Thursday, August 15, 2013

காதல் சின்னம்


யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அந்தப்புரத்தின் தேவதைகளுள்
தன் மனங்கவர்ந்தவளுக்காக
கட்டிய கட்டடமது…..
எந்தப்பெண்ணாவது
அவள் பாரே ஆண்டவளாயினும்
பல ஆண்களுடன்
தன்னை பகிர்ந்திருக்கின்றாளா?
தனக்கென்று அந்தப்புரம் தானில்லை
தன் அந்தரங்கத்திலாவது
பலரை நினைத்திருப்பாளா?
அந்தரப்புரமல்ல
அந்தரங்கத்திலும்
ஒருவரை நிறைத்துக்கொள்வதன்றோ
காதல்…….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
பணம் பாதாளம் வரையே
பாயும் போது
பாராண்ட வேந்தன்
பளிங்கினால் கட்டியதில்
பெருமையென்ன இருக்கிறது…?
வாழும் போது பகிர்ந்திட்ட
காதலுக்கு
சாவின் பின்
சமாதியை பளிங்கினால்
கட்டிப் பயனென்ன?
தன்னை பகிராமல்
இருந்திருந்தால் அதுவன்றோ
வாழும் காதல்….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அவன் காதல்
கோட்டையை கட்டிய
கரங்களை அறுத்தானாம்…
இன்னொரு மஹால்
உருவாகிட கூடாதென்று….!
கையிழந்தவன் கதறியிருப்பான் - தன்
காதல் மனைவிக்கு
குடிசை கூட கட்டிட முடியவில்லையென்று..
கண்ணீர் வடித்திருப்பான்…
காதலை உணர்ந்து கட்டியிருந்தால்
அடுத்தவன் காதலை
துச்சமாய் நினைத்திருப்பானா…..?
காதல் என்பது
அரசனுக்கு மட்டுமா
ஆண்டிக்கில்லையா?

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அது கண்ணீரின் கோட்டை
காதலிக்கான கல்லறை
பகட்டை காட்டும்
பளிங்கு மாளிகை…
காலவோட்டத்தில்
நிலைத்திடும்
கல்லறைகளை விடவும்
இதயத்துள்ளான
உண்மைக் காதல் போதும்!
கற்களை நடவேண்டியதில்லை
கண்கலங்காமல் பார்த்தாலே போதும்…
காதல் என்பது
கல்லில் கட்டுவதல்ல
மனதில் செதுக்குவது…
சிறு காகிதம் கூட
காவியமாகும் - அதில்
களங்கமற்ற காதலிருந்தால்…..








Monday, August 12, 2013

என் வீட்டு Tom

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தான் பொன் பொருள் கொடுத்து அனுப்பினாலும் பெற்றோர் கொடுக்காமலே அவள் புகுந்த வீட்டுக்குச் கொண்டு செல்லும் சொத்து அவளது பிறந்த வீட்டு ஞாபகங்கள்….. அப்பாவின் கோபங்கள் அம்மாவின் திட்டுக்கள் , அண்ணாவின் எச்சரிக்கைகள் , தம்பியின் சண்டைகள் என்று அவளின் ஞாபகக்குறிப்பின் பக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

திருமணத்திற்கு முன் அப்பாவின் இளவசிகளாக அம்மாவின் ராஜாத்தியாக வலம் வரும் பெண்கள் திருமணத்தின் பின் நிச்சயம் பிறந்தகத்திலிருந்து ஒரு விலகலை உண்டாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது நிஜம். அதிலும் வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்தால் கேட்கவே தேவையில்லை… புதிய உறவினால் தாய் - தந்தை – மகள் உறவானது சிறிது விலகிலாலும் அநேகமாக முதல் பிரசவத்துடனோ அல்லது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளிலோ இணைவதுண்டு. ஆனால் சகோதர பாசமானது பந்த உறவுகளினால் நிச்சயம் பந்தாடப்பட்டு விடுவது பரவலான ஒன்று… நாம் இன்னொரு வீட்டிற்கு விளக்கேற்ற போவது போல் நம் அண்ணன் தம்பி குடும்பத்திலும் விளக்கேற்ற வரும் குத்துவிளக்குகளால் ஒரு நூல் அளவிலான விலகலாவது வராவிட்டால் அது குடும்பமாகவே இருக்காது.

தன் தங்கையை முன் பின்னாக காவல் காத்த அண்ணன்கள் இன்னொருவன் கையில் ஒப்படைத்த திருப்தியுடன் தன் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும்… அக்காவை சதா சீண்டிக்கொண்டிருக்கும் தம்பிமார் அக்காவின் திருமணத்தின் பின் ஒரு இடைவெளியை பின்பற்றுவதும் எல்லா வீடுகளிலும் நடக்கும் விடயம். அதேபோல் அண்ணாக்களுக்கு பயந்தும் தம்பிகளுக்கு உச்சியில் குட்டிக்கொண்டும் திரியும் பெண்கள் அடக்கமாக கணவனே உலகம் என்று வாழத்தொடங்கிவிடவதுண்டு.

ஆனால் நம் வட்டங்கள் மாறத்தொடங்கினாலும் நம் சகோதரங்களுடனான செல்லச்சண்டைகளும் , கணநேர கோபங்களும் எப்போது புரட்டினாலும் இனிமை தரும் தருணங்கள். 

நீங்கள் டொம் அண்ட் ஜெர்ரி காட்டூன் பார்த்திருப்பீர்கள். இரண்டும் எப்பொது பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும் இரு குணச்சித்திரங்கள். இப்படித் தாங்க என் வீட்டிலும் ஒரு டொம் இருக்கிறது. என்னுடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டும் எடக்குமொடக்காக பேசிக்கொண்டும்… பின்நோக்கி செல்கின்ற என் இனிய அன்புள்ள எதிரி டொம் இன் சில நினைவுகள்..

தம்பிக்கும் எனக்கும் இரு வருடங்கள் வயது வித்தியாசம். அவர் பிறந்திருக்கும் போது நான் பொறாமையில் அவர் தொட்டிலில் தூங்கும் நேரம் பார்த்து கிள்ளிவிட்டு ஓடிவிடுவேனாம். வீறிட்டு அழும் அவனை தாலாட்டிக்கொண்டே அம்மா அப்போதே சொல்லுவாராம் “தம்பி வளர்ந்த பின் உனக்கு அடிப்பான்” என்று. இதை கேட்டு வளர்ந்;ததாலோ என்னவோ அவன் வளர்ந்த பின் அவனிடம் நிறையவே அடிகள் வாங்கி அழுதிருக்கின்றேன்.

இரவில் அம்மாவிற்கு இருபுறமும் தூங்கிக்கொண்டு யார் காலை அம்மா மேல் போடுவது என்று பிடிக்கும் சண்டை கனவில் கூட தொடருவது இனிமை….

நான் பாடசாலை மாணவியாக இருக்கும் போது என்னுடன் காவலுக்கு வீட்டார் என் தம்பியைத் தான் அனுப்புவார்கள். இருவரும் இரு குட்டி சைக்கிள்களில் வீதிக்கு குறுக்கும் நெடுக்குமாக போட்டிக்கு சைக்கிளோட்டிக்கொண்டும் போவதுண்டு அவ்வாறு ஒரு நாள் போகும் போது ஒருவன் என்னை பகிடி பண்ணிய போது வழமையான துடுக்குத் தனத்தில் சைக்கிளை விட்டிறங்கி (சொர்ணா அக்கா ரேஞ்சில்) “என்னடா பயமுறுத்திறாயா? “ என்று கேட்ட போது “அக்காச்சி வாங்க போவம் எனக்கு பயமாயிருக்கு…” என்று சொன்ன என் வீரத்தம்பி இவரை நம்பித் தாங்க அப்போதெல்லாம் என் கூட அனுப்புவாங்க… அவரும் ஏதோ இளவரசியை காக்கின்ற பூதமாட்டம் தான் பில்டப் காட்டுவாரு…  இப்போது அவர் பின்னால் பைக்கில் இருந்து போது அந்த நாட்களை நினைத்துக்கொள்வதுண்டு.

வீட்டில் கணவாய் கறி சமைக்கும் நாட்களில் கைகளில் மோதிரம் போன்று அவற்றை அடுக்கி யாரிடம் கூடுதலான மோதிரம் உண்டென சண்டை பிடித்த நாட்கள் பலவுண்டு

எத்தனையோ டீசெட்டுக்கள் உள்ள போதும் டெனீஸ் ப்ரக்டீஸ்க்கு போகும் போது தம்பியின் டீசெட்டை உடுத்திக்கொண்டு போவதிலுள்ள இன்பம் புது டீசேட்டில் கூட கிடைப்பதில்லை. அதை கழுவி தரும்படி அவன் பிடிக்கும் சண்டைகள் அதை விட அருமை.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பாகும் நாட்களில் எம்முள்ளும் ரிமோட் கண்ரோலுக்கான சண்டை ஒளிபரப்பாக தொடங்கிவிடும். சுண்டை உச்சமடையும் போது அம்மா இருவரையும் படிக்க அனுப்பி “வடை போச்சே” என்று நினைத்த நாட்களுமுண்டு…

பாடசாலை விடுமுறைகள் இருக்கிறதே… அவை தான் எமது யுத்தகாலங்கள். எம்மிருவரதும் சண்டைகள் முற்றும் சமயம் அம்மாவை தொலைபேசியில் அழைத்து கோள்மூட்டுவதுண்டு. சிலவேளை தொலைபேசியை அணைத்துவிடும் அம்மா மாலை வீடு திரும்பியவுடன் நன்றாக இருவருக்கும் சாத்துவதுமுண்டு.

ஆனாலும் ஒரு உண்மையை சொல்லித்தாங்க ஆகனும் எனக்கு விஞ்ஞான ஒப்படைக்கு கருவிகள் செய்து தருவது அவன் தான்… ஒரு காலத்தில் ஒப்படைக்கு சிவப்பு நிறம் அடிக்கப்பட்டதற்கு அவனது கைவண்ணம் தான் காரணம். (காலம் கடந்த உண்மை)

இப்போதும் விடுதியிலிருந்து வீட்டிற்கு போகும் போது “ அம்மா இந்த ஊத்த மண்ணுக்கு (என்னைத் தான்) விலையேறிட்டு… எப்படியிருந்தவள் இப்படியாகிட்டாள்…” என்றும் நான் கண்ணுக்கு மையடிப்பதை பார்த்து “ஐயோ பேய் மாதிரியிருக்கு…” என்றும் கலாய்க்க தவறுவதில்லை.

ஏனோ இப்போது தூரத்திலிருப்பதாலோ என்னவோ முன்னர் போன்று குடும்பிச் சண்டைகள் பிடிப்பதில்லை. கூடவே இருவரும் வளர்ந்து விட்டோம் என்பதால் ஏற்பட்டுள்ள முதிர்ச்சி, பருவத்தின் அடுத்த படிக்கான முன்செல்லல் என்று தம்பிக்கும் எனக்குமான டொம் - ஜெர்ரி தொடர் வெகுவாக குறைந்துவிட்டது.

ஆனாலும் இப்போதெல்லாம் விடுதி வாழ்க்கையின் தனிமையில் அன்று தொல்லையாக தெரிந்த தம்பியின் சீண்டல்கள் , செல்லச்சண்டைகளை மிஸ் பண்ணுவதை போன்றதொரு பீலிங்… ஆனால் இவையெல்லாம் வெறும் கடதாசியின் பக்கங்களாக இல்லாமல் கல்வெட்டின் செதுக்கல்களாகவே என்றும் இனிக்கும் நிமிடங்கள் என்பது மட்டும் உண்மை. 



Monday, August 5, 2013

அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க?

கண்ணாடியை பாவிக்கும் போது கவனமாக கையாள வேண்டும் தவறுதலாக விழுந்துவிட்டால் சுக்குநூறாகிவிடும்…. சிலவேளை அதன் பெறுமதி கருதி நாம் சிதறிய துண்டுகளை ஒட்டிக்கொள்வோம். ஆனால் என்ன தான் சொல்லுங்க அதனை பழைய மாதிரியே கையாள முடியாது… வேணுமென்றால் காட்சிப்பொருளாக வைத்துக்கொள்ளலாம்.. கண்ணாடியில் சிறு கீறலோ வெடிப்போ ஏற்பட்டு விட்டால் அவை என்றோ ஒரு நாள் விரிசல்களாக மாறிவிட கூடும்…. அது போல் என்னளவில் நான் எப்போதும் அன்பு என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடுவதுண்டு…. எவ்வளவு நெருக்கமாக நாம் அடுத்தவர்களுடன் பழகினாலும் சிறு மனவருத்தங்கள் அல்லது சிறு சொற்களே உறவுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கக்கூடும். இப்பிளவுகள் உடனடியாக தரையில் விழந்த கண்ணாடியாக சிதற வேண்டும் என்பது கட்டாயமல்ல.. இன்று சிறிதாக தெரியும் விடயங்கள் நாளை உறவுகளுக்கிடையில் பெரியதொரு பகைமையை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகமொத்தத்தில்
“Handle with Care” என்பதாக உறவுகள் அமைய வேண்டும் என்பது என் கருத்து. 
இதுதொடர்பில் என் கருத்துடன் மட்டும் நிற்காமல் “அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க? உங்களுடன் பழகுபவர்கள் அல்லது நீங்கள் பழகுபவர்களை வைத்து அன்பென்றதை எதற்கு ஒப்பிடுவீர்கள்?” என்று என் நண்பர்கள் சிலர்….. விடுதித்தோழிகள்…. அலுவலக சகபாடிகளிடம் கேட்டவேளை அவர்கள் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள்…….

தாயிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் சிசுவாக நாம் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். தாய்-சிசு உறவானது அங்கக ரீதியானதொரு பிணைப்பாகும். அதில் தொடர்புபடுத்துதல் என்பது அறவே இல்லை. குழந்தையானது தாயின் அங்கம் அல்லது நீட்சி போன்றது. மேலும் அது தாயின் சுய-அன்பு எனும் வளையத்தனுள் பாதுகாக்கப்படுகிறது. பிறகு தந்தை மற்றும் பிற குடும்ப அங்கத்தினர் அக்குழந்தைக்கு அறிமுகமாகிறார்கள். ஆனால் உறவில் எதுவும் அடிப்படையில் மாறுவதில்லை. வெறுமனே சுய-அன்பு வளையம் மட்டும் குடும்ப அங்கத்தினர்களை உள்ளடக்கும் வகையில் சற்று விரிவாக்கப்படுகிறது. குடும்பம் என்பது எப்போதும் ஒரு இனக்குழுவின் பகுதியாக விளங்குவதால் சுய அன்பின் வளையம் மேலும் விரிக்கப்பட்டு ஒருவரது இனத்தார் சாதி-சனத்தார் ஆகியோரையும் உள்ளடக்குவதாகிறது.

உண்மை என்றால் என்ன என்பதற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க முடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. உண்மைக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் அதன் உண்மைத்தன்மையை விளக்கமுடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுப்பதாகும். அன்பு என்பது உள்ளுணர்வு. அது என்ன என்பது அவரவரது அனுபவம் மட்டுமே. நாம் ஒரு இனிப்பு பண்டத்தைச் சாப்பிடும் போது அதன் உண்மையான அனுபவம் அல்லது உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதைப் போன்றதுதான் அன்பும். ஆனால் இனிப்பு இனிக்கும் என்கிறோம்.இனிப்பு என்றால் என்ன?’ எனக் கேட்டால் இப்போது இனிப்புக்கு விளக்கம் கொடுப்பது சிரமாகிவிட்டதல்லவா? அவ்வாறு தான் அன்பு என்றால் என்ன என்பதும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக உண்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கு பொய் அல்லாதது என்று கூறுவதுண்டு. இந்த விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. ஏனெனில் பொய் என்றால் என்ன என்று கேட்டால் நிலையற்றது, மறைத்தல், மாற்றிக் கூறுதல், ஏமாற்றுதல் என அடிக்கிக் கொண்டு செல்கிறோம். முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விளக்கங்கள்.

அன்பு ஒரு ஒருவழிப்பாதை. அன்பைக் கொடுக்க மட்டும்தான் முடியும். அன்பைப் பெறமுடியாது. அன்பைப் பெறுவதாக நாம் உணரும்போதும் அது கொடுப்பதாக மட்டுமே அமையும். அன்பு என்பது எமது உள்ளுணர்வாக இருப்பதால் அதற்கு எதிரானதும் ஒரு உணர்வுதான். எது அன்பைக் கொடுப்பதற்கு தடையாக இருக்குமோ அது அன்புக்கு எதிரானது.

நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பவற்றையும் நாம் அன்பின் வடிவங்களாக அறியப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் என்ன வடிவத்தைக் கொடுத்தாலும் அன்பு ஒன்றுதான். அது ஒரு முழுமை. அன்புக்கு வடிவம் கொடுப்பதனாலேயே நாம் அன்புக்கு எதிரானது என்றவுடன் வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என பலவற்றைக் கருதிக்கொள்கிறோம். அதாவது இவ்வாறன உணர்வுகள் அன்புக்குத் தடையாக அமையும் எனக் கருதுகிறோம். இப்போது ஒரு விடையத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என நாம் குறிப்பிடுபவையும் ஒரு முழுமைக்கு நாம் கொடுக்கும் வடிவங்கள் தான் என்பதே. இந்த முழுமை அன்புக்கு எதிரானதாக செயற்படும் முழுமை. அந்த முழுமைதான் 'பயம்'. அதாவது அன்பு எனும் முழுமை ஒன்று, பயம் எனும் முழுமை இன்னொன்று. இங்கே முழுமை என்பதன் பொருள் ஒரே நேரத்தில் இரண்டில் ஒன்று தான் இயங்கும் என்பதே. அன்பு இயங்கினால் பயம் இயங்காது, பயம் இயங்கினால் அன்பு இயங்காது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான விடயம் என்னவெனில், எமது ஒவ்வொரு நகர்வும் அன்பினால் நகர்த்தப்படுகின்றதா அல்லது பயத்தினால் நகர்த்தப்படுகின்றதா என்பதை மிக இலகுவாக நாம் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதுதான். - வி.எஸ்

அன்பென்பது செல்வம் போன்றது. நாம் நேர்மையான வழியில் சேமித்தால் அச்செல்வம் நிலைப்பதனைப் போன்று நல்வழில் தேடிய உறவுகள் என்றும் நிலைக்கும். குறுக்குவழியில் சேர்த்த பணம் குறுகிய காலத்துள் அழிந்துவிடுவதைப் போன்று நேர்மையற்ற உறவுகளும் அர்த்தமற்ற அன்புகளும் விரைவிலேயே நம்மை விட்டுப்போய்விடும் - பிரியா

சில வேளை சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் கறிவேப்பிலையை தூக்கியெறிந்து விட்டு உணவு ண்பதுண்டு. இன்னும் சிலர் கறிவேப்பிலையின் மருத்துவக்குணம் அறிந்து அதனை உணவில் இணைத்துக்கொள்வதுமுண்டு. இதேபோன்றே சிலர் தம்மை அன்பு செய்பவர்களது உறவை தேவையான வேளை பயன்படுத்திவிட்டு தமது தேவைகளை நிறைவேற்றிய பின் தூக்கியெறிந்துவிடுவதுண்டு. சிலர் தொடர்ந்தும் உறவுகளது முக்கியத்துவம் உணர்ந்து உறவுமுறைகளை பேணுவதுண்டு. ஆகவே என்னளவில் அன்பை கறிவேப்பிலைக்கு ஒப்பிவேன். - பிறின்சியா

நீங்கள் என்ன நினைக்கிறீங்க..?

Thursday, August 1, 2013

மனம் என்பது.....


கருவறை போன்றது – ஒருவனின்
அனுவை சுவைப்பது போன்று
ஒருவரின் நினைவை மட்டும்
சுமங்கள்……

குழந்தை போன்றது
தொலைத்து விடாதீர்கள்
தவித்துப்போய் விடுவீர்கள்…

சிப்பி போன்றது – சிறு
மழைத்துளியை பல்லாண்டு
சுமந்து முத்தாவது போன்று
சுகமான நினைவுகளை சுமந்து
விலையற்ற முத்துக்களை
உருவாக்குங்கள்…..

கல் போன்றது
வலி எனும் உளி கொண்டு
சிலை செய்யப்பழகுங்கள்….

பஞ்சு போன்றது – அதற்காக
பலரின் நினைவுகளுக்கு
பஞ்சனையாக்கிடாதீர்கள்…

கண்ணாடி போன்றது
சிதறிவிட்டதை சேர்த்தாலும்
வெறும் காட்சிப்பொருளாகுமேயன்றி
காயங்களை களைந்திடமுடியாது….


மலர் போன்றது
மாசில்லாமல் பூத்திருங்கள்
மாலையாகும் நாளொன்று வரும்….

அதிகம் வாசிக்கபட்டவை