Showing posts with label பாரம்பரிய உணவுகள். Show all posts
Showing posts with label பாரம்பரிய உணவுகள். Show all posts

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பயிற்சிநெறியினை மேற்கொள்கின்ற மாணவர்களும் பங்குபற்றவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததுடன் என்னைப் போன்ற சுயாதீன chef ற்கும் உணவு தயாரித்து பரிமாறுவதற்கான அனுமதி தரப்பட்டிருந்தது. (எல்லா துறைகளைப் போன்றும் Chef துறையிலும் சுயாதீனமாக பணியாற்ற முடியும். உதாரணமாக என்னுடைய சிறந்த தயாரிப்பாக ஆசிய உணவு மற்றும் இத்தாலிய உணவுகளை குறிப்பிட முடியும். நான் முழுநேர Chef பணியாற்ற முடியாது என்பதால் 2022 காலப்பகுதியில் Shangri la colombo இல் குறிப்பிட்ட உணவு வகைகளை தயாரிக்கும் chef பணியாற்றினேன். ஒரு நாளில் சில மணித்தியாலங்கள் சென்று அங்கு தயாரிப்புக்களையும் என் கீழ் பணியாற்றிய sous chef ற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதுண்டு. குறிப்பிட்ட நேர அட்டவணையில் தான் இவ்வுணவுகள் பரிமாறப்படும்.)  நானும் நீண்ட நாட்களுக்குப் பின்னான இந்நிகழ்வில் பங்குகொள்ள நினைத்திருந்தேன். நம்முடையவர்கள் பெரும்பாலும் சுவைக்காத சூப் வகைகளை தயாரித்து பரிமாறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. இது வரை ஹோட்டல்களில் பரிமாறிய எனக்கு என் மண்ணில் என் மக்களுக்கு உணவு பரிமாற கிடைத்த சந்தர்ப்பம் இது. மிகவும் அழகிய தருணங்களில் ஒன்று! ஆனால் அங்கு வந்தவர்களுள் பெரும்பாலானோர் கேட்ட கேள்வி “ பொறியியலாளர் என்ன இந்த வேலைக்கு வந்துவிட்டீர்கள்? ” என்பது. ...

எனக்கு மிகவும் குழப்பமாக விடயம் இது தான். ஏன் ஒரு வீட்டில் பெண் விஞ்ஞானியாகவே இருந்தாலும் சமைக்கும் போது கேள்வி கேட்காத இந்த அழுமந்த சமூகம் அப்பெண் பொதுவெளியில் கரண்டியை கையிலெடுக்கும் போது பேந்த பேந்த விழித்தபடி பார்க்கின்றது என்பது தான். என்னைப் பொறுத்தளவில் சமைத்தல் என்பதும் கலையின் ஒரு வடிவமே. எப்படி கலையை குறிப்பிட்டவர்கள் மட்டும் தம்முடைய தொடர் முயற்சிகளால் தம் வசப்படுத்திக்கொள்கின்றார்களோ அதேபோன்று தான் சமையலும் தொடர் பயிற்சியினால் நம்மிடம் வசப்பட்டு விடுகின்றதானதொரு கலை. என் நினைவறிந்து நான் சிறுவயதிலேயே நேசிக்கத்தொடங்கிவிட்டதொரு விடயம் இந்த சமையல். பல பெண்களுக்கு சமையல் ஒரு வகையில் அவர்களை அடக்கி குசினிக்குள் வைக்க சமூகம் வைத்துள்ள சாட்டை. வீட்டில் சமைக்கும் போது அவளுக்கு கிடைக்காத அங்கீகாரம் அதுவே ஓர் ஆண் தன்னுடைய தொழிலாக சமையலை கையிலெடுக்கும் போது உயர்வாகவும் பெறுமதிமிக்கதுமான தொழிலாக பார்க்கப்படுகின்றது. 

என்னை பொறுத்தளவில் சமையல் மீதான என் காதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது சிறுவயதிலேயே என்னை பற்றிக்கொண்டதொரு விடயம். இந்த பிளாஸ்டிக் துவக்கு, பொம்மைகள் வைத்து விளையாடும் காலத்திலேயே குட்டி குட்டி பாத்திரங்களில் “இது சோறு…. இது கறி என்று…” கற்பனை சமையலுக்குள் நுழைந்தவிட்ட ஆள் நான். பிறகு கொஞ்சம் வளர்ந்த பின்னர் சிரட்டைகளில் ஈரமண்ணை நிரப்பி அதனை பலகைகளில் பரப்பி இது கேக் என்று வீட்டில் பூத்திருந்த பூக்களை வைத்து அலங்காரம் செய்தவள்.செங்கல்லை அரைத்து கொச்சிக்காய் தூள் தயாரித்தவள்.

அதற்கும் பிறகு வீட்டில் சமையல் நடக்கும் போது கெஞ்சி, அடம்பிடித்து கொஞ்சம் அரிசி, ஒரு வெங்காயம், கொஞ்சம் பச்சகொச்சிக்காய், ஒரு பிடி பருப்பு என்று வாங்கி குட்டி மண் சட்டிகளில் பல மணித்தியாலங்கள் மெனக்கெட்டு சமைத்து, அதை புளுகுடன் வீட்டாக்களுக்கு கொடுத்து அழிச்சாட்டியம் பண்ணியவள். இந்தக் காலத்தில் மாமாங்கம் தொடங்கினால் என் அழிசாட்டியங்களும் ஆரம்பித்துவிடும். சின்ன சின்ன மண் சட்டிகள், ஒரு பானை என அடுக்கி ஒரு தூக்கில் கோர்த்து மாமாங்கத்தில் விற்பதுண்டு. பூந்தியும் இந்த மண்சட்டி கோர்வையும் இல்லாட்டி எனக்கு மாமாங்கம் என்பதே இல்லை. மாமாங்க பிள்ளையாரை கும்பிடுவதோ அல்லது மாமாங்க கீரை வாங்குவதோ இரண்டாம்பட்சம் தான். இது குறித்த சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. 

ஒரு முறை பாடசாலை பரீட்சை காரணமாக எம்மை மாமாங்கம் கூட்டி போகவில்லை. அம்மாவிடம் கூட்டிப்போகும் படி அழுததற்கு தீர்த்தம் அன்று கட்டாயமாக கூட்டிப்போவதாக வாக்களித்து விட்டார் அம்மா. கடைசி நாள் தீர்த்தமன்று காலையிலேயே என் குட்டிச்சட்டி கற்பனைகள் ஆரம்பமாகிவிட்டது. அங்கு மாமாங்கம் போய் பார்த்தால் கீழே விழுந்த பொருட்களை கூட குனிந்து பொறுக்க முடியாதளவு சனக்கூட்டம். “பிறகு வாங்கித்தாறேனே மகள்…” என்று அம்மா என்னைப்பார்த்து கேட்க எனக்குள் இருந்த பிடிவாதம் விடவில்லை. இல்லை வாங்கித்தாருங்கள் என ஒரே பிடியில் அழத்தொடங்கினேன். என் அரியண்டம் பொறுக்க முடியாமல் கூட வந்த அனைவரையும் மாமாங்க கோவில் மரத்தடியில் அமர்த்திவிட்டு என் கைகளை பற்றி அம்மாவும் நானும் கூட்டத்தில் நீந்த ஆரம்பித்தோம். ஒரு மாதிரியாக முட்டி மோதி சட்டி பானை விற்கும் அம்மாவின் கடையில் ஒரு தூக்கு சட்டி வாங்கி மீண்டும் சன நெரிசலில் நீந்தி கரைசேர்ந்து பார்த்தால் கையில் இரு சட்டி மட்டும் தான் எஞ்சியிருந்தது. மீண்டும் அழுத்தொடங்க அம்மா பத்ரகாளி அவதாரமெடுத்து முதுகில் போட்ட அடியில் வீடு வந்தும் நான் அழுகையை நிறுத்தவில்லை. சும்மாவே முகம் குண்டாக கொழுக்கட்டை மாதிரித்தான் இருப்பதுண்டு. இதில் தொடர் அழுகையால் முகம் மாப்பிள்ளை கொழுக்கட்டையாகவே ஆகிவிட்டது. போதாதற்கு சாப்பிடாமல் வேறு பிடிவாதம் பிடிக்க கடைசியில் சந்தையடிக்கு போய் சட்டிகள் வாங்கிவரப்பட்டது. சந்தையில் கூட குட்டி சட்டிகள் வாங்கலாம் என்பது அன்று தான் எனக்கும் தெரியவந்தது. இப்படியொரு வழியிருக்கின்றதென்றால் ஏன் மாமாங்கம் ஆவணியில் வரும் வரை காத்திருந்தோம் என்று அப்போது தான் யோசித்தேன். 

இப்படி சமையலை மண், கூட்டான் சோறு என்று விரிவுபடுத்திக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அம்மா வேலை விடயமாக வெளியில் போக அன்றன்று பார்த்து சமையல் செய்யும் ஆளும் வராமல் போக உண்மையாகவே கரண்டியை கையில் எடுக்க வேண்டியதாகிட்டு. முதன் முதலாக என்ன சமைத்தேன் என்பது இன்றுவரை எனக்கு நினைவுண்டு. சோறு, பருப்பு வெள்ளைக்கறி, டின் மீன் குழம்பு, சொதி, பப்படம் என்பன தான் என் முதல் சமையல் cuisine ஐ என் சகோதரன்களும் விரும்பி உண்ண அன்றிலிருந்து ஆரம்பமாகிது என் வித்தைகள். இப்படி வீட்டில் வித்தைகள் காட்டிக்கொண்டு பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் தான் சமையல் Suprime Chef வாய்ப்பு என் வீட்டுக்கதவை flyer வடிவில் தட்டியது. சும்மா கலந்துகொண்டு பார்ப்போமே என்று ஆரம்பித்த இந்த பயணம் இறுதியில் மேடை வரை கொண்டு வந்துவிட்டது. இதில் பல Chef களை சந்திக்கவும் அவர்களுடன் சமையல் குறிப்புகளை கலந்துரையாடவும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் Chef பீற்றர் குருவிட்ட. சிறுவயதில் தன்னுடைய பாட்டியிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட வேளையில் அவர் மூலமாக தன் சமையல் கலைக்கான முதற்படி ஆரம்பிக்கப்பட்டதாக அடிக்கடி கூறுவார். தன்னுடைய பாட்டியின் பெயரில் சோஸ் ஒன்றும் வைத்துள்ளார்.

போட்டியில் வெற்றிபெற்றவர் எனும் வகையில் Chef பீற்றர் குருவிட்டவிற்கு சொந்தமான அவுஸ்திரேலிய உணவகத்தில் ஆறுமாத கால பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். நான் வாழ்ந்த நாட்கள் அவை. தினப்படி பயிற்சிகள் இராணுவ ஒழுங்கில் தான் நடைபெறும். (கேர்ணல் நளினியின் வளர்ப்பில் இதென்ன பெரிய கஸ்டம்…..). நிறைய விடயங்கள, நிறைய நுட்பங்கள் என கற்றுக்கொள்ள கடலளவு விடயங்கள் இருந்தன. இன்னும் இருக்கின்றன. ஏன் குரு ….. சொல்லும் ஒரு விடயம் “உனக்கென தனித்துவமானதொரு சமையல் நுட்பத்தினை உருவாக்கு” என்பதே. உணவு முதலில் கண்ணுக்கு அழகாயிருக்க வேண்டும், பின்னர் அதன் மணம் நம்மை வாயூர வைக்க வேண்டும். இதனால் கவரப்பட்டு உண்ணும் போது சுவை நாவில் தங்க வேண்டும், அது உடலுக்கு ஆரோக்கியத்தினை கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவார். நானும் இன்றுவரை முயன்றுகொண்டேயிருக்கின்றேன். ஒரு நாள் அது என் வசப்படும் என்றும் நம்புகின்றேன். சாப்பிட்ட பின் கரண்டியை வைக்கும் முறை தொடங்கி ஒருவருக்கு பரிமாறுகின்ற வரை ஏகப்பட்ட மொழிகள் இத்துறையில் உண்டு. ஒரு விஞ்ஞான துறை கணக்கியல் துறைக்கு எவ்வாறான கனதியுண்டோ அதேயளவு கனதி இத்துறைக்கும் உண்டு. இத்தொழிலிலும் கம்பீரமுண்டு. ஆக யாரையாது பார்த்தால் உங்கள் பார்வை மற்றும் சொற்களில் ஏளனம் செய்வது உங்கள் மடமையே.

அடுத்தது சமையல் பெண்ணுக்கானது அவள் கடமை என்பதை உங்கள் சிந்தையிலிருந்து அகற்றுங்கள். யாரால் ஒருவருக்கு வயிறார உணவளிக்க முடியுமோ அவர்கள் இக்கலையை வீட்டிலும் சரி தொழிலாகவும் சரி தொடரலாம். எனக்கு என் வருங்கால குசினி குறித்த கனவும் உண்டு. அது நிச்சயம் “Grate India Kitchen” போன்று ஆணாதிக்க சிந்தை நிறைந்ததாக இருக்காது என நம்புகின்றேன். பாரம்பரிய மற்றும் நவீன உபகரணங்கள் உள்ளடக்கியதாக என்னால் வடிவமைக்கப்படும். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் நிச்சயம் ஏதாவது சாப்பிட்டுவிட்டே போகவேண்டும் எனும் எழுதாத விதி வைக்கப்படும். 

எனக்கு என் வாழ்க்கைத்துணை நன்றாக உண்பவராக , உணவின் இரசிகராகவிருக்க வேண்டும். இந்த துணைவி சமைத்துக்கொடுப்பதை உண்டு கொஞ்சம் தொந்தி வைக்க வேண்டும். ஆனால் ஒன்று எல்லாம் எல்லோராலும் முடிவதில்லை என்பதற்கிணங்க எனக்கு எவ்வளவு முயன்றும் பாயாசமும், உளுந்து வடையும் இன்னும் வசப்படவில்லை. ஆயக்கலை 64 யும் கூட பிரயோகித்துப்பார்த்து விட்டேன். ஆக என் துணைவருக்கு இது இரண்டும் பிடித்திருக்க கூடாது இறைவா என்பதே என் வேண்டல். மற்றும் படி மஞ்சள், உப்பு , மிளகு போன்றவற்றுடன் சற்றே அன்பினையும் தூவி நமக்கானவர்களுக்காக சமைக்கும் போது அது அமிர்தமாகிவிடாதா என்ன? சரி நண்பர்களே உங்களுக்கெல்லாம் என்ன சமையல் பிடிக்கும்? 

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு


கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவிடம் இதனை நாட்டிவிடுகள் என்று கொடுத்து விட்டு நான் மீண்டும் கிளம்பி விட்டேன். இந்த தொடர் பயணங்களில் பிரண்டையும் மறந்து போய்விட்டது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் எங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்கும் போது இதென்னது இதனை இங்கு வைத்துள்ளீர்கள் என்று அலறின அலறரில் என்ன தான் அப்படிப் பார்த்தார்கள் என்று பார்த்தால் மதிலருகில் ஏலெட்டு பிரட்டைச் கொடிகள் அழகாக துளிர்த்து வளர்ந்திருந்தன.  அழகாக வளர்ந்திருக்கும் கொடிகளைப் பார்த்து இவர்கள் ஏன் அலறவேண்டும் என கேட்டேன். பிரண்டையை யாராவது வீட்டில் வளர்ப்பார்களா? வீட்டுக்கு நல்லதல்ல என்று வெடியை கொளுத்திப் போட்டு விட்டார்கள். இப்படித்தான் எங்கள் வீட்டில் நன்றாக வளர்ந்திருந்த அகத்தி மரம் ஆட்களின் கதையால் அகற்றப்பட்டிருந்தது. எனவே பிரண்டை பற்றி வீட்டில் யாரின் காதிலாவது விழுந்தால் பிரண்டையும் பிய்த்து எறியப்படும் என்று நினைக்கும் போதே வீட்டின் நாரதர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.  

அடுத்த நாள் விட்டில் பிரண்டைத் தாக்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மாலை பார்க்கும் போது பிரண்டைக்கொடிகள் அகற்றப்பட்டிருந்தன. தமிழர்களின் இடங்களில் புத்தர் முளைப்பது போல் அதற்கு பதில் வேறு புமரகொடிகள் சில நடப்பட்டிருந்தன. அட அறியாயமே என்று மனதிற்குள் நினைத்து, வீட்டிலும் ஒரு கத்து கத்திய பின் பிரண்டை எல்லோராலும் மறக்கப்பட்டுப் போனது. இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னர் பலருக்கும் ஏற்பட்டுள்ள மூட்டுவலி போன்று நம்முடைய வீட்டாக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரில் இருக்கின்ற வயதானவர்கள் சொன்ன பரிகாரம் தான் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. பிரண்டையை தேடினால் கிடைத்தால் தானே. பல நாள் தேடல்களுக்கு பின்னர் தான் சில இடங்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை வைத்து இப்போதெல்லாம் அடிக்கடி பிரண்டை தொக்கினை எம்முடைய  மதிய உணவு தட்டுக்களில் காணக்கிடைக்கின்றது. பிரண்டை தொக்கு செய்வதென்பது அப்படியொன்றும் வேலைப்பளுவான விடயமல்ல  

பிரண்டை துளிர்களை எடுத்து வாழையிலையில் சுற்றி நீராவியில் சற்று வதங்க வைக்க வேண்டும். வதங்கிய பிரண்டை துளிர்களை தேங்காய்பூ, பச்சைகொச்சிக்காய், வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி வைத்து நன்றாக விழுதான அரைக்க வேண்டும். அரைக்கும் போதே தேவையானளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பின்னர் தேசிப்புளி விட்டு பிசைந்தெடுத்தால் பிரண்டை தொக்கு தயார். இனியென்ன சுடுசோறுடன் இதனையும் வைத்து உண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் கூடவே கீரி மீன் பொரியலும் இருந்தால் சுவை இன்னும் அதிகம். 

பிரண்டை என்பது நமது முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த மூலிகையாகும். கிராமப்புறங்களில் வேலிகளில் எளிதாக வளரக்கூடிய இந்த தாவரத்திற்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரண்டையின் மருத்துவப் பயன்கள் சில.....

  • பிரண்டையின் மிக முக்கியமான குணம் எலும்புகளை வலுப்படுத்துவது. முறிந்த எலும்புகள் விரைவில் கூடுவதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தேய்மானப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
  • மூட்டு வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  •  பிரண்டை பசியை நன்கு தூண்டக்கூடியது. செரிமானக் கோளாறுகளை நீக்கி, வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்தும்.
  • வாயுத் தொல்லை (Gastric problems) மற்றும் அஜீரணத்தை போக்கவல்லது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது
  • உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது.
  • வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். இது இரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தி, மூல முளைகளைச் சுருங்கச் செய்யும். மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கும்.

இது எல்லாவற்றினையும் விட நமக்கே நமக்கென்று மாதாந்தம் வருகின்ற மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வயிற்நுவலி மற்றும் இடுப்புவலிக்கும் பிரண்டையை உணவில் சேர்ப்பது நல்லது. மேற்சொன்ன வலிகள் குறைந்துவிடும்.  

பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை இருக்கின்றதாம். 

எனக்கென்னமோ பிரண்டை என்பதை விடவும் வச்சிரவல்லி என்ற பெயர் மிகவும் பிடித்திருக்கின்றது.  அவற்றின் வகைகளை எப்படி இனங்காண்பது என்பதை அறிந்துகொண்டு இந்த வகைகளை நாமும் உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல மூலிகைகளை நாம் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே பலதை தொலைத்தும் விட்டுவிட்டோம்..... வச்சிரவல்லி போல தூய அன்புகொண்ட மனிதர்களையும் தான்! . 

எள்ளுருண்டை

எள்ளென்றால் எண்ணெய்யாக.....
எள்ளு காயுதென்று எலிப்பிழுக்கையும் காயுது.....
எள்ளவு சந்தேகம்.... 
எள்ளவும் குறையாது..
எள்ளுக்குள் எண்ணெய்
எள்ளென்றாலும் ஏழாய் பிரித்து.... 

என எள் குறித்து தமிழ் சொற்றொடர்கள் பலவுள்ளன  எள் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய எண்ணெய் விதை. இது தமிழர்களின் உணவிலும், மருந்திலும் முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான  சித்த மருத்துவம் முறையில் எள் முக்கிய மருந்துப் பொருளாக கருதப்படுகிறது. அத்துடன் எம்முடைய சமய சடங்கு முறைகளிலும் எள் எரித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுவதில் இருந்து எள்ளுக்கான புனிதத்தன்மையும் கவனிக்கப்படத்தக்கது. 

எள்ளுருண்டை
என்பது தமிழர்களின் பாரம்பரியமான, ஆரோக்கியமான இனிப்பு உணவாகும். இது எளிய ஆனால் சத்தான சிற்றுண்டி. எள்ளுருண்டை செய்வது அப்டியொன்றும் கடினமான விடயமுமல்ல எள்ளை வறுத்து, அதன் நறுமணம் வரும் வரை சூடாக்க வேண்டும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து, பாகு பதமாகக் காய்ச்ச வேண்டும். அந்த பாகில் வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கைகளில் சிறிது எண்ணெய் தடவி, கலவையை உருண்டையாக உருட்ட வேண்டும். இது மட்டும் தான் என்றில்லை எள்ளுடன் நிலக்கடலை கலந்தும் உருண்டை பிடிக்கலாம், கார எள்ளுருண்டை செய்யலாம், தேங்காய்பூவும் வறுத்து சேர்த்து உருண்டை பிடிக்கலாம். 

எள்ளில் உள்ள சத்துக்கள் (Nutritional Value)

  • கால்சியம் 🦴 → எலும்பு வலிமைக்கு
  • இரும்புச் சத்து 🩸 → இரத்த சோகை தவிர்க்க
  • மெக்னீசியம் & பாஸ்பரஸ் → நரம்பு மற்றும் தசை செயல்பாடு
  • நார்ச்சத்து (Fiber) → செரிமானம் மேம்பாடு
  • சத்தான கொழுப்பு (Healthy fats) → இதய ஆரோக்கியம்
  • புரதம் (Protein) → உடல் வளர்ச்சி

எள் குறித்து இலக்கியங்களில் இருந்து சில மேற்கோள்கள் வருமாறு 

“எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை
நீல மிடற்றானை என் கை ஒத்து நேர் கூப்புக”
 

-  புறப்பொருள் வெண்பாமாலை 

“எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே”

“எள் உண் உயிர் வளரும்” 

 சித்தர் தத்துவ உவமை இலிருந்து 

“எள் உண்டால் எலும்பு வளரும்,
உடம்புக்கு ஊக்கம் தரும்”

“எள் எண்ணெய் தலையில் தேய்த்தால்
வாதம் தணியும், சூடு குறையும்”

“எள்ளும் வெல்லமும் சேர்ந்தால்
இரத்தம் பெருகும், பலம் பெருகும்”

“எள்ளினுள் எண்ணெய் போல்
உள்ளினுள் உயிர் ஒளி” 

எனக்கு மிகவும் பிடித்ததொரு உணவு எள்ளுருண்டை. அதுவும் கருப்பெள் உருண்டை. இதில் எனக்கு மோகம் ஏற்பட காரணம் என்னுடைய மாமியார் தான். எனது பெற்றோரின் திருமணத்தால் பிரிந்திருந்த யாழ்- மட்டு உறவு மீளுயிர் பெற்றது நான் சாமர்த்தியப்பட்ட நேரம் தான். எப்படியோ விசயம் அறிந்து என்னுடைய யாழ்ப்பாண மாமியார் எம் வீட்டை தேடிக்கண்டுபிடித்து வந்துவிட்டார்கள். வாசலில் வந்து நிற்கும் ஒருவரை வரவேற்பது தானே முறை. கோபதாபங்கள் மனதில் இருந்தாலும் இரு கட்சிக்காரர்களும் மேம்போக்காக சரி வரவேற்க அறையினுள் இருத்தி வைக்கப்பட்டிருந்த என்னை மாமி வந்து பார்த்தது நல்லெண்ணெய் போத்தல், எள்ளுருண்டை சகிதம் தான்.  அன்றிலிருந்து நல்லெண்ணெய்யில் வதக்கிய கத்தரிக்காய், நல்லெண்ணெய்யில் பொரித்த ஊர்முட்டை, நல்லெண்ணெய் புட்டு, எள்ளுருண்டை என என்னை பாடாய்படுத்திவிட்டார்கள். இப்படி உறவுக்குள் பாலம் போட எள்ளும் இருந்திருந்தது

அதன் பின்னர் பல்கலைக்கழக காலத்தில் மட்டக்களப்பில் இருந்து மீன் பொரியல், பலகாரங்கள், வாழைப்பழம் என அம்மா அனுப்பி வைக்க யாழ்பாணத்தில் இருந்து மாமி எள்ளுருண்டை, வடகம், பருத்தித்துறை வடை என அனுப்பி வைப்பார்கள் (இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் லட்டு மாதிரி இருக்கின்றேன் என்று) போதாதற்கு யாழ்ப்பாணம் போகும் போது தலையில் நல்லெண்ணெய் வைத்து ஊறவைத்து தலைக்கு குளிக்க வைப்பதுண்டு. இதனால் உடல் சூடு தணிக்கப்படும். அத்துடன் மாதவிடாய் நாட்களில் மாமியின் கைகளில் சிக்கினால் அவ்வளவு தான். எள்ளுருண்டையை போகவர சாப்பிடத்தருவார்கள். கருப்பைக்கும் இரத்த சுத்திகரிப்பிற்கும் நல்லது என்பார்கள். நல்ல காலம் நான் அலுவலகத்தில் அடிக்கடி கொதிநிலையில் இருப்பது தெரியாது தெரிந்தால் போத்தல் கணக்கில் தான் எனக்கு அபிசேகம் செய்திருக்க வேண்டும். அதாவது சூடு தணிவதற்கு! 

தலையில் எண்ணெய் தேய்த்து உலாத்தும் போது அது வழிந்து  கண்ணில்பட்டு எரிச்சல் மூட்டுவதுமுண்டு. அடுத்தது அவ்வாறு எண்ணெய்யில் விழுந்த எலி மாதிரி இருக்கும் போது "ஒராள் கருப்பாகப்போறா... கருப்பி " என்று என் சகோதரன்கள் என்னை சீண்டுவதுண்டு. உடனே மாமி "பரவாயில்லை நல்லெண்ணெய் கருப்பன் என்ட பிள்ளைக்கு கிடைப்பான்..." என்று பதிலளிப்பா... எங்கடா இருக்கிற  (என்) நல்லலெண்ண  கருப்பா.....

 

 

தயிரும் தமிழும்!

இப்போது கொளுத்துகின்ற வெயிலுக்கு மிகவும் சிறந்ததொரு உணவு இந்த தயிர். பசு எப்படி கோமாதாவோ அப்படி அதன் பாலும் பல்வேறு நிலைகளிலும் பயன்படுகின்றதொரு பதார்தம்.  பாலை குடிக்கலாம். நன்றாக காய்ச்சி உறையிட்டால் தயிராக்கலாம், தயிறை மோராக உப்பு காரம் சேர்த்தும் பருகலாம், நெய்யாக்கலாம். இப்படி பாலின் பயன்கள் நீண்டுகொண்டே செல்லும். 

சிறுவயதிலிருந்தே என்னுடைய கல்வித்துறை தவிர்ந்து எனக்கிருந்த கனவுகளில் ஒன்று மாடு வளர்ப்பது. என்னளவில் யாருக்காவது ஒரு பசு மாடு இருந்தால் அவன் தான் பணக்காரன் என்பேன். அந்தளவு வீட்டிற்கு மாடு என்பது செல்வங்களுள் சேர்த்தியாகின்றது. நான் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே என்னுடைய தாயாருக்கு சுவாதக்குணம் ஏற்பட்டு விட்டதால் பால் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டதுடன் அம்மாவிற்கு வைத்தியம் செய்ய வேண்டியிருந்ததால் குழந்தைக்கு பாலூட்டுவதை வைத்தியர் தவிர்க்க சொல்லிவிட்டாராம். இதனால் தாய்ப்பாலுக்கு நிகராக பசுப்பால் கொடுக்க சொல்லியிருக்கின்றார்கள. மற்றவர்களிடம் பால் வாங்குவதை விட நம் வீட்டிலேயே பசு இருந்தால் கலப்படமற்ற பால் கிடைக்கும் என வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது தான் எம்முடைய பசு லட்சுமி. லட்சுமிக்கும் ஒரு கன்று என் வயதில் இருந்தது அதற்கு சீதா என்று பெயர். இரு மாதங்களிலேயே தாய்ப்பால் நிறுத்தப்பட்டு நான் இரு வயது வரை குடித்தது லட்சுமியின் பால் தான். எனவே எனக்கு லட்சுமியும் ஒரு தாய் தான். சிறுவயது முதலே நான் கொழுமொழு என்று இருக்கின்றேன் என்றால் லட்சுமியம்மா தான் முக்கிய காரணம். சிறு வயதில் சில வேளைகளில் அம்மாவின் பெயரென்ன என்று கேட்டால் லட்சுமி என்றும் நான் சொல்வதுண்டாம். ஆனால் பெரியவளாகிய பின் நளினியுடன் முரண்பட்டு விட்டால் நீங்கள் என் அம்மா இல்லையே என்னுடைய அம்மாவின் பெயர் லட்சுமி என்றும் நான் கூறிக்கொள்வதுண்டு. 

இன்னுமொரு ஒற்றுமையும் உண்டு. என்னுடைய பெயரான கேஷாயினி வடஇந்தியாவில் புழக்கத்திலுள்ளதொரு பெயர். இப்பெயர் பார்வதியினை குறிக்கின்றதாம். என் பெயரின் சொற்பிரிப்பும் சக்தி நிறைந்தவள் என்பதை குறிக்குமாம். இந்தப்பெயரில் பல சுலோகங்களும் உண்டு. இப்போது கோர்த்துப்பாருங்கள். லட்சுமி, பார்வதி என்று தொடர்பிருப்பது புரியும்.  எனவே இதில் ஆரம்பித்து மாடு வளர்பில் ஆர்வம் ஏற்பட்டு. இன்று பண்ணையில் பால் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் தயிர், நெய் தயாரிப்புகளையும் நாம் மேற்கொள்கின்றோம். போதாதற்கு மட்டக்களப்பார்கள் உணவில் தயிரின் பங்கு உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் மதிய உணவின் பின்னர் தயிர் சாப்பிடுவது என்பது எம் ஊரின் மரபும் கூட.  

வீட்டில் பானையில் தான் தயிர் உறையிடப்படும். நானிருக்கும் நேரங்களில் அப்படியே தயிராடையை எடுத்து சீனியும் கொஞ்சம் உப்பும் போட்டு சாப்பிடுவதுண்டு....... ம்ம்ம்ம் அமிர்தம். அநேகமான நாட்களில் உணவின் பின்னர் அம்மா சோற்றுடன் தயிர் போட்டு பிசைந்து அனைவருக்கும் ஊட்டிவிடுவதுமுண்டு. வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் போகும் போது தயிர்ப்பானையும் கொடுத்துவிடுவதுண்டு. இதுவும் மட்டக்களப்பாரின் விருந்தோம்பலின் மரபாகும்.

சிலநேரங்களில் நான் தயிராடையில் கொஞ்சம் முகத்தில் பூசிக்கொள்வதும் உண்டு. பூசி ஒரு மணிநேரத்தின் பின்னர் இளஞ்சுட்டு நீரில் முகத்தினை கழுவிப்பாருங்கள் முகம் அவ்வளவு தெளிவாயிருக்கும்.  நிறைவுணவான தயிரும் தமிழரின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். இதற்கு பல இலக்கிய சான்றுகளுமுள்ளன.

ஆகக் குறைந்தது 4500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் தயிரின் பயன்பாடு தொடங்கிவிட்டதாகவும் இயற்கையான நுண்ணுயிரிகளால் தயிரானது நொதிபட்டிருக்கலாம் என்பதுவும் உலகளாவிய பொதுக் கருத்துகள். அதே வேளை சிந்துவெளி நாகரிகம் சிறப்புற்றிருக்கும் போதே, பாற் பொருட்கள் சிந்துவெளி மக்களின் உணவில் முகன்மை வகித்தது பற்றியும் ஏராளமான சான்றுகளுண்டு. சிந்துவெளி மக்களின் முதன்மையான உணவுகளாக இறைச்சியும் பாற்பொருட்களுமே இருந்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றன {Akshyeta Suryanarayan et al. 2021. Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India. Journal of Archaeological Science }. இவை எல்லாம் ஆரியர்களும் அவர்களது சமஸ்கிரத மொழியும் இன்றைய இந்திய நிலப்பரப்புக்கு வருவதற்கு முன் நடந்தவையாகும். 
 
சங்காலப் பாடல்களிலேயே தயிருக்கான சான்றுகளுண்டு. 
  • தயிர் செய்யும் முறை உவமையாகக் கூறப்பட்டிருப்பதனை புறநானூறு 276 வது பாடலில் "குட பால் சில் உறை போல"  என்கின்ற வரிகள் உறைமோர் ஒரு துளி எவ்வாறு பாலின் தன்மையினையே மாற்றுகின்றது `என்பது பற்றியே குறிப்பிடுகின்றது. 
  • "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" (குறுந்தொகை 167 :1 பாடல்)  தயிர்   என்கின்ற சொல்லாடலிலேயே குறிப்பிடுகின்றது 
"செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து" (புறநா 119:3) ஈசலைத் தயிருடன் போட்டுக் கிளறி, உருவாக்கப்பட்ட உணவு பற்றி புறநானுறில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு பழந் தமிழ் இலக்கியச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.                                      
 
 `தயிர்` என்பது `தை` என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது என்பது அறிஞரின் கருத்து. முள் தைப்பது போல (முள் குத்துவது போல) பிரைமோர் (உறைமோர்) பாலினைத் தைப்பதால் ஏற்பட்ட பெயராகும். இங்கு `பிரைகுத்துதல்` / ``உறைமோர் குத்துதல்` எனப் பாலில் உறைமோர் கலக்கும் செயலினைக் கூறுவதனை உற்று நோக்குக {குத்துதல் =தைத்தல்}.

தை> தயி > தயிர் எனவே `தயிர்` என்பது தமிழிலேயே வேர்ச்சொல்லினைக் கொண்ட தமிழ்ச் சொல்லே! வேண்டுமானால் தயிரிலிருந்து `ததி` என்ற சமஸ்கிரதச் சொல்லும் பின் அதன் வழி `தஹி` என்ற இந்திச் சொல்லும் வந்திருக்கலாம். 
 
தயிருக்கான பால் பசுவிலிருந்தும் எருமை மாட்டிலிருந்தும் எடுக்கப்படுவதண்டு. இரண்டுக்கும் கெட்டித்ன்மை மற்றும் மணத்தில் தான் வித்தியாசம் காணப்படும். பாரம்பரியமான இந்த தயிர் உடல் சூட்டினையும் தணிக்கின்றதானதொரு உணவு. மட்டக்களப்பில் திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல், சாவீட்டின் சடங்கு என்பவற்றிலெல்லாம் தயிருக்கு இடமுண்டு. கோயில் நிகழ்வுகளிலும் தயிர்த்தண்ணி கொடுக்கும் வழக்கத்தை மட்டக்களப்பின் பெரும்பாலான இடங்களில் காணலாம். அதிலும் மட்டக்களப்பு படுவான்கரைத் தயிருக்கு நிகர் வேறில்லை. 
 
சுத்தமான தயிர் வேண்டுமென்றால் என்னுடைய மண்ணுக்கு வாருங்கள்.  ஆனாலொன்று நல்லா தயிரை வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்து நடக்கமுடியாமல் சுருண்டு படுத்து விட்டு நாம் தான் பாயோடு ஒட்ட வைத்தோம் என்று மட்டும் சொல்க்கூடாது. 

பழைய சோறு! மங்கு! பன்னீர்!


பழைய சோறு என்பதை பல நேரங்களில் நாம் கேலி பேசுகின்றதானதொரு மொழி கையாள்கைக்கு பயன்படுத்தினாலும் பழைய சோறு நல்லதொரு ஆரோக்கியமான உணவு. குளிர்சாதனப்பெட்டி வருவதற்கு முன்னரான காலத்தில், விறகடுப்பு பாவனையிலிருந்த காலத்தில், மண் பாத்திரங்கள் மட்டும் உபயோகிக்கப்பட்ட காலத்தில் சோற்றினை சமைத்து வைத்தால் அதில் மீந்தது தான் அடுத்த நாள் உணவு. குறிப்பாக விவசாயம், விறகுவெட்டுதல் போன்ற வேலைகளுக்குச் செல்பவர்களுக்கு நாள் பூராகவும் தெம்பினை கொடுக்க கூடியது இந்த பழைய சோறு. இந்த பழைய சோற்றினை வெவ்வேறு விதமாக சாப்பிடலாம். இப்படி அடிக்கின்ற சித்திர வெக்கைக்கு இது உடலின் சூட்டை தணிப்பதற்கு மிகவும் நல்லது. 

  • பழைய சோற்றுடன் தேங்காய்பூ, சின்ன வெங்காயம், பச்சை கொச்சிக்காய் வைத்து சாப்பிடலாம்.
  • பழைய சோற்றுடன் ஊறுகாய் சேர்த்து உண்ணலாம்.
  • பழைய சோற்றுடன் நன்றான பழுத்த வாழைப்பழம், தேங்காய் பால் அல்லது பூ பிசைந்து சாப்பிடலாம்.
  • முதல் நாள் சமைத்த மீன் குழம்பு இருப்பின் அதனை நன்றாக வற்ற சூடாக்கி பழைய சோற்றுடன் சாப்பிடலாம்.
  • கருவாட்டினை பொரித்தெடுத்து வெங்காயத்துடன் சேர்ந்தும் பழைய சோறு சாப்பிடலாம்.
  • பழைய சோறும் தயிரும் பிசைந்து சாப்பிடலாம்.

இப்படியே பல்வேறு கூட்டமைப்புடன் அமைகின்ற பழையசோறு எதனுடன் சேர்ந்தாலும் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு பிடித்தது மீன் குழம்பும் பழைய சோறும். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்தில் விடுதிச் சாப்பாட்டால் நாக்கு செத்துப்போயிருக்கும். அதனை அடிக்கடி உயிர்த்தெழச்செய்ய எப்போது விடுமுறை கிடைத்தாலும்  மட்டக்களப்பிற்கு பறந்தோடி போய்விடுவேன் நான். நான் வீட்டிற்கு வருகின்றேன் என்றால் காலையுணவாக கோதுமைமா பிட்டு, சம்பல், முட்டைப்பொரியல், மீன் குழம்பு இருக்க வேண்டும். அல்லது பழைய சோறும் மீன் குழம்பும் இருக்க வேண்டும். அம்மா கூடுதலாக முட்டைப்பொரியலும் செய்து வைத்திருப்பார். முதல் நாள் மதியத்தில் இருந்தே இதற்காக விரதம் இருக்கும் எனக்கு வந்திறங்கி குளித்து உடை மாற்றிய பின் கோப்பி குடிக்க வேண்டும். பின்னர் கதையெல்லாம் பேசி, முடிய ஒரு பிடி பிடிச்சுட்டு தூங்கினால் கும்பகர்ணியை பத்து மணிக்குத்தான் மறுபடி நடமாடுவதை பார்க்கலாம். 

சரி இப்படி முதல் நாள் மிஞ்சின சோறு பழைய சோறாக உண்ணப்படுவது சரி பழைய சோறும் மிஞ்சினால் என்ன செய்வது? மங்கு செய்யலாம். வீட்டில் மிஞ்சின சோற்றினை நன்றாக நீரை வடித்து வெயிலில் நன்றாக உலர்த்த வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் உலர்த்திய பின் தாச்சியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும். வறுத்தெடுத்ததை உரலில் போட்டு இடித்தெடுக்க வேண்டும். இடித்தெடுத்ததற்குள் தேங்காய்பூ, சக்கரை போட்டு இடித்து துவைத்தெடுக்க வேண்டும். துவைத்தெடுத்ததை உருண்டையாக பிடித்து இஞ்சித்தேத்தண்ணியுடன் சாப்பிட்டால் சுவையோ சுவை!  பிசைந்தெடுத்ததை சிறு உருண்டைகளாக்கி தட்டி வேகவைத்து மங்கு ரொட்டியும் செய்யலாம்

உலரவைத்த சோற்றினை காற்றுப்புகாத வகையில் போத்தலில் அடைத்துவைத்தும் பாவிக்கலாம். தேவையான போது துவைக்கலாம். எப்படியோ சோற்றினை வீணாக்காமல் இருந்தால் சரி. அத்துடன் இது சத்துணவும் கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

பள்ளிக்கால விடுமுறை நாட்களில் பழைய சோற்றுடன் பழைய குழம்புக்கறி மீனையும் ஊறுகாயும் தேங்காய்ப்பூவும் சேர்த்து பிசைந்து கவளம் பிடித்து அம்மா உருட்டி கையில் வைக்க சாப்பிடும் அந்தக்கவளத்தில் சுவை மட்டுமல்ல அம்மாவின் உள்ளங்கை இளஞ்சூடும், வாசனையும் சேர்ந்திருக்கும் பாருங்கள்……… இதெல்லாம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரிகின்றதானதொரு விடயம். 

மிஞ்சின மாட்டுப்பாலினை என்ன செய்யலாம்…? 

சற்று பால் திரண்டிருந்தாலோ அல்லது அளவுக்கதிகமாக மிஞ்சியிருந்தாலோ பாலினை அடுப்பில் வைத்து நன்றான சுண்டச்காய்ச்ச வேண்டும். அதனுள் தேசிக்காய் புளி அல்லது வினாகிரியை சற்று சேர்க்க வேண்டும். பால் மேலும் திரள ஆரம்பிக்கும். பால் திரிந்து நீர் வேறாகிய பின்னர் சுத்தமான சீலையில் இட்டு திரிந்த அடர்ப்பத்தினையும் நீரையும் வேறாக்கிக்கொள்ள வேண்டும். சீலையில் வடித்தெடுத்ததை நன்றாக அழுத்தி பிழிந்தெடுத்து தட்டொன்றில் பரவிக்கொள்ளலாம். பரவிய பின்னர் சிறு துண்டாக வெட்டலாம். அல்லது சீலையில் பிழிந்தெடுத்ததை சிறு சிறு துண்டுகளாகவும் வெட்டலாம். முதல் முறையில் செய்தால் சிறு சிறு சதுர துண்டுகள் கிடைக்கும் இரண்டாவது முறையில் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும் அவ்வளவு தான் வித்தியாசம். இது தான் பன்னீர். 

இத்துண்டுகளை வேகவைத்த கடலையுடன் சேர்த்து குழம்பு, குருமா செய்யலாம். அல்லது வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி பன்னீர் துண்டுகளை கலந்து பச்சடி செய்யலாம். அல்லது பன்னீரை என்ன விதமாகவெல்லாம் சமைக்கலாமோ அப்டியெல்லாம் செய்து சாப்பிடலாம். செவ்வாய், வெள்ளிகளில் மரக்கறி சாப்பிட கள்ளமடிக்கும் என் வீட்டாக்களை போன்றவர்களுக்கு இது நல்லதொரு டிஷ்! மச்சம் இல்லென்னும் குறையை பன்னீர் தீர்த்துவிடும். சோயாமீட்டிற்கு அடுத்ததாக பன்னீரையும் மரக்கறி தினங்களுக்கான ஸ்பெஷல் பட்டியலில் சேர்க்கலாம். 



கருக்கல், ஊதுமாக்கஞ்சி, தூதுவளை சம்பள் மற்றும் முட்டைக்கோப்பி

இப்போது தான் சின்னன்கள் முதல் பெரிசுகள் வரை சின்னதாக தூறல் விழுந்தால் போதும் அல்லது கொஞ்சம் வெயிலுக்குள் போய் வந்தால் போதும் சளி, காய்ச்சல், தும்மல் என்று ஆயிரத்தெட்டு வருத்தம் வந்துவிடுகின்றது. நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் பனடோல், விக்ஸ் எல்லாம் பாவிப்பதும் இவ்வாறான சளி காய்ச்சலில் அல்லல்படுவதும் மிகவும் அரிதானது.

எங்கட வீட்டைப்பொறுத்தளவில் இருப்பவர்களிலேயே மருந்துக் கள்ளி என்றால் அது நான் தான். கையில் மருந்தைத்தந்து கண்ணசைக்காமல் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து மயமாகிவிடும். இப்படிப்பட்ட எனக்கே மருந்து பிடித்திருந்தது என்றால் அது ஊதுமாகஞ்சி தான்.எமது வீட்டில் பிள்ளைகள் மணல் அளைவதற்கோ மழை வெயிலில் நனைவதற்கோ பெரிதளவில் கட்டுப்பாடு இருந்ததில்லை. இதையொரு நல்ல விடயமாக கூட கருதினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எவ்வளவு விளையாடினாலும் சரி விளையாடாவிட்டாலும் சரி இரு விடயம் கட்டாயம் தவறாமல் வீட்டில் இருக்கும். ஒன்று கருக்கல் மற்றது ஊதுமாக்கஞ்சி.  

நாம் குழந்தைகளாக இருக்கும் போது கொத்தமல்லியை சற்று வறுத்து அதனுடன் வேர்கொம்பு அல்லது இஞ்சி துண்டுகள் , மிளகு நான்கைந்து போட்டு தண்ணீர் ஊற்றி நீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து சற்று ஆறவைத்து சூடு போகும் முன்னர் கொஞ்சம் சீனி அல்லது தேன் சேர்ந்து கலக்கி சூப்பி போத்தலில் போட்டு எமக்கு காலை பத்து மணியளவில் தரப்படும். அதுவே கொஞ்சம் வளர்ந்த பின்னர் கோப்பைகளில் வழங்கப்படும். குடித்தேயாக வேண்டும். அந்தக்கால அண்டீபயற்றிக் இது தான். எவ்வளவு தான் புழுதியில் உருண்டு பிரண்டாலும் சரி, ஈரத்துடன் திரிந்தாலும் சரி சளி நம்மட பக்கம் எட்டிக்கூட பார்க்காது. 

              உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி... | Lifestyle News (வாழ்க்கை  முறை செய்திகள்) - News18 Tamil 

அப்படியே தப்பித்தவறி சளி பிடித்து நெஞ்சுத்தடுமல் ஆகிட்டுது என்றால் அடுத்த ஆயுதம் ஊதுமாக்கஞ்சி. அம்மம்மா மதியமளவில் இரண்டு கைபிடி பச்சரிசியையும் அதனுடன் நாலைந்து மிளகையும் நீரில் ஊறப்போட்டுவிடுவார். மாலையளவில் வீட்டு வேலியோரங்களில் இருக்கும் தூதுவளை இலைகளை கொய்து அதன் விளிம்பில் இருக்கும் முட்களை நீக்கி உப்பு நீரில் கழுவுவார்கள். ஆறுமணியளவில் குளித்து, விளக்கேற்றி படிக்க அமறவேண்டும் என்கின்ற எழுதாத சட்டம் எம் வீட்டில் உண்டு. அதற்கமைய அனைவரும் படிக்க அமர்ந்த பின் ஊறவைத்த இளகிய அரிசி, மிளகு, தூதுவளை இலை அனைத்ததையும் ஆட்டுக்கல்லில் அரைத்தெடுப்பார்கள். அரைத்தெடுத்த கலவைக்கு சற்று உப்பிட்டு கொஞ்சம் நீர் ஊற்றி அடுப்பில் வைப்பார்கள். மையாக அரைக்கப்பட்ட அரிசி சற்று வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடுவார்கள். கொதித்த கஞ்சில் கொஞ்சமாக சீனி அல்லது சக்கரை சேர்க்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். அதனை சூடாற முன்னர் ஊதி ஊதிக் குடிக்க வேண்டும். இதனால் தான் ஊதுமாக்கஞ்சி என்ற காரண பெயரும் வந்திருக்கும் போல. சூடாக குடிக்கும் போது நெஞ்சுக்குள் இருக்கும் அடைப்பு விலகுவது விளங்கும். அடுத்த நாள் சளி மலத்துடன் வெளியேறி இருமலும் நம்மை விட்டு தொலைந்திருக்கும்.  

                           தூதுவளை - தமிழ் விக்கிப்பீடியா 

நம் ஊர்களில் நாம் இழந்துள்ள பல மூலிகைகளுள் தூதுவளையும் ஒன்று. முன்னர் வேலியோரங்களில் கள்ளி, நித்தியகல்யாணிக்கு அடுத்ததாக இருந்தது தூதுவளை கொடி தான். இன்று சில கிராமப்புற இடங்களில் மட்டுமே இதனை காணமுடிகின்றது. இந்த தூதுவளை இலைகளை சில நேரங்களில் கருக்கல் கலவையினுள்ளும் போடுவதுண்டு. அடுத்ததான விடயம் தூதுவளை சம்பள். தூதுவளை இலைகளை முள் நீக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைகொச்சிக்காய், உப்பு, தேங்காய் பூ கொஞ்சம் வைத்து அம்மியில் நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் சுளீரென தேசிக்காய் புளிவிட்டு சுடுசோறுடன் சாப்பிட்டால் போதும் சளி நம்மை அண்டாது.  

அடுத்தது முட்டை கோப்பி. தமிழர்களது பாரம்பரியம் எனும் போது கோப்பி அதற்குள் எப்படி வந்தததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரில் சுக்கு, வறுத்த மிளகு, கொத்தமல்லி வறுத்து இடித்த தூள் தான் முன்னர் பாவிக்கப்பட்டதாக வயதானவர்களிடமிருந்து அறிய முடிகின்றது. இந்த கொத்தமல்லி கலவைக்குள் நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவினை நன்றாக கலக்க வேண்டும். சூடாறும் முன்னரே குடித்துவிட்டால் நெஞ்சுச்சளி ஓடிப்போய்விடும். 

ஆனால் எனக்கு இந்த முட்டைப்கோப்பி சிறுவயதில் இருந்தே அருக்குளிப்பான விடயம். ஆனால் சளி , தடுமல் போன்ற விடயங்களை பூமாலை போட்டு வரவழைக்கும் ஆளும் நான் தான். நன்றாக புழுதியில் புரள்வது, சமையல் செய்கின்றேன் எனும் பெயரில் மண் அளைவது, ஈரமான உடுப்புடன் விளையாடுவது, நீரில் தாரா போன்று ஊறிக்கொண்டிருப்பது எல்லாமே நான் தான். மருந்து விடயத்தில் மட்டும் வரிசையில் கடைசியில் நிற்பதும் நானே. முக்கியமாக மேல் சொன்னவற்றில் முதல் மூன்றும் பரவாயில்லை. ஆனால் இந்த முட்டைக்கோப்பி இருக்கின்றதே….. இதற்கு பதிலாக முட்டையை தனியாக பொரித்தும் கோப்பியை பெரிய வாளியில் ஊற்றியும் தந்திருந்தால் கூட நன்றாகவிருக்கும். ஆனால் முட்டைக்கோப்பி குடித்தால் ஓங்காலம் வருவதுண்டு. இங்க தான் நான் ஒரு டீல் வைத்திருந்தேன். தம்பி என்னுடையதையும் சேர்த்துக்குடிக்க வேண்டும். அப்படி செய்து நான் தப்பித்தால் என்னுடைய விளையாட்டப்பொருட்கள் சில மணி நேரங்கள் தம்பிக்கு பகிரப்படும்.  என்ன ஒரு கவலையென்றால் இதனால் நான் மட்டும் இருமித்திரியும் போது வீட்டாக்கள் அம்மம்மாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்கள். “மற்றாக்களுக்கு நெஞ்சு சளி போயிட்டுது பிள்ளைக்கு மட்டும் ஒழுங்கா முட்டைக்கோப்பி குடுபடல போல அதுதான் இன்னும் இருமுகிறா” என்று…. சில நேரங்களில் மீண்டும் நான் இந்த முட்டைக்கோப்பி குடிக்கும் வலையில் சிக்கிகொள்வதுமுண்டு. 

இன்றெல்லாம் என் பயணங்களின் போது Vitamin C, Cough syrup, Piriton Syrup  என்று வாங்கி இரசாயனங்களை அருந்தும் போது என் குழந்தைப்பருவத்தினையும் என்னை சூழ இருந்திருந்தவர்களது கைப்பக்குவத்தினையும் உணவிலேயே எம்மை மருந்துண்ண வைத்த அன்பினையும் அதன் நினைவுகளையும் மீட்டிப்பார்க்கின்றேன். 
 

அடிவழிச்சப்பம்

The Complete Guide to Sri Lankan Hoppers - Experience Travel Group 
உணவினை பலவிதமாக சாப்பிடலாம் என்பதற்கு அப்பம் நல்லதொரு உதாரணம். பால் விட்டு பாலப்பம், முட்டை போட்டு முட்டப்பம், சக்கரை வைத்து சக்கரையப்பம் எதுவுமே போடாமல் வெறும் அப்பம் என்று முன்னர் பல முறைகளில் அப்பம் சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது புதிதாகவும் பல வந்துவிட்டன. சொக்கலேட்டை உருக்கி போட்டு சொக்கலேட் அப்பம், இறைச்சி வகைகளை பிய்த்து வெங்காயத்துடன் கலந்து உறைப்பும் போட்டு பிரட்டிய அடப்பத்தினை அப்பம் மேல் போட்டு இறைச்சியப்பம் , மில்க்மெயிட் அப்பம் என்று அப்பமும் காலத்திற்கேற்ப மாறுபட்டும் நவீனமடைந்தும் கொண்டிருக்கின்றது. ஆனால் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் நான்கு அப்பங்களின் வகை தான் எனக்குத் தெரிந்திருந்தது. 

இப்போது அப்பத்திற்கான மா கூட பக்கற்றுக்களில் வந்துவிட்டன. வாங்கி வந்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்தால் நொதித்துவிடும். எடுத்து வாயு அடுப்பில் வைத்து இறக்கினால் போதும். அப்பம் ரெடி ஆனால் சுவைதான் கொஞ்சமுண்டு மதி…. முன்னரெல்லாம் அப்பத்திற்கான பதம் எடுப்பதும் அதனை சுட்டு அடுக்குவதும் வீடுகளில் இடம்பெறுகின்ற பெரிய்ய்ய்யதொரு சம்பவம். இதனால் தான் பெரும்பாலும் வீடுகளில் அப்பம் பெரும் பாலும் சுடப்படாமல் கடைகளில் வாங்கப்படுவதுண்டு. நான் சொல்கின்ற பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அப்பம் சுடுவதற்கென்றே ஊரில் ஒருசிலர் இருப்பார்கள். அறிந்த வரை பெண்கள் தான். இதனை தம்முடைய சுயதொழிலாகவும் செய்து வந்துள்ளார்கள். 

பச்சரிசியை சில மணிநேரங்கள் நீரில் ஊறவைத்து இளகிய பின் அதனை இடித்து மாவாக்கி அரிந்தெடுப்பார்கள். அரித்த மாவினுள் இளம் தென்னங்கள்ளு ஊற்றி புளிக்க வைப்பார்கள். பெரும்பாலும் இன்று மாலை புளிக்க வைத்தால் காலையில் பதம் சரியாகவிருக்கும். தேங்காய் துருவி முதல் பாலை நல்ல கெட்டியாக எடுத்துக்கொள்வார்கள். இனி விறகடுப்பை பற்றவைத்து அதில் பழக்கப்படுத்திய அப்பச்சட்டியை வைத்து மாவை ஊற்றி சற்று வெந்ததும் நடுவில் கெட்டிப்பாலினை அகப்பையால் ஊற்றி ஒரு நிமிடம் மூடி விடுவார்கள். பின்னர் இறக்கி சீனி தூவி இளம் சூட்டுடன் சாப்பிடலாம். அல்லது பாலினை ஊற்றும் போது சக்கரைத்துண்டுகளையும் போட்டு மூடினால் அதுவும் உருகி சாப்பிட நன்றாகவிருக்கும். அல்லது முட்டப்பம் வேண்டியவர்கள் பாலுக்குப்பதிலாக முட்டையை உடைத்து போட்டு மேலாக சற்று உப்பும் மிளகுத்தூளும் தூவியும் சாப்பிடலாம். அல்லது வெறும் அப்பம் விரும்பிகள் இருந்தால் வெங்காயத்தினை நன்றாக அரிந்து மாசியுடனும் சம்பள் தூளுடனும் போட்டு இடித்து சுர் என்று புளிவிட்டு பிசைந்து எடுத்த கட்டச்சம்பளுடன் சாப்பிடுவார்கள். 

egghopper
முட்டப்பம்

நான் சிறுமியாக இருக்கும் காலத்தில் என்னுடைய வீட்டில் அனைவரும் வேலைக்குச்செல்பவர்கள். எனவே அப்பம் செய்வதற்கான நேரங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை அல்லது மெனக்கெட நேரமிருப்பதில்லை. எனவே அப்பம் என்றால் எனக்கு எதலின் அன்றி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு. எம்முடைய வீட்டிலிருந்து இருபது வீடு தள்ளிதான் அவரின் வீடு அமைந்திருந்தது. தினமும் காலையில் அப்பம் சுடுவதும் மாலையில் இடியப்பம் அவித்துக்கொடுப்பதும் தான் அவரது வருமானத்திற்கான வழி. வார நாட்களில் என்னுடைய வீடு அல்லோலகல்லோலப்படுவதால் வார இறுதியில் அதுவும் பெரும்பாலும் சனிக்கிழமை காலையில் எதலின் அன்றியின் அப்பம் தான் எம் காலை உணவு. அவரிடம் போய் அப்பம் வாங்கும் பொறுப்பிற்கு வீட்டால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நானும் தம்பியும். காலையில் ஆறு மணிக்கு வீட்டில் தரப்படுகின்ற நாட்டுக்கோழி முட்டைகளையும் எடுத்துக்கிளம்பினால் திரும்ப எப்படியும் ஒரு மணி நேரமாவதாகும். நான் எதலின் அன்றி என்றால் எந்தளவிற்கு அப்பம் ஞாபகம் வருகின்றதோ அதேயளவு அவர் அமர்ந்திருக்கும் பாங்கும் அவர் முன்னால் எப்போதும் எரிந்துகொண்டிருக்கின்ற அடுப்பினையும் தவிர்த்து என்னால் அவரை கற்பனை செய்ய முடியாது. காணும் போதெல்லாம் குத்துக்காலிட்டு இடுப்பில் பாவாடை, மேற்சட்டையுடன் தான் அமர்ந்திருப்பார். அவர் எழுப்பி காசினை உயரமான அடுக்கில் இருக்கும் பேணிக்குள் வைப்பதை மட்டும் தான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர் வேறு வேலைகளை எப்போது செய்வாரோ என்ற கேள்விக்கான பதில் இன்று வரை தெரியாது. 

வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட ஐந்தாறு முட்டைகள் அதிகமாகவே உமியில் வைத்து வீட்டிலுள்ளவர்கள் எம் கையில் தருவார்கள். அத்துடன் எத்ததை பாலப்ப சோடிகள் வேண்டிவர வேண்டும் என்றும் சொல்லப்படும். தமக்கையும் தம்பியும் எம்முடைய குட்டி சைக்கிள்களில் வெளிக்கிடுவது ஏதோ பெரிய எடுவையுடன் தான் ஆரம்பிக்கும். அங்கு போனால் எதலின் அன்றியின் வீட்டில் ஏழுமலைகளை கடப்பது போது இரு தடைகளை தாண்ட வேண்டும். ஒன்று அவர் வீட்டு வாசலில் சர்வகாலமும் யாரையாவது முறைத்தக்கொண்டிருக்கும் அவர்கள் வீட்டு நாய். யாரையும் கடித்ததாக நானறியேன். ஆனால் அது பல்லைக்காட்டுவது ஏதோ கடிக்க வருவது போன்றிருக்கும். யாருக்குத்தெரியும் அதன் சிரிப்பே அப்படித்தானோ தெரியாது. சூ...சூ... என்று எத்தனம் காட்டி இவரை தாண்டிவிட்டால் அடுத்த தடை அவர்களது மகன். அந்த நாட்களில் ஆட்டிசம் குறித்த புரிதல் இல்லை. எனவே அந்த அண்ணாவைப்பார்த்தால் பயங்கர பயம். சிறுவதில் இவரது பெயரைச்சொல்லி பயப்படுத்தி சோறு ஊட்டியதன் பிரதிபலிப்பாகவும் இருக்க கூடும். கதிரையில் சாதுவாக அமர்ந்தபடி இருக்கும் இவர் எம்மை எதுவும் செய்யாவிட்டாலும் அவரைத்தாண்டி முடியும் வரை மனதுள் அப்படியொரு பீதி எமக்கு. பெரும்பாலும் தம்பி வீதியிலேயே நின்று விடுவான். நூன் தான் இந்த வியூகங்களை பிளந்துகொண்டு செல்லும் அபிமன்யு நான் தான். போய் எதிலின் அன்றிக்கும் அப்பச்சட்டியுள்ள அடுப்பிற்கும் அருகில் அமர்ந்து முட்டைகளையும் கொடுத்துவிட்டு கதைத்துக்கொண்டிருப்பது சுவாரஸ்யமான விடயம்.

இந்த அப்பம் செய்பவர்களுக்கு தம் சொத்தில் பங்கு கேட்டால் கூட கோபம் வராது ஆனால் அப்பத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட சட்டியை யாராவது தொட்டால் போதும்.  எதிலின் அன்றிக்கும் பல தடவை இவ்வாறு தலைப்கொதி வருவதை பார்த்திருக்கின்றேன். மூன்று சட்டிகள் வைத்திருப்பார். மேலே தணல் வைப்பதற்கென மூன்று மண் சட்டிகள் பிரிம்பாக இருக்கும். சுடான சட்டியில் அப்பக்கலவையை ஊற்றும் போதும் கேட்கும் சுர் என்ற சத்தம் கேட்கும் போதே பசிக்க ஆரம்பித்துவிடும். இனி அவர் அப்பம் சுடும் வரையில் பள்ளிக்கதை கேட்பார், பாட்டுப்பாட சொல்வார். மிக முக்கியமானது ஒரு பாலப்பமும் பாட்டுப்பாடி முடிய தருவார். ஒரு உணவை ஆறவைத்து சாப்பிடும் போது ஒரு சுவை என்றால் இளம் சூட்டில் சாப்பிடுவது ஒருவித சுவை. அதையே சுடச்சுட ஊதிச்சாப்பிடுவது வேற சுவை. இந்த பாலப்பமும் இதில் தான் சேர்த்தி. சுட்டி பாலப்பங்களை நாம் கொண்டுபோன பாத்திரத்தின் அடியில் வாழையிலை பரப்பி சோடி சோடியாக அடுக்குவார். இறுதியாகத்தான் முட்டை அப்பங்கள் சுட ஆரம்பிப்பார். முட்டையப்பங்களுக்கு சோடி எப்போதுவே வெறும் அப்பங்கள் தான். கொண்டு போன நாட்டு முட்டைகளில் இரண்டு அல்லது மூன்று மீதியாக இருக்கும் போது அதுவைர சுட்ட அப்பங்களை தம்பியிடம் கொடுத்து வீட்டுக்கனுப்பி விடுவேன். இதில் ஒரு தந்திரமும் இருந்தது. 

எல்லா அப்பங்களும் சுட்ட பின்னர் இறுதியாக மீந்திருக்கும் கப்பிகள், சக்கரை, பால் அனைத்தையும் கலந்து இறுதியாகவொரு அப்பம் சுடப்படும். சாதாரண அப்பங்களிலும் விட சற்று தடிப்பாகவிருக்கும். இதற்குத்தான் அடிவழிச்சப்பம் என்று பெயர். பெயரிலேயே பொருள் இருக்கின்றது. மீந்த அனைத்தையும் அடிவரை வழித்து சுடப்படும் இறுதி அப்பம். இதற்கான மௌசே வேற… கலவையை ஊற்றியவுடன் அடுப்பை முழுவதும் அனைத்துவிடுவார். மெல்லிய தணலில் தான் வேகும் இந்த அடிவழிச்சப்பம். சற்று நேரமாகும். இறக்கியவுடன் ஒரு துண்டை என்கையில் வாழையிலையில் வைத்து தருவார். மீதியையும் பொட்டலாம கட்டி எனக்கே தந்துவிடுவார். பிட்டுக்கு மண் சுமந்த சிவனார் மாதிரி பாடல்பாடி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் மாதிரி நான் எதலின் அன்றியிடம்  பாட்டுப்பாடி பெறுவது இது தான் 

கடைசியாக சுட்ட இரண்டு மூன்று முட்டையப்பங்களுடன் இதனையும் வைத்து குட்டிச்சைக்கிளில் வீடு திரும்பிய பின் ஆரம்பிக்கும் என் கனகாட்டங்கள். வீட்டுக்குள் வந்து கதவை சாத்துகின்றேனோ இல்லையோ யாருக்கு வேணும் இந்த அப்பம் என்று கூவுவதில் தொடங்கும் என் அழிச்சாட்டியம். இனி இதனை வைத்து பேரம் பேசி, ஆறவைத்து இறுதியில் எல்லோருக்கும் சிறு சிறு துண்டுகள் கொடுத்து சாப்பிடுவதில் இருக்கின்ற சந்தோசம் வேறெதிலும் இருக்காது. எப்படியும் எதிலின் அன்றியிடம் போய் வருகின்ற இடைவெளியில் வீட்டில் கட்டசம்பள் இடிக்கப்பட்டிருக்கும். முதல் நாள் மீந்த குழம்பு இருந்தால் அதனையும் பொறுபொறுக்க சூடாக்கி அப்பத்துடன் தொட்டுச்சாப்பிட்டால் அன்றைய நாள் நிறைந்துவிடும். என்னவொரு பிரச்சினையென்றால் அப்பம் சாப்பிட்டால் நல்லா நித்திரை தூங்கும் என்பது தானது. 

இப்போதெல்லாம் அரை மணியில் அப்பம் செய்திட முடியும், நாட்டு முட்டைக்குப்பதிலாக லெகோன் முட்டை வந்துவிட்டது. என்ன தான் சொன்னாலும் அந்தக்காலத்தில் உணவில் சத்துக்கள் இருந்தன உணவு நிறைவாகவிருந்தது. ஒவ்வொரு உணவிற்குப்பின்னும் நினைவுகள் இருந்தன... அன்பான நபர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்று எல்லாமே கலப்படமாகிவிட்டது உணவு மட்டுமல்ல அன்பும் கூட 




பனாட்டு


பனாட்டு என்றாலே எனக்கு ஞாபகம் வருவது யாழ்ப்பாணம் தான். யாழ்ப்பாணத்தில் ஏகப்பட்ட உறவுகள் இருந்தாலும் நல்லூரிலுள்ள மாமா- மாமி தான் எப்போதும் என்னுடைய கூடு. அப்பப்போ நான் பறந்து போய் தங்குவது அவரது வீட்டில் தான். மாமி தான் உண்மையில் அம்மாவிற்கு இரத்த உறவு என்றாலும் மாமாவிற்கு என் மேல் உயிர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் என் மீது அதீத பாசம். எனக்கு அங்கு போய் தங்குவதில் மூன்று விடயம் பிடிக்கும். ஒன்று மாமி சங்கீத விரிவுரையாளர் என்பதுடன் நல்ல வீணை கலைஞரும் கூட. இரண்டாவது எமக்கு சொந்தமான வீடு இவர்களது வீட்டருகில் இருப்பதால் இவர்கள் தான் பராமரிக்கின்றார்கள். அது மூன்று தலைமுறைகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு. ஏம்மளவில் அது வீடு மட்டுமல்ல பொக்கிஷம். வீட்டின் நடுவில் ஊஞ்சல் உண்டு. அதில் சாய்ந்திருந்து அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடும் போது நம் தாத்தா பாட்டி என முன்னோர் மடியில் சாய்ந்திருப்பது போன்ற உணர்வு எனக்குள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இவ் உணர்வு அலாதியானது. 

போதாக்குறைக்கு எனக்கு விளக்குகள் மீதான பிரியத்தில் சேர்த்த பல்வேறு விளக்குகளை பல இடங்கள், நாடுகளில் இருந்து தேடிப்பிடித்து இங்கு அலங்காரத்திற்கு வைத்திருக்கின்றேன். இவற்றினை பார்த்துக்கொண்டு ஊஞ்சலாடுவது விபரிக்க முடியாததொரு உணர்வு. (விளக்கேற்ற வந்த மருமகள் என்று என்னை சாதாரணமாக சொல்லக்கூடாது. விளக்குகள் கொண்டுவந்த மருமகள் நான்). மூன்றாவது விடயம் ஒவ்வொரு இராசிகளுக்குமான வீணைகள் என மொத்தம் 12 வீணைகள் எம் வீட்டில் உண்டு. (இராசிகளுக்கு வீணையா என்று கேட்டால் இது பற்றி விபரித்து விரைவில் எழுதுகின்றேன். ஆனால் இதை யாரிடமும் பரப்பாதீர்கள். படம் எடுக்க வீணை வேண்டும் என்று கேட்டு எடுத்துப்போய் அதன் முட்டியில் கீறலை ஏற்படுத்தியதில் அந்த விளம்பரபடகுழு மீதான கடுப்பு இன்னும் மாறவில்லை.) நான் போகின்ற நாட்களில் விரைவாக வேலைகளை முடித்துவிட்டு நானும் மாமியும் வீணை வாசிப்பதுண்டு. மாமியின் குரல் கணீரென்றிருக்கும். அதனுடன் இழைந்து பாடுவதில் சில இடங்களில் நான் தடுமாறுவதுண்டு. ஆனால் கற்றுத்தருவதில் மாமி வல்லவர். இவற்றிற்காகவும் இவர்கள் அடிக்கடி என்னை பார்க்க வேண்டும் என கேட்பதாலும் நேரங்கிடைத்தால் யாழ் மண்ணிற்கு பறந்துவிடுவேன். 

ஆனால் எனக்கு இவரிடம் பிடிக்காதவொரு விடயம் என்னவென்றால் காலையில் பழங்சோற்றினை பனாட்டு போட்டு பிசைந்து வலுக்கட்டாயமாக எனக்கு தீத்திவிடுவது. எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த பனாட்டு மட்டும் பிடிப்பதில்லை. ஒருமுறை இதன் செய்முறையை விபரித்து காலால் உழக்கித்தான் இதனை நிலத்தில் பரத்துவார்கள் என்று கேள்விப்பட்டதில் இருந்து வந்த அருவருப்பு இது. மற்றவர்கள் பனாட்டை கையில் வைத்து சாப்பிடும் போது எனக்குள் குமட்டலே வந்து விடும். ஆனால் இந்த மாமி இருக்கின்றாரே எப்படியாவது சோற்றுக்குள் ஒளித்து வாய்க்குள் சிறு துண்டுகளை திணித்துவிடுவார். கேட்டால் பெண்களுக்கு சத்து முக்கியம். பிறகு கர்ப்பமாகும் போது இவையெல்லாம் நல்லது என்பார். நல்லெண்ணையை சேர்த்து சமைப்பதிலும் இவரது கோட்பாடு இது தான். நல்லெண்ணெய்யை போத்தலோடு தந்தாலும் மடக்கென்று குடிப்பேன் ஆனால் இந்த பனாட்டினை மட்டும் கண்ணில் காட்ட கூடாது. இன்று பல்கலைக்கழகம் இல்லை என்பதால் சில இலக்கிய புத்தகங்களை புரட்ட நேர அவகாசம் கிடைத்தது. இதில் இந்த பனாட்டு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்தேன். இதனை ஆராய்ந்ததில் கிடைத்த விடயங்கள் இவை. 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் “பனா அட்டு” என தமிழர்களின் பாரம்பரிய உணவொன்றினை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பனா என்பது பனையை குறிக்கின்றது. அதேவேளை “அட்டு” எனும் சொல்லை தேடிப்பார்த்ததில் “காய வைத்து உறையச்செய்தல்” என்று பொருள்படுகின்றது. இவ்விரு பதங்களையும் புணர்ச்சி செய்யும் போது “பனாட்டு” என்பகின்ற பதம் பிறக்கின்றது. இச்சொல் குறிப்பிடப்பட்டுள்ளது 2000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில். இதனை உறுதிசெய்ய இரு விடயங்கள் ஏதுவாகின்றன. 

1.    கற்பக தரு என அழைக்கப்படுகின்ற பனை தமிழரின் வாழ்வியலில் இணைந்ததொன்று. முன்னைய காலங்களில் கடற்கோள்களின் உயரத்தினை அளப்பதற்கு கூட “பனையளவு” என்கின்ற சொல்லாடல் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 
2.    பனாட்டு செய்கின்ற முறையை எடுத்துக்கொண்டால் பழுத்த பனம் பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட சதை களியை சேகரித்து அதனை மிதமான தீயில் கிளறி கட்டிப்பதமடைந்தவுடன் தட்டுகளில் பரப்பி வெயிலில் உலரவைக்கப்பட்டு பனாட்டு தயாரிக்கப்படுகின்றது. இச்செய்முறையை கவனித்துப் பாருங்கள். தீ, வெயில் என இயற்கையுடனான பதப்படுத்தல். இவ்வாறான உணவுகள் நீண்டகாலம் கெடாமல் இருக்கும். இது கூட பனாட்டு பண்டையகால உணவு என்பதற்கு சான்றாகின்றது.  

இன்னும் தேடியதில் இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து இயற்கைச்சக்கரை போன்றவை செறிந்து காணப்படுவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை உண்ணும் போது செரிமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் உடல் வெப்பநிலையும் சமனிலையடைவதாக மேலும் அறியக்கிடைக்கின்றது. அத்துடன் பனாட்டு பண்டையகாலங்களில் கிராமிய பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களது வீட்டு உற்பத்தியாகவும் இதனை பண்டமாற்று முறையில் பயன்படுத்தியதாகவும் குறிப்புக்கள் உள. விருந்தினர்களுக்கு உணவளிக்கும் போதும் இது பரிமாறப்பட்டமை குறித்தும் கூறப்பட்டுள்ளன. சங்ககால இலக்கியங்களில் வறட்சி காலங்களில் உணவு பாதுகாப்பிற்கு பாரம்பரிய தீர்வாக பனாட்டு பயன்பட்டுள்ளது. அந்தக்காலங்களில் விவசாயிகளின் முக்கிய உணவாகவும் இது இருந்துள்ளது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
அத்தடன் சேரவம்சாவளியினரின் குடிப்பூ பனை. இவர்களது கால இலக்கியங்களில் பனையை மரமல்ல என்றும் அதனை புல் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் போந்தை, பெண்ணை என்றும் வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றார்கள். பிற்பட்டதான சங்கமருவிய கால இலக்கியங்களில் காலம், புற்பதி, புற்றாளி, தாளி போன்ற பதங்களையும் பனையை குறிக்க பயன்படுத்தியுள்ளனர். 

இன்று நமது சொல்லாடல்களில் பனாட்டு என்பது மருவி பினாட்டு என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆனால் இதனை தவிர்த்து இனிவரும் காலங்களில் பனாட்டு என்று உச்சரிப்பது நாம் தமிழுக்கு செய்கின்ற உபகாரம் என நினைக்கின்றேன்.  

மேலும் பழந்தமிழ் உணவுப்பண்டமான இந்த பனாட்டு செய்முறையையும் அதன் பயன்பாட்டினையும் எதிர்வரும் தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளதாக தோன்றுகின்றது. கடந்த போரில் நாம் இழந்தது மனிதர்களை மட்டுமல்ல பல பனை மரங்களையும் தான். நான் இவ்வளவு காலமும் நிராகரித்திருப்பது பனாட்டினையும், அதன் பின்னுள்ள பாரம்பரியத்தினையும் கூடவே என் மாமியின் அன்பையும் என கடந்தகாலம் என் உச்சந்தலையில் நச்சென்று குட்டிச்சொல்கின்றது. 

தொதல்


அண்மையில் பல்கலைக்கழக படிப்பு சார் பயணமொன்றில் நாங்கள் 6 பேர் குழுவாக இணைந்துள்ளோம். நான்கு வாரங்கள் தொடர்ந்த பீட்சா, பேகர் உணவுகள் மெல்ல மெல்ல அலுக்கத்தொடங்கி விட்டது. வீட்டாக்கள் தந்தனுப்பிய கள்ளத்தீன்களும் தீர்ந்துவிட்டன. பொதுவாக எனக்கு கடையுணவுகள் பிடிப்பதில்லை. சோறும் சொதியும் என்றாலும் அதனை வீட்டில் அல்லது என்னுடைய கையால் செய்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இதனை என்னுடைய பயணங்களின் போதும் தொடர்வதுண்டு. முன்னர் வேறு நாடொன்றில் தங்கியிருந்த போதும் என்னுடைய உணவுகளை நானே தயாரித்துக்கொள்வேன். என்னுடைய சமையலறையில் நம்மூர் சாமான்களை நிரப்புவதற்காகவே வாராவாரம் இரண்டு மணிநேர பயணத்தினை மேற்கொண்டு பொருட்களை வாங்கிய அழிசாட்டியம் பொருந்திய ஆள் நான். அதிகாலையில் பெரும்பாலும் பிரம்பமுகூர்த்தில் எழும்புகின்ற வழக்கம் என்னுடையது. இதுவும் எந்நாட்டிலும் தொடர்கின்றதொரு வழக்கம். பெரும்பாலும் அதிகாலையில் சமைத்து தான் பல்கலைக்கழகத்திற்கும் எடுத்துச்செல்வேன். இதனால் என்னுடைய நண்பர்கள் மத்தியில் என்னுடைய சமையல் பிரபல்யம். (இனி வேறு வழி)

இப்படித்தான் அண்மைய பயணத்திலும் நாக்குச்செத்துப்போன என் நண்பர்கள் என்னுடைய இருப்பிடத்திற்கு வந்து சாப்பிட ஆசைப்பட்டு தாங்கள் சொல்லும் உணவை சமைத்துத்தரும்படி கேட்டார்கள். சரி என்ன வேண்டும் என்று கேட்டு அவர்கள் தந்த பட்டியலில் இனிப்பு வகைக்குள் தொதலும் அடங்கியிருந்தது. முதல் நாளே கடைத்தெருவிற்கு போய் இலங்கை இந்திய கடைகளை உருட்டி பொருட்களை வாங்கினால் எண்ணெய் தேங்காய் மட்டும் இல்லை. இங்கு சிரட்டையுடனேயே தேங்காயை காணுவது அரிது. துருவிய பொதி செய்யப்பட்ட தேங்காய் பூ தானுண்டு. சரி ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ என்று இதனை வாங்கி வந்து சேர்ந்தாகிட்டு. இரவு பயறை வறுத்தல், கச்சான் வறுத்தல், என இதர வேலைகளும் செய்தாகிட்டு. படுக்கைக்கு வந்து சேர்ந்த போது தான் வீட்டு நினைவுகள் என்னை அழுத்த ஆரம்பித்தன. முக்கியமாக தொதல் கிண்டும் போது அம்மா ஒவ்வொரு முறையும் என் வீரதீர கதையை சொல்லி என்னுடைய மானத்தை வாங்குவதுண்டு. இப்போதும் அச்சம்பவத்தினை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு வருவதுண்டு. 

 மட்டக்களப்பாரை பொறுத்தவரை தொதல் கிண்டுதல் (செய்வது.. தயாரிப்பது என்பன போன்ற வினைச்சொற்களை தவிர்த்து கதைக்கும் போது மிகநெருக்கமாக இருப்பதால் "கிண்டுதல்" பதத்தினையே தொடர்கின்றேன். ) என்பது கிட்டத்தட்ட குட்டி மாமாங்கம் போன்றது. ஒரு கொத்தில் கிண்டுவதாகட்டும் பத்து கொத்தில் கிண்டுவதாகட்டும் “நம்மட வீட்ட தொதல் கிண்டுறம்” என்பதை ஊரே தெரிந்துகொள்ளும்.  அந்தளவிற்கு இருக்கும் அலப்பறைகள். கிண்டுவதற்கு முதல் இரு நாட்களில் நல்ல எண்ணெய்த்தேங்காய் கிடைக்குமா? என்று ஊரில் தேடித்திரிவதில் பாதிப்பேருக்கு தெரிந்து போய்விடும். அடுத்து தொதல் கிண்டுவதற்கான உலவாரம் தாருங்களன் என்டு கேட்பதில் மீதி சொந்தக்காரர்களுக்கும் தெரிந்து விடும். இப்படி பல அலப்பறைகளுடன் ஆரம்பமாகின்ற இந்த தொதல் கிண்டுதல் என்பது இரண்டு மூன்று நாட்கள் தொடரும் சடங்கு என்பது நம்மட ஆட்களுக்கும் நல்லாத்தெரியும். 

முதல் நாளே பயறு, அரிசி இடித்தல், வறுத்தல், புடைத்தல் என வீடு அல்லோலகல்லோலப்படும். அடுத்த நாள் அதாவது தொதல் கிண்டும் நாளன்று காலையில் எல்லோரையும் எழுப்பும் போதே “கெதியா எழும்புங்க இன்று தொதல் கிண்டுற வேல இருக்கு…” என்று வீட்டு பெரியவர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் இரண்டொருவர் அன்றைய நாளுக்கான சமையல் வேலைகளைச் செய்ய ஏனையவர்கள் தொதல் கிண்டும் சடங்கிற்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பார்கள். யார் தேங்காய் துருவுவது? எத்தனை தேங்காய் துருவுவது..? என்று தொடங்கி நீண்டுகொண்டேயிருக்கும் அல்லோலகல்லோலங்கள்…. 

அநேகமாக மதிய உணவிற்குப்பின்னர் தான் இந்த சடங்கு ஆரம்பமாகும். தேங்காய் பாலினை பிழிந்து பெரிய தாச்சியில் ஊற்றி விறகடுப்பில் வைத்து கிண்டுவார்கள் பின்னர் கரைத்த மாவினை அதனுள் போட்டு “கையெடுக்காமல்” கிண்டுவார்கள். (இதற்காகவே வீட்டில் இரண்டு இளந்தாரிகள் இருப்பார்கள்.) ஒருவர் மாற்றியொருவர் உலவாரத்தினால் கிண்டுவார்கள். தேங்காய் பால் வற்றி எண்ணெய் விட ஆரம்பிக்கும். இதைக்கண்டால் பிறை கண்ட மாதிரி ஒருவித குதூகலம் பரவும். “நல்ல எண்ணெய்த்தேங்காய்” வாங்கி வந்தவருக்கும் பாராட்டு வேறு கிடைக்கும். இந்த நேரம் இருக்கும் பதத்தில் கொஞ்சம் சிரட்டையில் வாங்கி சாப்பிடுவதற்கென்றே என்னைப் போன்றதொரு கூட்டம் துருவிய புது தேங்காய்ச் சிரட்டையுடன் வலம் வருவதுண்டு, இந்த இளம் தொதலின் ருசி ஒருவிதமானது. சிட்டையில் அள்ளி வைக்கும் இளம் தொதலை ஊதி ஊதி சுடச்சுட சாப்பிடுவது வேற லெவல் சந்தோசம். தாச்சியிலுள்ள கலவை பொன் நிறத்திற்கு வரும் போது கச்சான், பயறு மற்றும் கருவா ஏலம் போன்றவற்றினை தூவுவார்கள். இந்தப் பொன்னிறம் சற்று கருமையாக மாறும் போது சவ்வரிசியினை தூவி இறக்குவார்கள். இறக்கிய கலவையை பாத்திரங்களில் பரவி ஒரு பக்கத்தினை எண்ணெய் வடிவதற்காக உயர்த்தி வைப்பார்கள்.

பிறகென்ன சற்று ஆறத்தொடங்க மணம் நம்மை அருகே அழைக்கும். இனியென்ன வெட்டி வெட்டி சாப்பிடுவது தான் வேலை. இதுவே வெளிநாடு செல்பவர்களுக்காக அனுப்பப்படவுள்ளது எனில் அதனை பழஞ்சீலையில் சுற்றி எடுத்து வேறாக வைப்பதுண்டு. இதற்கும் பிறகு தான் இருக்கிறது காவல் வேலை. புதுவருசம், கொண்டாட்டங்களுக்கு என்று பகிர்வதற்காக செய்யப்பட்ட இந்த தொதலை எறும்பு, பல்லியிடமிருந்து காப்பாற்றுவதை விடவும் நம்மிடமிருந்து காப்பாற்றுகின்ற வேலை……… 

இவ்விடத்தில் ஒரு விடயத்தினை குறிப்பிட்டேயாக வேண்டும். தொதல் என்பது நான்கு நிலைகளில் சாப்பிடுவதற்கு உகந்தது. ஒன்று இளம் பருவமாக இருக்கும் போது அதாவது இள கபில நிறத்தில் இருக்கும் போது சிரட்டையில் வாங்கி சுடச்சுட சாப்பிடுவது தனிச்சுவை. இரண்டாவது நன்றாக முறுகி பாத்திரத்தில் பரப்பப்பட்ட பின்னர் ஆறவைத்து எண்ணையை ஒற்றியெடுத்து சாப்பிடும் பருவம். மூன்றாவது சுற்றி நிற்பவர்கள் விளாரு கதைகள் கதைத்து தொதலை கவனிக்காமல் விட்டால் முறுகி கட்டிகளாக மொறுமொறு என்றிருப்பதை பல்லுப்போனாலும் பரவாயில்லை என்று இதனை சாப்பிடுவது. அடுத்த முக்கியமான நிலை தொதல் தாச்சியை, உலவாங்கினை ஒட்டியுள்ளதை சுரண்டி சாப்பிடுதல்.  

இதற்கிடையில் இரண்டாம் பந்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று நம்முடைய சிறுவயது சாகச செயல் ஒன்றும் நினைவுகூறப்படும். அப்போது எனக்கு 4 வயதாம். புதுவருடத்திற்காக நாலைந்து பேர் சேர்ந்து அப்போது தொதல் கிண்டியிருக்கின்றார்கள். அப்போது அருகில் நானும் புதுச்சிரட்டையுடன் இளம்தொதல் கேட்பதற்காக நின்றிருக்கின்றேன். இரண்டு மூன்று தடவைகள் கேட்டும் அதில் நின்ற கஞ்சல் எனக்கு ஒரு துளி கூட தரவில்லையாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அதே சிரட்டையால் மண்ணையள்ளி தொதல் தாச்சிக்குள் போட்டிருக்கின்றேன் நான். அருகில் இருந்தவர்கள் என்னை விரட்டியிருக்கின்றார்கள். இதனால் அங்கிருந்து நான் ஓடிவிட்டேனாம். அம்மாவும் என்னை வெளுப்பதற்காக பிரம்புடன் என்னை தேடியிருக்கின்றார். என்னைக்காணவில்லையாம். இதனால் பதற்றமடைந்தவர்கள் எல்லாவிடமும் தேடிப்பார்த்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 3 மணிநேரமாவது தேடியிருப்பார்களாம். அப்போது யுத்த காலம், குழந்தை கடத்தல்கள் இடம்பெற்ற காலம் இனி கேட்கவா வேண்டும்….. அழுதுபுலம்பி கடவுளுக்கு நேர்த்தியெல்லாம் வைத்து அடுத்த கட்டம் முறைப்பாடு செய்ய நினைக்கும் போது பெரிய அண்ணா ஒரு சந்தேகத்தில் சாப்பாட்டு மேசையில் இருந்த உணவு மூடியை திறந்து பார்த்துள்ளார். நான் அதற்குள் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தேனாம். நீண்ட நேர தேடுதலில் கோபம் போய் அழுதுகொண்டிருந்த அம்மா என்னை தூக்கியணைத்து முத்தமிட்டாராம். 

இன்று வரை தொதல் பதம் சரியாக வருகின்றதோ இல்லையோ தொதல் கிண்டும் போது இந்த கதை பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாளை காலையில் வீட்டாக்களுடன் பேசும் போது இங்கு நண்பர்களுக்கு குட்டிச்சட்டியில் தொதல் கிண்டவுள்ளதை நான் சொல்லும் போது நிச்சயம் இந்த கதையும் பேசப்படும்….. நினைவுகள் எவ்வளவு அழகானவை…. இனிமையானவை… 

பிற்குறிப்பு: அந்த மண் விழுந்த தொதல் என்னாச்சு என்று நீங்கள் கேட்பது எனக்கு இங்கு வரை கேட்கின்றது. நான் மண் அள்ளி போடுவதற்கு மூல காரணமான அந்த கஞ்சல் மண் விழுந்த பகுதியை மட்டும் அள்ளி வீசிவிட்டு மற்றதை அநியாயமாக்காமல் சாப்பிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. 



 

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை