Wednesday, December 17, 2014

மையமும் எல்லையும்

என்
பிடிவாதங்கள்.....
கவலைகள்.....
பொறுமையின்.... 
எல்லைக்கோட்டின்
புள்ளியில் நீ

உன்
வெறுப்புக்கள்....
சந்தேகங்கள்....
விரண்டாவதங்களின்......
மையப்புள்ளியாகி போகும்
நான்…

மையத்திற்கும் எல்லைக்குமான
தூரத்தினை நகர்த்திடாமல்
உன் இறுக்கங்களும்…..
என் மௌனமும்......



Tuesday, December 2, 2014

விமர்சனம்... - என் எதிர்வினை

கடந்த 17ஆம் திகதி “பாலியல் கல்வி” http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html குறித்து பதிவொன்று இட்டிருந்தேன். இது குறித்து பலர் வெளிப்படையான கருத்துக்களை இட்டிருந்தார்கள். இன்னும் சிலர் தொலைபேசியில் இது குறித்து பல விமர்சனங்களை கொட்டியிருந்தார்கள். நேற்று முன்னணி தமிழ்ப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இன்பொக்ஸில் கீழ்க்கண்டவாறு பேசியிருந்தார். அவருக்கான ஒரு சிறு குறிப்பு ஒன்றினையும் அவர் இன்பொக்ஸில் துப்பியிருந்ததையும் பதிவிடுகின்றேன்.

என்ன நீர் பெண்ணியிம் பேசுறேன்..என்று பேஸ்புக்கில் கொண்டம் பற்றி எல்லாம் எழுதுகிறாய்.

ஏன் அதற்கு என்ன?

நீர் சமூகத்தையும் தமிழ் பேசும் மக்களினதும் கலாசாரத்தை சீரழிக்கின்றாய்.

இதை தைரியமிருந்தால் என்ன பதிவின் கீழேயே இடலாமே.. ஏன் இன்பொக்ஸில்?
  
எனக்கு தைரியம் இருக்கின்றது. எனினும், உமது துணிவுக்கு மரியாதைக் கொடுத்துதான் நான் இப்படி செய்கிறேன். 
உமது பணி வரவேற்கத்தக்கது. எனினும், நீர் பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள் 

ஓகோ... அங்கு இதே கேள்வியை கேளுங்கள் பதிலளிக்கின்றேன்..
அது அவர்கள் பிரச்சினை எனக்கு என்ன? என்னை எப்படிப் பார்த்தாலும் நான் நான் தான்

நீர் ஓவர் நைட்ல ஒபாமா ஆகுறதுக்கு டை பன்னுறீர் போல...

சின்ன வயதில் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்துள்ளதா?

தம்பி ஆணுறையைப் பற்றி கேட்டாரா?

ஒபாமா ஆக எனக்கு உடன்பாடில்லை... எப்போதும் நான் நான் தான்
வார்த்தைகள் பண்பாக இருக்கட்டும்...

சரி...பெண்ணியம் பேசுகிறேன்...என நினைத்து மூகநூலில் ஐடம் என்ற பட்டத்தை வாங்கிடாதே...நம் நட்புக்காகத்தான் இந்த ஆலோசனை.

பாருங்கள் இப்படி கேட்டதும் கொதித்தெழுகின்றீர்கள் அல்லவா? அப்போது உங்களுடைய அந்த பதிவை படிக்கும்போது எவ்வளவு அறுவறுப்பாக இருக்கும்?
என்னை யாரும் விமர்சித்தாலும் அது குறித்து எனக்கு அக்கறை இல்லை சனத்... எப்போதும் பேசாப்பொருள்களை தான் பேவைக்க வேண்டும்...
சரி...அது உங்கள் தேர்வு. புனித மான கார்த்திகை பூவை போட்டுக்கொண்டு , மாவீரர்களை புகழும் அந்தப் பக்கத்தில் காமத்துக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குகின்றீர்கள்.
 நீர் ஓர் ஊடகவியலாளர் பரந்த அறிவிருக்கும் என்று நினைத்தேன் இவ்வளவு தானா நீர்? வெட்கம் சனத்...
  
சரி.. நீர் ஓர் பெண் என்பதை மறந்துடாதே...சமூகத்துக்காக குரல் கொடுக்கப்போய் உமது வாழ்க்கைய துலைக்கப்போகின்றாயா?.. நீ பாவமடி.
அடுத்தது அன்பானதொரு வேண்டுகோள் என் எழுத்தை விமர்சிப்பதாக இருந்தால் என் பதிவின் கீழேயே விமர்சியும்... பதிலளிக்க நான் தயார் எப்போதும்
http://veenaganam.blogspot.com/2014/11/blog-post.html
இதை எப்படி வாசிப்பது நீயே யோசித்துப் பார்?

என்றும் என் வாழ்வு தொலையாது... அது எப்போதும் நன்றாக தானிருக்கின்றது சகோ
ஏன் தமிழ் வாசிக்க தெரியாதா?
 சரி...ஏதோ என் மனதில் தோன்றியதை கூறிவிட்டேன். இனி உன் வாழ்வு உனது கையில. சரி அந்த பதிவை வாசிக்க முடியுமா?
 ஏன் தமிழ் வாசிக்க தெரியாதா?
 தெரியும். அசிங்கமாக இருக்குது
 சரி...பகிரங்கமாக பெயர்களை குறிப்பிடாது...மறைமுக மாக குறிப்பிடலாம்தானே...
கொண்டம் என்பதற்கு ஆணுறை என்றுகூட சொல்லாம்தானே..
ஆணுறை என்று போட்டு தான் அடைப்பில் கொண்டம் என்று இட்டிருக்கின்றென்...
ஆனால் அந்த இரகசிய விடயங்களான செக்ஸ், ஆண் - பெண் பாலின உறுப்புக்கள், கொண்டம் (ஆணுறை) போன்ற விடயங்கள் குறித்த கேள்விகள் மட்டும் பல ஆண்டுகள் என்னுடன் பயணித்துக்கொண்டுதானிருந்தன.

இந்த வரியை வாசித்தால் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்..ஆயிரம்தான் இருந்தாலும் நீங்கள் ஓர் பெண். அல்லது வேறு பெயரில் புதிய பிளோகர் ஒன்றை திறந்து பதிவுகளை போடவும்.

நான் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். தோழி உமது கருத்துகள் நிச்சயம் வரவேற்கத்தக்கது. எனினும், சமூகத்தின் பார்வை எப்படி பட்டது உமக்கு தெரிந்திருக்கும் அல்லவா?

என் நேரத்தை வீணடிக்காமல் வேலையை பாரும்... என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் எனக்கு அது பற்றி கவலையில்லை... உமக்கு இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் பதிவின் கீழே கேளும் பதிலளிக்கின்றேன்.. விமர்சியும் ஏற்றுக்கொள்கின்றேன்... இந்த இரகசிய நேர்காணல் தேவையில்லை
அறிவுரைக்கு மிக்க நன்றி
உன்னுடன் சொற்போருக்கு நான் தயார். ஆனால், நட்பு தடுக்கின்றது.
நட்புக்கும் சொற்போருக்கும் தொடர்பில்லை.. எப்போதும் நட்பு தொடரும் விமர்சனங்களை எப்போதும் வரவேற்கின்றேன் வெளிப்படையாக

நிச்சயம். உனது சவாலை ஏற்கிறேன். இனி ஆட்டம் ஆரம்பம். இறுதியில் அழக்கூடாது. ஓகேயா?  


ok
waitting

வணக்கம் சகோ!

நான் பெண்ணியம் என்ற பெயரில் “கொண்டம்” பற்றி எழுதுகின்றேன் என்று முதல் வசனத்திலேயே சொல்லியிருந்தீர். சிறுவயதில் பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சீரழிகின்ற சிறுவர்களது கதைகள் உமக்கு தெரியுமா? பாலியல் உறவு, அது குறித்த பினவிளைவுகள் தெரியாமல் இளவயது கர்ப்பங்கள் குறித்தும் அதனால் அனாதை ஆச்சிரமங்களிலும், வீதிகளிலும் விடப்படுகின்ற குழந்தைகள் பற்றி தெரியுமா? அல்லது தாய்மை பற்றி அறியாத வயதில் கர்ப்பம் தாங்கி மரணத்தினை தழுவியுள்ள குழந்தைகள் பற்றி அறிந்திருக்கின்றீரா? இன்று பாலியல் நோய்கள் பரவிக்கொண்டிருப்பதாவது உமக்கு தெரியுமா? இவற்றினை எல்லாம் தடுப்பது 100 வித சாத்தியமற்றது. ஆனால் இதனை குறைக்கவாவது செய்யலாம் என்றால் அதற்கு எம் மாணவர்களுக்கு பாலியல் கல்வி முக்கியம்.

“பெண்ணியம்” என்றால் உமது அளவில் சமையல் குறிப்பு , அழகுக்குறிப்பு மட்டுமாக இருக்கலாம் என்னளவில் அது இன்னம் நான் கூட புரிந்துகொண்டிருக்காததொரு பதம். ஏதோ என்னால் முடிந்ததை செய்கின்றேன். அதை நீரும் இன்னும் பலரும் பெண்ணியம் என்கின்றீர்கள். நல்லது அவரவர் அறிதலும் புரிதலும் அவரவர்க்கு. ஆனால் “பெண்ணியம்” என்பதை மேற்குறிப்பிட்ட குறிப்புக்குள் அடக்க தான் நீர் முயல்கின்றீர் என்றால் அந்த கட்டினை உடைக்க நானும் என் சார்ந்த ஏனையவர்களும் தயார்.

பெண் பிள்ளை என்பதால் தவறான கண்ணோட்டத்தில்தான் பதிவுகளை உற்றுநோக்குவார்கள் …. இந்த சமூகம் எதனை தான் தவறாக நோக்கவில்லை. அந்ததந்த காலகட்டத்தில் சமூக கட்டுக்களை உடைந்தவர்களை விமர்சித்துக்கொண்டு தானிருக்கின்றது. இந்த சமூகம் என்பதே நீரும் நானும் தான். நம்மை திருத்திகொண்டாலே போதும். அடுத்தது உமது பிரச்சினை நான் இது குறித்து பேசியதா? அல்லது ஒரு பெண்ணாக நான் இதை பேசியதா? இன்றும் பெண் பேசிடாப்பொருளாக இருப்பவை மூன்று என்னளவில். அதில் ஒன்று காமம். ஏன் இது குறித்து ஒரு பெண் பேசினால் என்ன? உணர்வு ஆனுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தானே…

சின்ன வயதில் உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்துள்ளதா? இது வரை பாலியல் தொழில் பற்றி எழுதியிருக்கின்றேன்… வன்முறைகள் குறித்து எழுதியிருக்கின்றேன். அதற்காக நான் பாலியல் தொழில் செய்கின்றேன் என்றா அர்த்தம்? அல்லது வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளேன் என்பதா அர்த்தம்? நான் கடக்கும் பாதையில் இவற்றினை காண்கின்றேன். இவற்றினை பற்றி என் கருத்தினை எழுதுகின்றேன். எல்லாமே செய்வினையாக தானிருக்க வேண்டும் என்பதல்ல செயற்பாட்டு வினையாகவும் இருக்கலாம். எழுத்துக்களை கொண்டு ஒருவரை எடை போடுவதை நிறுத்தும்.

மூகநூலில் ஐடம் என்ற பட்டத்தை வாங்கிடாதே…. “ஐட்டம்” அப்படியென்றால் என்ன? நீயும் உன் சமூகமும் பெண்களுக்கு வைத்திருக்கும் பெயர். அதாவது நடத்தை கெட்டவள் என்று உன் போன்றோர் நினைக்கும் பெண்களுக்கு மறைமுகமாக வைத்திருக்கும் பெயர். அவ்வாறு நடக்கும் ஆணுக்கு என்ன பெயர்? அதைவிட நீர் பட்டம் கொடுக்குமளவு பெரியவரா? முகநூல் என்பது என்னளவில் கருத்திடும் ஊடகமே அன்றி என் முழு உலகமுமல்ல.

புனித மான கார்த்திகை பூவை போட்டுக்கொண்டு இ மாவீரர்களை புகழும் அந்தப் பக்கத்தில் காமத்துக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குகின்றீர்கள் ஆணுறை பற்றி பேசுவது தான் “காமமா?” மாவீரர்கள் பற்றியும் அவர்கள் பெண்களை சரிநிகராக மதித்து அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்தது பற்றியும் உமக்கு உள்ள அறிவு இவ்வளவு தானா? அல்லது தமிழ் பெண்ணென்றால் சமையலறை என்ற உம் போன்றோர் அளவு தான் விடுதலைப்புலி இயக்கம் இருந்தது என்கின்ற எண்ணமா உமக்கு? அவர்களவில் ஆண் - பெண் பேதம் என்பதே இருக்கவில்லை. எத்தனையோ பெண் போராளிகள் பல போர்களை தலைமை தாங்கி நடாத்தி வீர சாவெய்தும் இருக்கின்றார்கள். என் பாடசாலைக்காலத்தில் என்னுள் போராட்டம் குறித்து விதைத்தவரும் ஒரு பெண் போராளி தான்.

//உமது வாழ்க்கைய துலைக்கப்போகின்றாயா?. இதில் என் வாழ்க்கை எப்படி தொலையும்? உம் போன்ற சில கிணற்றுத்தவளை ஆண்கள் இருக்க கூடும். ஆனால் என் சமூகத்தில் தெளிவான சிந்தனையுடைய பல ஆண்களை தான் பார்த்திருக்கின்றேன். ஒருவேளை நீர் என் திருமணத்தினை பற்றி யோசிக்கின்றீரோ என்னவோ? பயப்படாதீரும் உம் போன்ற ஒரு சிறுமைப்புத்தியுள்ள ஆணை கரம்பற்றப்போவதில்லை. அது குறித்து இனிமேல் நீரும் உமது சிறு மூளையை குழப்பிக்கொள்ளாதீர்.
இன்னுமொன்று நேற்றே சொல்லியிருந்தேன். என் எழுத்துக்களை பொதுவில் பகிரும் போது அதற்கான கருத்தினையும் பொதுவிலேயே எதிர்பார்க்கின்றேன். விமர்சனங்களை ஏற்கவும் அதனை விளங்கி மாற்ற வேண்டுமாயின் சிந்தனைகளை மாற்றிக்கொள்ளவும் என் பெற்றோர் என்னை பழக்கி தானிருக்கின்றார்கள். உம்மைப் பொன்று தான் ஒரு பெண்ணும் என்னை தரக்குறைவாக பேசியிருந்தார். அவர் இன்று சமூகத்தில் ஓரளவேனும் சரிசமமாக நடமாடுவது கூட என் போன்றோர் முன்னெடுத்திருந்திருந்த போராட்டங்களின் விளைவே..
இவ்வளவு அறிவுரை கூறிய உமக்கும் நான் ஒன்று சொல்லவேண்டும். தயவுசெய்து ஊடகதுறையில் இருக்கும் நீர் இனியாவது உம் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது. நாம் மக்களின் பிரதிநிதிகள். எம் சிந்தனைகள் சிறுமைப்பட்டிருந்தால் எப்படி சமூகத்து விடயங்களை முன்வைக்கப்போகின்றோம். உமது கருத்தின் படி வீரம் உமக்கு இருக்கும் பட்டசத்தில் என் சுயம் பற்றிய விமர்சனங்களை பொதுவில் வையும். சந்திக்க நான் தயார். என்னளவில் வீரம் எனப்படுவது மறைந்திருந்து முதுகில் குத்துவதல்ல… அதில் உமது பெயரை பதியவில்லை. உம்மை அசிங்கப்படுத்துவதல்ல என் நோக்கம். இனி வரும் காலத்தில் ஒரு பெண் தன் கருத்துப்பகிர்விற்கு எதிர்ப்பு வரும் போது அல்லது அவள் குறித்த சுயம் விமர்சிக்கப்படும் போது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கானதே இது.

Monday, November 17, 2014

அது என்னவாயிருக்கும் ?

 (என் நாட்குறிப்பின் சில பக்கங்களிலான கிறுக்கல்களே இவை)
எனக்கு இன்றும் நல்லா ஞாபகம் இருக்கின்றது சில விடயங்கள் குறித்து பத்திரிகைளில் வரும் போது அவற்றினை ஒளிந்திருந்து வாசித்திருக்கின்றேன். என்னுடைய இரகசிய வாசிப்புகளுக்கு நான் பயன்படுத்திய இடம் என் அறையின் கதவு மூலை என்பதும் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றது. சில நேரங்களும் இவை குறித்த எண்ணிலா கேள்விகள் என்னுள் எழுவதுண்டு. அம்மாவும் அப்பாவும் பெரும்பாலும் என்னுள் வினாக்கள் எழும் நேரங்களில் அலுவலகத்தில் இருப்பார்கள். வீட்டில் எங்களை வளர்த்த அக்காவிற்கு பதிலளிக்கும் அளவுக்கு அறிவு இருக்கவில்லை அல்லது என் அளவிற்கு இறங்கி பதில் சொல்வதற்கு அவவுக்கு தெரிந்திருக்கவில்லை அல்லது அவ சொன்னது எனக்கு புரிந்திருக்கவில்லையோ என்பது என் பருவ வயது நினைவு மீட்டல்களில் எனக்குள் நானே எடுத்துக்கொண்ட தீர்மானங்கள்….  ஆனால் அந்த இரகசிய விடயங்களான செக்ஸ், ஆண் - பெண் பாலின உறுப்புக்கள், கொண்டம் (ஆணுறை) போன்ற விடயங்கள் குறித்த கேள்விகள் மட்டும் பல ஆண்டுகள் என்னுடன் பயணித்துக்கொண்டுதானிருந்தன.

எல்லாரும் ஒன்றாயிருந்து படம் பார்க்கும் போது கிஸ் சீனோ அல்லது படுக்கையறை காட்சிகள் வரும் போதோ நானும் தம்பியும் கண்களை மூடிக்கொள்வம். அநேகமாக மூடிய கை இடைவெளியில் கள்ளத்தனமாக பார்த்துக்கொள்வேன். இடைக்கிடை “என்ன நீ இந்த முத்தல் விசயம் எல்லாம் பார்க்கின்றாய்….” என்று தம்பியையும் விரட்டிக்கொள்வன். அதற்கு “ ஏன் நீங்க கைக்குள்ளால பார்க்கலயா?” என்றோ “ஏன் அக்காச்சி பொய் சொல்றீங்க நான் பார்க்கலயே” என்றோ பதில் அளிப்பான்.

பள்ளியில் 9 ஆம் வகுப்பிற்கு வந்த நேரம் தான் நான் பெரிய பிள்ளையானன். எனக்கேதோ அப்போது தான் என் இரகசிய கேள்விகள் அதிகரித்ததோ என்றிருந்தது. எமக்கு “சுகாதாரமும் உடற்கல்வியும்” என்ட பாடம் ஒன்றிருந்தது. அதில 61 தொடக்கம் 73 ஆம் பக்கம் மட்டும் ஆம்பிள்ளை ,பொம்பளையல்ட வெற்றுடம்பு படங்கள், மார்பின் படம், பெரிய பிள்ளையாதல் பற்றிய விடயங்கள் குறித்த படங்கள் இருக்கும். அந்தப் பக்கங்கள சுகாதார ஆசியர் கூட வாசிக்காம தான் தாண்டிப்போனார். எங்கட நண்பிகள் குழுவுக்குள்ள சிலநேரம் அதில இருந்த படங்களை காட்டி பகிடி பண்ணிக்கொள்வம். ஆனா எங்க குழுவ தாண்டியோ அல்லது ஆசிரியரிடம் இது பற்றி பேசுமளவிற்கோ எனக்கு தைரியம் இருக்கல்ல. இதை தைரியம் என்டத விட கூச்சம் என்டும் சொல்லலாம். இந்தக் கூச்சம் நான் பள்ளியை விட்டு நிற்கும் வரை கூட என்னை விட்டுப் போகல. உயர்தரத்தில் “இனப்பெருக்கம்” பற்றி என் சக நண்பிகள் படித்த நேரம் அட கணிதப்பிரிவுலயும் இந்தப் பாடத்தை போட மாட்டார்களா என்று ஏங்கிய காலமது.

பதின்ம வயதை கடந்து கொஞ்சம் கொஞ்மாக என் சுற்றுவட்டங்கள் அகலத் தொடங்கின பிறகு தான் எனக்குள் இருந்த வெட்கங்களும் தொலையத் தொடங்கின. பள்ளி வரை வெறும் பெண் நண்பிகளுடன் மட்டும் நின்றிருந்த என் நட்பு வட்டத்தில் பின்னரான பல்கலைக்கழக வாழ்வில் ஆண் நண்பர்களும் இணையத் தொடங்கினாங்க. ஒன்றாக இருந்து படிக்கும் போது சில நேரங்களில் இரட்டை அர்த்தமான பேச்சுக்கள் அடிபடும். அந்த நேரங்கள்ல பாடத்தை படிக்கிற மாதிரி மூஞ்ச வச்சுக்கொண்டு காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பன். ஏதாவது கசமுசா சொற்கள் கேட்டுவிட்டால் அது பற்றி தான் என் சிந்தனை ஓட்டங்கள் இருக்கும். என் இரகசிய வாசிப்புக்களுடன் இவற்றினை ஒப்பீடு செய்யவும் தொடங்கும் மனம். ஆனால் வெளிப்படையாக அந்தப் பேச்சுக்களுள் கலந்துகொள்ளவோ என் கேள்விகளை பதில்களால் நிரப்பிக்கொள்ளவோ என்னால் முடிந்திருக்கவில்லை. ஏதோவொரு திரை எனக்குள்ளேயே விழுந்து விடும். என் அந்த மூன்று நாட்களில் பல்கலைக்கழகம் போகாமல் இருந்து யாராவது “ஏன் வரல?” என்டு கேட்டால் கூட “எனக்கு மாதவிடாய் வந்துட்டு. வயிற்று வலியால வரல” என்டு சொல்லக் கூட என்னால் முடியல. அதற்கு காய்ச்சல், தலையிடி, வயிற்றோட்டம் என்று வராத பல நோய்களை இட்டு நிரப்பிக்கொள்வன். ஏன் என் மாதவிடாய் நாட்களில் பெரும்பாலும் என் உளவியலிலும் மாற்றங்கள் இருக்கும். எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுவேன். யாராவது கேட்டால் “சின்னப் பிரச்சினை ஒன்டு அதான் கோபமா இருக்கன்” என்டு இல்லாத கோபங்களை இணைத்துக்கொள்வன்.

இப்படி இருக்கும் போது தான் விடுதி வாழ்க்கைக்குள் வரவேண்டியதொரு நிர்ப்பந்தம். வேறு பொழுது போக்குகள் இல்லாத இடம். என் நல்ல காலம் விடுதிக்கருகில் நூலகம் இருப்பது. சாண்டில்யன், கல்கி, ராஜேஷ்குமார் என இருந்திருந்த என் நூல் பட்டியல் நீளத்தொடங்கியது. பல ஆங்கில எழுத்துக்களை வாசிக்க தொடங்கினேன். முற்போக்கு சிந்தனைகளை அவை விதைக்க தொடங்கின. பாலியல் கல்வி என்பது வேறேதோ உலகத்து விடயமல்ல மனித செயற்பாடுகளுக்கு இன்றியமையாததொன்று என்ற புரிதல் என்னுள் ஏற்படத்தொடங்கின. இதன் தாக்கம் என் மாதவிடாய் நாட்களை என் சக பல்கலைக்கழக ஆண் நண்பர்களுக்கு கூட தெரிவிக்குமளவிற்கும் கொண்டு வந்தது. இப்போதெல்லாம் “மாதவிடாய்” என்பது என் தவறல்ல மறைக்கப்படுவதற்கு அது எனக்குள் ஏற்படுகின்ற உடலியல் மாற்றம் என்கின்ற தெளிவு எனக்கு உருவாகியுள்ளது. 
இந்த நேரத்தில தான் கடந்த 4 நாட்களாக இளம் வயது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பயிற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. என் இரகசிய கேள்விகளுக்கான விடைகள் இன்று நிரப்பப்பட்டிருக்கின்றன. முதல் நாள் பங்குபற்றியவர்களிடம் இருந்த ஒருவித தயக்கம் கூட முடிவிற்கு வந்திருந்தது. காலை முதல் மாலை வரையான பயிற்சிகள் முடிந்த பின்னும் நாம் அனைவரும் ஆண் - பெண் வேறுபாடின்றி குழுவாக விடியற்காலை வரை கூட கலந்துரையாடியமை இதற்கு நல்லதொரு உதாரணம். இம்முறை என்னுடைய பிறந்த நாளிற்கான பரிசாக இந்த நண்பர்களில் பலர் கொண்டமும் (Condom) , கர்ப்பத்தடை மாத்திரையும் தான் தந்தார்கள். இதனை நான் அவமானமாகவோ அல்லது ஏதோ தொடக்கூடாத பொருளாகவோ கருதவில்லை. இன்று இதை எழுதுவதால் விமர்சனத்திற்குள்ளாகும் என் சுயம் குறித்தும் எனக்கு அக்கறையில்லை. இந்த 25 வயதிற்கு  பின்னர் எனக்கு கிடைத்திருக்கின்ற பாலியல் குறித்த தெளிவு பதின்ம வயதிலேயே ஏனையவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என்னளவிலான வாதம் … இத்தகைய பாலியல் கல்வியினூடாக  பாலியல் வன்முறைகள், இளவயது கர்ப்பம்,  துஷ்பிரயோகங்கள் தடுப்படுவதுடன்  பாலியல் தொழிலாளிகள் குறித்த எம் பார்வை மாற்றமடைய கூடும் எனவும் நான் கருதுகின்றேன்.

Tuesday, August 26, 2014

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC) ஏற்பாட்டில் ஸ்கொட்லாந்தின் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தினால் வட - கிழக்கில் இலவச நூல் விநியோகம்

ஸ்கொட்லாந்தில் இருந்து உலகெங்கும் சிறுவர்களின் வாழும் கல்வி முன்னேற்றத்திற்காக இலவசமாக புத்தகங்களை வழங்கும் புக்ஸ் எப்ரோட் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் (ETDRC)  ஏற்பாட்டில் ஈழத்தின் யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கும் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 83 பாடசாலைகளுக்கு சுமார் ஒருலட்சத்தி ஐம்பதினாயிரம் ஆங்கில நூல்களை கடந்தமாதம் நூல்களை வழங்கியுள்ளது. பல தடைகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இந்த நூல்கள்  வடக்கு – கிழக்கு தமிழ்ப்பாடசாலைகளுக்கும், நூல் நிலையத்திற்கும்  சென்றடைந்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்னும் இந்நூல்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் முடங்கிக்கிடக்கிறது. 

யாழ் நூலகத்திற்கு மாத்திரம் சிறுவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்காக 20,000 ஆங்கிலப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தக விநியோகமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஒரு நாட்டிற்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்தவகையில் கடந்த வருடம் வழங்கப்படவேண்டிய புத்தகங்கள் இலங்கை அரசின் சுங்க கட்டுப்பாட்டுவிதிகளினால் ஏற்பட்ட தடைகளினாலும், வடமாகாண ஆளுநரின் முட்டுக்கட்டையினாலும் விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. இப்பெரும் தடைகளை மிகுந்த பிரயர்தனத்தின் மத்தியில் நீக்கி கடந்த மாதம் வடமாகாணத்திலும், திருகோணமலையிலும் பூரணமாக பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டது. 

இந்நிகழ்வானது ஐரோப்பிய தமிழர் ஆவணக்காப்பகத்தின் நிறுவனர் நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் மிகுந்த பகீரதப் பிரயர்தனத்தின் மத்தியிலேயே விநியோகிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 2012 இல் ஜனவரி இறுதியில் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஜோன் கால்டர் அவர்களும் ஈரோப்பிய தமிழர் ஆவணக்காப்பக நிறுவனர் நூலகவியலாளர் என். செல்வராஜா அவர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் திருக்கோணமலை மாவட்டத்திலும் சில சந்திப்புகளை மேற்கொண்டு தமது நூல் விநியோகத்திற்கான உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் கண்டறியமுனைந்தனர்.

வட மாகாண ஆளுநரின் ஜி.ஏ. சந்திசிறியின் சம்மதமின்றி அணுவும் அசையாது என்ற நிலை யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் அன்றைய காலத்தில் நிலவியதால், கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகளுடனான சந்திப்பு பயனற்றதாக அமைந்தது. காரணம் யாழ்ப்பாணக் கல்வித் திணைகள அதிகாரி இவ் ஆங்கில நூல் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து ஆளுநருக்கு யால்ரா போட்டுவிட்டார். 

ஆயினும் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.ஜோன் கால்டர் அவர்கள் இலங்கை லொட்ரிக்கழகத்தினை அணுகியபோது அவரகள் இந்நூல் விநியோகத்தை வழங்குவதற்கு பூரண உதவியை வழங்கினர். இதன்பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகம் மற்றும் சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்து எதிர்கால நூல் விநியோகம் பற்றிக் கேட்டறிந்தார். இதன்போது சில பாடசாலை அதிபர்களது அலட்சியப் போக்கை அவர்களால் அவதானிக்கப்பட்டிருந்த்து அவர்களது கசப்பான அனுபவமாகும். 
 
யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான இரவல் வழங்கும் பிரிவொன்றை உருவாக்கும் வகையில் இரண்டு பலட் கொள்ளளவிலான (ஒரு பலட்டில் 230 பெட்டிகள் உள்ளடக்கப்பட்டது) சிறுவர் நூல்களையும், நல்லூர் பிரதேச சபையின் மூன்று நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு பலட் கொள்ளளவிலான சிறுவர் நூல்களையும், புக்ஸ் அப்ரோட் நிறுவனம் வழங்கியது. அந்த மூன்று பலட்களுடன்
  • தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
  • தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி
  • யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடக் கல்லூரி
  • சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
  • ஊர்காவற்றுறை புனித அந்தனிஸ் கல்லூரி
  • யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்
  • வேம்படி மகளிர் கல்லூரி
  • யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
ஆகிய எட்டு பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக ஒரு பலட் நூல்களுமாக மொத்தம் நான்கு பலட்களில் சுமார் 50,000 நூல்கள் யாழ்ப்பாணப் பொதுநூலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து உரிய பாடசாலைகளுக்கும் பொது நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  
 
 
அடுத்து திருக்கோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நூல்களிலிருந்து ஒரு தொகையை கிளிநொச்சி மாவட்டத்தின் எட்டுப் பாடசாலைகளுக்கு நல்லெண்ண உதவியாக வழங்கப்பட்டன.இதில்
  • அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம்
  • பாரதிபுரம் மகா வித்தியாலயம்
  • இராமநாதபுரம் மேற்கு அரசாங்க தமிழ்கலவன் பாடசாலை
  • ஜெயபுரம் மகா வித்தியாலயம்
  • வேராவில் இந்து மகா வித்தியாலயம்
  • இத்தாவில் வேம்பொடுகேணி கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலை
  • முருகானந்தா பாலர் பாடசாலை
  • பூநகரி முட்கொம்பன் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
ஆகிய எட்டு பாடசாலைகளுக்கு சுமார் 10,00 வரையான நூல்கள் வழக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கோணமலை மாவட்டதிலுள்ள  

  • ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
  • ஓர்ஸ் ஹில் விவேகானந்தா கல்லூரி
  • ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி
  • மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி
  • ஸாஹிராக் கல்லூரி
  • உப்புவெளி செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம்
  •  புனித பிரான்சிஸ் சேவியர் மகா வித்தியாலயம்
  • நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம்
  • தம்பலகாமம் ஆதிகோணேஸ்வர மகா வித்தியாலயம்
  • மூதூர் கிளிவெட்டி மகா வித்தியாலயம் 
  • தோப்பூர் பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி
  • மூதூர் முஸ்லிம் பெண்கள் கல்லூரி
  • சீனன்குடா நாலந்தா மகா வித்தியாலயம்
  • கிண்ணியா முஸ்லிம் மகா வித்தியாலயம் 
  • மூதூர் அன்-நாகர் பெண்கள் மகாவித்தியாலயம்
  • பாலையூற்று ஸ்ரீவாணி வித்தியாலயம் 
  • பட்டித்திடல் மகா வித்தியாலயம்
  • மூதூர் ஈச்சிலம்பற்று ஸ்ரீ செண்பக மகா வித்தியாலயம்
  • சேனையூர் மத்திய கல்லூரி
ஆகிய  19 பாடசாலைகளுக்கு 45,000 ஆங்கில நூல்கள் சென்றடைந்துள்ளன. 
மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள 
  • கிரான் மகாவித்தியாலயம்
  • கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலயம்
  • சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயம்
  • கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம்
  • வம்மிவட்டுவான் வித்தியாலயம்
  • கதிரவெளி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்
  • குமாரவேலியார் சித்திவிநாயகர் வித்தியாலயம் 
  • செங்கல்லடி மத்திய கல்லூரி
  • தன்னாமுனை புனிதவளனார் மகா வித்தியாலயம்
  • மட்டக்களப்பு இந்துக் கல்லூரி
  • பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயம்
  • தளவை விக்கினேஸ்வரா வித்தியாலயம்
  • அரசடி மகாஜனா கல்லூரி
  • திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்
  • அமிர்தகழி ஸ்ரீசித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • ஸ்ரீமாமாங்கேஸ்வர்ர் வித்தியாலயம்
  • ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயம் 
  • குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்
  • ஆரையம்பதி மகா வித்தியாலயம்
  • மஞ்சத்தொடுவாய் பாரதி வித்தியாலயம்
  • ஊரணி சரஸ்வதி வித்தியாலயம்
  • மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரி
  • மைலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயம்
  • மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரி 
  • நாவற்காடு விலவட்டவன் விநாயகர் வித்தியாலயம்
  • ஈச்சந்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 
  • வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை வித்தியாலயம் 
  • கரடியனாறு மகா வித்தியாலயம்
  • பன்குடாவெளி காயங்காடு கண்ணகி வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
  • பன்குடாவெளி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
  • கரடியனாறு மரப்பாலம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • பன்குடாவெளி இலுப்பையடிச்சேனை அம்பாள் வித்தியாலயம்
  • கரடியனாறு கித்துள்வௌ ஸ்ரீகிருஷ்ணா வித்தியாலயம்
  • பெரியபுல்லுமலை ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
  • செங்கல்லடி உன்னிச்சை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கண்ணன்குடா காயன்மடு அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கொக்கட்டிச்சேலை முதலைக்குடா மகா வித்தியாலயம் 
  • ஆயித்தியமலை மகிளவெட்டுவான் மகா வித்தியாலயம்
  • முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் 
  • அம்பிலாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்
  • கொக்கட்டிச்சோலை-கட்சேனை அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • கொக்கட்டிச்சோலை ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
  • பண்டாரியாவெளி அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை 
  • நாவற்காடு நாமகள் வித்தியாலயம் 
  • மாவடிமுன்மாரி அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை
  • வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம்
 ஆகிய நாற்பத்தியெட்டு பாடசாலைகளுகள் 45,000 நூல்களைப் பெறுகின்றன. எனினும் இப்பாடசாலைகளிடம் இந்நூல்கள் கையளிக்கப்படவில்லை. 2011இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, மன்னார் புனித சேவியர் கல்லூரி, ஊர்காவற்றுறை புனித அந்தனிஸ் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், வேம்படி மகளிர் கல்லூரி, காரைநகர் துரையப்பா மத்திய மகா வித்தியாலயம், யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடக் கல்லூரி, யாழ்ப்பாணப் பொது நூலகம், நல்லூர் பிரதேச சபையின் கோண்டாவில் பொது நூலகம் ஆகியவற்றுக்கு தலா ஆறுமுதல் எட்டு பெட்டிகள் வீதம் சிறுவர் நூல்களை விநியோகம் செய்திருந்தார்.

தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட சில பாடசாலைகள் நூல்கள் கிடைத்தமை பற்றிய அறிக்கையை புக்ஸ் அப்ரோட் நிறுவனத்திற்கு வழங்கத் தவறியமையால் இந்த நூல்கள் அப்பாடசாலைகளால் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற கசப்பான முடிவிற்கு புக்ஸ் அப்ரோட் நிறுவனம் வந்தமையால் அடுத்த முறைக்கான வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அப்பாடசாலைகளின் பெயர்களையும் தமது தொடர் உதவிப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

இது மேற்படி பாடசாலை அதிபர்களின் நிர்வாக சீர்கேட்டினை சுட்டிநிர்ப்பதாகவே தெரிகிறது. இனியாவது உதவி பெற்ற அனைத்துப் பாடசாலைகளும் தமது அறிக்கையை சமர்நப்பிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாண்டும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நூல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக புக்ஸ் அப்ரோட் நிறுவனத்தினால் தங்கள் பாடசாலைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தகங்கள் கிடைக்க வேண்டுமெனில் கீழ்க் குறிப்பிடும் விடையங்களை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

  1.  நூல்கள் கிடைத்த்தும் அதனை மேற்படி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ தபால் மூலமாகவோ நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைக்க வேண்டும்.
  2.  சுமார் மூன்று மாதங்களில் மேற்படி நூல்கள் அனைத்தும் பட்டியல் இடப்பட்டு நூலகச் சேர்க்கையில் இணைக்கப்பட்ட பின்னர் கிடைத்தவற்றுள் மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றின் விபரத்தையும் (ஆக்க் கூடியது 10 நூல்களின் தலைப்பு, ஆசிரியர் பெயர், பாட விடயம் என்பவற்றை குறிப்பிடலாம்), பயன்ற்றதெனத் தாம் கருதும் நூல்களில் சிலவற்றின் விபரத்தையும் (இதுவும் முன்னையது போன்றே 10 தலைப்புகளில் அமையலாம்) பட்டியலிட்டு ஒரு கடித்த்தை பாடசாலை அதிபர் வாயிலாக அனுப்பவேண்டும்.   
  3. நூல்கள் கிடைத்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியரின் கண்காணிப்பின்கீழ் மூன்று பிள்ளைகள், தாங்கள் கடந்தகாலங்களில் வாசித்த புக்ஸ் எப்ரோட் நிறுவனத்தின் நூல்களில் ஏதாவது ஒரு நூலைத் தேந்தெடுத்து அந்த நூல் என்ன சொல்கிறது? அதில் தாம் விரும்பும் அம்சம் என்ன ஆகிய தகவல்களை உள்ளடக்கி, 20 வரிகளுக்குள் அமையும் சிறு விமர்சனம் ஒன்றை எழுதி (மூன்று மாணவர்களின் மூன்று விமர்சனங்களும் ஒன்றாக அனுப்ப்ப்படவேண்டும்) புக்ஸ் அப்ரோட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும்

இவை தவிர தமது நூல்களை கண்காட்சிப்படுத்தமுனையும் பாடசாலைகள், பொது நூலகங்கள் அதுபற்றிய புகைப்படங்களையும் பிற தொடர்பாடல்களையும் அனுப்பிவைக்கவேண்டும் புக்ஸ் எப்ரோட் நிறுவனத்துடன் நேரில் தொடர்புகொள்ள விரும்பும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட முகவரியுடன் தமது தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம். 

BOOKS ABROAD,
Unit 1,
Richmond Avenue Industrial Estate,
Rhynie,
HUNTLY,
Aberdeenshire,
AB54 4HJ,
SCOTLAND, U K.

(மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய பதிவு இது. எழுத்துப்பிழைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன)



 

 

Tuesday, July 8, 2014

மீள் நிரப்புதல்...

எண்ணெய் குடுவைக்குள்
நீரை நிரப்பிடல் உண்டா?
நீரின் மேற்பரப்பில்
எண்ணெய் படலமாக
உன் நினைவுகள்....

சரமாகும் மல்லிகைக்கு
பதில் தாமரையை
கோர்த்திடலாமா...?
நினைவுச்சரங்களின்
ஒவ்வொரு சிக்கிலும் -
நம் சந்திப்புக்கள்...

விஷச்சாடிக்குள்
பாலூற்றிப் பருகுவதும்..
உன் கனவுளை துடைத்தெறிந்து
விட்டு இன்னொருவன்
நினைவை நிரப்புவதும்
சாத்தியமற்றதாகியே
விடுகின்றது...

கவிதைகள்...
கனவுகள்...
நினைவுகள்... அனைத்திலும்
மீள்நிரப்பிட முடிந்திடா
பொருளாகியே
போகின்றாய்.... – நீ
என்னை (மட்டும்) விட்டே...

நாளை என்
மண மேடையும்
மரண மேடையும் - உன்
நினைவுகளாலான
மீள் நிரப்பலினால்
அலங்கரிக்கப்பட கூடும்...
அந்த நிரப்பல்களின்
மெல்லிய விளிம்புகள் வரை
என் இறுதி மூச்சுக்களே
நிரம்பியிருக்கும்....

Friday, July 4, 2014

பயிரை மேயும் வேலிகள்.....

சில நாட்களுக்கு முன் சிலி நாட்டிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரை சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. பெயர் வலேரியா. இவர் ஒரு நாடக கலைஞர். அண்மையில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று அங்கு பயில்கின்ற மாணவர்களையும் சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தார். இந்தியர் ஒருவரை திருமணம் செய்துள்ள இவர் இரு பெண் குழந்தைகளின் தாய்;. கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இந்தியாவில் வசித்து வருகின்றார். அவருடன் இப்போது கொழும்பில் வசித்து வருகின்றவரான அமெரிக்க பெண்ணான இவோன் என்பரும் என்னை சந்தித்தித்தார். இவோன் ஒரு எழுத்தாளர். தற்போதும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவருக்கு பிடித்த துறை பொருளாதாரம். மூவரும் கதைப்பதற்கு என்றே விஹாரமாதேவி பூங்காவில் சந்தித்தோம். அவரவர் குடும்பங்கள் தற்போதைய பணிகள் என்று ஆரம்பித்த அந்த உரையாடலில் அவர்கள் இருவரும் கூறிய பல விடயங்கள் நான் வளர்ந்த, வாழ்கின்ற சமூகத்தின் வரம்புகளை தாண்டியதாகவே இருந்தது.

அவர்கள் இருவரும் தம்முடைய பாலியல் உறவுகள், தமது ஆண் நண்பர்கள் பற்றிய விளக்கம் , விவாகரத்து என்று மிக சகஜமாக பேசும் போது தட்டுத்தடுமாறி என்னுடைய படிப்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும், விடுதி வாழ்க்கை பற்றியும் பேசிய என்னால் எம் சமூக வரம்புகள் பற்றி தான் சிந்திக்க முடிந்தது. அதில் அவர் பகிர்ந்த இரு விடயங்கள் பற்றியதே இந்த பதிவு. முதலாவது பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி அடுத்த விடயம் எம்மவர்களின் ஆணாதிக்க சிந்தனைகள்.

'என்னுடைய இரு பெண் பிள்ளைகளையும் யாராவது ஆண் மடியில் இருத்திப் பேசினால் கூட தயவுசெய்து பிள்ளைகளை ஆசனத்தில் அமர்த்தி பேசுங்கள். பிள்ளைகளை தொட்டுப் பேசுவதெல்லாம் வேண்டாம்' என்று நான் அவர்களிடம் வெளிப்படையாக சொல்லிடுவன் என்ற கருத்தினை வலேரியா தெரிவித்தார். இன்றைய நம்முடைய பத்திரிகைகளை புரட்டுங்கள். வெளியாட்களை விடவும் வேலியே பயிரை மேய்ந்த கதைகள் எத்தனை??? தமது தந்தை, தமையன், தாத்தா, மாமா என்று தெரிந்த ஒருவரினாலேயே பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்ட குழந்தைகள், பெண்கள் எத்தனை?

நம் குழந்தைகள் சிறுவயதாகவே இருக்கும் போது அவர்களுக்கு வருகின்றவர்கள் , போகின்றவர்கள் எல்லோருக்கும் முத்தம் கொடுக்கவும், ஏதாவது பொருளைக்காட்டினால் அதை வாங்கிவிட்டு அவர்களது மடியில் அல்லது கைக்கு தாவவும் தான் பழக்குகின்றோம். நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு யாராவது உன்னை தொட்டால் எம்மிடம் வந்து சொல்ல வேண்டும் என்று பழக்கிக்கொடுக்கின்றோம்? முதலாவது எமக்குள் 'பாலியல் உறவுகள்' குறித்த கண்ணோட்டம் எவ்வாறிருக்கின்றது?  நம்முள் பெரும்பாலானோர் பிறப்புறுப்புக்களிலான உறவே பாலியல் உறவு என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். 'தொடுகை' மூலம் திருப்தியடைகின்ற எம்மை சுற்றியுள்ள வக்கிரகாரர்களையும், இவ்வாறான தொடுகைகளின் மூலம் உளவியல் ரீதியாக எதிர்காலத்தில் பாதிப்படையவுள்ள எம் குழந்தைகள் குறித்தும் எம்முள் பலருக்கு தெரிவதில்லை.... அதைவிட அவதானிப்பதில்லை என்று சொல்லாம்.

இவ்வாறு சொன்னவுடன் நவநாகரீக உடைகள் குறித்து பேசும் சிலர் இருக்கின்றார்கள். அந்தக்காலத்தில் ஜாக்கெட்டே இல்லாமல் புடவை கட்டிய கிழவிகளை விடவா இன்றைய உடைகளும் அதை அணிபவர்களும் 'செக்ஸியாக' இருக்கின்றார்கள். சுற்றியிருப்பவர்களை பாலியல் ரீதியாக  சுரண்டுவது அன்றிலிருந்தே தொடர்கின்றதொன்று. ஆனால் தற்போது தான் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன என்ற யதார்த்தத்தினை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்னர் சமூகத்தினாலும், குடும்பத்தின் கௌரவங்களுக்காகவும் மூடி மறைத்தவைகளின் நீள்ச்சியே இன்று வெளிவருகின்ற விடயங்கள்.

அடுத்ததான என் நண்பிகள் பகிர்ந்த விடயம் 'ஆணாதிக்க சிந்தனைகள்' குறித்தது. வீட்டுக்குள் தன் மனைவியை ஒரு அடிமையாக நடத்துபவர்கள் சமூகத்தின் முன் காட்டுகின்ற சில படங்கள் பற்றிய கருத்துக்கள்... ' என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாறாகவே என்னுடைய நாட்டை விட்டு புறப்பட்டேன். ஆரம்பத்தில் அன்பாகதானிருந்தார். என்னையும் சுதந்திர பெண்ணாக தான் நடத்தினார். ஆனால் இந்தியா வந்தவுடன் அவர் குணங்கள் மாறிவிட்டது. தன்னுடைய சமயம், கலாசாரம் என அனைத்தையும் பின்பற்ற என்னை வற்புறுத்தினார். இது தொடர்பில் எமக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் இது நாட்கணக்கிலும் தொடரும். அந்நாட்களில் என்னை ஒருவிதமான அருவருப்பானவளாக தான் பார்ப்பார். தப்பித்தவறி என் கை அவரில் பட்டால் கூட போதும் உடனே கையை நீரினால் கழுவுவார். நான் நாள் முழுவதும் அழுது கொண்டும் சாப்பிடாமலும் இருந்த நாட்கள் உண்டு. ஏனென்று கூட கேட்கமாட்டார். ஆனால் ஏதாவது பார்ட்டிக்கு போனால் எல்லோருக்கும் முன் என் தோளில் கையை போட்டு அரவணைத்துக்கொண்டிருப்பார், என்னை முதலில் சாப்பிட சொல்லி வற்புறுத்தி எனக்கும் பரிமாறுவார். ஒருமுறை இவ்வாறு அடுத்தவர்கள் முன் நடிக்கும் போது தான் பொதுவிடத்தில் வைத்து அவரை கேள்வி கேட்டேன். இதுவே விவாகரத்து வரை சென்றது'  அதே வரிகளை மீண்டும் வாசித்து விட்டு இறுதி வரிகளை மட்டும் நீக்கிப்பாருங்கள். அநேகருடைய வலிகளை இது சொல்லும். ஆனால் என்ன 90 வீதமானவர்களுக்கு விவாகரத்தாகி இருக்காது அவ்வளவு தான். நம் குடும்ப மானம் முக்கியம்.. கல்லானாலும் புல்லானாலும் தாலி கட்டியவர் அல்லவா? இந்த கல்லுக்கும் புல்லுக்கும் தான் நெற்றியில் சிவப்பு பொட்டும் நெஞ்சில் நம் வீட்டுப்பணத்தில் வாங்கி கட்டிய தாலியும் சுமக்கின்றோம்.... நெஞ்சில் கூடவே கொஞ்சம் வலியையும் சுமக்க மாட்டோமா என்ன?

கூடவே அவர்கள் சொன்னதொரு விடயம் தங்கள் சமூகத்து ஆண்கள் இவ்வாறு விவாகரத்து ஆனாலும் 'தொடுகை தீட்டுகள்' பார்ப்பதில்லை என்பது. நம்முடைய படைப்புகளில் 'பெண்களை போற்றுகின்றோம்.. காண்பவற்றினையெல்லாம் பெண்களாகவே உவமிக்கின்றோம்.. நதிகள் முதல் புயல்கள் வரை பெண் பெயர்களை சூட்டுகின்றோம். ஆனால் நம் அருகில் நிற்கின்ற பெண்ணை மதிக்கின்றோமா? என்று நம்மையே கேட்டுக்கொண்டால் பதில்கள் மட்டும் மௌனமாக இருக்கும்...

ஆக நம்முடைய சமூதாயத்தில் மேலைத்தேய நாகரீகம் என்று சொல்லிக்கொண்டே உடையில், உணவில் மாற்றங்கள் உண்டாகி விட்டன. ஆனால் எமது குழந்தைகள் , பெண்கள் விடயங்களில் மட்டும் இன்றும் பல தசாப்தங்கள் பின் தள்ளியே இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது. 

இன்றிலிருந்தாவது நம் பெண் குழந்தைகளுக்கு மாமாக்களின் மடிக்கு தாவாமல்... ஒரு வேளை மாமாவோ, அண்ணாவோ , மச்சானோ எங்கே தொட்டாலும் அதை எம்முடன் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொடுப்போம்... அதே ஆண் குழந்தை என்றால் 'நீ சாண் என்றாலும் ஆண்' என்று சொல்லி வளர்க்காமல் 'உன் தங்கையே ஆனாலும் அவளுக்கு என்று உணர்வு, உன்னளவிலான உரிமை உண்டு' என்று சிறு வயதிலேயே 'பெண்'க்கு மதிப்பளிக்க பழக்குவோம்.  பயிரை மட்டும் காப்பதல்ல வேலியையும் நாம் தான் சீர்படுத்த வேண்டுமல்லவா??


சில கிறுக்கல்கள்

"அம்மா" உயிர் கொடுத்து
மெய் காக்கும்
உயிர்மெய்யானவள்
அ – உயிர்
ம் - மெய்
மா – உயிர் மெய்




உன்னை நானும்
என்னை நீயும்
தூறலிலிருந்து
காக்க குடையை
விட்டொதுங்கிய
நிமிடங்களில்
யாரைக் காப்பது
என்ற குழப்பத்தில்
முற்றாக
நனைகிறது அதுவும்...
நம்மை போலவே.....





Wednesday, June 25, 2014

A Separation

தன்னுடைய கணவனின் தந்தையை வைத்து பராமரிக்க முடியாது என மனைவி: தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தன்னை வளர்க்கும் தன் தந்தை தன்னுடன் தானிருக்க வேண்டும் என் வாதிடும் கணவன் என ஆரம்ப காட்சியே குடும்ப நீதிமன்றத்தில் இருவரும் வாதிடம் காட்சியுடனேயே ஆரம்பிக்கின்றது அஸ்கர் பிராடி (Asghar Farhadi)  இயக்கியுள்ள எ செப்ரேஷன் (A Separation) . 2011 இல் வெளிவந்த இந்த ஈரானிய திரைப்படம் குறித்த என்னுள்ளான தாக்கமே இப்பதிவு...

நீதிமன்ற காட்சியை தொடர்ந்து வீட்டுக்கு செல்லும் மனைவி தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுகின்றாள். அலுவலகம் செல்லும் தானும் பாடசாலை செல்லும் தனது 11 வயது மகளும் வெளியேறிய பின் தன் தந்தையை பராமரிக்க ஒரு வேலைக்கார பெண்ணினை நியமிக்கின்றான் கணவன். பாலர் பாடசாலை செல்லும் தன் மகளுடன் அந்த வயோதிபரை பராமரிக்க வருகின்ற அந்த வேலைக்கார பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. தன்னையே பராமரித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள அந்த வயோதிப தந்தையினை கடும் சிரத்தைக்கு மத்தியிலும் பராமரிக்கின்றாள் அந்த பெண். மூன்றாம் நாள் திடீரென வேலை விட்டு வரும் மகன் வீட்டில் யாரும் இல்லாதிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றான். உள்சென்று பார்க்கும் போது தன் தந்தை கட்டிலிலிருந்து விழுந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதை கண்டு கோபம் கொள்கின்றான். அந்த நேரம் பார்த்து வெளியிலிருந்து வரும் வேலைக்கார பெண்ணினை கோபத்துடன் கடுமையாக பேசுகின்றான். தான் இரு நாட்கள் வேலை செய்ததற்கான பணத்தினையாவது தரும் படி அந்தப் பெண் வாக்குவாதப்படுகின்றாள். ஏற்கனவே தந்தையின் நிலையினை பார்த்து குழம்பியிருக்கும் அவன் அவளை வெளியே தள்ளி கதவை சாத்திவிடுகின்றான். அடுத்த நாள் அந்தப் பெண் தன்னுடைய கர்ப்பம் கலைவதற்கு அவன் தான் என்று முறையிடுகின்றாள். பலவித வாக்குமூலங்கள் மற்றும் குழப்பங்களுக்கு பின் மனைவியே நேரடியாக அந்தப் பெண்ணை சந்திக்கின்றாள். 'கர்ப்பம் கலைவதற்கு காரணம் அவனல்ல அவளுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்து என்றும் தன்னுடைய கர்ப்பம் தன் கவலையீனத்தினால் கலைந்துவிட்டதை தன் கணவன் கேட்டால் ஆத்திரப்படுவான் என்று அவள் பொய் சொல்லியுள்ளாள்' என்பதனையும் அறிந்துகொள்கின்றாள். அந்தப்பெண்ணின் மேல் பரிதாபம் கொண்டு தன் கணவனிடம் 'நீ தான் காரணம் , பணத்தினை கொடுத்து சரி செய்துவிடுவோம்' என் பொய் சொல்லி பணம் கொடுக்கவும் ஏற்பாடு செய்கின்றாள். பணங்கொடுக்கும் முன் குறானில் சத்தியம் செய்யும் படி விவாகரத்து செய்யவுள்ள கணவன் கேட்கின்றான். பொய் சொல்லவும் முடியாமல் உண்மை சொன்னால் தன் கணவன் கோபப்படுவான் என்றும் மௌனம் சாதிக்கின்றாள் அந்த வேலைக்கார பெண். பிறகு என்னாகின்றது என்பதுடன் ஆரம்பத்தில் குறிப்பிட்ட கணவன் - மனைவிக்கான விவாகரத்திற்காக அவர்களுடைய மகள் யாருடன் போக தீர்மானிக்கின்றாள்? என்பதாக முடிவுறுகிறது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தில் என்னைப்பாதித்த இரு பாத்திரங்கள் விவாகரத்திற்காக விண்ணப்பித்த தம்பதிகளின் 11 வயது மகளும் வேலைக்கார பெண்ணின் 4 வயது சிறுமியும். இந்த நான்கு வயது குழந்தை தனக்கு ஒரு தம்பி வேண்டும் என்று மேடுட்டுள்ள தன் தாயின் வயிற்றை தடவி அந்த பெண் குழந்தை கேட்பதும், வயிற்றுள் குழந்தை அசைவதை தொட்டுணர்வதும் ... தன்னுடைய சித்திர கிறுக்கல்களில் எல்லாம் தனக்கருகில் குட்டி உருவம் ஒன்றை வரைவதும்... ஒருவிதமான கவிதை. வயோதிபரை பராமரிக்கும் தன் தாய் அவரை கழுவுவதற்காக குளியலறையினுள் செல்லும் போது ' அப்பாவிடம் சொல்ல மாட்டேன்' என்று சொல்லுமிடத்தில் அந்த சமூகத்தில் உள்ள ஆணாதிக்கங்கள் எவ்வாறு குழந்தைகளையும் அவர்கள் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கின்றன என்பதை சொல்லாமல் சொல்கின்றன. இரு குடும்பங்களும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருக்கும் போது உள் சென்று அந்த வயோதிப தந்தையுடன் இந்தக் குழந்தை கதைக்கும் காட்சி அவர்களது கள்ளமற்ற மனதை அழகாக காட்டி நிற்கின்றது. 

வயோதிப தந்தையை அவரது கடைசிக்காலத்தில் வைத்து பராமரிக்க வேண்டும், நியாயமற்ற முறையில் எதனையும் செய்யக்கூடாது என்று நினைக்கின்ற அப்பாவிற்கும், எப்பாடுபட்டாவது ஒரு பெண்ணின் எதிர்காலத்தினை காப்பாற்ற வேண்டும், அடுத்தவர் சந்தோஷத்திற்கான அதர்ம வழியில் போனாலும் பரவாயில்லை என்று நினைக்கின்ற அம்மாவிற்கும் இடையில் உணர்ச்சிகளுக்குள் சிக்கித்தவிர்க்கின்றதொரு பாத்திரம் 11 வயது பெண்ணுடைய பாத்திரம். அம்மாவும் நல்லவள் தான் என்று தெரிந்த போதும் அப்பா – மகளுக்கு இடையிலானதொரு பிணைப்பினால் தன் தந்தையுடன் தங்கிவிடுமுகின்ற அந்த வயதுக்கேயுறிய ஈர்ப்பினை அழகாக காட்டுகின்றார் அஸ்கர் பிராடி. இறுதியில் யாருடன் போக விருப்பம் என்று நீதிபதி கேட்கும் போது தடுமாறுகின்ற இந்தப்பாத்திரம் நிச்சயம் ஒவ்வொரு பெண் குழந்தைகளினதும் மனதினையும் அதன் போராட்டங்களை பிரதிபலிக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன். இதே ஒரு ஆண் குழந்தை எனில் இந்தளவு தடுமாற்றம் ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே...

நம்முடைய குழந்தை பருவத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்.. சிறு வயதில் யாராவது நம்மிடம் அம்மாவுடன் விருப்பமா? அப்பாவுடன் விருப்பமா? என்று கேட்டால் எமது பதிலினை அந்த நிமிடம் மட்டும் தான் கட்டாயம் தீர்மானிக்கும் ( அதட்டுகின்ற அம்மா தூரப்போய் சொக்லட் தருகின்ற அப்பா பதிலுக்கான விடையாகுவார் அல்லது அப்பாவிடம் அடிவாங்கி அழுகின்ற போது அரவணைக்கின்ற அம்மா பதிலாகிப்போவார்)  அதுவே சற்று பருவ வயதை அடைந்துவிட்டால் ஆணென்றால் 'அம்மா' என்றும் பெண்ணென்றால் 'அப்பா' என்றும் நம் பருவ உளவியல் ஆர்வங்கள் தீர்மானிக்கும்... நான் அப்பா பிள்ளை என்றோ அம்மா பிள்ளை என்றோ சொல்வதில் ஒருவித கர்வம் கூட இருக்கும்... இதே கேள்வி 16 வயதினை தாண்டியபின் யாராவது கேட்டால் சட்டென்று பதில் வராது சற்று நிதானித்தே அந்த பதில் வெளிப்படும். 25 வயதின் பின் கேட்கப்பட்டால்....? பல மௌன நிமிடங்கள் தேவை நம் ஒரு வார்த்தை பதிலுக்கு. அதில் கூட ஏகப்பட்ட தடுமாற்றங்கள் இருக்கும்... சொல்கின்ற பதில் கூட தனிமையில் நம்மை பல நேரங்களில் சிந்திக்க தூண்டும். சில வேளைகளில் இதற்கு பதில் தெளிவாகுவது கூட இல்லை. 

நம் தமிழ் சினிமாப்படங்கள் மட்டும் தான் என்றும் மகன் - தந்தை அல்லது மகள் - தாய் உறவு என எதிர்பால் உறவினை மையப்படுத்திய திரைக்கதைகளுடன் வெளிவருகின்றன. இதையே நம் படைப்பாளிகள் எடுத்திருந்தால் பெற்றோரின் கையை அந்தக்குழந்தை பிடித்துக்கொண்டு போவதாக அல்லது யாராவது ஒருவர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என் பஞ்ச் டயலொக் சொல்லி சேர்த்து வைப்பதாக தான் முடிவிருந்திருக்கும். ஆனால் நூற்றிற்கு தொன்னூறு குடும்பங்களில் இதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பது ஆய்வுக்குறியதொன்று... எ செப்ரேஷன் திரைப்படத்தின் இறுதிகட்டம் போன்று விடை தெரியா குழந்தைகளே அதிகம் என்பது என் கருத்து. திரைப்பட இறுதியில் கண்ணாடி தடுப்பிற்கு ஒரு பக்கம் தந்தையும் மறுபக்கம் தாயும் என முடிவுறும் இப்படத்தின் காட்சி போலவே மனதும் தராசு தட்டாக எந்தப்பக்கம் தாழ்வது என்று ஊசலாடிக்கொண்டிருக்கும்.

விவாகரத்தாகும் பெற்றோருக்கு இடையில் உணர்வுகளுள் சிக்கி தவிர்க்கும் குழந்தைகளின் மனநிலையை இதைவிட அழகாகவும் ஆழமாகவும் தெளிவாகவும் காட்டிட முடியாது என்று தான் கூறவேண்டும். அதைவிடவும் இதற்கு முடிவு எழுதாமல் எம்மிடமே அஸ்கர் பிராடி விட்டுவிடுகின்றது தான் இந்த திரைப்படத்தின் வெற்றி என்றும் சொல்ல வேண்டும். 

திரைப்படம் பார்த்ததிலிருந்து பல நாட்கள் இதன் தாக்கம் மட்டும் என்னுள் தொடர்கின்றது. இப்போது என்னையும் இந்த வினா கடந்து கொண்டு தானிருக்கின்றது... நாளை என் குழந்தையையும் இந்த கேள்வி கடக்கத்தான் போகின்றது... கூடவே உங்களையும்....

திரைப்படத்தினை பார்வையிடுவதற்கு A Separation

அதிகம் வாசிக்கபட்டவை