Tuesday, March 26, 2013

சந்தேகம் எனும் நோய்…..


இன்று உளவியல் தொடர்பானதொரு விடயத்தினை தொட்டுச்செல்ல நினைக்கின்றேன். வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ஒன்று. ஏன் நாம் பிறந்தது இந்தத் தாய்க்குத் தான் என்பது கூட நம்பிக்கையில் தான் தொடங்குகின்றது. அந்த நம்பிக்கை தான் இவர் என் தந்தை என்பது தொடங்கி அனைத்திலும் தொடர்கின்றது. அதற்காக “இவரை அவ்வளவு நம்பினன் ஏமாற்றிவிட்டார்” என்று யாராவது சொன்னால் அவர்களது மண்டையில் 100 தடவை குட்டவேண்டும். நம்பிக்கை என்பதும் மண்குதிரையை நம்பி மோசம் போறதும் வேறு விடயங்கள்.

ஓகே நம்மோட சப்டருக்கு போவம். பொதுவாக இந்த நம்பிக்கை என்ற விடயம் இன்று காதலர்கள், தம்பதியர் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றியே கூற விரும்புகின்றேன். அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எவ்வாறு விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்பதை நான் கூறுவதே என் வயதிற்கு பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இவ்வாறான உறவுகளிடையே நம்பிக்கையிழந்து சந்தேகம் தோன்றுவதற்கு சில விடங்களை உளவியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

•    உறவுகளிடையேயான தாழ்வுணர்ச்சி
•    சிறுவயது தாக்கங்கள்
•    தம்மை கொண்டே அடுத்தவரையும் மட்டுக்கட்டுவது.

இந்த முதலாவது விடயத்தினை சரிசெய்ய சந்தேகப்படும் நபரை சூழ இருப்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அந்த நபரிடம் அவருக்கேயுரிய விசேட இயல்புகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு அவர்களுக்கான தனித்தன்மைகளை விளங்கிக் கொள்ள செய்து உறவுகளுக்கிடையான நம்பிக்கையினை வளர்க்க முடியும்.

இரண்டாவது வகையினரை கட்டாயம் உளவியல் வைத்தியரிடம் அழைத்து செல்ல வேண்டும. இதனை நன்றாக கையாளத் தெரிந்த ஒருவரால் தான் சிறுவயதில் ஏற்பட்ட மனக்காயங்களை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.பக்குவம் இல்லாதவர்கள் இதை அணுகுவதை விட அனுபவம் கொண்டவர்களால் இதனை குணப்படுத்த முடியும்.

மூன்றாவது விடயம் தான் இன்று எனது முக்கிய கருப்பொருள். இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்றபொரு விடயம். தான் கள்ளனாயிருப்பதால் அடுத்தவரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது. தான் இரவில் அடுத்தவருடன் தொலைபேசியில் கதைத்துப் பழகியவனுக்கு அடுத்தவர்களும் இவ்வாறு தானிருப்பார்கள் என்றதொரு பயம் இருக்கும் தான் பலருடனும் தவறாக இரட்டை அர்த்தத்தில் பழகினால் நம்மைச் சார்ந்தவர்கள் அடுத்தவருடனும் இவ்வாறு தான் பழகுகின்றார்களோ என்றதொரு பயமிருக்கும். நமக்கு அடுத்தவர்களுடன் நல்லதொரு உறவு இருக்குமானால் எம்மவர்களின் நட்பின் தூய்மைதான் கண்ணுக்குத் தெரியும். இன்னும் சிலர் ஏதோ தான் மட்டும் வானத்திலிருந்து அப்படியே குதித்த பரிசுத்தர்கள் போலவும் அடுத்தவர்கள் சேற்றிலேயே இருப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள். இப்படியானவர்களுக்கு அதிக சந்தேகம் அடுத்தவர்களிடம் இருக்கும். காரணம் வெளியில் காட்டிக்கொள்வது ஒரு முகம் உண்மை முகம் வேறு. இன்னொரு பகுதியினர் தம்மிடம் பழகுபவர்கள் நல்லவர்கள் என்றும் அடுத்தவர்களுடனான உறவுகள் மட்டும் பிழையானதென்றுத் தப்பர்த்தம் செய்து கொள்வார்கள். இதற்கும் மேற்கூறியதே காரணம் கூடவே தம்மை நல்லவர்கள் என்று நியாயப்படுத்திக்கொள்வதற்கும் இவ்வாறு கூறிக்கொள்வார்கள். இவ்வானவர்களிடம் நம்மை நிரூபிக்க முயல்வதை விட மௌனமாக விலகுவது சிறந்தது. அல்லது தமது தோல்விகளை குறைகளை மறைக்க அடுத்தவர்களை கெட்டவர்களாக சித்தரிக்க முயல்வார்கள்.

நான் முதல் பதிவுகளில் கூறியுள்ளதினைப் போன்று வாழ்க்கைத் தெரிவுகளை மேற்கொள்ளும் போது மிகவும் நேர்த்தியாகவும் , அதிக நேரம் எடுத்தும் வாழ்க்கை துணையை தெரிவுசெய்யுங்கள். ஏனென்றால் வாழ்வை ஒரு தடவை தான் வாழப் போகின்றோம்.(இது எமது வாழ்க்கை முறைக்கானது. மேலைத்தேய வாழ்வு வாழ்பவர்களுக்கல்ல). நமது துணையென்பது அழகானது, அறிவானது என்பதை விட புரிந்துகொள்பவர்களாக இருப்பது மிகமுக்கியமல்லவா? அல்லது எல்லாம் இருந்தும் வாழ்க்கை சூனியமானதாக தெரியும்.



Friday, March 22, 2013

நானும் காதலிக்கின்றேன்…

ஏன் நீ காதலிக்கவில்லை
என் நண்பர்கள் கேட்கிறார்கள்?
யாரோ இரசியமாக இருக்கிறார்கள்….
திமிர்…
ஈகோ…
உயர்ந்தவனை தேடுகிறேன்…
அழகானவனை தேடுகின்றேன்…
வீண்பிடிவாதம் - என
என் சுயம் பற்றிய
வாதங்கள் ஆயிரம்
அவர்களிற்குள்…

யார் சொன்னது
நான் காதலிக்கவில்லையென்று
நானும் காதலிக்கின்றேன்…
உயிர்வரை காதலிக்கின்றேன்…

இயற்கையை காதலிக்கின்றேன்
எனக்கு மனவமைதி தருவதால்
புத்தகங்களை காதலிக்கின்றேன்
என்னுடன் அவை மௌனமாக பேசுவதால்
இசையை காதலிக்கின்றேன்
காயங்களை வருடிவிடுவதால்
என் வீட்டு செல்லப்பிராணிகளை காதலிக்கின்றேன்
அவை என் அன்பை சந்தேகிப்பதில்லை
பொம்மைகளை காதலிக்கின்றேன் -அவை
என்னை இன்னொருவருடன் இணைத்துப் பேசுவதில்லை
என் தொழிலை நேசிக்கின்றேன்
அது உண்மையாக இருப்பதால் - ஏன்
என் வலிகளை கூட காதலிக்கின்றேன்
என்னை அவை செதுக்குவதால்….

உயர்ந்த
அழகான
அறிவுள்ள
பகுத்தறிவுள்ள மனிதனை
காதலித்து ஏமாறுவதை விட
என்றும் நிறம்மாறிடாத
என் காதல் அழகானது…..
அர்த்தமுள்ளது….


Wednesday, March 20, 2013

உன்னுள் நான் இருக்கின்றேனா?




நீ இல்லை என்பது
நிதர்சனமான பின்பும்
தொலைய மறுக்கிறது
உன் நினைவுகள்….

உன் முன்பும் - என்
மனதில் எவனும்
புதிந்ததில்லை
பின்பும் முயன்று
தோற்றுவிட்டார்கள்….

ஆனால் என்னுள் ஒரு
சிறு கேள்வி…
உன்னுள் நான்
இன்றும் இருக்கின்றேனா…?
பல நாள் வினாவிற்கு
பதிலாகியது…- உன்
மனைவி அருகில்
இருக்கும் போதும் - அவளைக்
கடந்து பார்வையை
என்னில் பதித்து – நீ
உன் குழந்தையின் கன்னத்தில்
அழுந்தப் பதித்த
முத்தம்……

Tuesday, March 19, 2013

திரைக்கதைகளில் பெண்கள்

பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது.
ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதானம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய சினிமாக்களில் பெண்களது உடைகள் பற்றியும் அல்லது அவர்களது கவர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கக் கூடியதான சினிமாக்கள் மலிந்து விட்டன. ஆக மொத்தத்தில் “பெண்கள்” என்பதற்கான நாகரீக மாற்றங்கள் தமிழ் சினிமாக்களில் காலாகாலத்திற்கு மாற்றமடைகின்ற போதும் கரு என்பது மட்டும் மாறுபடாமலேயே தொடர்கின்றதாகவே தோன்றுகின்றது.
ஆண்களை பெண்கள் ஏமாற்றிவிட்டால் அவ் ஆண் வாழ்வில் முன்னேறி வாழ்ந்து காட்டுவதாகவும் ஏமாற்றிய பெண் மீண்டும் மனந்திருந்தி அல்லது வேறொருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கதையமைக்கின்றவர்கள் அதுவே பெண் ஏமாந்துவிட்டாள் தற்கொலை செய்து கொள்வதாக காட்டுகின்றார்கள்….? அதற்கு பரிகாரமாக அவளுடன் தொடர்புடைய ஒருவர் பழிவாங்குவதாகவோ அல்லது அவள் ஆவியாகித்தான் பழிவாங்குவதாகவும் காட்டுவது ஏன்? அதே போன்றே ஆண்கள் கட்டிய மனைவி இருக்கும் போதே சின்ன வீடு வைத்தால் அல்லது இன்னொருத்தியுடன் தகாத உறவு கொண்டால் மனைவி மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் (இதில் சின்னவீடு இறந்துவிடும் அல்லது ஓடிவிடும் அல்லது வில்லன் கொன்று விடுவான்) குழந்தையை முதல் மனைவியே தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெரும்பாலான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏன் ஒரு பெண் இன்னொரு சின்னவீடு வைத்தால் கணவன் ஏற்றுக்கொள்வானா? அல்லது அவளின் சின்னவீட்டினால் பிறந்த குழந்தைக்கு முதலெழுத்தாக தன் பெயரை இடுவாரா? திரைக்கதைகளில் பெண்கள்

Thursday, March 7, 2013

அம்மாவின் ராஜாத்தி


என் உற்ற நண்பி, ஆலோசகர், பாதுகாவலர், குரு என அனைத்துமான என் அம்மா பற்றி இன்றைய பதிவில் எழுதவுள்ளேன். என் அப்பா காடாறு மாதம் நாடாறு மாதம் என விக்கிரமாதித்தன் போல (அப்பா இதை பார்க்க மாட்டார் என்ற தைரியம் ஒன்று, இதை வாசிக்க முடியாதளவு….. வேலைப்பளு இருக்கும் இது இரண்டு) வெளிநாட்டிலும் வீட்டிலுமாக இருப்பதால் என் தற்காலிக தந்தையாகவும் இருக்கின்ற என் அம்மா பற்றி சில வரிகள் நிச்சயம் இந்த பெண்கள் தினத்தில் எழுதியாக வேண்டும். மேடையேறி பேசுகின்ற, படித்து சாதிக்கின்ற, சமவுரிமைக்காக போராடுகின்ற பெண்கள் மத்தியில் மௌனமாக ஒரு குடும்பத்தலைவியாக, சாதித்துக்கொண்டிருக்கின்ற எனதன்பின் “நளீன்ஸ்” பற்றி பேசியே ஆகவேண்டும்.

என்னை எனது அம்மா அன்பாக “ராஜாத்தி” என்று தான் அழைப்பார். சின்ன வயதிலிருந்தே பாடசாலையிலோ , விடுதியிலோ , அலுவலகத்திலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ எனக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் என்று யாருமே இருந்ததில்லை. என்னைத் தமது தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றவர்களாகவே நான் இவர்களை இனங்காண்பதால் எப்போதும் நம்பிக்கையான ஒருவராக நான் நண்பியாக நான் நம்புவதும் பழகுவதும் என்னுடைய நளீன்ஸ் தான். எனக்கும் அம்மாக்குமிடையில் இரகசியங்கள் எதுமே இல்லை என்று தான் சொல்வேன். சொல்லாவிட்டால் என் மண்டை சுக்குநூறாகி விடும் நான் டொபி சாப்பிடுவதிலிருந்து Boys உடன் கடலை போடுவது வரை அனைத்தையும் நளீன்ஸ் இடம் தான் சொல்வேன். இப்போது ஊடகதுறையில் இருப்பதால் அவர் பயப்படுவதை தவிர்ப்பதற்காக சிலதை மறைக்கின்றேன். Sorry  மா கொஞ்சம்….. தான் நளீன்ஸ். இன்றும் ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டுச் சென்றவுடன் நளீன்ஸ் உடன் பேசாவிட்டால் நாளே ஓடாது. 

என்னுடைய கல்வி வாழ்க்கையிலும் எனக்கு தேவையான புத்தகங்கள் என்று கேட்டு அவர் வாங்கி தராதது என்று எதுவும் இல்லை. அது என்ன விலையானாலும். School Report பார்த்து என் அழகான இராட்சசியிடம் பிரம்பால் நிறையவே சாத்தும் வாங்கியிருக்கின்றேன். முதல் மாணவியாக வந்து பரிசும் வாங்கியிருக்கின்றேன். இன்று நான் சாதிப்பதாக அடுத்தவர்கள் கூறும் போது அன்று வாங்கிய அடிகள் வலித்தாலும் என்னை செதுக்கியுள்ளதை ஒவ்வொரு நிமிடமும் உணர்கின்றேன். (ஆனாலும் ஒரு சண்டை இருக்குது 5 ஆம் ஆண்டு பரீட்சை பாஸ் பண்ணிணதுக்கு பென்குயின் இன்னும் வாங்கி தரவில்லை நளீன்ஸ்)



என்னுடைய வலிகளை கூட அம்மாவிடம் மட்டும்தான் சொல்லியழுவேன். (அவரும் சேர்ந்து அழுவது வேறு கதை) தோல்விகளையும் பகிர்ந்து கொள்வேன் நிறைய ஆலோசனைகளை கூறுவார். சில விடயங்கள் பற்றி எதிர்வுகூறல்களும் சொல்வார். என்னளவில் அவை பொய்த்தில்லை. நான் நேர்மையை கற்றுக் கொண்டதும் அவரிடம் தான். அரசாங்க அலுவலகர்கள் அலுவலகத்தில் சலுகைகள் பெற்றுக்கொண்டு ஐஸ் அடிக்கின்ற போது வீட்டிலும் Personal file பற்றி கவலைப்படுபவர். “ஏன் அம்மா இப்படியெல்லாம் ஓவராக செய்து காட்றீங்க?” அல்லது “அவர்கள் தரும் இலஞ்சங்களை ஏன் வாங்கவில்லை?” என்று கேட்டால் அடுத்தவர்கள் நெருப்பு நமக்கு வேண்டாம் என கூறும் எனது குரு அவர். அப்பாவிடம் அம்மா இறங்கிப் போகும் போது என்னிடம் உறங்குன்ற பாரதி விழித்துக் கொண்டு கேள்வி கேட்பான். அப்போதெல்லாம் “மகள் ஒரு பெண் வெளியில் எந்த உயரத்தில் நின்றாலும் வீட்டில் ஆணுக்கு அடங்கும் போது தான் இல்லறம் சிறக்கும்” என போதிக்கின்ற எனது ஆசிரியர்.

என்னுடைய அம்மாவிற்கு சமையலறையில் 3 விடயங்கள் செய்ய பிடிக்கும். தேங்காய் துருவுவது, மா அரிப்பது மற்றது கோப்பி வறுத்து இடிப்பது. இவரது “கோப்பி’ பற்றி கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். அடிக்கடி கோப்பி இடித்து போத்தலை நிரப்பி வைக்காவிட்டால் நளீன்ஸ் க்கு தூக்கமே வராது. காலையில் முதல் வேலையாக கோப்பி போட்டு எமக்கும் தந்து அவரும் குடிக்காமல் விட்டால் நாளே விடியாது. அங்கு தான் எமது யுத்தமும் ஆரம்பமாகும். “சீனி” போட்டுக் குடிப்பதில். எனக்குத் தெரியாமல் அடிக்கடி கள்ளத்தனமாக சொக்கலேட்டும் சாப்பிட்டுக்கொள்வார். வீட்டில குறிஞ்சா சுண்டல், பாகற்காய் கறி என்றால் அவருக்கு சீனி கூடி விட்டது என்று அர்த்தம். என்னிடம் மாட்டுப்பட்டு நான் கோபமாக கேட்டால் “கொஞ்சக்காலம் தானே வாழ போறோம்” என்ற தத்துவம் வேறு….

நளீன்ஸ் ஐ நம்பி இரு விடயங்களில் தலையிடக்கூடாது. ஒன்று அண்ணா தம்பி சென்டிமென்ட் அடுத்தது என் குட்டிச் சாத்தான் தம்பியுடனான சண்டை. இரண்டும் எப்போது என்னை நோக்கித் திரும்பும் என்று கூற முடியாது. (இந்தியா போல எப்போது மாறும் என்று யாருக்குமே தெரியாது)
எனக்கு அம்மாவுடன் கடுப்பாகின்ற ஒரு விடயம் நாங்கள் எங்காவது வெளிக்கிடும் போது அல்லது எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது கேட்பார் பாருங்கள் ஒரு கேள்வி “நாய்களுக்கு என்ன மகள் சாப்பாடு?” நமக்கு கூட சில வேளை கடையில் சாப்பாடு எடுப்போம் ஆனால் நாய்களுக்கு சமைக்காமல் விட்டதாக அம்மாவின் சரித்திரத்தில் இல்லை. வாய்பேசா மிருகங்களாம்….. அம்மா அம்மா…(குடுத்து வைத்த என் வீட்டு நாய்கள்)
உலகத்திலேயே நான் மெலிவது பற்றி கவலைப்படும் ஒரே ஜென்மம் அம்மா தான். மற்றவரெல்லாம் மெலிந்தால் அழகாகிவிடுவேன் என்று சொல்லும் போது (இப்பவும் அழகு தான்) நேரத்திற்கு சாப்பிட என்னை வற்புறுத்துகின்றவர். நான் வீடு செல்லும் நாளன்று இரவெல்லாம் கண்விழித்துக் கொண்டு கூடவே தம்பியை இம்சை செய்யும் அம்மா….இப்போதும் அடிக்கடி பஸ்சில் சாப்பாட்டு பாசல் அனுப்புகின்ற அன்புள்ள அம்மா. என்னுடைய வாகனத்தில் அம்மாவை ஏற்றிப் போகும் போதெல்லாம் ஒரு காலத்தில் அவர் என்னை ஏற்றிச்சென்ற நாட்களை நினைத்துக்கொள்வேன்… அவர் என்னுடைய தோள்களை பற்றிக்கொள்ளும் போது எத்தனையோ தடவைகள் சிலித்திருக்கின்றேன். நான் என்னுடைய பிடிவாதங்களை காட்டாத ஒருவர் என்றால் அதுவும் அம்மா தான்.. ஏனோ அவரிடம் அப்படி காட்ட முடிவதில்லை. நான் பொய் சொன்னால் கண்டுபிடிக்கின்ற ஒருவரும் அவர் தான்… எனது கவிதைகளில் கூட என்னை இனங்காண்பவர். எனது வீணையிசையை, கவிதையை இரசிக்கின்ற முதலாவது இரசிகரும் அவர் தான். எனது வேலைப்பளுக்களின் மத்தியிலும் பதிவுகளை பதிவது கூட என்னுடைய அம்மா வாசிக்க வேண்டும் என்பதால் தான்.




இன்று நான் நல்லதொரு நிலையில் இருப்பதற்கும் மேலும் வளர்வதற்கும் என் பின்னால் இருக்கின்ற சக்தி எனது அம்மா தான். அன்பான அம்மாவாக, நண்பியாக என்னை செதுக்கிய அம்மாவை நினைக்கும் போதெல்லாம் கடவுளிடமும் சிலதை வேண்டிக் கொள்வேன். எனக்கு வரும் கணவர் (என்னவன்) எனது அம்மாவிற்கு மருமகனாக இல்லாமல் இன்னொரு மகனாக அன்பானவனாக அமைய வேண்டும். என் குழந்தைகளையும் அம்மா வளர்க்க வேண்டும். அவர்களையும் அம்மா தான் செதுக்க வேண்டும்.
வாசித்தறிந்த சாதனைப் பெண்களை விடவும் என் வீட்டில் என்னுடன் வாழ்கின்ற சாதனைப் பெண்ணாக எனது அம்மாவினை நான் பார்க்கின்றேன். என்னுடைய அம்மாவினை நான் எழுதுவதை போன்றே என் பிள்ளையையும் நான் செதுக்க வேண்டும் என்றே நானும் விரும்புகின்றேன்.

I LOVE U MA! I MISS UR COFFEE

உங்கள் ராஜாத்தியின்  “மகளீர் தின வாழ்த்துக்கள் அம்மா” கூடவே ஆயிரம் அன்பு முத்தங்கள்





Wednesday, March 6, 2013

கருவாகிறது மௌனம்….

இப்போதெல்லாம்
வார்த்தைகள் தோற்கும் போது தான்
மௌனத்தின் வலிமை புரிகின்றது.

மனதிலுள்ளதை கொட்டிவிடுவது
அழுகி நாற்றமெடுப்பதை விட
அப்பட்டமாக சொன்னால்
வாயாடி என்கிறார்கள் - சற்றுக்
குரலுயர்த்தி விட்டால்
திமிர் என்கிறார்கள்
குறைத்துச் சொன்னால்
முனுமுனுக்கின்றேனாம்…
இவற்றையெல்லாம் விட
மௌனமே மேலெனத் தோன்றுகின்றது..

தட்டிக்கேட்டால்
தற்பெருமை என்கிறார்கள் - அதையே
தடவிக்கேட்டால்
காக்காய் பிடிக்கிறேனாம்
தட்டியும் தடவாமலும்
மௌன மொழிகளே – எனக்குப்
பிடிக்கின்றன இப்போதெல்லாம்….

மலர்கள் மௌனமாகத் தான்
மணம் வீசுகின்றன
மணற்தரை மௌனமாகத் தான்
தாங்குகின்றது….
மரங்கள் கூட மௌனமாகத்தான்
வளர்கின்றன..
எனக்குள் மட்டும் - ஏன்
மௌனமில்லை…?

எதிர்பார்ப்புகள் புதைந்திருப்பதாலா…?
ஆறறிவு படைத்திருப்பதாலா…?
மனதினுள் பதிந்துவிட்ட – பாரதியின்
புதுமைப்பெண் எட்டிப்பார்ப்பதாலா?
அதனால் தட்டிக்கேட்க
நினைப்பதாலா…?

என்னுடைய கனவுகளுக்கு
என்றும் மொழிகளிருந்ததில்லை
என்னுடன் எந்த காலதேவதையும்
பேசியதுமில்லை….
சித்தன் முதல்
சிறுபிள்ளை வரை
தொட்டுவிட்ட மௌனத்தினை
பார்க்கின்றேன்…

குற்றங்களாகி
குட்டப்பட்டு விட்ட
வார்த்தைகளை விட
மௌனங்களே அழகாக
தெரிகின்றன…

பாடலவன் விஜயின்
“ஆமைக்கு ஓடு அலங்காரமுமல்ல
சுமையுமல்ல…
மௌனமும் மனிதனுக்கு அஃதே”
வரிகள் அர்த்தமுள்ளதாகவே
தெரிகிறது….

இக்கணம் மதலே
வார்த்தைகள் மௌனிக்க
கருவாகிறது என்னுள்
மௌனமெனும் குழந்தை….






திகதி -   04.03.2013

நேரம் - 19:26:01

அதிகம் வாசிக்கபட்டவை