Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

மெழுகென உருகும் இரவுகள்

1/3PCS LED Black Candle Lamp Creative Simulation Flame Candle Night Light  Tea Light for Party Home Decoration | Daraz.lk இந்த நாட்கள் உலகின் பல வடிவமைப்பாளர்களுடன் கழிந்துகொண்டிருக்கின்றது. பொதுவாகவே இரு பெண்கள் அல்லது பெண் குழு என்றாலே உடை, நகை பற்றித்தான் பேசுவார்கள் எனும் கற்பிதங்களை உடைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம். நிகழ்விற்காக அழைக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட தனித்தனி சிறு வீடுகளில் நால்வர் வீதம் தங்கியிருக்கின்றோம். யார் அந்த நால்வர் என்பது எம்முடைய தேர்வு. சிலர் ஆண்கள்- பெண்கள் என கலப்பாகவும் இருக்கின்றார்கள். எமது வீட்டில் நாம் இருவர். என்னுடன் தங்கியிருக்கும் வடிவமைப்பாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். எல்லோரும் கூட்டுச் சேர்ந்த பின்னர் எஞ்சிய நாம் இருவரும் இந்த வீட்டில் தங்கியிருக்கு முடிவுசெய்தோம். எனக்கும் ஒரு ஆணுடன் தங்குவதை விடவும் இவருடன் தங்கியிருப்பது இலகுதன்மையாக இருக்கும் என்று தான் தோன்றியது. 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வடிவமைப்பாளர்கள் இங்கு வந்து குமிந்துள்ளோம். கடந்த வருடங்களில் விருது வாங்கிய முதல் நூறு வடிவமைப்பாளர்களுக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துத. அத்துடன் இம்முறை விருது பெறும் புதியவர்களும் இணைந்துள்ளார்கள். என்னைப் போன்று சிலர் இவ்வருடமும் விருது பெறுகின்றார்கள். ஆக மொத்தமாக 140 பேரவளவில் இணைந்துள்ளோம். சிறிய நகரமொன்றில் எமக்கான தங்குமிடங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்த தங்குமிட ஒழுங்கமைப்பில் முக்கியமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் உண்டு.

1.    பொதுவாக நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பாலின அடிப்படையில் ஆண்களுக்கு தனி பெண்களுக்குத. தனியென தான் தங்குமிட வசதிகள் ஒழுங்கமைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்வில் அப்படியல்ல. நாம் யாருடன் தங்கப்போகின்றோம் என்பது எம்முடைய தனி விருப்பு மட்டுமல்ல பொறுப்பும் கூட. அதாவது யாருடனாவது தங்கிவிட்டு அவர் என்னை வலுக்கட்டாயப்படுத்தினார் என்றெல்லாம் புலம்ப முடியாது. நமது விருப்பும் பொறுப்பும் ஏற்கனவே எமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. 

2.    இங்கு ஆண் - பெண் என்கின்ற பாலின வேறுபாடு, தேர்வினை விடவும் பாலியல் விருப்புகள் தான் மோலோங்கி நிற்பதாகபடுகின்றது. அதாவது எமது குழுவில் lesbian and Gay போன்றவர்கள் தம்முடைய தேர்விற்கு முக்கியத்துவமளித்துள்ளார்கள். இரு ஆண்கள் தாம் வெளிப்படையாகவே Gay என்று சொல்லிவிட்டு தங்குகின்றார்கள் அல்லது பெண்களும் அவ்வாறு செய்கின்றார்கள். ஆனால் நம் ஊர்களிலுள்ளவர்கள் போன்று அதனை கேலி செய்வதுமில்லை. முறைத்துப்பார்ப்பதும் இல்லை. 

இதெல்லாம் பார்க்கவும் கேட்கவும் நன்றாகவிருந்தாலும் இந்த விடயம் எனக்கு கொடுத்துள்ள டுவிஸ்ட் இருக்கே அதனை சொல்லியே ஆகவேண்டும். ஏற்கனவே எமக்கு இந்த ஒழுங்கு குறித்து மின்னஞ்சலில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பலரும் தம்முடைய தங்குமிட தோழர்களை தெரிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வந்திறங்கிய போது விமான நிலையத்திற்கு வந்திருந்த ஒழுங்கமைப்பாளர்களுடன் இணைந்து தங்குமிடங்களுக்கு போகும் போது நானும் இன்னுமொரு பெண்ணும் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதால் எஞ்சியிருக்கும் எம்மிருவரையும் ஓரு வீட்டில் தங்கவைப்பதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக எனக்கு சொல்லப்பட்டு விருப்பம் கேட்கப்பட்டுத. நானும் இன்னுமொரு பெண்ணுடன் தானே தங்கவுள்ளேன் என்பதால் தலையை சந்தோசமாக ஆட்டியும் விட்டேன். என்னுடைய தங்கவுள்ள மற்ற பெண் வடிவமைப்பாளர் ஏற்கனவே தன்னுடைய நாட்டிலிருந்து முதல் நாள் வந்துவிட்டதாகவும் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் என்னுடைய தங்க அவரும் சம்மதம் தெரிவித்தாகவும் மேலதிகமாக சொல்ல எனக்கும் அப்பாடா என்று தானிருந்தது.

தங்குமிடத்தில் இறக்கிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினால் குட்டை முடியுடன் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பக்கில் சூர்யா மாதிரி ஒருவர் கதவை திறந்தார். அப்போது கூட என்னுடன் தங்க வந்துள்ள பெண்ணின் உறவினர் போல என்று தான் நினைத்து கையை குலுக்கிவிட்டு வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணின் பெயரைச்சொல்லி எங்கவர் என்று விசாரித்தால் இடி சிரிப்புடன் நான் தான் என்றார் இவர். முதன் முதல் என் ஆசியா புத்தி மண்டையில் குட்டிக்கொண்டது. எமக்குள் ஆண் என்றால் இப்படி பெண்ணென்றால் இப்படியென எழுதாவிதிகள் வைத்துள்ளோம் தானே. அதிலும் இவ்வாறான சமூகத்தினருடன் நீண்டகாலமாக இணைந்து பயணிக்கும் என்னைப்போன்றவர்கள் இன்னும் இவ்வாறான விடயங்களை தலைக்குள் வைத்திருப்பதனை என்னவென்று சொல்வது. எனக்கே என்னை நினைத்து வெட்கமாகவுள்ளது. 

மாற்றுப்பாலினர், பாலின விருப்புள்ளவர்களுடன் தொடர்பும் முன்னெடுப்புகளும் இருந்தாலும் இவ்வாறு தனியே தங்குவது இதுவே முதல் தடவை. வந்தவுடன் குளித்துவிட்டு வெளியே வந்தால் கையில் கோப்பியுடன் நிற்கின்றார் என் அறைத்தோழி. கதவைத்திறந்தவுடன் அவர் நின்ற தோரணையில் பயந்து கையில் கோப்பிக்கோப்பையை வாங்கியவுடன் நன்றி சொல்லி கதவை அடைத்துவிட்டேன் நான். சில நிமிடம் கழித்து தான் நான் செய்த மடத்தனம் புரிந்தது. மெதுவாக கதவைத்திறந்து வெளியில் எட்டிப்பார்த்தால் அவர் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் போனவுடன் சனலை மாற்றவா என்று கேட்டார். எனக்கும் இந்த குத்துச்சண்டை, கிறிக்கெட் எல்லாம் பெரிதாக பிடிப்பதில்லை. எனவே நடிக்காமல் “யெஸ் பிளீஸ்” என்றேன். ஆங்கில திரைப்படத்திற்கு மாற்றிவிட்டார். ஒரு சோபாவில் சுருண்டு படுத்தபடி நானும் மற்றதில் அமர்ந்தபடி அவரும் பார்த்துக்கொண்டிருந்தோம். எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியாது. எழும்பிய போது போர்வை போர்த்தப்பட்டு தலைக்கு தலையணையும் செருகப்பட்டிருந்தது. 

எழும்பிய பின்னர் தான் வீட்டவர்களுடன் கதைக்கவில்லை என்று தோன்றியது. வந்தவுடன் ஒலிச்செய்தி அனுப்பிவிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்கிவிட்டேன். வந்து நான்கு மணித்தியாலத்தின் பின் தான் இந்த ஞானோதயம் வந்துத. பறந்தடித்து வீட்டிற்கு அழைத்தால் அனைவரும் வீடியோ அழைப்பிற்கு வந்துவிட்டார்கள். கதைக்கும் போது என்னுடைய தோழி பின்னால் நடப்பதையும் பார்த்துவிட்டார்கள் .முதலில் யார் இந்த பொடியன் என்று தான் கேட்டார்கள். பொடியனில்லை பெட்டை பொறுங்கள் கதைக்க சொல்கின்றேன் என்று ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கதைக்கவும் கொடுத்தேன். கதைத்த பின் கூட என்ன இது ஆம்பிள்ளை போலுள்ளது குரலும் அப்படியே தான் என்றார்கள். நல்ல காலம் நம்மட ஆக்கள் இப்படியான நேரத்தில் தமிழில் பேசுகின்றார்கள். அல்லது நானும் மாட்டியிருப்பேன். முடிவில் பகிடியாக இவர் என்னுடைய Boy Friend என்று சொல்லிவிட்டு நானும் கட் பண்ணிட்டன். 

சிறிது நேரத்தில் அவரும் வந்து அமர்ந்து தன்னுடைய வீட்டாக்களுக்கு அழைப்பெடுத்து கதைக்க கொடுத்தார். கதைக்கும் போது அவரின் சகோதரி Are you .....'s Girl friend? என்று கேட்டார். என்னடா இது எமது ஊரில் வாயைப்பிளந்து பார்க்கும் விடயத்தினை இலகுவாக கேட்டு விட்டார் அதுவும் முதல் முறை பேசும் போதே என்பது ஆச்சரியம் தான். எமக்கும் அவர்களுக்குமான கலாசார இடைவெளியும் விளங்காமலில்லை. ஆனால் இதற்கு பின் தான் மதுரைக்கு ஏற்பட்டது சோதனை.  

அழைப்பை துண்டித்த பின்னர் இருவரும் சமைப்போமா என்று கேட்டார். சரியென்று எமக்கு வைக்கப்பட்டிருந்தவற்றினை வைத்து இலகுவான சமையலை இருவரும் செய்து முடித்தோம். சாப்பிடும் போது ஒரு மாறுதலுக்கு எனக்கு விருப்பமான candle light dinner இன்று தயார் படுத்துவமா? என்று கேட்டேன். தலையசைத்து விட்டார். வீட்டில் போதியளவு மொழுகுதிரிகள் இருந்தன. அவற்றினையும் நாம் சமைத்தவற்றினையும் வைத்து முன்னறையை தயார் செய்தோம். எனக்கு இங்கு வைக்க பூக்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் எனக்கும் பிடிக்கும் என்றேன். அருகில் கடையிருக்கின்றது. நேற்று இங்கு வந்தபின் மாலையில் உலாத்தப் போகும் முன் பார்த்தேன் என்றார். பத்து நிமிடம் பொறு வருகின்றேன் என்று உடனடியாக வெளிக்கிட்டும் போய்விட்டார். வரும் போது கையில் அவ்வளவு பூக்கள். அவற்றினையும் வைத்து அலங்கரித்து மின்குழிழ்களை அணைத்துவிட்டு எம்முடைய மெழுகுதிரி இரவை கொண்டாட ஆரம்பித்தோம். வழமை போன்று நான் மென்பானத்தினை அருந்த தனக்கு பியர் பிடிக்கும் என எமக்கு வைக்கப்பட்டதில் இருந்து எடுத்து அருந்த ஆரம்பித்தார். 

அதுவரை எம்முடைய பயணம் நாம் சமர்ப்பித்த வடிவமைப்புக்கள் குறித்து பேசியபடி இருந்த உரையாடல் தனிப்பட்ட விடயத்திற்கு திரும்பியது. போதையும் அவருக்கு சற்று ஏறிவிட்டதால் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்ததை நானும் உணரத்தொடங்கினேன். தான் குடும்பத்தில் கடைசி பிள்ளை என்றும், தான் படிக்கும் போது காதல் இருந்ததாகவும் அவள் தன்னை விட்டு போய்விட்டதாகவும் கூற ஆரம்பித்தார். அவரது காதல் கதையில் "She" வந்தது முன்னர் உறைக்கவில்லை. அடிக்கடி வர ஆரம்பித்த போது தான் கேட்டேன். தான் லெஸ்பியன் என்றும் தனக்கு காதலி இருந்ததாகவும் அவள் நினைவாக கையில் பச்சை குத்தியதாகவும் பின்னர் அந்த பிள்ளை வேறொரு ஆணை விரும்பி திருமணம் செய்துவிட்டதாகவும் கூறினார்.. கடைசியில் சொன்னது தான் ஹலைட். “ நான் உன்னைப் போன்ற தமிழ்ப்பெண்ணை காதலித்திருந்தால் என்னை விட்டுப்போயிருக்க மாட்டாள்” என்பது தான் அது.

சில ஆண்களிடம் இந்த வசனத்தினை கேட்டிருக்கின்றேன். ஒரு பெண் என் முன்னால் அமர்ந்து சொன்னது இது தான் முதல் தடவை. எனக்குள் பிரளயம் ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டதும் சமிபாடடையாமல் இடையில் நின்றுவிட்டது. போதாதற்கு எழுந்து அருகில் வர ஆரம்பித்தார். எனக்கு டென்சனாகி சடாரென எழுந்து அறைக்குள் போய் கதவை மூடிய பின் தான் போன உயிர் வந்தது. இரவுத்தூக்கமும் தொலைந்து போனது. எவ்வளவு நேரம் தான் போனை பார்ப்பது…? எப்போது தூங்கினேன் என்று தெரியாது விழிக்கும் போது அறை முழுவதும் நல்ல வெளிச்சம். கதவைத்திறந்து வந்து தானே ஆகவேண்டும். அன்று நிகழ்வின் ஆரம்ப நாள் வேறு…. 

வெளியில் வந்தால் சாப்பாட்டு மேசையில் கோப்பியுடன் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் இருந்தது. பின்னால் இருந்து காலை வணக்கத்துடன் மன்னிப்பும் கோரப்பட்டது. எந்தத் தவறும் உணரப்பட்டு மன்னிப்பு கேட்கப்பட்ட பின் மறுக்க என்னவிருக்கின்றது…? காலையுணவின் பின்னர் சிறிது நேரம் அமர்ந்து பேசினோம். நானும் என்னுடைய ஈர்ப்பு ஒரு பெண்ணின் மீது வருவதில்லை. நாம் நல்ல தோழிகளாயிருப்போம் என்று நேருக்குநேரே சொல்லிவிட்டேன். 

கடந்த நான்கு நாட்களாக இருவரும் நிகழ்விற்கு ஒன்றாகவே சென்று வருகின்றோம். அன்றும் நிகழ்வு முடிந்து வந்த பின்னர் நேற்று இரவு என்னிடம் பேச வேண்டும் என்றார். மீண்டும் வேதாளம் முருங்கை ஏறிவிட்டதோ என கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. இன்றும் ஏதாவது எடக்குமுடக்கு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கைகளை பற்றி அழுதார். மீண்டும் மன்னிப்பு கேட்டார். என்னை விரும்புவதாகவும் சொன்னார்.

என்னை விரும்புவது அவர் தெரிவு. நான் விரும்பவில்லை என்பது என் தெரிவு. ஆனால் அவருடன் அமைதியாக அன்று காலையில் அமர்ந்து பேசியது தனக்குப்பிடித்திருந்ததாக தெரிவித்தார். எனக்கு உண்மையில் ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருவர் மீதான ஈர்ப்பு சில நாட்களில் வந்து விடுமா…? ஒருவேளை முன்னைய தோல்விக்கும் இவ்வாறான அவசரங்கள் தான் காரணமா…? எதுவாகிலும் ஒரு பெண் என்னை நேசிப்பதாக சொன்னது இது முதல் தடவை. இதே விடயத்தினை நம்முடைய ஊர்களில் பொருத்திப்பாருங்கள். எவ்வாறு நாம் அவர்களை அணுகியிருப்போம்? 
ஆண்- ஆண், பெண்- பெண், ஆண்- பெண் காதல் எல்லாமே ஒன்றுதானென தோன்றுகின்றது. இவர் அழுவது அதனை நிரூபிக்கின்றது. ஏன் இந்த உறவுநிலையில் ஒருவரையொருவர் ஏமாற்ற நினைக்கின்றார்கள்…? நிதானமாக கையாண்டால் தான் என்ன? எல்லாம் அன்பு தானே…. இவரது அன்பின் தன்மை எனக்கு இன்னும் சரியாகப்புரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து என்னிடம் இது பற்றி பேசாத நேர்மை எனக்குப்பிடித்திருக்கின்றது. ஒருவேளை ஆணாயிருந்தால் மறுத்ததற்காக ஏதாவது ஏடாகூடமாக செய்திருக்க கூடும். அல்லது என்னைக் குறித்து கதை கட்டியிருக்க கூடும். குறைந்த பட்சம் என்னை கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்க கூடும். ஆனால் இது எதுவுமே இங்கு நிகழவில்லை. 

General Wax & Candle | Valentine's Day! 8 romantic candlelight dinner ideas  - General Wax & Candle – General Wax Candles 

தினமும் காலையில் சாப்பாட்டு மேசையில் எனக்குப்பிடித்த ….. உடன் ஏதாவதொரு நிறத்துடனான ரோஜா காத்திருக்கின்றது.. குளித்து விட்டு வரும் போது உணவுடன் அவரும் காத்திருந்து முந்தைய நாள் நிகழ்வினை கதைக்கின்றோம் நிறைய வடிவமைப்புக்கள் குறித்து பேசிக்கொள்கின்றோம்…. மாலையில் ரோம் நகரைச் சுற்றி வருகின்றோம். எனக்கு பிடிக்கும் என்று சொன்னதற்காகவே அநேக இரவுகள்       ஒழுங்குசெய்யப்படுகின்றது. 

ஆனால் கண்டதும் உடையை வைத்து ஆணென்றும், லெஸ்பியன் என்றவுடன் பாலுறவு வரையும் சிந்தித்த நான் இன்னும் “திருந்த இடமுண்டு” என்று எமது தேர்ச்சியட்டைகளில் குறிப்பிடப்படுவது போல் எனக்குள் சொல்லிக்கொள்கின்றேன். 

சொல்ல மறந்துவிட்டேன். “முதல் இளம் ஆசிய தமிழ்ப்பெண் கட்டட வடிவமைப்பாளர்” எனும் தலைப்பில் அடுத்த மாத "DWell" இதழில் என் பேட்டி வருகின்றது. கடந்த வருடம் 100 ற்குள் இருந்து இவ்வருடம் 75 ற்குள் வந்திருக்கின்றேன். என் தோழி இம்முறை .......  ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். உடை , நகைகளை குறித்து பேசுவதை தவிர்த்து வடிவமைப்புக்கள், வாய்ப்புக்கள், இயற்கையை நாசப்படுத்தாமல் உருவாக்கும் வடிவமைப்புக்கள் என்று நாம் பேசிக்கொண்டேயிருக்கின்றோம். உண்மையான அன்பென்பது நம்மை செதுக்கும் ஒன்று தானே

Dinner in Candle light மட்டுமல்ல ஒரு உறவை Handle with Care ஆக அணுகுவதும் இனிமையானதொரு அனுபவம் தான் 





நான் மீண்டும் எழுகிறேன்..........

 (Inspired by Maya Angelou’s “Still I Rise”)
 

நீங்கள்
என் வரலாற்றை
பொய்களால் எழுதி வைத்திருக்கலாம்.....
மண்ணுக்குள் என்னை
மௌனமாக புதைத்திருக்கலாம்.- ஆனால்
தூசியில் கூட
விதைகள் இருக்கின்றன என்பதை
நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
 
நான் சிரிக்கிறேன் என்றால்
அது அறியாமை அல்ல—நான் 
வாழ்கிறேன் என்பதற்கான
அறிவிப்பு.....
.
என் உடல் உங்களை
அசௌகரியப்படுத்தினால்,
என் குரல் உங்களை
பயமுறுத்தினால்,
அது என் குற்றமல்ல.
என்னை உடைக்க
நீங்கள் முயன்ற ஒவ்வொரு முறையும்
நான் இன்னும்
உயரமாக எழுகிறேன்......
 
கண்ணீரின் வரலாற்றிலிருந்து,
அடிமைத்தனத்தின் சாம்பலிலிருந்து,
பெயரற்ற பெண்களின் நினைவுகளிலிருந்து—
நான் எழுகிறேன்......
 
நீங்கள் என்னை
மறக்கச் சொல்லலாம்,
அழிக்க முயலலாம்...... - ஆனால்
என் எழுச்சி
என் உரிமை.
நான் எழுகிறேன்......
இன்னும்.....
மீண்டும்......
எப்போதும்......
 
04.02.2026 
 
 

வினாக்களுக்கான பதில்கள் -01

 

வணக்கம் நண்பர்களே>

நீண்ட நாட்களின் பின்னர் நேரங்கிடைத்துள்ளது. பயணங்களினாலும் குடும்பத்திற்கான நேர ஒதுக்கல்களினாலும் நிரம்பிவிட்டது என்னுடைய நாட்குறிப்பு. இந்த இடைவெளியில் 177 வினாக்களை அனுப்பியுள்ளீர்கள். அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிகள். அதில் பெரும்பாலானவை ஒத்த தொனியிலானவை மேலும் சில பதிலளிக்க முடியாதவை.  எனவே அனுப்பியவற்றிலிருந்து பதினைந்து முக்கிய கேள்விகளை தேர்ந்து அதற்கு பதிலளிக்க விழைகின்றேன். 

வினா 01: மீரா நீங்கள் இரு கைகளாலும் எழுதுபவர். வரைபவர் என்று அறிந்தேன் உண்மையாகவா? AK எனும் பெயரில் நீங்கள் பல வருடங்களாக வரைந்து வந்ததாகவும் தற்போது வரைவதில்லை என்றும்> உங்கள் ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகின்றேன். இது உங்கள் காதலுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றதே இவையெல்லாம் உண்மையா?

பதில்: பரவாயில்லையே நண்பரே என்னை குறித்து ஆய்வே செய்துள்ளீர்கள் போல. நீங்கள் அறிந்தது உண்மையே. ன்னால் இரு கைகளாலும் வரைய முடியும். ஆனால் இடது கையால் தெளிவாக எழுத முடியாது. இவ்வாறு இரு கைகளாலும் எழுதுபவர்கள் உலகில் ஒரு சதவீதமானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. எம்மைப் போன்றவர்கள் 

Ambidexterity என்று அழைக்கப்படுகின்றார்கள்.  AK  எனும் பெயரில் கிறுக்கியுள்;ளேன். பpன்னர் அவற்றினை முற்றாக நீக்கியதும் நானே. கடந்த வருடம் சில கிறுக்கியுள்ளேன். என்னுடைய இன்ஸ்ராகிராமில் உள்ளது. அதனை மீண்டும் கடந்த ஆகஸ்ட் 8 உடன் நிறுத்தி விட்டேன். ஓவியம் என்பது என்னளவில் மனதுடன் இணைந்த விடயம். மேலும் கட்டடப்பொறியில் சார் ஓவியங்கள் மட்டும் வரைகின்றேன். வரைவேன். ஆக நீங்கள் அறிந்தவை உண்மையே. எப்போதும் கலைஞர்கள் ஒவ்வொருவருள்ளும் ஒரு கிறுக்குபுத்தி ஒளிந்திருக்கும் என்பதையும் உங்களுக்கு சுட்டவிரும்புகின்றேன். இவ்வாறு நான் மட்டுமல்ல வரலாற்றில் பலர் செய்துமுள்ளார்கள். சுய அழிப்பு இது. 

வினா 02: நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் கேவலமான மனிதரை சந்தித்தித்துள்ளீர்களா?

பதில்: நான் கேவலமான மனிதரை சந்திக்கவில்லை. நான் சந்தித்தவர் கேவலமானவர். ஓரு கதை சொல்லவா? 

ஒரு இளம் பெண்> படித்த> பண்பான குடும்பத்தினை சேர்ந்தவள், குடும்பத்தில் பல ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண்ணாக பிறந்தவள் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒருவரை அடிக்கடி சந்திக்கின்றாள். அவரைப் பற்றிவிசாரிக்கும் போது அவருக்கு காதலி இருப்பதாக அறிகின்றாள். தனக்கும் அவருக்குமான வயது வித்தியாசம் பற்றியும் தெரிந்துகொள்கின்றாள். விலகி நடக்கின்றாள். இருவருமே ஒரு தளத்தில் இயங்குபவர்கள். ஆக விரும்பியோ விரும்பாமலோ குறித்த நபர் பற்றிய விடயங்கள் அவளுக்கு அறியக்கிடைக்கின்றது. சில மாதங்களின் பின்னர் அவர் வேற்றின பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிகின்றாள். திருமணம் அன்றும் யாருக்கும் தெரியாமல் அந்த நிகழ்வில் அண்மித்திருந்து அழுகின்றாள் கடந்து விடுகின்றாள். ஆனால் சிலரின் மனம் கண்ணாடி இல்லை தானே மாற்றி மாற்றி முகம் பார்த்துக்கொள்வதற்கு. இதே காலப்பகுதியில் அரசியல் காரணங்கள், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால் வெளிநாடு சென்று விடுகின்றாள். மீண்டும் அவள் நாடு திரும்பும் போது நிகழ்வொன்றில் அவளைக்காணும் குடும்பமொன்று தானாகவே வீடேறி பெண் கேட்க வீட்டவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்துவிடுகின்றாள். ஆனால் எல்லாம் பொருந்திய அந்த திருமண ஒழங்கில் இருவருக்கும் மணப்பொருத்தம் குறைவாகவிருக்கின்றது. இதனால் நிச்சயார்த்தம் பிற்போடப்படுகின்றது. தளும்பலுடன் நகர்கின்றது இந்த உறவு. இப்படியிருக்கும் கால கட்டத்தில் ஒரு பயிற்சியில் மீண்டும் அந்த முதல் நபரை எதிர்பாராமல் சந்திக்கின்றாள். அந்த பயிற்சியின் மூன்று நாட்களும் மிகுந்த பதற்றத்துடன் எதிர்கொள்கின்ற அவள் அந்த நபர் விவாகரத்து பெற்றுவிட்டதை எதேச்சையாக அறிகின்றாள். மீண்டும் மனம் முருங்கை மரமேறி விடுகின்றது. ஆனால் எந்த கட்டத்திலும் காயப்படுத்திவிடவோ அவரது பழைய காயங்களை பற்றி பேசிடவோ விரும்பாது பழக ஆரம்பிக்கின்றாள். பின்னர் தான் அவருக்கும் பல பெண்களுக்குமான உறவுகளை புரிந்தும் தெரிந்தும் கொள்கின்றாள். இதனால் அவர் மனஆழுத்தங்களால் காயப்படுத்தும் போதெல்லாம் தாங்கிக்கொள்கின்றாள். இதன் போது அவரின் கடுஞ்சொற்கள்> தூக்கியெறிதல்கள் > அவமானப்படுத்தல்கள் என எல்லாவற்றினையும் கடக்கின்றாள்.

ஆனால் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ஓரிரவு இந்தப்பெண் விருது பெறும் நிகழ்வில் தன் மாணவியுடன் கலந்துகொள்கின்றாள். இதன் போது முகநூலில் அந்த நபர் மாணவியுடன் உரையாடுவதை அறிகின்றாள். அந்த மாணவியும் வேற்றினத்தை சேர்ந்தவர்> விவாகரத்து > பல தொடர்புகள் என பிரச்சினைகளுக்குறியவர். இருவரும் நள்ளிரவில் உரையாடுகின்றனர். இங்கு அந்தப் பெண்ணைப்பற்றி அந்த நபரும் அந்தப்பெண்ணின் மாணவியும் பேசிக்கொண்டது மிக முக்கியமானது. ஆனால் அறமும் நேர்மையுமற்ற உரையாடல் அது. தன்னிடம் அந்தப்பெண் விருப்பம் கேட்டதாகவும் தான் இல்லையென்று சொன்னதாகவும், அந்தப்பெண்ணுக்கு வேறு யாரும் கிடைக்காமல் தன் பின்னால் அலைவதாகவும் சொல்லிவிடுகின்றார் அந்த நபர். இதனை அந்த மாணவி அந்தப்பெண்ணை அவமானப்படுத்தும் நோக்குடன் பொதுவில் சொல்லி விடுகின்றாள்.

போராட்ட குணம் கொண்ட அந்தப்பெண் தனக்கு நடந்ததை உரத்துசொல்லியிருக்க முடியும். ஆனால் அந்த நபர் பிறந்தநாளன்று காயப்படுத்திவிடக்கூடாதென நினைத்து சில நாட்களின் பின்னர் இது குறித்து மின்னஞ்சல் செய்கின்றாள். இன்று வரை அந்த நபர் அந்தப் பெண்ணிடம் ஒற்றை மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதை விட முரண் என்னவென்றால் சமூக ஊடகங்களில் நீதி. நேர்மை என்று வெட்டிப்பிளக்கும் அந்த நபர் தான் செய்த நேர்மையற்ற செயலை எண்ணி தலை குனியாதது.

ஆனால் இதற்குப் பின்னரும் சமூக ஊடகத்தில் இந்த நபரைப்பற்றி தரக்குறைவாக பேசப்பட்ட போது அந்தப்பெண் தன்னுடைய சுயகௌரவத்தினையும் மீறி இந்த நபருக்கு அழைப்பெடுத்துள்ளார். அதற்கும் பதிலளிக்கவில்லை. கள்ளமனங்கள் அப்படித்தானிருக்கும். தன் முன்னால் தான் விரும்பிய நபர் அவமானப்படுவதை பொறுக்காது தற்காலிகமான தன்னுடைய சமூக ஊடகங்களை அப்பெண் நிறுத்தி விடுகின்றாள். அப்போது கூட தன்னுடைய முகநூலில்  “எல்லாம் சுபம்” என்று அந்த நபர் பதிவிடுகின்றார்.

நீங்களும் கூட அவர் சொன்னது போல அவளுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை என்பது தான் சரி என்று நினைக்கின்றீர்களா? அல்லது அந்தப்பெண்ணுக்கு குறையுள்ளது என்பது உங்கள் அபிப்பிராயமா? அந்தப்பெண் இந்த வருடம் உலகில் உள்ள வடிவமைப்பாளர்களில் 100 பேருக்குள் வந்துள்ள அறிவாளி> அவளுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளவர் இன்னும் சில வருடத்தில் உலகின் தலைசிறந்த சந்திரசிகிச்சை நிபுணராகவுள்ளவர். பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நம்மிடம் எளிமையாக நடமாடுபவர்களை> எளிமையாக உடுத்துபவர்களை> அதீத அன்பாக உள்ளவர்களை குறைத்து மதிப்பிட்டு விடுகின்றோம். தில் கறைபட்டாலும் கழுவிவிட இரசாயனம் இருக்கின்றது. ஆனால் மனதில் ஒரு கேவலமானவனை நினைத்து அதற்காக சுயகௌரவம் இழந்து இன்று வருத்தப்படுகின்ற அந்த பெண்ணின் மனதை கழுவ ஏதும் மருந்திருக்கின்றதா? இப்போது சொல்லுங்கள் அந்த மனிதன் கேவலமானவர் இல்லையா? குறைந்த பட்சம் தான் செய்த தவறை கூட உணராதவன் மனிதனுள் அடங்குவானா? இது நமக்கு தெரிந்ததொரு சம்பவம். இதனைப் போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை இவரால் சீரழிக்கப்பட்டிருக்கும்? இரவில் 10.45க்கு ஒரு பிரச்சினைக்குறிய பெண்ணிடம் தன்னை நேசித்த பெண்ணைப் பற்றி அறமின்றி கதைப்பவன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்?

இவரைத்தான் நான் சில வருடங்களுக்கு முன்னர் வீதியோர போராட்டத்தில் முதன்முறை சந்தித்திருந்தேன்.

மீதி வினாக்களுக்கான விடை சில தினங்களில்....  

 

 

 

மனம் + மனம் = திருமணம்


பொதுவாகவே திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனும் சொல்லடை உண்டு. ஆனால் சொந்தங்கள் என்பது மருவித்தான் சொர்க்கம் என்றாகி விட்டதோ என்கின்ற சந்தேகம் பல நாட்களாக எனக்குண்டு. ஒரு குழந்தை பிறந்தவுடன் சொந்தங்களுக்கு இனிப்பு வழங்கப்படுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது இவர்களுடைய தலையீடு. என்ன பிள்ளை பிறந்திருக்கின்றது? எனத் தொடங்கும் அக்குழந்தை குறித்த உரையாடல். முதலாவதே பெண்ணா? குடும்பத்திற்கு கட்டாயம் ஆண் பிள்ளை வேண்டும் என்று அறிவுரையுடன் ஆரம்பிக்கும். சில வருடங்களின் பின் என்ன படிக்குது? பெண்ணென்றால் பெரிய பிள்ளையாகிட்டுதா என இச்சொந்தங்கள் கேட்கும். பின்னர் படிப்பு முடியும் தருவாயில் தலைபோடும். ஆண் என்றால் வேலை கிடைச்சுட்டா என்று கேட்கும் அதுவே பெண்ணென்றால் கல்யாணம் பேசலயா என்று கேட்கும். கல்யாணம் நடக்கும் போது கூப்பிட்டால் கொடுத்த கேக்கை சாப்பிட்டுக்கொண்டே யாரை முடிக்கின்றார்கள் என்பதை குறித்தும் குறை நிறை குறித்தும் ஆராயும். கல்யாணம் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டால் குழந்தையில்லையா என கேட்கும். மீண்டும் இந்த வட்டம் தொடரும். ஆனால் ஏதாவதொரு தருணத்தில் வாழ்க்கையில் சறுக்கிப்பாருங்கள் கைகொடுத்து தூக்க மட்டும் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படியாக அடுத்தவர்களுக்காக பேசப்படுகின்ற அல்லது நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்களில் இரு மன இணைவு இருக்கின்றதா என்று கேட்டால் அது பெரும்பாலும் விடையில்லா கேள்வியே

இந்தப்பதிவில் மூன்ற காலகட்டங்களில் இடம்பெற்ற காதல் வாழ்க்கை குறித்து பேச நினைக்கின்றேன். என்ன தான் மனதில் கடுப்பிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட்டு ஏதாவதொரு புள்ளியில் அவர்களை காயப்படுத்திவிடக் கூடாது என்பதால் சில பெயர்கள் மற்றும் தனியடையாளங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் முழுவதும் கற்பனையல்ல.  முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

கதை – 01 மட்டக்களப்பானும் - யாழ்ப்பாணத்தாளும்  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபலமான சட்டத்தரணி பிள்ளை அவர்கள். அவர் வாதாடிய எத்தனையோ வழக்குகள் இன்றும் மேற்கோள்காட்டப்படுகின்றன. இவர் ஒரு கட்டத்தில் இன்று தேசியத்திற்காக போராடுவதாக சொல்கின்ற ( சொல்கின்ற என்பதை மூன்று தடவை வாசித்துக்கொள்ளுங்கள்) கட்சியின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களித்த ஒருவர். இவர் வாரிசுகள் மற்றும் அள்ளக்கைகள் இன்றும் கட்சியை நடாத்துகின்றார்கள் என்பது கொசுறுத் தகவல். இந்தப் பிள்ளை அவர்களுக்கு இரு முகம் உண்டு. வெளியில் பிரபல்யமானவர், தன்னை கேட்பவர்களுக்கு உதவி செய்பவர், தானம் செய்வதில் கர்ணன் இப்படி நீளும் இவர் பெருமை. ஆனால் அடுத்த முகம் சாதிவெறி , பிரதேசவாத வெறி மற்றும் மதவெறி பிடித்த அசிங்கமான முகம். வீட்டின் உடைகளை சலவை செய்து வருபவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கென்றே வேறான திண்ணையும் கிண்ணமும் வைத்திருப்பவர். எந்த வில்லனுக்கும் ஒரு புள்ளியில் மென்மை நிலை காணப்படும் என்று உளவியல் சொல்கின்றது. பிள்ளையின் வீக்னஸ் அவரது ஒரே மகள். இரு ஆண்பிள்ளைகளுக்குப் பின் பிறந்த கடைசி மகள். ஆனால் குணத்தில் பிள்ளைக்கு நேரெதிர் ஆனவர். காதல் யாரைத்தான் விட்டது. அது பிள்ளையின் மகளாரையும் விடவில்லை. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது அங்கு பகுதிநேர விரிவுரையாளராக இருந்த மட்டக்களப்பு பொடியன் மீது வந்திருக்கின்றது. பொடியன் இந்து மதத்தினை சார்ந்தவர். காதலையும் கர்ப்பத்தினையும் மறைக்க முடியாதல்லவா? பிள்ளையின் அள்ளக்கையொன்று வீட்டில் கொளுத்திப் போட ஆரம்பித்தது பிரச்சினை. மகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு அவசரமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிள்ளையின் மகள் விரும்பிய மட்டக்களப்பான் லேசுப்பட்ட ஆளில்லை. மட்டக்களப்பின் பிரபல்யமான போடியாரின் மூத்த மகன். குடும்பத்திற்கென்றே இரு கோயில்கள் இருக்கின்றன. (இன்று 2024 இலும் இவர்கள் குடும்பம் முன்னின்று பூஜை செய்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.) இதெல்லாவற்றினையும் விட மண் மீதும் தன் இன மக்கள் மீதும் பற்றுக்கொண்டவர் இயக்க பெடியன்களுக்கு கூட பொருளாதாரம் படிப்பித்ததாக கதைகளுண்டு. மண்ணை நேசிப்பவர்கள் பொதுவாக பெண்ணையும் அதே உறுதியுடன் நேசிப்பதுண்டு. இந்த மட்டக்களப்பானும் பிள்ளையின் மகளாரின் ஆளுமையை நேசித்ததில் வியப்பிருக்கவில்லை. ஆனால் இவர் பயங்கர கொதியனும் விறுக்கனும் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பிள்ளை அவர்கள் மகளுக்கு கல்யாணம் பேச மட்டக்களப்பான் வீடேறி பேச முயல பிள்ளையின் கோபமும் மட்டக்களப்பானின் விறுக்குத்தனமும் முட்டிக்கொண்டதில் பிள்ளையின் மகள் அனைத்தையும் விட்டு மட்டக்களப்பான் வாங்கிக்கொடுத்த உடுப்பை மட்டும் மாற்றிவிட்டு வெளியேறி விட்டார். “அவனை விட்டுவிட்டு வந்தால் , மறந்திட்டு வந்தால் அல்லது அந்த மட்டக்களப்பான் செத்தால் தான் எனது மரண அறிவித்தலில் கூட மகளின் பெயர் வரவேண்டும்" என்று தன் மகன்களிடமும் குடும்பத்தினரிடமும் சத்தியம் வாங்கி மகளை தலை மூழ்கிவிட்டார் பிள்ளை. 

தன் வருங்கால மனைவியுடன் மட்டக்களப்பு வந்தவருக்கு “வேதக்காரப் பிள்ளை எப்படி மருமகளா வரலாம். கொண்டு போய் விட்டுட்டு வீட்டுக்குள்ள வா என்டு போட்டார் அரிவாளைப் போடியார். விறுக்கு குணம் சும்மாயிருக்குமா? 

சரி இரண்டு பக்கமும் வேண்டாம். எனக்கு நீ உனக்கு நான். எந்தக்காலத்திலும் இரு பக்கத்திலும் எதற்கும் போய் நிற்கக்கூடாது. அப்படி நின்றால் நம் காதல் செத்து விட்டது என்ற அர்த்தம் என்று மட்டக்களப்பான் எடுத்த முடிவிற்கமைய சைவ நாராயண போடியாரின் மகனும் பிரபல கத்தோலிக்க சட்டத்தரணி பிள்ளையின் மகளும் கத்தோலிக்க முறைப்படி மரியாள் தேவாலயத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு மாமாங்கப்பிள்ளையார் கோவிலில் தாலி கட்டி எளிமையாக வாழ ஆரம்பித்தார்கள். வாழ்தலில் மனம் தானே கணக்கு. முன்னூறு முக்கோடி தேவர்களின்  வாழ்த்துக்கள் அதற்கு போதுமானது தானே 

இந்தக்கல்யாணத்திற்கு எந்த சொந்தமும் பொறுப்பேற்றிருக்கவில்லை. 

பிற்குறிப்பு: திருமணத்தின் பின்னர் இந்தத்தம்பதிகள் செல்லச்சண்டைகள் போடும் போது “என்னை வீட்டை விட்டு வரச்சொல்லி அப்பாவோட சண்டைபோட்ட நேரம் உடுப்பு வாங்கி தந்தீர்களே , அந்த நிறம் எனக்கு பொருத்தமாகவா இருந்தது? உங்களுக்கு உடுப்பெல்லாம் பார்த்து வாங்கத் தெரியா என்று பகிடி பண்ணுவாறாம் மட்டக்களப்பானின் மனைவி

இரண்டாம் கதை விரைவில் பதிவிடப்படும்.........



அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு......

அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு...

இன்றுடன் என் வாழ்க்கையின் புதியதொரு வருடத்தில் காலடி வைக்கின்றேன். இதற்கு முதற்கண் அந்த இறைவனுக்கும் எனது உள பலமாயிருந்து வழிநடத்திக்கொண்டிருக்கின்ற உங்கள் இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். இத்தனை வருடங்கள் என் ஆயுளை கடந்துவிட்டேன் என்பது சற்றே வலி கலந்த மகிழ்ச்சியே. வலி - இன்னும் சில காலம் தான் உள்ளது என்பதற்கு மகிழ்ச்சி- இத்தனை வருடம் வாழ்ந்துவிட்டேன் என்பதால்…. 

கடிதங்கள் என்பது தூரங்களின் வடிவம்…. அதனால் தான் என்னை விட்டு தூரங்களில் இருக்கின்ற உங்களிருவருக்கும் விடுதியிலிருந்து கடிதம் எழுதுகின்றேன். என்னால் வார்த்தைகளை விடவும் வரிகளில் தான் உணர்வுகளை கொட்ட முடிகின்றது என்பது இன்னுமொரு காரணம். அப்பா, அம்மா உங்களிருவருக்கும் என் மீதான இரு தனித்தனி கனவுகள் உண்டு. அதில் அப்பா உங்களது என் கல்விசார் கனவினை மிகவும் அண்மித்துவிட்டேன். அம்மா உங்களின் என் வாழ்க்கைத்துணை குறித்த கனவிற்கு விரைவில் என் சம்மதங்களை அளிப்பேன். ஆனால் அதற்கு எனக்கு சில காலங்கள் தேவை சில காயங்களை ஆற்றுவதற்கு…..  நானும் தம்பியும் ஒவ்வொரு பிறந்த தினத்திலும் உங்களுக்கு எழுதுகின்ற கடிதங்களில் போட்டி போட்டுக்கொண்டு எங்களது சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் முதல் சாதனைகள் வரை எழுதியிருக்கின்றோம். …தூரங்களில் இருக்கும் உங்களிருவருக்கும் எமது சின்ன வலிகளை கூட மிகவும் வேதனை தரும் என்பதால் வலிகளை நாம் சொல்வதில்லை….இம்முறையும் தம்பியின் கடிதம் அப்படித்தானிருக்கும் என நம்புகின்றேன். ஆனால் என்னால் முடியவில்லை… அல்லது உங்களிருவருடமும் என்னால் நடிக்க முடியவில்லை.; கதைக்கும் போது குரல் இடறினால் தடுமல் என்று சமாளிப்பேனே அப்படி சுயபரிசோதனைக்காக எழுதுகின்ற இக்கடிதத்திலும் சமாளிக்க எனக்கு விருப்பமில்லை. இவற்றிக்கெல்லாம் முன் உங்களிருவரிடம் நான் இருவேறு கேள்விகளையும் பொதுவான கேள்வியொன்றினையும் கேட்க விரும்புகின்றேன். எனக்கு கட்டாயம் பதிலும் வேண்டும். 

அப்பா பேண் இல்லாத உங்கள் தலையில் பேண் எடுக்கச்சொல்லி நான் தலைபார்க்கும் நேரத்தில் கண்ணயவீர்களே அப்போதெல்லாம் “அப்பா… அப்பா” என்று எழுப்பி கேள்விகளை கேட்பேனே நீங்களும் சிரித்துக்கொண்டு பதிலளிப்பீர்களே அப்படியொரு சந்தர்ப்பமாக இதையும் நினைத்து நீங்கள் புன்னகைப்பது எனக்கு அருகில்  நீங்கள் இல்லாவிட்டாலும்  எனக்குத் தெரிகிறது. “நாம் போகின்ற பாதை சரியானால் நம்மை காப்பதற்கும் நம்மோடு கைகோர்த்து நடப்பதற்கும் பலர் இருப்பார்கள்” என்று ஒரு நாள் சொன்னீர்களே அப்பா. இந்த சமூகத்தின் பிரதிநிதியொருவர் என்னை நன்றாக அறிந்தவர் நான் நடத்தை கெட்டவள் என்று உரக்கச்சொன்ன போது நீங்கள் சொன்ன அந்த பலர் மௌனமாக தான் கடந்தார்கள். மௌனங்கள் என்பது சம்மதம் தானே…. இதுவரை கவலைகளால் நான் தலையணை நனைத்த நாட்கள் உண்டு. ஆனால் உறுத்தல்களால் புரண்டு படுத்த நாட்கள் என் இரவுகளில் இருந்ததில்லை. அப்படியென்றால் நீங்கள் சொன்ன சமூகமும் அதன் தர்ம நீதிகளும் மாறிவிட்டதா அப்பா?

நீங்கள் தானே அம்மா கோபம் -ரௌத்ரம் இரண்டிற்கும் வேறுபாடுண்டு. கோபம் என்பது இடம், பொருள், நபர் பார்த்து வருவது… ரௌத்ரம் என்பது நம்மவர்கள் என்றாலும் காய்வது என்று சொல்லித்தந்தீர்கள். நான் அண்ணா என்று மனசார பழகியவர். வயது வந்த குழந்தையின் தந்தை. விவாகரத்து கூட ஆகாதவர். என்னை தன்னுடைய கடைசித்தங்கையாக அல்லது முதல் குழந்தையாக கொள்ள வேண்டியவர். எப்படி தன் காமத்தை காதல் என்ற பெயரில் என்னிடம் சொல்லலாம்??. அவர் அனுப்பியவற்றினை விளங்கிக்கொள்ள எனக்கு விடுதி அக்காக்களின் உதவி தேவைப்படும் அளவுக்;கு என் முதிர்ச்சியின்மை இருந்திருந்தது. நீங்கள் சொன்ன ரௌத்ரம் என்னுள் இருந்ததால் தான் அவர் எவ்வளவு பெரிய போராளி என்கின்ற போதும் உரத்துக்கத்தினேன். ஆனால் ரௌத்திரங்களுக்கான தீர்ப்புக்களும் பக்கசார்பானவை என ஏன் எனக்கு சொல்லித்தரவில்லை? 

அம்மா- அப்பா உங்களுக்கு சிலவருடங்களுக்கு முன்னைய சம்பவம் ஞாபகம் இருக்கின்றதா? நாம் அருவரும் கூடியிருந்த பொழுதில் “அதெப்படி ஏழு வருடங்கள் அடிக்கடி பேசாமல் காதலித்து காத்திருந்து கல்யாணம்; கட்டினீர்கள்?” என்று தம்பி கேட்டதற்கு “காதல் என்பது இரு மனங்களுக்கிடையான ஒலி” என்று அம்மா பதிலளித்தது இன்றும் என்னுள் பதிவாக பத்திரமாக இருக்கின்றது. நீங்கள் அதை புன்னகையால் ஆமோதித்ததையும் என்னுள் சேமித்து வைத்திருக்கின்றேன். என்னுள்ளும் ஒரு ஒலி கேட்டிருந்தது அப்பா… ஆனால் அது என்னை எல்லோரிடமும் விட்டுக்கொடுத்தது, நான் பெரிதாக நினைக்கின்ற ஒழுக்கத்தை எல்லோர் முன்னிலையிலும் கேள்விக்குட்படுத்தி விட்டு மௌனித்திருக்கின்றது. அன்பும் நம்பிக்கையும் தான் நம்முள்ளான ஒலிக்கு அத்திவாரம் என்றால் என்னுள் கேட்ட ஒலி பொய்யா? இதற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுத்தந்ததை போல் சேர்ந்து தான் பதிலளிக்கவும் வேண்டும். 

முன்பெல்லாம் விடுதி வாழ்க்கை என்பது உங்களனைவரையும் பிரிந்து வாழ்வதலான வலி மட்டுமே… இப்போதெல்லாம் ஏதோவொரு தனிமை, வெற்றிடம், சொல்லிட முடியாத வேதனை எல்லாம் என்னை சூழ்ந்திருப்பதாக படுகின்றது. எனக்கு மட்டும் சொந்தமான உரிமையுடனான தோள் எனக்குத் தேவைப்படுவதாக உணர்கின்றேன். என் கோபங்களிலுள்ள நியாயங்களையும் மௌனத்திலுள்ள வலிகளையும் உணர்கின்ற உள்ளமொன்று தேவைப்படுகின்றது. அப்பா! மட்டக்களப்பை சேர்ந்த நீங்கள் யாழ்ப்பாணத்திற்காகவும், அம்மா! யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீங்கள் மட்டக்களப்பிற்காகவும் சண்டை போடுவீர்களே அப்படி மண்ணைக்கூட காதலுக்காக மாற்றி நேசிக்கின்ற ஒருவர் எனக்கு வேண்டும். என்னவருடனான அந்த குட்டிச் சண்டைகளில் கூட மண் மீதான காதல் மட்டுமல்ல என் மீதான காதலும் இருக்க வேண்டும். அந்தக்காதல் என்னை மேலும் மேலும் செதுக்க வேண்டும். நான் நடக்க தொடங்கிய பின்னும் கீழே விழுந்துவிடுவேன் என்று கைபிடித்து கூட்டிப்போய் சேர்ப்;பீர்களே இப்போதும் உரிய கைகள் என் விரல்களை உரிமையாக பற்றும் வரை என்னை என் விரல்களை விட்டு விடாதீர்கள். விழுந்துவிடுவேன்…..சிறு வலியை கூட தாங்கும் சக்தி எனக்கில்லை. 

அப்பா! நடித்து வாழ்தலின் வெற்றி, அதனால் கிடைக்கும் சலுகைகள், என் முதுகில் குத்துபவர்கள் யார்? என்னுடன் இறுதி வரை பயணிக்கப்போகின்றவர்கள் யார்? தேவைகளுக்கு மட்டும் என்னை பயன்படுத்திக்கொண்டவர்கள் யார்? எவ்வளவு தான் நச்சுப்பாம்பிற்கு பால் வார்த்தாலும் அது தன் பிறவி குணத்தை விடுவதில்லை என்று  கடந்த வருடங்களை விடவும் பல படிப்பினைகளை இந்த கடைசி 365 நாட்களும் எனக்கு கற்றுத்தந்திருக்கின்றது. அம்மா! நான் சீதையின் தீக்குளிப்பை வியர்ந்ததுண்டு ஆனால் எப்போதும் நேர்மையானவர்கள் தான் தீக்குளிக்கின்றார்கள். தீயென்பது ஹோமம் வளர்த்து மட்டும் குதிப்பதல்ல வலியுடனான மௌனங்களும் ஒருவகையில் தீக்குளிப்பு தான். 

என் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன்பும்…என் விரல்களை என்னவனிடம் கோர்ப்பதற்கு முன்பும் எனக்கு உங்களிருவரிடமும் இருந்து சிறு அணைப்பு தேவையாயிருக்கின்றது. அந்த அணைப்பின்போதும் அழுதுகொண்டு “எங்கள் குழந்தைகளுக்கும் ரௌத்திரம், நீதி, அந்த ஒலி….மௌனம் இதைத்தான் சொல்லிக்கொடுப்போம்” என்று தான் உறுதியுடன் முனுமுனுப்பேன். நீங்கள் என் குழந்தைகளை வளர்க்க நேரும் போதும் இவற்றினையே சொல்லிக்கொடுங்கள். மௌனங்களின் வலிமையையும் மரியாதையையும் கற்றுக்கொடுங்கள். ஆனால் அதீத மென்மையாக என்னைப்போலல்லாமல் அவர்களை சற்று கடினமானவர்களாக வளருங்கள். இந்தளவு வலிகள் என் குழந்தைகளுக்கும் வேண்டாம். 

என் ஆயிரம் அன்பு முத்தங்களுடன் இம்மடலை முடித்துக்கொண்டு கடவுளிடமும் காலத்திடமும் கொடுத்துவிட்டு நகர்கின்றேன். உங்களிருவரிடமும் இருப்பதை போன்று; நிச்சயம் இந்த மீராவின் கேள்விகளுக்கான பதில் நான் வணங்குகின்ற கடவுளிடமும் என்னை நகரவைக்கின்ற காலத்திடமும் இருக்கும். பதில்களுக்காக காத்திருக்கின்றேன். இந்த வலிகளும் ஒரு நாள் என்னைக் கடந்து போகும்.
 
உங்கள் அன்பு மகள்
மீரா

கழுவப்படுகின்ற அடுத்தவர் சுயங்கள்......


கிட்டடியில  எந்த சமூக ஊடகத்திலும் பதியப்படுகின்றதொரு விடயம் “இசையமைப்பாளர் யுவன் மதம் மாறிவிட்டார்” என்பது. இது பற்றி பலரும் பலவாறு விமர்சனங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலயும் சிலதுகள் “கள்ளக்காதலி”க்காக தான் அவரு மதம் மாறினாரு என்று வேறு பதியுதுகள். இந்த பதிவ வாசித்த பின் தான் இத பற்றி நாலு வார்த்த சொல்லனும் என்டு இத நான் பதியிறன்….

இந்த மதமாற்றம் என்ற விஷயம் என்னளவில் அவரவர் மனம் சார்ந்ததொன்று என்பது என் கருத்து. நாம் சிலவேளை யாராவது ஒரு வயதானவரையோ அல்லது ஒரு தாயைப்போல நம்மை கவனிப்பவரையோ “அம்மா” என்று அழைப்பதில்லையா? அல்லது அவருக்கு தாய் ஸ்தானத்தினை அளிப்பதில்லையா? அதற்கான நாம் கட்டாயம் அவர் வயிற்றில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது போல் தான் மதமும். எமக்கு பிடித்தால் அதை ஏற்பதில் தவறென்ன…? அதற்கு கட்டாயம் ஏதேனும் காரணம் தான் இருக்க வேண்டுமா……?
 
இதவிட முக்கியமானது ஓருவர் என்ன மதத்திலிருந்து மாறினாரோ அம் மதத்தவர் அவரை இகழ்வதும் அவர் மாறிய புதிய மதத்தவர் அவரை புகழ்வதும்….. 

ஒருவனுக்கு “மதம்” என்பது அவன் பிறப்பினால் வருவதொன்று. இந்து தாய் தந்தைக்கோ அல்லது கிறிஸ்தவ தாய் தந்தைக்கோ அல்லது வேறேதும் மத தாய் தந்தைக்கோ பிறப்பதால் தான் எமக்கு எமது பெற்றோரின் மதம் அடையாளமாக்கப்படுகிறது. இதையே நாம் வளர்ந்த பின்போ அல்லது வேறு மதங்களை புரிந்த பின்போ அல்லது வேறு மதம் எம்மை கவர்ந்த பின்போ மாற்றிக்கொள்வதில் தவறென்ன இருக்கிறது??? மதங்கள் என்பது வழிகளே அன்றி சேரும் இடம் ஒன்று தான். எந்த வழியில் போனால் என்ன அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை அது ஒருவரது சுதந்திரம்.

இந்து மதத்தினை விட்டு விலகி புத்தர் கட்டியவளை கைவிட்டுட்டு போதி மரத்தின் கீழ் பரிநிர்வாணம் அடைந்ததை கொண்டாடி அவர் தம் கருத்துக்களை “அஹிம்சை” வழிநடத்தல்கள் என்று பின்பற்றும் நாம் யுவனின் மதமாற்றத்தினை பற்றி அவதூறு பேசுவது ஏன்?

பொதுவாகவே நமக்கெல்லாம் இருக்கும் ஒரு பழக்கம் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்வு குறித்து விமர்சிப்பது. நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் ஏழெட்டு மனைவி வைத்திருப்பார்…. முன் வீட்டு ஆன்டி மதம் மாறியிருப்பா…. ஏன் நம்ம வீட்டில யாராவது கூட ராவா குடிக்கிறவங்க இருப்பாங்க… இவங்களை கேட்க நமக்கு முடியாது! ஆனா ரஹ்மான் மதம் மாறினா பிரச்சினை, யுவன் மாறினா பிரச்சினை, வாலி குடிச்சா பிரச்சினை… நம்ம கண்ணுல இருக்கிற தூசிய துடைக்க முடியல இதுக்குள்ள அடுத்தவன் கண்ண ஆராயனுமா? இதுக்கு இன்னொரு காரணமும் இருக்குங்க பக்கத்து வீட்டிலயோ இல்ல நம்ம வீட்டுலயோ சவுண்ட உயர்த்தினா பெரிய சிக்கலாயிடும் ஆனா ரஹ்மான், யுவன், வாலி எல்லாம் நம்ம பதிவ பார்க்கப்போவதும் இல்ல மறுப்பு சொல்லப் போவதும் இல்ல!!!

ஆக அமேசன் காட்டில மரம் வெட்டுறத பற்றி யோசிக்கிறம்…. நடக்கிற வழியிலுள்ள புல்ல புடுங்க முடியல என்பது தான் நிஜம். பிழை (ஒருவருக்கு பிழை என்பது இன்னொருவருக்கு சரி) விடாத மனிதன் உண்டா? அல்லது தன் இஷ்டப்படி சுதந்திரமாக வாழ முடியாதா??

ஒருவனது சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி வரை உள்ளது. அந்த சுதந்திரம் சமூகத்தினையோ அல்லது தனிமனிதனையோ பாதிக்காதவரை அவனது சுயம் பற்றி ஆராய நமக்கு என்ன தகுதியிருக்கிறது??? ஒருவரது திறமைகளை இரசிப்போம், உள்வாங்குவோம், பாராட்டுவோம்!!!

அடுத்தவர் சுயங்களை விமர்சிக்க வெளிக்கிட்டு நம் சுயங்களை தொலைக்காமல் இருந்தா சரி!! மற்றவன் சீலய வெளுக்க முதல் நம்ம உடுப்ப முதல்ல பார்க்கனும்….. அதில இருக்கிற கறைய கழுவவே நமக்கு நேரமில்ல…. இதுக்குள்ள……. தேவையா மச்சான்ஸ்???

வாழ்வெனும் மலர்……

அழகான பூவொன்றினை கவிஞன் ஒருவன் கண்டான். அரிய வகையான அம்மலரினை கண்டதிலிருந்து கவிஞனுக்கு கவிதை கொட்ட ஆரம்பித்தது. அவனது கவி வரிகளில் தம்மை மறந்த இரசிகர்கள் கற்பனையிலேயே அந்த மலரினை காணத்தொடங்கினதும் அல்லாமல் விரும்பவும் தொடங்கினர்.

இதே மலரினை ஆராய்ச்சியாளன் ஒருவனும் கண்டான். அந்த மலரை பிரித்து
 மேய்ந்து அதன் தாவரவியல் குடும்பம் தொடங்கி மகரந்தம் எப்படி பரவலடைகிறது என்பது வரை துல்லியமான ஆராய்ந்து பலவித ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தான். விருதுகளும் கிடைத்தன.


இவ்வகை மலரினை பக்தன் ஒருவன் கண்டான். அண்டாசராசரங்களையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் பாதகாணிக்கை ஆக்குவதே அம்மலருக்கான சிறப்பு என்று என்று எண்ணிணான். அம்மலரினை பறித்து இறைவனின் பாதமலர் சாற்றினான்.

 
ஓவியன் ஒருவன் கண்டான். பல கோணங்களிலும் நின்று பார்த்து அதன் அழகை கண்டு பிரமித்தான். தன் ஓவியத்திறமையால் அம்மலரினையே பிரதி எடுத்ததினை போன்று ஓவியம் தீட்டினான். பல கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினான். பலர் அவனை வியந்து பாராட்டினர்.

 
ஒரு பெண் இப் பூவினை பார்த்தாள். அதன் அழகில் ஈர்க்கப்பட்டாள். பறித்து தலையில் சூடிக்கொண்டாள். காலையில் சூடிய மலர் மாலையில் வாடியவுடன் தூக்கியெறிந்து விட்டாள்.




மேற்கூறிய உதாரணங்களை மீண்டும் வாசித்தீர்களாயின் ஒவ்வொரு உதாரணங்களிலும் பலவித ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்துள்ளதை விளங்கிக்கொள்வீர்கள்.

இப்படித்தாங்க நம் வாழ்க்கை எனும் மலரும். அதுவொரு அதிசய மலர். அரிதானதொன்று. மலர் எப்படி காலையில் மலர்ந்து மாலையில் வாடி விடுகிறதோ அப்படித்தான் நம்முடைய ஆயுட்காலமும். அதை நாம் எப்படி வாழ்கின்றோம் , எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகின்றோம் என்பதில் தான் நமது வாழ்வின் பெறுமதியே இருக்கின்றது. எப்படியும் வாழலாம்….. இப்படியும் வாழலாம்…. ஆக வரையறைகள் கூட நம் கையில் தானுண்டு. வாழ்கின்ற இந்த சொற்பக் காலத்தில் அர்த்தமுள்ளதாக வாழ்கின்றோமா….? சிந்திப்போம்.

அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க?

கண்ணாடியை பாவிக்கும் போது கவனமாக கையாள வேண்டும் தவறுதலாக விழுந்துவிட்டால் சுக்குநூறாகிவிடும்…. சிலவேளை அதன் பெறுமதி கருதி நாம் சிதறிய துண்டுகளை ஒட்டிக்கொள்வோம். ஆனால் என்ன தான் சொல்லுங்க அதனை பழைய மாதிரியே கையாள முடியாது… வேணுமென்றால் காட்சிப்பொருளாக வைத்துக்கொள்ளலாம்.. கண்ணாடியில் சிறு கீறலோ வெடிப்போ ஏற்பட்டு விட்டால் அவை என்றோ ஒரு நாள் விரிசல்களாக மாறிவிட கூடும்…. அது போல் என்னளவில் நான் எப்போதும் அன்பு என்பதை கண்ணாடிக்கு ஒப்பிடுவதுண்டு…. எவ்வளவு நெருக்கமாக நாம் அடுத்தவர்களுடன் பழகினாலும் சிறு மனவருத்தங்கள் அல்லது சிறு சொற்களே உறவுகளுக்கிடையில் பிளவுகளை உருவாக்கக்கூடும். இப்பிளவுகள் உடனடியாக தரையில் விழந்த கண்ணாடியாக சிதற வேண்டும் என்பது கட்டாயமல்ல.. இன்று சிறிதாக தெரியும் விடயங்கள் நாளை உறவுகளுக்கிடையில் பெரியதொரு பகைமையை நிச்சயம் ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகமொத்தத்தில்
“Handle with Care” என்பதாக உறவுகள் அமைய வேண்டும் என்பது என் கருத்து. 
இதுதொடர்பில் என் கருத்துடன் மட்டும் நிற்காமல் “அன்பென்றால் உங்கள் பார்வையில் என்னங்க? உங்களுடன் பழகுபவர்கள் அல்லது நீங்கள் பழகுபவர்களை வைத்து அன்பென்றதை எதற்கு ஒப்பிடுவீர்கள்?” என்று என் நண்பர்கள் சிலர்….. விடுதித்தோழிகள்…. அலுவலக சகபாடிகளிடம் கேட்டவேளை அவர்கள் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள்…….

தாயிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் சிசுவாக நாம் நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். தாய்-சிசு உறவானது அங்கக ரீதியானதொரு பிணைப்பாகும். அதில் தொடர்புபடுத்துதல் என்பது அறவே இல்லை. குழந்தையானது தாயின் அங்கம் அல்லது நீட்சி போன்றது. மேலும் அது தாயின் சுய-அன்பு எனும் வளையத்தனுள் பாதுகாக்கப்படுகிறது. பிறகு தந்தை மற்றும் பிற குடும்ப அங்கத்தினர் அக்குழந்தைக்கு அறிமுகமாகிறார்கள். ஆனால் உறவில் எதுவும் அடிப்படையில் மாறுவதில்லை. வெறுமனே சுய-அன்பு வளையம் மட்டும் குடும்ப அங்கத்தினர்களை உள்ளடக்கும் வகையில் சற்று விரிவாக்கப்படுகிறது. குடும்பம் என்பது எப்போதும் ஒரு இனக்குழுவின் பகுதியாக விளங்குவதால் சுய அன்பின் வளையம் மேலும் விரிக்கப்பட்டு ஒருவரது இனத்தார் சாதி-சனத்தார் ஆகியோரையும் உள்ளடக்குவதாகிறது.

உண்மை என்றால் என்ன என்பதற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க முடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. உண்மைக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் அதன் உண்மைத்தன்மையை விளக்கமுடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுப்பதாகும். அன்பு என்பது உள்ளுணர்வு. அது என்ன என்பது அவரவரது அனுபவம் மட்டுமே. நாம் ஒரு இனிப்பு பண்டத்தைச் சாப்பிடும் போது அதன் உண்மையான அனுபவம் அல்லது உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதைப் போன்றதுதான் அன்பும். ஆனால் இனிப்பு இனிக்கும் என்கிறோம்.இனிப்பு என்றால் என்ன?’ எனக் கேட்டால் இப்போது இனிப்புக்கு விளக்கம் கொடுப்பது சிரமாகிவிட்டதல்லவா? அவ்வாறு தான் அன்பு என்றால் என்ன என்பதும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக உண்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கு பொய் அல்லாதது என்று கூறுவதுண்டு. இந்த விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. ஏனெனில் பொய் என்றால் என்ன என்று கேட்டால் நிலையற்றது, மறைத்தல், மாற்றிக் கூறுதல், ஏமாற்றுதல் என அடிக்கிக் கொண்டு செல்கிறோம். முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விளக்கங்கள்.

அன்பு ஒரு ஒருவழிப்பாதை. அன்பைக் கொடுக்க மட்டும்தான் முடியும். அன்பைப் பெறமுடியாது. அன்பைப் பெறுவதாக நாம் உணரும்போதும் அது கொடுப்பதாக மட்டுமே அமையும். அன்பு என்பது எமது உள்ளுணர்வாக இருப்பதால் அதற்கு எதிரானதும் ஒரு உணர்வுதான். எது அன்பைக் கொடுப்பதற்கு தடையாக இருக்குமோ அது அன்புக்கு எதிரானது.

நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பவற்றையும் நாம் அன்பின் வடிவங்களாக அறியப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் என்ன வடிவத்தைக் கொடுத்தாலும் அன்பு ஒன்றுதான். அது ஒரு முழுமை. அன்புக்கு வடிவம் கொடுப்பதனாலேயே நாம் அன்புக்கு எதிரானது என்றவுடன் வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என பலவற்றைக் கருதிக்கொள்கிறோம். அதாவது இவ்வாறன உணர்வுகள் அன்புக்குத் தடையாக அமையும் எனக் கருதுகிறோம். இப்போது ஒரு விடையத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என நாம் குறிப்பிடுபவையும் ஒரு முழுமைக்கு நாம் கொடுக்கும் வடிவங்கள் தான் என்பதே. இந்த முழுமை அன்புக்கு எதிரானதாக செயற்படும் முழுமை. அந்த முழுமைதான் 'பயம்'. அதாவது அன்பு எனும் முழுமை ஒன்று, பயம் எனும் முழுமை இன்னொன்று. இங்கே முழுமை என்பதன் பொருள் ஒரே நேரத்தில் இரண்டில் ஒன்று தான் இயங்கும் என்பதே. அன்பு இயங்கினால் பயம் இயங்காது, பயம் இயங்கினால் அன்பு இயங்காது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான விடயம் என்னவெனில், எமது ஒவ்வொரு நகர்வும் அன்பினால் நகர்த்தப்படுகின்றதா அல்லது பயத்தினால் நகர்த்தப்படுகின்றதா என்பதை மிக இலகுவாக நாம் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதுதான். - வி.எஸ்

அன்பென்பது செல்வம் போன்றது. நாம் நேர்மையான வழியில் சேமித்தால் அச்செல்வம் நிலைப்பதனைப் போன்று நல்வழில் தேடிய உறவுகள் என்றும் நிலைக்கும். குறுக்குவழியில் சேர்த்த பணம் குறுகிய காலத்துள் அழிந்துவிடுவதைப் போன்று நேர்மையற்ற உறவுகளும் அர்த்தமற்ற அன்புகளும் விரைவிலேயே நம்மை விட்டுப்போய்விடும் - பிரியா

சில வேளை சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் கறிவேப்பிலையை தூக்கியெறிந்து விட்டு உணவு ண்பதுண்டு. இன்னும் சிலர் கறிவேப்பிலையின் மருத்துவக்குணம் அறிந்து அதனை உணவில் இணைத்துக்கொள்வதுமுண்டு. இதேபோன்றே சிலர் தம்மை அன்பு செய்பவர்களது உறவை தேவையான வேளை பயன்படுத்திவிட்டு தமது தேவைகளை நிறைவேற்றிய பின் தூக்கியெறிந்துவிடுவதுண்டு. சிலர் தொடர்ந்தும் உறவுகளது முக்கியத்துவம் உணர்ந்து உறவுமுறைகளை பேணுவதுண்டு. ஆகவே என்னளவில் அன்பை கறிவேப்பிலைக்கு ஒப்பிவேன். - பிறின்சியா

நீங்கள் என்ன நினைக்கிறீங்க..?

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை