Showing posts with label பருவம். Show all posts
Showing posts with label பருவம். Show all posts

அந்த மூன்று நாட்கள்…..

(என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை)

அப்போது நான் பாடசாலையில் தரம் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்தேன். எங்களுக்கான சுகாதார புத்தகத்தில் “பூப்படைதல்” பற்றிய பாடம் இருந்தது. ஆனால் எங்கள் சுகாதார ஆசிரியர் அதைப்பற்றி படிப்பித்தில்லை. அந்தப்பாடத்தி;ல் இருந்த படங்களை யாருமில்லா நேரத்தில் புரட்டிப்பார்த்துக்கொள்வதுண்டு. வகுப்பு நண்பிகள் யாரும் கண்டால் என்னை பகிடிபண்ணுவார்கள் என்பதே இந்த இரசிய புரட்டல்களுக்கான காரணம்.

என்னுடைய சக தோழிகள் அனேகர் தரம் ஒன்பதற்கு வரும் முன்னரே பெரியபிள்ளைகளாகிவிட்டனர். வகுப்பாசிரியர் இடாப்பு மார்க் பண்ணும் போது எமது பெயர்களை சத்தமாக தான் வாசிப்பார். ஆந்த நேரங்களில் பெரியபிள்ளையாகியதால் பாடசாலை வராமல் இருக்கும் பிள்ளைகளின் பெயர் வரும் போது “அவ ஏஜிடன்ட் பண்ணிட்டா” என்று சொல்லிக்கொள்வார். அப்படியான நாட்களில் வீட்டுக்கு வந்ததும் என் அம்மம்மாவிடம் அதைப்பற்றி கேட்பதுண்டு. “நீங்க இன்னம் வளரனும்” என்று மழுப்பிவிடுவார். பின்னேரம் அம்மா வேலைவிட்டு வந்ததும் அவவிடமும் கேட்பன். “பிறகு சொல்றன் மகள்” என்டு சொல்லுவா… ஆனால் ஒரே பார்த்திருக்கின்றேன் இதை சொல்லும் போது அம்மாவின் கொஞ்சம் வாடிடும். ஏன் என எனக்கு அப்போது புரியவில்லை. 

இப்படியிருக்கும் போது ஒரு நாள் குட்டிப்பெண்ணாக வலம் வந்த நான் எல்லாப்பெண்களையும் போன்று ஒரு நாள் “பெரிய பிள்ளை” ஆகிட்டன். நான் பாடசாலையில் வைத்துத்தான் பெரிய பிள்ளையாகினன். காலையில் விளையாட்டுப்பயிற்சி முடிந்து வகுப்பறைக்குள்ள போன போது என்னுடைய நண்பி ஒருத்தி என்னை அருகில் அழைத்து என்னை பின்னால் திரும்ப சொன்னாhள். நானும் என்னவென்று யூனிபோமை பார்த்தேன். அதில் கசறு போல ஏதோ சிகப்பாக பட்டிருந்தது. ஆவள் உடனேயே வகுப்பாசிரியரிடம் சொல்லிவிவிட்டாள். வகுப்பாசிரியரும் என்னை பாடசாலை Sick Room க்கு கூட்டிப்போனார். என்னிடம் அம்மாவின் போன் நம்பர் வாங்கி அவருக்கு கோல் பண்ணி வரவழைத்தார். பதினைந்து நிமிஷத்தில் அம்மாவும் பாடசாலைக்கு வந்துவிட்டார். வந்ததும் வராததுமாக என் நெற்றியில் முத்தமிட்டு கொஞ்சம் அழுதாங்க. எனக்கு ஏன் இப்படியெல்லாம் செய்றாங்க என்பது புரியவேயில்லை. என் வயிற்றிலும் சற்று வலியை உணர்ந்தேன். 

கொஞ்ச நேரத்தில் என்னுடைய முழுக்குடும்பமுமே பாடசாலைக்கு வந்திட்டுது. என்னை வெள்ளைத்துணியால் மூடி கையில் இரும்புத்துண்டு தந்து வாகனத்தில் வீட்டுக்கு கூட்டிப்போனார்கள். நான் என்னுடைய அறைக்குள் போவதற்கு முன்னரே பல மாற்றங்கள் அதனுள் ஏற்பட்டிருந்தது. ஏன் படுக்கை விரிப்புக்கள், ஜன்னல் திரைச்சீலைகள் மாற்றப்பட்டிருந்தன. அறை வாசலில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா என்னை Wash Room  க்குள் கூட்டிப்போய் Pad வைக்கச்சொல்லித்தந்தாங்க.

இன்று பின்னேரம் பக்கத்து வீட்டாக்கள், நெருங்கிய உறவுகள் எல்லோரும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். புடைவையால் சதுரமாக மறிப்பு கட்டி நடுவில் விளக்குமாறும் அதற்கு மேல் குப்பையும் வைக்கப்பட்டிருந்தது. என்னை அதற்கு மேல் இருத்தினார்கள். பக்கத்தில் தண்ணீர்த்தொட்டியில் மல்லிகைப்பூ போட்டு வைக்கப்பட்டிருந்தது. உறவுக்காரப் பொம்பளைகள் எல்லாம் அந்த தண்ணியல் அள்ளி எனக்கு ஊற்றினார்கள். பிறகு என்னை மீண்டும் வெள்ளைச்சீலையால் மூடி என்னுடைய அறைக்கு கூட்டிப்போனார்கள். அவர்கள் பேசியதை வைத்து இச்சடங்கிற்கு பெயர் “கண்ட தண்ணீர் வார்த்தல்” என்று புரிந்துகொண்டேன்.

என்னுடைய அப்பாவின் தங்கை “முறை மாமி” என்று சொல்லி எனக்கு பச்சை முட்டையும் வேப்பண்ணையும் பருக்கினா. எனக்கு அப்போதிருந்த நிலையில் குமட்டலும் அழுகையும் தான் வந்தது. வந்தவர்கள் எல்லாம் போன பிறகு என்னுடைய அம்மம்மா வந்து “ இனி வெளிய வரக்கூடாது. ஏதும் அவசரம் என்டால் இந்த கத்தியுடன்தான் வரவேண்டும்” என்று சொல்லி ஒரு கத்தியை கையில் தந்திட்டு போய்விட்டாங்க.

என்னுடைய அண்ணா, தம்பிக்கு கூட நானிருந்த அறைக்குள் போகக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அண்ணா முகத்தில் ஒருவித எச்சரிக்கை உணர்வையும் தம்பி முகத்தில் இனம்புரியாத ஒரு சிரிப்பையும் நான் பார்த்தன். பிறகு அண்ணா என்னுடைய அறைக்கு வரவேயில்லை. தம்பி தான் சிலவேளை யாருமில்லாத நேரம் பார்த்து அறை வாசலில் நின்று எட்டிப்பார்ப்பான். அன்றிலிருந்து பலர் என்னை பார்க்கவென்று வந்தார்கள். ஆனால் அவர்களுள் பெண்கள் மட்டும் தான் என் அறைக்குள் வருவார்கள். எள்ளு,வேப்பபெண்ணை, உளுந்து, நல்லெண்ணெய் போத்தல், நாட்டு கோழி முட்டை என்று இந்த பட்டியலில் ஏதோவொன்றினை கொண்டு வருவார்கள்.
காலையும் மாலையும் என் முறை மாமி வந்து பச்சை முட்டை, வேப்பெண்ணெய் பருக்கிட்டு போவார். மூவேளையும் நல்லெண்ணெய்யில் பொரித்த முட்டை, கத்தரிக்காய் என்பன சாப்பாடாக தரப்படும். தினமும் அம்மம்மா உழுந்து மா புட்டுக்குள் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சீலையில் கட்டி சூடாக இடுப்பிற்கு ஒத்தடம் தருவா. பிறகு அதையே முடிச்சினை அவிழ்த்து என்னை சாப்பிட வைப்பாங்க. அடிக்கடி வெள்ளை உழுந்து கஞ்சி, எள்ளுருண்டை எனக்கு கட்டாயப்படுத்தி உண்ணுவதற்கு தருவாங்க. தினமும் மஞ்சள் பூசித்தான் என்னை குளிக்கவிடுவார்கள்.

மூன்று கிழமை இப்படித்தான் என் நாட்கள் நகர்ந்தன. அதுக்குப்பிறகு என் ருதுவான நேரத்தினை சாத்திரியிடம் கொடுத்து சடங்கு செய்ய நாள் குறித்தாங்க. அவர் சொன்னதன் படி குறிப்பிட்ட நிறத்தில் தான் எனக்கு புடவை எடுத்தாங்க. சடங்கு நாளன்றும் கண்ட தண்ணி நிகழ்வு போலவே நடந்தது. ஆனால் இம்முறை குளிப்பாட்டி முடித்தவுடன் சாமியறைக்கு அழைத்துப்போய் விளக்கேற்ற வைத்தார்கள். அதுக்கு பிறகு புடவை கட்டி தலையலங்காரம் முகவலங்காரம் எல்லாம் செய்து மண்டபத்தில் சோடிக்கப்பட்ட கதிரையில் இருக்க வைத்தாங்க.

வீடு முழுவதும் விருந்தினர்கள். சாப்பாடெல்லாம் தடபுடலாக இருந்தது. என் அம்மாவின் அண்ணன் , தம்பி இருவரும் வேட்டி கட்டி தலைப்பாகை அணிந்து எனக்கு நகை அணிவித்தார்கள். இதனை “தாய் மாமன் சடங்கு” என்பார்களாம். என் முறைமாமி ஆராத்தி எடுத்தார்கள். இவ்வாறு பல்வேறு சடங்குகளுக்கு பின் அருட்சகோதரர் ஒருவர் என்னை ஆசீர்வதித்து ஜெபம் செய்தார். பிறகு மதிய உணவு சாப்பிட்டார்கள். அதற்கு பின்னர் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பரிசுகள் தந்து என்னுடன் நின்று புகைப்படம் பிடித்தார்கள்.என்னையும் தனியே பல கோணங்களில் அலங்காரங்களில் படம்பிடித்துக்கொண்டார்கள்

ஒருவாறு இதெல்லாம் முடிந்த பிறகு நான் இனி வெளியில் போகலாம் என்று அம்மா சொன்னாங்க. எனக்கு இப்படி அவர் சொன்னது ஏதோவொரு விடுதலை உணர்வினைத்தான் மனதளவில் கொடுத்தது. இரு நாட்கள் கழித்து பாடசாலைக்கு அனுப்பப்பட்டன். வகுப்பு மாணவிகளுக்கு கொடுக்க சொக்லட்டுக்களும் தந்து தான் அனுப்பினார்கள். இன்று வகுப்பிற்கு வந்த பாட ஆசிரியர்கள் எனது முகத்தோற்றம் மாறி சற்று வளர்ந்திருப்பதாக சொன்னார்கள். அன்றிரவு என் படுக்கையில் விழுந்தவுடன் “பெரிய பிள்ளை” ஆவது இனி எனக்கு வரக்கூடாது என்று தான் நினைத்துக்கொண்டேன்.
இப்படி நினைத்து ஐந்தாறு நாட்களில் எனக்கு திடீரென வயிற்றுவலி வந்தது. பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகு உடைமாற்றும் போது தான் பார்த்தேன். என் சட்டையின் பின்பக்கம் இரத்த கறை படிந்திருந்தது. எனக்கு உடல் வலியுடன் கூடவே சொல்ல முடியாத மன உளைச்சலும் ஏற்பட தொடங்கியது.

அம்மாட்ட ஓடிப்போய்  சொன்னன். ஒவ்வொரு மாதமும் இப்படி வரும் என்று சிரித்தவாறு சொன்னார். அன்றிலிருந்து மாதம் தோறும் இதனை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். அந்த மூன்று நாட்களில் எனக்குள் ஒருவித விரக்தியும், வயிற்று வலியும் பரவியிருக்கும். இள நிற உடைகளை இந்நாட்களில் வெறுத்தொதுக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படியெல்லாம் இரத்தம் வருகிறது? எங்கிருந்து வருகிறது என்று எனக்கு யாரும் சொல்லித்தரவும் இல்லை….

இன்று பல்கலைகழக மாணவியாக “மாதவிடாய்” என்பது பற்றியும் “பூப்படைதல்” குறித்தும் எனக்கு நிறைய விடயங்கள் தெரியும். நாளை நான் தாயாகும் போது நிச்சயம் என் மகளுக்கு இவை குறித்த அறிவை முன்னரே கொடுத்து அவளை “அந்த மூன்று நாட்களுக்கு” தயார்படுத்த வேண்டும் என்று இப்போதெல்லாம் நினைத்துக்கொள்கின்றேன். நான் அனுபவித்த “மன உளைச்சல்” அவளுக்கும் வரக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கின்றேன். ஒரு வேளை அவளும் என்னைப்போன்று “சடங்குகள்” தான் “பெரிய பிள்ளை” ஆதல் என்று புரிந்துகொள்ளக்கூடாது! 

அவளுக்குள் ஏற்படவுள்ள உடல், உள மாற்றங்களை அவள் உணர்ந்து அந்த மூன்று நாட்களுக்கு தன்னை தயாராக்கிக்கொள்ளவேண்டும்.

நான்கு கட்டங்கள்

அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் பங்குபற்றிய வேளை அறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களில் மிகமுக்கியமானவற்றினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்

பல உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்க்கையினை வேறுபடுத்திக்காட்டுவது “பகுத்தறிவு” என்பதே. “பகுத்தறிவு"; என்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டும் கூட சிலவேளைகளில் நமது வாழ்க்கையின் தெரிவுகளை சரியாக தெரிவு செய்வதற்கு தவறிவிடுகின்றோம். இதன் விளைவால் பாதை மாறியும் சென்றுவிடுகின்றோம். நமது வாழ்க்கையில் இவ்வாறு நாம் தெரிவுசெய்து கொள்ள வேண்டியவை மற்றுமு; அவற்றினை தெரிவுசெய்து கொள்ளவேண்டிய தருணங்கள் பல. ஆயினும் மிக மிக முக்கியமாக தெரிவுசெய்ய வேண்டியவை 4 என சாதித்தவர்களின் வாழ்க்கை எமக்குத் தெரிவிக்கின்றது

•    நல்ல நண்பர்கள்
•    தொழில்
•    நல்ல வாழ்க்கைத்துணை
•    பெற்றோர் அல்லது பிள்ளைகள்


நல்ல நண்பர்கள்
குழந்தைப் பருவத்தினை கடந்து அடுத்து நாம் காலடி வைக்கும் பருவம்; மாணவப்பருவம். எமது வாழ்க்கையினை அமைக்கப்போகும் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளும் பருவம். இப்பருவத்தில் இடப்படுகின்ற அடித்தளம் தான் எமது பிற்காலத்தினையும் சமூகத்தில் எமது அந்தஸ்த்தினையும் தீர்மானிக்கின்றது. இக்காலத்தில் எமக்கு உருவாகின்ற நண்பர்கள் தான் எமக்கான அடித்தளத்தினை அமைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். “உன் நண்பனை யார்? ஏன்று தெரிந்தால் உன்னைப் பற்றிக் கூறலாம்” என்ற முதுமொழி ஒன்றுள்ளது. உண்மையான நண்பன் என்பவன் நாம் பிழை செய்யும் தனக்கு இலாபம்; கிடைக்குமாயின் பேசமால் கூடவே இருந்து கூத்தடிப்பவனல்ல. அல்லது துன்பம் வந்தவுடன் தூர ஓடுபவனுமல்ல. தவறும் போது தட்டிக் கேட்க வேண்டும். இன்னல் ஏற்படும் போது கைகொடுக்க வேண்டும் இதைத்தான் வள்ளுவர் கூட “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்கின்றார்.
இன்னொரு விடயம் ஆண் - பெண் நட்பு. அன்றைய சமூகம் போன்று பிழையான கண்ணோட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடைப்பிடித்தல் சாலசிறந்தது. நமது நட்பு சமூகத்தில் மதிக்கப்படத்தக்கதாக நமது வாழ்கைத்துணைக்கு அறிமுகப்படுத்தக் கூடியளவு இருக்குமாயின் அது தான் உண்மையான பால் வித்தியாசம் கடந்த நட்பு அல்லது போனால் அந்த ஆண் - பெண் உறவில் எங்கோ ஓர் மூலையில் கள்ளத்தனம் ஒளிந்துள்ளது என்பது கண்கூடு. ஒருவேளை நமது உண்மையான நட்பினை எமது வாழ்க்கைததுணைவரோ காதலர்களோ புரிந்து கொள்ளாவிடின் அவர்களுக்கு நிச்சயம்  ஒரு இருண்ட பக்கமுண்டு.
எமது நண்பன் என்பதில் அடுத்து அடங்குவது நல்ல புத்தகங்கள். அதற்காக புத்தகங்கள் எல்லாமே நல்லது என்பது பொருளல்ல. விடயங்களை கற்கும் போது “அன்னப்பட்சியாக” இருக்க வேண்டும். நல்ல விடயங்களை தேடிக் கற்க வேண்டும்.




தொழில்
ஒருவனை சமூகத்தில் அந்தஸ்துள்ளவனாக காட்டுவது அவனது தொழில் மற்றும் பதவி. இங்கு தொழில் பதவி என குறிப்பிடுவது நேர்மையாக கிடைக்கப்பட்டவை மட்டுமே. காக்கா பிடித்து அடிவருடி பல்லிளித்து கிடைத்தவை அல்ல. அத்துடன் இங்கு அந்தஸ்தை கொடுக்க வேண்டுமென்பதால் அவை கட்டாயமாக  றூவைந உழடநச துழடி ஆக தான் இருக்க வேண்டுமென்பதுமல்ல. “செய்யும் தொழிலே தெய்வம்” நமது வயிற்றினை வளர்க்கும் தொழிலை மதிக்க வேண்டும். உயர்விற்காக பாடுபட வேண்டும். அதேவேளை தொழிலுக்காக குடும்ப அன்பை இழந்துவிடக் கூடாது. சிலர் பதவிக்காக ஓடி பாசத்தினை தவறவிட்டு விடுகின்றார்கள். அதிக செல்வமும் ஆபத்தானது. தூக்கத்தினை கெடுத்துவிடும். அளவான சம்பாத்தியம் அன்பான உறவுகள் கடனற்ற வாழ்க்கை இவற்றை ஒரு தொழில் பெற்றுத் தருமென்றால் அது தான் “நல்ல தொழில்”

பெற்றோர் அல்லது பிள்ளைகள்.
“குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்” என்று கூறுவார்கள். உண்மை தாங்க ஒரு பிள்ளை பிழை செய்யும் போது அதை தட்டிக்கேட்பதற்கு பெற்றோர் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேச மாட்டாகள். அடுத்த விடயம் அவர்கள் முதல் பயில்வது தம் பெற்றோரிடமிருந்து தான். அவர்கள் முன் மாதிரியாக இருந்தாலே போதும் பிள்ளைகள் தானாகவே நல்வழியில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அடுத்த விடயம் பெண்களுடைய குரல் என்று வீட்டில் உயர்கின்றதோ அங்கு நிச்சயம் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அங்கு தான் பிள்ளைகளுடைய குரலும் பெற்றோரை விட உயர ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளுடைய குரல் உயரும் போது நிச்சயம் அவர்களை திருத்த பெற்றோரால் முடியாது போகும். இதற்கான பெண்களை , பிள்ளைகளை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்பதல்ல கருத்து. “ஆண் கொழுவாகவும் பெண் கொடியாகவும்” இருக்க வேண்டும் என்பது தான் கருத்து

நல்ல வாழ்க்கைத்துணை

நமது வாழ்வின் அடுத்த முக்கியமான கட்டம் நம்மவர்களை தெரிவு செய்தல். நாம் எமது வாழ்க்கைத்துணையை தெரியும் போது நமக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர் , ஏன் எதிர்கால சந்ததியினை உருவாக்கும் போது நமது பிள்ளைகளுக்கு ஒருவர் நல்ல தந்தையாக அல்லது தாயாக இருப்பாரா என்பதையும் சிந்தித்து தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். மிகமுக்கியமான விடயம் “காதல்”. நாம் காதலில் தோற்பதென்பது நமது காதலில் உள்ள பிழைகளால் அல்ல நம்மவர்களை தெரிவு செய்வதில் தான். நேர்மையாக, வெளிப்படையாக எவர் ஒருவர் இருக்கின்றாரோ அவரை தெரிவுசெய்யுங்கள். இதற்காக சிந்தித்து முடிவுகளை எடுக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள். உங்கள் காதலை பெற்றோருக்கு மறைக்காதீர்கள். காதலைக் கூட கடவுளுடன் ஆரம்பியுங்கள் (அட நானும் இதை தான் நினைத்தேன்) துணை சிறந்தவர்களாக அமையும் போது தான் நம் இலட்சியங்களும் வெற்றி பெறும் குடும்பமும் கோயிலாக மதிக்கப்படும்.

 (ம்ம்ம்ம்……. முதல் மூன்றும் ஓகே கடைசி தான் கொஞ்சம் இடிக்குது…)

புரிதலும் பிரிதலும்

எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன்.

உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை. 
எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூகத்தில் பொறுப்பான பதவி வகிப்பபவர்கள். எங்கள் இலட்சியங்களுக்காக மட்டுமே பொறியியலினை தெரிவு செய்துள்ளவர்கள். அனைவரும் கட்டடப்பொறியியல் தான் பயில்கின்றோம். பொறியில் என்றாலே பெரிய சுமை அதிலும் கட்டடப்பொறியியல் கேட்கவே வேண்டாம். கூடவே எங்கள் பணிகளும் எம்மை அழுத்துவதால் சில வேளைகளில் ( 24 வயதில் இது பெரியதொரு தியாகம்) கடலை போட கூட நேரம் கிடைப்பதில்லை. எம் குழுவில் நானும் இன்னொருவரும் கொஞ்சம் அமைதியானவர்கள் மற்ற நண்பன் கொஞ்சம் கலகலப்பானவர். அவரும் இன்னொரு நண்பியும் தான் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு சந்தேகங்களினால் இன்று பிரிந்தும் விட்டார்கள். என்னவில் என் நண்பனைப் பிரிந்தது என் நண்பியின் துரதிஷ்டம் என்று தான் கூறுவேன். நான் கூட அவருடைய புரிந்துணர்வு, சிறு விடயங்களில் கூட காட்டும் அக்கறைகள், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் அவளுடன் கதைக்காது இருப்பதில்லை போன்ற விடயங்களைப் பார்த்தும் பொறாமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அக்கறையான, பாதுகாப்பான ,புரிந்துணர்வுடைய காதலை இன்று பார்ப்பது மிகமிக அரிது. ஏன் இவருடைய முகநூல் பாஸ்வேட்டை கூட தன் காதலிக்கு கொடுக்கின்றளவு நேர்மையான ஒருவர்.

நான் முன்னரே கூறியது போல் இரவு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பினால் வந்த சந்தேகம், அவனின் நண்பியினுடனான உறவில் ஏற்பட்ட சந்தேகம் என்பன இன்று விரிசலாகவே மாறிவிட்டது. இங்கு பார்வையில் தான் பிழை இருந்ததே தவிர என் நண்பனில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று இரு துருவங்களாகிவிட்ட இவர்களின் காதலை கனக்கும் மனதுடன் வேடிக்கை பார்க்கத்தான் எம்மால் முடிகிறது.
ஆனால் இதிலும் கூட பல பாடங்கள் உண்டு. ஒருவரை தெரியும் முன் யோசிக்க வேண்டும். நாம் கலகலப்பான பல ஆண் பெண்களுடன் பழகுபவர்களாயின் நம்மைப் புரிந்துகொள்பவர்களாக தெரிவுசெய்ய வேண்டும். நல்ல நட்புகளைக் கூட வேறு அர்த்தம் கொள்பவர்கள் நமக்கும் நமது தொழிலுக்கும் பொருத்தமற்றவர்களாயின் ஆரம்பத்திலேயே விலகிவிட வேண்டும்.

பழகிய பின் பிழை பிடித்து அடுத்தவர்களுக்கு வலிகொடுத்து விலகுவதை விட பழகும் முன்பே புரிந்துகொண்டு பழகுவது நல்லது

(யாரை முன்வைத்து எழுதினேனோ அவர்கள் என் எழுத்தினை வாசித்தும் இருவரையும் என் எழுத்து கூட சுடவில்லை என்பதும், நன்றாக புரிந்துகொண்டு உண்மையாக நேர்மையாக நடப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை அமைவதில்லை பலமுகங்களுடன் பலருடன் பழகுபவர்களது காதல் தான் கடைசி வரை நிலைக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கடவுளை ஒரு வேளை கண்டால் அவனிடமும் இதற்கான காரணத்தினை நான் கேட்க வேண்டும்)

கவிதையாக காதலியுங்கள்


இன்று காதலர் தினம். உள்ளவர்கள் என்ன செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருக்க இல்லாதவர்கள் யாராவது கிடைக்க மாட்டர்களா? ஏன எதிர்பார்த்துக் கொண்டிருக்க இழந்தவர்கள் தம்மவர்களுடனான இனிய நினைவுகளை (???) நினைத்து கண்களை கசக்கிக்கொண்டுமிருக்க இவ்வருட காதலர் தினம் வந்துவிட்டது. நடைபாதை எங்கும் இயற்கை. செயற்கை ரோஜாக்கள் கண்ணைப் பறிக்க கூடவே சிந்தையிலுதித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன்.

காதலென்பது தாக்காத உள்ளங்கள் நிச்சயம் இருக்காது. நிச்சயம் ஒருதலைக் காதலாகவென்றாலும் ஒருவரை இது தழுவிச் சென்றிருக்கும் .“எனக்கு காதலே வந்ததில்லை “ என்பவர்கள் நிச்சயம் பொய்தான் சொல்கிறார்கள். அல்லது சிந்தைக்குழப்பத்தில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். துறவியினுள்ளும் கூட காதலென்ற ஒன்று எட்டிப்பார்த்திருக்கும். ஆனால் அந்தக்காதல் எவரில்? ஏன்? எப்போது? என்பதில் தான் ஆளாளுக்கு வேறுபடுகிறது.

இதில் முதலாவது விடயம் நாம் ஏதோவொன்றை எதிர்பார்த்து தான் ஒருவரை விரும்புகின்றோம். அவர்கள் பதில் தரும் வரை பின் தொடர்கின்றோம். அதுவே அவர்களை துன்பப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. “ இவன் இவள் என்னைத் தொந்தரவு செய்ததால் தான் காதலித்தேன் “ என்று ஒருவர் கூறுவாராயின் அது காதலே இல்லைங்க. அங்கே நிச்சயம் காதல் செத்திருக்கும். இரு மனங்கள் ஒன்றிணைந்து ஒரு புள்ளியில் அழகிய மலரொன்று மலர்வது தான் காதல். அதை சொல்வதை விட பரிசுகளால் காட்டுவதை விட இரு பக்கத்திலும் உணர வேண்டும். எனக்கு இவள் தான் மனைவி அல்லது இவர் தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டால் அதற்காக போராட வேண்டும். இடையில் விட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது இன்னொன்றினை கண்டவுடன் “ நானெங்கே உன்னைக் காதலித்தேன். எனக்கு அவ்வாறான எண்ணமில்லை “ என்று சொல்வதெல்லாம் கோழைத்தனம். இது ஆண்மைக்கும் அழகில்லை பெண்மைக்கும் அழகில்லை.

இரண்டாவது காதலிக்கும் காலத்தில் வரும் ஊடல்களும் கூடல்களும். செல்லச் சண்டைகள் இல்லாமல் சிறு சிறு சேட்டைகள் இல்லாமல் ஒரு காதல் இருந்தால் அது நிச்சயம் இரு ரோபோக்கிடையில் தான் ஏற்பட்டிருக்கும். சில இனிமைகள் சில கசப்புக்கள் நிறைந்தது தான் காதல். இருவருக்குமிடையான பொறமைச் சண்டைகளும் அன்புத் தொல்லைகளும் தான் இதனை சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனால் அவையே எல்வை கடக்குமாயின் வலியாகிவிடும் என்பதை மறக்காதீர்கள். நம்மவர்களை கடுப்பாக்குகின்றோம் என்ற பெயரில் காயப்படுத்திவிடாதீர்கள். “காதல் என்பது கண்ணாடி போன்றது” இன்றைய சிறு கீறல்கள் கூட நாளை வெடிப்பாக மாறி உடைந்து போய்விடலாம்.

அடுத்த விடயம் “ஈகோ” பார்க்காதீர்கள். “நீ எனக்குத் தான்” என்று சொல்லிச் சொல்லியே சண்டை போடுங்கள். பிழை செய்துவிட்டால் “நான் ஏன் இறங்க வேண்டும்” என்றில்லாமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். நம்மவர்களிடம் இறங்கிப்போவதில் நமது கௌரவம் ஒன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லை. அதற்காக ஒரேடியாக உங்கள் சுயகௌரவங்களை இழந்த விடாதீர்கள். சின்ன சின்ன திமிர் கூட காதல் என்ற இலக்கணத்தில் வேண்டும். அல்லது சப்பென்றாகிவிடம்.

இன்னுமொரு விடயம் உண்மையாயிருங்கள். யார் நினைத்தாலும் சாட்சியில்லாமல் தவறுகளை செய்யக் கூடிய காலமிது. அதற்காக அவள் அல்லது அவனுக்கு எங்கே தெரியப் போகின்றது என்றெண்ணி தவறான விடயங்களை செய்யாதீர்கள். “கற்பு’ என்பது மனசுக்குத்தான். ஒருவருள்ள மனதில் இன்னொருவரையும் கூடவே நினைக்கின்றோம் என்றால் அங்கே நாம் விபச்சாரம் செய்கின்றோம். நம்பிக்கையாயிருங்கள். நம்மவர்கள் கேள்வி கேட்கும் போது நமது பக்கத்தில் நியாயமிருந்தால் கண்ணைப் பார்த்து பதில் சொல்லுங்கள். நம்மவர் கேள்வி கேட்டால் ‘என்னை உன்னிடம் நிரூபிக்க வேண்டியதில்லை” என்று கூறுகின்றீர்கள் என்றால் உங்கள் பக்கத்தில் நிச்சயம் தவறிருக்கின்றது. நம்முடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என நினைப்பவர்கள் தான் நம்மை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக கேள்வி கேட்பார்கள். பணத்திற்காக பதவிக்காக அழகிற்காக நேசிப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்களது தேவை வேறு என்பதால்  செய்வதற்கெல்லாம் தலையாட்டி அனுமதிப்பார்கள். “மனம்’ என்பதை நேசிப்பவர்கள் தான் அதில் இன்னொருவர் அமரக் கூடாது என்பதற்காக நூறு கேள்வி கேட்பார்கள். ஆனால் அதுவே சந்தேகமாகி விடாமல் இருசாராரும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மற்றது உங்களவருக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சமூகத்தில் எவ்வளவு பெரியவரானாலும் உங்களவர் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது “அன்பு” மட்டும் தான் தினமும் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சில நிமிடங்கள் அவர்களக்காக ஒதுக்குங்கள். நீங்கள் வேலையில்லா நேரங்களில் கடலை போடு;வதை விட வேலைகளுக்கு மத்தியிலும் ஒதுக்கும் சில நிமிடங்கள் உங்கள் அன்பை பன்மடங்கு உயாத்திக் காட்டும்.
மிகமுக்கியமான விடயம் “காதல்” உங்கள் இலட்சியங்களை தடைசெய்வதை அனுமதிக்காதீர்கள். எவர் உங்களிடம் உங்கள் இலட்சியங்ளை அறிந்து காதலிக்கின்றாறோ அல்லது உங்கள் இலட்சியங்களுக்கு உதவுகின்றார்களோ அவர்களிடம் தான் உண்மையான காதலுண்டுங்க. இது தாங்க சாதிக்க வைக்கின்ற காதல்.  அவ்வாறான காதலை தேடிப் பிடித்து காதலியுங்கள். காதலென்பது நம்மை செதுக்க வேண்டும்.சறுக்க வைக்க கூடாதுங்க.

இறுதியான விடயம் உங்களவர் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பதை உணர்ந்தால் காரணத்தினை ஆராய்ந்து திருத்த முயற்சியுங்கள். அதையும் தாண்டி உங்களை விட வேறு விடயங்கள் தான் அவருக்கு பெரிதாயிருக்கின்றது என்றால் இது பாலியல் ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் கூட இருக்கலாம். காதலிலேயே நிலையில்லாதவரை நம்பி எவ்வாறு கழுத்தை நீட்டுவது. இதை வருமுன் காத்தலாக நினைத்து போய்விடுங்கள். அவர் தான் நல்ல வாழ்க்கைத்துணையை மிஸ் பண்ணிவிட்டார் என நினைத்துக் கொள்ளுங்கள். “நம்மை பிரிவது தான் நம்மவருக்கு பிடிக்கும் “ என்றால் நமது அன்பை நிரூபிப்பதற்காகவே வலித்தாலும் விலகிவிடுங்கள்.

“காதல் என்பது குழந்தை மாதிரி அழுதாலும் சிரித்தாலும் குழந்தை மாதிரி இருக்க வேண்டுமுங்க. தோற்றாலும் ஒரு நிமிடம் ஒரு துளி கண்ணீர் ஏற்படுகிறதென்றால் அது தாங்க உண்மைக்காதல் வரிக்குவரி கவிதையாக காதலியுங்கள் கடைசி வரை போராடுங்கள். இருபக்க காதலும் உண்மையாகவிருந்தால் காலம் அது கடந்தும் வாழும்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் மீரா

( கடந்த வருடம் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கட்டுரை)



பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை