Showing posts with label தொழில்முயற்சியாண்மை. Show all posts
Showing posts with label தொழில்முயற்சியாண்மை. Show all posts

புத்தாக்கம்


ஒரு ஊரில் ஒரு பெரிய தனவந்தன் இருந்தானானம். அவனுக்கு மூன்று பிள்ளைகள். தன்னுடைய அந்திமகாலத்தினை நெருக்கிக்கொண்டிருந்த வேளையில் தனது வியாபார சாம்ராஜ்யத்தை யாரிடம் ஒப்படைப்பது என்கின்ற கேள்வி இந்த தனவந்தனனை குடையத் தொடங்கியது. இத்தனை வருடங்களாக கட்டிக்காப்பாற்றிய இத்தனை சொத்துக்கள், வியாபார நிறுவனங்கள், நிர்வாகங்களை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று பலமாக யோசித்த தனவந்தன் இறுதியில் ஒரு உத்தியை கைக்கொள்ள நினைத்தான். அதாவது நமது Biggboss இல் வருவது போன்று task வைத்து யார் பொருத்தமானவர் என்று தீர்மானிப்பது என முடிவெடுத்தான்.

தன்னுடைய பிள்ளைகள் மூவரையும் அழைத்து ஒரு பெட்டி நிறைய சீப்புக்களைக்கொடுத்தான். “இந்த சீப்புக்களை நீங்கள் புத்த துறவிகளிடம் விற்க வேண்டும். அதிகளவு சீப்புக்களை விற்பதற்கான தந்ரோபாயம் தெரிந்தவருக்கே என் வியாபாரத்தின் உரிமையை கொடுக்க நினைக்கின்றேன்” என்றும் கூறினான். இதென்ன முடியே இல்லாதவர்களிடம் எப்படி சீப்பு விற்பது? இந்த மனிதனுக்கு வயதாகியதால் அறளை பெயர்ந்துவிட்டதோ? என்று சுற்றியிருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். 

முதலாவது மகன் சீப்புகளுடன் சென்று இரு நாட்களில் திரும்பி வந்தான். “அப்பா நான் துறவிகளிடமே மூன்று சீப்புக்களை விற்றுள்ளேன். சீப்புக்களினால் தலைமுடி வாரிட முடிவதுடன் அப்பப்போ முதுகு சொறிவதற்கும் சீப்புக்கள் பயன்படும் என்று கூறினேன். உடனே மூன்று சீப்புக்கள் வாங்கிவிட்டார்கள்” என்று கூறினான். தந்தையும் அவனது முதுகில் தட்டி” நல்லது” என்று கூறினார். 

இரண்டாவது மகன் நாலைந்து நாளில் திரும்பி வந்தான். வரும் போதே முகத்தில் அப்படியொரு களை. வந்தவுடனேயே காலணிகளை கழட்டி எறிந்த படி “ அப்பா, நான் பத்து சீப்புக்களை விற்றுவிட்டேன். எப்படியென்று தெரியுமா?” என்று கேட்டு அவனே பதிலளிக்க ஆரம்பித்தான். “இந்த புத்த மடாலயத்திற்கு எத்தனை பக்தர்கள் தினமும் வந்து போகின்றார்கள். அதில் பலர் தூரங்களிலிருந்தும் வருகின்றார்கள். அப்படி வருபவர்களுக்கு முகங்கழுவிய பின்னர் சீப்பு இருக்குமாயின் தலைசீவி நேர்த்தியாக இருப்பார்கள். எனவே வழிபாடுகளின் போதும் நேர்த்தியினை உணர முடியும் என்று கூறினேன். உடனேயே நிர்வாகம் என்னிடம் பத்து சீப்புக்களை வாங்கி பக்தர்கள் உடைமாற்றுமிடத்தில் வைத்துள்ளார்கள்” என்று புளுகுடன் அண்ணன்காரனையும் நக்கலுடன் கடைக்கண்ணால் பார்த்தபடி கூறினான். தந்தை அதற்கும் அவனது முதுகில் தட்டி “நல்லது மகனே” என்று புன்னகையுடன் கூறினார். 

கடைசி மகள் ஒரு வாரத்தின் பின் திரும்பி வந்தாள். அண்ணன்கள் இருவரும் ஒருவித சிரிப்புடன் “ என்ன வியாபாரமாகியதா? எத்தனை விற்றாய்? ஒன்றாவது விற்க உன்னால் முடிந்ததா?” என்று கேலி கலந்த அக்கறையுடன் விசாரித்தனர். அந்த பெண்ணும் “நூறு சீப்புக்களை விற்றுள்ளேன்” என்று அடக்கமாக சொன்னாள். அண்ணன்களுக்கு நெஞ்சுவலி வராத குறை. பக்கத்தில் இருந்த அள்ளக்கை வேறு “ ஓ பொம்பிள பிள்ளை என்றால் வாங்குவார்கள் தானே” என்று இரு அர்த்தத்தில் கதைக்க ஆரம்பித்தது. துந்தை தன் மகளை பார்த்து “எப்படியம்மா உன்னால் அவ்வளவு விற்க முடிந்தது?” என்று வினவினார். பக்கத்தில் கதையளந்த அந்த அள்ளக்கையை கண்களால் எரித்தபடியே “அப்பா அந்த மடாலயத்திற்கு தினமும் பல நூறுபேர் வந்து போகின்றார்கள். எனவே அந்த சீப்புக்களின் விளிம்பில் புத்தனின் மொழிகளை வாக்கியங்களாக எழுதி பக்கதர்களுக்கு விற்றால் தினமும் தலைவாரும் போது இந்த வசனங்களையும் படிப்பார்கள். எனவே அது அவர்களுக்கு மனதிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று துறவிகளுக்கும் நிர்வாகத்திற்கும் விளக்கினேன். உடனே என்னிடமிருந்த நூறு சீப்புக்களையும் வாங்கிவிட்டார்கள். ஒவ்வொரு மாதமும் இவ்வாறு நூறு சீப்புக்கள் கேட்டுள்ளார்கள். நாம் விற்ற சீப்புக்களை வாங்கிய வெளிநாட்டு பக்தர் ஒருவர் தனக்கும் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.” என்று அமைதியாக கூறினாளாம். தந்தை சட்டத்தரணியை சந்திக்க நேரம் தேடினார் தன் வியாபாரத்தினை சட்டரீதியாக மகளிடம் ஒப்படைப்பதற்கு.

குறிப்பு 01. இக்கதை கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது சொல்லப்பட்ட கதை. இதை கொஞ்சம் அங்கங்கே மெருகூட்டி நான் எழுதியிருக்கின்றேன். எனவே இது என்னுடைய தனிப்பட்ட கதையல்ல. எல்லா கதைகளிலும் மூன்று மகன்கள் மட்டுமே “வியாபார புள்ளியான” தந்தைகளுக்கு இருப்பதுண்டு. இனிமேலாவது வியாபாரத்தினை தொழிலை கொண்டு செல்ல பெண் வாரிசுகள் பிறக்கட்டும். குறைந்தது கதைகளிலாவது இருக்கட்டும்.

குறிப்பு 02. தொழில் முயற்சியாண்மை என்பது எப்படி புத்தாக்கத்துடன் சிந்திப்பது என்பதாகும். மேலும் நேரத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி சிந்திக்கும் போது தான் நம் உற்பத்திகளை நாம் விற்பனை செய்ய முடியும். புத்தாக்கத்துடன் சிந்தியுங்கள் நண்பர்களே!
 

வியாபாரியா? தொழில்முயற்சியாளரா?

இன்றிலிருந்து என்னுடைய சுயவிபரத்தில்  “தொழில்முனைவர்” எனும் புதியதொரு பதத்தினை இணைத்துள்ளேன். 41  தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ள நான் அதற்குள் உள்ளடங்குவேன் என நினைக்கின்றேன். இன்று முதன் முதல் பதிவில் இது குறித்து பேச ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன். நான் ஈடுபடுகின்ற உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் சார் தொழில் முயற்சிகளுக்கு என தனித்தனியே பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். எனக்கும் Metering ஐ விடவும் Coaching  முறையில் விருப்பமும் ஈடுபாடும் அதிகம். எனக்கு அந்த வகையில் மூன்று Coaches இருக்கின்றார்கள். மாதமொரு தடவை இவர்கள் மூவருடனும் வழிகாட்டல் நிகழ்வு கட்டாயம் இடம்பெறும். இவர்களில் இருவர் நம் நாட்டவர் மூன்றாமவர் வெளிநாட்டவர். நாட்டில் இருக்கும் போது நேரடியாகவும் பயணங்களில் இருக்கும் போது இணையவழியிலும் இடம்பெறுவதுண்டு. இலங்கையில் இந்த தொழில் வழிகாட்டலுக்காக நாளொன்றிற்கு 20 இலட்சம் வாங்கும் ….. இருக்கின்றார்கள். இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் வழிகாட்டலில் முக்கியத்துவம் தொழில்துறைகளில் தேவை என்பதை மேற்கோள் காட்டவே. தற்போது உலக அரங்கில் முன்னிற்கின்ற பல தொழிலதிபர்களின் பின் நிற்பவர்கள் இவ்வாறான வழிகாட்டிகளே. 

பொதுவாக இவ்வாறான வழிகாட்டல்களின் போது பொய் பேசுவதும் மூடி மறைப்பதும் ஆரோக்கியமற்றதொன்றே. இது எமக்கு முதல் அமர்விலேயே சொல்லப்பட்டுவிடும். தொழிலை பொறுத்தளவில் தொழில் என்பது வேறு நாம் என்பது வேறு. ஆனால் நமக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பெரும்பாலும் நம்முடைய தொழிலிலும் பாதிப்பினை உருவாக்கும். எவ்வளவு பெரிய தொழில் அதிபராகவிருந்தாலும் அவரவருக்கென சில வெற்றிடப்பகுதிகள், மகிழ்வான தருணங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவையும் எமக்கு முன்னரே சொல்லப்பட்டுவிட்டதொன்று. 

சில மாதங்களின் பின்னர் எனக்கான நேரடிப்பயிற்சி இடம்பெற்றது. தொழில்சார் அடுத்த நகர்வு குறித்து வினாக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கான நியாயப்படுத்தல்கள், காரணங்கள் ஆராயப்பட்டன. முடிவில் இரு விடயங்களை என்னுடைய Coach எனக்கு சொல்லியிருந்தார். அதேவேளை இந்த அமர்வில் என்னால் 03 விடயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு குறித்துக்கொள்ளப்பட்டன.

01.வாழ்வாதாரமா? வணிகமா? – வியாபாரியா? தொழில்முயற்சியாளரா?: இந்த இரு வினாக்களும் மேம்போக்காக பார்க்கும் போது இலகுவானதாக இருந்தாலும் அதற்கு பின்னாலுள்ள தாற்பரியம் கனமானது. என்னுடைய … கேட்ட போது இதற்கான பதில்களை சொல்ல பல நிமிடங்கள் எனக்கு தேவைப்பட்டது. நாம் உழைப்பது நம் அன்றாட தேவைகளுக்கானதாகவிருந்தால் அது வாழ்வாதாரம். எம்முடைய சமூக அந்தஸ்து அல்லது தேவைக்கதிகமான பண சேமிப்பிற்கானது அல்லது குறிப்பிட்டளவு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் எனும் கனவிருந்தால் அது வணிகமாகும். அதேபோன்று பொருட்களை வாங்கி விற்றால் வியாபாரி. தேவை கருதி பொருட்களை அல்லது சேவையை உருவாக்குபவர் தொழில்முயற்சியாளர்.  

02.Civilization : இதற்கான நேரடி மொழிமாற்றமாக நாகரீகமான, முறையான சமூக வாழ்க்கை கொண்ட| என்று மெல்லியதான கருத்து பிறழ்வுடன் மொழிபெயர்க்கலாம். இம்முறை எனக்கு வலியுறுத்தப்பட்ட மிகமுக்கியமானதொரு விடயம் இது. எது நாகரீகம் அல்லது “முறையான” வாழ்க்கை என்று கேட்டால் அதற்கான பதில் அந்தந்த காலத்துடன் இணைந்தது என்பதே என் கருத்து. ஒரு காலத்தில் நிர்வாணம் என்பது பொதுவானது. பின்னர் வந்த காலத்தில் அதுவே அடிமைத்தனத்தின் அடையாளமாக்கப்பட்டு சமூகத்தில் அடிமட்டத்தினர் நிர்வாணமாக இருப்பதும் உயர் மட்டத்தினர் உடைகளுடன் உலாவுவதும் உருவாக்கப்பட்டது. அதற்கும் பின்னர் நிர்வாணம் கேவலமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக பெண்களது நிர்வாணம் சமூக குற்றமாகியது. சில காலத்திற்கு பின்னர் நிர்வாணம் பால்நிலை உடைப்பின் முக்கிய அடையாளமாகியது. இன்று நிர்வாணம் அலங்காரமாக பார்க்கப்படுகின்றது. இப்படி “நாகரீகம்” அல்லது “முறையானது” மாறிக்கொண்டேயிருக்கின்றது. அப்படியாயின் எதை பின்பற்றுவது? எப்படி நாம் “நாகரீகம்” அல்லது “முறையானது” ஆன வாழ்வியலை வாழ்வது? இதற்கும் என்னுடைய வழிகாட்டி நல்லதொரு மேற்கோளை காட்டியிருந்தார். முன்னர் சமூகத்தால் கொலைசெய்யப்பட்ட இரு தத்துவியலாளர்களது கருத்துக்கள் அவை. அவர்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னர் சொன்ன கருத்துக்கள் இன்று கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஏன் அன்று கொல்லப்பட்டார்கள் என்று தேடினால் அவர்கள் அன்று வாழ்ந்துகொண்டிருந்த சமூகத்தில் முன்வைத்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய பக்குவமோ அல்லது பண்போ அற்ற மனிதர்கள் முன் அவர்கள் உண்மையை நிரூபிக்க முயன்றமை தான். தத்துவங்களை கண்டறிந்தவர்களால் தான் வாழ்ந்த சமூகத்தின் இயல்பை உணரமுடியவில்லை. அல்லது அவர்கள் புரட்சிசெய்ய முயன்றமை தான். எனவே தொழில்முயற்சியாளர்கள் இந்த விடயத்தினை வியாபார நோக்குடன் அணுகவேண்டும். சில வேளைகளில் நாம் அறிந்த உண்மைகளை வெளியிடும் போது நாம் நிராகரிக்கப்படுவோம். அதற்கு நாம் பிழையென்பதல்ல அர்த்தம். சில நேரங்களில் எதிரில் இருக்கும் முட்டாள்களது கூட்டமும் காரணமாகலாம்.

03. Pain Point : ஒரு தொழில் முயற்சியாளர் கவனிக்க வேண்டியதொரு முக்கியமான விடயம் இது. அதாவது ஒரு வாடிக்கையாளர் சந்திக்கின்ற பிரச்சினை அல்லது சரி செய்ய நினைக்கின்ற விடயத்தினை இது குறிக்கும். உதாரணமாக ஒரு உணவு விடுதியில் குறிப்பிட்ட உணவு முடிந்துவிடுகின்றது. ஆனால் வாடிக்கையாளர் அன்றைய தினம் குறிப்பிட்ட உணவினை விரும்பி கேட்கின்றார் எனில் இது தான் அந்த புள்ளி. இவ்விடத்தில் மாற்றீடாக உணவுகளை சிபார்சு செய்தல், இனி வரும் காலத்தில் இவ்வாறின்றி உணவினை உடனடியாக தயாரித்து வழங்க ஆயத்தப்படுத்தல்களை மேற்கொள்ளல் என்பது தீர்வுப்புள்ளி எனப்படும். தொழில் முயற்சியாண்மையில் இந்தப்புள்ளியை அடையாளப்படுத்திக்கொள்ளுதல் மிக முக்கியமானது. அவ்வாறு இதனை அடையாளப்படுத்தும் போது தான் பொருட்களுக்கான கேள்வி, தரம் குறித்து நாம் புரிந்துகொண்டு செயற்பட முடியும். 

என்னுடைய வழிகாட்டி எனக்குச்சொன்ன இருவிடயங்கள் வருமாறு:
01.    எப்போதும் நாம் வேறு எம்முடைய உற்பத்தி, சேவை வேறு என்கின்ற தெளிவு எமக்கிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் எம்முடைய பொருட்களுக்கான தூதுவர்கள் என்பதை மறக்க கூடாது. எமது உடை, நடை, பாவனை, பொதுத்தளத்தில் இயங்கும் போதான சபை நாகரீகம் என அனைத்தும் எம்முடைய தொழிலில் தாக்கம் செலுத்தும்.
02.    எவ்வளவு தான் உழைத்தாலும் எமக்கான Pleasure point இருக்க வேண்டும். இதற்கான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் எனக்கு அழுத்தமான வழிகாட்டல் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் ஓடிக்கொண்டேயிருக்கும் என்னைப் போன்றவர்களது சுயம் தொலைந்து நாம் இயந்திரங்களாக மாற ஆரம்பிக்க முன்னர் இது குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

நான் நன்றாக வாசிப்பதுண்டு, நேரம் கிடைக்கும் போது திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. கடற்கரை போவதுண்டு. இது பற்றியெல்லாம் சொல்லிப்பார்த்துவிட்டேன். ஆனால் இதுவல்ல உன்னுடைய என்கிறார் வழிகாட்டி. நானும் நான்கு நாட்களாக சதாசர்வ காலமும் யோசித்துக்கொண்டுதானிருக்கின்றேன். எது எனது Pleasure point என்று மரமண்டைக்கு புரியுதேயில்லை.


பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை