்று வாழ்கின்ற ஆணுக்கும், இசை, வர்ணம், எழுத்து, ஊர் சுற்றல், புத்தகம், சின்ன சின்ன நினைவுகளை கூட சேர்த்து வைக்க நினைக்கின்ற பெண்ணும் பொருந்திப்போகும் என்றா நினைக்கின்றீர்கள்? தன் வருங்கால துணை உலகின் தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள் வரிசைக்குள் வந்த போது முதல் வாழ்த்தை அனுப்பி சிறு அரிசியில் பெயரை நுணுக்கமாக எழுதி அனுப்பி வைத்த பெண்ணுக்கும் தன் வருங்கால மனைவி முன்னிலை வடிவமைப்பாளராக தெரியப்பட்ட போது ஓரு மாதம் கழித்தும் வாழ்த்தாமல் பிளாட்டின மோதிரம், நூறு ரோஜாக்கள் இணைத்த பூங்கொத்தும் அனுப்பி வைத்த ஆணுக்கும் பௌதீகமான தென் ஈழத்திற்கும் - அமெரிக்காவிற்குமான தூரம் என்றாலும் மனம் அதனையும் தாண்டி பல மைல் தூரத்திலாளனது. 

சிறு குழந்தைகள் என்றாலும் அவர்களை தூக்குவதற்றும் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்கும் நீரிலும் கூட சாதி, மேல்மட்டம் தேடி பிடிக்கும் ஆணுக்கும் பாரதியின் புதுமைப்பெண்ணிற்குமான சிந்தனையின் ஆழம் வேறுபட்டது. மொழியறிவு அற்றவர்கள் முன் கூட தன் பெருமையை காட்ட ஆங்கிலத்தில் பேசும் ஆணுக்கும் தமிழை மூச்சாக சுவாசிக்கும் அந்த பெண்ணுக்குமான பண்பின் நீளம் வேறானது. ஓன்றல்ல இரண்டல்ல 365 ஐ மூன்றால் பெருக்கி வருமளவு நாட்களை புரிதலுக்காக காலம் கொடுத்திருந்தும் தூரம் கடந்து பார்க்கும் போது வருங்கால மனைவி அனைத்;திலும் அந்தஸ்த்து பொருத்தமானவள் என மட்டும் தான் ஆணுக்கு புரிந்திருந்தது. எல்லாமிருந்தும் அன்பிற்கும் பகிர்தலுக்கும் இவ் உறவில் இடமில்லை என்பதும் மட்டும் அந்த பெண்ணுக்கு புரிந்துபோனதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் பாருங்கள் எதுவும் நம் அருகில் இருக்கும் போது நமக்கும் அதன் அருமை புரிவதில்லை தானே! ஒன்றை மட்டும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அன்பை காட்ட ஒருவர் அருகில் இருக்கும் போது, பதிலன்பை காட்டமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் போது நாம் காட்டுகின்ற அலட்சியங்கள் அவர் நம்மை பிரிந்த பின் தான் நடுமண்டையில் குட்டிச்சொல்லும். இது எப்போதும் நேர்மையான நேசித்தலுக்கு உண்டு. 

நிழலின் அருமை வெயிலில் தானே தெரிவதுண்டு! இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இன்று அந்த பெண்ணின் முகநூலில் பழைய படங்களை எல்லாம் இரசித்து “சிவப்பு இதயம்” ஐ தட்டிவிடுகின்றார், தன்னுடன் இருந்த நாட்களில் “படம் வரைவதை விட வேறு உருப்படியானதை பாரும், எனக்கு இந்த ஓவியங்கள் புரிவதில்லை" என தூக்கியெறிந்து பேசிய அதே ஆண் தான் அந்த பெண் நடாத்துகின்ற ஓவிய கண்காட்சிகளின் போது பூங்கொத்துக்களை அனுப்பி வைக்கின்றார். ஆங்கிலத்தில் பேசு, எழுது .. தமிழ் சோறு போடாது என்று சொன்னவர் தமிழில் கவிதையாக அந்தப்பெண்ணுக்காக எழுதித்தள்ளுகின்றார். இதுவென்ன சத்தம், பாம்புக்கு மகுடி போல என்று தூக்கிவீசிய அந்த பெண் இசைத்த வீணை பாடல்களை இன்று தேடி தன்னுடைய அழைப்போசையாக வைத்திருக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே போய் டிவிட்டரில் “கண்ணம்மா” என்று பதிலளிக்கின்றார். அந்தப்பெண் தேடியலைந்து வாங்கி கழுத்துப்பகுதில் எம்ரோயிட் செய்தனுப்பிய உடைகளை பிறகு போடுகின்றேன் என்று அலட்சியப்படுத்தியவர் இன்று தினமும் போட்டு இன்ஸ்ராவில் பதிவிடுகின்றார்.எத்தனை நாள் அந்தப்பெண் ஒன்றாக சாப்பிடுவதற்கும், தான் சமைத்த உணவை பற்றி பேசமாட்டாரா என்றும் தவித்திருந்தது, அழுதிருந்தது. இப்போது பல முறை ஒன்றாக போவோமா என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றார். பூரணை நாளுக்கு கூட 12 மணிக்கு அந்தப்பெண்ணுக்கு குறுஞ்செய்தியனுப்புகின்றார். புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும் என்பார்கள் அவருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.

முன்னரெல்லாம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பி பதிலுக்கு காத்திருந்து அந்தப்பெண் அழுதிருக்கின்றாள். முதலாக வாழ்த்திவிட்டு கைத்தொலைபேசி சத்தமிடும் போதெல்லாம் ஓடிப்போய் பார்த்துமிருக்கின்றாள். ஒரு நாளில் இருக்கின்ற 1440 நிமிடத்தில் ஒரு நிமிடம் பேசலாமே என்று கெஞ்சியிருக்கின்றாள். இன்று இதெல்லாம் கடந்துவிட்டது. நேசிப்பென்பது மண் மீதும் இருக்கலாம் தான். 

நீங்கள் உங்கள் இணையரோடு அல்லது வருங்கால துணையோடு நடக்கும் போது சற்று வந்த பாதையை திரும்பி பாருங்கள். ஆங்காங்கே சில பூக்கள், முட்கள், சின்ன சந்தோசங்கள், நினைவுகள் இருந்தால் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே கார்ப்பேட் வீதியும், சொகுசு வீடுகளும், பிராடோவும் மட்டும் தான் தெரிகின்றது என்றால் கடந்திருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். வாழ்தலுக்கும் கடத்தலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வாழக்கற்றுக்கொள்ளுங்கள்!

அல்பா ஆண்களுக்குத்தான் வாழ்க்கையமைக்க அசாதாரண பெண் மனைவியாக வேண்டும்! அசாதாரண பெண்களுக்கு சாதாரணமானவனின் குட்டி இதயம் போதும் வாழ்வதற்கு. கைகோர்த்து நடப்பதில் உள்ள சுகம் விரலில் அணிகின்ற வைரமோதிரத்தினை விட அலாதியானது. ஸ்கோப்பியனிலும் பிராடோவிலும் ஓரடி தள்ளியிருந்து பயணிப்பதை விட மோட்டார்பைக்கிள் அருகருகே இதயத்துடிப்பு உணர பயணிப்பது கனதியானது!

இருக்கும் போது பிடித்தவற்றினை கொடுக்காது இறந்த பின் மாலயம் செய்வதில் என்ன பயன்? நம்மவர்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்காத நாம் இன்று LinkedIn இல் வந்து அடிக்கடி பார்த்து என்ன பயன்? பிரியங்களை பிரியங்களால் நிரப்ப பாருங்கள். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கின்றது! 

பிற்குறிப்பு 01: ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இம்சையே போதுமானது. இன்னுமொரு கவிஞர் வேறு இப்போது தான் உருவாகிக்கொண்டிருக்கின்றார். பரவாயில்லை கவிதைத்தொகுப்பை வெளியிட்டால் புதிய நூலகத்தில் வைத்திட முடியும்! 

 பிற்குறிப்பு 02: இந்த AI காலத்திலிருந்தாவது இனி வரும் சோதிடர்கள் 11ஆவது பொருத்தமாக "மனதை"வைக்க யோசிக்கலாம். காலம் மாறிவிட்டது தானே 

கோடு

இன்று தொழில்முயற்சியாமை குறித்து என்னை நேர்காணல் செய்த ஊடகவியலாளர் ஒளி-ஒலி பதிவின் பின் கருவிகளை அணைத்துவிட்டு நட்பு முறையில் என்னிடம் இரு கேள்விகளை முன்வைத்திருந்தார். 

முதலாவது வினா:  ஓர் ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் தொழில்முயற்சி என்று வரும் போது யாரையாவது சாரவேண்டியிருக்காதா அல்லது உங்கள் குடும்ப அரசியல் அதில் பக்கசார்பினை தோற்றுவிப்பதில்லையா? 

பதில் : உலகத்தில் நூலளவாவது தனிப்பட்ட பக்கசார்பின்றி யாரும் இருந்திட முடியாது என்பது என் உறுதியான வாதம். ஆனால் இந்த பக்கசார்பு மனித தன்மையற்றதானதாக அல்லது பணம் சார்ந்து இருக்கும் போது அல்லது ஏதாவதொன்றினை பெறுவதற்காக அறத்தினை அடகுவைக்கும் போது தான் குற்றமாகின்றது. நன்மைக்கு சொல்லிடும் பொய்கள் போன்று ஒரு மனிதனை வாழ வைக்க, நீதியை நிலைநாட்ட. உரிமைகளை வென்றெடுக்க பக்கசார்பாகின்றோம் என்றால் அதில் தப்பேயில்லை. ஆனால் பிழையென்று வரும் போது அது என் பிள்ளையாகவேயிருந்தாலும் தீர்ப்பளிக்கும் உறுதி இருந்தால் போதுமானது தானே…. 

இரண்டாவது வினா: உங்கள் துணைவருக்கு அரசியல் புலம் இருக்குமா? அது உங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா?  

பதில் 02: எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன். 

நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும், திருமணம் என்றால் விவாகரத்தில் முடியும், அல்லது மிக முக்கியமானதொன்று என்னவென்றால் உறவுநிலையில் உள்ளவர்கள் நடிக்கவோ, பொய் சொல்லவோ ஆரம்பிப்பார்கள். இவ்வாறான பொய்யானதொரு கானல் நீர் போன்றதொரு உறவில் பொய் வாழ்க்கை வாழ்வதை விடவும் நடுவில் கோடு போட்டு அந்தப்பக்கம் நீ இந்தப்பக்கம் நான். எமது எல்லைகள் இது என்று வாழ்வது எவ்வளவோ நிம்மதியானது. இது நட்புக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும் தம்பதிகளுக்கும் பொருந்தும் குடும்பத்தின் எந்த நிலைகளுக்கும் பொருந்தும். ஆனால் நடுவில் கோடு இருப்பதால் யாருக்கும் தெரியாமல் பல்வேறு உறவு நிலைகளில் இருக்கலாம் என எண்ணுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஒருவரை பிடிக்கவில்லையா அவரது முகத்திற்கு நேரே உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வது மிக நல்லதொரு விடயம். முடிந்தால் இதையே பக்குவமாக அவரவர் மனநிலையை உடைக்காத முறையில் நீங்கள் செய்வீர்கள் என்றால் நீங்கள் தான் குறைந்த பட்சமாவது மனிததன்மை உடையவர்கள். நமக்கென ஒருவர் இருக்கும் போது இரகசியமான பல்வேறு தொடர்புகளை பேணுவது அல்லது யாருக்கும் தெரியாது தானே என்று முரணான உறவுகளில் சிக்கிக்கொள்வது போன்ற இழிவுநிலையை விட நடுவில் கோடு போட்டு வாழ்வது மேல். இது உறவுகளுக்கிடையானதை பற்றியது. 

இதுவே அரசியல் விருப்பு அல்லது பக்கசார்பிற்கும் பொருந்தும். நாம் ஒருவரை நேசிக்கும் போது அல்லது துணையாக தேர்வுசெய்யும் போது அவரது குடும்பம், பண்பு, படிப்பு, பண்பு என ஆராயலாம் ஆனால் அரசியல் என்பது மாறுபாடடையும் ஒரு விடயம். ஆனால் அந்த அரசியல் , அவர் சாரும் கட்சி அறம் சார் போராட்ட வழி சமைக்கின்றது என்றால் நல்லது தானே!. என் துணை அப்படியிருப்பது எனக்கும் பெருமையே. 

எதிர்காலத்தில் நாம் இணைந்து கட்டவுள்ள எம் இல்லத்திற்கான வரைபடத்தில் அலுவலகத்திற்கான வாசல் எம் இல்லத்தின் வாசலுக்கு மறுபக்கத்தில் தான் வரையப்பட்டுள்ளது. எப்படி வீட்டு வாசலில் செருப்பை கழட்டிவிட்டு உள்நுழைகின்றோமோ அவ்வாறே அரசியலையும் எம் இல்ல வாசலில் கழட்டிவிட்டு வந்தால் நல்லது. எமக்கான குடும்ப வாழ்க்கைக்கும் அரசியலுக்குமான கோடு எம் இல்ல வாசல் தான். 

மற்றும்படி என் துணை அரசியலின்றி இருப்பதும் அல்லது ஈடுபாடின்றி இருப்பதற்கும் சாத்தியமில்லை. அவரவர் விருப்பு அவரவருக்கு. சமூக ஊடகத்திலேயே என் நண்பர்கள் பட்டியலில் அல்லது நான் பின்தொடரும் பட்டியலில் என் துணையை வைத்திருக்க நான் விரும்புவதில்லை. அன்பில் மட்டுமே ஓர் ஆணிடம் சரணடைய முடியும். அரசியலில் அல்ல. காதலையும் அரசியலையும் கலந்திட விருப்பமில்லை. நடுவில் கோடு போட்டுவிட்டால் சரி தானே!

ஆண் குழந்தையா பெண் குழந்தையா?

 

நேற்று என்னுடைய தமையனாருடன் பேசும் போது தன்னிடம் பரிசோதனைக்கு வந்த தம்பதியினர் தன்னுடன் உரையாடியதை பகிர்ந்துகொண்டார். இது அவர்களுடைய முதல் பிரசவம் என்றும் இருவருமே இது ஆண் குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். எனினும் இன்னும் பாலினம் குறித்து அறியுமளவு கரு வளராமையால் தற்போது தான் உறுதியாக கூறமுடியாது என அவர்களிடம் தான் சொல்லிவிட்டதாகவும் எம்மிடம் பகிர்ந்தார். எனக்கென்றால் இந்தக்காலத்திலும் இப்படியா என்றுதானிருக்கின்றது..... 

இன்று ஆண் குழந்தை வேண்டும் என, அல்லது பெண் குழந்தை தமக்கு வேண்டும் என காத்திருக்கும் பல தம்பதிகளினரின் பெருவிருப்பை மருத்துவர்கள் ஆய்வுகூட கருக்கட்டல் (IVF)   முறை மூலம் தீர்த்து வைக்கிறார்கள். குழந்தை ஆணாக இருக்க வேண்டுமா பெண்ணாக இருக்க வேண்டுமா என்ற பாலினத் தேர்வை இச் சிகிச்சை மூலம் கோரக் கூடாது, செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தவறு’ என  தெளிவாகச் சொல்லியிருக்கின்ற போதும் மூடிய மருத்துவமனைகளின் கதவுகளுக்கு பின்னால் இது நடை பெறுகிறது என்பது ரகசியமல்ல.

பெறப் போகும் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது சட்டரீதியாக மட்டும் குற்றம் என்பது மட்டுமல்ல அது சமூக ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஏனெனில் இது வெறுமனே பாலினத்தேர்வு என்பதுடன் நின்றுவிடவில்லை. அதற்குள் ஒரு அழிப்பு நடவடிக்கையும் மறைந்து இருக்கிறது. இனஅழிப்பு (Genocide) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். பாலினத் தேர்வு எனப்படுவது உண்மையில் பாலின அழிப்பு (Gendercide) என்றே பலரும் கருதுகிறார்கள். பெரும்பாலும் பெண் கரு முளைகள் களையப்படுகின்றன. ஆண் கருமுளைகள் ஓம்பப்படுகின்றன. இதனால்தான் குழந்தையில் பாலினத் தேர்வு செய்வது ஆகாது எனப் பலரும் கூக்குரலிடுகிறார்கள். மாறாக அவ்வாறு செய்வதைத் தடுப்பதால் பெற்றோர்களது மன உணர்வுகள் பாதிக்கப்படும். அது அவர்களது சுதந்திரத்தில் கை வைப்பதாகும் என மாற்றுக் கருத்துகள் சொல்வோரும் உளர். 

குழந்தையில் பாலியல் தேர்வு

ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும் என இரு குழந்தைகளும் வேண்டும் என்று பொதுவாகச் சொன்னாலும் ஒவ்வொரு பெற்றோருக்கும் தமக்கு எந்தக் குழந்தை வேண்டும் என்பது பற்றிய தனிப்பட்ட உள்ளார்ந்த விருப்புகள் இருக்கவே செய்யும். இருந்தபோதும் ஆசிய நாடுகளை  பொறுத்த வரையில் ஆண் குழந்தைகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ‘எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்..’ எனக் கவிஞர் பாடுவது வெறுமனே அக் கவிஞனின் வார்த்தைகள் அல்ல. அது அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும். ஆனால் இவற்றிற்கு பின்னுள்ள நம் சமூகத்தின் கேவலமான சிந்தனை இருக்கின்றதே அதனை தான் முதலில் சாடவேண்டும்

பிறப்பில்  ஆண்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஆர்மேனியா, ஆர்ஜன்ரைனா, சீனா, இந்தியா, ஜோர்ஜியா போன்றவை முன்னணியில் நிற்கின்றன. தங்கள் முதல் குழந்தை ஆணாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பு ஜேர்மனி உட்பட்டதான சில ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக உலக சுகாதார அறிக்கை ஒன்று கூறுகிறது. பெண் குழந்தைகள் விரும்பப்படாமைக்கு பெண்கள் மீதான அடக்கு முறைகளும், பாலியல் பலாத்காரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம். சீதனம் கொடுக்க வேண்டிய பிரச்சனையும் மறைமுகக் காரணம்தான். இது பொதுவாக கீழை நாடுகளின் நிலை. குடும்பத்தில் ஆண் பெண் சமநிலை வேண்டும் என்பதற்காக பாலினத் தேர்வு மேலைநாடுகளில் விரும்பப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பாலினத் தேர்வானது இன்று நவீன அறிவியல் ரீதியான ஒன்றாக இருக்கிறது. ஆயினும் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வது பற்றிய ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் நீண்ட காலமாக இருந்திருக்கின்றன. சீனர்களின் பாலினத் தேர்வு கலண்டர் (Chinese Gender Calendar), பாலினத் தேர்விற்கான உணவு முறை எனப் பல முயலப்பட்டுள்ளன. இவை யாவும் இயற்கையானவை. 

Chinese Gender Predictor

ஓரளவு விஞ்ஞான அறிவையும் கலந்து Shettles Method என்பதை உருவாக்கினார்கள். விந்துத் தேர்வு (Sperm selection) முறை ஒன்றும் இருக்கிறது. ஆனால் இவை எதுவுமே பூரணமான பலன் தரும் முறைகள் அல்ல. விரும்பிய தேர்வை நிச்சயம் தரும் என நம்ப முடியாது. 

Methods of Gender Selection எவ்வாறு செய்யப்படுகிறது?
 
Test Tube  முறையில் குழந்தை பெறும் போது பெற்றோர்களால் தங்கள் குழந்தையின் பாலினத்தைத் தேர்வு செய்ய முடியும். ஆய்வு கூட கருக்கட்டலின் போது கருமுட்டையையும் விந்துவையும் இணைப்பார்கள். அது கருவாக வளர்வதற்கான ஆரம்ப நிகழ்வாகும். ஒரு கலமான அது அங்கே பல கலங்களாகப் பிரிந்து வளரும். எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (Blastocyst) ஆகி மேலும் வளரும். இதன் பின்னரே அதை பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். பொதுவாக 3 முதல் 5 நாட்களில் வைப்பார்கள். அவ்வாறு வைப்பதற்கு முன்னர் நுணுக்கமான ஒரு மரபணுப் பரிசோதனை செய்வதுண்டு. நுண்ணிய ஊசி மூலம் அதிலிருந்து ஒரே ஒரு கலத்தை மட்டும் எடுத்து மரபணுப் பரிசோதனை Preimplantation genetic diagnosis (PGD) செய்வார்கள். ஏதாவது கடுமையான பரம்பரை நோய்கள் இருக்கிறதா என்பதை அறிவதற்கான பரிசோதனை இது. அவ்வாறு தேர்ந்தெடுத்து நோய்கள் அற்ற கருமுளையைத்தான் பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள்.

Preimplantation Genetic Diagnosis 

இது மருத்துவக் காரணங்களுக்கான தேவைகளுக்காகச் செய்யப்படும் பரிசோதனை. இதே பரிசோதனை மூலம் அந்தக் கருமுளையானது ஆணா பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும். மருத்துவக் காரணங்களுக்கானது அல்ல என்பதால் வழமையாகச் செய்யப்படுவதில்லை. பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே மிகுந்த செலவில் செய்யப்படுகிறது. பாலினத் தேர்வுடன் ரெஸ்ட் ரியூப் பேபிக்கான மிகக் குறைந்த செலவானது  பல மில்லியன்கள் வரை இருக்கும் எனத் தெரிகிறது. விந்து, முட்டை ஆகியன தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கலாம். செலவு அதிகமானாலும் இம் முறையானது 99 சதவிகிதம் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

கருவில் வளரும் குழந்தையானது ஆணா பெண்ணா என்பதை சாதாரண ஸ்கான் பரிசோதனைகள் (Ultra Sound Scan) மூலமும் கண்டறிய முடியும். ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஆகும். கருமுளையானது தாயின் கருப்பையில் 12 முதல் 20 வாரங்கள் வளர்ந்த பின்னர் ஏற்படும் அங்க வேறுபாடுகள் மூலமே தெளிவாகக் கண்டறிய முடியும்.

பால்வழித் தேர்வும் அழிப்பும்

அவ்வாறு கண்டறியும்போது அது வேண்டாத பாலினக் கருவெனில் சிலர் அதைக் கலைக்க முனைவார்கள். கருக் கலைப்பு சட்டவிரோதமானது என்ற காரணத்தால் அவ்வாறு குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் ஸ்கான் பரிசோதனை செய்வதை இலங்கை உட்பட பல நாடுகளில் தடை செய்துள்ளார்கள். இதே காரணங்களுக்காகத்தான் ஆய்வுகூட கருக்கட்டலின் பின்னரான பாலினம் அறியும் பரிசோதனை நிறுத்தப்பட வேண்டும் என்பது ‘பால்வழி அழிப்பு’ என்பவர்களின் வாதமாகும்.

ஆனால் இது பால்வழி அழிப்பு அல்ல, தேர்வு மட்டுமே என ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு சொல்வதன் காரணம் என்ன? ரெஸ்ட் ரியூப் முறை என்படும் இத்தகைய ஆய்வுகூட கருக்கட்டலின் போது ஒரு பெண்ணுக்காக பல முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன. தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உறை குளிரில் வைத்துப் பாதுகாப்பார்கள். தானாகவே கருச் சிதைந்துவிட்டால் மீண்டும் வைப்பதற்கு அது உதவும். அல்லது அடுத்த மகப்பேற்றை நாடும் போது உதவலாம் என்பதற்காகவே ஆகும். மாறாக குழந்தை இல்லாத வேறொரு பெற்றோருக்கு சேமிப்பிலிருந்து தானமாகவும் வழங்கவும் முடியும்.

ஆனால் அதை அழிக்கவும் முடியும். பெரும்பாலும் அதுவே நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் பாலியல் தேர்வு 1994ம் ஆண்டு முதல் தடைசெய்யப்ட்டுள்ளது. இருந்தபோதும் கடுமையாக அமுல்படுத்தப்படாததால் சனத்தொகையில் பெண்களின் வீதாசாரம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. அண்மையில் டெல்லியில் ஒரு கும்பல் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்யதற்கு சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே மறைமுகக் காரணம் என்கிறார்கள். ஏனெனில் மொத்த சனத்தொகையில்  50 சதவிகிதத்திற்கு அதிகமாக இருப்பது 25 வயதிற்கு உட்பட்ட வயதினரே ஆகும்.  இயல்பான பாலியல் தேவைகளுக்கு ஏற்றளவு அவர்கள் வயதொத்த பெண்களின் எண்ணிக்கை போதாமலிருக்கிறது. இதுவே வன்புணர்வுகளுக்கு காரணம் என்கிறார்கள். 

இப்பொழுது பிரித்தானியாவிலும் பாலியல் தேர்வுகளுக்கு தடையிருக்கிறது. ஆயினும் அங்குள்ள மருத்துவ அறிவியல் (medical ethicists)    குழுவானது அத் தடைக்கான தேவை எதுவும் இல்லை என்கிறது. ஆனால் அது சரியான கருத்தா? பெற்றோர்களின் உளவியல் தாக்கங்கள் மற்றும் குடும்ப சமநிலைக்காக பாலியல் தேர்விற்கு தடை விதிக்கக் கூடாது என்பது அவர்களது வாதம். அது ஓரளவு உண்மை என்ற போதும், தடையை நீக்குவதால் சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை மனம் கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள்
குழந்தை ஆணாகவா பெண்ணாகவா இருக்க வேண்டும் என்ற தேர்வு இதுவரை இயற்கையிடமே இருந்திருக்கிறது. இந் நிகழ்வை பெற்றோர்கள் தீர்மானிக்க வழிவிட்டால் அது மருத்துவ ரீதியான வணிகமயப்படுத்தலுக்கு வழிவகுக்கும். அந்நிலையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும். மருத்துவரும் பெற்றோரும் தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் முடிவுகள்  பாலினத் தேர்வுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. Origins of Love, என்ற தனது நாவலில் Kishwar Desai அவர்கள் இது பாலினத் தேர்வுக்கு அப்பாலும் மருத்துவ வணிக மயமாதலுக்கு சென்றுவிடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

குழந்தையின் சரும நிறம் எதுவாக இருக்க வேண்டும், அதனுடைய அறிவாற்றல் எவ்வளவு இருக்க வேண்டும், குழந்தையின் தலைமுடி எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர்கள் கோரக் கூடும். அதற்கான ஆதரவாக மருத்துவர்கள் குரல் எழுப்புவார்கள் என்கிறார். ஆயினும் இவற்றிற்கு ‘ஆம்’ சொன்னாலும் அவர்களுக்கு பூரண திருப்தி ஏற்படப்போவதில்லை. மனித மனம் என்றுமே பூரண திருப்தி அடைவதில்லை. ஒன்று கிடைத்தால் கிடைக்காத வேறு ஒன்றைப் பற்றி ஏங்கிக்கொண்டே இருக்கும். ஆண் குழந்தை அதுவும் எலுமிச்சை நிறக் குழந்தை வேண்டும் எனக் கேட்பார்கள். அது கிடைத்துவிட்டால் அத்தோடு ஆசை அடங்கிவிடாது. அதன் கண்ணின் நிறம் கருமை போதாது என மனம் குற்றம் காணக் கூடும். தனக்கு விருப்பிற்கு ஏற்றவிதத்தில் மற்றொரு ஆய்வுகூட குழந்தையைப் பெறவும் அவர்கள் முனையக் கூடும்.

விரும்பியபடியே குழந்தை கிடைத்துவிட்டால் புதிய வடிவில் பிரச்சனைகள் தலை தூக்கும். ஏற்கனவே உள்ள குழந்தைகளுக்கும் இப் புதிய குழந்தைக்கும் இடையே பெற்றோர்கள் சிறிது பாரபட்சம் காட்டுவார்கள் என்பது நிச்சயம். அறிவுள்ள பெற்றோர் அவ்வாறு பாரபட்சம் காட்டக் கூடாது என மனதார எண்ணினாலும் கூட அவர்கள் அறியாமலே அது நுணுக்கமாக செயற்பாடுகள் ஊடாக வெளிப்படும். பாதிக்கப்பட்ட குழந்தையானது தான் வேண்டாத பிள்ளை என உணர நேரும்போது உறவுகளில் சிக்கல்கள் உருவாகும்.
 
சமூக சிந்தனைகள் 
 
நம்முடைய ஊர்களில் சிலதுகள் உலாவுகின்றன. இவர்களை ஏன் அறிணை விகுதியில் குறிப்பிடுகின்றேன் என்றால் இவர்கள் சமூக ஜந்துக்கள். அறிவிலிகள். எப்போது பார்த்தாலும் "ஆம்பிளப்பிள்ளை என்றால் தான் நல்லம்:" "ஆம்பிளப்பிள்ளை தான் தகப்பன்ற தொழிலை முன்னேற்றும்" "எத்தனை பொடியன் என்டாலும் ஒரு பொம்பிள பிள்ள இருந்தாத்தான் வயசுபோன காலத்தில பார்க்கும்" "மூத்தது பொடியன் என்டா தான் பிறகு குடும்பத்தை பார்ப்பான்" "எல்லாம் பெட்டையென்டால் பிறகு கல்யாணம் கட்டி வைக்க பாடுபடனுமே"  "ஐயோ எல்லாம் பொடியன் என்டா வீட்டுவேலையை தனிய தாய் தான் செய்யனும் " "மூன்டாங்கால் பெட்டை வீட்டுக்கு தரித்திரம்" "ஐந்தாவதா பொடியன் பிறந்தா சனி பிடிக்கும் "  என்று பெரிய விஞ்ஞானிகள் மாதிரி கம்புசுற்றிக்கொண்டிருப்பவர்கள். 
 
இன்று பால் , பாலினம், பாலியல் விருப்பு என்று சமூகசிந்தனைகள் எங்கோ முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது இந்த பகுத்தறிவற்றதுகள் இப்படி சொல்வதை என்னவென்று சொல்வது. முதலில் ஆண் குறி, பெண்ணுறுப்புடன் பிறக்கும் குழந்தைகள் வளரும் போது தம்மை ஆணாகவா பெண்ணாகவா உணரப்போகின்றார்கள் என்பதே நமக்குத் தெரியாத போது பிறக்கும் முன்னர் குறிகளை தீர்மானிக்கும் முட்டாள்தனத்தினை என்னவென்பது.
 
என்னைக் கேட்டால் நானும் துணைவரும் முன்னரே எம் குழந்தைகளின் குறியை அறிவதை விட பிறக்கும் போது அறியப்போகும் அந்த திரிலிங் தருணத்திற்காக காத்திருப்போம். கொழுகொழுவென்ற கன்னங்களுடன் சுருள் முடியுடன் சிவப்பாக (என்னைப்போல்.... அவ்..) குட்டியாக மென்மையாக இருக்கப்போகும் அந்த பஞ்சுப்பொதியை தூக்கி கொஞ்சக்காத்திருப்போமே தவிர துணியை விலக்கி குறியை நிச்சயம் பார்த்திடாத மனநிலையை தான் வளர்த்திருப்போம். கதைகளிலும் திரைப்படங்களிலும் நாம் எதிர்பாராத திருப்பங்களை விரும்புகிறோம். ஏன் நிஜ வாழ்வில் மட்டும் அதற்கு இடமில்லை. ஆணா பெண்ணா எனக் காத்திருப்பதில் ஒரு திரில் இருக்கிறது. சுகமும் இருக்கிறது..... 
 
பிறந்த குழந்தைக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைத்து ஒழுக்கத்துடன் பண்புடன் அறிவுடன் (கணக்கு பாடம் நான் தான் படிப்பிப்பேன்) வளர்க்கத்தான் முற்படவேண்டுமே தவிர "நீ வீடு கூட்ட வேண்டும்" "நீ கராத்தே படிக்காமல் பரதம் படிக்கவேண்டும்" "பிங்கலர் சட்டை தான் உனக்கு பொருந்தும்" என்கின்ற சேட்டையெல்லாம் எம் வீட்டில் இருக்காது என உறுதியாக நம்புகின்றேன். (சிங்களப்பொடியன் என்றாலோ வெளிநாட்டுப்பொடியன் என்றாலோ எப்படி தமிழ்ப்பெயர்... என்று நீங்கள் யோசிப்பது புரிகின்றது. அந்த இடத்தில் கலப்பு பெயர் ) 
 
இப்பவே ஒரு ஊசி போடுவதென்றால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் நான் எப்படி பிரசவங்களை கடக்கப்போகின்றேன் என்றே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்... (அதாவது எந்தப்பெண்ணும் யோசிப்பாள் என நினைக்கின்றேன்.)  அப்படியிருக்கும் போது எந்த சமூக ஜந்துவாவது மேற்குறிப்பிட்ட மொக்குக்கேள்விகளை கேட்டால் பனமட்டை அடிதான் சரி 
 
வாரிசு வேண்டும் என்று திருமணம் செய்வது, உடலுறவிற்காக திருமணம் செய்வது, அடுத்த பத்து மாதத்திலேயே டான் என்று குழந்தை பெறுவது எல்லாம் கூட மூடத்தனம் தான். இருவரின் புரிதலின் வெளிப்பாடாக , நிறைந்த தாம்பத்தியத்தின் வெளிப்பாடாக தான் ஒரு கரு என்னுள் வளரவேண்டும் என்று நினைப்பள் நான். என் துணைவரும் அவ்வாறே நினைப்பவராயிருக்க வேண்டும் என்று நினைப்பவள் .  புதிய வரவு எதுவாக இருப்பினும் அது எங்களது, எங்களுக்கே ஆனது, எங்கள் வாரிசு என்பதில் மனம் நிறையவே செய்யும். இதில் ஆண் என்ன பெண் என்ன எங்களது அன்பின் பரிணாமம் அல்லவா குழந்தை....? 
 
இயற்கையுடன் முரண்படாது அதன் தேர்விற்காகக் காத்திருப்பது நல்லதா அல்லது  விஞ்ஞானத்தின் நவீன முன்னகர்வுகளுடன் இணைந்து கொள்வதா?  குழந்தையின் பாலினத் தேர்வில் நீதியின் தராசு எந்தப் பக்கம் சரிய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? “ஆண் குழந்தையா பெண் குழந்தையா?"
 
பிற்குறிப்பு இரண்டாவது படத்தினை போன்று என் கற்பனையில் சுருள்முடி குண்டுக்கன்னங்களுடன் வரைந்த ஓவியத்தினை ஒரு வருடத்திற்கு முன்னர் என் Instagram இல் பதிவேற்றியிருக்கின்றேன். விரும்பினால் எங்கள் வருங்கால குழந்தையின் கற்பனை ஓவியத்தினை பாருங்கள்.  


மாறும் நிறம்


இந்தப்பதிவினை யாழ் - பண்ணை கடற்கரையில் அமர்ந்திருந்து அலைகளை இரசித்தபடி நானும், என் சுருள் முடியை கடற்கரை காற்று கலைத்தபடி இருக்கின்ற இந்த காலைப்பொழுதில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். இன்று மதியம் வரை என் பொழுதினை இங்கு தான் நான் கழிக்க திட்டமிட்டுள்ளேன். கடற்கரையில் அமர்ந்து திட்டமிடுவது என்பது மிகவும் அலாதியானது. பல நாடுகள் பல இடங்களது கடற்கரைகளில் அமர்ந்திருந்தாலும் இங்கு பண்ணை கடற்கரைக்கு வரும் போதெல்லாம் இனந்தெரியாத உணர்வலைகள் என்னை ஆட்கொள்வதை ஒவ்வொரு தடவையும் உணர்ந்திருக்கின்றேன். தற்போதும் உணர்கின்றேன். எங்கேயோ… யாருடனோ… நடந்த மாதிரி அல்லது கதைத்துக்கொண்டிருந்தமாதிரி ஒவ்வொரு தடவையும் உணர்வதுண்டு. போன ஜென்ம தொடர்பேதும் உள்ளதோ தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் இவ்வாறானதொரு நெருங்கிய உறவுடனான நினைவு இந்த பண்ணை கடலுடன் எனக்கில்லை. குடும்பத்துடன் வந்து போயிருக்கின்றோம் அவ்வளவே! நிற்க

இன்று இங்கு வந்திருப்பதும் அமர்ந்திருப்பதும் “ மருதம்” திட்டத்திற்கான முன்னெடுப்புகளுக்காகவே. நேற்று இங்கு மாமியின் வீடு வந்து சேரும் போது இரவு ஒன்பதாகிவிட்டது. குளித்து, கதைத்து, சாப்பிட்டு, மாமி தலையுனாவ அப்பயே நித்திரையாகும் போது பன்னிரெண்டை தாண்டிவிட்டது. அதிகாலையில் கோப்பி போட்டுக்கொண்டிருந்த மாமியை பின்னால் நின்று அணைத்து செல்லம் பொழியும் போது “ ஏன் பிள்ள இப்ப எழும்பினனீர்? கொஞ்சம் படுமனப்பா… அப்படியென்ன அவசரம்…” என்று தான் அன்பாக கடிந்துகொண்டார். நான் கடற்கரைக்கு போகனும் என்றவுடன் மாமாவும் கூட்டிப்போக தயாராகிட்டார். “இல்லை நான் தனியே போகப்போறன். கொஞ்சம் எழுத்து வேலை இருக்கு…” என்று சொல்லி அவரையும் நிறுத்தியாச்சு. “தனியே போய் ஏதாவதென்டால் உம்மட வீட்டாக்கள் எங்கள கேள்வி கேட்பாங்க…” என்று சொல்லி இரு தலைதெறிச்ச பதின்ம வயது மச்சான்களை வரவழைத்து என்னுடன் அனுப்பியிருக்கின்றார்கள். இவர்கள் என்னை பாதுகாக்க வந்தார்களா அல்லது இன்று பாடசாலைக்கு கட் அடிக்க சாட்டுக்கு நான் கிடைத்தேனா என்று எனக்கு புரியவில்லை. மாமி வேறு எனக்கு பிடிக்கும் என்று செய்து வைத்திருந்து முறுக்கு, கறுப்பு எள்ளுருண்டை, காலையில் அவித்த புட்டும் நேற்றைய இரவு நாட்டுக்கோழி குழம்பும் முட்டைப்பொரியலும் பார்சல், பனங்கிழங்கு ஒடியல் என ஒரு மூடையை என்னுடைய சாரதியிடம் எனக்கும் தெரியாமல் கொடுத்து வேறு விட்டிருக்கின்றார். அதனையும் தங்களது பெற்றோர் கொடுத்தனுப்பிய கள்ளத்தீன்களையும் மெல்ல ஆரம்பத்தித்திலிருந்து இந்த பாதுகாவலர்களின் இலட்சணம் எனக்கும் புரிகின்றது. சாப்பாட்டு ராமன்கள் என் மச்சான்கள். எதுவாகினும் அர்ச்சுணனின் இலக்கு மரத்திலிருக்கும் கிளி தானே…! எனவே தனியே தள்ளி வந்து கிறுக்கிக்கொண்டிருக்கின்றேன் நான்.

இன்று மாலை எமது வயல்வெளியில் குறித்த விடுதியமைப்பதற்கான இடம் பார்க்க போவதாக ஏற்பாடு. அதற்காக தான் இந்த முன்னாயர்த்தங்கள். பச்சைப்பசேல் என்ற வயலுக்கு நடுவிலும் கதிரறுக்கும் காலங்களில் கபிலமும் சூழவுள்ள நிலப்பரப்பில் அமைக்கும் கட்டடத்திற்கு என்ன நிறம் கொடுக்கலாம் என்பது முதல் அங்கிருக்கின்ற உயிர்ப்பல்வகைமையை குழப்பாத வகையில் எப்படி எம்முடைய திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறித்து மூளையை கசக்கிக்கொண்டிருக்கின்றேன். வரைபடங்கள் ஓரளவு எம் குழுவினர் இணைந்து தயாரித்துவிட்டோம். ஏனைய தீர்மானங்கள் குறித்து தான் தற்போதைய யோசனை. 

இருந்த இடத்திலிருந்து சற்றுத்தள்ளி நண்டுக்குஞ்சுகள் மறைவதும் மேலேருவதுமாக இருந்தன. இவற்றின் விளையாட்டில் சற்று கவனம் திரும்ப பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பூச்சியும் ஓடி வந்தது. திடீரென நண்டுக்குஞ்சுகளை காணவில்லை. எப்படி மறைந்திருக்கும் என யோசிக்கும் போது வந்த பூச்சினை கவ்விவிட்டது ஒரு நண்டு குஞ்சு! அட இவ்வளவு நேரமும் அதேவிடயத்தில் தான் இருந்திருந்திருக்கின்றது. அப்படியென்றால் நிறம் மாறியிருக்குமா? பச்சோந்தி போன்றவை தானே அவ்வாறு நிறம் மாறும் என்றறிந்திருந்தேன். உடனே இணையத்தினை தட்டினால் இரையை தேடவும் இனப்பெருக்கத்தின் போதும் சிலவகை மாறும் என்கின்றது இணையத்தின் விஞ்ஞானம். 

இறந்த பூச்சிக்காக மனம் பரிதாபப்பட்டாலும் இது எனக்காகத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என தோன்றுகின்றது. எமது திட்டத்திற்கான நிறம் இதிலிருந்து தான் கிடைத்திருக்கின்றது. இயற்கை தான் எத்துணை நுட்பங்களை தன்னுள் ஒளித்து வைத்திருக்கின்றது. சிறிது நேரத்தில் என் மச்சினன்கள் கைநிறைய சிப்பிகளுடன் வந்தார்கள். “மச்சாள் நீங்க மேசையில் வைக்க சிற்பம் செய்றனீங்க தானே, உங்களுக்கு இதுகளை எடுத்து வந்தோம்” என்று என்னருகில் குவித்தார்கள். அடுத்த “நெய்தல்” இற்கான தொனிப்பொருள், வடிவம், நிறம் எல்லாம் என் கண்முன் விரிய ஆரம்பித்துவிட்டது.

 இங்கு தங்குவதற்காக திட்டமிட்டுள்ள நாட்களில் தினமும் இங்கு வந்து வேலை செய்யலாம் என நினைத்திருக்கின்றேன். இதுவரை வாழ்வில் பல தீர்மானங்களில் கடல் பங்கெடுத்திருக்கின்றது.



எடை போடல்

வீட்டில் ஏதாவது பொருட்களை வாங்கிவந்தால் சும்மா கைகளால் தூக்கி பார்த்து அண்ணளவாக இத்தனை கிலோ இருக்கும் என்று எடை போட்டு பார்த்துள்ளீர்களா? அப்படித்தான் மனிதர்களை கூட அவர்களது சிறு சிறு செயல்கள் வைத்து நம்மால் எடை போட முடியும் அல்லவா?

நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பொறளை புனித அந்தோனியார் விடுதியில் தான் தங்கியிருந்தேன். நான் கத்தோலிக்க மதத்தவள் என்பதாலும் கொழும்பில் படிக்கும் பெண்களுக்கு இந்த விடுதி மிகவும் பாதுகாப்பான விடுதி என்பதாலும் அம்மா எம்முடைய பங்குத்தந்தை மூலம் அனுமதி பெற்றிருந்தார். உண்மையில் பாதுகாப்புடன் இங்கு ஒழுக்கமும் நேர அட்டவணையும் ஒழுங்காக பின்பற்றப்பட்டு வந்தமையும் இவ்விடுதியினை பெண்களது குடும்பத்தினர் விரும்பியமைக்கு இன்னொரு காரணம் என நினைக்கின்றேன். எமது விடுதி வளாகத்திலேயே சிறு தேவாலயமும் பாலர் பாடசாலையும் அருட்சகோதரிகளுக்கான மடமும் என பெரியதொரு வளாகம் அது. ஆனால் இப்போது வேண்டுமானாலும் உள்ளே எட்டிப்பாருங்கள் ஓரு குப்பை, வாடிய மரம் எதையும் காணமாட்டீர்கள் அந்தளவு சுத்தம். இதன் பின்னுள்ளது அங்கு தங்கியிருக்கின்ற மாணவிகள், அருட்சகோதரிகள் கடைப்பிடிக்கின்ற தூய்மைப்படுத்தலுக்கான நேர ஒழுங்கு. 

என்னை சேர்ப்பதற்காக வந்த போதே அம்மாவிற்கு இந்த தூய்மை பிடித்துப்போய்விட்டது. என்னை விட்டுவிட்டு வரும் போதும் சொன்னதொருவிடயம் இங்கு உங்களுக்கு படிப்பதற்கு மட்டுமல்ல உங்கள் பண்பை வளர்க்கவும் தளம் கிடைக்கும் என்பது தான். எனக்கென்னால் சட்டியிலிருந்து எம்பிக்குதிக்க அடுப்பில் விழுந்த கதை தான். எற்கனவே எங்கள் வீடு இராணுவ முகாம் போல தான் இயங்கும். லெப்டினன் கேர்ணல் நளினி கடிகார முள் சுணங்கினாலும் நேரவிடயத்தில் சுணங்க மாட்டார். நாலு மணிக்கே நம்மையும் எழுப்பி படிக்க வைத்து தானும் எஸ்.எல்.ஏ.எஸ் எல்லாம் படித்தவர் அவர். குசினியிலும் சமையல் நடக்கும் அதேவேளை அவர் ஐம்புலனில் இரண்டு தசம் ஐந்து அதாவது சரி பாதி எம்முடைய படிப்பில் இருக்கும். இப்படிப்பட்ட ஆளிட்ட வளர்ந்து இனியாவது பல்கலைக்கழகம் போய் தனியறை எடுத்து தனியாகவிருந்து நல்லா விளையாடுவம் என்டு நினைக்க இங்கே இஸ்ரேல் இராணுவம் போன்ற பொறளை புனித அந்தோனியார் விடுதியில் என்னை சேர்த்துவிட்டார் லெப்டினன் கேர்ணல் நளினி. (இதற்கு பரிந்துரை செய்த பங்குத்தந்தையும் வாழ்க) 

காலையில் 4.30 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கும் 5 மணிக்கு திருப்பலி ஆரம்பமாகிவிடும். அதுவும் ஆங்கில திருப்பலி. முன்னுக்கு போய் பைபிள் வாசிப்பதற்கும் ஒழுங்குண்டு. இந்த நாளில் இவர்கள் வாசிக்க வேண்டும் என்கின்ற நேரசூசி பொறுப்பாகவிருந்து அருட்சகோதரியில் வாசலில் தொங்கும். அதன் அடிப்படையில் நாளை நாம் வாசிக்க வேண்டியிருப்பின் முதன் நாளே இரவு அவருக்கு வாசித்துக்காட்ட வேண்டும். திருத்தங்கள் இருந்தால் சொல்லித்தருவார். திருப்பலி முடிய விடுதிக்கு வந்தால் கோப்பி பில்டரில் இருக்கும். 7 மணிக்கு காலையுணவு என்று இரவு படுக்கும் வரை கூட நேர அட்டவணை தான். ஆனால் இதில் எனக்கொன்றும் இவ்வளவு கடினம் இருக்கவில்லை. எல்லாம் லெப்டினன் கேர்ணல் நளினியின் வளர்ப்பு. சோம்பல் பிடிக்கும் நாட்களில் மட்டும் இவர்கள் எல்லாரையும் திட்டிதீர்ப்பதுண்டு. (மனதுக்குள்….. )

விடுதி அருட்சகோதரி திடீரென எமது அறைகளுக்கு விஜயம் செய்வார். வந்தவரத்தில் படுக்கை விரிப்புக்கள் ஒழுங்காகவுள்ளதா என பார்ப்பார். இல்லாட்டி கூப்பிட்டு திட்டி விரிக்க வைப்பார். மற்றது ஹங்கரில் உள்ள உடுப்புக்கள் ஒழுங்காக இல்லாமல் அல்லது நிறைந்திருந்தால் அனைத்தையும் அள்ளி கீழே போடுவார். அடுத்ததாக அலுமாரிகளை திறப்பார். சிலருடையது திறக்கும் போதே கொட்டும். இன்னும் சிலர் அலங்கோலமாக மடிக்காமல் சுருட்டி வைத்திருப்பார்கள். அவற்றினை ஒரே இழுவையில் கீழே இழுத்து போடுவார். என்னடா இது ஒரு அருட்சகோதரி இப்படியா செய்வது என்று எனக்குள் ஆச்சரியமாகவிருந்தது. தினசரி அதிகாலை திருப்பலிக்கு போய்க்கொண்டிருந்த நாலைந்து சிறகு முளைக்காத சம்மனசுகளில் நானும் ஒருத்தி. (இது அந்தகால கதை. இப்போது கொம்பு முளைக்காத சாத்தான்). போதாதற்கு எமது தோட்டத்தில் ஒக்கீட் செடிகளை வளர்த்து பூக்களை பீட அலங்காரங்களிலும் பயன்படுத்தி வந்தேன். எனவே அருட்சகோதரிக்கு என் மேல் தனி பாசம். இவ்வாறானதொரு பாசப்பொழுதில் ஒரு நாள் அவர் நன்றாக மனம்விட்டு கதைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஏன் இப்படி மாணவிகளின் உடைகளை இழுத்து போடுகின்றீர்கள் என்று கேட்டேன். “ அலுமாரி என்பது நம்முடைய உள் மனது போன்றது. மனம் குழப்பமென்றால் தான் அலுமாரியும் குழம்பும். அலுமாரியை சீராக வைத்திருப்பவர்களது மனமும் சுத்தமாகவிருக்கும்.” என்றார். இதை அம்மாவிடம் சொன்ன போது;. “நாம் பதற்றமாக , தெளிவில்லாமல் இருக்கும் போது உடை தெரிவுகளிலும் நிதானமின்றி இருப்போம். எனவே அலுமாரி குப்பையென்றால் மனமும் பதற்றத்தில் நிதானமிழந்து குப்பையாக இருக்கும்” என அம்மா இதனை உளவியல் ரீதியான எனக்கு விளங்கப்படுத்தினார்.

இதேபோன்று தான் வாசலில் செருப்புகளை அங்குமிங்குமாக போடுபவர்கள், காலையில் எழுந்தவுடன் படுக்கை விரிப்பை சீராக்காதவர்கள், மலசல கூடங்களை நேர்த்தியாக வைத்திருக்காதவர்கள் குறித்தும் உளவியல் இருப்பதாக சொன்னார். உண்மை தான் போல! இதனை இன்று சமூக ஊடகங்களும் எமக்கு காட்டுகின்றன. அல்லது ஒருவரை குறித்து எடைபோட வைக்க உதவுகின்றன. அண்மைய நிகழ்வான “சுடுவன் நாயே” உம் இதே வகை தான். 

ஒரு சகோதரி தனக்கு வந்த உள்பெட்டி உரையாடலை என்னுடன் பகிர்ந்திருந்தார். இன்று அநேகர் முகநூலை தம்முடைய துணையை தேர்வதற்கான தளமாக பாவிக்கின்றார்கள். அதிலொரு வகை தான் இதுவும். முதலில் முகநூல் பதிவுகளையும் அதற்கு கருத்தூட்டம் இடுபவர்களையும், விவாதிப்பவர்களையும் ஆராயுங்கள். இது குறித்த நபரின் சுற்றம் குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்தும். 

அடுத்தது உங்களை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்க நினைப்பவர்கள் உங்களுடனான உறவை வெளிப்படையாக வெளிப்படுத்த முயல்வார்கள். உள்பெட்டியில் மட்டும் வந்து அலட்ட மாட்டார்கள். இன்னுமொன்று முக்கியமானது ஒருவர் சமூகத்தில் நேர்மையானவராகவிருந்தால் தன்னுடைய குடும்பத்தினை சமூகத்தில் அறிமுகம் செய்திருப்பார். அதற்காக அடிக்கடி படம் போட்டு, வாழ்த்து சொல்லி அலட்ட வேண்டும் என்பதுமில்லை. சிலர் தாம் பெரிய ஆள் என்றும் அதனால் குடும்பம் குறித்து பகிர்ந்தால் பிரச்சினை வருமென்றும் அலட்டிக்கொள்வார்கள். உண்மையில் அழுத்தம் இருந்தாலும் நாம் நேர்மையாகவிருந்தால் நம் குடும்ப படத்தினை வைத்து யார் என்ன செய்திட முடியும்? நேர்மைக்கு எப்போதும் தைரியம் இருக்கும். 

இது அனைத்தையும் தாண்டி நம்மை உண்மையில் நேசிப்பவர்களாயிருந்தால் நாம் அவர்களை விட்டு விலகும் போது நம்மை தேடி நெருங்க முயல்வார்கள். நீங்கள் நூற்றில் ஒன்று என்றால் உங்கள் இருப்பு அல்லது இழப்பு அவரை பாதிக்கப்போவதில்லை. கானல் நீரை நம்பி ஓடிப்போகாமல் நின்று நிதானமாக அவர்கள் செய்கைகள், சமூக ஊடக பகிர்வுகள் என்பனவற்றினை வைத்து ஒருவரை எடைபோடப் பழகுங்கள். நம்மை மனமாற நேசிப்பவர்கள், நம்முடன் வாழ விரும்புவர்கள் முக்கியமாக இருவருக்கிடையான அந்தரங்கங்களை மூன்றாம் நபருடன் பகிரமாட்டார்கள். அப்படியே பகிர்ந்தாலும் முதிர்ச்சியானவர்கள், நேர்மையானவர்கள் மூலம் நம்மை அணுகமுயற்சிப்பார்கள். நாம் எடைபோடுவது நூற்றுக்கு நூறு சரியாகவில்லாவிட்டாலும் நூறு வீதமுமே பிழையாகாது. 

எனக்கு ஒருவரை பிடித்துப்போனால் அன்பை புரியவைக்க முயற்சிப்பேன். அவர் குடும்பத்தை தெரிந்துகொள்ள முயல்வேன். பிடித்திருந்து அவரும் அன்பை எனக்கு உணர்த்திவிட்டால் முதலில் என் வீட்டில் அறிமுகஞ்செய்வேன். என் தெரிவு குடும்பத்திற்கும் பிடிக்கும் அல்லது போக போக பிடிக்க வைப்பேன். அடுத்த கட்டமாக நண்பர்களை அறிமுகஞ்செய்வேன். எனக்கான பொறுப்புங்கள், அல்லது எம்மிருவருக்கும் எதிர்காலம் குறித்து உள்ள பொறுப்புக்களை உணர்த்த முயல்வேன். எந்தளவு என் துணையிடம் நேர்மையை எதிர்பார்க்கின்றேனோ அதேயளவு நேர்மையாகவும் நடக்க முயற்சிப்பேன். எனவே நான் நினைப்பதை போன்று நீங்களும் நினைத்தால் ஒருவரை எடைபோட்ட பின் பழகுங்கள். பழகிய பின் எடைபோடாதீர்கள். ஏனென்றால் இப்படி செய்தால் நீங்கள் உங்கள் மரியாதையில் எடை குறைந்திருப்பீர்கள். 

அதற்காக எடைபோடுவதை ஒருவரது தோற்றம் , உடை என வெளியலங்காரங்களை வைத்தும் எடை போட்டுவிடாதீர்கள். சில நேரம் சிலர் வெறும் செருப்புடன் நிறமிழந்த உடையுடன் சுற்றுவதால் அவர்கள் ஏழ்மையானவர்கள் என்று அர்த்தமல்ல. நிறையவிருந்தும் எளிமையாகவிருப்பவர்களாகவிருக்கலாம். அமைதியாக இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது என எடை போடாதீர்கள் நிறைகுடங்கள் தளும்புவதில்லை. ஒருவர் முகப்பூச்சின்றி இருக்கின்றார் என்றால் அவர் அசிங்கம் என்றல்ல அர்த்தம். பல சந்தர்ப்பங்களில் மனதில் சிறந்த அழகுள்ளவர்களாகவிருக்கலாம். நம் முன்னால் அழுதால், கண்கலங்கினால் பலவீனமானவர்கள் என்று எடைபோடாதீர்கள். அழுகை உடைதலின் அடையாளமே தவிர கோழைத்தனமல்ல. மனதை எடைபோட, பண்புகளை எடை போட , ஒருவரின் நேர்மையை எடைபோட பழகுங்கள். ஒருவரின் குடும்பத்தை ,நண்பர்களை ,சுற்றத்தை எடைபோட பழகுங்கள் வாழ்க்கை அழகாகும் 


மரணம்

நான் முதல் SFCG இல் இணைப்பாளராக பணியாற்றிய காலத்தில் எமது திட்டத்தில் மதிப்பீட்டு அலுவலகராக பணியாற்றிய நானா ஒருவர் இருந்தார். மிகவும் மென்மையானவர். எமது திட்டம் இளம்பெண்களுடனானது. இந்த பிள்ளைகளையும் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அனுகிய ஒருவர் அவர். ஏறத்தாழ என் தந்தை வயது அவருக்கு. மூன்று பெண் பிள்ளைகள். எப்போதும் தன் பிள்ளைகள் பற்றியும் அவர்களது படிப்பு பற்றியும் பேசுவார். எமக்குள் அலுவலக விடயம் தவிர்ந்தும் உரையாடல்கள் நிகழ்வதுண்டு. குறிப்பாக எமது கால்நடை வளர்ப்பு பண்ணை குறித்து அடிக்கடி கேட்பார். பண்ணை தொழில், சவால்கள், பொருளாதார விடயங்கள் குறித்து நிறைய பேசுவார். தனக்கும் எதிர்காலத்தில் இது குறித்த எண்ணம் இருப்பதாக சொல்வதுண்டு. இவரது மூத்த பெண் மருத்துவ துறைக்கு தெரிவாகி இரண்டாம் வருடத்தில் படித்துக்கொண்டிருந்தார். கடந்த வாரம் இரு தினங்கள் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஊடக அறிக்கையிடலுக்காக என்னை அழைத்திருந்தார். நானும் சென்று வந்திருந்தேன். அப்போது தன்னுடைய இரண்டாவது பெண் மொறட்டுவ பொறியியல் பரிவிற்கு தேர்வாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். பல்கலைக்கழக விடயங்கள் குறித்தும் பேசிக்கொண்டோம். 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சக ஊழியர் ஒருவர் தொடர்புகொண்டு இவரின் மூத்த மகள் திடீரென இறந்துவிட்டதாகவும் கொழும்பிலிருந்து சடலம் மட்டக்களப்பிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. அதிகாலை சடலம் கொண்டுவரப்பட்டதால் என்னால் செல்ல முடியவில்லை. அன்றைய தினம் மிகவும் முக்கியமான கலந்துரையாடலும் தூதுவராலயத்தில் இருந்திருந்தது. இதனையும் மாற்ற முடிந்திருக்கவில்லை. எனவே நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  நான்கு நாட்களுக்கு முன்னர் சந்தித்திருந்தவருக்கும் நான் நேற்று சந்தித்தவருக்குமிடையில் நிறைய மாற்றங்கள். இழப்பென்பது இலகுவானதற்றதல்லவா? அவர்களது முறைப்படி பெண்கள் உள்சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவியை அழைத்து எம்மையும் உள்ளனுப்பி வைத்தார். அவரிடம் விசாரித்த மட்டில் இறந்த அன்று தான் அந்த பெண்ணின் பிறந்த நாளும் கூட. 12 மணிவரை வாழ்த்திவிட்டு தான் உறங்க சென்றிருக்கின்றார்கள். மீண்டும் அதிகாலை தொழுகைக்காக இந்த பெண் எழுந்திருக்கின்றார். தொழுகையை முடித்த பின்னர் பரீட்சைக்காக படிக்க ஆரம்பித்த போது தான் வலது பக்க தோளில் நோவினை உணர்ந்திருக்கின்றார். தாயை எழுப்பி “உம்மா வலிக்கின்றது” என்று சொல்லியிருக்கின்றார்கள். தாயும் தடவும் போது மகளின் தலை சாய்வதை உணர்ந்து கணவரை எழுப்பி சொல்லியிருக்கின்றார். அவரும் தெரிந்த வைத்தியருக்கு அழைப்பெடுத்து சொல்லியிருக்கின்றார். முதலுதவியை செய்த படியே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கும் ஆரம்பகட்ட சிகிச்சையை தொடங்கும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டது. வெறும் 40 நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டதாக தாய் சொல்லியழுதார். விடைபெறும் போது என் சக ஊழியரை மீண்டும் சந்திக்க கிடைத்தது. என்ன ஆறுதல் சொல்வது என புரியவில்லை. எனக்கே கேள்விப்பட்டதில் இருந்து இவ்வளவு வலி என்றால் அவர்களுக்கு எவ்வாறிருக்கும்? அதுவும் புத்திஜீவியானதொரு மகளை இழந்திருக்கின்றார்கள். எவ்வளவு கனவுகளை சுமந்திருப்பார்கள்? இவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லிட முடியும். காலத்திற்கு மட்டுமே இவர்கள் வலியை குறைக்கும் சக்தியிருக்கின்றது. 

இரு வாரங்களுக்கு முன்னர் நான் வேறொரு நாட்டில் நிகழ்விற்காக சென்றிருந்த போது அழைப்பெடுத்த வீட்டவர்கள் எம்முடைய தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணொருவரின் கணவர் இறந்துவிட்டதாக சொல்லியிருந்தார்கள். அங்கிருந்து உடனே வரமுடியாத நிலையில் அழைப்பெடுத்த மட்டும் பேசியிருந்தேன். உதவியாளரிடம் அவர்களுக்கான உதவிகளையும் அடக்க ஒழுங்குகளையும் கவனிக்கும் படியும் கூறியிருந்தேன். இந்த கணவனை இழந்த அம்மா எம்மிடம் வந்ததே தனிக்கதை. இரு வருடங்களுக்கு முன்னர் நாம் குடும்பமாக சுற்றுலா சென்றிருந்த போது இந்த அம்மா தூரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். நானும் தம்பியும் அருகில் போய் பேசிய போது குடும்ப பிரச்சினை என்று மட்டும் சொல்லிவிட்டார். நாமும் அவர் பகிர விரும்பவில்லை என்றால் வற்புறுத்த முடியாது என்று திரும்பிவிட்டோம். வீடு வந்த பின்னும் இருவருக்கும் இது குறித்து ஒருவித பதற்றம் இருந்திருந்தது. எனவே மீண்டும் நாமிருவர் மட்டும் பைக்கில் சென்ற போது அந்த அம்மா தற்கொலை செய்வதற்கு தயாராக நின்றிருந்தார். அவரை இழுத்த வந்து கதைத்து வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டோம். தனக்கு விட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்ததில் நான்கு பி;ள்ளைகள் என்றும் தற்போது கணவருக்கு வேறொருவருடன் தொடர்பென்றும் குடிப்பழக்கமும் சேர்ந்திருக்கின்றது என்றும் இதனால் வீட்டில் சாப்பிடுவதற்கு கூட வறுமை என்று அழுதார். நீங்கள் இறந்துவிட்டால் அந்தக்குழந்தைகள் என்னாவார்கள் என்றெல்லாம் சமாதானப்படுத்தி அவருக்கும் வேலை கொடுத்திருந்தோம். பண்ணை வீட்டிற்கும் குடும்பத்துடன் வந்துவிட்டார். மூத்த இரு பிள்ளைகளையும் விடுதியில் சேர்த்துவிட்டிருந்தோம். இளையவர்கள் இருவரும் சிறுவயதாகையால் தாயுடன் இருந்தார்கள். மூன்று மாதங்களின் பின்னர் பண்ணை வீட்டை கண்டுபிடித்து வந்து விட்டார் அந்த குடிகார கணவர். வந்து சண்டை போட்டு சென்றவர் விபத்தாகி காலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தம்மா தான் அவரை பொறுப்பெடுத்துக்கொண்டார். கணவனின் வருமானத்தித்தை உறிஞ்சிக்கொண்ட அவர் தொடர்பு வைத்திருந்த பெண் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்த்திருக்கவில்லை. இதன் பின்னரான கடந்த ஒன்றரை வருட காலம் படுக்கையிலிருந்த கணவரையும் பிள்ளைகளையும் பராமரித்தது அந்த அம்மா தான். 

நாடு திரும்பியதும் அவரை சந்திக்க சென்றிருந்தேன். இழப்பு குறித்து விசாரிக்கும் போது புன்னகைத்தபடி தான் இப்போது தான் நிம்மதியாகவிருப்பதாக கூறினார். எனக்குள் பெருத்த ஆச்சர்யம். ஏன் அம்மா நீங்கள் தானே வலிய அவரை பொறுப்பெடுத்து பார்த்தீர்கள் என்று கேட்டேன்.  “நான் அவரை விரும்பி கட்டியதால் என் குடும்பத்தினை இழந்தேன். பிறகு பணம், பிறகு இவரது குடியால் பிள்ளைகளும் நானும் நிம்மதியை இழந்திருந்தோம். ஆனாலும் நான் அவரை நேசித்திருந்தேன். படுக்கையிலிருந்த காலத்திலும் சந்தேகம், கடுமையான வார்த்தையாடல்கள், கால் இயலாமையுடனும் கூட சிகரெட்டினால் வைத்த சூடுகள் எல்லாம் அனுபவித்துவிட்டேன். அவர் இறந்தது அப்படியொன்றும் வலிக்கவில்லை. இனியாவது என் பிள்ளைகள் நிம்மதியாக படிப்பார்கள். நானும் அவரை விரும்பி திருமணம் செய்த கடமைக்காக அவரை என்னால் முடிந்தளவு கவனித்து பார்த்தேன். கடமையை முடித்துவிட்டேன் இப்போது நிம்மதியாகவுள்ளது என்றார். இந்த விளக்கத்தை கேட்டதிலிருந்து ஏன் இந்தக்கணவர் முதலே இறந்திருக்க கூடாது என்றிருந்தது. 

மரணம் என்பதும் மழை போன்றது என்று தோன்றுகின்றது. வரண்ட நிலத்தில் பெய்யும் மழையும் நெல் முற்றியிருக்கும் போது பெய்யும் மழையும் ஒன்று தான். ஆனால் கால, நேரம் தவறி பெய்யும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது. அவ்வாறே மரணமும் அது நிகழும் களத்தினை பொறுத்தே வலி தீர்மானிக்கப்படுகின்றது. அல்லது இறந்தவர் வாழ்ந்த நாட்களே சுற்றியிருப்பவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தி போகின்றது


நீதிக்கதை !

என்னுடைய அம்மப்பா ஊடகவியலாளராக பணியாற்றிய காலங்களில் அவருடைய உற்ற நண்பனாக  இன்னுமொரு ஊடகவியலாளரும் இருந்தார். பால்ய காலத்தில் இவர்கள் நட்பு ஆரம்பித்தாக அடிக்கடி கூறிக்கொள்வார்கள். இந்த நட்பு பின்னர் அரசியல் கொள்கைகள் மாற்றடைந்ததன் பின்னர் சற்று ஆட்டம் கண்டிருந்தாலும் இவர்களால் உருவாகியிருந்த குடும்ப நட்பு இவர்கள் இறந்த பின்னரும் கூட தொடந்துகொண்டுதானிருந்தது. இதன் நீட்சியாக மூன்றாவது தலைமுறையானவர்களான நாமும் நண்பர்களாயிருந்தோம். இதற்கு இன்னுமொரு காரணம் நாங்களும் இதே துறையில் பயணித்தமை என்றும் சொல்லலாம். அம்மப்பாவின் பேரனும் முன்னாள் பத்திரிகையாசிரியர், ஓவியனும் கூட. எம் வீட்டிலும் ஏனையவர்கள் பேனையையும் அதற்கான விலையையும் அறிந்ததாலோ அல்லது வேறு துறைகளில் மூழ்கிப்போனதாலேயோ பேனையை இறுகப்பற்றிக்கொள்ளவில்லை. சிறுவதிலிருந்தே அதனை பற்றிக்கொண்டவள் நான் தான். இதனால் நண்பரின் பேரனும் நானும் நல்ல நண்பர்களாயிருந்தோம். நண்பர்களாயிருந்தோம் என்றாலும்  இருவருக்குமிடையில் பத்துவயது வித்தியாசம். நானும் வகுப்பேற்றங்களுடன் கற்றவள் என்பதால் என்னுடைய சம வயதினரையும் விட என்னை விடவும் வயதானவர்களே பெரும்பாலும் நண்பர்களாயிருந்ததுண்டு. எனவே இந்த நட்பு வயது தாண்டியும் பயணித்திருந்து.

அவர்கள் குடும்பமும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து என்  மண்ணில்  (இது மட்டக்களப்பா? யாழா என்று குழம்ப வேண்டாம்.; இரண்டும் என் மண் தான். இவ்விடத்தில் மட்டக்களப்பு)  குடியேறியிருந்தமையால் தலைமுறை தாண்டிய எம் நட்பும் மிகவும் ஆழமாயிருந்தது. அந்த நாட்களில் நான் வானொலி நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டும், எம்மால் நடாத்தப்பட்ட பத்திரிகையின் உப ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கட்டுரைகளுக்கான உதவிகள், தேவைப்படும் நேர்காணல்களை பெறுவதற்கான இலக்கங்களை பெறுவது என்பனவற்றிற்கு என்னுடைய இந்த நண்பர் தான் உதவிக்கொண்டிருந்தார். எம்முடைய வீடுகளும் சற்றுத்தூரங்களில் இருந்ததால் அடிக்கடி இருவரும் சந்தித்கொள்வதுமுண்டு. அப்போது நான் பல்கலைக்கு தெரிவாகி கொழும்பிற்கு போகவேண்டி வந்த போதும் கூட எனக்கான பொருட்களை அல்லது மீன்பொரியல், பலகாரங்களை மட்டக்களப்பிலிருந்து அனுப்பி வைப்பதற்கு அம்மா இவரிடம் தான் கொடுத்து விடுவதுண்டு. எனவே என்னுடைய விடுதி நண்பிகள், ஊடக நண்பர்களுக்கு நம்மிருவரின் நட்பு குறித்தும் நன்றாக தெரியும். 

இப்படியானதொரு நாட்களில் தான் பல்கலை விரிவுரையில் இருக்கும் போது திடீரென ஒரு புது இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்புக்கள் பலமுறை வந்திருந்தன. இடைவெளி இன்றி தொடர்ச்சியாக அந்த இலக்கத்திற்குரியவர் அழைத்ததால் எரிச்சலாகி விரிவுரையாளருக்கு தெரியாமல் இரகசிய குரலில் பின்னர் அழைப்பதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டேன். அதன் பின்னர் நானும் இதனை மறந்துவிட்டேன். மீண்டும் சில நாட்களின் பின்னர் இதே இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தக்கதைத்த போது என்னுடைய மேற்குறிப்பிட்ட நண்பன் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண்ணொருவர் அழுதார். தொடர்ச்சியான சில உரையாடல்களில் இருவரும் பத்திரிகையில் பணியாற்றி வந்ததாகவும் அதன் போது இந்தப்பெண்ணை நண்பர் பல வருடங்களாக காதலித்து வந்தாகவும் (அப்படி தான் அந்த பெண் சொன்னார்) தமக்குள் உடலியல் ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும் இதன் நிமிர்த்தம் தான் பல தடவை கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் தற்போது தன்னுடனான தொடர்பை துண்டிக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தன்னுடன் அவரை சேர்த்து வைக்கும் படியும் அழுதார். 

இந்த காலகட்டத்தில் நான் உப ஆசிரியராக இருந்தமையால் இப்படியான பல பாதிக்கப்பட்ட பெண்கள் என்னை தொடர்புகொள்வதுண்டு. பல இடங்களில் சட்டரீதியான நடவடிக்கை வரை கூட இப்பெண்களுடன் சென்றிருக்கின்றேன். ஆனால் இதில் பாதிப்புக்குட்படுத்தியவர் யாரோ முகம்தெரியாத நபராயிருப்பதுண்டு. ஆனால் இங்கு என் நண்பர். இந்த விடயத்தில் தலையிட்டால் எம் குடும்ப நட்பிலும் விரிசல் வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. போதாதற்கு அவர்கள் வீட்டிலும் சில பொருளாதார பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். ஆனாலும் இதற்காகவெல்லாம் தட்டிக்கேட்காமல் இருக்க முடியுமா என்ன?

நண்பனுக்கு அழைப்பெடுத்து நடந்ததை சொல்லி கேட்டேன். அந்தப்பெண் தன்னுடன் பணிபுரிந்தது உண்மை ஆனால் மீதியெல்லாம் பொய் என்று விட்டார். மீண்டும் அந்தப்பெண்ணிடம் நண்பர் சொன்னதை சொன்னேன். நேரில் வந்தால் புகைப்பட ஆதாரங்கள் தருவதாக சொன்னார். இந்த காலப்பகுதியில் எங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் அரசியல் அழுத்தங்களும் இருந்திருந்தன. இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்கலையிலிருந்து வரும் போது இனந்தெரியாத ஒருவர் பேரூந்தில் என்னுடைய தலையை கம்பியில் மோதி மண்டை உடைந்து எட்டுத் தையல்களுடன் தப்பித்திருந்தேன். எனவே அந்தப்பெண் கூறியதை நண்பனிடம் சொல்லி என்னுடைய வருமாறு கேட்ட போது “உம்மை தாக்குவதற்கு அல்லது பணம் பறிப்பதற்கு இது திட்டமிடப்படுகின்றது. கவனம். என்னால் வரமுடியாது. ஏதாவது நடந்தால் உங்கள் வீட்டாக்கள் என்னை கொன்றுவிடுவார்கள். இவ்வளவு கால பழக்கம். அவ்வளவிற்கு என்னில் நம்பிக்கையில்லையா?” என்று கேட்டார். 

விடுதியில் நிதானமாக அமர்ந்து யோசித்த போது அவர் சொன்னதும் சரியெனப்பட்டது. ஒரு சிலநேரங்களில் என் தமையனாரிடம் சொல்வோமா என்றுமிருந்தது. ஆனால் இது பொய் என்றால் என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. அதேவேளை படிக்கும் போது இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டால் அம்மா எப்படி என்னை திட்டுவார், சத்தியம் வாங்குவார் என்றும் எனக்குத் தெரிந்திருந்தது. இரண்டிற்கும் நடுவில் நான் குழும்பிய நாட்கள் அவை. ஆனாலும் கடந்து போக என் போராட்ட புத்தி விடவில்லை. எனவே நண்பனை நேரில் சந்திக்க தீர்மானித்தேன். 

சிலநேரங்களில் ஆதாரங்கள் தீர்மானிக்க முடியாததை அல்லது அனுமானிக்க முடியாததை கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். எந்த உயிரினத்தினாலும் தவிர்க்க முடியாதது இந்த பார்வை தான். எந்தப்பெரிய கள்ளனாலும் சரி,துரோகியென்டாலும் சரி, பொறுக்கியெண்டாலும் சரி தீர்பிடுவது கண்கள் தான். ஆனால் ஆதாரமற்ற உறுதியான தீர்வு அது. எனவே கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் நண்பனை சந்தித்து கேள்விகளை கேட்டேன். ஏறத்தாழ ஒரு மணிநேரம் கதைத்திருந்தேன். அந்த ஒரு மணிநேர கலந்துரையாடலில் அவன் பார்வை ஒருதடவை கூட என் கண்களை சந்தித்திருக்கவில்லை. எனவே என் உள்ளுணர்வு கள்ளத்தனத்தினை எடைபோட்டுவிட்டது. 

எனவே அம்மாவிடம் விடயத்தினை சொல்லிவிட்டேன். அம்மாவும் இவ்வாறான பெண்கள் விடயம் என்றால் நிச்சயம் தீர்ப்பிட சுணங்க மாட்டார். எனவே இருவரும் நண்பரின் வீட்டிற்கு போனோம்.; அம்மாவின் நண்பியும் நண்பரின் தாயுமானவரிடம் பேசினோம். சொன்னதை கேட்டபின் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அந்தப்பிள்ளை எந்தவிடம்? என்பது தான். மலையகப்பெண் என்றேன். நாங்கள் யாழ்ப்பாண ஆட்கள் அங்கு எப்படி பெண் எடுப்பது? என்றார். பெண் தானான கேட்பது வேண்டுமாயின் தவிர்க்கலாம் ஆனால் இங்கு உங்கள் மகன் ஏமாற்றியிருக்கின்றார். அந்தப்பெண்ணை விரும்பும் போது இதுவெல்லாம் தெரியாதா ? என்று கேட்டேன். இப்படித்தான் எங்கட பெடியன்களை அவர்கள் தங்கட பக்கம் எடுக்க நாடகமாடுவாள்கள் என்று விட்டார். நண்பனுக்கு ஒரு தங்கை. அப்போது மருத்துவருக்கு படித்துக்கொணடிருந்தார். அவரும் “அந்தப்பிள்ளை கல்யாணத்திற்கு முன் ரூமுக்கு போயிருக்கு என்கிறாள் எப்படிப்பட்ட பிள்ளை அது” என்று தன் அண்ணனை நியாயப்படுத்த தொடங்கிவிட்டார். என் அம்மா அதன் பின்னர் என்னை பேசவிடவில்லை. அங்கிருந்து வெளிக்கிட்டு வீடு வந்துவிட்டோம். அம்மா நிதானமாக “ அவன் அந்தப்பிள்ளையை ஏமாற்றிவிட்டான். அவன் வீடும் நியாயத்தினை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. பொடியன் கம்பீரமாக அந்தப்பிள்ளையை தான் கட்டுவேன் என்றாலோ அல்லது அவன் செய்தது பிழை அந்தப்பிள்ளையுடன் பேசுவோம் என்று குடும்பம் சொல்லியிருந்தாலோ நாமும் சேர்ந்து போராடலாம். இங்கு கதையே வேறு. அந்தப்பிள்ளை இவனை கட்டினாலும் நிம்மதியாகவிருக்காது” என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து நாம் அவர்கள் வீட்டிற்கு போவதனையும் குறைத்துக்கொண்டோம். அவர்களும் எம்மை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.

நான் திண்டாடிப்போனேன். வாழ்க்கை என்பது வழக்கின் தீர்ப்பை போன்றதல்ல. இருவர் சேர்ந்து வாழ்வதற்கு மனதில் அன்பிருக்க வேண்டுமல்லவா? தன் பிழையை ஒருவன் உணரவேண்டுமல்லவா? ஆனால் இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களும் அந்தப்பெண்ணை நன்றாக முடுக்கிவிட்டார்கள். நான் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையில் போராடிய காலப்பகுதியை தவறாக தீர்ப்பிட ஆரம்பித்தார்கள். நண்பனை பூசிமெழுக நான் முயல்கின்றேன். ஒருவேளை நான் தான் அவனை திருமணம் செய்யவுள்ளேன் என்றும் எண்ணியிருந்தார்கள். இதனை அந்தப்பெண்ணும் என்னிடம் கேட்டுவிட்டார். எனக்குள் இருந்த போராட்டம், அந்தப்பெண் பேசிய அவதூறு எல்லாம் சேர்த்து படுபயங்கரமாக திட்டிவிட்டு அழைப்பை நிறுத்திவிட்டேன். சில நாட்களில் சாந்தமாகி அந்தப்பிள்ளையில் புள்ளியில் என்னை வைத்து யோசித்து பார்க்கும் போது அவள் வலி புரிந்தது. ஆனால் தன் வலியை தீர்ப்பதற்காக இன்னுமொரு பெண் மீது சேறுபூசியதை என்னால் தாங்க இயலவில்லை. என்றாலும் குறைந்த பட்சமாக நண்பனிடம் பேசுவோம் என்று மீண்டும் பேசினேன். எமது குடும்ப சாமி மீது சத்தியம் பண்ணும் படி கேட்டேன். தயக்கமின்றி பண்ணிவிட்டார். இதற்கு மேல் இரு தரப்பிடமும் பேசுவது என் மீது பழிவிழ வைக்கும் என்று பயப்பட ஆரம்பித்து அத்துடன் இது போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்துவது என் உயர்வுகளை தடுக்கும் என நினைத்து விலகிவிட்டேன். ஆனால் அப்பப்போ என் மனச்சாட்சி என்னை சுடாமலுமில்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமான முயற்சி எடுத்திருக்கலாமோ என்று அவ்வப்போது நான் என்னையே நொந்துகொள்வதுமுண்டு. 

இதற்கு பின்னர் மூன்று வருடங்கள் கழித்து ஊடகவியல் பயிற்சிப்பட்டறையில் அந்தப்பெண்ணை முதன்முறை நேரில் சந்தித்தேன். என்னுடன் பெரிதாக முகங்கொடுத்து பேசவில்லை. ஆனால் என் நண்பியிடம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சொல்லியிருந்ததை கேள்விப்பட்டேன். மனதில் ஒருவித நிம்மதியும் படர்ந்திருந்தது. இந்தப்பக்கம் மூன்று தலைமுறை நட்பு விலகிப்போயிருந்தது. பொதுவெளியில் கண்டால் மட்டும் வெளிப்புன்னகையுடன் பேசிக்கொண்டோம். இதற்கிடையில் நண்பனின் தங்கையை என்னுடைய தமையனாருக்கு திருமணம் பேச முயற்சியும் நடந்தது. என்னுடைய தாயார் மறுத்தே விட்டார். நேர்மையற்ற குடும்பத்தில் பெண்ணெடுத்தால் அது தலைமுறை அழிக்கும் என்று பேச வந்தவர்களுக்கும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இவ்வாறு அம்மா சொன்னதற்காகவே அவசரமாக பெரிய இடத்தில் மாப்பிளை எடுத்து திருமணம் செய்வித்தும் அனுப்பிவிட்டார்கள். எமக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. அம்மா மட்டும் ஒப்புக்காக போய் வந்தார்.

இது நடந்து சில வருடங்களின் பின்னர் நண்பரின் திருமண புகைப்படம் முகநூலில் பகிரப்பட்ட போது பார்க்க கிடைத்திருந்தது. இக்காலப்பகுதியில் நான் இலங்கையில் இல்லை. வீட்டவர்களும் இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்திருந்தார்கள். எனவே அவர்களும் அழைத்திருக்கவில்லை. அல்லது எம்மை தவிர்த்திருந்தார்கள். இதற்கிடையில் நண்பனின் அம்மப்பாவின் இழப்பிற்கு குடும்பமாக போய் வந்தோம். நண்பன் தன்னுடைய துணையை எமக்கு இதன் போது அறிமுகம் செய்தார். பெண் இந்நாரின் மகள், …… ஆக இருக்கின்றார் என்றெல்லாம் புளுகாகவும் நக்கலாகவும் சொல்லியிருந்தார். வீட்டிற்கு வந்த பின்னர் எப்படி இவர்களால் இப்படியிருக்க முடிகின்றது என்று எமக்குள் பேசிக்கொண்டோம். ஆனால் அம்மா மட்டும் இன்னும் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. கடவுள் கணக்கு தப்பாது என்று விட்டார். நாமும் அப்படியெல்லாம் கடவுள் இருக்கின்றாரா என்று நாத்திக கேள்விகளையும் கேட்டிருந்தோம்.

நேற்று மட்டக்களப்பில் பட்டத்திருவிழா. வீட்டிலுள்ள குஞ்சான்களை கூட்டிப்போக திட்டமிட்டிருந்திருந்தோம். இடையில் கடையில் பொருட்கள் வாங்க இறங்கியிருந்தேன். கடைக்குள் என்னைக்கண்டு ஒரு உருவம் ஒளிப்பது போன்றிருந்தது. சும்மா நின்றிருந்தால் கூட கண்டுகொண்டிருக்க மாட்டேன் ஆனால் திடீரென தவிர்க்க முயன்றது தான் அவரைக் காட்டிக்கொடுத்தது. என் நண்பன். நன்றாக மெலிந்து தாடியுடன் கையில் சிகரெட். பார்க்கவே சகிக்கவில்லை. இனி கண்ட பின் முகந்திருப்புவது நாகரீகமில்லை என்று புன்னகைத்தேன். அவரே வலிய வந்து பேச தொடங்கினார். 

எப்படியிருக்கின்றீர்கள் என்று கேட்டேன். “ இப்போது விரிவுரையாளராக இருக்கின்றேன் என்றார். என்னது விரிவுரையாளர் இப்படி கோலமாகிவிட்டார் என்று கேட்டேன் நான். கடைக்கு வெளியில் நடந்துகொண்டே கொஞ்சம் வெளியே வாரும் என்றார். போனேன் “ என்ட வைப் என்னை விட்டுப்போய்விட்டா. வேறு ஒருவருடன் தொடர்பிருந்திருக்கின்றது. எனக்குத் தெரிந்து சண்டை போட்டேன். விவாகரத்தாகி விட்டது. பிள்ளையும் அவளிடம். இப்ப அண்மையில் வேறொருவரை திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டாள். தங்கச்சிக்கும் விவாகரத்தாகிவிட்டது. அந்தப்பொடியனுக்கு பலருடன் தொடர்பாம். அம்மாவும் நடக்க முடியாமல் வீட்டில் தான். நான் தான் அம்மாவை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இப்போது கடையில் தான் மூன்று வேளை சாப்பாடும்.  தங்கச்சியும் வேறொருவருடன் இருந்த புகைப்படங்கள் முகநூலில் வந்து எங்கட மானமே போய்விட்டது. சாகலாம் போலிருக்கின்றது ” என்றார். உண்மையில் இவ்வளவு நடந்திருந்தது எனக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் கோலம், சொன்ன விடயங்கள் கவலையாகவும் பரிதாபத்தினையும் ஒருங்கே தந்திருந்தது. அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்றும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. நல்ல காலம் சின்னன்கள் என்னை கூப்பிட தொடங்கிவிட்டார்கள். எனவே இதனை சாக்காக வைத்து விடைபெற்றுவிட்டேன். 

தீர்ப்புக்கள் பிந்தலாம் ஆனால் கிடைக்காமல் போவதில்லை. பெண் பாவம் எப்போதும் பொல்லாதது. நாம் சில நேரங்கள் ஆதாரங்கள் இல்லாத போது சத்தியத்திலிருந்து தப்பிவிட்டதாக நினைக்கின்றோம். கிடைக்கின்ற ஏற்றங்களை வைத்து சிறப்பாக வாழ்வதாக நினைக்கின்றோம். அல்லது நடிக்கின்றோம். ஆனால் நீதி நின்று சுடுவது. தலைமுறையழிக்கும் சக்தி அதற்குண்டு. சும்மாவா சொன்னார்கள் “தெய்வம் நின்றறுக்கும் என்று? ஒருவர் வருந்தி அழும் போது வழிகின்ற கண்ணீருக்கான சூடு தணிவதேயில்லை. 

வாகனத்தில் ஏறி சீட்பெல்ட் போடும் போது சின்னதுகள் மடியில் பாய முன்னிருந்த படம் இடிபட அதனை நிமிர்த்தினால் எம் குலச்சாமி படம். பல வருடங்களுக்கு முன் சத்தியத்தினை வாங்கிய சாமி. இறைவனும் காலமும் மிகப்பெரியன. அம்மா தீர்க்கதரிசி!


அவர்கள் அப்படித்தான்......

எப்போதுமே என் வீட்டவர்கள் எனக்கு சொல்கின்ற அல்லது எச்சரிக்கின்ற விடயங்களுள் ஒன்று நான் சில நேரங்களில் மிகவும் பரிதாபப்பட்டு ஒருவரிடம் இரக்கம் காட்டுவது, இரண்டாவது யாரோடாவது முரண்பட்டுவிட்டால் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காமலிருப்பது. ஆனால் இதற்கு பின் நம்முடைய சுயகௌரவம் தாக்கப்படும் போது என்ன செய்வது.........?  எதிரிகள் கூட அருகில் இருக்கும் போது கடந்த சில தினங்களில் நான் என்றுமில்லாதவாறு நான்கு பேரை எல்லா தளத்திலிருந்தும்  Block செய்துள்ளேன். 

ஒருவர் அனாவசியமாக விளக்குப்பிடிக்கும் வேலை செய்பவர். இந்தாளுக்கு வேலையே முகநூலில் கம்பு சுழற்றுவது தான். தான் சுழற்றிக்கொண்டிருந்தால் பரவாயில்லை தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டது தான் என்னுடைய பிரச்சினை. இந்த அக்காவிற்கு வேலையே இது தான் போல. அதாவது வெங்காய கூட்டிற்கு காற்றடிப்பது. ஆனால் எனக்கு இதற்கு நேரமுமில்லை. சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ள விருப்பமுமில்லை. ஏற்கனவே இவரால் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட குழப்பங்கள் போதுமானது. இவற்றினை விட முக்கியமானது தன்னுடைய மனதைப்போல் அடுத்தவர் மனதையும் கரும்பலகை என நினைப்பது. அதாவது ஒருவரை நினைப்பது அழித்து மாற்றுவது பிறகொன்றினை மறுபடி எழுதுவது ... அழிப்பது. இது நியாயமான இல்லையா என்பது அவரவர் மனதை பொறுத்தது. ஆனால் நாம் மாற்றி மாற்றி எழுதுகின்றோம் என்பதற்காக மற்றவர்களை அவ்வாறு எதிர்பார்ப்பதும் அனாவசியமான தூதுவிடும் படலம் விடுவதற்கும் நான் ஆளில்லை. 

இதே ஆள் போன வருடம் செய்த கலகமே இன்னும் முடியவில்லை. புதிதாக ஒருவரை இதில் இழுத்துவிட்டு புறா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தாளும் எனக்கு கறுப்பு பிடிக்கும் எனும் காரணத்தினால் தன்னுடைய புரைபைல் முதல் இன்ஸ்ரா போட்டோ வரை கறுப்பு வெள்ளையில் படங்களை போடுகின்றார். காலையில் வணக்கம் அனுப்புகின்றார். இடைக்கிடை சாப்பிட்டீங்களா என்று அக்கறை வேறு. போதாதற்கு பைபிள் வசனங்கள் வேறு.... இதற்கு காரணம் இந்த வெண்புறா தான். இதற்கு என்னவர் பற்றியும் நன்றாக தெரியும். தெரிந்தும் நேர்மையில்லாமல் நடந்தால் என்ன செய்வது? தினம் தினம் எத்தனை ஆண்களை கடக்கின்றோம் அத்தனை ஆண்களிடமுமா மனம் இலயித்துப்போகும். நாலைந்து தடவை அக்காவிடமும் சொல்லிப்பார்த்தாகிற்கு. தொடந்ததால் Block செய்தாகிற்று! 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஆனால், எல்லா உறவுகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. குறிப்பாக, ஒரு உறவில் நம்முடைய சுயமரியாதை (Self-respect) கேள்விக்குறியாகும் போது, அந்த உறவின் தன்மையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

"யாரோ ஒருவரின் ஓய்வு நேரத்தில் உன் இருப்பைத் தேடாதே" என்ற வரி, உறவுகளில் நிலவும் கசப்பான உண்மையை உணர்த்துகிறது. சிலர் தங்களுக்கு வேலை இருக்கும்போது நம்மை மறந்துவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு சலிப்புத் தட்டும் போதோ அல்லது பொழுது போகாத போதோ மட்டும் நம்மைத் தேடி வருவார்கள். ​நாம் ஒருவருக்கு "முன்னுரிமையாக" இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் "ஓய்வு நேரக் கருவியாக" இருக்கக் கூடாது. நம்முடைய நேரமும் உணர்வுகளும் விலைமதிப்பற்றவை என்பதை நாம் உணர வேண்டும்.
​"யாரும் இல்லாத போது வரும் அழைப்பிற்குப் பதில் சொல்லாதே.." என்பது ஒரு எச்சரிக்கை மணி. ஒருவருக்குத் தேவைப்படும்போது மட்டும் நாம் நினைவுக்கு வருவது அன்பல்ல, அது சுயநலம். சுற்றியுள்ள அனைவரும் சென்ற பிறகு, வேறு வழியின்றி நம்மைத் தேடி வருபவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. ஒருவர் நம்மை ஒரு Choice ஆக வைத்திருக்கும்போது, நாம் அவர்களை நம்முடைய "உலகமாக" கருதுவது முட்டாள்தனம். இது காலப்போக்கில் நம் மன அமைதியைக் குலைத்து, நம் மதிப்பைக் குறைத்துவிடும். அன்பு என்பது இருபக்கமும் சமமாக இருக்க வேண்டும். நம்மை மதிக்காத இடத்தில் நாம் இருப்பது, நமக்கே நாம் செய்யும் துரோகம். நம்மைத் தேடி வராதவர்களுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், நம்மை மதிப்பவர்களுக்காகவும், நம்முடைய சுய முன்னேற்றத்திற்காகவும் நேரத்தைச் செலவிடுவது சிறந்தது. உறவுகளை விடவும் மேலானது ஒரு மனிதனின் சுயமரியாதை. நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களிடம் இருந்து விலகி நிற்பதே நமக்குப் பெருமை. நானும் விலகித்தான் போனேன். எதுவும் இருக்கும் போது தெரிவதை விடவும் இழக்கும் போது தானே சிலருக்கு புரிகின்றது. 1360 நாட்கள் புரியாத அன்பு கடந்த 240 நாட்களுக்குள் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் பாருங்கள் எனக்கு இப்போது தான் உலகம் புரிய ஆரம்பித்திருக்கின்றது. 
 
​"உன்னைத் தேடுபவர்களுக்கு உயிராக இரு; உன்னைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு அந்நியனாக இரு" என நாமும் அடுத்தவரை காயப்படுத்த கூடாது என்று விலகி மௌனமாக நடந்தால் அதற்கு பயம் என்று அர்த்தமல்ல. ஆலமரத்தினை விடவும் நாணல் உறுதியானது. இனி பேசிப்பயனில்லை Block பண்ணியாகிட்டு!
 
என்னைச் சூழ எத்தனை ஆண்கள் இருக்கின்றார்கள். எனக்கு தொழில்ரீதியான, குடும்ப ரீதியான, கருத்தியல் ரீதியான எதிரிகளும் இதற்குள் அடங்குகின்றார்கள். ஆனால் இதுவரை என் ஒழுக்கத்தினை அல்லது சுயத்தினை எந்த ஆணும் விமர்சித்தில்லை. அந்தளவு நேர்மை என்னிடமுள்ளது என நான் நினைக்கின்றேன். அதே போன்று யாரும் அனாவசியமான அல்லது நெருக்கமான கதைகள் என்னிடம் பேசுவதில்லை. என் தொலைபேசியை பொதுவில் வைக்குமளவு அல்லது  Chat ஐ அழிக்க வேண்டிய தேவையில்லாதளவு தான் என் சமூக ஊடக உறவுகளுண்டு. 
 
ஆனால் ஒரு பிள்ளை கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட நபர் தன்னிடம் வழிவதை அடிக்கடி எனக்கு படம்பிடித்து போட ஆரம்பித்தது. என்னிடம் இப்படியொருவர் பேசுவதற்கு முதலில் தைரியம் வேண்டும். அப்படியே பேசினால் அவர் எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் நீக்கிவிடுவேன். வழிஞ்சல்களுடன் நமக்கு என்ன தேவையுள்ளது.? ஆனால் இந்தாள் தன்னிடம் அவர் வழிவதை போன்று அந்த குறிப்பிட்ட நபர் வழியும் ஆட்களிடமிருந்தெல்லாம் Screen Shots சேமித்து எனக்கு அனுப்ப தொடங்கியது. 

முதலில் ஆலோசனை செய்து அவரை நீக்கும் படி சொன்னேன். கேட்கவில்லை. அப்படியே தொடர்ந்தால் நீங்கள் தொடருங்கள் எனக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. அந்த "வழிஞ்சலும்" சும்மா ஆளில்லை. 10, 11 மணிக்குத்தான் அண்ணன் நெளிவு சுழிவு பற்றியெல்லாம் பேசியிருக்கின்றார். அவ்வளவு பாலியல் வறட்சி. தராதரம் தெரியாமல் எல்லோரிடமும் கடலை தான். சரி ஏதாவது செய்து தொலையுங்கள் என்னை இழுத்துவிட வேண்டாம் என்று சொன்னாலும் அந்த பிள்ளையும் கேட்பதாயில்லை. நான்கு தினங்களுக்கு முன்னரும் வழிஞ்சல் நெளிப்பு பற்றி பேச அதை எனக்கு அனுப்ப.... அந்த அழகியையும் Block பண்ணியாச்சு 
 
நாம் குறிப்பிட்ட பதின்மவயதில் எதிர்பால் கவர்ச்சியில் எதிர்பாலாரிடம் கடலை போட்டிருப்போம். அப்படி போடவில்லை என்றால் நமக்கு ஹோமோன் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம். அதன் பின்னர் இருபதில் ஈர்ப்பு வந்திருக்கும். அதேவேளை பல்கலைக்கழகம், பணி என்று பலரை கடக்கும் போது ஒரு நிதானம் நம்மில் வந்திருக்க வேண்டும். அதிலும் 25 க்கு பின்னரும் கண்டவர்களிடமெல்லாம் சுணங்குகின்றோம் என்றால் நாம் என்ன தெருநாய் வகையா? உறவு நேர்மை வேண்டாமா? 
 
ஒரு பிள்ளை போட்டோ போட்டால் போதும். அந்த போட்டோக்கு பொதுவெளியில் பதிலளித்தால் நீங்கள் நேர்மையாளர். உள்பெட்டியில் போய் நெஞ்சை நக்குவதெல்லாம் தெரு நாய்க்குணம். அதுவுமில்லாமல் பொதுவில் "நல்லவர்" உள் பெட்டிக்குள் பேசி தண்ணி கழட்டுவதெல்லாம் என்னளவில் சைக்கோதனம். அப்டியொரு தேவையிருந்தால் யாராவது ஒருவரை தேர்ந்து வாழ்வது தானே. இப்படியானவர்கள் நிச்சயம் பிறப்பில் அல்லது வளர்ப்பில் தான் இதனை கற்றிருப்பார்கள். நன்றாக ஆராய்ந்தால் இதனை கண்டுபிடிக்கலாம்.  
 
இப்படியான சைக்கோக்கள் தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை. தராதரம் பார்ப்பதில்லை. யாரு? எவர்? பொருத்தமா? நேர்மையான உறவா? எதுவும் கிடையாது. அப்படியென்ன இருந்திடப்போகின்றது. பெண்ணென்றால இரு முலைகள் , பெண்ணுறுப்பு. ஆணென்றால் குறி. அவ்வளவு தான் வாழ்க்கை. என்ன நிறம் அளவில் தான் மாற்றம். 

இந்த தெளிவும் நிதானமும் இல்லாமல் பொதுவாழ்க்கையில் முட்டையில் முடி பிடுங்கி என்ன பயன்?  இவ்வாறான நேர்மையற்ற தொடர்பிருப்பவர்கள் நாளை ஒரு உறவு நிலையில் மட்டும் நேர்மையாகவா இருந்திடப்போகின்றார்கள். வாழ்க்கைத்துணை இருக்கும் போதே இவர்கள் அடுத்தவர்களிடம் போனாலும் வியர்ப்பிருக்காது.  இப்படி நேர்மையற்று இருக்க போகும் உறவிற்காகவா இவ்வளவும்? Block பண்ணியாகிட்டு...! ஆனால் ஏதோவொரு புள்ளியில் இது வலிக்காமலில்லை 
 
மனிதர்களையும் அவர் தம் குணங்களையும் காலம் உணர்த்திப்போகின்றது!   
 

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை