இன்றைய நாள் எப்படி….?

அநேகமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் முழிக்கும் பழக்கமுள்ள எனக்கு காலையிலேயே வழங்கப்பட்ட பணி கோப்பி தயாரித்தல். எழும்பியதும் குளித்து சாமியறைக்குள் புகும் போது 4.30 மணியாகியிருக்கும். விளக்கேற்றி, வீணை வாசித்து, சாமி பாடல்களை பெரிய சத்தமாக போட்டுவிட்டு கொஞ்ச நேரம் மின்னஞ்சல் வேலைகளை பார்ப்பதுண்டு. சரியாக 6 மணிக்கு இந்த பாட்டுக்களை நிறுத்திவிட்டு சக்தி வானொலி அலைவரிசையை ஆரம்பிக்கும் போது “சக்தி கொடு…” பாடல் தொடங்கியிருக்கும். 6.15 க்கு இன்றைய நாள் எப்படி? ஆரம்பிக்கும் வரை கேத்தலில் நீரை கொதிக்க வைத்து இதனை கேட்பதற்காகவே காதை கூர்மையாக வைத்திருப்பேன். எனக்கு பெரிதாக சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லை. ஆனால் அதன் பின்னுள்ள கணக்கிடல் சரியாக இருந்தால் காலம் குறித்த கணிப்பு சரியாகவிருக்கும் என நம்பும் ஆள் நான். “இன்றைய நாள் எப்படி?|” கேட்பதில் எனக்கு ஈடுபாடிருக்க காரணம் அந்த ஐயா சொல்வதை மீற என்ன செய்யலாம் என யோசிப்பதற்கு தான். உதாரணமாக 7 ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு கவலை என்று சொன்னால் அன்று கவலை ஏற்படுத்த கூடிய எதிலும் ஈடுபட மாட்டேன். குறிப்பாக எனக்கு முகத்திற்கு நேரே கதைப்பதாலும், சுட்டிக்காட்டி கதைப்பதாலும் தான் பிரச்சினை அதிகமாக வருவதுண்டு. எனவே இப்படி ஐயா சொன்னால் அன்றைய நாள் மௌனவிரதம் இருப்பேன். அல்லது வாய்க்குள் தண்ணீரை நேரம் கணக்கிட்டு வைத்திருப்பேன். இரவில் படுக்கும் முன் அன்றைய நாள் நிகழ்வுகளை மீட்டிப்பார்க்கும் போது அவர் சொன்னதற்கு முரணாக அன்றைய நாள் கடந்திருந்தால் நான் வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்வேன். 

சரி மறுபடியும் அதிகாலைக்கு போவோம். காலையில் எனக்கு கொடுக்கப்பட்ட “கோப்பி போடல்” வேலை இருக்கின்றதே இதனை கேட்கும் போது “சை… இதென்ன சின்ன வேலை தானே” என்று தானே நினைக்கின்றீர்கள்? அப்படி நினைத்தால் தயவுசெய்து மனதில் இருந்து அழித்து விடுங்கள். இதனை விடவும் ஒரு பந்தியை சீராக நடாத்தி விடுவேன் நான். ஒருவருக்கு பால்,சீனி எல்லாம் நன்றாக போட்டிருக்க வேண்டும், இன்னொருவருக்கு சீனி குறைவு பால் கூட போடனும், மற்றவருக்கு வரகு கோப்பி அதாவது பால் இல்லை, ஒருவருக்கு இளம் சூடாயிருக்க வேண்டும், இன்னுமொருவருக்கு கொதிக்க கொதிக்க வேண்டும், கடைசிக்கு நுரை கோப்பி வேண்டும் அதுவும் ஆற்றி கொடுக்க வேண்டும். என்னுடைய பொறுமைக்கு கிடைத்த சோதனை இது. அதுவும் பல வருடங்களாக நான் செய்துகொண்டிருக்கும் பணி… இது நான் போன ஜென்மத்தில் செய்த ஏதோவொரு துரோகத்திற்கு கிடைத்த தண்டணை போல…. இல்லாட்டி இப்படியா அல்லாட விடுவார்கள். ஆனால் ஒன்று இந்த பணியை செய்வதால் இந்த ஜென்மத்தில் எனக்கு பாவக்கணக்கு வெட்டுப்பட்டு செத்தால் நேரடியாக சொர்க்கம் தான்>  அல்லது இயேசுவிற்கு பக்கத்தில் நான் சிறகுடன் ஏஞ்சல் போல் இருப்பேன். எது எப்படியோ எல்லோருக்கும் கோப்பி போட்டு> கதவை தட்டி எழுப்பி கொடுத்து எல்லாம் முடியத்தான் எனக்கு தனியே கோப்பி தயாரிப்பேன். எனக்கு கோப்பி குடிப்பது ஒருவித தனித்துவமான பொழுது. கோப்பி கோப்பையுடன் முற்றத்திற்கு போய் ஊஞ்சலில் இருந்தபடி குடிப்பேன். பின்னர் நடந்த படி பூக்களை பார்த்த படி குடிப்பேன். இப்படி கோப்பி குடிக்காவிட்டால் அன்றைய பொழுதே எனக்கு விடியாது… ஆனால் இன்றைய நாள் எப்படி ஆகிவிட்டது என்று தெரியுமா?

நேற்று நாடு வந்து சேரும் போது மாலை 7 மணி. விமான நிலையத்திலிருந்து நல்லூர். கூப்பிட வந்தவர் தூங்கினால் ஒரேடியாக தூங்கிட வேண்டுமே என்று கதைத்தபடி பயணம். இம்முறை புதுவருடம் யாழ்ப்பாணத்தில். முழுக்குடும்பமும் அங்கு போய் விட்டனர். நான் மட்டும் தான் ஊர்க்குருவி நேற்று பறந்து வந்தடைந்திருந்தேன். நல்லூர் போய் சேர்ந்து விடியங்காலையில் லைட்டைப்போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டு வந்தவற்றை பிரித்துகொடுத்து எனக்கு கண்ணை சொருகும் போது ஒரு கட்டளைக்குரல் “மகள் எல்லாருக்கும் கோப்பி போடுங்களன்” என்று. சரி என்று கோப்பிக்கடையை திறந்தால் வீட்டில் பத்துப்பேரென்றால் இங்கு இருத்தியொரு பேர். பொறுமையை இழுத்துப்பிடித்து கோப்பி போட்டுக்கொடுத்து  கடையை சாத்திவிட்டு சோபாவில் சுருளுவம் என்று வெளிக்கிட்டால் அரைப்பு வைக்க நவாலியூர் போகவேண்டும் என்று சத்தம். ஏன் என்று கேட்டால் அங்கு இருக்கும் சீனியர் வரச்சொன்னதாக பதில் வந்தது. மறுபடி மூட முயன்ற கண்ணை திறந்து மேல் கழுவிவிட்டு மறுபடி பயணம். பயணிக்கும் போது சீனியர் எனக்கு உடுப்பெடுத்து வைத்துள்ளதாகவும் மறுக்காமல் அதனை அணியும் படியும் மறுபடியொரு கட்டளை. அங்கு போய் பார்த்தால் சீனியர் சிட்டிசன்ஸ் எடுத்து வைத்திருந்தது சிவப்பு புடவை. ஏறக்குறைய படையப்பா படத்தில் நீலாம்பரி எடுத்துக்கொடுத்து அதனை சௌந்தர்யா கட்டி அவரை மாடு துரத்துமே அதே நிறம். இதென்ன சோதனை என்று வீட்டாக்களை திரும்பி பார்த்தால் அனைவரும் இரத்த துளிகள் போல சிவப்பில் தான் நின்றிருந்தார்கள். இம்முறை சிவப்பு தான் நிறமாம். எனக்கென வாங்கியது மிகவும் மெல்லிய புடவை வேறு. போதாதற்கு பொன்னிற சரிகை. இனி வருச நாளில் குழம்புவதா என்று உடுக்க வெளிக்கிட்டு பார்த்தால் பிளவுஸ்சில் பின்னுக்கு ஜன்னல், கதவு எல்லாம் இருக்கு. பொறுமை…. பொறுமை…. இன்று மட்டும் பொறுமை…

குடும்பமாக வெளிக்கிட்டு கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு பின்னர் கண்டவர்கள், நலம் விசாரித்தவர்களிடம் ஊர்க்கதை பேசி…. இங்கு எனக்குள் வேர்வை மழை! எப்படா வீட்ட போவம் போட்டதுகளை கழட்டி எறிவம் என்று ஒரு மாதிரி வீட்ட போய் சேர்ந்து உடுப்பு மாற்ற போனால் கடைக்கு போவமா என்று மச்சாள் உரிமையுடன் கூப்பிட்டாள். சரி என்று வேறு உடுப்பு மாற்றி மறுபடி பட்டியலுடன் பயணம். கறி, புளி வாங்கி வீட்டிற்கு வந்தால் வாசலில் செருப்பு கூட்டம். வீட்டுக்குள் அரசியல் கூட்டம். சொல்லாமலேயே சமையல் என் தலையில் தானாக வந்து விழுந்தது. கொஞ்சம் வளர்ந்த கிளைகளை கூப்பிட்டு வேலை வாங்கி சமையல் முடித்து வெளியில் வந்தால் வந்திருந்தவர்களில் ஒரு ஆண்டி கல்யாண பேச்சை ஆரம்பிக்க…. மறுபடி குசினிக்குள் புகுந்து அது இதை குடைந்து நேரம் கடத்தி மறுபடி வெளிய வரும் போது 1.40! 

ஓ..கடவுளே! மறுபடி பந்தி பரிமாறி…. அன்புத்தொல்லையாக ஆளாளுக்கு ஊட்டிவிட்ட சோற்றில் வயிறு நிரம்பி…. எல்லோரும் மதிய நித்திரைக்கு தயாராக நானும் தயாராகி திடீர் ஞாபகம் வர கையடக்க தொலைபேசியை உயிர்ப்பித்தால் அன்பான வாழ்த்துக்கள்> நல விசாரிப்புக்கள்> மிஸ் கோல் அலர்ட்கள்….. ஒரு மின்னஞ்சல்! இந்த நேரத்தில் போனை உயிர்ப்பித்தது தான் இந்த வருடத்தில் நான் முதன் முதல் சொந்தக்காசில் வைத்த சூனியம்.  

மாலை 3.30 க்கு கடற்கரை போவதாக ஏற்பாடு. கடைசியில் கடற்கரை போகும் போது 5 ஐ தாண்டிவிட்டது. சேர்ந்து கதைக்க தொடங்கினால் கதை எந்தப்பக்கம் திரும்பும் என்று தெரியும் என்பதால் மெதுவாக நழுவி கடற்கரையோரமாக நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஒராள். பகீரென்றாகிவிட்டது. இது என்ன சோதனை என்று உற்றுப்பார்த்தால் நம்மட ஆள் இல்லை. அதாவது நான் நினைத்த ஆளில்லை. சை இந்த வருடமாவது மானம் ரோஷத்துடன் நட என்று எனக்குள் நானே என்னை திட்டிக்கொண்டு நடந்து வந்தால் சற்று தூரத்தில் அண்ணா நடந்து போய்க்கொண்டிருந்தார். வழமை போன்று குரங்கு புத்தி தோன்ற விரைவாக நடந்து நெருங்கி இரு கைகளாலும் கண்களைப் பொத்தி….. யாரது என்று கேட்ட குரல் வித்தியாசமாயிருக்க கைகளை விலக்கி விட்டுப்பார்த்தால் அது யாரோ ஒராள்…... சற்றுத்தூரத்தில் இருந்து அந்தாளின் நண்பர்களும் வந்து பகிடி பண்ணி… சை அந்தாளை தொட்டு என் கற்பிலும் கொஞ்சம் போயிட்டுது! போதாதற்கு நாம் வாகனத்தில் ஏறும் வரை அந்த கூட்டம் நக்கலடித்து சிரித்து கொண்டிருந்தது. இது இன்று நானே வைத்த சூனியம் 02! 

வீடு வந்து பயணக்களைப்பு> நித்திரை மயக்கம்> கடற்காற்று எல்லாம் சேர்ந்து சோர்வாக அமர்ந்திருக்க தாய்க்கிழவி என்ன செய்யுது என்று கேட்டபடி அருகில் அமற “எனக்கு தலையிடிக்குது… நித்திரை வருகுது..” என்றேன். எல்லாவிடமும் போய் கண்பட்டுவிட்டது என்று ஒன்பது கண் சிரட்டை எடுத்து, மிளகு, செத்தல் எல்லாம் சேர்ந்து முடிந்து என் தலையை சுற்றி கண்ணூறு போட்டு, இரும்பு சுற்றி போட்டு இப்போது விறகடுப்பில் பானையில் நீரும் விறகுடன் இரும்பும் காய்கின்றது. இன்னும் சற்று நேரம் என்னை காத்திருக்க சொல்லியிருக்கின்றார்கள் கண்ணூறு கழிக்க. கடற்கரை விட்டு வந்த போது படம் பார்க்க போக கூட்பிட்டார்கள். திரையரங்கின் அதிர்வைவிட இங்கு தூங்கலாம் என்று மறுத்துவிட்டேன். ஆனால் இப்போது புரிகின்றது இது சூனியம் 03. 

காலையிலிருந்து நான் இன்னும் கோப்பி குடிக்கவில்லை. போதாதற்கு வைத்தக்கொண்ட சூனியங்கள் வேறு. இன்று காலை புதிய வருடத்தின் முதல் நாள் 07 ஆம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு “இன்றைய நாள் எப்படி?” என்று ஐயா என்ன சொன்னவர்…? தெரிந்தவர்கள் யாராவது இருக்கின்றீர்களா…..? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை