கையளவு மனசு

Free Heart Meets Nature Image - Anatomical, Heart, Watercolor | Download at  StockCake 
மனசு என்பதும் இதயம் என்பது ஒன்றா என்கின்ற கேள்வி உங்களிடமும் உண்டு என்னிடமும் உண்டு. நான் நினைக்கின்றேன் மனசு என்பது உணர்வு இதயம் என்பது உறுப்பு. இந்த இதயம் இருக்கின்றதே அதன் அளவு ஒவ்வnhருவருடைய கை முண்டியின் அளவாகவே இருக்கும் என அனட்டமி சொல்கின்றது. மனமும் நம் கையில் தானே உண்டு. அதாவது நாம் எவ்வாறு என்பதை எம்முடைய குணாதிசயம் என்ன என்பதை, பண்பை தீர்மானிப்பதும் நம் செயல்கள் தானே... ஆக கையளவு தான் மனசு! 
  
சம்பவம் - 01

இரு தினங்களின் முன்னர் என்னுடைய பதின்ம வயது நண்பியை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக அறியக்கிடைத்திருந்தது. எம் வீட்டிற்கும் வந்து இனிப்புகள் கொடுத்திருந்தனர். நான் அப்போது நாட்டில் இருக்கவில்லை. பின்னர் வந்தவுடன் தகவல் கிடைத்தும் போக முடியவில்லை. எனவே சந்தித்த போது எனக்கும் சற்று தலைக்குனிவாகவே இருந்தது. குழந்தை பற்றி கேட்ட போது நண்பி சொன்ன விடயம் பெருத்த அதிர்ச்சியை என்னுள் தோற்றுவித்திருந்தது. இன்று காலை தான் விவாகரத்திற்கு விண்ணப்பித்தாக சொன்னது தான் அது. எனக்கு தெரிந்து இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்துகொண்டவர்கள். அதிர்ச்சி மாறாமல் சரி குடும்ப நண்பர்களை இருத்தி பேசி முடிவெடுங்கள் அவசரப்பட வேண்டாம் என்றேன். “ இனி என்ன இருக்கின்றது இதை பாருங்கள்” என்று தொலைபேசியை காட்டினார். அதில் அவரின் கணவர் இன்னொரு பெண்ணிடம் அனுப்பிய குறுந்தகவல்கள். வாசிக்கவே அருவருப்பாக இருந்ததாலும் எனக்கும் மற்றவர்களது தனிப்பட்ட விடயத்தில் அத்துமீற விருப்பமில்லை என்பதாலும் மீளவும் தொலைபேசியை கொடுத்துவிட்டேன். நண்பி குறிப்பிட்டதன் படி அவர் கர்ப்பமாகவிருந்த காலத்திலேயே கணவர் இவ்வாறு அந்தப்பெண்ணுடன் பேசி வந்திருக்கின்றார். எதிர்பாராமல் தொலைபேசியை பார்த்த போது தான் மனைவியிடம் சிக்கியிருக்கின்றார். 
இங்கு நாம் வேறொருவரை நேசிப்பதோ அல்லது ஏற்கனவே உள்ள உறவை முறித்துக்கொள்வது என்பதோ நிகழ்வின் வேறு கோணம். ஆனால் இருவராக நடிக்கின்றோம் பாருங்கள் அங்கு தான் நாம் தோற்கின்றோம் அல்லது நம்மை நாமளே கேவலமானவர்களாக்கிக்கொள்கின்றோம். நிச்சயம் நல்லதொரு பண்பான தாய் தகப்பனால் இப்படிப்பட்டவர்கள் வளர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள். நாம் ஓர் உறவில் இருக்கின்றோம் நம்முடைய மனம் அலைபாய்கின்றது என்றால் நேர்மையாக சொல்லிவிட்டு விலகலாமே…. ஏன் இந்த கையளவான மனசிற்குள் இத்தனை கள்ள எண்ணங்கள்?


சம்பவம் - 02

அண்மையில் ஒரு வெளியீடு தொடர்பில் முகநூலில் உள்ள பெண் ஒருவருடன் பேசக்கிடைத்தது. இதன் போது பேச்சுவாக்கில் குறித்த சட்டம் தொடர்பான ஒருவர் குறித்து பேச்சு வந்த போது தன்னுடைய முகநூல் உள்பெட்டியில் அந்த சட்டம் பேசியது குறித்து இந்த பெண் பகிர்ந்திருந்தார். அந்தப்பெண்ணின் படமொன்றிற்கு இந்த காவாளி உள்பெட்டியில் போய் “உங்களுக்கு பெரிய மனசு” என்று சொல்லியிருக்கின்றது. இன்னுமொரு முறை “இடுப்பு தெரியாமல் உடுக்க வேண்டாம். வேண்டுமானால் நான் புகைப்படம் எடுக்கின்றேன்” என்று நக்கியிருக்கின்றது. இவனெல்லாம் என்ன மனிதன்? ஏற்கனவே திருமணம் முடித்து விவகாரத்தாகிவிட்டது. ஊருக்கு சட்டம் பற்றி வகுப்பெல்லாம் எடுக்கின்றார். நன்றாக அவதானித்து பார்த்தால் எந்த பெண்ணின் முகநூலிலும் இந்த சட்டம் லைக் பண்ணுவதோ கொமன்ட் பண்ணுவதோ இல்லை. எல்லாம் உள்ளுக்குள் தான். மன்னிக்கவும் உள்பெட்டியில் தான். முன்னரெல்லாம் இவர் குறித்த உயர்வான எண்ணங்கள் இருந்திருந்தன. ஆனால் இன்னும் சில பெண்கள் சொன்னவற்றின் அடிப்படையில் இது “ நக்குகின்ற நாய், இதற்கு செக்கென்ன சிவலிங்கம் என்னவென்று எல்லாவிடமும் நாக்கைத்தொங்கப்போட்டு அலைந்திருக்கின்றது. 

முகநூலைத்தட்டிப் பார்த்தால் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பெண்களது லைக்குகள், காட்டீன்களை காணமுடிகின்றது. அதாவது சட்டம் உள்ளுக்குள் காட்டுகின்ற வேலைக்கான வெளிப்படை ஆதாரங்கள் இவை. ஒருவேளை பெற்றோர்கள் அப்படியிருப்பார்களோ….. ஆனால் ஊழல் பற்றி என்ன? நேர்மை பற்றி என்ன? அரசியல் பற்றியென்ன? முகநூல் பூராகவும் ஊருக்கு வகுப்பெடுக்கின்றார். உள்பெட்டியில் பெண் பிள்ளைகளுக்கும் எடுக்கின்றார் (வேற பாடம்) கையளவு தான் மனது. ஆனால் அந்த மனம் பூராகவும் சாக்கடை. 


சம்பவம் - 03

நீங்கள் யாராவது தாய் - தந்தையற்ற உலகமொன்றினை நினைத்துப்பார்த்திருக்கின்றீர்களா? ஈழப்போராட்டத்தின் மிக முக்கியமான இரு போராளியின் பிள்ளையொன்று இற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன் பிறக்கும் போது போராளியான தாயும் சாகும் தருவாயில் இருந்திருக்கின்றார்கள். குழந்தை பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே தாயும் இறையடி சேர்ந்துவிட்டார். அந்தக்காலத்தில் இப்போது போன்று குழந்தையை தத்தெடுக்கும் சட்டதிட்டங்கள் இல்லை. எனவே குழந்தை வேண்டுமெனறு கேட்ட விவசாய தம்பதிகளுக்கு இந்த ஆண் குழந்தையை கொடுத்துவிட்டார்கள். என்ன தான் என்றாலும் போராட்ட இரத்தத்தில் உதித்த குழந்தையல்லவா? நேர்மையான பெற்றோருக்கு பிறந்ததல்லவா? இன்று ஓர் ஆளுமையாக வளர்ந்து நிற்கின்றார். விரிவுரையாளராக இருக்கின்றார். வளர்த்தவர்களும் நேர்மையானவர்கள். எந்தப்பெண்ணும் ஏதாவதென்றால் அண்ணா என்று அழைத்து காப்பாற்ற, குரல்கொடுக்க கேட்டால் முன்னிற்கும் ஆளுமையவர். ஊருக்குள் முரடன் என்றாலும் நல்ல முரடன். சில வருடங்களுக்கு முன்னர் புத்தக வெளியீட்டில் ஒரு பெண்ணை சந்தித்து மனதுள் நிரப்பியிருக்கின்றார். அந்த பெண்ணுக்கு இது தெரியாது வெறும் நட்பாக தான் தொடர்ந்துள்ளது உறவு. அந்த பெண்ணுக்கு எதிர்பாராமல் நடந்த நிச்சயார்த்தம், எங்கே தான் மனதை திறந்துசொன்னாலும் அப்பெண் நிராகரித்து விடுவாளோ என்கின்ற பயம், நேர்மை சொல்ல விடாமல் தடுத்துள்ளது. என்றாலும் கர்ப்பத்தினையும் காதலையும் மறைத்திட முடியாதே. அந்தப்பெண் விபத்தினை சந்தித்திருந்த போது இந்த முரடனின் சொல்லாத காதலை கண்டுபிடித்துவிட்டாள் அந்தப்புத்திசாலி பெண்.

நேர்மையான இருவருக்கிடையான அன்பு தோற்பதில்லையே….. தன்னையே உலகமாக நினைக்கும் ஆணை நிராகரிக்கும் அளவு அந்தப் பெண்ணும் முட்டாளில்லை. ஆனாலும் உறவுகளும் ஊரும்; மேல் மட்டம் கீழ்மட்டம் என்கின்ற பாகுபாடு, பெண் கத்தோலிக்கம், பெடியன் சைவம் என்று எத்தனை வடிதட்டுக்களால் வடிக்க முடியுமோ அப்படி வடித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் “எனக்கு பயமாயிருக்கு” என்று தன் கையை பற்றிக்கொள்ளும் தன் மனதுள் புகுந்தவளை விட்டுவிடுவாரா இந்த முரடர்? உலகமே எதிர்த்தாலும் நீயே என் உலகம் என்று அவரும் உன் கையை விட்டால் நான் தொலைந்துவிடுவேன் என்று அந்த பெண்ணும் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 

சொத்து, உடல் தேவையென பலரும் அலையும் போது எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று அவரும், உலகமே எதிர்த்தாலும் உன் மார்பில் தான் சாய்வேன் என்று அவளும் இணைந்து போராடுகின்றார்கள். இருவர் மனமும் கையளவு தான் ஆனால் அதில் உலகளவு அன்பினை நிறைத்திருக்கின்றார்கள். 


சம்பவம் - 04

அண்மையில் ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. 14 வயது மகளை தகப்பனார் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். உடல் ரீதியான மாற்றம் அந்தப்பிள்ளைக்கு ஏற்பட்டதனை தாயார் அவதானித்து பிள்ளையை பலவந்தப்படுத்தி கேட்ட போது தான் தன் கணவனே தன் பிள்ளையை உடல் ரீதியாக வன்முறைக்குட்படுத்தியதை அறிந்துள்ளார். உடனடியாக பொலிசுக்கு புகாரளித்து இந்த சம்பவம் குறித்த விடயம் என் மேசைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் எனக்கிருந்த ஆச்சர்யங்கள் பல. ஓன்று தனக்கு இப்படியானதொரு உடல் சார் தொடுகை நடப்பதனை ஏன் இந்த பிள்ளை இது வரை யாரிடமும் தெரிவிக்கவில்லை? இரண்டாவது பல மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ள இந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் யாருமே கண்டுகொள்ளவில்லையா? மூன்றாவது பிள்ளை பாடசாலை செல்கின்றது. முடிந்து வந்து வீட்டில் மாலை வரை வழமையாக நடமாடிக்கொண்டிருந்திருக்கின்றது. தந்தையும் தாயும் வேலைக்குச்செல்பவர்கள். ஆக மாலையில் தான் வீடு வந்திருப்பார்கள். எந்த நேரத்தில் இந்த தொடர்ச்சியான வன்முறை நடப்பதற்கான சாத்தியம் இருந்திருக்கும் என பல கேள்விகள்? 

எவ்வாறாயினும் தன்னுடைய குழந்தையையே வேறுவிதமான கண்ணோட்டத்தில் பார்க்க எப்படி முடிந்திருக்கும்? இதன் பின்னர் அக்குழந்தை எவ்வாறான சமூக சிக்கல்களை எதிர்கொள்ளப் போகின்றது? தன்னுடைய பிள்ளையையே வேறு விதமாக அணுகிய இவனைப் போன்றவர்கள் ஏனைய குழந்தைகளை எவ்வாறு நோக்குவார்கள்? இவ்வாறானவர்களின் கையளவு மனசுக்குள் தான் எவ்வளவு வக்கிரங்கள்?


சம்பவம் -05 

ஒருவர் சில காலம் கடும் சினிமாத்தனம் காட்டினார். அதாவது அவர் தன்னுடைய விருப்பத்தினை மறைமுகமாக தெரிவிக்கின்றாராம் எனும் வகையில் எனது ஊர் படங்களை பதிவேற்றுவது, அடிக்கடி தன்னுடைய பயணங்களை எம்முடைய பகுதிக்கு வருவதாக காட்டுவது, எம் ஊர் வளங்களை புகழ்வது, எம்முடைய ஊரில் சின்ன விடயம் நடந்தாலும் சிவாஜி மாதிரி மார்பில் அடித்து அழுவது என்று காட்டிய படம் 100 நாட்களையும் கடந்து ஓடியது. என்னுடைய மூக்கை முட்டாத வரையில் அவர் சுதந்திரம் தானே என்று நானும் கண்டுகொள்வதில்லை. கத்தரிக்காய் மலிந்தால் கடைக்கு வரும் தானே. வந்தது! நானும் இது என்ன வகையான குழப்பமாயிருக்கும் என சோதிப்பதற்காக அனுப்பிய தூதுவிற்கு பதிலளித்து விட்டேன். அடுத்த நாள் பார்த்தால் எம்முடைய ஊர் படத்தினை முகநூல், டிவிட்டர் மேற்படமாக வைத்திருந்ததை காணவில்லை. சரி போகட்டும் என்று விட்டால் சில நாட்களாக எம் ஊர்  பற்றி மட்டமான கதைகள், கேலிகள்…. பார்க்கவே சகிக்கவில்லை. ஆனாலும் இதனை சுய நிறம் வெளுத்ததற்கான சந்தர்ப்பமாக பார்க்கின்றேன். கையளவு தான் மனசு ஆனால் மனம் முழுக்க முதிர்ச்சியற்ற எண்ணங்களும் காழ்ப்புணர்வுகளும். 


சம்பவம் - 06 

இரு தினங்களுக்கு முன்னர் ஆலயம் சார் நிதிசேகரிப்புக்காக குழுவொன்று ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருந்தார்கள். நமது வீட்டிற்கும் தான். பணம் கொடுப்பது தொடர்பில் பதியப்படும் தாளினை வாங்கி பார்த்தால் அதியுச்ச தொகை போட்டிருப்பவர்கள் எல்லாம் கேடிகளாகவே இருந்தனர். ஊரிலுள்ள வளங்களை ஆட்டையை போட்டவர்கள், தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் கொடுப்பதற்கு கூட கணக்கு பார்ப்பவர்கள், பெண்களுடன் சேட்டை விடுபவர்கள், மோசடி பேர் வழிகள் என நூற்றில் தொன்னூறு வீதம் “கள்ளன்கள்” பெயர்கள் தான். 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இவ்வாறான முள்ளமாறி வேலைகளை செய்தாலும் மனதில் உறுத்தல் சிறிதுமின்றியும் வாழ்க்கையில் எந்தவித குறைபாடின்றியும் இவர்கள் இருப்பது தான். ஒரு வேளை கடவுளும் இலஞ்சம் வாங்குவதற்கு வெளிக்கிட்டார் போல. செய்யக்கூடாதவற்றினையெல்லாம் செய்து விட்டு கொள்ளையடித்த அல்லது பாவப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டால் மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது என்பதாகத்தான் தெரிகிறது. இன்று பலரும் கோயில்களுக்கு படையெடுத்துக்கொண்டு ஊருக்குள் பண்பற்ற செயல்களை செய்ய கடவுளும் காரணம் தான். எதுவாகிலும் கையளவு இருக்கின்ற மனது இவ்வளவு செய்த பின்னும் உறுத்தல் இன்றி கடவுளுக்கு கொடுக்கின்றதே! 


சம்பவம் - 07

ஒரு வாரத்திற்கு முன்னர் பாலியல் வன்முறைக்குட்பட்ட சிறுவர்களுக்கான உளவள நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன். பொதுவாக இக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து எனக்கு தனித்தனி முறையில் தெரியும். நாம் ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் பார்க்கின்ற விடயம் அல்லது பக்கம் அல்ல இது. ஒரு குழந்தை வன்முறைக்குட்படுத்தப்பட்டால் அதன் உடல் மட்டுமல்ல உளமும் எந்தளவு பாதிப்படைகின்றது, அக்குழந்தையை அதன் குடும்பமே தன்னுடைய “கௌரம்” என்பதை காப்பாற்றுவதற்காக எவ்வாறு நிராகரிக்கின்றது, உடல் ரீதியான இரத்தப்போக்கு, உறுப்புகளில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், இழந்து போகின்ற சிறுபராய நாட்கள், அதற்கு பின்னர் அது எதிர்கொள்கின்ற சமூக பிரச்சினைகள் என்ன என்பதெல்லாம் நாம் பார்த்திடாத மறுபக்கம். 

இரு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறனதொரு குழந்தையை மீட்க சென்றிருந்தேன். கட்டிலுக்கடியில் சுருண்டு படுத்திருந்தது. நானும் கட்டிலுக்கு வெளிப்பக்கம் நிலத்தில் படுத்திருந்தபடி கையை அக்குழந்தையை நோக்கி நீண்டினேன். ஏறத்தாழ மூன்றரை மணி நேரத்தின் பின்னரே என் விரலை பற்றுகின்ற அளவு அதற்கு நம்பிக்கை வந்திருந்தது. சிறிது சிறிதாக பேசி, தலையை கோதி அதனை என் மடிக்குள் இருத்தும் போது நான் உடலாலும் மனதாலும் சோர்த்திருந்தேன். அப்போது அக்குழந்தைக்கு வயது இரண்டரை. தனக்கு என்னவிதமான பாதிப்பு நிகழ்ந்துள்ளது என்பது கூட அதற்கு புரிந்திருக்கவில்லை. அப்படிப்பட்ட குழந்தை தனக்கு நிகழ்ந்ததை மழலையில் கூறும் போது எப்போதாவது கேட்டிருக்கின்றீர்களா? நான் அன்று ஒரு முறை இறந்திருந்தேன். 

இவ்வாறு பாதிப்புற்று இருட்டை கண்டால் அலறுகின்ற குழந்தைகள், இரத்தப்போக்கு ஏன் தனக்குள்ளது என்பது என்று தெரியாமல் Sanitary Pad  அணிந்திருக்கும் குழந்தைகள், முலைகள் கூட வெளிவராத நிலையில் மார்பில் கீறலுடன் மருந்திடப்படுகின்ற குழந்தைகள், தங்கள் மழலை மொழியில் தத்தித்தத்தி தாங்கள் வன்முறைக்கு எவ்வாறு உட்பட்டார்கள் என விபரிக்கின்ற குழந்தைகள் ….. இவர்களுடன் ஒரு நாள் செலவளித்துப்பாருங்கள். பல முறை இறந்துபோவீர்கள். 

முதலில் குறிப்பிட்ட குழந்தைக்கு இப்போது அதற்கு நான்கு வயது. நன்றாக என்னுடன் ஒட்டிக்கொள்வாள். கண்டால் ஓடிவந்த தூக்கும் படி கைகளை உயர்த்துவாள். நான் அன்று போன வேளை ஆளைக் காணவில்லை. நானும் வருவாள் என்று பார்த்தால் அரைமணியாகியும் ஆளில்லை. பொறுப்பாளர் அம்மாவிடம் கேட்டேன். அவரும் கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்தாளே எங்கு போனாள் என்று என்னுடன் சேர்ந்து தேடதொடங்கினோம். கட்டடத்தின் பின் பக்கம் போய் பார்த்தால்….. நாயொன்று சில குட்டிகளை ஈன்றிருந்திருக்கின்றது. எப்படியும் நாலைந்து நாட்களான குட்டிகள் அவை. தற்போது தாய் நாய் எங்கோ போயிருக்க வேண்டும். இந்தக்குழந்தை அந்நாய்க்குட்டிகளுக்கு வெயிலாம், காகங்கள் கொத்துகின்றதாம் என தன்னுடைய குட்டிக் குடையை விரித்து சுற்றி தன்னுடைய விளையாட்டுப்பொருட்களை பரப்பி குட்டிகளை கவனமாக வைத்திருந்தாள். அவற்றிற்கு நீர் வேண்டும் என குட்டி சட்டியில் நீர் வேறு வைத்திருந்தாள். கூடவே தானும் அமர்ந்தபடி இருந்திருந்தாள் குழந்தை. எனக்கிதனை பார்த்த போது நான் அவளை அந்த கட்டிலுக்கருகில் பார்த்த ஞாபகம் தாக்கத்தொடங்கியது.    

குழந்தைகளுக்கு மட்டும் கையளவு தான் மனசானாலும் அதில் கடலளவு அன்பை நிரப்பியிருக்கின்றான் படைத்தவன்!

சம்பவம் - 08

எமது வீட்டில் இருக்கும் நாய்களில் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமானவர். ஒரு காகம் பறந்தாலும் போதும் குலைக்கின்ற குலைவையில் காகம் வீட்டுப்பக்கம் திரும்பி பார்க்காது. நம்முடைய வீட்டிலுள்ள ஏனையவை என்ன செய்தாலும் சும்மா படுத்தபடி பார்த்துக்கொண்டிருப்பார். ஆனால் வெளியிலிருந்து ஒருவர் அல்லது ஒன்று வந்தவிட்டால் போதும் அவ்வளவு தான். நாம் அண்மையில் குடும்ப பயணம் ஒன்றினை மேற்கொண்டுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம். இதன் போது வீட்டு வளாகத்திற்காக கமராவை செக் பண்ணிணால் நான் சொன்ன ஆள் எமது வாசலின் மல்லிகை மரத்தடியை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தார். ஒருவேளை ஏதாவது பொருட்கள் போடப்பட்டுள்ளதோ என்று தான் நாம் நினைத்தோம். வந்தவுடன் படலையை திறந்து பார்த்தால் யாரோ எறிந்துவிட்டு போன இரு பூனை குட்டிகள் மரத்தடியில் பதுங்கிக்கொண்டிருக்கின்றார்கள். நம்முடைய நாயார் தன்னுடைய முரட்டுத்தனத்தினை மூட்டை கட்டிவிட்டு தனக்கு வைக்கப்பட்ட முள்ளொன்றினை தூக்கிவந்து இந்த குட்டிகளுக்கு போட்டுவிட்டு காவல் காப்பதற்குத்தான் தரத்தை சுற்றி சுற்றி வந்திருக்கின்றார். மனிதனுக்கு மட்டுமா மனம். சில நேரம் ஐந்தறிவுள்ளதுகளுக்கும் தான் கையளவில் மனமிருப்பதுண்டு. 

  
சம்பவம் - 09 

திருவிழாவிற்கு குடும்பமாக போயிருந்தோம். பூஜை முடிய அன்னதானம் வழங்கப்பட்டது. பார்த்தால் அன்னதானத்திற்கு காசு கொடுத்தவர்கள் உணவை எடுத்துச்செல்ல வாளிகளுடன் நிற்கின்றார்கள். வரிசையில் நிற்கும் ஏனையவர்களை பார்த்தால் ஊருக்குள் நல்லாயிருக்கும் நாலு பேரும் தான் வரிசையில் நிற்கின்றார்கள். வாளிக்கும் வரிசைக்குமே அன்னதானம் முடிந்து போயிட்டு. பின்னால் நின்ற உண்மையில் பசியுடனிருக்கின்ற சனங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அன்னதானம் கிடைக்கவில்லை என்றவுடன் குழாயில் நீரை அள்ளி குடித்துவிட்டு புறப்பட்டு விட்டனர். 

வெளியில் சில சிறுவர்கள் கற்பூரம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களை கோயில் நிர்வாக பிரதிநிதிகள் கலைத்துக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் கோயில் நிர்வாகம் கோயில் பொருட்களை விற்பதற்கான கடையொன்றினை நடாத்தி வருகின்றது. ஒவ்வொரு கற்பூரபெட்டியிலும் நூற்றுக்கணக்கில் இலாபம். திருவிழா வெடிகள் மட்டுமே ஒவ்வொரு நாளும் சில இலட்சங்கள். எனக்கேதோ கடவுள் கோயிலுக்குள் இல்லை என்று தான் தோன்றுகின்றது. 

இந்த தானங்கள், கடவுளுக்கான பூஜை பொருட்கள் எல்லாமே ஏழை எளியவர்களை வாழ வைப்பதற்கு வகுப்பட்ட வழிகள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பணம் கொடுத்தவனே அன்னதானத்தை தன்னுடைய குடும்பத்திற்கு முதலில் எடுக்கின்றான். அதாவது காசு கொடுத்து சமைக்கவைத்து சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு போகின்றான். அதேபோன்று அன்றாடம் கிடைக்கும் ஒரு சில நூறில் வயிறு வளர்க்கின்ற ஏழைகளில் வயிற்றில் நிர்வாகம் எனும் பெயரில் அடித்து அதனை வெடி என்று கரியாக்கிக்கொண்டிருக்கின்றோம். நாமெல்லாம் என்ன மனிதர்கள்? நமக்குள் கையளவாவது மனம் இருக்கின்றதா என்ன?


சம்பவம் -10

பாடசாலையில் இரு குழந்தைகளுக்கிடையில் பலத்த சண்டை. ஆசிரியர் இருவரையும் கூப்பிட்டு நன்றாக அடித்திருந்திருக்கின்றார். அதிபரிடமும் கூறி மதியம் பெற்றோர்களை சந்திக்க வரும்படி கூறியிருக்கின்றார்கள். பாடசாலை முடிய வகுப்பாசிரியர் இரு குழந்தைகளையும் அதிபரின் அறையின் முன்னால் பெற்றோர் வரும் வரை அமர்ந்திருக்கும் படி கூறி சென்றுவிட்டார். பெற்றோர் வந்து அதிபரை சந்தித்து இரு தரப்பும் மோதிக்கொண்டு வெளியே வந்து பார்த்தால் இரு குழந்தைகளும் சேர்ந்து ஐஸ்கிறீம் குடித்துக்கொண்டிருந்திருக்கின்றார்கள். வகுப்பாசிரியரும் அதிபரும் இருவரையும் கூப்பிட்டு இருவரும் சண்டை பிடித்தீர்கள் இப்போது இப்படியிருக்கின்றீர்கள் என்று கேட்டிருக்கின்றார். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கின்றது “ சேர் என்னைப் போன்று தான் இவனுக்கும் அம்மா இல்லை. அவனும் பாவம் தானே” என்று. இங்கு யாருக்கு கையளவில் மனசிருந்திருக்கின்றது? 


No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை