Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

மனசாட்சி


Vintage Lady Justice Oil ' Poster, picture, metal print, paint by Muntwalt  | Displate 

கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை மட்டும் விளங்கப்படுத்த வேண்டும், பாடத்தில் சந்தேகமிருந்தால் விரிவுரையாளருக்கான அறைக்கு வந்து தான் விளக்கம் கேட்க வேண்டும் என பல வழமையான “வேண்டும்” என்னுடைய கற்பித்தல் அகராதியிலில்லை. ஒரு மாணவியாக மேற்குறித்த “வேண்டும்” களை கடந்தவள் என்ற வகையில் எனக்கு இவற்றில் உடன்பாடில்லை. எமது ஆசிய நாடுகளில் ஒரு பிள்ளை வீட்டை விட்டு 4 அல்லது 5 வயதில் கற்றலுக்காக அடுத்த வட்டத்தினுள் நுழைகின்றது. பதின்மவயது வரை ஆசான்கள் தான் இவர்களது பண்புகளை, கற்றலின் கொள்ளளவினை தீர்மானிக்கின்றார்கள். அதன் பின்னர் தொழிற்பயிற்சி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையும் போது விரிவுரையாளர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆசான்களும் மாணவர்களை வழிநடத்துகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியானதே. என்னைப்பொறுத்தளவில் பாடங்களை கற்பித்தலை விடவும் முக்கியமானது மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியும் வழிநடத்தலும் என்பேன். இதனை நான் வளவாளராக பயணிக்கும் அல்லது விரிவுரையாற்றும் தரப்பினரிடையேயும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். என் மாணவர்களிடம் தோழியாக இருக்கவே நான் விரும்புவதுண்டு. 


இதனால் தானோ என்னவோ என் மாணவர்கள் தங்களுடைய அந்தரங்கங்கள், தனிப்பட்ட விடயங்களை கூட என்னிடம் பகிர்வதுண்டு. வகுப்பில் நுழைந்தவுடன் பாடம் எடுப்பதை விடவும் பதினைந்து நிமிடங்களாவது அன்று மனதில் எமக்கு தோன்றிய விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற உளவியல் அழுத்தங்கள் மற்றும் இதன் போதான உடல் நோவினை கூட என் மாணவிகளின் முகத்தினை பார்த்து ஓரளவாவது விளங்கிக்கொள்ள என்னால் முடிவதுண்டு. இதனை தாண்டி தனிப்பட்ட விடயம் சார் பிரச்சினை என்றாலும் கூட அவர்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும். ஏதாவது பேச வேண்டுமாயின் என் மாணவர்களும் தயங்காமல் என்னிடம் பேசுவார்கள், விரிவுரையாளர்களுக்கான அறை தாண்டி நூலகத்தில், தோட்டத்தில் அமர்ந்து கூட நாம் பேசிக்கொள்வதுண்டு, இதற்கு எம்மிடையான குறைந்தளவு வயது வித்தியாசமும் காரணமாயிருக்கலாம். என் சக விரிவுரையாளர்கள் கூட சில நேரங்களில் நான் மாணவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதாக பேசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் மரியாதைக்குறை ஏற்டும் என்பதும் மாணவர்கள் எம்மை மதிப்பது குறைந்துவிடும் என்பதும் அவர்கள் வாதம். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசானை பெயர் சொல்லி கூப்பிடுவது போன்று நாமும் ஆரம்பித்தால் நல்லது என்பதே என்னுடைய கருத்து.

இவை ஒரு புறமிருக்க கடந்த மாதத்திலிருந்து நான் கற்பதற்காக நாடு கடந்து வந்துவிட்டேன். எனினும் இணையவழி மூலம் விரிவுரையாற்றி வருகின்றேன். என்ன தான் பேசினாலும் நேரில் என் மாணவர்களுடன் பேசுவதையும் அவர்களை அவதானிப்பதையும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நான் அங்கு விரிவுரையாற்றி வந்த காலப்பகுதியில் என் மாணவியொருத்தி நல்ல கெட்டிக்காரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள் திடீரென சில நாட்களாக யோசனையுடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனியாக சந்தித்து பேசிய போது தான் ஒருவரை நேசிப்பதாகவும் அவரும் தன்னுடைய செய்கையில் தன்னை நேசிப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆனால் இருவரும் நேரிடையாக சொல்லிக்கொள்ளவில்லை எனவும் இது தனக்குள் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டாள். நேசிப்பென்பது தடால் என்று போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிடும் விடயமல்ல. இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுங்கள். அந்தப்புரிதல் ஆழந்த அன்பை, முதிர்ச்சியை இருவருக்குள்ளும் தோற்றுவிக்கும். அது ஒரு கணத்தில் தன்னை பரிமாறிக்கொள்ளும் என்றெல்லாம் பேசி ஒருவிதமாக அவளை தேற்றியிருந்தேன். அதன் பின்னர் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரீட்சை, என்னுடைய தனிப்பட்ட விடயங்கள், பயணங்கள் என இரு மாதங்களாக அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனூல் முகநூலில் “மிஸ் நீங்க சொன்னது சரி. நான் இப்போது படிப்பில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றேன்…” என்று கடந்த பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய பின் அனுப்பியிருந்தாள். இன்று அதிகாலையில் எழுப்பி தொலைபேசியினைப் பார்த்தால் அவளிடமிருந்து பல அழைப்புக்கள், ….. என்று குறுஞ்செய்தி வேறு.  இலங்கைக்கும் நான் தங்கியுள்ள நாட்டிற்கும் நேர வித்தியாசமுண்டு. நான் அழைப்புக்களை பார்த்த போது அங்கு இரவாயிருக்கும். பரவாயில்லை என்று எடுத்துப்பார்த்தால் அழைப்பு எடுக்கப்பட்டாலும் அந்தப்பக்கம் விம்மல் சத்தம். நானும் சில நிமிடங்கள் பேசாமலிந்த பின்னர் என்னவென்று வினவினால்…….. 

“மிஸ் நான் உங்களிடம் சொன்னேனே அவர் என்னைப் பற்றி ஒருவரிடம் தவறாக கதைத்துள்ளார்….. எனக்கு அவமானமாகவும் கவலையாகவுமிருக்கு….”


ஏன் அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா……? 

“ தெரியாது.. ஆனால் அவர் செய்தவை நடந்துகொண்டவை அப்படித்தான் இருந்தது…. திடீரென என்னை பொதுவில் அவமானப்படுத்த அல்லது நான் ஏதாவது சொன்னால் மட்டந்தட்டி பேச ஆரம்பித்தார். ஒருவேளை நான் விருப்பத்தினை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் தான் புரிதல் இன்றி அல்லது இயலாமையில் பொறுமையின்றி கதைக்கின்றார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் நண்பியிடம் தான் என்னை விரும்பவில்லை என்றும் நான் தான் அவர் பின்னால் விருப்பம் கேட்டுத் திரிந்ததாகவும் அவர் என்னிடம் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கின்றார். எனக்கு அவமானமாக இருக்கு…….”


இடையில் இருப்பவர்கள் கதைப்பது இருக்கட்டும் நீங்க இது பற்றி அவரிடம் பேசலையா….?


வட்ஸ்அப்பில் வொயிஸ் போட்ட நான் மிஸ், பார்த்திருக்கின்றார் என்று காட்டுகின்றது…ஆனால் அவர் பதில் போடல….   

இதே மாதிரியொரு சந்தர்ப்பம் என்னையும் கடந்திருக்கின்றது. இங்கு வட்ஸ்அப் அங்கு மின்னஞ்சல். வுpத்தியாசம் அவ்வளவே. வுலியெல்லாம் ஒன்று தான்…. ஆனால் இதற்காக மனவருத்தப்பட்டு, அழுது சற்று நாள் கழித்து யோசித்துப்பாருங்கள்… ஒருவருடன் வாழ்தல் என்பது சில நாட்களான விடயமல்ல. இன்றைய நாட்களில் சமூக ஊடக ஆதிக்கம் மற்றும் மனிதத்தொடர்புகள் மலிந்துபோய் விட்டன. உறவுகளுக்கிடையான நேர்மை தன்மை குறைந்துவிட்டது.


1.    முதலாவது நாம் ஒருவரை நேசித்தால் அவரை மட்டந்தட்டுவது, அவமானப்படுத்துவது , கோபப்பட்டு கத்துவது எல்லாம் எதனால்…? நீங்கள் அந்த உறவிற்கு நேர்மையில்லாவிட்டால் தான் இந்த இயல்புகள் உங்களை ஆக்கிரமிக்கும். கோபம் என்பது ஆண்மையல்ல. அது அதைரியத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் உச்சம்.  
2.    நாம் ஒருவரை நேசிக்க முன் அல்லது உறவுநிலைக்கு தேர்ந்தெடுக்க முன் ஆழமாக யோசிக்க வேண்டும். நம் வார்த்தைகளாலோ செய்கைகளாலோ ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர் அதை பூசிமெழுகுவது ஈனசெயல்.
3.    நம்பிக்கையை ஏற்படுத்தும் அதேவேளை திறந்த உரையாடல்களை மேற்கொள்வது, ஒருவேளை உங்களுக்கு கடந்தகால முரண்கள் இருப்பின் அதனை துணையாக வர இருப்பவரிடம் பகிர்வதே நாகரீகம். மற்றும் படி நுனிநாக்கு ஆங்கிலமும் உடுத்துகின்ற உடைகளும் அல்ல
4.    நமக்கு சரியென்று சொன்னால் புகழ்வதற்கும் இல்லை என்றால் அவமானப்படுத்துவதற்கும் அன்பு என்பது வியாபாரமல்ல. நம்மைவிட்டு பிரிந்தாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்குவதே மனிதம். 
5.    தவறான புரிதல், இடையில் நிற்பவர்களால் சொல்லப்படும் விடயங்கள் உங்களை ஏதோவொரு கணத்தில் உங்களை நேசிப்பவரைப்பற்றி பிழையாக பேச தூண்டிவிட்டது என வைத்துக்கொண்டாலும் ஒருவர் தன்னுடைய வலியை கண்ணீருடன் சொல்லும் போது உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தவில்லையா? குறைந்தபட்சம் என்னை மன்னித்தவிடு என்று சொல்வதில் நீங்கள் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. 
6.    ஒருவiர் அதுவும் நம்மை நேசித்தவர்களை (நீங்கள் நேசிக்கவில்லை என்றாலும்) காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் உலகத்திற்கும் சமூக ஊடகங்களிலும் நடிக்கின்றீர்கள் என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் மகாநடிகர். நீங்கள் இன்று செய்திருப்பது முதல் தடவையாக இருக்காது. பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர் வலியை இலகுவாக கடக்க முடியும். 
7.    நீங்கள் அடுத்தவர் கௌரவத்தினை குறைக்கும் போதும் அவர்கள் மீதும் கறைபூசும் போதும் இதனை நினைவில் வையுங்கள். இன்று நீங்கள் வென்று விட்டதாக தோன்றலாம் அல்லது நீங்கள் விம்பத்தினை உருவாக்கலாம். பிழையே செய்யாத நல்லவனாக நடிக்கலாம். ஆனால் காலம் சிறந்த நீதிபதி. அதன் கணக்கு என்றும் தப்புவதில்லை. நீங்கள் யாரை காயப்படுத்தினீர்களோ அவர்கள் வாழப்போகும் வாழ்வு உங்களை சுட்டெரிக்கும். நீங்கள் இழந்த வாழ்வை இன்னொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார். இதை விடவும் தண்டணை உங்களுக்கு ஏது….?
8.    சமூகஊடகமும், அதில் நீங்கள் வாழும் இரட்டை அர்த்த வாழ்வும் அல்ல வாழ்க்கை. ஒருவருடன் கைகோர்த்து நீண்ட பயணம் போவதும் வளமான தலைமுறையை உருவாக்குவதுமே வாழ்க்கை. இன்றைய விம்பங்கள் ஒரு நாள் உடையும், முதுமை உங்களை தழுவும். ஒரு பொழுதில் சாய்ந்திருக்கும் போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும். அதில் ஆனந்தமும் இருக்கும் வருத்தமும் இருக்கும். இந்த இரண்டில் வருத்தம் இருக்குமென்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று மட்டுமே அர்த்தம். 

9.ஒருவேளை ஒருவர் உங்களை நேசித்து கேட்டால் கூட ஆம்/ இல்லை என்று சொல்கின்றதை மட்டும் செய்யுங்கள். உங்களை கதாநாயகர்கள் என்று மற்ற ஆண்கள், பெண்கள் என நீங்கள் வழிபவர்களிடம் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்களை, அவர்களது சுயகௌரவத்தினை காயப்படுத்தாததீர்கள்.  


அன்புத்தோழியே, அதிகம் அழாதே.. கண்ணீர் விலை மதிக்க முடியாததொன்று அதனை உயரிவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும். கண்ணீர் இன்றி ஒரு உண்மைக்காதல் இருப்பதில்லை. ஆனால் அந்தக்கண்ணீரை துடைக்குமளவு கம்பீரமான, முதிர்ச்சியான ஒருவரை நாம் நேசிக்க வேண்டும். முதலில் மூன்றாம் நபரிடம் பேசியிருக்க கூடாது, அல்லது சுட்டிக்காட்டப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது இதனை சீர்செய்ய முதிர்ச்சியான நண்பர்கள், உறவுகளை வைத்து உன்னை தொடர்புகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத ஒருவரை தேடாதே அன்பே. இன்று நடுவில் விட்டுவிட்டு கறைபூசுபவர்கள் நாளை வாழ்க்கை நடுவிலும் விட்டுவிட்டு ஓடுவார்கள். அழகு, பணம், செல்வாக்கு, படிப்பு இவற்றைவிட பண்பும் மனச்சாட்சியும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு முக்கியம் தோழி. காலத்திடம் விட்டுவிடு. உண்மையில் அன்பிருப்பின் அது நம்மை சேர வழிதேடும். ஒருவேளை நம்மை தேடவில்லை எனில் நம்மை தேடாத அன்பு நமக்கெதற்கு……. ஒருவர் மீதான அன்பிற்காக குடும்பத்தை இழக்கலாம், பதவி, பணம், புகழ் இழக்கலாம் ஆனால் சுயகௌரவத்தினை மட்டும் இழக்கவே கூடாது. 


இதெல்லாம் தாண்டி இந்த உறவை உங்களால் தாண்ட முடியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள்.  இது உண்மையான அன்பு என்றால் அது வழியை கண்டுபிடித்து தானே வந்து சேரும். இது மனதை மட்டும் சாட்சியாக கொண்ட அன்பென்றால்.....
 


அன்பின் அம்மாவிற்கு.......



அன்பின் அம்மாவிற்கு

நான் இங்கு விடுதியில் நலம். நீங்க > அம்மம்மா> தம்பி எல்லோரும் எப்படியிருக்கிறீங்க? அப்பா இரண்டு நாளைக்கு முதல்ல என்னோட ஸ்கைப்பில கதைச்சவர். இந்த ஏப்பிரல்ல எப்படியும் லீவுக்கு ஒரு தடவை வந்து போக நினைக்கிறாராம். வீட்டுக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை கோல் பண்ணி கதைப்பாராம். அண்ணாவும் இரண்டு தரம் போனில் பேசினவர். எனக்கு எப்போது யுனிவர்சிற்றி லீவு விடும் என்றிருக்கின்றது. உங்கள் கையால் சாப்பிட்டு எத்தனை நாளாகின்றது அம்மா. லீவு விட்ட உடனேயே பஸ் ஏறிடுவேன்.

அம்மா இப்போதெல்லாம் காலையில் எழும்பும் போதே ஏதோவொரு பாரம் நெஞ்ச அழுத்துகின்ற மாதிரி உணர்கின்றேன். நீங்கள் சொன்ன விடயத்தை திரும்ப திரும்ப யோசித்து பார்த்த நான் அம்மா. எனக்கு கல்யாணம் கட்டின பிறகு வெளிநாடு போக விரும்பம் இல்லாமல் இருக்கு. இதத்தான் அன்டைக்கும் அப்பாட்ட சொன்ன நேரம் எனக்கு ஏசினவர். திரும்பவும் அப்பாட்ட சொல்ல எனக்கு பயமாக இருக்கு.
 

அம்மா முதல் ஒரு தடவை மாமாவுடன் அம்மமாக்கு மனத்தாங்கல் வந்த நேரம் “அம்மா என்னோட வந்து இருங்கோவன். நீங்க பொம்பிள பிள்ளையோட தானே இருக்கனும் என்னோட வந்து இருங்கம்மா” என்டு தானே சொல்லி நம்மட வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தனீங்க. நாளைக்கு நானும் வெளிநாட்டுக்கு போய்ட்டா நீங்க யாரோட போய் இருக்க போறீங்க? எனக்கு வெளிநாட்டுக்கு போய் படிக்க சான்ஸ் கிடைச்ச நேரம் நீங்களும் அப்பாவும் அங்க தனியா பொம்பள பிள்ளைய அனுப்பேலா என்டு தானே என்ன தடுத்தனீங்க? இப்ப மட்டும் தனியா அனுப்ப போறீங்களா? இத அண்டைக்கும் நான் சொன்ன நேரம் “அது வேற இது கலியாணம் கட்டிப்போற விஷயம் வேற” என்டு அப்பா சொன்னவர். என்னோட ஸ்கூல்ல படிச்ச வித்யாவ உங்களுக்கு ஞாபகம் இருக்கு தானே. அவளுக்கும் வெளிநாட்டாள் ஒராள தான் கல்யாணம் கட்டி அனுப்பினவங்க. அங்க போன பிறகு தான் அந்தாளுக்கு வேற ஒரு குடும்பம் இருக்கிறது தெஞ்சதாம். இப்ப அவள் தனியா வேறயா தான் இருக்கா. எனக்கு அவள்ட கதைய கேட்டதுல இருந்து பயமாயிருக்கு அம்மா.

நான் ஒருக்கா தனியா இரவு பஸ்ல கொழும்புல இருந்து மட்டக்களப்புக்கு வந்ததுக்கே அண்ணாச்சி எனக்கு ஏசினவன். இப்ப எப்படி என்ன அவ்வளவு தூரத்திற்கு அனுப்ப போறீங்க? புதுசா வந்தவற நம்பியோ அனுப்ப போறீங்க? அண்டைக்கு அவங்கட ஆக்கள் வீட்ட வந்த நேரம் அவரு படிச்சிருக்காரு , பீ.ஆர் இருக்கு என்டெல்லாம் சொல்லி கூட சீதனம் கேட்டவங்க என்டும் சாதியப் பத்தி விசாரிச்சவங்க என்டும் அவங்க கதைச்சத தம்பி சொன்னவன் அம்மா.  என்னத்த படிச்சி என்ன? வெளிநாட்டில இருந்தென்ன இன்னம் சாதிய, சீதனத்த பத்தி கதைக்கிறவங்களோடயா என்ன தனியா அனுப்ப போறீங்க? அவரும் இஞ்ச மொறட்டுவயில தானே எஞ்சினியறிங் முடிச்சவர். நானும் அதே யுனிவசிற்றில அவர் படிச்சத தானே படிக்கிறன். பிறகென்ன? ஒரே படிப்பு, ஒரே யுனிவர்சிற்றி அப்பென்டா ஒரே செலவு தானே? பிறகென்னத்துக்கு அவருக்கு படிப்பிச்ச செலவென்டு சீதனம் கேக்கிறாங்க?

என்ட போட்டோவ பார்த்து நிறங்குறைவா இருக்கன்னு சொன்னவங்க என்டு நீங்க வாங்கித் தந்த கீறீம் ரெண்டு மூனு நாள் போட்ட நான் அம்மா. படுக்கக்குள்ள பிசுபிசுப்பா இருக்கு இப்ப நித்தாட்டிட்டன். அவர்ட போட்டோவயும் நான் மெயில்ல பார்த்த நான். அங்கத்தைய கிளைமெட்டால அவர் கொஞ்சம் கலரா இருக்காரு. நம்ம ஊரு வெயிலுக்கு நான் இந்த கலர்ல தானே இருப்பன். அவங்களுக்கு வெள்ளப் பிள்ள தான் வேணுமென்டா வெள்ளக்காரிய கட்றது தானே. என்னத்துக்கு நம்மட நாட்டுல தேடுறாங்க? அல்லாட்டி இங்சருந்து போய் இப்ப வெளிநாட்ல இருக்கிற பிள்ளைய பார்க்கிற தானே..?

அண்டைக்கு வீடு மாறின நேரம் அம்மிய இறக்கக்குள்ள கீழ விழுந்ததுக்கு கவலப்பட்ட நீங்க தானே இது பரம்பர சாமான் என்டு. என்னத்துக்கு இதெல்லாம் சேத்து வச்சிருக்கீங்க? என்னைய வெளிநாட்டுக்கு தான் அனுப்ப போறீங்க என்டா இந்த அம்மி, உரல் எல்லாம் என்ன செய்யப் போறீங்க? இப்பவே யாருக்கும் குடுங்களன். இஞ்ச எனக்கு காச்சல் என்டா ஓடி வந்து கூட்டிட்டு போறீங்க… அங்க போனா என்ன செய்யப் போறீங்க?

நான் தர்க்கம் செய்றன் என்டு நினைக்காதீங்க அம்மா. எனக்கு உங்கள எல்லாம் விட்டுட்டு போக விருப்பமில்ல. அண்ணாக்கு நம்மட நாட்டில தானே கலியாணம் பாக்கிறீங்க.. அத போல எனக்கும் இஞ்சயே பாருங்க.. நான் எப்பவும் அண்ணாவோட பைக்கில ஊர் சுத்தனும், தம்பியோட நிறைய சண்ட பிடிக்கனும்,  அப்பாட்ட பிடிவாதம் பிடிச்சி சாதிக்கனும், உங்கட கையால சாப்பிடனும்.

எல்லாத்தயும் விட என்ட பிள்ளையல நீங்களும் அப்பாவும் வளர்த்து தறனும். உங்க இருவருக்கும் வயசான காலத்தில நான் உங்கள வைச்சு பார்த்து என் கடன் தீர்க்கணும். ப்ளீஸ் அம்மா அப்பாட்டயும் பேசிப்பாருங்களன்.

அம்மா கிணத்தடில நான் நாட்டின வாழ மரம் குலை போட்டிருக்கென்டு தம்பி சொன்னவன். ஒருக்கா முத்திட்டா என்டு பாத்துக்கொள்ளுங்க. உங்களுக்கு போன முற சுகர் கூடவாம் என்டு கேள்விப்பட்டன். நிறைய இனிப்பு சாப்பிடாதீங்க… வந்து குறிஞ்சா சுண்டல் செஞ்சு தாறன். இதோட ஆயிரம் முத்தங்கள் தந்து இந்த கடிதத்த முடிக்கிறன்.

அன்பு மகள்

மீரா

(கடந்த கால யுத்தத்தினாலும் அதனை சாக்காக கொண்டும் புலம்பெயர்க்கப்பட்ட எம்மினத்தின் இருப்பு வேறாகிவிட்டதால் இந்த தலைமுறையில் திருமணத்தினால் புலம்பெயர்க்கப்படவுள்ள என் இன பெண்களுக்கு இது சமர்ப்பணம்)


பிரான்ஸ்லிருந்து வெளிவருகின்ற ஆக்காட்டி இதழில் வெளியாகிய என்னுடைய படைப்பு... 

ஒற்றையடி பாதை.....

தொலைந்து….
தொலை தூரம்…
போய்விட துடிக்கின்ற இதயம் - உன்
தொலைபேசி பிரியங்களில்
மீண்டும் உனக்கான
அடம்பிடித்தல்களில் தான்
புதைந்து போகின்றது….

ஊமைப் பொழுதுகளில்
தனிப்பாதை வகுக்க
நினைக்கும்
நிமிடங்களில்
ஆழ்மனதிலிருந்து
அமிழ்ந்திருந்த பந்தாக
விளிம்பை
எட்டிப்பிடிக்கின்றன - உன்
நினைவுகள்…..

பாலைவனத்தில்….- என்
பாதச்சுவடுகள்
பாதி தூரம்
கடந்த பின்….
பசுமை கரங்கள்
நீட்டுவாய்
அந்த
தழுவல்களுள்
ஒளிந்து கொள்கின்றேன் நான்…..

கோபங்களும் - என்
வலிகளுடனான
உணர்வுகளும் - உன்னை
வலிக்க வைக்க
கோர்த்த வார்த்தைகளும்
கண்ட பொழுதில்
கண்ணீராகித்தான்
கரைகின்றது……

எப்படியோ....
பாதைகளற்ற – என்
வனாந்தர வாழ்விற்குள்
புகுவதற்கான
ஒற்றையடி பாதையை
கண்டறிந்து கொள்கின்றவன்
 நீ….

மீண்டும்
விலகுவாய்…
வலி தருவாய்….
அலட்சியம் செய்வாய்....
என்று புரிந்தும் - நீ
கண்டுபிடித்து வரும்
ஒற்றையடி பாதையின்
முடிவில் காத்திருப்பேன்….. – உன்
நிமிட பிரியங்களுக்காக….

என்னை ஏமாற்றியவள் பற்றி உங்களுக்கு சொல்லி நியாயம் கேக்கலாம்.....

கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்து பல இணையத்தளங்களிலும் வெளிவந்து கொண்டு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்த ஒரு விடயம் இளைஞன் ஒருவனின் தற்கொலையும் அவன் முகநூலில் இறக்கும் முன் இட்டிருந்த பதிவும்…. இங்கு அவன் தற்கொலை பற்றிய விமர்சிப்போ அல்லது அந்தப்பெண் பற்றிய நியாயப்படுத்தல்களோ பற்றியதில்லை இப்பதிவு. அந்த இளைஞர் பதிவிட்டிருந்த விடயத்தில் காணப்படுகின்ற சில நெருடல்கள் பற்றி பேசுவதே இதன் நோக்கம்.

இவள் பத்தாம் வகுப்பு(2006) படிக்கும் போது இவளுடைய உறவினர் ஒருவரை காதலித்தால் அவனுக்கு அச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது இவள் அதற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளிநாடு செல்லும் படியும் சொன்னதை கேட்டு அவனும் இவளது விருப்பப்படியே வெளிநாடு சென்றுள்ளான்  இந்த பந்தியினை எடுத்துக்கொள்ளுங்கள் அந்தப்பெண் பத்தாம் ஆண்டு படிக்கும் பொது கூறியதை கேட்டு ஒரு இளைஞன் முடிவெடுத்திருக்கின்றான் இது தான் இப்பந்தியின் சாராம்சம். புத்தாம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கு வயது நிச்சயம் 15 இனை தாண்டியிருக்காது. புதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஒருவரைத்தான் “வயது வந்தவர்” என்ற வரப்பிற்குள் சேர்க்கின்றோம். அதற்கு கீழ்ப்பட்டவர்கள் குழந்தைகள் என்ற வகைக்குள்ளேயே உள்ளடக்கப்படுகின்றனர். பல்கலைக்கழக அனுமதி பெறுகின்ற ஒருவர் 18 வயதினை தாண்டியிருப்பார் என்பது இலங்கை கல்வி அமைப்பின் கட்டாய நிகழ்வு. ஆக வயது வந்த நபர் ஒருவர் குழந்தை ஒன்றின் சொல்லுக்கு இணங்கி தனது முடிவினை மாற்றியிருக்கின்றார். ஒரு குழந்தை நம்மிடம் நஞ்சு போத்தலை கேட்டோ அல்லது பாலத்திலிருந்து குதித்து காட்டு என்றோ அடம்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதனை நாம் செய்வோமா?

பின்னர் 2013 March மாதம் முதல் Phone இல் தொடர்புகளை ஏற்படுத்தினோம். ஆனாலும் பிரதீபனுடன் கதைப்பதால் என்னுடன் கதைப்பது மிகக்குறைவு. பின்னர் May மாதத்திலிருந்து பிரதீபன் இவளை விட்டு செல்ல என்னுடன் கதைப்பது அதிகமாயிற்று   இதில் இரண்டாவது வரியை பாருங்கள் “குறிப்பிட்ட நபருடன் கதைப்பதால்….” இதை வாசிக்கும் போது தற்கொலை செய்த இளைஞனுக்கு இந்தப்பெண்ணின் காதல் பற்றி முன்னரே தெரிந்துள்ளது என்பது தெளிவாகின்றது. ஒருவேளை "காரணம் தெரியாது இருந்திருக்கும். இங்குள்ள காலவிகுதிகள் அவசரத்தில் டைப்செய்ததால் இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம்" என்று நீங்கள் சாதிக்க கூடும். ஆனால் இந்த இளைஞர் மாதங்களையும் குறிப்பிட்டு கூறியுள்ளதால் இவர் அந்தப்பெண்ணுடனான உறவில் ஏற்பட்டிருந்த விரிசலினை மனதால் ஆவது உணர்ந்துள்ளார் என்பதை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அவர் குறிப்பிட்டுள்ளதன் படி தனது காதல் அந்தப்பெண்ணுடன் அரும்பி இரு மாதங்களுள் வித்தியாசத்தினை உணர்ந்த இந்த இளைஞன் ஏன் உடனேயே விலகவில்லை என்பது இங்கு பெரியதொரு கேள்விக்குறி.

இவ்வாறு இருந்த போது 2013 September இல் இவளுடைய முதல் காதலனின் நண்பி ஒருவர் மூலம் இவளைப்பற்றி தெரிந்து கொண்டேன். (அப்போது இவளுடைய முதல் காதலனுடனும் கதைத்தேன் அவனும் இவள பற்றி சொல்லிஇ இன்னொரு கசநைனெ கிடைக்க உங்களையும் விட்டிடுவாள் எண்டு சொன்னான். நான் இல்லை அவள் என்னோடு ஒழுங்காக பழகுகின்றாள் அப்படி செய்ய மாட்டாள் என்றுசொன்னேன்.)
  இதற்கு முன்னராக நான் மேற்கோள் காட்டியுள்ள இளைஞனின் கூற்றுக்கும் இந்தப்பந்தியில் சுட்டியுள்ள பகுதிக்குமான விலகலினை நன்கு அவதானிக்கலாம். முன்னர் விலகலினை உணர்ந்ததாக கூறும் இளைஞர் இந்தப்பந்தியில் “என்னுடன் ஒழுங்காக பழகினாள்” என்று பல்டி அடித்துள்ளார். இன்னொரு விடயம் ஏப்ரலில் ஹோமா ஸ்டேஜ் க்கு போனதாக சொன்ன முன்னாள் காதலனுடன் செப்டெம்பரில் பேசியுள்ளார் என்பதினையும் கவனிக்குக.

இப்படி எத்தனையோ புரியாத கேள்விகளும் நெருடல்களும் உள்ள போதும் தந்தையுடன் பேசிய போது அவர் சொல்லியதாக சுட்டப்படுகின்ற “செல்ல பிள்ளை” என்கின்ற விடயத்தினை வாசிக்கும் போது பல பிள்ளைகளை வழிநடத்துகின்ற பாடசாலை அதிபர் ஒருவரின் பொறுப்பற்ற பதில் அவர் மீது ஆத்திரத்தினை தான் ஏற்படுத்துகின்றது. எல்லாப் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு “செல்லமானவர்கள்” தான் ஆனால் தன் பிள்ளையை கண்டித்தும் அவளது நடவடிக்கைகள் குறித்து விழிப்பாயிராததுடன் அவள் பிழையை நியாயப்படுத்தும் ஒரு தந்தை எவ்வாறு பல்லாயிரம் மாணவர்களை வழிநடத்தப்போகின்றார்?

கிருத்திகா ராஜசேகரம்!  எத்தனையோ பெண்கள் அநியாயமாக உடல் உள சமூக ரீதியாக சிதைக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்காக எத்தனையோ பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வினையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவ்வாறான அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் உன் போன்றவர்களது கேவலமான நடவடிக்கைகளால் தான் இன்றும் “பெண்” என்றால் இப்படித்தான் என்று ஒட்டுமொத்த சமூதாயமுமே முத்திரை குத்தப்படுவதாக நினைக்கின்றேன். இப்படியிருக்கும் நிலையில் உனது தந்தையின் பதவி, பண, அரசியல் செல்வாக்கில் உன் சுயங்கள் மறைக்கப்படலாம். ஏன் ஒருவேளை வெளிநாட்டிற்கு வாழ்க்கைப்பட்டு போய் கணவன் பிள்ளைகள் என்று வாழக்கூடும் ஆனால் மனதுள் நீ தினம் தினம் தூக்குக்கயிற்றில் தொங்கப்போகின்றாய் என்பது மட்டும் உண்மை

நிரூபனிடம் இறுதியாக சில வினாக்கள்…. ஒரு வருடம் பழகிய காதலை மறக்க முடியாமல் தூக்கிட்டு உன்னை மாய்த்துக்கொண்டாயே பல மாதம் வயிற்றிலும் பல வருடங்கள் மனதிலும் சுமந்த பெற்றோருக்கு நீ என்ன கொடுத்துள்ளாய்? நீ மட்டும் செய்தது துரோகமில்லையா? என்று கேட்க தோனுகின்றது.

தற்கொலை என்பது ஓரிரு நிமிட உந்ததலின் முடிவென்று உளவியல்  சொல்கின்ற போது தகவல்களை திரட்டி , அதை மின்னஞ்சலில் அனுப்பி, முகநூலில் 188 போட்டோக்களை பதிவேற்றி விட்டு தொங்கிய இந்த இளைஞனின் “நிதான தற்கொலை” பெருவியர்ப்பே! காதலில் ஏமாறாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. தோல்விகளுக்கு “தற்கொலை” தான் முடிவெனில் உலகில் யாருமே 19 வயதினை தாண்டிட முடியாது. (முதல் தோல்வி அநேகமாக நம்மை தொடும் வயது எல்லை இது என்பது என் கணிப்பு)

என் மனதுள்ளான கேள்விகள், இளைஞனின் கோழை முடிவு , பெண்ணின் சுயம் குறித்த விமர்சனங்களை தாண்டி நேற்று அவனது இறுதி கிரியை செய்யும் அவன் தகப்பனை பார்த்த போது மனதுள் ஏதோவொரு இனம் புரியாத வலி பரவியது மட்டுமல்ல அவனது தோற்றத்தினை பார்க்கும் போது என் தம்பியின் விம்பமும் மனதுள் வந்து போனது.

நனைந்திடவே விரும்புகின்றேன்…

கருமுகில்களை
மழைத்துளிகளையும் - அதில்
முழுவதுமான நனைதலையும்
நேசிக்கின்றேன்….
இயற்கையை அனுபவித்திடவல்ல!!!

அம்மாவின் திட்டுக்களை
பாட்டியின் அதட்டல்களை
கசாயத்தின் கசப்பையும் – மீறி
நனைந்திடவே விரும்புகின்றேன்…
பிடிவாதத்தினாலல்ல…..

பையில் குடை இருப்பினும்
ஒதுங்கிட இடமிருப்பினும்
அனைத்து செல்ல உறவிருப்பினும்
நனையவே முற்படுகின்றேன்
நனைதலை ரசிப்பதற்கல்ல

உன்னாலான வலிகளை – என்
நனைந்த விழிகள்
காட்டிட கூடாதென்பதற்காகவே
தினமும் நனைகின்றேன்!!!
(25.02.2014)

மௌன நிமிடங்கள் அழகானவை





உணர்வுகளை கொல்லும்
உறவுகளை விட
ஊமைக் கணங்கள்
அர்த்தமானவை!
பாசங்கள் எல்லாம்
வேஷங்கள் ஆகி
புனிதங்கள் புதைவதை விடவும்
பொய்யான சிரிப்புகள்
புறமுதுகின் குத்தல்கள்
பழி தீர்க்கும் நட்புகள் - அது
கொடுக்கும் கண்ணீர் துளிகள்
இவைகளை விடவும்
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கின்றது……. - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!

இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளை தொலைவிட்டேன்
ஏமாற்றங்கள் பழக்கமாகி விட்டன
இவையாவும் - என்
நாட்குறிப்பின் வெறும்
புள்ளிகளே இன்று….  -
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!

மீண்டும் என்
வார்த்தைகளை தேடாதீர்கள்…
மீண்டாலும் அவற்றுள்
உயிர்ப்பிருக்கப் போவதில்லை
நீண்டாலும் அதில்
உணர்விருக்கப் போவதில்லை
கானல் நீரை விடவும்
காணாமல் இருப்பது நன்று…
என் புன்னகைக்காக
ஏங்குவதாக புழுகாதீர்கள்
புண்களை மறைத்து
நகைப்பதை விட
பூசிமெழுகி நடிப்பதை விட
புன்முறுவல் தொலைத்த – என்
உதட்டசைவுகள் போதுமானவை!!
எனக்கு புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!












மௌன அஞ்சலி


செய்த பின் தான்
ஞானம் உதித்தது - கூடவே
மனதும் வலித்தது…
எனக்குத் தெரியும்
உன்னைப் இனிப்பெறுவதென்பது
முயற்கொம்பென்று…
திட்டமிட்டு செய்யவில்லை
திடீரென்று தான் நிகழ்ந்தது…

மலரைப் பறித்தாலும்
மனம் பதைபதைப்பவள்… - இன்று
உன்னை…..
மன்னித்துவிடு!
என் ஒரு நொடித் தவறு…
நொடித்து விட்டது
உன் வாழ்வை…

என் சமாதானங்கள்….
சமாளிப்புக்கள்…
வாதங்கள்…. – உன்னை
மீட்டுத் தந்திடுமா….?

என் கண நேர அவசரம்….
எத்தனை கனவுகளோ உனக்குள்….?
காதலியிருக்கிறாளா…?
கறுப்பான உனக்குள்ளும்
என்னனென்ன கவலைகளோ…?



உன் இறுதி நிமிடங்களில்
என்ன நினைத்தாய்...?
சாபமிட்டாயா?
இல்லை சாதித்த
திருப்தியுடன் போய் சேர்ந்தாயா...?


என் தவறா…?
படைப்பின் புதிரா…?
பேனை புள்ளியென்று…
தொட்டுவிட்டேன் - சிறு
பூச்சி நீ…. செத்துவிட்டாய்…
கொலை செய்திட்ட
உறுத்தலுடன் மூடுகிறேன்
நாட்குறிப்புடன் கூடவே
என் விழிகளை….- உன்
அகால மரண
மௌன அஞ்சலிக்காக….





(அண்மையில் புத்தகத்தில் இருந்த புள்ளியென்று நினைத்து பூச்சியை நசுக்கிவிட்டேன். அன்று பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது அதன் விளைவே இது..)









மனப்பொருத்தம்....



என்னவர்களே…
எப்படியோ எடுத்துவிட்டீர்கள்….
எனக்கான மாப்பிள்ளை..
என் வைரக் கூண்டை
தெரிந்துவிட்டீர்கள்……

செல்வாக்குக்கேற்ப செருக்கானவன்
பதவியுடன் பவிசானவன்
பார்த்தவுடன் பத்திக்கொள்ளும்
ஆணழகன்…
சாதி சமயத்திலும்
சரிநிகரானவன்…
பல்லிடங்கள் விசாரித்தளவில்
பண்பானவன் - ஜாதகத்தில்
பத்துக்கு ஒன்பது பொருத்தம் வேறு…

அன்று - என்
பிடிவாதங்கள்
பட்டினிகள்
பிராத்தனைகள்…. - மீறி
பந்தல் வரை வந்துவிட்டீர்கள்
பல மைல் தூரத்திற்கு
அனுப்பியும் விட்டீர்கள்….

பத்தில் குறைந்த
அந்த ஒன்று….
மனப்பொருத்தம்
என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிகாலையில்
அம்மாவின் நெற்றி முத்தத்தில்
பூக்குவியலாய்
கண்மலரும் நான்… - இன்று
தினமும் கசங்கிய மலராய்
திடுக்கிட்டுத் தான் முழிக்கின்றேன்…

அப்பா ஊட்டும்
கவளச் சோற்றுக்கு
ஆவென வாய் திறக்கும்
செல்லப்பெண்…… - இன்று
கண்ணீருடன்….
யாருமற்ற அரண்மணையில்
தனியாக பிசைந்து
கொண்டிருக்கின்றேன் கண்ணீருடன்
காலையுணவை….

வைத்தியரிடும் ஊசிக்கு
ஊரைக் கூட்டிய நான்….
உப்பில்லையென்று எந்;நேரம்
உணவுத்தட்டு என்னைத் தாக்குமோ.. –என்று
உணர்வற்று நிற்கின்றேன்…

தெரியாமல் என்னை உரசியதற்கே
அண்ணா பலரை
வதம் செய்திருக்கின்றான்….. - இன்று
வாங்கிய கன்னத்து
அறைகள் வலித்தாலும்
வரைகின்றேன் மடல்
நலம் என்று…..

தம்பி எத்தனை
தடவை என்னைச் சீண்டுவான்
ஒரு நாளில்……
இப்போதெல்லாம் என்
பொழுதுகளை
தனிமைகளும்
மௌனங்களுமே
அலங்கரிக்கின்றன…

என்னை
மீண்டும் நம்
வீட்டிற்கு கூட்டிப் போக மாட்டீர்களா?
இந்த வைரக்கூண்டு
எனக்குப் பிடிக்கவில்லை…















கண்ணீர்

உன்னை காயப்படுத்துபவர்களுக்காக கண்ணீர் சிந்தாதே
உண்மையாக நேசிப்பவர்கள் உன்னை காயப்படுத்தமாட்டார்கள்

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை