Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

முயலாமையால்……


நிலை - 01

ஒரு காட்டில ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்திச்சாம். (ஒன்று ஒன்று தானா இருந்தது என்று எடக்குமுடக்கா கேட்க கூடாது சொல்லிப்புட்டன்). இரண்டுக்கும் இடையில் யாரு நல்லா ஓடுவாங்க ? என்ற விடயத்தில் பிரச்சினை வந்தது. இந்த சண்டை முடிவில் ஓட்ட பந்தயம் வைக்கிறது என்று முடிவானது.

பந்தயம் தொடங்கியதும் பாஞ்சு விழுந்து ஓடிய முயல் சற்று தூரம் போனதும் திரும்பி பார்த்தது. ஆமை ஆரம்ப புள்ளியிலிருந்து கொஞ்ச தூரம் தான் நகர்ந்திருந்தது தெரிஞ்சுது…..  சப்பா கொஞ்சம் டயடா இருக்கு… ரெஸ்ட் எடுத்துட்டு ஓடுவம் என்று மரத்திற்கு கீழ குந்தின முயல் அப்படியே தூங்கிட்டுது…. தடார் என்று எழும்பி பார்த்தா ஆமை கோல்ட் மெடலோட கையில் பிளவர் பஞ்சோட சிரிச்சுக்கொண்டு போட்டோக்கு போஸ் குடுத்துக்கொண்டிருந்தது. “ஐயோ சோம்பேறிதனத்தால தூங்கிட்டமே” என்று தன்னையே நொந்து கொண்டது முயல். அன்று இரவு புல் பொட்டில் சாராயம், சிக்ரட் பைக்கற் என்று கவலையை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டது.

இது முயல்  + ஆமை (யால்) =  முயலாமையால் தோற்கடிக்கப்பட்ட கதை
(வெயிட் நீங்க கடுப்பாவது புரியுதுங்க…..)

நிலை – 02

எப்படியோ வென்றிட்டமே இனி நான் ஒலிம்பிக்கில ஓடலாம் என்று நினைத்த ஆமை டெய்லி ப்ரக்டீசுக்கு போய்க்கொண்டிருந்தது. இத பார்த்த முயல் “ஹலோ ஏதோ ஒரு நாள் வெற்றி பெற்றிட்ட பட் இனி உன்னால் முடியாது” என்று ஆமையை வம்புக்கிழுத்தது. “ஏய் மிஸ்டர் வேனுமினா இன்னொருக்கா ஓடி பாரும்…..” என்று பதிலடி கொடுத்தது ஆமை. அவ்வளவு தான் முயல் “மீண்டும் ஓடி பார்ப்பமா?....” என்று கேட்டது. ஆமையும் ஓவர் கொன்பிடன்ஸ்ல மண்டையை ஆட்டியது.

இரண்டாவது பந்தயம் ஆரம்பமானது. முயல் மூச்சுப்பிடிச்சு ஓடியது. ஆமை ஒரு கிலோமீற்றர் தாண்டுறதுக்குல்ல அது போய் சேர்ந்துவிட்டது..... வெற்றி பெற்ற முயல்ற ஹாண்ட்சத்தை பார்த்து பல தயாரிப்பாளர்கள் கரட் யூஸ், டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கு அப்பவே புக் பண்ணிட்டாங்க என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்….. இங்கே ஆமை ஓவென்று அழுதுகொண்டிருந்தது.

இது ஆமை முயற்சி செய்யாமையிலால் அதாவது “முயலாமையால்” தோற்ற கதை…

நிலை – 03

இந்த முறை ஆமையும் முயலும் சொப்பிங் செண்டர்ல கண்டும் காணாததும் போல இருந்தாலும் இருபக்க அள்ளக்கைகளும் சும்மா இருக்க முடியாம திரும்ப ஒரு ரேஸ் வைப்பமா என்று ஆளாளுக்கு உசுப்பேத்தின. இனி என்ன செய்வதென்று நம்ப ஹீரோ முயலும் ஹீரோயின் ஆமையும் (நோட் திஸ் பொயிண்ட்) சம்மதித்தன. பட் இந்த தடவை ஒரு நிபந்தனை போட்டது ஆமை. “ஒரே வீதியில் மட்டும் ஓடாம இந்த தடவை நீச்சல் போட்டியும் வைக்க வேண்டும்” என்றது. முயலக்கு இது தன்மான பிரச்சினையாகிவிட்டது. ஒரு பொண்ணுட்ட நான் தோற்பதா? என்று…. “என்ன நாங்க நீந்தமாட்டம் என்று நினைத்தீங்களா…. பொறுத்திருந்து பார்…..” என்று சவால் விட்டு சம்மதித்தது.

3வது போட்டி தொடங்கியது. தரையில் பாய்ந்தோடிய முயல். தண்ணீரை கண்டதும் அப்படியே நின்று விட்டது. அப்போது தான் முயலுக்கு ஸ்விம்மிங் கிளாஸ் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பட் இட்ஸ் டூ லேட்… ஆமை நல்லா ஸ்விம் பண்ணி போய் இலக்கை அடைந்துவிட்டது. இதிலென்ன ஆச்சரியம் என்றால் முயலும் போய் ஆமையை விஷ் பண்ணியது.
அன்றிலிருந்து எங்காவது கண்டால் இரண்டும் ஹாய் சொல்லிக் கொண்டன. முயல்ற கனவுல ஆமை ஸ்விம்மிங் டிரஸ்ல வாறதும்: ஆமையோட கனவுல கஜனி சூர்யா ரேஞ்சில் “சுட்டும் விழி சுடரே…..” என்று முயல் வாறதும் தொடர்ந்தன. ஒரு நாள் “ ஐ லவ் யூ டா செல்லம்…” என்று முயல் காட்டுப்பூ ஒன்றை கொடுக்க “மீ டூ டியர்” என்று ஆமையும் வாங்கிக்கொண்டது. ஆக மொத்ததில் மோதலில் தொடங்கிய உறவு காதலில் முடிந்தது.

இது முயல் + ஆமை இரண்டும் முயற்சி செய்யாமல் மோதி அதாவது “முயலாமையால்” காதலில் வென்ற கதை.

நிலை – 04

இப்படியே இருக்கும் போது நம்ம கதாநாயகர்கள் படிக்கும் யூனிவர் சிட்டியில் ஓட்டப்பந்தயம் ஒன்று ஏற்பாடாகியது. இருவரது விரிவுரையாளர்களும் தங்களது மாணவர்களது சம்மதத்தினை கேட்காமலேயே இருவரது பெயரையும் கொடுத்துவிட்டனர். இந்த முறை பலர் இதில் கலந்துகொண்டனர்.

4வது பந்தயம் தொடங்கியது. இந்த தடவை தரை வழிப்பாதையில் ஓடும் போது முயல் ஆமையின் கையை பிடித்துக்கொண்டு ஓடியது. நீர்வழிப்பாதையில் ஆமை முயலுக்கு உதவிசெய்தது. இருவரும் ஒரே நேரத்தில் இலக்கை அடைவதற்கு முன் ஆமை முயலுக்கு விட்டுக்கொடுக்க…. முயல் ஆமைக்கு விட்டுக்கொடுக்க…. என்று சென்டிமெண்ட் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது பின்னால் வந்த அனிமல் முன்னுக்குப்போய் மெடல் வாங்கியது. (மெடலா முக்கியம் செண்டிமென்ட் தான் முக்கியம்.)

இது முயல் ஆமையாலும் , ஆமை முயலாலும் ஆக மொத்தத்தில் “முயலாமையால்” தோற்ற கதை

நிலை – 05

இது அவங்க பேசனல் பந்தயம்… சொறி ஓட்டம் அதாவது இருவரது காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வந்து காட்டு நாட்டாமை சிங்கத்தின் தீர்ப்பினால் இருவரும் ஓடிப்போன கதை… அடுத்தவங்க தனிப்பட்ட விடயத்தினை பற்றி கதைப்பது நல்லதில்லைங்க… நமக்கேன் வம்பு? எந்தக் காட்டிலாவது பல்லாண்டு காலம் வாழட்டும்.

இதுவும் முயல் + ஆமை காதலால் அதாவது “முயலாமையால்” காடு தீப்பற்றிய கதை. 

என்னை கதை சொல்லு கற்பனையை வளர்த்துக்கொள் என்று பல்கலைக்கழக வாத்தியார் சொன்னாலும் சொன்னர்.... கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுது.... இனிமேலும் யாரும் குழந்தைகளை ஏமாற்றாமல் , இந்த பாட்டி வடை சுட்டா என்று அல்லது முயல் ஆமை என்று சொன்ன கதையையே திரும்ப சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா....  இல்லாட்டி எனக்கு கோல் போட்டும் கதை கேட்கலாம்.....

படைப்பு

காட்டுச் சிங்கம் ஒன்று தன் குட்டிக்கு நகரத்தினை சுற்றிக்காட்ட புறப்பட்டு நகரக்குள் நுழைந்ததாம். ஓவ்வொன்றாக அதற்குக் காட்டி விளக்கம் கொடுத்துக்கொண்டு வந்ததாம். புத்திசாலியான குட்டிச்சிங்கமும் வினாக்களை எழுப்பி தன் சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொண்டு வந்ததாம்.

இவ்வாறு உலா வரும் போது பூங்காவொன்றில் சிலையொன்றை குட்டிச் சிங்கம் கண்டதாம். “சிங்கமொன்றின் வயிற்றுப்பகுதியை மனிதனொருவன் ஈட்டியால் குத்திக் கிழிப்பதாகவும் அவன் காலொன்று தலையைத்திருப்பி கடிக்க முயல்கின்ற சிங்கத்தின் பிடிறிப்பகுதியில் அழுத்துவது” போன்றும் அமைந்திருந்ததாம். 

விடுமா அந்த சிங்கக்குட்டி?... “அப்பா அப்பா ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் இந்த சிலையை? நம் இனம் தானே காட்டின் ராஜா… காட்டு விலங்குகள் முதல் காட்டுக்கு வரும் மனிதர்கள் வரை நமது கர்ச்சிப்பை (ஹலோ மூஞ்சு துடைக்கும் துணியில்ல சிங்கத்தின் சவுண்டு)  கேட்டாலே ஓடி விடுகிறார்கள் அல்லது கூட்டாக வந்து பல பொறிகளை பாவித்து பிடிக்கிறார்கள். அப்படியிருக்க இந்த சிலையில் மட்டும் ஏன் தனித்து நின்று எம்மினத்தவனை கொல்லுவது போன்று சிலை வடித்திருக்கிறார்கள்” என்று கேட்டதாம்.

தன் குட்டியை அர்த்தத்துடன் திரும்பிப் பார்த்த அப்பா சிங்கம் சற்றே சிரித்துக்கொண்டே (சிங்கம் கதைக்கும் போது சிரிக்காதா?) சொன்னதாம் “மகனே இதை மனிதன் செய்ததால் தன் இனத்தவன் நம்மினத்தவனை கொல்வது போன்று சிலை வடித்திருக்கின்றான். இதே சிலையை நமக்குச் செய்யத் தெரிந்திருந்தால் அவனை நம்மினத்து சிங்கம் ஒன்று கடித்துக்குதறுவது போன்று வடித்திருப்போம். அது தான் யதார்த்தம். நம்மைப் பற்றி நாமே பெருமைப்பட்டுக்கொள்வது தான் மனதின் இயல்பு” என்று நீண்ட விளக்கமொன்றினை அளித்ததாம்.

மீண்டும் அந்த வாலு (அதான் குட்டிச் சிங்கம்) கேட்டதாம்.... “அப்பா  அப்படியென்றால் உண்மை நிலையை காட்டுவதில்லையா… நாளைய தலைமுறை இதை பார்க்கும் போது கேவலமாக நினைக்கமாட்டார்களா எம்மினத்தவர்களின் வீரத்தினை…?” என்று…

அதற்கு அப்பா சிங்கம் “அன்னம் போன்று இருக்க வேண்டும் மகனே.. நல்லதை மட்டும் எடுக்க வேண்டும்! மாடு போல் இருக்க வேண்டும்… படித்தவற்றினை அசை போடுவதில்! (ஒரே அனிமல்சா இருக்கில்ல…ம்ம்ம்ம்ம்.. சிங்கம் அதன் லாங்குவேஜ்ஜில் தான் பேசுமுங்க..) படைப்புக்களை இரசிக்கலாம் ஆனால் படைப்புக்களை மட்டுமே சரித்திரமென்றிட முடியாது. நீயும் இச்சிலையை, அதில் அவன் கலையை இரசி! ஆனால் இது தான் உண்மை என்று தீர்மானித்திடாதே! என்று கூறியதாம். குட்டிச்சிங்கமும் அதானே பார்த்தேன் என்று பிடறி முடியை சிலிர்த்துக்கொண்டதாம்.

இது ஒரு உருவகக்கதையாக இருக்கலாம். ஆனால் இக்கதையின் கருவென்னவோ உண்மையானதொன்று.

சில மனிதர்கள் இப்படித்தான் தம் படைப்புக்களில் ஒழுக்கங்கள் பற்றி பிதற்றிக்கொண்டிருப்பார்கள் ஆனால் நிஜத்தில் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பார்கள். பெண்ணியம் பற்றி, தாய்மை பற்றி பேசுவார்கள் ஆனால் இரசியமாக பல பெண்களின் வாழ்வில் விளையாடுவார்கள்.. இதுவே பெண்கள் என்றால் மேடையில் பேசும் பெண்ணியத்தினை தம் வீட்டு அடுப்படியில் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை பார்க்கும் போது “சிகரெட் பெட்டி” இன் ஞாபகம் தான் எனக்கு வரும். (உடனே இந்த பொண்ணு சிகரெட் குடிக்கிறதோ என்று வழமை போன்று சிந்திக்க நினைத்தால் மண்டையில் குட்டு போட வேண்டும்) அந்த பெட்டியில் பார்த்தீர்கள் என்றால் சிகரெட்டின் தீமை பற்றி வெளி மட்டையிலேயே அச்சிடப்பட்டிருக்கும். உள்ளுக்குள் சிகரெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

எப்போதும் நாம் நாமாக வாழ வேண்டுமுங்க… இந்த பில்டப்புகள் நமக்கெதற்கு? போக்கிரியாக இருக்கின்றோமென்றால் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ண என்ன தகுதியிருக்கிறது? அடுத்தவரை விமர்சிக்க என்ன உரிமையிருக்கிறது..? மானங்கெட்டு இரட்டை வாழ்வு வாழ்வதை விட உடையில்லாமல் திரியலாம்…..






தோல்வி.....

குரு ஒருவர் தன் சிஷ்யன் ஒருவனுக்கு வில்வித்தை கற்பித்து வந்தார். ஒரு மாலை வேளை அந்த சிஷ்யனுடன் திறந்த வெளியொன்றிற்கு வந்த குரு அவன் முன்னால் பொருள் ஒன்றை நிறுத்தினார். பின் தன் சிஷ்யனைப் பார்த்து “உனக்கு விரும்பியளவு எத்தனை அம்புகள் உபயோகித்தாயினும் குறிபார்த்து அம்பெய்” என்று கூறினார். சிஷ்யனும் விளையாட்டாக அம்பெய்ய ஆரம்பித்தான். அவன் எய்த அம்புகளுள் பெரும்பாலானவை குறியை அடைந்ததுடன் சில அக்குறிக்கருகில் குத்திட்டு நின்றன.

சிறிது நேரத்தின் பின் அவனை அழைத்த குரு “ உனக்கு பத்து பொற்காசுகள் தருகின்றேன். விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும்” என்று கூறினார். சிஷ்யனும் தன்னால் முடியும் என்ற எண்ணத்துடன் கூடவே பத்து பொற்காசுகளை பரிசாக பெறவேண்டும் என்ற அவாவுடன் அம்பெய்ய ஆரம்பித்தான். ஆனால் அந்த அம்புகள் குறி தவிர்ந்த அதனைச் சுற்றியிருந்த இடத்திலேயே குத்திட்டு நின்றன. பரிதாபத்துடன் குருவை திரும்பிப் பார்த்தான். (கண்ணில் பத்து பொற்காசுகளை மிஸ் பண்ணிட்டம் என்ற ஆற்றாமையும் அந்த பார்வையிலிருந்தது.)

அவனை அருகில் அழைத்த குரு மீண்டும் அவனிடம் “ விரும்பியளவு அம்புகளை மட்டும் உபயோகித்து குறியை இலக்கு வைத்து அம்பெய்ய வேண்டும். உன் திறமைக்கு பரிசாக என் மகளை உனக்கு திருமணம் செய்து தருவேன்” என்று கூறினார். உடனேயே கண்ணை மூடி கற்பனையில் ஆழ்ந்தான் சிஷ்யன். “ சிவந்த நிறம், கூர் நாசி , மெல்லிடை, கருங்கூந்தல்…….. யப்பா….. என்னா அழகு…. நமக்கா அந்த அழகுப்பெட்டகம் கிடைக்கப்போகிறது.?....... குருவின் கனைப்பு கற்பனைக்கு கடிவாளமிட அம்புகளை எடுத்து வில்லேற்ற ஆரம்பித்தான்.

ஒன்று…

இரண்டு…

மூன்று…

ஐம்பது…

நூறு….

சை… ஒன்று கூட குறியைத் தாக்கியிருக்கவில்லை. (வட போச்சே…)

இப்படித்தாங்க நம் இலட்சியங்களும். நாம் நிபந்தனையற்ற இலட்சியங்களை கொண்டிருக்கும் போது அவை நேர் பாதையில் இடையூறின்றி பயணிக்கின்றன. ஆனால் என்று மனதில் அவற்றை முன்னிருத்தி வேறு விடங்களை பெற்றுக்கொள்ள நினைக்கின்றோமோ அப்போது நம் இலட்சியங்கள்  சிதற ஆரம்பிக்கின்றன. நாம் அடைய நினைக்கும் இலக்கை நோக்கி கவனத்தினை கலைக்காது செல்லும் போது நம் பயணங்கள் வெற்றி பெறுகின்றன. பாதையிலுள்ள கானல்நீரைக் கண்டு அவற்றினை நெருங்குவதற்காக பாதை மாறும் போது நாம் செல்ல வேண்டிய தூரங்கள் அதிகரிக்கின்றன. கானல்நீரினாலும் எதுவும் கிடைக்கப்போவதில்லை.

ஆகவே இலட்சியங்களை மனமாற காதலியுங்கள். பாதைகளில் ஆயிரம் முட்கள் இருக்கலாம். பலவித மிருகங்கள் பயமுறுத்தலாம். பல பள்ளத்தாக்குகள், புதைகுழிகள் இருக்கலாம். ஆனால் சிந்தையில் தெளிவு, மனதில் கடவுள், செயலில் நேர்மை , வார்த்தையில் உண்மை இருக்கும் போது எதுவும் நம்மை , நமது இலட்சியங்களைத் தடுத்திட முடியாது.

நமது இலட்சிய முடிவில் கூட முள் கொண்ட ரோஜா தான் தரப்படும் அதாவது தோல்வியை அருகில் நிறுத்திய வெற்றி தான் கிடைக்கும். முள் குத்தாமல் கவனமாக ரோஜாவினை இரசிக்க வேண்டுமே அன்றி ரோஜாவை எறியவும் முடியாது. முள்ளைப் களைந்திட்டால் ரோஜாவை வைத்திருக்கும் சுவாரஸ்யமும் போய்விடும்.

“தோல்வியைப் பற்றிய பயமே
தோல்வியைக் கொண்டு வருகிறது.
வெற்றியைப்  பற்றிய மிகைப்பட்ட
ஆசை தான் உன் சக்தியை உறிஞ்சுகிறது”



பிற்குறிப்பு
- சிஷ்யன் கடுப்பாகி அம்பெய்தலில் தோற்கடித்து மகளை மிஸ் பண்ண வைச்சிட்டாயே மாமா சொறி குரு என்று கத்தியதும் அது கத்திச் சண்டையாக மாறியதையும் பற்றி நமக்கு இங்கே தேவையில்லை என்பதால் இதை பற்றி நான் விரிவாக சொல்லவில்லை.

மாடி வீட்டு நாயும் ஒரு தெரு நாயும்.....


தெருவழியே ஒரு தெரு நாய் சென்று கொண்டிருந்ததாம். அந்த வழியிலே இருந்த மாடி வீட்டு நாயை கண்டதாம். அந்த வீட்டு நாய் அன்று தான் வீட்டுக்கதவை முதன் முதல் தாண்டி படலையடியில் உலா வந்து கொண்டிருந்ததாம். அந்த தெரு நாயும் படலையடியில் வந்து சிநேகமாய் சிரித்தது. சாறிங்க குரைத்தது. வீட்டு நாயும் பதிலுக்கு சிநேகமாய் குரைத்தது. தெரு நாய்க்கு ஏகப்பட்ட குஷி. லயிட்டா ஒட்டிக்கொள்ள நினைத்தது. தீடீரென எங்கிருந்தோ இதை கண்டுவிட்ட வீட்டு நாயின் சகோதர நாயும், நண்பன் நாயும் தங்கள் வீட்டு பெண் நாயுடன் நாய் மொழில் பேசிக்கொண்டன. “இந்த தெரு நாய் எங்கிருந்து வந்ததோ… பார் உடபெல்லாம் சொறியாக இருக்கிறது. பல தடவை இந்த நாயை பல தெருநாய்களுடன் கண்டிருக்கின்றோம்” என்று எச்சரிக்கை செய்தன. வீட்டு நாயும் அத்துடன் சிநேகமாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டது.

விட்டதா இந்த தெரு நாய்….? கீழிருந்தே பல முறை குரைத்து பார்த்தது. நான் எந்த நாயையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை… மற்ற நாய்களை பார் அவை தான் அப்படி…. எனக்கு பின்னுக்கு எத்தனை பெண் நாய்கள் திரிகின்றன என்று பிதற்றியது. தன் ஜம்பங்களை சொல்லி (கவிதையாக) ஊளையிட்டு பார்த்தது. வேறு தெருக்களில் அலைந்ததை பற்றி கதையளந்தது. எங்கிருந்தோ புதிதாக வந்திருந்த தன் சக நாய்களுக்கும் கீழிருந்தவாறே அந்த வீட்டு நாய் எப்படி இருக்கு என்று காட்டி… அறிமுகம் செய்ய முயன்றது. தன் குடும்ப நாய்களையும் அறிமுகப்படுத்தியது வீட்டு நாய்க்கு தன் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக… இறுதியாக நீயில்லாட்டி என்னால் இருக்க முடியாது என்று பாவ்லா காட்டியது… கடுப்பேத்த நண்பன் நாயையும் வீட்டு நாயுடன் இணைத்துக் கதைத்து பார்த்தது. சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் “கொஞ்சம் நேரம் தரமுடியுமா நாயே?” என்று கேட்டது. “அதற்கென்ன காலமெல்லாம் காத்திருக்கும் காவியக்காதல் என்னுடையது” …..மனிதக்காதல் அல்ல அல்ல… அதையும் தாண்டி புனிதமான நாய்க்காதல்… என்று “குணா” கமலஹாசன் ரேஞ்சில் பதில் சொல்லியது.

சிறு வயதிலிருந்தே செல்லமாகவும் பயிற்சியுமளிக்கப்பட்ட அந்த வீட்டு பெண் நாய் மௌனம் சாதிக்க முடிவெடுத்தது. கூடவே கொஞ்சம் நேரம் எடுக்க யோசித்தது. “ஏன் பல பெண் நாய்கள் தன் பின் சுற்றும் போது இந்த நாய் என்னை பார்க்க வேண்டும்.” என்ற சந்தேகம் வீட்டு நாய்க்கு ஏற்பட்டிருந்தது. எப்படியும் (நாயின்) வேஷம் கலைய கொஞ்ச நாள் எடுக்கும் அதுவரை பொறுப்போம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு காத்திருந்தது.
கொஞ்சம் பொறுத்துப் பார்த்த தெரு நாய் பொறுமை இழந்தது… “என்னடா இந்த வீட்டு நாய் கீழிறங்கி வராதா? ஒரு வேளை வேறு நாயை பார்த்து விட்டதோ அல்லது நமது தெருக்கூத்துகள் விளங்கி விட்டதோ?” என்று லேசாக கலைய ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து வந்த தன் தெரு நாய் சகாக்களிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் “இந்த வீட்டு நாய் தான் என் பின்னால் அலைந்தது. நான் தான் அந்த பைத்தியகார நாயை வேண்டாம் என்டிட்டன்” என்று சொல்லிக்கொண்டது. கூடவே நின்ற சொந்தக்கார நாய்களும் கிடைத்தது போதும் என்று நழுவ தொடங்கின.

சற்றே கோபப்பட்ட வீட்டுநாய் தெருநாய் ஏன் அலைந்தது என்று கேட்க எத்தனித்தது. தடுத்த வீட்டு நாயின் தாய் நாய் சொன்னது “அதனளவு நாம் இறங்கினால் நம் மதிப்பு கெட்டிடும் கண்ணம்மா…எல்லாம் நன்மைக்கே ”

தன் தங்கை நாயுடன் நின்ற ஆண் நாயும் நண்பன் நாயும் அந்த வீட்டு நாயிடம் சிரித்தபடியே “தெரு நாய் என்றும் தெரு நாய் தான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தை ஒரு நாள் காட்டிவிடும். நீயும் அதனுடன் சேர்ந்து சொறி சிரங்கு படாமல் தப்பித்தாய் என்று நினைத்துக்கொள். அந்த நாய் உன்னைப்பற்றி சொல்வதால் நீயொன்றும் குறைவதில்லை. நம் வீட்டிற்கு பண்பாடிருக்கிறது. உன் தகுதிக்கு நல்ல அல்சேஷன் நாயே கிடைக்கும். விடு இந்த தெரு நாயை…” என்று கூறின.

சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் அந்த தெரு நாய் இன்னொரு நாயுடன் போவதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டது கூடவே மனதுள் பாட்டும் படித்துக்கொண்டது “ இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி மிருகக் காதல்….”

குறிப்பு - தகுதியறிந்து பழக வேண்டும்

ரகசியத்தை சொல் கிளியே – அநுராதாரமணன்

அன்றாடம் நாம் பலவித விடயங்களை கடந்து செல்கின்றோம். என்றாலும் சில விடயங்கள் நம் உள்ளங்களில் ஏதோவொரு புள்ளியை தொட்டு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அவ்வாறான ஒரு தாக்கத்தினை என் மனதில் ஏற்படுத்திய ஒரு படைப்பு தான்  அண்மையில் நான் வாசித்த ஒரு புத்தகம். “ரகசியத்தை சொல் கிளியே” என்ற பிரபல இந்திய எழுத்தாளர் அநுராதாரமணன் எழுதிய இந்நூல் கங்கை புத்தக நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நூலில் “ரகசியத்தை சொல் கிளியே” “உனக்காக உமா” என்கின்ற இரு நாவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இரண்டுமே வரதட்சனை எவ்வாறு திருமண சந்தையிலும் காதலிலும் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வௌ;வேறு கோணங்களில் விளக்கியிருந்தது.

ரகசியத்தை சொல் கிளியே

இம் முதல் கதையில் தன் தங்கை குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து அவளது மகளை தனது மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நினைக்கின்றார் ஒரு தாராள மனப்பான்மை உடைய தந்தை. ஆனால் ஒரு காலகட்டத்தில் பொருளாதார அழுத்தங்கள் தாளாமல் மற்றதொரு பணக்கார தங்கையின் மகளுக்கு மகனை மணமுடித்து கொடுத்து விடுகிறார்.
இக்கதையின் நாயகி “கிளி” சிறு வயது முதல் அத்தானுக்காக வாழ்ந்து வரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறாhள். கிராமத்து வெகுளித்தனமும் குழந்தை மனமும் முகத்திலடித்தால் போன்று பேசும் குணமும் சேர்ந்த கலவை. தன் அத்தான் இன்னொருத்திக்கு கணவனாக போவது தெரிந்து “ இன்றிலிருந்து ஒரு வருடத்தினுள் உன் கையால் மறு தாலி வாங்குவேன்” என சபதமிடுவதும் “நீ அவளை தொடக் கூடாது “ என அத்தானிடம் சத்தியம் வாங்குவதும் யதார்த்தத்திற்கு பொருந்தாவிட்டாலும் கிராமத்து பெண்ணின் வைராக்கியத்தினை மனதில் வரித்துவிட்டவனை அடைய வேண்டுமென்ற பிடிவாதத்தினை காட்டுவதாக அமைந்திருந்தது.

நகரத்து பணக்கார பெண்ணாக வரும் நளினா வாசலில் நைட்டியுடன் நின்று கோலம் போடுவது நிச்சயம் இன்றைய நாகரீக பெண்களை கண்முன் நிறுத்துகிறது. தனது கணவனுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுப்பதும் பணக்கார திமிறின்றி ஏழையான கிளியுடன் சகஜமாக பழகுவதும் நளினாவின் குணாம்சங்களாக கூறப்படுகின்றது. இது நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி....

நளினா மற்றும் கிளியின் பாட்டி காவேரி முதலில் கிளியுடன் பாசமக இருப்பதும் பின் புதுப் பணக்கார பேத்தியை கண்டதும் அவள் கட்சிக்கு தாவி கிளியை உதாசீனம் செய்வதும் “பணத்தைக் கண்டவுடன் நிறம் மாறும் பச்சோந்தி மனிதர்கள்” இன்றும் எம்முடன் வாழ்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றார்.

கிளியின் அத்தானாக வரும் முத்து பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் போது “மூட்டை தூக்கியாவது கிளியை காப்பாற்றுவேன்” என்றும் திருமணத்திற்கு முதல் நாள் கிளியை சந்திக்கும் போது “அப்பா ரொம்பக் கஷ்டத்தில இருக்கார் கிளி... இல்லையினா அவரும் இப்படிப் பேசக் கூடியவர் இல்லே....” என்று நழுவியதும் தான் ரொம்ப நல்லவன் என்று புது மனைவியிடம் காட்டுவதற்கு “என்னைக் கூடுமானவரைக்கும் கூப்பிடாம இருக்கிறதே நல்லது....” என எரிந்து விழுவதும் அதே மனைவியிடமே சில நாட்களில் “ மச்சமா இது … நான் ஏதோ மை ஒட்டிருக்கோ என பார்த்தேன்...” என வழிவதும் இன்றைய யதார்த்தம்.

முத்துவை விடவும் படித்த பணக்கார மாப்பிளைகளை பெற்றோர் பார்கும் போது இப்போது எனக்கு திருமணம் வேண்டாம் என்பதும் எனக்கு திருமணம் தேவைப்படும் போது உங்களுக்கு சொல்கின்றேன் என முகத்திலடித்தால் போல சொல்வதும் கிளியின் காதலின் அளவை அவளோடு ஒப்பிடும் போது முத்துவின் கயமையை காட்டுகிறது.

நளினாவிற்கு ஏற்படும் சிறு சிறு விபத்துக்களுக்கு கிளியை சூழ்நிலைக் கைதியாக்கி அடித்துக் கொடுமைப்படுத்தும் போதும் வாசிப்பவர்களுக்கே நெஞ்சம் கணக்கின்றது. இறுதியாக முத்து – நளினாவின் குழந்தையை கையில் ஏந்தியபடி “ அட நான் தானே உனக்கு இப்ப பொண்டாட்டியையே திருப்பிக் கொடுத்திருக்கிறேன்? இதைவிட வேற என்ன தரமுடியும்.....?” என்பதும் “ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அப்பனுக்கு பொண்ணாh பொறந்து....” என கிளியின் கடைசி உரையாடலாக கதையின் இறுதி வரிகளாகவும் அமைகின்ற இவ்வாத்தைகள் நிச்சயம் இன்று சமூகத்தில் உள்ள முதுகெலும்பில்லாத ஒவ்வொரு சூழ்நிலையை காரணங்காட்டி தப்பித்துக்கொள்ளும் “முத்து” கதாபாத்திரங்களை நிச்சயம் ஒரு தடவை சுட்டியுமிருக்கும் சுட்டுமிருக்கும் வசனங்கள்.

இந்நூல் என்னைக் கவர்ந்திருந்தது என்பதனை விட என் உணர்வுகளை மிகவும் பாதித்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் இத் தாக்கத்தின் பிரதிபலிப்பு எனக்கு இருந்தது என கூறலாம். “ஏன்?” என்ற வினாவினை என்னுள்ளே எழுப்பிய போது “கிளி” பாத்திரத்தின் வெகுளித்தனம், பிடிவாதங்கள் என்னிலும் அடக்காமாகியிருந்ததினை உணர முடிந்தது. ஆனால் இதன் முடிவினை வாசித்த போது என் மனதின் ஒரு புள்ளியில் வலித்ததையும் உணர்ந்தேன்.

உங்களுக்கும் இப்புத்தகத்தினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள் நிச்சயம் நீங்களும் ஒரு கிளி, முத்து , காவேரி என நீளும் இக்கதையின் பாத்திரங்களுள் யாராவது ஒருவரை கடந்திருப்பீர்கள்.

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை