Thursday, May 30, 2013

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட தொடர்புண்டு

மீராவிற்கும் கண்ணனுக்கும் தான்
தொடர்புண்டு...
இவர்களது காதல்
காலம் கடந்த காதல்....
இலக்கியங்கள் இயம்புகின்றன.

மீராவிற்கும் கர்ணனுக்கும் கூட
தொடர்புண்டு...
கர்ணன் கொடையில் சிறந்தவன்
மீரா அன்பானவர்களை கொடுப்பதில்
சிறந்தவள்...

ஒற்றுமையிலும் ஓர் வேற்றுமை
அவன் கொடுத்தது உயிரற்ற
பொருள் தானம்...
மீராவினது..
உயிருள்ளவர்களை
கொடுப்பது.....
ஒவ்வொரு முறையும்
கொடுத்தே தொலைகிறேன்

இப்போதெல்லாம்
கொடுப்பதிலும்.....
தனியே கண்ணீர் வடிப்பதிலும்
ஒரு சுகமிருப்பதாகவே தோனுகிறது.

திகதி -30.05.2013

காதல் Vs கள்ளத்தொடர்புகள்


இந்தத் தலைப்பினை மனைவி Vs வைப்பாட்டி என்று கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த ஊடகத்துறையில் காலடி வைத்ததிலிருந்தே தினம் தினம் பல்வேறுப்பட்ட மனிதர்களை சந்தித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறானவர்களுள் சில மனிதர்களை அவர்களது குணாதிசயங்களைப் பற்றி என் விடுதி நண்பிகளுடன் பகிர்ந்து கொண்டு இவை பற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பரிமாறிக்கொளள்வோம். அண்மையில் நாம் கலந்துரையாடிக்கொண்ட ஒரு தலைப்புத் தான் மேற்கூறியது.

இன்று உலகமயமாக்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு விளைவு “பல” உறவுகள் “பல” முகங்கள். (இவை நல்லதா? கேட்டதா? என்பது வேறு விடயம்.) இதனால் உருவாகின்ற “பல” உறவுமுறைகள். இங்கு இந்த “பல” பற்றித் தான் விவாதிக்க உள்ளேன்.

ஒரு ஆண் தன்னைக் கடக்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் பலவிதமான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றான். (நான் பால் சார்ந்து கதைப்பதாக என்ன வேண்டாம். பெரும்பாலும் ஆண்கள் தான் இவ்வாறு இருக்கின்றார்கள் அதற்காக பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் என்பதும் அர்த்தமல்ல). எடைபோட்டுக்கொள்கின்றான். தனக்கு மனைவியாக வரப்போகின்றவளிடம் பின்வரும் சில தகுதிகளை எதிர்பார்க்கின்றான்.
  •  தன்னை விட சற்றேனும் அழகானவள் (யாராவது மனம் மட்டும் தான்  என்று கூறினால் உச்சி பிளக்க குட்டவேண்டும்)
  •  சமூகத்தில் அடுத்தவர்களால் மதிக்கப்படுபவள் (இது குணமாகவும் இருக்கும்)
  •  சற்றுப் படித்தவள் , பண்பானவள்
  •  தன்னிடம் கேள்வி கேட்காதவள் (????)
  •  தன்னவளை ஒருவன் திரும்பிப்பார்த்தால் கூட கோபப்படுவார்கள் ( தாங்கள் பலரை வைத்துக்கொள்வது வேறு விடயம்)
  •  தன்னவள் மேல் சுண்டுவிரல் கூட திருமணத்திற்கு முன் படுவதை விரும்பமாட்டான்
  • குறிப்பிட்ட அளவிற்கு மேல் தொல்லை கொடுக்கமாட்டார்கள் ஆனால் கண்கானிப்பார்கள் (நடுநிசி அழைப்புக்கள் இருக்காது ஆனால் செக் பண்ணிக்கொள்வார்கள்)
  • தன் குடும்பம், அலுவலக நண்பர்கள் மற்றும் மேல்மட்ட நண்பர்களிடம் குறுகிய காலத்துக்குள் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
  • தன் மனைவியாகப் போகிறவளை கடற்கரை, பூங்காவிற்கு அழைத்துச் செல்வதை விடவும் ஆலயத்திற்கு அல்லது கல்வி, இலக்கிய கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.
  • மனைவிக்கு/காதலிக்கு தன் முறையற்ற தொடர்புகளை மறைக்கும் அளவிற்கு ஒருவித தார்மீக பயமிருக்கும். ஆனால் முறையற்ற தொடர்புள்ளவர்களுடன் தன்னவர்கள் பற்றி கூறி எச்சரித்து வைக்கவும் தவறமாட்டார்கள்
இது மனைவிக்கு ஓர் ஆண் கொடுக்கின்ற மரியாதை. இதைத்தவிரவும் வேறு பெண்களும் தன் இழுப்புகளுக்கு இசைந்து கொடுத்தால் அவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவான். இவர்களை தன் ஏனைய தேவைகளுக்காக (நிச்சயம் மனமாக இருக்காது) வைத்துக்கொள்வான் மனைவி/ காதலிக்குத் தெரியாமல். ஒரு பெண்ணின் மனதைப் பிடித்துத்தான் திருமணம் செய்கின்றோம் அல்லது காதலிக்கின்றோம் என்றால் அதன் பின்பும் ஒரு பெண்ணைத் தேடுகின்றோம் என்றால் நிச்சயம் அது காமம் என்பது ஒன்றன்று வேறெதுவுமாக இருக்கமுடியாது. இதற்கு உபயோகிப்பவர்களை மனைவி./காதலி அளவுக்கு அந்தஸ்து கொடுத்து வைக்காவிட்டாலும் மனைவியை விடவும் உரிமை இவர்களுக்கு அளிப்பார்கள்
  •  தன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து மனைவி/காதலியை விடவும் இவர்களிடம் தான் முழுமையாக கூறுவார்கள்
  •  தன் மின்னஞ்சல், முகநூல் கடவுச்சொற்கள் கொடுத்து வைத்திருப்பார்கள்
  •  நிறைய பரிசுகள் அளிப்பார்கள்
  • அதிக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்கள் 
  • நிறைய ஊர் சுற்றுவார்கள் (யார் கண்ணிலும் படாமல்)
 மனைவிக்கு மேற்கூறியவற்றினை மறுப்பான் காரணம் மனைவி..காதலி ஆயிரம் கேள்வி கேட்பாள். ஆராய்வாள், சந்தேகப்படுவாள்… ஏனென்றால் இவளளவில் நேசிப்பது மனம் என்பதை. அந்த மனதில் தன்னைத் தவிர வேறொருவர் புகுவதை எந்த சராசரி பெண்ணும் ஏற்கமாட்டாள். ஒருவேளை தன்னவர்கள் பிழைசெய்து அவர்களது முறைகேடான உறவுகள் தெரிய வந்தால்….
  • குடும்பம் வரை சென்று கேள்வி கேட்கும் உரிமை,சக்தி,துணிவு இவளுக்குண்டு (தனிமையில் அழுவது வேறு விடயம்)
  • ஒரு வேளை நிரூபிக்கப்பட்டால் விலகிவிடவும் இவளால் மட்டும் தான் முடியும் (விவாகரத்து,காதல் தோல்வி என்பதெல்லாம் சட்டபூர்வமான உறவுகளுக்குத் தான்)
  • சுயத்தை என்றும் இழக்கமாட்டாள் (மனைவி, காதலி தன்னவர்களை அடுத்தவர் புகழ்வதை இரசிப்பார்கள். தானே புகழ்ந்து சீன் எல்லாம் போடமாட்டார்கள்)
ஆனால் இந்த இரண்டாம் வகையினர் என்ன தான் ஆண்கள் பிழைசெய்தாலும் விட்டுவிலக மாட்டார்கள். ஆண்களும் தம் கள்ளம் பிடிபட்டுவிட்டால் மனைவி.. காதலியை பிரிவார்களேயன்றி கள்ளத்தொடர்புகளை விட்டு விலகமாட்டார்கள். இவர்களது தேவை தான் வேறாச்சே… (சிலவேளை ஆப்பில் சிக்கிய குரங்காக சிக்கவைக்கப்பட்டு கல்யாணத்தில் முடிவதும் உண்டு….)

என்னதான் சொன்னாலும் மனைவிக்குறிய மதிப்பே தனிதாங்க.. ஒருவன் தன் மனைவிக்கோ காதலிக்கோ துரோகம் செய்திருந்தால் அவளிடம் கெஞ்சமாட்டான். அவளை சந்திக்க தயங்குவான் அவள் கண்களை கூட பார்க்க அவனால் முடியாது. விலகத்தான் முயற்சிப்பான். ஆனால் வேறுவிதமான தொடர்பு உள்ளவர்களிடம் தன் சோகங்களை கொட்டி ஒட்டிக்கொள்ள பார்ப்பான்.

தன்னவன் மனதில் பழைய காதலின் சாயல் இருப்பதையே விரும்பாதவள் இன்னொரு உறவையா ஏற்றுக்கொள்வாள்? (மனம் வலித்தாலும்) நம்மவர்களை விட்டுக்கொடுக்காமல், காட்டிக்கொடுக்காமல் திமிராக விலகிவிடுவது தாங்க காதலிக்கான, மனைவிக்கான பெருமை. எல்லாரிடமும் இனிய நினைவுகளை பகிர்ந்து நம்மை கண்டவர்களுக்கும் நிரூபிக்கவேண்டிய தேவை நிச்சயம் மனைவிக்கோ காதலிக்கோ இருக்காது. (குத்துவிளக்கு சாமியறையில் தானிருக்க வேண்டும் அடுத்தவருக்கு தெரியப்படுத்த உறவுகள் என்ன தெருவிளக்கா?) “;மனம்” தான் போய்விட்டதே… மாளிகையா முக்கியம் நம்மவன் மனதில் மகாராணியாக இருப்பது தான் மானமுள்ள பெண்ணுக்கழகு

இலக்கியம் முதல் இன்று வரை மனைவிக்குத்தாங்க சோதனை அல்லது மனதை நேசிப்பவர்களுக்குத் தான் பரீட்சைகள் அதிகம்….. கண்ணகியால் தான் மதுரையை எரிக்க முடியும்.. சீதையால் தான் தீக்குளிக்க முடியும்.. வைதேகியால் தான் கண்ணுக்காக காத்திருக்க முடியும்….

(மனைவி, காதலி இலையிலுள்ள பதார்த்தத்தினை பார்க்க மாட்டாள் பரிசுத்தத்தினை பார்ப்பாள்…. மற்றதுகள் பதார்த்தத்தினை பார்த்து பலர் கைபட்ட எச்சிலையும் சாப்பிக்கூடும். உண்மை உறவுகள் பொய்க்கும் போது அறுத்துக்கொள்ளும் பொய் உறவுகள் தம்மை மறைத்துக்கொள்ளும்)

பிற்குறிப்பு - இது என் வயதிற்கு மேற்பட்ட விடயம் என்றாலும் நாளை நானும் ஒரு குடும்பத்தின் தலைவியாகப் போகின்றவள். அடுத்தவரை எடைபோட தெரியாமல் இருந்தால் அதைவிட கொடுமை இருக்கமுடியாது. யாருக்காவது இப்பதிவு கடுப்பேத்தினால் எனது விடுதிக்கு வந்து என் நண்பிகள் மண்டையில் குட்டலாம்)





Monday, May 27, 2013

வாழுகின்ற காதல்

இன்று எம் சமூகத்தில் “காதல்” உடன் வாழ்வது என்பது மிகவும் அருகி வருகின்றது. என் தந்தையின் காதல் பற்றியும் கடந்த சில நாட்களில் நான் மேற்கொண்டிருந்த பயணத்தில் சந்தித்த மனிதர்கள் தொடர்பிலும் அவர்களது “வாழுகின்ற காதல்” தொடர்பிலும் இப்பதிவில் குறிப்பிட விரும்புகின்றேன்.



என் தந்தை எனது தாயாரை ஒரு தலையாக காதலித்து பல இடையூறுகளின் மத்தியில் கைப்பிடித்தவர். இப்போது கூட ஏதும் ஊடல் வந்தால் “நீங்கள் தான் என் பின்னால் சுத்தினீர்கள்…” என்று அம்மா கூறுவதுண்டு. என் தந்தை பல வருடங்களின் பின் நாடு திரும்பியிருந்தார். அவரை அழைத்து வர குடும்பமாக விமான நிலையம் சென்றிருந்தோம். வீடும் வரும் வழியில் அவரது மணிப்பேர்சினை எதேச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் கறுப்பு – வெள்ளைப் புகைப்படமொன்று…. காணப்பட்டது. ( கொஞ்சம் பயந்திட்டன் சித்தியோ… என்று) என்னவென்று பார்த்தால் அம்மாவின் பழைய புகைப்படம். என் தம்பி கிண்டலாக “அப்பா கலர் படம் கிடைக்கலையா?” என்று கிண்டலடித்தான்.. “அது தான் தம்பி நான் முதன்முதல் பார்த்த முகம்” என்று அப்பா ஒரு வரியில் கூறிய பதில் ஆயிரம் கதை கூறியது. அப்போது பார்த்திருக்க வேண்டும் அம்மாவின் முகத்திலிருந்த களையை… பெருமையை… வெட்கத்தினை…. ம்ம்ம்ம்…. அப்பா முன்னால் அம்மா என்னவொரு அழகு…. எந்த மனைவிக்குமே தன் கணவன் தன்னை மட்டும் நேசிக்கின்றான் என்பதை விட வேறென்னங்க வேண்டும்… இது அப்பாவின் 30 வருடத்தின் பின்னும் தொடர்கின்ற காதல் கதை.

அடுத்தது அண்மையில் சென்றிருந்த செயலமர்வு ஐந்து நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது. மதிய உணவு உண்ணும் போது என் நண்பர் ஒருவர் என்னிடம் “ உங்களுக்கு ஆண் நண்பர் உண்டா? “ என்று கேட்டார். இதுவரை இல்லை என்று கூறிய பின் வழமை போன்றே ( ஒரு பெண்ணிடம் இந்த கேள்வி கேட்டால் அவளும் அதை திருப்பி கேட்பாள் என்பது சகஜம்) உங்களுக்கு உண்டா? என்று கேட்டேன். “ இதென்னங்க கல்யாணமே ஆகிவிட்டது. 18 வருடங்கள் நண்பர்களாக இருந்து பின் காதலித்து கல்யாணம் செய்தோம்…. இப்ப கூட பாருங்க என்ன தான் சாப்பிட்டாலும் அவட கையால ஒரு கறியுடன் சாப்பிடுவது போல் வருமா?” என்று தன் மனைவி பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டார். கேட்கும் போதே மனசுக்கு இதமாக இருந்தது. இப்படியொரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்த பெண். இது வாழ்ந்து கொண்டிருக்கின்ற காதல்…….. கவிதையான வாழ்க்கை….



இப்போதெல்லாம் கவிதையில் தோற்ற காதல் பற்றிய உருக்கமும் , காலை நேரம் முழுவதும் ஒருவரிடம் கடலையும் இராப்பொழுதில் இன்னொருவருடன் காமக்கதை என்றும் பல முகங்களுடன் வாழும் சில ஜந்துகள் மத்தியில் இவ்வாறாக சில காதல்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது மனம் வாழ்த்துவது மட்டுமன்றி நமக்கும் இவ்வாறான வாழ்கின்ற காதல் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கவும் தொடங்கிவிட்டது.

பிற்குறிப்பு - இந்த செயலமர்வில் கலந்து கொண்ட ஒரு பெண் நான் மட்டுமே என்பதும் வயதில் குறைந்தவள் என்பதும் குறிப்பிடத்தக்கதொரு விடயம். ஒரு நண்பன் நிகழ்ச்சி முடிவில் (Maybe no option)  “வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா...” பாடலை எனக்காக பாடுவதாக கூறி பாடி அசத்தி என்னை வெட்கப்பட வைத்தது என்றும் இனிய நினைவுகளில் ஒன்று….. ( ஆமா நீங்க பிரபுதேவாவா? அரவிந்தசாமியா? )

Wednesday, May 22, 2013

நீரில் வாழும் மீனின் தாகம்....


என் பணம்
அழகு
படிப்பு
புதவி உன்னை
வாங்கியதற்கான விலை
என்றெல்லாம்
ஊர் பேசியது…

என் விடுதியின்
ஓவ்வொரு சுவர்களும்
என் நாட்குறிப்பின்
ஒவ்வொரு பக்கங்களும்
என் தலையணையின்
ஈரமும் சொல்லும்….
எதற்காக உன்னை
நேசித்தேன் என்று
நீரில் வாழும்
மீனின் தாகம்
மீன் மட்டுமே
அறியும்…..

அடுத்தவள்
கேட்டாள் என்னை
உன் முன் நிறுத்தி
யாரை நீ விரும்புகிறாயென்று
கேட்க வேண்டுமென்று….
ஒரு வேளை நீ என்
நோக்கி கைகாட்டியிருந்தாலும்
பணம்
புதவி
அழகு
படிப்பு என்று பல காரணம் கூறி
என் அன்பு தோற்றிருக்கும்…..
எதில் தோற்றாலும்
மீராவின் அன்பு
தோற்க கூடாது
என்னளவில் பெறுமதியற்றது
அதுவொன்றே

அவள் ஒதுங்கிடவா
என்றும் கேட்டாள்….
உன் அன்பிற்காக மட்டுமே
உன்னை யாசித்திருப்பேன்
அப்போதும் உன்னை
வாங்கி விட்டேன்
என்று தான் உலகம் கூறும்….

அன்பிற்கான ஏக்கம்
மீராவிற்கு புதிதல்ல….
கண்ணீரின் சூடு
பழகிவிட்டதொன்று…. – என்
பெண்மையின் மென்மை
உன்னை பகிராது…  பகிர்தலின்
வலி தெரிந்தே
இன்னொருத்திக்கு வலி கொடுக்காமல்
திமிராக விலகிவிட்டேன் -

என்னளவில்
உறவுகள்
தோற்றாலும்
என் உணர்வுகள்
தோற்க வேண்டாமென்று
ஒதுங்கி
ஊமையாக அழுகின்றேன் நண்பனே….

Tuesday, May 21, 2013

பேசுகின்றான் பாலச்சந்திரன்......


தப்பிக்கத் தெரியாமலா
கடைசி வரையில்
களத்தில் நின்றோம்?
பதுங்க வழியின்றியா
பகைவனிடம் சிக்கினோம்?
பிரபாகரனின் இன்னொரு பிள்ளை
எங்கோ ஓடி
ஒளிந்து கொண்டான் - என
எள்ளி நகையாட
அந்த ஈனக்
கும்பலுக்கு எப்படி இடம்
கொடுக்க முடியும்?
அந்த பயந்தாங்கொள்ளிகளை
அவர்களின் பதுங்கு குழிகளிலேயே சந்தித்தோம்

பாவம்
பாலச்சந்திரன்!
பசிக்கு ஏதோ
சாப்பிடுகின்றான் என்று
என் மீது உங்களுக்கு பரிதாபம்!
நாங்கள்
சயனைட் நஞ்சைக் கூட
அப்படித் தான் சுவைத்துத்
தின்போம்!
சாவுக்கு அஞ்சினால் தானே
பகை கண்டு
அச்சம் வரும்?



என் விழிகளில் அவனுக்கு
மிரட்சி தெரியவில்லை
புரட்சி அனல் வீசியிருக்கின்றது
என் முகத்தில் அவன்
ஒரு அப்பாவியை பார்க்கவில்லை!
என் அப்பாவை பார்த்திருக்கின்றான்!

ஈழ மண்ணில் முளைக்கும்
புல்லும் அவனுக்கு புலியாய் தெரியும்
வன்னிக் காட்சியும்
வன்னிக் காட்டில் மலரும்
காந்தள் பூக்களும்
அவனுக்கு புதர்களிலிருந்து
நீளும் புலிகளின் நாக்குகளாய் தெரியும்
புலிகளுக்கு பிறந்த குட்டிப்புலியை
அவனால் எப்படி
குழந்தையாய் பார்க்க முடியும்?
பனிக்குடத்தில் புரளும்
பிஞ்சுக்கும் அஞ்சி
கர்ப்பிணிகளின்
அடிவயிறு கிழித்த
கோழைகளுக்கு
வளரும் என் மீது
எப்படி கருணை வரும்?

நாங்கள் களமாடியது
கருணைக்காக அல்ல விடுதலைக்காக…
என் துணிச்சலின் அழகு
அவனைத் துளைத்திருக்கும்!
தன் நெருப்புத் துண்டுகளால்
என் நெஞ்சைத் துளைத்தான்!
என் குருதியில் குளித்த
குண்டுகள் யாவும்
இவன் குட்டி புpரபாகரன் என
கூவிச் சொன்னது!
வீரச்சாவை தழுவிக்கொண்டே
ஈழத்தாயின் மடியில் விழுந்தேன்

எனக்கு
இரக்கம் வேண்டாம்
என் குடும்பத்தின் மீது
பரிவு வேண்டாம்
பரிவு போராளிகளுக்கு இழிவு
என் குடும்பத்தின்
உறுப்பினர்கள்
ஐந்து பேரல்ல
எட்டுக் கோடிப் பேர்
எனக்கு பாசம் வேண்டும் அதைவிட
என் இனத்திற்கு தேசம் வேண்டும்!

தொல் திருமாளவன்

படித்ததில் பிடித்த கவிதை. இதன் ஒவ்வொரு வரிகளிலும் என் ஈழத்திற்கான அடித்தளம் இருப்பதாக தோன்றியது. வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது. இந்தியாவிலிருந்து தொல் திருமாளவன் இதனை எழுதியிருந்தார்.








Monday, May 20, 2013

வார்த்தைகள் தேவையில்லை என்னவனே……


என்னவன் அருகில்
குழந்தையாய் ஆயிரம்
கேள்வி கேட்டு பதிலிற்காக
நச்சரிப்பேன்…….

உனக்கு
ஏன்?
எதற்கு?
எவ்வளவு என்னை பிடிக்கும் ?- என்று
கேட்டு தினம்
ஆழிச்சாட்டியம் பண்ணுவதில்......
அன்பை கைகளால் காட்டும் படி
பிடிவாதம் பிடிப்பதில்…. – என்னில்
அன்பில்லையா உனக்கு? - என்று
அதட்டுவதில்– எனக்குள்
எல்லையற்ற ஆனந்தம்….

அதிகம் பேசியறியாத – என்னவன்
மழுப்புவான் அல்லது
சிரித்தே நழுவிவிடுவான் - அதை
இரசிப்பதை விடவும்
இன்பம் வேறில்லை எனக்கு…

என் இறுதி கணங்களில்
மருந்திற்கு முகஞ்சுழிக்கும் போதான
அவன் தடுமாற்றங்களும்
மாபெரும் வைத்தியனவன் - எனக்கு
ஊசியேற்றும் போதான விரல் நடுக்கங்களும்
என் கண்கள் சொருகும் போது
கலங்குகின்ற அவன் கண்களும் - என்
வலிகளின் போதான அவன்
திடுக்கிடல்களும் - நான்
கண் விழிக்கும் போது தெரிகின்ற
அவன் கன்னத்து தாடியும்
என் பல வினாக்களுக்கு
பதிலாகின்றன….

தடுமாற்றமாய்…
நரம்பின் நடுக்கமாய்
கண்ணீராய்…
திடுக்கிடலாய்….
உடல் மொழியென சகலமுமாய்
நானிருக்கும் போது – வார்த்தைகள்
தேவையில்லை என்னவனே……



Tuesday, May 14, 2013

மீராவின் அன்புக் கண்ணனாக….




முன் தினங்களின்
ஆர்ப்பாட்டங்கள் -
அப்பா வாரியிறைத்திருந்த
பல ஆயிரங்கள் - அம்மாவின்
ஆயத்தங்கள் கூடவே
அறிவுரைகள்
ஆயாவின் சமையல் வாசனை
எதுவும் பிடிக்காமல்
அறையில் அமர்ந்திருந்தேன்
என்னவன் பற்றிய கற்பனைகளோடு…

அதிகாலையின் தூக்கத்திலேயே
அம்மாவின் முன்நெற்றி முத்தங்களுடன்
செல்லமாக எழுப்பப்பட்டிருந்தேன்.
மஞ்சள் குளித்து நீர்
சொட்ட வந்த போது
பட்டுப்புடைவையும்
பரம்பரை நகைகளும்
இறைந்திருந்தன – என்
கட்டிலில்….

மருதாணி இட்ட
கைகளில் நிறைந்த வளையல்கள்
சிவப்பு மூக்குத்தி
கூர்த் திலகம்
புடைவையின் பாரத்துடன்
கூடவே வெட்கத்துடன்
தலை குனிந்திருந்தேன்

அண்ணாவின் செல்ல அதட்டல்களும்
தம்பியின் சீண்டல்களும்
நண்பிகளின் எள்ளல்களும்….
நண்பன்களின் நக்கல்களும்…
இன்று தான் என்னுள் ஆன
நாணங்களை நானே கண்டுகொண்டேன்

அப்பா கூடத்திற்கழைத்த போது
குனிந்த தலை நிமிராது
துடுக்காய்
சற்றே கடைக்கண்ணால் பார்த்தேன்..
என்னவனாய்
அமர்ந்திருந்தான் -
ஆறடி உயரத்தில்
அருவா மீசையுடன்
வெள்ளை வேட்டியில் - என்
இனிய ஆருயிர் நண்பன்…
இதுவரையான நட்பு பார்வை மாறி
கண்ணிறைந்த காதலுடன்….
மீராவின் அன்புக் கண்ணனாக….











Monday, May 13, 2013

மாடி வீட்டு நாயும் ஒரு தெரு நாயும்.....


தெருவழியே ஒரு தெரு நாய் சென்று கொண்டிருந்ததாம். அந்த வழியிலே இருந்த மாடி வீட்டு நாயை கண்டதாம். அந்த வீட்டு நாய் அன்று தான் வீட்டுக்கதவை முதன் முதல் தாண்டி படலையடியில் உலா வந்து கொண்டிருந்ததாம். அந்த தெரு நாயும் படலையடியில் வந்து சிநேகமாய் சிரித்தது. சாறிங்க குரைத்தது. வீட்டு நாயும் பதிலுக்கு சிநேகமாய் குரைத்தது. தெரு நாய்க்கு ஏகப்பட்ட குஷி. லயிட்டா ஒட்டிக்கொள்ள நினைத்தது. தீடீரென எங்கிருந்தோ இதை கண்டுவிட்ட வீட்டு நாயின் சகோதர நாயும், நண்பன் நாயும் தங்கள் வீட்டு பெண் நாயுடன் நாய் மொழில் பேசிக்கொண்டன. “இந்த தெரு நாய் எங்கிருந்து வந்ததோ… பார் உடபெல்லாம் சொறியாக இருக்கிறது. பல தடவை இந்த நாயை பல தெருநாய்களுடன் கண்டிருக்கின்றோம்” என்று எச்சரிக்கை செய்தன. வீட்டு நாயும் அத்துடன் சிநேகமாக சிரித்து விட்டு உள்ளே சென்று விட்டது.

விட்டதா இந்த தெரு நாய்….? கீழிருந்தே பல முறை குரைத்து பார்த்தது. நான் எந்த நாயையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை… மற்ற நாய்களை பார் அவை தான் அப்படி…. எனக்கு பின்னுக்கு எத்தனை பெண் நாய்கள் திரிகின்றன என்று பிதற்றியது. தன் ஜம்பங்களை சொல்லி (கவிதையாக) ஊளையிட்டு பார்த்தது. வேறு தெருக்களில் அலைந்ததை பற்றி கதையளந்தது. எங்கிருந்தோ புதிதாக வந்திருந்த தன் சக நாய்களுக்கும் கீழிருந்தவாறே அந்த வீட்டு நாய் எப்படி இருக்கு என்று காட்டி… அறிமுகம் செய்ய முயன்றது. தன் குடும்ப நாய்களையும் அறிமுகப்படுத்தியது வீட்டு நாய்க்கு தன் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக… இறுதியாக நீயில்லாட்டி என்னால் இருக்க முடியாது என்று பாவ்லா காட்டியது… கடுப்பேத்த நண்பன் நாயையும் வீட்டு நாயுடன் இணைத்துக் கதைத்து பார்த்தது. சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் “கொஞ்சம் நேரம் தரமுடியுமா நாயே?” என்று கேட்டது. “அதற்கென்ன காலமெல்லாம் காத்திருக்கும் காவியக்காதல் என்னுடையது” …..மனிதக்காதல் அல்ல அல்ல… அதையும் தாண்டி புனிதமான நாய்க்காதல்… என்று “குணா” கமலஹாசன் ரேஞ்சில் பதில் சொல்லியது.

சிறு வயதிலிருந்தே செல்லமாகவும் பயிற்சியுமளிக்கப்பட்ட அந்த வீட்டு பெண் நாய் மௌனம் சாதிக்க முடிவெடுத்தது. கூடவே கொஞ்சம் நேரம் எடுக்க யோசித்தது. “ஏன் பல பெண் நாய்கள் தன் பின் சுற்றும் போது இந்த நாய் என்னை பார்க்க வேண்டும்.” என்ற சந்தேகம் வீட்டு நாய்க்கு ஏற்பட்டிருந்தது. எப்படியும் (நாயின்) வேஷம் கலைய கொஞ்ச நாள் எடுக்கும் அதுவரை பொறுப்போம் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு காத்திருந்தது.
கொஞ்சம் பொறுத்துப் பார்த்த தெரு நாய் பொறுமை இழந்தது… “என்னடா இந்த வீட்டு நாய் கீழிறங்கி வராதா? ஒரு வேளை வேறு நாயை பார்த்து விட்டதோ அல்லது நமது தெருக்கூத்துகள் விளங்கி விட்டதோ?” என்று லேசாக கலைய ஆரம்பித்தது. அந்த நேரம் பார்த்து வந்த தன் தெரு நாய் சகாக்களிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் “இந்த வீட்டு நாய் தான் என் பின்னால் அலைந்தது. நான் தான் அந்த பைத்தியகார நாயை வேண்டாம் என்டிட்டன்” என்று சொல்லிக்கொண்டது. கூடவே நின்ற சொந்தக்கார நாய்களும் கிடைத்தது போதும் என்று நழுவ தொடங்கின.

சற்றே கோபப்பட்ட வீட்டுநாய் தெருநாய் ஏன் அலைந்தது என்று கேட்க எத்தனித்தது. தடுத்த வீட்டு நாயின் தாய் நாய் சொன்னது “அதனளவு நாம் இறங்கினால் நம் மதிப்பு கெட்டிடும் கண்ணம்மா…எல்லாம் நன்மைக்கே ”

தன் தங்கை நாயுடன் நின்ற ஆண் நாயும் நண்பன் நாயும் அந்த வீட்டு நாயிடம் சிரித்தபடியே “தெரு நாய் என்றும் தெரு நாய் தான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தன் குணத்தை ஒரு நாள் காட்டிவிடும். நீயும் அதனுடன் சேர்ந்து சொறி சிரங்கு படாமல் தப்பித்தாய் என்று நினைத்துக்கொள். அந்த நாய் உன்னைப்பற்றி சொல்வதால் நீயொன்றும் குறைவதில்லை. நம் வீட்டிற்கு பண்பாடிருக்கிறது. உன் தகுதிக்கு நல்ல அல்சேஷன் நாயே கிடைக்கும். விடு இந்த தெரு நாயை…” என்று கூறின.

சற்றே எட்டிப் பார்த்த வீட்டு நாய் அந்த தெரு நாய் இன்னொரு நாயுடன் போவதை பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டது கூடவே மனதுள் பாட்டும் படித்துக்கொண்டது “ இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி மிருகக் காதல்….”

குறிப்பு - தகுதியறிந்து பழக வேண்டும்

Sunday, May 12, 2013

தேவதைகள் அதிகம் வாழ்வதில்லை


இறைவா
என் கவியால் ஓர் மடல் உனக்கு
பொன் தந்தாய்
பொருள் தந்தாய் - அன்பு
குடும்பம் தந்தாய்
நண்பர் ஆயிரம் தந்தாய் - நல்
சுற்றமும் தந்தாய்
நன்றி

மூளையில்
எண் வைத்தாய்
எழுத்து பதித்தாய்
இசை வைத்தாய்
இரசனை வைத்தாய்
கூடவே ஏன்
புற்றும் வைத்தாய்…?
எல்லாம் வைத்து விட்டேன்
இதையும் வைக்கின்றேன் என்றா?
இல்லை நிறம் மாறும் சில மனிதரிலிருந்து
நிரந்தரமாய் பிரித்திடவா?

அந்தஸ்து தந்த நீ – ஏன்
அன்பு தரவில்லை…?
என்று உன்னை கேட்க நினைத்தேன்…
பதிலளிக்கவா என்னை பக்கம் அழைக்கின்றாய்…?
இல்லை தேவதைகள் அதிகம்
வாழ்வதில்லை என்பதால் – உன்
குட்டி தேவதை என்னை
கூப்பிடுகின்றாயா?

எழுத்தாளன் மகள்
வயிற்றில் உதிக்க வைத்தாய்
எழுத்தால் என்னை தாலாட்டினாய்
எழுத்தாளர்களையே குருவாக்கினாய்
எழுத்தையே காதலாக்கினாய்
எழுத்துக்காகவே என் காலத்தினை எடுத்தாய்
என் எண்ணறிவால் கட்டிய கோட்டைகளை விடவும்
காகித்தில் வடித்த கவிகளே அதிகம்..
என் பிணமேட்டில் கூட
பூக்களை விடவும்
பேனாக்களே அதிகம் வேண்டும்…
கண்ணீர் துளிகளை விடவும்
பேனா மை சிந்துவதே பெருமை எனக்கு….
உன்னிடம் இறுதியாய்
யான் யாசிப்பதெல்லாம்
எழுத்துக்காகவே என்னை
இறக்க விடு… என்
பேனாவின் கூர்மைக்காகவே
நான் சாகவேண்டும்… இன்னொரு
ஜென்மம் நீ தந்தாலும்….
அதிலும் பேனை தான்
பிடிக்க வேண்டும்
என் பிஞ்சு விரல்கள்  





Friday, May 10, 2013

(காதலில்) சில முதிர்ச்சிகள்


மருத்துவ ரீதியாக பார்க்கும் போது ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் வளர்ச்சிப்படியின் ஒவ்வொரு மட்டத்திலும் சில அடைவுகளை எட்டும் போது தான் அதன் வளர்ச்சி சரியானது என கொள்ளப்படுகிறது. அல்லது அந்த நபருக்கு உடல், உள ரீதியான பாதிப்பு இருப்பதாக கணிக்கப்படும்.
நான் இன்று பதிவிற்காக எடுத்துக்கொண்ட விடயம் உடல்,உள ரீதியில் ஆரோக்கியமாகவும் ஆயினும் சில முதிர்ச்சிகள் அற்றவர்களாக இருப்பவர்கள் பற்றியும் அலசுவதே…
ஒருவனை சமூகம் அவனது பதவி,பணம்,படிப்பு என்பவற்றை வைத்து மதிப்பு கொடுத்தாலும்அ அவனது செயல், பழக்கங்கள், பேச்சு என்பவற்றினை வைத்துத்தான் மட்டுக்கட்டுகிறது.( நம்மைக் கண்டவுடன் எழுந்து நின்று வாழ்த்துபவர்கள் மனதிற்குள்ளும் மருகக்கூடும்). இந்த மட்டுக்கட்டல்கள் நம்மை மட்டுமன்றி நமது குடும்ப கௌரவம், நமது பதவிக்கான மதிப்புகளைக்கூட பாதிப்பது மட்டுமல்ல நாம் சமூகத்திற்கு சில செய்திகளை முன்வைக்கும் போது அவை எடுபடாமல் போவதற்றும் ஏதுவாகிறது.

வேறெங்கும் போகத்தேவையில்லை முகநூலிற்கு போனாலே போதும் ஒருவனுடைய தராதரத்தினை அறிவதற்கு. ஒரு லைக் பண்ணுவதை வைத்துக்கூட ஓரளவு கணிக்கலாம் யாருக்கும் யாருக்கும் கள்ளத் தொடர்புகள் , நல்ல தொட்புகள் இருக்கிறதென்று) சில ஆண்களும் சரி பெண்களும் சரி குறிப்பிட்டவர்களது முதுகு சொரிதல்களுக்கு கூட தேடிப்பிடித்து லைக் பண்ணுவார்கள். இன்னும் சிலர் வழிஞ்சு வாயால் ஒழுகுகின்ற அளவிற்கு கொமண்ட் போட்டிருப்பார்கள்.. இன்னும் சில ஜென்மங்கள் படித்திருக்கும், நல்ல பொறுப்பான பதவியிலிருக்கும், பண்பான குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஆனால் நையாண்டிக் கருத்துக்களை போட்டு தன்னுடைய தரத்தினை தானே இறக்கியிருக்கும்…..
இது நமக்கு தேவையா? எல்லாம் அளவோட இருந்தால் எமக்கான மரியாதையை நாமே காப்பாற்றிக்கொள்ளலாமல்லவா? நம்மவர்களிடம் குழந்தையாக இருப்பதில் நியாயம் இருக்கிறது. அதற்காக பொது இடத்திலுமா? அதிலும் வாழ்க்கையினை தெரிவு செய்யும் வயதில் இருப்பவர்கள், காதலிப்பவர்களுக்கென்று சில முதிர்ச்சிகள் இருக்க வேண்டும். அதற்காக வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டாம் என்பதல்ல என் வாதம்..
  • நண்பர்களுடன் அரட்டையடியுங்கள், ஊர்சுற்றுங்கள் ஆண்களென்றால் குடியுங்கள் ஆனால் உங்கள் ஈரல்கள் சுருங்கும் அளவிற்கோ ஆட்டக்காரி என்று பெயரெடுக்கும் அளவிற்கோ அது இருக்க வேண்டாம்
  •  எதிர்பாலாருடன் கடலை போடுங்கள் இந்த வயதில்லல்லாமல் பொல்லூண்டிக்கொண்டா கடலை போடமுடியும்? ( எனக்கும் நிறைய கடலைகள் இருக்குதுங்க) ஆனால் அதுவே நம்மவர்களை காயப்படுத்தாமல் , நம்மைக் களங்கபடுத்தாமல் இருக்க வேண்டும்.
  •  சண்டை பிடியுங்கள் அவை செல்லச்சண்டையாக இருக்கட்டும். சிறு விடங்களிற்கும் முகத்திலடித்தபடி “உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்னை தொடர்புகொள்ள வேண்டாம்” தூக்கியெறியாதீர்கள். காதலில் இன்றைய கீறல்கள் நாளைய வெடிப்புகளாக மாறும்.
  •   யாருடன் பழகுகின்றோம்? என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் ஒரு பொறுக்கியுடனோ அல்லது ஒரு தரம் கெட்ட பெண்ணுடனோ பழகும் போது நம்மையும் பிழையாகவே எடை போடக்கூடும்.
  •  காதலர்களுக்கிடையில் ஒருவர் இன்னொருவருடன் பழகும் போது பொறாமை வருவது சகஜம் (நமக்கெ தெரியும் இது நம்மள விட்டு போகாதென்று ஆனாலும் சும்மா ஒரு இது…) ஆனால் அதுவே ஒரே குறிப்பிட்ட ஒருவருடன் இணைத்துப் பேசும் போது சந்தேகமாக மாறுவதுடன் பிழை செய்யாத தரப்பினரிடம் ஏற்படும் வலி இருக்கிறதே அதுவும் சகோதர உறவுடன் பழகும் ஒருவருடன் மூன்றாம் நபர் முன்னிலையில் பேசும் போது( தண்டவாளத்தில் தலை வைக்க தோன்றும்) அதுவே உறவிற்கான முற்றுப்புள்ளியாக மாறும்.
  • குடும்ப பாசம் இருக்க வேண்டும். முகநூலில் பல மணி செலவளிக்கும் நமக்கு நம்மவர்களுக்கு சில வார்த்தை பேசுவது பாரமாகின்றது. ஆரம்பத்தில் இருக்கும் பற்று ஏன் இறுதியில் குறைகிறது? ( ஒரே முகநூலில் இருக்கும் ஆணையும் இரவில் முகநூலில் இருக்கும் பெண்ணுக்கும் எனது விடுதியில் வேறு பெயரிருக்கிறது) சமூக ஊடகம் தேவை தான் அதுவே நம்மை சந்தி சிரிக்க வைக்காமல் இருந்தால் சரி…
  • தொடர்புகளை குறைத்துக்கொள்ளுங்கள். முதல் நாம் பருவத்தில் செய்ததைப் போன்று தொடர்ந்தும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்க முடியாதுங்க. நமக்கென்று ஒருவர் வந்த பின் வேறு நண்பர்களை குறைப்பது நல்லது. (சில வேளை நம்மவர்கள் செல்லப் பெயரால் கொமண்ட் போடுவதை விரும்பாத நாம் அடுத்தவர் போடும் “ ரு அநயn வை னநயச  ஐ டழஎந ர….”  என்று அடுத்தவர் போட்டதை லைக் பண்ணியிருப்போம்.) இதே செயலை எதிர்பாலார் செய்திருந்தால் பொறுத்திருப்போமா? உங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாக உங்களவர்களை அறிமுகம் செய்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்.   
  •   சில வேளை மூன்றாம் நபரும் நம்மை அவதானிக்க கூடும் (என்ன வடை போச்சே என்று தான்) அவர்கள் சில வேளை உங்கள் முதிர்ச்சியின்மைகளை காட்டி உங்களவர்களை மட்டந்தட்டக்கூடும் (வயிற்றெரிச்சல் தான் ) நம்மவர்கள் தலைகுனியுமளவிற்கு நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டாமே
நமது சமூகம் ஆண் என்னபவன் பெண்ணை விட வயதில், பதவியில், படிப்பில் ஏன் உயரத்தில் கூட உயர்வாயிருப்பதை தான் வரவேற்கிறது. நாம் வீட்டிற்கு கடைக்குட்டியாக இருக்கலாம், ஒரே பெண்ணாக இருக்கலாம்… நமது சுட்டித்தனங்களை விட்டு கொஞ்சம் நம்மவளை பொறுப்பாக வழிநடத்தக்கூடிய அளவிற்கு முதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டு காதலிக்க ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால் நாளை குடும்பத்தில் பெண் குரல் உயர்ந்த விவாகரத்து வரை செல்ல உங்கள் முதிர்ச்சியின்மையே வழிசமைக்கக் கூடும்.

வாழ்க்கையென்பது வாழ்வதற்கு தாங்க. உண்மையாய், கவிதையாய் வாழுங்கள்

ஒரு பெண் இன்னொரு தந்தையையும் ஒரு ஆண் முதல் குழந்தையையும் தேடுவது தான் காதல்

Thursday, May 9, 2013

Anna Karenina by Leo Tolstoy

காதலெனும் பெயரில் சில களியாட்டங்கள்....


எம் முன்னோர்களது காதல் வாழ்க்கையினை எடுத்துக் கொண்டால் மிகமிக புனிதமானதொன்றாக விளங்கியது. அவர்கள் கண்டவுடன் காதலிக்கவில்லை. நின்று நிதானித்து காதலித்தார்கள். காலமெல்லாம் காத்திருந்து கைப்பிடித்தார்கள். ஒரு வேளை அவர்கள் காதல் திருமணத்தில் முடியாவிட்டாலும் ஒருவித புனிதத்தன்மை காணப்பட்டது. இவ்வளவிற்கும் அன்று தொலைத்தொடர்பு வசதிகள் கூட இருக்கவில்லை.

இன்று பாருங்கள் “கண்டதும் காதல் கொண்டது கோலம்” என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஒரு பெண்ணை /ஆணை காதலிப்பார்கள் துரத்தி துரத்தி வீட்டவர்களுக்கும் சில நேரம் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஆனால் முகநூலிலோ. பொதுக்கூட்டங்களிலோ பழைய நண்பிகள் , நண்பன்களை கண்டுவிட்டால் ஒரடி தள்ளியே நிற்பார்கள். தாம் நேர்மையானவர்கள், நமது உறவுகளும் நேர்மையானது என்றால், அவர்கள் தான் நம் வாழ்க்கைத்துணை என்று தீர்மானித்திருந்தோமானால் ஏன் அதை மறைக்க வேண்டும்? ஒருவனுக்கு ஒருத்தியென்றால் அதை ஏன் ஒளிக்க வேண்டும். தொலைபேசியிலும் நேரிலும் வழிகின்ற நாம் ஏன் அடுத்தவர் முன் நம்மவர்களை “சகோதரம்” என்றழைக்க வேண்டும். நமது அக்கா,தங்கை, அண்ணா, தம்பியுடன் காதல் +  காமத்துடன் தான் பழகுகின்றோமா? கேட்டால் “சமூக ஊடகமாம்”. இப்படியானதொரு சமூக ஊடகம் நமக்குத் தேவை தானா?

சிலர் வெளியில் ரொம்ப நல்லவர்கள் போல் தாம் வேறு ஆண்களையும் பெண்களையும் ஏறெடுத்தே பார்ப்பதில்லை என்று பீற்றிக்கொள்வார்கள். அடுத்தவர்கள் பற்றி ஆயிரம் விமர்சனம் வேறு. பழகிப்பார்த்தால் தெரியும் இவர்களது சுயரூபம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் “காதலில் தொடுகைகள் முக்கியமாம். இல்லாவிட்டால் அது உண்மைக்காதல் இல்லையாம்” ஏன் தொட்டால் தான் காதலா? மனதைப்பார்த்து தான் விரும்புகின்றோம் என்றால் ஏன் தொடுகை அத்தியாவசியமாகிறது.? நமது தாத்தா, பாட்டி காலத்திலெல்லாம் எங்கே சந்தித்துக் கொண்டார்கள்? திருமணம் செய்து நல்லதொரு அர்த்தமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவில்லையா? கவனம் காதலுக்கு முன் தொடுகை கண்ணை கசக்க வைக்காமலிருந்தால் சரி தான்.
 

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். காதலுக்கு (????) ஒருத்தி களியாட்டங்களுக்கு பலர். இவர்களது தொலைபேசிக்கு இரவில் அழைப்பினை ஏற்படுத்தி பார்த்தாலே தெரிந்துவிடும். அதென்னங்க தினமும் “நடுநிசி அழைப்புக்கள்” நிச்சயம் அலுவலக வேலைகள் நடுச்சாமம் வரை இருக்கப்போவதில்லை. ஒரு வேளை இருந்தாலும் ஒவ்வொரு நாளுமா இருக்கும்? கல்யாணக் கனவுகளுடன் காதலர்கள் இருப்பார்கள் தொலைபேசியில் கண்டவர்களுடன் கள்ளக்காதல் நடந்து கொண்டிருக்கும். இதை காதலர்கள் கண்டுகொண்டால் பழியை தேடிப்பிடித்து ஒதுக்கிவிடுவார்கள். (நாம் தான் ரொம்ம்ம்ம்…ப நல்லவர்களாயிட்டே… அடுத்தவர்கள் தான் பண்பு தெரியாதவர்கள்) இதற்காக நண்பர்கள் இருக்க கூடாது என்பதல்ல அர்த்தம். அந்த நட்பு (???) நமது பிறந்த நாளுக்கு கூட விழித்திருந்து வாழ்த்துகின்ற அளவுக்கு போகாமல் இருந்தால் சரி. காதலிப்பவர்கள் வாழ்த்தினால் அர்த்தமிருக்கும் கண்டவர்களும் வாழ்த்துவதென்றால் நிச்சயம் நட்பையும் , காதலையும் கடந்த ஏதோவொன்றும் இருக்கும் என்பது ஆணித்தரமான கருத்து.

ஆனாலும் சில ஆச்சரியங்கள்
  •  தாம் எவ்வளவு தான் விளையாட்டுப்பிள்ளையாக இருந்தாலும் காதலே செய்யாத புத்தம்புதிதான காதலி தேவை சிலருக்கு.
  • சில நல்ல குடும்பத்து பிள்ளைகளே இவ்வாறு நடப்பது மட்டுமன்றி நல்ல குடும்பத்து துணைகளை தேடி அந்த அப்பாவியின் வாழ்க்கையையும் சிதைக்க நினைக்கின்றார்கள்
ஆகமொத்தத்தில் பதவியை காட்டி பல பெண்களை தேடுகின்ற ஆண்களும் உடம்பைக் காட்டி ஆண்களை மயக்குகின்ற பெண்களும் தான் இன்றைய காதல் உலகத்தில் கதாநாயகர்கள். ஆனால் கல்யாணத்திற்கு மட்டும் ஒரு நல்ல பண்பான, படித்த, அப்பாவியான இழிச்சவாய் வேண்டும்.

எத்தனை பெண்களின் பின் அலைகின்றோம் என்பதிலில்லை நமது ஆண்மை எத்தனை ஆண்களை சுண்டி இழுக்கின்றோம் என்பதிலில்லை எமது பெண்மை…… ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அது காதலே என்றாலும்!

தெரு நாய் தாங்க எந்த நாய் கிடைக்குமென்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையுமாம்……

Tuesday, May 7, 2013

மூச்சிலும் என் வாசம் மட்டுமே....


என்னவனின்
மறுபக்கத்தினை கேள்விப்பட்டு…
கோபம்; பின்
அழுகையாயிருந்தது
அதுவும் மறைமுகமாக…
அடுத்தவன் சொன்ன போது தான்
மரமண்டையில் ஏறியது…
கேட்டதிலிருந்தே
வெம்பி வெடித்திருந்தது
மனம்…..

எந்தப் பெண்ணால் தான்
முடிந்திடும்…?
நமக்கு மட்டுமேயான
எம்மவர்களை பகிர…?
அதுபற்றி அறிந்ததிலிருந்து
ஆத்திரம் ஆற்றாமையாகியிருந்தது….

இன்று சிக்கிவிட்டான்
கள்ளத்தனமாய்….
எதிர்பார்க்கவில்லை
எதிரே வந்து நிற்பேனென்று…
அருகில் நெருங்கி –
எனக்கு மட்டுமேயான
என்னவனின்
உதட்டில் - அவன்
பற்றவைத்திருந்த சிக்ரேட்
சனியனை பறிந்தெறிந்தேன்…..
பற்றியெரிதலுடன்.. – என்னவனின்
உள்ளம்
உதட்டில் மட்டுமல்ல
மூச்சிலும் என் வாசம் மட்டுமே
வேண்டும்…..

திராட்சை தோட்டத்து நரியாக…

என்னவனை முத்தமிட
முயன்று தோற்பதே
வுhடிக்கையாகிவிட்டிருந்தது…

ஒவ்வொரு முறையும்
முயல்கையில் - அவன்
கேசம் என்னை ஸ்பரிசிப்பதும்…
மூக்கு நுனிகள் மோதிக்கொள்வதும்
என் உதட்டில் - அவன்
வியர்வை கரிப்பதும்
என்னவனின் கன்னத்து முடி
உறுத்துவதும்…..
அழகான கவிதை…

சில நேரம் மனம் கூட
தோற்பதை தான் விரும்புகிறது..
முயலும் போது அழகாக
என்னவனில் முட்டிக்கொள்ளலாம்
என்பதால்….. – அவன் கூட
அதனால் தான் என்னவோ
முயற்சிகளுக்கு கூட சொக்கலேட்டுகளை
விலை பேசியிருந்தான்…. என்
தோல்விகள் கூட என்னவனுக்கு
இன்ப அவஸ்தையாம்… ஆனால்
அவன் ஆறடி உயரத்திற்கு
எம்பி – அவன்
முன்நெற்றியில் - என்
இதழ் பதிப்பதென்பது
அன்று வரை
முயற்கொம்பாகவேயிருந்தது…

எட்டி சலித்த ஒரு நாள்
திராட்சை தோட்டத்து நரியாக…
எனக்கு பிடிக்கவில்லை என்று
ஒதுங்கிய வேளை…
அவன் சற்றே வளைந்து
இட்ட கன்னத்து முத்தம்….
அதன் சத்தம்….
கனவின் திடுக்கிடல்களிலும்
இனிக்கிறது…

Thursday, May 2, 2013

இறந்திருந்தது என்னுள் ஒளிந்திருந்த குழந்தை…


உன்னிடம் மட்டும் தான்
அழ பிடிக்கிறது…
உன்னுடன் நடக்கும் போது
மஞ்சள் கோடுகள் கூட
எனக்குத் தெரிவதில்லை – நீ
என்னைப் பார்த்துக்கொள்வாய்…
பேரூந்தில் கூட – நீ
அருகிலிருந்தால் தூக்கம் எங்கிருந்தோ
தழுவிக்கொள்கிறது – உன்
தோளில் சாய்ந்துறங்கலாம் என்பதால்…
சந்திக்கும் போதெல்லாம்
சொக்லட்டுக்காய் உன்னிடம் மட்டும் தான்
இரந்து நிற்கப் பிடிக்கிறது…..
வீட்டாரின் கண்டிப்பை மீறியும்
கடற்கரையில் பட்டம் விட
உன்னிடம் தான்
கெஞ்ச முடிகிறது..
உன்னுடன் மட்டும்
ஊர் சுற்றுவது பிடிக்கிறது – நீ
விடுதி வரை வருவாய் என்பதால்….
சண்டைகள் கூட
தினம் உன்னிடம்
போடாவிட்டால் சாப்பாடு சமிபாடடைவதுமில்லை
நீ கன்னத்தில்
தட்டிவிட்டால் மட்டும்
கலங்கித் தொலைகிறது கண்கள்
ஏதோ உன்னருகில் மட்டும்
குழந்தையாகிவிடுகிறது என் மனம்….

ஆனாலும்;;;;
என்று என்னை
ஆபத்தானவள் - முன்
தெரிந்திருந்தால்
பழகியிருக்க மாட்டேன்….
நீ குழந்தையுமல்ல என்றாயோ…
அந்த நொடியே
இறந்திருந்தது – என்னுள்
ஒளிந்திருந்த குழந்தை…

திகதி – 20.04.2013
நேரம் - 12.55

அதிகம் வாசிக்கபட்டவை