அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……06

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Hug Day 2023: Wishes, Quotes, And Messages For Your Special One 

குடும்ப உறவுகளாயிருக்கலாம் வாழ்க்கைத்துணையாக இருக்கலாம் ஏன் கூட பயணிப்பவர்களாயிருக்கலாம் உணர்ச்சி நெருக்கமும். “உனக்கு நானிருக்கின்றேன்” என மனதார கொடுக்கின்ற உறுதியும் மிக முக்கியமானது… அவசியமானம் கூட… 

இந்த நெருக்கத்தினையும் உறுதியையும் கொடுப்பதில் “ அணைத்தல்” என்பது முக்கியமானது. குழந்தையாயிருக்கும் போது நம்மால் எமது உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றியிருக்கும் போதும் தாய் அணைத்துவிட்டால் அடங்கிபோயிருப்போம். அடுத்து சகோதரர்கள்…. புல ஆண் சகோதன்களுக்கு ஒரேயொரு பெண்ணாயிருந்து பாருங்கள். ஆண்களின் அணைப்பின் விகல்பங்கள் உங்களுக்கு தெரியாது. ஏன் என்றால் சகோத அணைப்பில் இருக்கும் மெல்லிய கதகதப்பும் ஆறுதலும் போதும் நீங்கள் நள்ளிரவில் கூட நடுத்தெருவில் தனித்து நடப்பதற்கு! அடுத்து துணையின் அணைப்பு. நாம் தடுமாறுகின்ற போது….. ஆழ்ந்த கவலையில் இருக்கும் போது… யாராவது உதவ வரமாட்டார்களா என்று உணர்வு ரீதியாக தடுமாறும் போது நம்மை அணைப்பது தான் துணை! இந்த ஆறுதலை தரமுடியாத எந்த மனிதனும் மனுஷியும் “அன்பு” என்கின்ற பந்தத்தினுள் இணையவே கூடாது. பேசாமல் தூணை கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். 

 அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1405 

இனிய நாட்குறிப்பே….
நீண்ட நாட்களின் பின் உன்னில் கிறுக்குகின்றேன். இந்த ஆறு மாதத்தில் வீட்டில் எத்தனை மாற்றங்கள். அப்பாவின் இழப்பிற்கு பின்னர் அம்மாவுடன் இணைந்து இந்த குடும்பத்தை நடத்தியது பெரியண்ணா,  சின்ன அண்ணா தான். நாம் அத்தனை பேரும் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு அச்சாரம் அவாகள்; தான். சின்ன அண்ணா சிறு வயதில் இருந்தே அதிகம் பேச மாட்டார், எம்முடன் பகிடி பண்ண மாட்டார், எந்நேரமும் படிப்பு, வாசிப்பு. வளர்ந்த பின்னர் கூட எம்முடன் அதிகம் அலட்டுவதில்லை. ஆனால் எம் ஒவ்வொருவருக்கும் என்னனென்ன எப்போது செய்ய வேண்டும் என்பது அவருக்குத்தெரியும். நாம் கேட்காமலேயே அதது உரிய நேரத்தில் நடக்கும். மற்ற சகோதரன்கள் என்னுடன் சேட்டை விடுவது, அழவைப்பது என்று இருப்பது போல் இவர் இருப்பதில்லை. இவர் முன்னாள் மற்ற நால்வரும் என்னை சீண்ட கூட மாட்டார்கள். அவ்வளவு பயம், மரியாதை. இவர்கள் என்னை சீண்டினால் பழிவாங்குவதற்கு அண்ணா வரும் வரை காத்திருந்து தான் பொய்யாக அழுது இவர்களை ஏச்சு வாங்க வைத்து கடைசியில் அண்ணாவுடன் ஊர் சுற்றி பொருட்கள் வாங்கி வருவதுண்டு. 

உயர்தரம் படித்துக்கொண்டிருந்த போது ஒருமுறை என்னை கூட்டிச்சென்று இவர் தான் என் வருங்கால துணை என்று முதலில் எனக்கு அறிமுகம் செய்தது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. பின்னர் தான் வீட்டிற்கு கூட்டி வந்து ஏனையவர்களுக்கு அறிமுகம் செய்தார். எனக்கு சின்னண்ணியை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அவர் சிங்களவர், பௌத்தமதத்தினை சார்ந்தவர். எங்களனைவருக்கும் இன்னுமொரு அம்மா. அவர்களது திருமணம் இரு சமயத்திலும் நடந்தது, எட்டு வருடங்கள் காத்திருந்து குழந்தைகள் கிடைத்தது எல்லாம் இன்னும் வற்றாத நினைவுகள். எட்டு வருடங்கள் காத்திருந்ததற்கும் சேர்ந்து ஒரே தடவையில் மூவர். அண்ணி அடிக்கடி எங்கள் குழந்தைகளில் ஒருவரை உன் குழந்தைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பகிடியாக கதைப்பதுண்டு. குழந்தைகளை வீடியோ அழைப்பில்; முதன் முதல் காட்டும் போதும் அது தான் சொல்லி சிரித்தார். நானும் பகிடிக்கு அப்போ எங்களுக்கும் மூவர் ஒன்றாக பிறக்க வேண்டும் என்று பதில் சொல்லியிருந்தேன். ஆனால் ஒரு மாதத்திலேயே அவர்கள் குழந்தைகளை எம்மிடமே கொடுத்துவிடுவார்கள் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. 

விபத்து என்பது எவ்வளவு கொடியது. அதிலும் பல மைல் தூரத்தில் எம்மவர்கள் உயிரிழந்திருக்கும் போது அதன் தாக்கம் தான் எத்தகையது…. அண்ணா- அண்ணி எம் முன்னால் சண்டையிட்டு பார்த்தில்லை நாம். இருவரும் எவ்வளவு தான் பணியிருந்தாலும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்னியோன்யம். மரணத்திலும் சேர்ந்து தான் போய்விட்டார்கள், பிரசவம் பார்க்க போயிருந்த அம்மா விபத்தை அறிந்து நெஞ்சுவலியில் வைத்தியசாலையில்… இந்த நாட்கள் கனவாக மட்டும் இருக்க கூடாதா என்று நினைக்கின்றேன். என்னை யாரும் கிள்ளியெழுப்பி கனவிது என்று சொன்னால் நன்றாகவிருக்கும். 

அம்மா மிகவும் உடைந்திருக்கின்றார். அது இலகுவில் ஆறாத வலி என்று எனக்கும் புரிகிறது. ஆனால் குழந்தைகளுக்காவேனும் அம்மா வேணும். அண்ணி மருமக்கள் தருவேன் என்று சொல்லி இன்று என் கையில் இரு மகன்களையும் மகளையும் தந்துவிட்டார். குழந்தைகள் எப்போதும் இனிமையாக சுமை தானே…. இந்தப்பக்கத்தில் கிறுக்கிக்கொண்டிருக்கும் போது குழந்தைகள் என்னருகில் தான் இருக்கின்றார்கள். இந்த முகங்களை பார்க்கும் போது ஓவென்று அழனும் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இழந்தவைகளுக்காக அழுது என் அம்மாவையும் இழக்க நான் விரும்பவில்லை. 


பக்கம்: 1435

வணக்கம் நாட்குறிப்பே,

இந்நாட்டின் அனைத்து சட்டரீதியாக விடயங்களையும் முடித்து இன்று குழந்தைகளை சட்டரீதியாக தந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள். இன்னும் இரு வாரத்தில் எம் நாடு திரும்ப வேண்டும். போகும் முன்னர் இவருடன் பேச வேண்டும் என்று நேரம் கேட்டிருந்தேன். இன்றைய சந்திப்பு நிச்சயம் பல தீர்மானங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்த்து தான் சென்றிருந்தேன். 

வழமை போன்று சந்திக்க வந்ததிலிருந்து பந்தா பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கிருந்த மனநிலையில் எழுந்திருந்து கிறீச்சிட்டு கத்த வேண்டும் போலிருந்தது. அம்மாவின் வளர்ப்பு வழமை போன்று தடுத்துவிட்டது. சற்றுப்பொறுத்து சரி மரணவீட்டிற்கு வந்த பிறகு எங்கே ஆளைக்காணவில்லை என்று கேட்டேன். அது தான் அம்மா பற்றி அவருக்கு வைத்தியம் செய்யும் என் நண்பனிடம் விசாரித்தேன் என்றார். இதை விட அம்மாவிடம் நேரில் பேசியிருந்தால் எவ்வளவு நன்றாகவிருந்திருக்கும். பேசிப்பயனில்லை. இந்த இடத்தில் இவர் வீட்டின் எதிர்கால மருமகன் என்கின்ற ரீதியில் அனைத்தையும் முன்னின்று நடாத்தியிருக்க வேண்டாமா? இந்த நேரத்தில் அணைத்துக்கொள்ள முடியாத உறவு என்னத்திற்கு? 
“அண்ணாவின் குழந்தைகள் எம்முடன் வளரட்டும். நான் முடிவை வீட்டில் சொல்லிவிட்டேன்” என்று சொல்லிவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தேன். இவருடனான நிச்சயார்த்தத்தின் இந்த மூன்று வருடங்களில் நான் இதுவரை அதை செய்யவா? இதை செய்யவா? ஏன்று தான் கேட்டு முடிவெடுத்திருக்கின்றேன். இன்று முதன் முதல் நானாக முடிவெடுத்த விடயத்தினை சொல்லிவிட்டேன். இவரின் அனுமதி இந்த விடயத்தில் எனக்கு தேவையில்லை. 

“…… என்னால் முடிவிலிருந்து மாற முடியாது. ஆனால் இக்குழந்தைகளால் நமக்குள் இடைவெளி விழாமல் வளர்ப்பதற்கு என்னால் உறுதியளிக்க முடியும். அவர்களுக்கு இப்போது தேவை பொறுப்பாக வளர்க்க கூடிய சூழல். ஏற்கனவே அம்மா என்னுடன் தான் இருப்பார் என்று சொல்லியிருக்கின்றேன். ஆனால் இனி இவர்கள் மூவரும் கூட இருப்பார்கள். உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் நண்பர்களாக பிரிந்துவிடலாம். ஏன்னுடைய பொறுப்புக்களை ஏற்கும் ஒருவரை நான் வீட்டில் பேச சொல்கின்றேன்.” நானும் சொல்லிவிட்டேன். சொன்ன பின்பு தான் என் பதற்றம் குறைந்தது. 

“நான் யோசிக்க வேண்டும் டார்லிங். இது வாழ்க்கை பிரச்சினை” அவரிடமிருந்து வந்த பதில். இதில் நியாயம் இருப்பதாக எனக்கும் தோன்றியது. குழந்தைகளை பொறுப்பெடுப்பதென்பது இலகுவானதல்ல. இது மனரீதியான விடயமும் கூட. என் இரத்தம் என்னால் இலகுவாக ஏற்க முடியும். அவரால் உடனடியாக முடியாது என்பது தானே யதார்த்தம். இரு நாளில் பதில் சொல்வதாக சொன்னார். 28 வயதில் இத்தனை பொறுப்புக்கள் என்னை அழுத்தியிருக்க வேண்டாம் என்று தோன்றுகின்றது. சரி இரு நாட்கள் தானே பொறுத்திருந்து பார்ப்போம். 


பக்கம்: 1440 

இனிய டயரியே!
இரண்டு நாட்கள் பொறுக்கச்சொன்னது ஐந்து நாளாகிவிட்டதே என யோசனையாகவிருந்தது. சரி அழைப்பெத்து பார்க்கலாம் என்று இரு முறை முயன்று பார்த்தேன் பதிலில்லை. இரண்டு மணித்தியாலங்களின் பின் “எனக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. சேர்ந்து வளர்ப்போம்” என்று மெசேஜ் வந்தது. கடவுளே! சுpல குறைகளை வைத்திருந்தாலும் என் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்காவிட்டாலும் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதே எவ்வளவு மகிழ்வாக இருக்கின்றது. நான் கொடுத்து வைத்தவள் என்று தோன்றுகின்றது. குழந்தைகளை ஏந்தியவாறு அவருடன் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும். அதை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் வளரும் போது நிச்சயம் கேட்பார்கள். சிறகில்லாமல் பறப்பது போலுள்ளது. இதைவிட என்ன வேண்டும்? உலகில் நீங்கள் தந்த விலை மதிக்க முடியாத பரிசே இது தான். இதன் பெறுமதியை விட தான் ஏனையவற்றின் பெறுமதி இருக்கும். 
மிதக்கின்றேன் நான்!


பக்கம்: 1472

 வணக்கம்.

நம் நாட்டிற்கு பறக்க காத்திருக்கும் இந்நேரத்தில் எழுதுகின்றேன் நான். இன்று சற்று நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு விடுவோம். பெரியண்ணா- அண்ணி, பிள்ளைகள், அவர், அவரின் அண்ணா என எல்லோரும் வழியனுப்ப வந்திருந்தார்கள். கடந்த முறை நான் இங்கிருந்து புறப்படும் போது சின்ன அண்ணா- அண்ணியும் வந்திருந்தார்கள். அப்போது அண்ணிக்கு நான்காம் மாதம். அன்று அண்ணியினுள் இருந்தவர்கள் இன்று எட்டு மாத குழந்தைகளாக என் கைகளுள் புதைந்து தூங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

காலம் தான் எத்தனை மாற்றங்களை நொடியில் ஏற்படுத்தி விடுகின்றது. அப்பாவின் இழப்பு, அம்மப்பா திடீரென சுட்டுக்கொல்லப்பட்டது, சின்ன அண்ணா- அண்ணியின் விபத்து என காலத்திற்கு காலம் விதி எம்மை அதன் வலிய கரத்தினால் குட்டிக்கொண்டுதானிருக்கின்றது. இதுவும் கடந்து போகும்.
என்னை அதிகம் அணைத்துகொள்பவர் சின்ன அண்ணா தான். அண்ணாவின் உயரத்திற்கும் அகன்ற தோளுக்கும் அதன் கதகதப்பிலும் என்னை புதைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அம்மா கூட சிலநேரம் ஏசுவதுண்டு. இந்த வயதிலும் என்ன இது என்று…. எத்தனை வயதானாலும் அவர் அண்ணா தானே…. இன்று அந்த கதகதப்பை இழந்திருப்பதாக தோன்றுகின்றது……! இரண்டு உயிர்களை இழந்து மூன்று உயிர்களை பெற்றிருக்கின்றோம் நாம்…. 

வழியனுப்ப வந்ததிலிருந்து பார்க்கின்றேன் இவர் தன் மடிக்கணணியைத்தான் பார்த்துக்கொண்டிருககின்றார். அம்மாவிடம் ஆறுதலாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வந்தவுடன் ஹாய் ஆண்டி என்றதோடு சரி... சரி என்னிடம் பேசுவார் குழந்தைகளை கொஞ்ச நேரம் தூக்குவார் என்று எதிர்பார்த்தேன் அதுவும் இல்லை. இந்த நேரத்தில் வேலைகள் முக்கியமாக குடும்பம் முக்கியமா? ஏனையவர்கள் முன்னால் காட்டிக்கொள்ளாமல் மெசேஜ் அனுப்பினேன். நான் வேலையாகவிருக்கின்றேன் என்று உடனடியாக பதில் வந்தது. குடும்பத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும் பொது அணைப்பும் அதிகரிக்க வேண்டும். எனக்குள் புதிதாக தாய்மை எனும் பொறுப்பு அதிகரித்துள்ளதை நான் உணர்கின்றேன். இது ஒரு வகையில் தங்கையாக என் கடமையும் கூட.அம்மா, சகோதரன்கள் முதலில் விரும்பாவிட்டாலும் நான் பிடிவாதமாக எடுத்த முடிவிது. சில முடிவும் அப்படித்தான் நான் எடுத்தால் எளிதில் மாற்றிக்கொள்வதில்லை. 

முதல் நாம் இருவர் தற்போது ஐவர். இந்த உடன்படிக்கை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தானே.   மனம் கனக்க தொடங்குகின்றது. இது இது அவர் எடுத்த  வெறும் முடிவா அல்லது உணர்ந்து, தாற்பரியம் அறிந்து எடுத்த முடிவா? குழப்பமாகவிருக்கின்றது. எனக்கு அணைப்பு தேவைப்படுகின்றது




 

 

 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……05

All i want is to hold your hand forever..!! 🤌❤, . , . , . , #holdinghands  #love #couplegoals #family #loveyou #lovequotes #relationshipgoals #hands  #togetherforever #iloveyou #kiss #iloveyousomuch ...

Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care  

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention 

உறவொன்றில் முக்கியமான இரு அம்சங்கள் நம்பிக்கையும் நோக்கமும். இதனை அன்பு மொழியில் சொல்வதென்றால் பற்றும் ஈர்ப்பும் என்றும் மொழிபெயர்க்கலாம். நம்மை எத்தனையோ பேர் கடந்திருப்பார்கள். ஆனால் சிலரிடம் மட்டும் தான் இந்த ஈர்ப்பு நம்மை இழுத்துப்போகும். உறவொன்றில் ஈர்ப்பு எவ்வளவு முக்கியமோ அதேயளவு நம்பிக்கையும் சற்றும் குறைந்ததொன்றில்லை. 
ஒருவர் மீது வைக்கின்ற நம்பிக்கையும், ஒருவர் மீதான ஈர்ப்பும் இருவழிப்பாதையானது. இருவரில் ஒருவருக்காவது இதில் சற்று பிசகல் வந்துவிடின் அந்த உறவு நீண்ட தூரம் பயணிப்பதில்லை. நம் தோள் மிது சாய்கின்ற ஒரு உறவுக்கு நம்பிக்கையையும் அவர்கள் ஏன் நமக்கு முக்கியமானவர்கள் என்கின்ற ஈர்ப்பையும் வெளிப்படுத்தாவிடில் இந்த உறவு என்ன கூந்தலுக்கு? 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1051  

இனிய டைரியே,
உலகின் மிகவும் ரொமாண்டிக்கான நகரத்தின் நள்ளிரவு நேரம் உன்னில் என் நாளினை பற்றி எழுதிக்கொண்டிருக்கின்றேன். நாளைய நாளை நினைக்கும் போதே ஒருவித இனிமை பரவிக்கொண்டிருக்கின்றது. என்னுடை கனவு தினம் இது. நாளை உலகத்திலுள்ள அத்தனை கட்டட வடிவமைப்பாளர்களும் வந்து குவியவுள்ளார்கள். உலகின் முதல் நூறு வடிவமைப்பாளர்களுள் இளமையான, தமிழ் என்கின்ற இரு பெருமைகளை நாளை சுமக்க இருக்கின்றேன். இனிய சுமையிது. ஆனால் ஏதோவொரு ஓரத்தில் வலித்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் என் தொலைபேசியில் சத்தம் வரும் போதெல்லாம் அவரிடமிருந்து அழைப்பாகவிருக்கும் அல்லது குறுஞ்செய்தியாகவிருக்கும் என்று இருபது தடவையாவது இன்று ஏமாந்திருப்பேன். ஒரு சிறு வாழ்த்துசெய்திக்காக தான் இந்த வெட்கம்கெட்ட மனம் தவிர்த்துக்கொண்டிருக்கின்றது. 

இன்று கிறுக்கிட வேறெதுவுமில்லை. பதினாறு மணிநேர பயணம் என் கண்களை இறுக மூட அழைக்கின்றது….. வழமை போன்று என் ஏமாற்றத்தை கவிதையாக கிறுக்கிவிட்டு தூங்கப்போகின்றேன்.சில நேரங்கள் எல்லாம் என்னிடம் இருப்பதாக தோன்றுகின்றது. சிலநேரம் ஏதோவொன்றினை இழந்திருப்பதாக தோன்றுகின்றது….. 

பக்கம்: 1097

இனிய நாட்குறிப்பே!
இன்று அவருடைய பிறந்த நாள். என்னுடனான திருமண நிச்சயார்த்தத்தின் பின்னர் வருகின்ற மூன்றாவது பிறந்தநாள் இது. முதல் இரு பிறந்த நாளிலும் நான் இங்கு அவர் அங்கு என்று தொலைபேசியில் வாழ்த்தும் அங்கிருக்கும் நண்பர்கள் மூலம் பூங்கொத்து, பரிசுகள் என்று
ம் கடந்து விட்டது. இம்முறை அருகில் இருப்பதால் முடிந்தளவு சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்து கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டாயிற்று. இதற்கு என் குட்டித்தம்பியும் உடந்தை. 

இங்கு ……சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நிகழ்வு அவர்கள் சங்கத்தினால் திட்டமிடப்பட்டிருந்ததால அண்ணா மூலமாக தெரியவந்து அவரும் வருவதை உறுதிப்படுத்திய பின்னர் ஆயத்தவேலைகளை தொடங்கியிருந்தேன். காலை முதல் மாலை வரை நிகழ்வில் இருந்தாக வேண்டும். ன்று இவர் உரை நிகழ்த்தும் நாள். எனவே விடுமுறை எடுக்க அல்லது வீட்டிற்கு வந்து போக சொல்ல முடியாது. ஆனால் இன்று நான் ஒரு நேரமாவது அவருடன் அமர்ந்து சாப்பிட்டாக வேண்டும். அண்ணாவும் பங்குபற்றுவதால் அவர் வரும் போதே அம்மாவும் நானும் தம்பியும் வந்துவிட்டதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை. 

ழமை போன்று 12 மணிக்கு முதல் ஆளாக வாழ்த்திவிட்டேன். காலையிலிருந்து நாள் பரபரப்பாகவிருக்கின்றது. நானும் தம்பியும் மார்க்கெட் போய் தேவையானவற்றினை வாங்கி வந்து அவருக்கு பிடித்தவைகளை சமைத்து, அங்கு வந்திருப்பவர்களுக்கும் ஏதாவது கொண்டு போகவேண்டும் என்று இனிப்பும் செய்து பிந்தினால் கொதியர் கத்துவார் என்று 12.30ற்கே போய்விட்டேன். போய்ச் சேர்ந்து காத்திருப்பதை மெசேஸஜ் பண்ணியும் விட்டேன். “Wait Honey” என்று பதில் வந்தது

ன்னால் மாற்ற முடியாமல் போனவற்றுள் இதுவும் ஒன்று. எனக்கு இந்த ஆங்கில கொஞ்சல்கள் பிடிப்பதில்லை. “செல்லம்” “கண்ணம்மா|” என்று எத்தனை தமிழ் வார்த்தைகள் உண்டு. பல தடவை சொல்லிவிட்டேன. அல்லது என்னுடைய பெயரையே சொல்லி கூப்பிடுங்கள் என்று எத்தனை தரம் தான் சொல்வது. இது தான் ஸ்டைல் என்று ஹனி, டார்லிங், சுவீட் ஹார்ட்….. ஓ எனக்கு பிடிப்பதேயில்லை….. 

ந்ததிலிருந்து போனில் பாட்டுக்கேட்டு, Games விளையாடி , நண்பிகளுக்கு அழைப்பெடுத்து அலட்டி , முகநூல் பார்த்து நேரம் பார்த்தால் 2 ஆகிவிட்டது. அண்ணாவும் இன்று இங்கில்லை. வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை. முன்னரே பதியப்பட்டு விட்டது என்பதால் மாற்ற முடியாது. யாரிடம் கேட்பது?. சரியாக 2.40 அவர் வந்துவிட்டார். தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு கூட்டி போனார். நிகழ்வு பற்றி பேசினார் தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி பேசினார். சரி சாப்பிடுவமா:? பரிமாறவா? என்று கேட்டேன். நான் நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டேன் என்றார். முகங்கழுவி வெளிக்கிட்டு மீண்டும் நிகழ்விற்கு போய்விட்டார்.  

ஏற்கனவே நாம் திட்டமிட்ட விடயம் இது. சரி ஒருவேளை நண்பர்களுடன் தவிர்க்க முடியவில்லை என்றால் அதை சொல்லியிருக்கலாம்…. இல்லை எனக்காக கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாம். குறைந்த பட்சம் சாப்பிட்டியா என்று கேட்டிருக்கலாம். காலையில் இருந்த மனநிலை தீர்ந்துவிட்டது. பசியும் தான் சாப்பிடாமலேயே….  மாலை வரை இந்த அறையில் தான் இருந்தாக வேண்டும். வழமை போன்று அவரது கலைந்திருந்த அறையை சரிசெய்தேன்….. கையிலிருந்த புத்தகத்தை விரித்து கடற்கரை பக்கமுள்ள ஜன்னல் அருகில் இருந்து வாசிக்க முயன்றேன். பக்கங்கள் மட்டும் தான் புரண்டன. கருத்தில் எதுவும் பதியவில்லை. பாட்டாவது கேட்போம் என்று கேட்டுக்கொண்டு அழுதபடி தூங்கிவிட்டேன். திடீரென Hello  என்ற சத்தத்தில் முழித்துப்பார்த்தால் அவர். ஏன் தூங்குகின்ற ஒருவரை மென்மையாக எழுப்பகூட இவரால் முடிவதில்லை…….

“முகங்கழுவி வாரும் நண்பர்கள் காத்திருக்கின்றார்கள்…” என்றார்.  நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, கேக் வெட்டி…..அவர்களுக்காக செய்துகொண்டு போனவைகளை அவர்களுக்கு பகிரசொல்லி, அவர்கள் சொன்னவற்றினை பெருமையுடன் கேட்டு, அட்டகாசமாக சிரித்து…. இவ பேசாம Chef ஆகினால் நல்லா சம்பாதிக்கலாம் என்று புகழ்வது போன்று மட்டந்தட்டி…. கண்கலங்கி போனதற்கு “ என் வருங்கால மனைவி சரியான அழுமூஞ்சி” என்று கிண்டலடித்து… தனியே கூட்டிப்போய் ஆங்கிலத்தில் கத்தி…. போதுமா…… ? இப்போதெல்லாம் நான் பதில் பேசுவதையெல்லாம் குறைத்துவிட்டேன். பேசி பயனில்லா விடயங்களை பேசி என் வார்த்தைகள் தானே தீர்ந்து போகின்றன.

அண்ணா வரும் போது 7 மணி… வந்ததும் அணைத்தபடி கேட்ட முதல் கேள்வியே… “சாப்பிடலயா….” என் மௌனம் அண்ணாக்கு என்ன சொல்லியதோ தெரியவில்லை. அவரிடம் 30 நிமிடத்தில் வருகின்றேன் என்று என்னை கூட்டிப்போய் டீ குடித்து வரும் வரை அண்ணா பொதுவான விடயங்களைத்தான் பேசினார். ஒரு வார்த்தை கூட இன்றைய நாள் பற்றி கேட்கவில்லை. மீண்டும் போய் எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மணி 10.30. அண்ணாவுடன் வெளிக்கிடும் போது அவர் கையில் ஒரு பாசலை திணித்தார். 

வீட்டாக்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி கேட்டதற்கு விட்டுக்கொடுக்காமல் அல்லது வீட்டாக்களை கவலைப்படுத்தாமல் பொய்கள் பேசி மொழுகி… அவர் கொடுத்த பரிசை பிரித்தால் மேக்கப் செட். கண் மையைத்தவிர நான் வேறேதும் அலங்காரங்கள் பாவிப்பதில்லை என்பது இத்தனை வருடங்களில் தெரிந்திருக்கவில்லை என்பது கையிலிருந்த பொருளின் பாரத்தினை விடவும் மனதில் கனக்கின்றது. அலங்காரங்கள் என் முகத்திலும் இருப்பதில்லை என் எழுத்திலும் இருப்பதில்லை. யாரை கவர்வதற்கு அலங்காரங்கள்? இது தான் நான்…. இவ்வளவு தான் நான்….  

சின்ன சின்ன அன்பில் தான் ஜீவனே இருக்கின்றதன்றி பொருட்களின் பெறுமதியிலில்லை. ஒரு பிடியாவது நான் சமைத்ததை நீ சாப்பிட்டிருந்தால்..... நன்றாயிருக்கின்றது என சொல்லியிருந்தால்.... ஒரு உணவு வேளையாவது என்னுடன் இருந்திருந்தால்... சாப்பிட்டாயா என கேட்டிருந்தால்..... 

எல்லாம் "ஆல்" விகுதிக்குள் தான் அடங்கிப்போகின்றது. என் எதிர்பார்ப்புக்கள் உட்பட.... ஒருவேளை இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் கிறுக்கல்களில்.... வர்ணங்களில்.... சேமித்து வைத்திருப்பேன் நான். போதும் இன்றைய நாள்…..

பக்கம்: 1098

வணக்கம் நாட்குறிப்பே!
அம்மா எப்போதும் எமக்கு சொல்கின்றதொரு விடயம் தம்பதிகள் இருவர்களுக்கிடையான எதுவும் மூன்றாம் நபருக்கு தெரியக்கூடாதென்பது. இது தான் இல்லறத்தின் இரகசியம் என்று அடிக்கடி சொல்லுவார். 
னக்கும் இக்கருத்தில் உடன்பாடுண்டு. எப்போது இருவருக்கிடையான உறவு நிலையின் நிலைப்பாடு வெளியில் தெரிகின்றதோ அப்போது அந்த இடைவெளில் வெளிநபர் நுழைவதற்கு முயல்வது இலகுவாகின்றது. இதுவே பொதுவெளியில் இருக்கின்ற இருவராயின் சமூகப்பார்வையும் வேறாயிருக்கும். அம்மா சொல்வதன் பொருள் இன்று விளங்கிய நாள் இது…..

காலையில் எழும்பி என் கைத்தொலைபேசியை பார்த்தால் பல குறுங்செய்திகள், தவறவிட்ட அழைப்புக்கள்….

 “Hey Sweet heart, I really enjoyed your meal, but it was a bit too much for me.”

 “My friends say I’m the luckiest person. I’m so proud of you.”

 “Darling, shall we go out for lunch this weekend? I’m free.”

 “Sweet heart, are you sleeping… or are you upset? Please reply.”“Hey, you said you had a surprise gift. Where is it?”

இவையனைத்தும் அவரிடமிருந்து தான்! “உணவு அதிகமாயிருப்பது நான் சாப்பிடாமல் போனதும் சேர்த்து தான். தருவதாக சொன்ன அந்தப்பரிசு இன்னும் என்னிடம் தானுள்ளது. தரும் மனநிலை இல்லை. உன் கண்களை நான் பார்த்து வரைந்திருக்கின்றேன். இதனை தருவதற்கும் ஒருவித மனநிலை வேண்டும். மனதுள் காதல் வேண்டும். இனி தரும் நிலையில் நான் இல்லை… வாங்கும் தகுதி உனக்கில்லை” என்று தட்டச்சு செய்துவிட்டு அனுப்பாமல் விட்டுவிட்டேன். ஒருவேளை “நீ சாப்பிடவில்லையா…? என்று கேட்டிருந்தால் என் வானிலை நேற்று மாறியிருக்கும்….. 


புதிய எண்ணிலிருந்து மூன்று குறுஞ்செய்திகள். அதன் தமிழாக்கம்

“ நான்…….. இன் நண்பன். நேற்று அவன் உங்களை ஏசுவதை பார்த்தேன். இது வெறும் கல்யாண பேச்சு தானே… விருப்பமில்லாவிட்டால் விலகி விடுங்கள். என்னுடன் பேசவிரும்பினால் இருவரும் சந்திப்போம்.எனக்கு உங்களைப் பிடித்திருக்கின்றது ” 

என்னயிது… யாரிது…. ? குழப்பமாயிருக்கின்றது. நண்பனின் வருங்கால மனைவியிடம் இதென்ன பேச்சு… இது என்னவிதமான கேவலமான மனநிலை…. ஆனால் தவறு இவர் மீது தான். அம்மா சொல்வது சரி தான். துக்கமோ சந்தோசமோ நான்கு சுவற்றினுள் இருக்க வேண்டும்.

பக்கம்: 1107 

என் இனிய நாட்குறிப்பே…
இப்போதெல்லாம் மனம் ஒப்பீடு செய்ய ஆரம்பித்துவிட்டது. இது உறவுநிலையில் ஆபத்தான நிலை என்று எனக்கு புரிகின்றது. ஆனால் என் சிறிய மூளைக்கு புரியவில்லை. ஒருவருக்கு நல்ல நண்பியாகவிருந்து ஒருவருக்கொருவர் விருப்பு வெறுப்புக்களை தெரிந்துகொண்டு, உணர்வுகளை பரிமாறி நீயில்லையென்றால் வலிக்கும் என்ற நிலையில் அன்பைச்சொல்லி , முதன் முதல் இரு வீட்டாருக்கும் அறிமுகம் செய்து பின்னர் நண்பர்களுக்கு தெரிவித்து திருமணம் வரை உறவைகொண்டு செல்ல வேண்டும் என்று பருவ வயது முதல் நினைத்ததுண்டு. அந்த ஒருவனுக்காக தான் பருவ வயதிலும் பல்கலைக்கழகத்திலும் அலை பாயாமல் இருந்தது இந்த மனம். ஆனால் கடவுள் அதற்கெனக்கு கொடுப்பினை தரவில்லை. சரி நம்மை விரும்பி வந்தவரையாவது அறிந்துகொண்டு புரிதலை உருவாக்க நினைத்தால் அந்த நினைப்பும் அரை வழியில் என்னைப்பார்த்து நகைக்கின்றது. 

யாராவது என்னை விரும்புவதாக சொன்னாலோ, பாசமாக குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஓடிப்போய் அவர்கள் அருகில் நிற்க யோசிக்கின்றது மனம். எதை எதிர்பார்க்கின்றது இது….? பணம்…..பதவி…… கம்பீரமான தோற்றம்……. இல்லையென்று தான் தோன்றுகின்றது. நம்மை ஒருவர் கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்ள மாட்டாரா… சாப்பிட்டீயா என்று கேட்க மாட்டாரா… வீடு போய் சேர்ந்தாயா என்று விசாரிக்க மாட்டாரா என்று இப்போதெல்லாம் யோசிக்கின்றேன்.

ஒருவருக்கு என் குடும்பம் கொடுத்து விட்ட வாக்கு, அந்த உறவில் காட்ட வேண்டிய நேர்மை, நம்மை விரும்பி அன்பை வெளிப்படுத்துபவர்களுக்கு நான் நிச்சயிக்கப்பட்டுவிட்டவள் என்று வெளிப்படையாக சொல்லிவிட வேண்டிய நேர்மை, வீடு தேடி வந்த நல்ல வாழ்க்கையை நான் வாழ்வதாக நம்புகின்ற என் குடும்பம் இதற்கு நடுவில் குழும்பித் தவிர்க்கின்றேன் நான். இதையெல்லாம் மறைக்க தான் வர்ணங்களுள்ளும், கிறுக்கல்களிலும் கட்டடங்களுள்ளும் தொலைய நினைக்கின்றேன் நான்……. என்னை எவரும் நெருங்காமல் இருப்பதே நல்லது என மனம் என் மண்டையை குட்டிச்சொல்கின்றது! 

இலட்சுமணன் சீதைக்கு வரைந்தது வெறும் கோடு தான். அதை தாண்ட கூடாதென நினைத்தது தான் ஒழுக்கம். அது தான் அன்று சூழ்ந்த தீ……வாக்கு கொடுத்தாயிற்று வாழ்ந்தாகத் தானே வேண்டும். 

இன்று வேறெதுவுமில்லை! குட்நைட்!! 




 



 






 

 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….04

 

Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care   

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கிச்சேமிக்கின்றதொரு பொருள் இந்த கரடி பொம்மை. அதிக நிறத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற விளையாட்டுப் பொருள். இன்று ரோஜா, சொக்கலேட் வரிசையில் பரிசுகளுள் முக்கிய இடம் வகிக்கும் ஒன்று இது….  

கரடியைக் கண்டால் ஓட்டமெடுக்கும் நாம் கரடி பொம்மையை நேசிப்பதற்கு அது தருகின்ற வெம்மையும் முக்கிய காரணம். கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கினால் ஒருவர் அருகில் இருப்பது போன்ற கதகதப்பினை அனுபவிக்க முடியும். ஆனால் இதன் முடியில் உள்ள சிறு துணிக்கைகள் மூக்கினுள் சென்றால் சுவாச நோய்கள் உருவாக கூடும் எனவும் மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……. 

பக்கம்: 955  

இனிய டைரியே,
இன்று இதனை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே உன்னில் கிறுக்குகின்றேன். இன்று பல்கலைக்கழகத்தின் இறுதி நாள். சில நாட்களாகவே என்னை கவலையும் மகிழ்வும் சூழ்ந்திருப்பதான கலவை உணர்வை உணர்ந்திருந்தேன். கவலை- இந்த மூன்று மாதங்களில் அமெரிக்க மண்ணில் எனக்கு கிடைத்துள்ள நண்பர்களது பிரிவு, பெரியண்ணி- அண்ணாவின் பிரதிகள் மூன்றினையும் பிரியப்போகின்றோம் என்கின்றது…. சந்தோசம்: அம்மாவை பார்க்க போகின்றேன், எப்போது போய் வீட்டில் அம்மா மடியில் தூங்குவேன் என்றிருக்கின்றது…..

பல்கலைக்கழகத்தில் மதியத்துடன் பிரிவுபசாரங்கள் முடிந்து விட்டன. இரவு அவர் என்னை ஓரிடத்திற்கு அவர்கள் நண்பர்களுடனான விருந்துக்கு அழைத்திருந்தார். அவர் எனக்கு தந்த சிவப்பு புடவை தான் அணிந்து சென்றேன். இவ்வாறானதொரு புடவை அணிந்து போனது இது தான் முதல் தடவை. உடை என்றாலே எனக்கு கூச்சமின்றி நடமாடக்கூடிய உணர்வை, இலகு தன்மையை தரவேண்டும் என்று நினைப்பேன். அதிக விலை கொடுத்து வாங்குவதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நிறைய கல் பதித்த, இவ்வளவு பாரமான, அதிக விலையுள்ள புடவையை அவர் தந்த போது என்ன சொல்வது? சிவப்பு நிறமும் எனக்கு பிடிப்பதில்லை. முதலில் மறுத்துப்பார்த்தேன். அவர் பிடிவாதம் தான் உலகறிந்த விடயமாயிட்டே…

 மாலை வீட்டிற்கே வந்து கூட்டி போனார். எவ்வளவு பிரமாண்டமான கட்டடம். ஏவ்வளவு கூட்டம், அதிர்வும் பாடல் இரைச்சலும், இருளும் என நான் பயந்து போய்விட்டேன். அவரிடமும் சொன்னேன். இது நம்மைப் போன்றவர்கள் பழகிக்கொள்ள வேண்டிய இடம் என்றார். நண்பர்களை அறிமுகப்படுத்தினார். அநேகர்களின் பெண் நண்பிகளும் வந்திருந்தனர். உணவின் பின்னர் எல்லோரும் நடனமாட ஆரம்பித்து விட்டனர். இவரும் போய்விட்டார். எனக்கு அந்த சூழலே பிடித்திருக்கவில்லை. திடீரென அவரது நண்பன் ஒருவன் அருகில் வந்து கதைக்க ஆரம்பித்தார். உரசியபடி பேசியது எனக்கு பிடிக்கவில்லை. சற்று விலகி இவருக்கு அழைப்பெடுத்தேன். வருகின்றேன் என்று அழைப்பை துண்டித்துவிட்டார். அவர் நண்பர் அருகில் மீண்டும் வந்து அமர்ந்துவிட்டார். முதன் முறை ஒரு அன்னிய ஆண் என் அருகில்… தடாரென You are chubby and Cute என்று கட்டிபிடித்து முத்தமிட்டு விட்டான். விலத்தி எழும்பி நின்ற பின்னும் என்னுள் அதிர்ச்சி அடங்கவில்லை. இவரும் வந்துவிட இதனை பற்றி சொன்னேன். அழவும் ஆரம்பித்தேன். வா என கையைப்பிடித்து இழுத்து வெளியில் வந்துவிட்டார். அங்கிருந்து இங்கு என்னை விடும் வரை நாகரீகம் பற்றி எனக்கு பாடம் எடுத்தபடி தான் வந்தார். 

நான் வழி முழுதும் அழுதுகொண்டு தான் வந்தேன். இவர் அருகில் இருப்து எனக்கு அன்னியமாகவுள்ளது. முறையான உறவில் இணைந்து ஒருவன் விரல் மட்டுமே என்னில் படவேண்டும் என நினைப்பவள் நான். ஆனால் இதனை இவர் இவ்வளவு இலகுவாக எடுப்பார் என நான் நினைக்கவில்லை. குறைந்த பட்சம் தன் நண்பனையாவது கண்டிப்பார் என எதிர்பார்த்தேன். 

நான் உயர் தரத்தில் படித்துக்கொண்டிருந்த போது வகுப்பிற்கு சைக்கிளில் செல்லும் போது ஒருவன் வழிமறிக்க கையை பிடித்து கடிதத்தினை திணித்துவிட்டான். இதற்காக நான் வீட்டில் அழுத போது என் அண்ணாக்கள் அவன் கையை முறித்ததை நினைத்துப் பார்க்கின்றேன். இன்று நடந்துத தெரிந்தால் போதும் இவரை அடித்தாலும் அடிப்பார்கள். என்னுடைய நெருங்கிய நண்பன் ஜே.பி எனக்கு பின்னேர வகுப்பிருந்தால் அது முடியும் வரை காத்திருந்து என் பின்னாலேயே வந்த வீட்டில் விட்டுச்செல்வார். வீதியில் நின்று கூட என்னுடன் பேசமாட்டார். அவ்வளவு அக்கறையும் அன்பும் என் மேல்.  அவரையும் இந்த நிமிடம் நினைத்தப்பார்க்கின்றேன். 

ஆனால் இவர் தன் நண்பனை நியாயப்படுத்தி பேசுகின்றார். வந்திறங்கும் போது “நீங்களும் இப்படித்தான் நண்பிகளையும் நண்பர்களின் வருங்கால மனைவிகளையும் முத்தமிடுவீர்களா?” என்று கேட்டுவிட்டேன். வீட்டிற்குள் வந்து அரை மணி நேரத்திற்கும் மேல் குளித்துவிட்டேன். ஆனாலும் அருவருப்பு அடங்கவில்லை எனக்குள்; ஏதோவொன்று மறுபடியும் உடைந்திருப்பதை உணர்கின்றேன். ஓரு பெண் எதை மானமென்று கருதுகின்றாளோ அதை காத்திடாத ஆண் எப்படி அவள் வாழ்க்கைத் துணையாவது……? எப்போது போய் அம்மா மடியில் தலை புதைப்பேன் என்றிருக்கின்றது. 


பக்கம்: 989

இனிய நாட்குறிப்பே,

அங்கிருந்து வந்து 20 நாளாகிவிட்டது. அன்றைய சம்பவத்தின் பின்னர் நானாக இவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். என்னளவின் என் வாழ்க்கைத்துணை என்னை செதுக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும் முக்கியமாக நான் அவரிடம் பாதுகாப்பை உணர வேண்டும் என்று கற்பனையில் நினைத்திருந்தேன். எனக்குள் இவையனைத்தும் மிச்சமின்றி உடைந்துவிட்டது. இன்று திடீரென அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி. “உனக்கு என்னில் சந்தேகமா?” என்று அதில் கேட்டனுப்பியிருக்கின்றார். இன்னும் தன் பக்க பிழையை இவர் உணரவில்லையா? அல்லது என்னைப் புரிந்துகொள்ளவில்லையா? எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் அநேகர் ஆண்கள். என் வருங்கால துணையிடம் அறிமுகஞ்செய்து வைக்குமளவு உறவில் நேர்மை இருக்கின்றது. நான் ஏன் சந்தேகப்பட வேண்டும். என்னைப் போல் தான் எல்லோருக்கும் உள்ள உறவில் நேர்மை இருப்பதாக நான் நினைக்கின்றேன். அவ்வளவு தான்! 


பக்கம்: 994

என் இனிய நாட்குறிப்பே,
இன்று எம் பிறந்தநாள், பல வருடங்களின் பின் எல்லோரும் ஒன்றாக இன்றைய நாளில் சேர்ந்து கொண்டாடினோம். 12 மணிக்கே என் பாதியின் அறைக்கதவை திறந்து கேக்குடன் சென்றால் அவர் அங்கு இன்னுமொரு கேக்குடன் எனக்காக காத்திருக்கின்றார். நாம் இருவரும் அப்படி தானே… ஒரே சிந்தனை ஒரே உணர்வு…. 298 நாட்கள் ஒன்றாக இருந்தவர்கள் அல்லவா…. நள்ளிரவிலிருந்தே வீடு விழித்திருக்கின்றது. ஐந்து வருடங்களின் பின் நாம் அறுவரும் ஒன்றிணைந்துள்ள பிறந்த நாள் இன்று! 

காலையில் கோயில், பிறகு ஊர்சுற்றல், வெளியே மதிய உணவு என்று இந்த நாள் இறக்கை கட்டி பறந்துவிட்டது. மாலையில் தம்பி தான் யதார்த்தமாக இவரிடமிருந்து வாழ்த்து வரவில்லையா என்று நினைவூட்டினான். அந்த நிமிடத்திலிருந்து ஒருவித எதிர்பார்ப்பு என்னை சூழ்ந்துவிட்டதை உணர்கின்றேன்.

பிறந்த நாளில் கிடைத்த பரிசுகளில் குட்டியண்ணா தந்த டெடி எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இரு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடு போய் திரும்பும் போது வாங்கிவந்து மறைத்து வைத்திருந்திருக்கின்றார். ஆறடி உயரமான இதனை எப்படி மறைத்து வைத்திருந்தாரோ…. புசுபுசுவென்று பால் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. இதன் வெண்மையில் கறைபட்டுவிடுமோ என்று கையால் தொடவும் யோசிக்கின்றேன். நானும் சின்னண்ணாவும் இதற்கு குட்டி 
கதிரையும் வாங்கிவந்துவிட்டோம். இரகசியமாக இதற்கு அம்மு என்று பெயர் வைத்திருக்கின்றேன்.  

  

 

 

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை