- பழைய சோற்றுடன் தேங்காய்பூ, சின்ன வெங்காயம், பச்சை கொச்சிக்காய் வைத்து சாப்பிடலாம்.
- பழைய சோற்றுடன் ஊறுகாய் சேர்த்து உண்ணலாம்.
- பழைய சோற்றுடன் நன்றான பழுத்த வாழைப்பழம், தேங்காய் பால் அல்லது பூ பிசைந்து சாப்பிடலாம்.
- முதல் நாள் சமைத்த மீன் குழம்பு இருப்பின் அதனை நன்றாக வற்ற சூடாக்கி பழைய சோற்றுடன் சாப்பிடலாம்.
- கருவாட்டினை பொரித்தெடுத்து வெங்காயத்துடன் சேர்ந்தும் பழைய சோறு சாப்பிடலாம்.
- பழைய சோறும் தயிரும் பிசைந்து சாப்பிடலாம்.
இப்படியே பல்வேறு கூட்டமைப்புடன் அமைகின்ற பழையசோறு எதனுடன் சேர்ந்தாலும் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு பிடித்தது மீன் குழம்பும் பழைய சோறும். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்தில் விடுதிச் சாப்பாட்டால் நாக்கு செத்துப்போயிருக்கும். அதனை அடிக்கடி உயிர்த்தெழச்செய்ய எப்போது விடுமுறை கிடைத்தாலும் மட்டக்களப்பிற்கு பறந்தோடி போய்விடுவேன் நான். நான் வீட்டிற்கு வருகின்றேன் என்றால் காலையுணவாக கோதுமைமா பிட்டு, சம்பல், முட்டைப்பொரியல், மீன் குழம்பு இருக்க வேண்டும். அல்லது பழைய சோறும் மீன் குழம்பும் இருக்க வேண்டும். அம்மா கூடுதலாக முட்டைப்பொரியலும் செய்து வைத்திருப்பார். முதல் நாள் மதியத்தில் இருந்தே இதற்காக விரதம் இருக்கும் எனக்கு வந்திறங்கி குளித்து உடை மாற்றிய பின் கோப்பி குடிக்க வேண்டும். பின்னர் கதையெல்லாம் பேசி, முடிய ஒரு பிடி பிடிச்சுட்டு தூங்கினால் கும்பகர்ணியை பத்து மணிக்குத்தான் மறுபடி நடமாடுவதை பார்க்கலாம்.
சரி இப்படி முதல் நாள் மிஞ்சின சோறு பழைய சோறாக உண்ணப்படுவது சரி பழைய சோறும் மிஞ்சினால் என்ன செய்வது? மங்கு செய்யலாம். வீட்டில் மிஞ்சின சோற்றினை நன்றாக நீரை வடித்து வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் உலர்த்திய பின் தாச்சியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். வறுத்தெடுத்ததை உரலில் போட்டு இடித்தெடுக்க வேண்டும். இடித்தெடுத்ததற்குள் தேங்காய்பூ, சக்கரை போட்டு இடித்து துவைத்தெடுக்க வேண்டும். துவைத்தெடுத்ததை உருண்டையாக பிடித்து இஞ்சித்தேத்தண்ணியுடன் சாப்பிட்டால் சுவையோ சுவை! பிசைந்தெடுத்ததை சிறு உருண்டைகளாக்கி தட்டி வேகவைத்து மங்கு ரொட்டியும் செய்யலாம்
உலரவைத்த சோற்றினை காற்றுப்புகாத வகையில் போத்தலில் அடைத்துவைத்தும் பாவிக்கலாம். தேவையான போது துவைக்கலாம். எப்படியோ சோற்றினை வீணாக்காமல் இருந்தால் சரி. அத்துடன் இது சத்துணவும் கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
பள்ளிக்கால விடுமுறை நாட்களில் பழைய சோற்றுடன் பழைய குழம்புக்கறி மீனையும் ஊறுகாயும் தேங்காய்ப்பூவும் சேர்த்து பிசைந்து கவளம் பிடித்து அம்மா உருட்டி கையில் வைக்க சாப்பிடும் அந்தக்கவளத்தில் சுவை மட்டுமல்ல அம்மாவின் உள்ளங்கை இளஞ்சூடும், வாசனையும் சேர்ந்திருக்கும் பாருங்கள்……… இதெல்லாம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிகின்றதானதொரு விடயம்.
மிஞ்சின மாட்டுப்பாலினை என்ன செய்யலாம்…?
சற்று பால் திரண்டிருந்தாலோ அல்லது அளவுக்கதிகமாக மிஞ்சியிருந்தாலோ பாலினை அடுப்பில் வைத்து நன்றான சுண்டச்காய்ச்ச வேண்டும். அதனுள் தேசிக்காய் புளி அல்லது வினாகிரியை சற்று சேர்க்க வேண்டும். பால் மேலும் திரள ஆரம்பிக்கும். பால் திரிந்து நீர் வேறாகிய பின்னர் சுத்தமான சீலையில் இட்டு திரிந்த அடர்ப்பத்தினையும் நீரையும் வேறாக்கிக்கொள்ள வேண்டும். சீலையில் வடித்தெடுத்ததை நன்றாக அழுத்தி பிழிந்தெடுத்து தட்டொன்றில் பரவிக்கொள்ளலாம். பரவிய பின்னர் சிறு துண்டாக வெட்டலாம். அல்லது சீலையில் பிழிந்தெடுத்ததை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டலாம். முதல் முறையில் செய்தால் சிறு சிறு சதுர துண்டுகள் கிடைக்கும் இரண்டாவது முறையில் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும் அவ்வளவு தான் வித்தியாசம். இது தான் பன்னீர்.
இத்துண்டுகளை வேகவைத்த கடலையுடன் சேர்த்து குழம்பு, குருமா செய்யலாம். அல்லது வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி பன்னீர் துண்டுகளை கலந்து பச்சடி செய்யலாம். அல்லது பன்னீரை என்ன விதமாகவெல்லாம் சமைக்கலாமோ அப்டியெல்லாம் செய்து சாப்பிடலாம். செவ்வாய், வெள்ளிகளில் மரக்கறி சாப்பிட கள்ளமடிக்கும் என் வீட்டாக்களை போன்றவர்களுக்கு இது நல்லதொரு டிஷ்! மச்சம் இல்லென்னும் குறையை பன்னீர் தீர்த்துவிடும். சோயாமீட்டிற்கு அடுத்ததாக பன்னீரையும் மரக்கறி தினங்களுக்கான ஸ்பெஷல் பட்டியலில் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment