நுனிகளில் தொக்கி நிற்கின்ற கலாசாரங்கள்

நண்பர்கள் எல்லாம் சுற்றுலா சென்றிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் சைகையால் தன்னுடைய டீசேட் கழுத்து நுனியை தூக்கித்தூக்கி காட்டினார். முதலில் எனக்கு இது எனக்கான சைகை தான் என்பதே புரியவில்லை. ஆனால் திரும்பத்திரும்ப கண்களாலும் சைகை கொடுத்த போது தான் எனக்கென்றே எனக்கு புரிய ஆரம்பித்தது. எனினும் எனக்கு சைகை புரியாதததால் எனக்கேதும் சொல்ல வருகின்றீர்களா என்று பொதுவில் கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பியவர் மீண்டும் சைகையால் கைத்தொலைபேசியை பார்க்கும் படி கூறினார். சரியென்று போய் பார்த்தால் Adjust ur B….. என்றொரு குறுஞ்செய்தி. விளங்காததால் நானும் Means? என்று மறுசெய்தி அனுப்பினேன். பதிலில்லை. திடீரென தனக்கு வேலையொன்று வந்திருப்பதாகவும் தான் போக வேண்டும் என்றும் கூறி என்னைப்பார்த்து முறைத்துவிட்டு போய்விட்டார். முதலில் சபையில் இரகசியம் பேசுவது அநாகரீகம் அதை விட அதனை தெளிவுபடுத்தாமல் கோபப்பட்டு போவது சுற்றுலா மனநிலையை மாற்றும் என்கின்ற பொதுபுத்தி இல்லாதவர்களிடம் நான் என்ன பேசமுடியும் என்று நானும் பேசாமல் இருந்துவிட்டேன். 

மாலையுடன் சுற்றுலா முடிந்து எனதறைக்கு திரும்பிய பின்னர் தொலைபேசியை பார்த்தால் ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் தனக்கு அழைப்பெடுக்கும் படி. ஏதோ பிரச்சினை போல என்று அழைப்பெடுத்தால் எடுத்தவுடனேயே உரத்த குரலில் சடசடவென ஏச்சும் பேச்சும்.

“ நீர் தமிழ் பிள்ளையல்லவா இப்படியா உள்ளுடுப்பு ஓரத்தில் தெரிவது கூட தெரியாமல் மரக்கட்டை மாதிரி இருக்கின்றீர்…. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள். இப்படியா காட்டுவது…..” என நீண்டுகொண்டே போனது உரையாடல். இந்தப்பக்கம் ஒன்றும் புரியாமல் "தயவுசெய்து என்ன என்று தெளிவாக சொல்லுங்க...." என்று இடையிட்டேன் நான். நான் போட்டிருந்த மேற்சட்டையின் விளிம்பின் ஓரத்தில் உள்ளாடையின் விளிம்பு தெரிந்துள்ளது. அதனை பொறுக்க முடியாமல் தான் என்னை பாதுகாக்க இந்த கலாசாரத்தின் காவலர் இவ்வளவு கோபப்படுகின்றாராம். முக்கியமாக வடக்கு கிழக்கின் கலப்பு குழந்தையாகிய நான் தமிழ்க்கலாசாரத்தினை பாதுகாக்க வேண்டுமாம். சரியான தமிழ் ஆணால் இதனை சகிக்க முடியாதாம். தமிழ்ப்பெண் ஊரெல்லாம் இப்படி காட்டித்திரியக்கூடாதாம். சிறிது நேரத்தின் பின்னர்  "Becourse I like you lot Darling, U mean to me...." என்கின்ற சாட்டு வேறு 

அழைப்பை துண்டித்த பின்னும் எரிச்சல் தொடர்கின்றது . அதெப்படி கலாசாரம் என்பது எப்போதும் பெண்ணின் உடையில் மட்டும் தொங்கித் திரிகின்றது என்பது எனக்கு புரியாத புதிர். சமூக ஊடகங்களிலும் பார்க்கின்றேன். விளம்பரங்களுக்கு டூ புpஸில் பெண்ணைக்காட்டும் போதும் சினிமாவில் ஐட்டம் சோங் வைத்து பெண்ணின் இடுப்பை சூம் செய்யும் போதும் மார்வை குளோஸ் அப்பில் காட்டும் போதும் போகாத மானம் கலாசாரம் எப்படி என்னுடைய Bra, Panty  இல் தொங்கி நாசமாகின்றது.? 

உடுப்புகளை காயப்போடும் போதும் பெண்ணின் உள்ளாடைகளை மறைத்து போடுவதை விடுதியில் உறவினர் வீடுகளில் அவதானித்திருக்கின்றேன். ஒரு தடவை என்னுடைய இளைய சகோதரன் வீட்டில் உடைகளை காயப்போட்டிருந்த போது “ அக்காச்சி உங்கட உடுப்புகள மறைச்சு போடலயா….” என்று கேட்டதற்கு அம்மா கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது. "உண்மையில் பெண்களின் உள்ளாடைகள் தான் சூரிய ஒளியில் முறையாக போடப்பட்டு உலத்தப்பட வேண்டும் என்பதும் இதனால் கிருமித்தொற்றல்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதும் மருத்துவவியல் உண்மை."  என்னுடைய சகோதரன்களிடம் கேட்டுப்பாருங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பு கூட தமக்கு ஏனைய கண், மூக்கு, வாய் போன்றதொரு மனித உறுப்பென்பார்கள்.

பார்வை தான் எல்லாமே…. துணியை துணியாக, உடலை என்பும் தசையுமாக, உணர்வுகளை உணர்வாக அணுகப்பழகுங்கள். அதுவும் உலகின் நாகரீகத்தின் உச்சத்திலுள்ளதொரு நாட்டில் முக்கியமானதொரு விடயத்தினை பட்டப்பின் படிப்பாக தேர்ந்தெடுத்திருக்கும் நாம் இவ்வாறெல்லாம் பிற்போக்காய் பேசுவது தும்புக்கட்டைக்கு குஞ்சம் வைத்தது போல பொருத்தமற்றதொன்று…. எனக்கென்ன சந்தேகமென்றால் உள்ளாடை வெளியில் தெரிந்தது ஒரு பக்கமிருக்கட்டும்,  அது குறித்த உங்கள் பார்வை இன்னொரு பக்கமிருக்கட்டும் உங்களது எல்லைகள் என்ன?  


எல்லா பெண்களையும் இவ்வாறு தான் பார்க்கின்றீர்களா? உங்கள் பார்வை பற்றி கூறுவதற்கும் அதனை திணிப்பதற்கும் நீங்கள் யார்? என்னளவில் ஆடை என்னுடைய சுதந்திரம். எங்கு எவ்வாறு உடுக்க வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். என்னைப்பொறுத்தளவில் எங்கு நிற்கின்றீர்கள்? எங்கு போகின்றீர்கள்? இதென்ன உடை? என்றெல்லாம் கேட்பதுவே ஒருவித வன்முறை தான். 

எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன். நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும். என் வரையில் என்னவரிடம் கூட நீங்கள் கறுப்பு டீசேட் போட்டால் நல்லாயிருக்கும் (Note this Point) என்று தான் என்னுடைய உச்சபட்ச விருப்பத்தை கூட சொல்வேனே தவிர, அல்லது பரிசளிப்பேனே தவிர வற்புறுத்த மாட்டேன். இது தான் என்னுடைய எல்லை என நினைக்கின்றேன். இதே எல்லையை எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றேன்.  ஒரு ஆழ்ந்த உறவுநிலையில் இந்த கோட்டினை நடுவில் வைத்துக்கொள்ளுங்கள். தம்பதிகள் கூட சில நேரங்களில் இந்தக் நடுக்கோட்டின் அருகில் இருவரும் நெருங்கி வரலாம் அல்லது ஒருவர் நெருங்கி வரலாம். ஆனால் தாண்ட முயலாதீர்கள். அப்படித்தாண்டுவது தான் உறவுகள் உடைவதற்கான முதற்காரணம்.

குறிப்பு 01. என்னுடைய உடை குறித்து பேசுவதற்கான உரிமை என் துணை மற்றும் குடும்பத்தினருக்கே உண்டு. இது வரை குடும்பத்தினர் தலையிட்டதில்லை. என்னுடைய துணைத்தெரிவும் அவ்வாறே இருக்கும்.


குறிப்பு 02. ஏன்,எங்கு, யாருடன், எப்படி போன்ற வினாக்களுக்கான பதில்களை என்னவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னுடைய அன்பின் மற்றும் மதிப்பின் நிமிர்த்தமே தவிர யாரும் கோட்டை தாண்டுவதை நான் அனுமதிப்பதில்லை. அல்லது எனக்கு பிடிப்பதில்லை. நேர்மை என்பது மனதில் இருந்தால் போதுமானது. விளக்கங்கள் கொடுத்து ஏற்படுத்த முடியாது.


குறிப்பு 03. என்னுடைய துறைகள் எல்லாமே ஆண்கள் மயப்படுத்தப்பட்டவை. வேலை நேரங்கள் சூரியனின் அட்டவணையில் தங்கியிருப்பதில்லை. நடு இரவில் அருகருகே இருந்து வேலை செய்தாலும் என்னுடைய எல்லை, என்னில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு நான் கொடுக்கவேண்டிய நம்பிக்கை பற்றி எனக்கு தெரியும். இது குறித்த தெளிவும் உண்டு. காணும் ஆண்களிடமெல்லாம் உரசுமளவு பலவீனமானவளில்லை. இதுவரை ஒரேயொருவரிடம் தான் மிஸ் யூ கூட சொல்லியிருக்கின்றேன். அவருக்காக சாப்பிட காத்திருந்திருக்கின்றேன். குறித்துக்கொள்ளுங்கள் அவருடன் பேசாத நாட்களை கூட கணக்கு வைத்திருந்திருக்கின்றேன்.


குறிப்பு 04. என்னுடைய வாழ்க்கைத்துணையே ஆனாலும் இந்த பாஸ்வேட் கேட்டு ஆராய்வது, கைத்தொலைபேசியை நோண்டுவது, யாருடன் இருந்தாய், என்ன செய்தாய் என கேள்விகேட்டு ஆளைத்துளைப்பது பின்பு உன்னில் உள்ள அதீத அன்பு தான் இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவதெல்லாம் எனக்கு பிடிக்காததொன்று. இதனையே என்னுடைய துணையிடமும் எதிர்பார்க்கின்றேன்.


குறிப்பு 05. படிப்பென்பது பதவிக்கல்ல. அது எமக்குள் முதிர்ச்சியை நாகரீகத்தினை உருவாக்க வேண்டும். ஒருவேளை என் துணை இன்னொருவருடனான நெருக்கமான படத்தினை போட்டால் கூட நான் கேட்க மாட்டேன். அது தான் நம்பிக்கை. அது தான் முதிர்ச்சி. அது அவராகவே தெளிவுபடுத்த வேண்டியதொன்று. அன்பை, நம்பிக்கையை என்னளவில்  நீங்கள் சொல்லிக்கொள்கின்ற கலாசாரங்கள் அல்லது படுக்கை தீர்மானிப்பதில்லை.

சந்தேகம் 01. அதெப்படி பார்த்து 60 நாட்களுக்குள் (கண்டதும்) காதல் வருகின்றது? ஒரு நல்ல ஆண் ஒரு பெண்ணின் உள்ளுடை பற்றி பேசலாமா? பேசுவதை விடுங்கள் நோக்கலாமோ அம்பி? 


சந்தேகம் 02  Victoria's Secret, Calvin Klein , Amante, Senorita நுனியில் கலாசாரத்தினை தேடும் நீங்கள் ஜீன்ஸ் இனுள் XYXX, Jockey, Boxer  இல்லாமல் கோவனமா அணிந்திருக்கின்றீர்கள்?


சந்தேகம் 03. நுனி தெரிந்ததிலேயே கலாசாரம் சரிந்திருக்கென்றால் டெனிஸ் உடையில் விளையாடும் போது கவிழ்ந்திருக்குமா? நுனிக்கே குதிப்பவர் நல்ல காலம் டெனிஸ் உடையைப் (யில்) பார்த்தால் நம்முடைய தொடைகளையும் மார்பு குலுங்கல்களையும் மூட பின்னாலேயே போர்வையுடன் வந்திருப்பாரோ? 


சந்தேகம் 04. நம்முடைய தமிழ் கூறும் நல்லுலகில் பெண்ணின் உடை, மாதவிடாய், உறுப்புகள் குறித்து வெளிப்படையாக பேசும் பகுத்தறிவுள்ள, நேர்மையான, முற்போக்கான ஆண்கள் உண்மையில் இருக்கின்றார்களா? இல்லையா? 


குறிப்பு (+) சந்தேகம்: Instagram இல் போட்டுள்ள போர்வையுடன் தூங்கும் படத்தை பிடித்தது யார் என்பது குறித்தும் காவலர் கேட்டிருந்தார். பிடித்தது என் தமையனார். இதுவரை என் குடும்பம் மட்டுமே என் படுக்கையறையில் நுழைந்திருக்கின்றது. இதுவரை 2 லைக்குகள் தான் கிடைத்துள்ளது ஆனால் பார்வையிடல் 398 ஐ கடந்திருக்கின்றது. இவர் தான் திரும்ப திருப்ப பார்த்திருப்பாரோ?

கழுவி காயப்போடுகின்ற உள்ளாடை நுனிகளில் இல்லாத கலாசாரம் , பண்பு எங்கிருக்கின்றது தெரியுமா? மனதில் ஒருவரை மட்டும் நினைப்பதில்... ஆயிரம் பேர் வந்து நின்றாலும் ஒப்பிட்டுப்பார்க்காமல் அவர் தான் வேண்டும் என்று  ஒற்றைப்பிடியில் நிற்பதில்...  அந்த அன்பை அடைய நேர்மையான வழியில் உணர்வுகளை காயப்படுத்தாமல் போராடுவதில்... நம்மவர்களுக்காக அவர்கள் சார்ந்த பொறுப்புக்களை , அவர்கள் குடும்பத்தை  நேசிப்பதில்... அவர்கள் மண்ணை மதிப்பதில்... அடுத்தவர்கள் முன் விட்டுக்கொடுக்காததில் .....பல லட்சம் மைல் தாண்டி நின்றிருந்தாலும் காட்டுகின்ற அக்கறையில் இருக்கின்றது... எல்லாவற்றினையும் விட நமக்கானவர்களுடன் சமூகத்தில் தலைநிமிர்ந்த வாழ்கின்ற அந்த திமிரில் இருக்கின்றது என் கலாசாரம். 















 


Comments