Showing posts with label மீராவின் கண்ணன். Show all posts
Showing posts with label மீராவின் கண்ணன். Show all posts

(ஒரு) கல் - கண்ணாடி


காதல் முதல்
மோதல் வரை 
கல் - கண்ணாடி 
பேசப்பட்டாகிட்டு அன்பே
ஆனால் காதல் -மோதல்
இரண்டிலும் என்னவோ
உடைவது கண்ணாடி மட்டும் தான்
கல் எப்படியோ பிழைத்துக்கொள்கிறது
இதை யாராவது எழுதியிருக்கின்றார்களா?

ஆயுதப் போரிலும்
ஆழ்ந்த காதலிலும் கூட
இது தானே தத்துவம்
ஒன்று இழக்கப்பட 
ஒன்று காயப்பட
ஒன்று அழிந்தொழிய 
ஒன்று இல்லாமலாக்கப்பட 
முடிந்தால் மட்டும் தானே 
மற்றொன்று உயிர் பெறுகின்றது – அல்லது
வெற்றி கொள்கின்றது…… 
ஒரு கல் - ஓரு கண்ணாடி போல்
அல்லது நம்மைப் போல்….

கண்ணாடி நிலைத்து நிற்க 
கல் தான் கைளினால் பற்றியெடுக்கப்படுகின்றது…….
இடம்பெயர்க்கப்படுகின்றது…..
வீசப்படுகின்றது………. – ஆனால்
சில்லுச்சில்லாக சிதறடிப்பதென்னவோ 
கண்ணாடியைத்தான்…. 

நான்
மௌனமாக கடந்தாலும் - நீ
வார்த்தைகளால் - என்னை 
காயப்படுத்துவது போல….. – 
அடுத்தவரிடம் விட்டுக்கொடுப்பது போல - அல்லது
காரணமின்றி மனதை உடைப்பது போல….

நீ தான் என்னை 
உடைத்துவிடுகின்ற அந்த கல்லா
அல்லது என்னை நோக்கி
வீசிய கையா – என 
உணருமுன்னே 
சில்லுச்சில்லாகி விடுகின்றேன் நான்!

இனிமேலாவது 
(ஒரு) கல் - கண்ணாடி பற்றி
பேசுவபர்கள்….
கவிதையியற்றுபவர்கள்….
கதையெழுதுபவர்கள்
பேசிக்கொள்ளட்டும் - குறைந்தபட்சம்
நொறுங்கி போய்விட்ட 
கண்ணாடியின் சிதறல்களை பற்றி!
கல் - கண்ணாடி 
உடையாமல் மோதிக்கொள்வதில்லை 
என்பது பற்றி…. – அல்லது 
வேண்டுமானால் வேகக்குறைவினால்
உடையாமல்…. –  ஏற்படுத்தி விடுகின்ற
சிறு விரிசலை  பற்றி….! 

(14.08.2025) 


இல்லாதிருக்கிறாய்….(இல்லை + இருக்கிறாய்)







நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுவைக்கின்றேன்

பக்கத்தில் இருக்கும் போது
ஸ்பரிசிக்கின்றேன்
தொலைதூரமாகும் போது
உன் நினைவுகளை
சுவாசிக்கின்றேன்

நேரில் நீ தருகின்ற
பூக்களை இரசிக்கின்றேன்
இல்லாத போது
உன் புகைப்பட
சிரிப்புக்களுள் சங்கமமாகின்றேன்

இருக்கும் போது
கார் சத்தம் கேட்டு
விடுதி கதவருகில்…..
இல்லாத போது
வரும் நாளுக்காய்
கலண்டரருகில்……..

அருகிலிருக்கும் போது
காதோரம் கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்…
இல்லாத போது
காது வரை மூடிய
கம்பளிக்குள் கற்பனைகளின் தொல்லை….

நீ உள்ள போது
உன் துணி துவைக்கின்றேன்
இல்லாத போது
உடைகளில் - உன்
வாசம் பிடிக்கின்றேன்

இரவில்…
உனக்குள் தொலைகின்றேன் - நீ
இல்லா ராத்திரிகளில்
தலையணைகளை
இறுக்கிக் கொள்கின்றேன்

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……










மடிப்பிச்சை கேட்டு நிற்கின்றேன்…..




அன்பே
பிரியங்களை புரிய வைக்க
பொருட்களை – அதன்
தரங்களை
பெறுமதியை….. தேடாதே!
உன் அருகிலான நொடிகளின்றி
வேறு விலைமதிப்பற்ற பொருள்
எனக்கேது….?

உன் காதலை காட்ட
கார்ப் பயணங்கள் வேண்டாமே…..
சாரதியாக நீயும்
சற்றுத் தள்ளி நானும்…
சிறு இடைவெளிகள் கூட
அண்டத்தின் இரு
அந்தங்களாக….
பேரூந்து போதுமே
உன் தோளில்
செல்லமாக சாய்ந்து …
நான் கண்ணயர்வதற்கு..
உன் வாசத்தினை
உள்ளிழுத்துக் கொள்வதற்கு…

நம் சந்திப்புக்களுக்கு கூட
நட்சத்திர சத்திரங்களுக்கு
கூட்டிப் போகிறாய்….
நுனி நாக்கு ஆங்கிலமும்
பெயரறியா உணவுகளும்….
அதிரும் இசையும்…- நம்
உணர்வுகளுக்கு
கடிவாளமிடுவதை
கண்டுகொள்ள நீ மறுப்பதேன்?
சாலையோரத்தில்
மழைச்சாரலில்
ஒற்றைக் குடையில்
முட்டிக் கொள்ளும்
ஸ்பரிசத்தின் இன்பம் - ஏசி
அறையிலில்லை அன்பே…..

உன்
மேல்த்தட்டு நண்பர்களிடம்
என் திறமைகளைச் சொல்லி
மார்தட்டிக்கொள்கிறாய்…..
என்றாவது என்னை – நீ
வாய்விட்டு
வாழ்த்தியிருக்கின்றாயா?
ஆயிரம் பேர்
அவையில் புகழ்வதை விட
உன் ஒற்றைச் சொல்லில்
இருக்கிறது எனக்கான விருது…

உன்னவர்கள்
என்னழகை விமர்சிப்பதை
இரசிக்கின்றாய்…
காலையிலிருந்து
கண்ணாடி முன்னான
என் தவம்-  உன்
வர்ணனைகளுக்காக
மட்டுமே….
என் விழி பார்த்து – "நீ
அழகியடி" என்று
சொல்லப்போகும் கணத்திற்காகவே
காத்திருக்கின்றன – என்
கண்களின் மைதீட்டல்கள்…

இன்னொருவன்
காதலியான பின்பும்
காதல் கடிதங்களுடன் - பலர்
என்னருகில்…
நீ மட்டும் உன்
நிமிடமொன்றைக் கூட
தரமறுக்கின்றாய்…
வெட்டி வேளைகளிலான
பல மணி பேச்சுகளை விடவும்
வேலைப்பளுவின் போது – என்
சிறு நினைப்பாவது
உனக்கு வராதா….?
கேட்டால் கடமை என்கிறாய்
காதலிலும் கடமையிருக்கின்றதல்லவா?
கண் கெட்ட பின்
நமஸ்காரமும் - காலத்தில்
தோன்றா காதல் நினைவுகளும்
பயனற்றதன்பே…

என்னிடம் நீ
ஒரு வேளை
என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால்…
உன் அருகாமை கேட்டிருப்பேன்
உன்னுடனான தனிமை கேட்டிருப்பேன்
உன் ஒற்றை முத்தம் கேட்டிருப்பேன்
உன் விரல்களின் ஸ்பரிசம் கேட்டிருப்பேன்
என் இரவுகளில் உன் கனவுகள் கேட்டிருப்பேன்…
கேட்கும் அந்த நொடி கூட
என் கவியின் கருவாயிருக்கும்….

ஆனால் நீ தான்
கேட்கவேயில்லையே….
இதைக் கேட்கக் கூட
உனக்குத் தான் நேரமில்லையே…
இறுதியாய்
உன் ஒரு நொடியையாவது
எனக்காக – நம்
காதலிற்காக
மடிப்பிச்சை கேட்டு
நிற்கின்றேன்…..



















அசைய மறுக்கிறது என் மனம்…….





அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன்
வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த
ஐந்து ரூபா மிட்டாயின்
சுவை மிகுந்திருந்தது என்னளவில்

ஆயிரம் அன்புமொழிகளை
முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன்
கோபத்தில் கூறிய “என்னடா”வின்
அர்த்தம் அன்பின் எல்லை…

கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில்
நடக்கும் போது உரசுகின்ற – அவன்
மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம்
அழகிய கவிதை…
முன் நடந்தாலும்
பின் தொடர்கின்ற – அவன்
பார்வை அலாதியானது

என்னவனுக்கு
பதவியில்லை பண்பிருக்கின்றது
பையில் பணமில்லை
மனதில் பாசமிருக்கின்றது..
தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில்
பட்டும் படாமலும் தொடர்கின்ற
கரிசனைகள் சொல்லும்
ஆயிரம் தத்துவங்கள்
இடையில் நிற்பவைகளை விடவும்
இடையறாது தொடர்வது சுகமல்லவா?


அப்பாவின்
அரண்மனையை விடவும் - அவன்
அருகாமை வேலியாகின்றது
அவன் அன்பிற்காக மட்டுமே
அருகில் மண்டியிட்டு
அசைய மறுக்கிறது
என் மனம்…….

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு

மீராவிற்கும் கண்ணனுக்கும் தான்
தொடர்புண்டு...
இவர்களது காதல்
காலம் கடந்த காதல்....
இலக்கியங்கள் இயம்புகின்றன.

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட
தொடர்புண்டு...
கர்ணன் கொடையில் சிறந்தவன்
மீரா அன்பானவர்களை கொடுப்பதில்
சிறந்தவள்...

ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை
அவன் கொடுத்தது உயிரற்ற
பொருள் தானம்...
மீராவினது..
உயிருள்ளவர்களை
கொடுப்பது.....
ஒவ்வொரு முறையும்
கொடுத்தே தொலைகிறேன்

இப்போதெல்லாம்
கொடுப்பதிலும்.....
தனியே கண்ணீர் வடிப்பதிலும்
ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது.

திகதி -30.05.2013

மீராவின் அன்புக் கண்ணனாக….




முன் தினங்களின்
ஆர்ப்பாட்டங்கள் -
அப்பா வாரியிறைத்திருந்த
பல ஆயிரங்கள் - அம்மாவின்
ஆயத்தங்கள் கூடவே
அறிவுரைகள்
ஆயாவின் சமையல் வாசனை
எதுவும் பிடிக்காமல்
அறையில் அமர்ந்திருந்தேன்
என்னவன் பற்றிய கற்பனைகளோடு…

அதிகாலையின் தூக்கத்திலேயே
அம்மாவின் முன்நெற்றி முத்தங்களுடன்
செல்லமாக எழுப்பப்பட்டிருந்தேன்.
மஞ்சள் குளித்து நீர்
சொட்ட வந்த போது
பட்டுப்புடைவையும்
பரம்பரை நகைகளும்
இறைந்திருந்தன – என்
கட்டிலில்….

மருதாணி இட்ட
கைகளில் நிறைந்த வளையல்கள்
சிவப்பு மூக்குத்தி
கூர்த் திலகம்
புடைவையின் பாரத்துடன்
கூடவே வெட்கத்துடன்
தலை குனிந்திருந்தேன்

அண்ணாவின் செல்ல அதட்டல்களும்
தம்பியின் சீண்டல்களும்
நண்பிகளின் எள்ளல்களும்….
நண்பன்களின் நக்கல்களும்…
இன்று தான் என்னுள் ஆன
நாணங்களை நானே கண்டுகொண்டேன்

அப்பா கூடத்திற்கழைத்த போது
குனிந்த தலை நிமிராது
துடுக்காய்
சற்றே கடைக்கண்ணால் பார்த்தேன்..
என்னவனாய்
அமர்ந்திருந்தான் -
ஆறடி உயரத்தில்
அருவா மீசையுடன்
வெள்ளை வேட்டியில் - என்
இனிய ஆருயிர் நண்பன்…
இதுவரையான நட்பு பார்வை மாறி
கண்ணிறைந்த காதலுடன்….
மீராவின் அன்புக் கண்ணனாக….











மூச்சிலும் என் வாசம் மட்டுமே....


என்னவனின்
மறுபக்கத்தினை கேள்விப்பட்டு…
கோபம்; பின்
அழுகையாயிருந்தது
அதுவும் மறைமுகமாக…
அடுத்தவன் சொன்ன போது தான்
மரமண்டையில் ஏறியது…
கேட்டதிலிருந்தே
வெம்பி வெடித்திருந்தது
மனம்…..

எந்தப் பெண்ணால் தான்
முடிந்திடும்…?
நமக்கு மட்டுமேயான
எம்மவர்களை பகிர…?
அதுபற்றி அறிந்ததிலிருந்து
ஆத்திரம் ஆற்றாமையாகியிருந்தது….

இன்று சிக்கிவிட்டான்
கள்ளத்தனமாய்….
எதிர்பார்க்கவில்லை
எதிரே வந்து நிற்பேனென்று…
அருகில் நெருங்கி –
எனக்கு மட்டுமேயான
என்னவனின்
உதட்டில் - அவன்
பற்றவைத்திருந்த சிக்ரேட்
சனியனை பறிந்தெறிந்தேன்…..
பற்றியெரிதலுடன்.. – என்னவனின்
உள்ளம்
உதட்டில் மட்டுமல்ல
மூச்சிலும் என் வாசம் மட்டுமே
வேண்டும்…..

திராட்சை தோட்டத்து நரியாக…

என்னவனை முத்தமிட
முயன்று தோற்பதே
வுhடிக்கையாகிவிட்டிருந்தது…

ஒவ்வொரு முறையும்
முயல்கையில் - அவன்
கேசம் என்னை ஸ்பரிசிப்பதும்…
மூக்கு நுனிகள் மோதிக்கொள்வதும்
என் உதட்டில் - அவன்
வியர்வை கரிப்பதும்
என்னவனின் கன்னத்து முடி
உறுத்துவதும்…..
அழகான கவிதை…

சில நேரம் மனம் கூட
தோற்பதை தான் விரும்புகிறது..
முயலும் போது அழகாக
என்னவனில் முட்டிக்கொள்ளலாம்
என்பதால்….. – அவன் கூட
அதனால் தான் என்னவோ
முயற்சிகளுக்கு கூட சொக்கலேட்டுகளை
விலை பேசியிருந்தான்…. என்
தோல்விகள் கூட என்னவனுக்கு
இன்ப அவஸ்தையாம்… ஆனால்
அவன் ஆறடி உயரத்திற்கு
எம்பி – அவன்
முன்நெற்றியில் - என்
இதழ் பதிப்பதென்பது
அன்று வரை
முயற்கொம்பாகவேயிருந்தது…

எட்டி சலித்த ஒரு நாள்
திராட்சை தோட்டத்து நரியாக…
எனக்கு பிடிக்கவில்லை என்று
ஒதுங்கிய வேளை…
அவன் சற்றே வளைந்து
இட்ட கன்னத்து முத்தம்….
அதன் சத்தம்….
கனவின் திடுக்கிடல்களிலும்
இனிக்கிறது…

இறந்திருந்தது என்னுள் ஒளிந்திருந்த குழந்தை…


உன்னிடம் மட்டும் தான்
அழ பிடிக்கிறது…
உன்னுடன் நடக்கும் போது
மஞ்சள் கோடுகள் கூட
எனக்குத் தெரிவதில்லை – நீ
என்னைப் பார்த்துக்கொள்வாய்…
பேரூந்தில் கூட – நீ
அருகிலிருந்தால் தூக்கம் எங்கிருந்தோ
தழுவிக்கொள்கிறது – உன்
தோளில் சாய்ந்துறங்கலாம் என்பதால்…
சந்திக்கும் போதெல்லாம்
சொக்லட்டுக்காய் உன்னிடம் மட்டும் தான்
இரந்து நிற்கப் பிடிக்கிறது…..
வீட்டாரின் கண்டிப்பை மீறியும்
கடற்கரையில் பட்டம் விட
உன்னிடம் தான்
கெஞ்ச முடிகிறது..
உன்னுடன் மட்டும்
ஊர் சுற்றுவது பிடிக்கிறது – நீ
விடுதி வரை வருவாய் என்பதால்….
சண்டைகள் கூட
தினம் உன்னிடம்
போடாவிட்டால் சாப்பாடு சமிபாடடைவதுமில்லை
நீ கன்னத்தில்
தட்டிவிட்டால் மட்டும்
கலங்கித் தொலைகிறது கண்கள்
ஏதோ உன்னருகில் மட்டும்
குழந்தையாகிவிடுகிறது என் மனம்….

ஆனாலும்;;;;
என்று என்னை
ஆபத்தானவள் - முன்
தெரிந்திருந்தால்
பழகியிருக்க மாட்டேன்….
நீ குழந்தையுமல்ல என்றாயோ…
அந்த நொடியே
இறந்திருந்தது – என்னுள்
ஒளிந்திருந்த குழந்தை…

திகதி – 20.04.2013
நேரம் - 12.55

குழந்தையும் குருவாகின்றான்


என்னவனுடன்
சண்டையிட்டு
வார்த்தைகள் சிதறி பின்
மௌனமாக
அழுதுகொண்டிருந்தேன்….

மூடிய முகத்தில்
மெல்லிய மூச்சு
ஸ்பரிசிக்க
நிமிர்ந்து பார்த்தேன் - என்
சின்னவன்… கையில்
ஓவியத்துடன்
நின்றிருந்தான்

கண்ணிரூடே
அணைத்து உச்சிமோர்ந்து
என்னடா கண்ணா..?
என்றேன் சற்றே கேவலுடன்
அவன் தன் சிறு கிறுக்கலை
என் முன் காட்டினான்

அதில் குச்சியுருவமாய்
சற்றே உயரமாக என்னவனாம்
குடும்பி வைத்த
உருவமாய் நானாம்..
இருவர் நடுவிலும்
குட்டியுருவமாய் தானாம்… - அவன்
மழலையில் சொல்ல
ஓவியத்தை உற்றுப் பார்த்தேன்
மூவரின் கைகளும்
பின்னியிருந்தது – அந்த
கிறுக்கலில் ஏதோவொன்று
உறுத்த என்னவனை
அழைபேசியில் அழைத்தேன்
மன்னிப்பு கேட்க…..


விதி போலும்….


தொடர்ந்தவன்
தொலை தூரம்
சென்ற போது தான்
மனதையே
தொட்டது
ஏதோவொன்று …..

துரத்தியவன் தூர விலகிய
போது தான் - என்
காதலே எனக்கு
வலித்தது…

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரிந்தது….

மீராவின் காதல்
கவிதையிலேயே
கருவாகி
கருகிட
வேண்டுமென்பது
விதி போலும்….

ஏன் விலகுகிறாய்?

விலகி விலகி
ஓடும் போது துரத்திய நீ – ஏன்
இன்று விலகுகின்றாய் என்பது – என்
மரமண்டைக்கு புரியவில்லை…

நான் செய்தது பிழையென்றால்
என் பதவியை விட்டும்
உனக்காக உன்
நண்பன் காலில் விழ கூட
நான் தயார்….

ஒரு வேளை உன்னிடம்
பேசியது தான் பிழையென்றால்
உன்னிடம் ஒரு கேள்வி…..?
என்னைப் பேச உனக்கு
முழு உரிமையுண்டு – என்
நண்பன் என்றாலும் அவன்
அடுத்தவள் கணவன்
அவனை பற்றி பேச
உனக்கு என்ன உரிமையுண்டு?

உன் நண்பனின்
கோபங்களை ஏற்கின்றாய் - ஏன்
என்னிடம் மட்டும்
அழுகின்றாய் என்று கேட்டாய்…
இன்னொருத்திக்கான தோள் மேல்
நான் எப்படி சாய முடியும்? – உன்
தோளில் தான் என் சுமைகள்
சுகமாகின்றன……

உன் தமையன்கள்
உனக்கு நல்ல நண்பர்கள்
என்றாய் - அதுவே
முகநூலில் “அம்மு” என்றால்
பிழையாக புரிவார்கள் என்கிறாய்….
கேள்வி கேட்டால் கோபப்படுகிறாய்
ஏன் உன்னை விடவும் -நான்
உன் குடும்பத்தினை நேசிப்பது
உனக்குப் புரியவில்லை……?

உன் ஆயிரம் நண்பிகள்
பற்றி பேசுகின்றாயே – ஏன்
என் ஒரே நண்பனை பற்றி
பேசிவிட்டால்
மூஞ்சை சுருக்கிக் கொள்கின்றாய்?
மனம் என்பதும்
உணர்வுகள் என்பதும்
இருவருக்கும் பொதுவல்லவா…..

அடுத்தவள் பற்றி – நீ
பேசும் போது - நான்
பொறாமைப்படவில்லை என்பதால்
உன்னில் எனக்கு
அன்பில்லை என்பதல்ல அர்த்தம்… - உன்
ஒழுக்கத்தை ஆழமாக
உணர்ந்தவள் என்பதை ஏன்
புரிய மறுக்கின்றாய்…?

உன் முன்னவள் போல்
என்னையும் துரத்தி
காதலிக்க சொல்கிறாயா…?
காதல் என்பது துரத்துவதல்ல
இரு மனங்களை தொடுவது…

உன்னை நேசிக்க
நேரம் கடத்துகின்றேன் என்றால்
அது அவனில் உள்ள அன்பாலல்ல – என்
மனம் அழுக்கின்றி
ஏற்க வேண்டுமென்று நினைக்கின்றேன்…
நான் வரும் போது – உன்
மனமும் எனக்கு மட்டுமாக
இருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றேன்
அது ஏன் உனக்கு புரியவில்லை…

தெரியாமல் தான்
கேட்கின்றேன்….
“முந்தானை தொட
திராணியில்லை” என்றெழுதிய
உனக்கு – என்
மறுகாதல் பற்றி பேச
மட்டும் எவ்வாறு முடியும்?

என் பேனையின்
சுதந்திரம் - என்
தனி வாழ்வில் இல்லையென்பது
பழகிய உனக்கு கூட
தெரியவில்லையா…?

எதற்கெடுத்தாலும் நான்
உன்னைப் புரியாதவள் என்கிறாய்...
முன் பின் முரணான
உன்னை யாரால் தான்
புரியமுடியும்?
புரிந்துகொள்வதைப் போல்
உள்ளொன்று வைத்து
நடிக்கவும் முடியாது என்னால்…
நடிக்க முடிந்திருந்தால்
பல ஞாபகங்களை தொலைத்துவிட்டு
பல ஆண்களை நாடியிருப்பேனே….

பலமுறை முயன்று விட்டேன்..- ஒருவேளை
என் பேச்சு
உனக்கு பிடிக்கவில்லை
என்பது வெறும் பொய்யோ
என்ற நப்பாசையில்…
மீண்டும் மீண்டும்
நீ விலகும் போது
வலித்தாலும் புரிகிறது
அது உண்மை என்று…
மீண்டும் வந்து
அருகில் நிற்க – என்
குழந்தை மனம்
துடித்தாலும் - அது
என் பெண்மைக்கு இழுக்கு….

என் எழுத்தில் என்னை
கண்டுகொள்ளும்
கவிஞன் உன்னிடம்…
கவிதையிலேயே வாழ்த்துக் கூறி
பிரிகிறேன்…
கவிதையில் பிறந்த
நம் உறவு
கவிதையிலேயே நட்பாக மரணிக்கட்டும்…

என்றும் அன்புடன்
மீரு






உன்னுள் நான் இருக்கின்றேனா?




நீ இல்லை என்பது
நிதர்சனமான பின்பும்
தொலைய மறுக்கிறது
உன் நினைவுகள்….

உன் முன்பும் - என்
மனதில் எவனும்
புதிந்ததில்லை
பின்பும் முயன்று
தோற்றுவிட்டார்கள்….

ஆனால் என்னுள் ஒரு
சிறு கேள்வி…
உன்னுள் நான்
இன்றும் இருக்கின்றேனா…?
பல நாள் வினாவிற்கு
பதிலாகியது…- உன்
மனைவி அருகில்
இருக்கும் போதும் - அவளைக்
கடந்து பார்வையை
என்னில் பதித்து – நீ
உன் குழந்தையின் கன்னத்தில்
அழுந்தப் பதித்த
முத்தம்……

என்னவனே எங்கிருக்கின்றாய்?

என் விடியல்களை பகிர்வதற்கும்
பொழுதுகளில் கைகோர்ப்பதற்கும்
கனவுகளின் கதவை திறப்பதற்கும்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

என் சிறு நகர்வுகளை கூட கூற
பருவ சந்தேகங்களை வினவ
காலைக் கனவுகளையும் - என்னைக்
கடக்கின்ற ஒவ்வொரு கணங்களையும்
உன்னிடம் சொல்ல ஆசிக்கின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

அடுத்தவர்கள் என்னை
விமர்சிக்கும் போதும்
சந்தேகிக்கும் போதும்
என்னவன் இங்கிருக்கின்றான் என
சுட்டுவிரல் நீட்ட தேடுகின்றேன்….
கைகோர்த்து நடப்பதற்கும்
கவலைகளில் தோளில் சாய்வதற்கும் - என்
கஷ்டங்களில் கைநீட்டுவதற்கும்
வலிபட்ட இடங்களை
வருடி விடுவதற்கும் - உன்னை தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சீண்டுவதற்கும்
சிறு சண்டைகள் போடுவதற்கும் - அடுத்தவள்
உன்னைப் பார்க்கும் போது
உரிமைச்சட்டம் வாசிப்பதற்கும்…
ஊடல் கொள்வதற்கும்
கூடல் செய்வதற்கும்
கெஞ்சுவதற்கும் - குழந்தையாக
உன்னைக் கொஞ்சுவதற்கும்
தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சிறு காயம்பட்ட இடத்தில்
வருடுகின்ற அம்மாவின் பரிவையும்
கண்டிப்பாக பேசி - என்னை
வழிநடத்துகின்ற அப்பாவின் சாயலையும்
கூட்டத்தில் கூட பார்வையால் - என்னை
தொடர்கின்ற அண்ணாவின் பாசத்தையும்
சீண்டல்களால் கவலைகளை மறங்கடிக்கும்
தம்பியின் அன்பையும் - சேர்த்து
செய்த கலவையான ஒருவனாய்..
உன்னைத் தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

உன் தோளில் சாய்ந்து – என்
கண்ணீரால் மனச்சுமைகளை கரைத்து- உன்
உதடுகள் என் நெற்றியை
ஈரப்படுத்தப் போகும் - அந் நாளுக்காக
காத்திருக்கின்றேன் கண்ணா….
என் நண்பர்களில் ஒருவனா நீ?
எதிரிக் கூட்டத்தில் இருக்கின்றாயா?
இல்லை அன்புள்ள எதிரியா?
தினம் தினம் - உன்னைத்
தேடியே தொலைகின்றேன்…..
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

மாலைநேரம் கடற்கரையில்….


நினைவு தெளிந்த நாளிலிருந்து –
ஓர் ஆசை…..
கடற்கரையில் மாலைநேரமொன்றை
செலவிட வேண்டுமென்று
பலமுறை குடும்பத்தினருடன்
சென்று விட்டேன் - ஆனால்
அந்த தனிமை
அந்த கவிதைப் பொழுது
இதுவரை கிடைத்ததில்லை

அப்பாவிடம் கேட்டுவிட்டேன்
அவருக்கு அலுவலக வேலையாம்
அம்மாவிடம் கேட்டேன்
அவருக்கு வீட்டுவேலை அதிகமாம்
அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை
தம்பிக்கு தன் நண்பர்களுடன்
செல்வது தான் பிடித்திருக்கின்றதாம்
நண்பிகளை கேட்டால் - தம்
ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம்
நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக…
என் நண்பனிடம் கேட்னே;
எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார்
தனியே போவதற்கும் தைரியமில்லை

சில நேரங்களில் சில வினாக்களுக்கு
விடை கிடைப்பதில்லை….
இங்கும்
எனக்கு மட்டும் ஏன்?
யாருடன் தான் நான் போவது?
பல வினாக்கள் …- ஆனால்
இனிமேல் யாரிடமும்
கேட்கப்போவதில்லை..

என்றோ ஒரு நாள்
பௌர்ணமி தினத்தில்
கடற்கரை மணலில்
இனியதொரு மாலைப்பொழுதில்
என்னவனின் விரல்களை பிடித்தபடி
வெண்ணலைகள் எம் கால்களை
செல்லமாக மோத – அவன்
தோளில் முகம் புதைத்து – அவன்
வியர்வை மணம் சுவாசித்து
ஆரவாரங்களுக்கு மத்தியிலும்
மௌன மொழி பேசிக்கொண்டு
ஒரு கவிதைப்பொழுது
எனக்கும் கிடைக்கும் - என்ற
என் நிறைவேறாத
சின்ன சின்ன ஆசைகளுக்கான
(வழமையான) சமாதானத்தினை - என்
கடற்கரைப் பொழுது…
கற்பனைக்கும் - கூறி
கடிவாளமிடுகின்றேன்.



உன் முதல் குழந்தை



என்னைப் பார்த்த அன்றே கூறினாய் - என்
முகம் போன்றே மனமும் குழந்தையென்று..
தினமும் அழ வைத்தே வேடிக்கை பார்ப்பாய் - என்
குழந்தை சிணுங்கல்களை…

அதிகாலை அழைப்புக்களில் - இரசித்திருக்கின்றாய்
என் உறக்கத்தின் மழலை உளறல்களை…
என் பிடிவாதங்களில் கூட குழந்தைதனமிருப்பதாக
சாடியிருக்கின்றார் - உன்
முதல் குழந்தையும் நானென சத்தியம் செய்திருக்கின்றாய்

நீ என்னை குழந்தையாகவே நடத்துவதால்
பல தடவைகள் ஊடல் கொண்டிருக்கின்றேன் உன்னிடம்…

இன்று அதை காலம் கடந்த பின்
ஒப்புக்கொள்கின்றேன் - தாயின்
காலைச் சுற்றும் குழந்தையாய் - நீ
இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்ட பின்பும்
உன்னையே – என்
நினைவுகள் சுற்றி – உன்
ஞாபகங்களுடனேயே வாழ – என்
மழலை மனம் அடம்பிடிப்பதால்….


எங்கே வைத்துவிட்டேன்..



அதிகாலையில் கண் திறவாமல்
தலையணையின் கீழ் - நான்
தேடும் அது….- என்
கனவுலகின் ஆதாரம் - என்
சோகங்களின் வடிகால் - அதை
எங்கே வைத்து விட்டேன்?

என் பருவகாலத்து பொக்கிஷம்
என் மனதின் முதற் சித்திரம் -என்
இராக் கனவின் மூலதனம் - அதை
எங்கே வைத்துவிட்டேன்?

புத்தக அடுக்குகளை புரட்டியாகிவிட்டது
தலையணைகளை தட்டியாகிவிட்டது
உடைகளை உதறிப்பார்த்தாகிவிட்டது
குப்பைக் கூடையைக் கூட கொட்டிப்பார்த்தாகிவிட்டது

எங்கேயது…..? – என்னளவிலான
மனித தேடல் முடிவுபெற
இறை நேர்த்தியும் வைத்தாகிவிட்டது
தேடுகிறேன்…
தேடுகிறேன்….

உள்ளுணர்வு ஏதோ சொல்ல – என்
நாட்குறிப்பைத் திருப்புகின்றேன் - இதோ
கிடைத்துவிட்டது
என்னவனின் புகைப்படம்….

தொலைத்து விட்டேன்...

எத்தனை கைக்குட்டைகளை தொலைத்திருப்பேன்
எத்தனை சவரன் நகைகளை தொலைத்திருப்பேன் - ஏன்
எத்தனை எத்தனையோ ஆயிரம் ரூபா தாள்களைக் கூட
தொலைத்திருக்கின்றேன் - அப்போதெல்லாம்
அம்மாவின் கடுஞ்சொற்களை விட எதுவும்
வலித்ததில்லை

இன்று உன் கரம்பட்ட
பத்து ரூபா தாளை தொலைத்துவிட்டேன்
வழிகளிலெல்லாம் அலைகின்றன – என்
விழிகள் வலியுடன்

மீண்டும் கிடைக்கவில்லை – அது
உன்னைப்போல் என் வாழ்வில்
எவ்வளவோ முயற்சித்தும்....

இப்போதெல்லாம் - உன்
நினைவுகளைப் போலவே
என்னிலிருந்து தொலைகின்றன – நம்
(காதல்) சின்னங்களும்

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை