Thursday, February 28, 2013

சில வினாக்கள்….


எல்லோருடைய மனதிலுமே நிச்சயம் எப்போதும் சில வினாக்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். வினா இல்லா மனம் வெற்றுத்தாளுக்கு சமம் என்று கூட கூறலாம். சில வினாக்களுக்கு விடைகள் இருப்பதில்லை. காரணம் இந்த வினாக்களுக்கு விடை தெரிந்தவனான கடவுள் வாய் திறப்பதில்லை என்பதால்.. இன்னும் சில வினாக்களுக்கு தேடியலைந்து விடையை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். விடைகள் சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கக்கூடும். மேலும் சில கேள்விகளுக்கு பதிலே தெரியாமல் இருப்பது நல்லதே என்று கூட நினைக்கத் தோன்றும்.

இந்தப் பதிவில் நான் சொல்ல விழைகின்ற விடயம் “ நாம் ஒர் விடயத்தினை செய்யும் முன் எம்முள் வினா எழ வேண்டும்” என்பதே. அண்மையில் என் நண்பருக்கும் எனக்குமிடையில் முகநூலில் கருத்து பகிர்வது தொடர்பில் சிறு பிரச்சினை ஒன்று தோன்றியிருந்தது. நான் முகநூலில் இட்ட பதிவினை அவர் இருமுறை நீக்கிவிட்டார். நான் ஏன் என கேட்ட போது தன்னுடைய சகோதரன் யாரென கேட்பார் என பதிலளித்தார். நான் எதிர் கேள்வியாக மற்றவர்கள் “Dear” போடுவதைப் பற்றி அவர் கேட்கமாட்டாரா? என்று கேட்டு மூன்று நாட்களாக போரொன்றையே (????) தொடுத்திருந்தேன். இது மிகச்சிறியதொரு விடயம் ஆனால் என்னைப் மிகவும் பாதித்தது மட்டுமல்லாது நிறைய சிந்திக்கவும் கூட தூண்டிய விடயம்
போரின் இறுதிகட்டத்தில் அவரை வார்த்தைகளால் நான் காயப்படுத்திய தருணத்தில் என் மனதில் சில கேள்விகள் எழுந்திருந்தன. அவற்றிற்கான விடையை காண முயன்ற வேளை உரிமைச் சண்டை போட தோனவில்லை. சமாதானமாகி விட்டேன். ஆனால் சில உறுதியாக முடிவுகளுடன்….

அப்போது தோன்றியதொரு விடயம்  இக் கேள்விகள் எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறான உறவுகளுக்கிடையான சிறு விரிசல்களை போக்குவதற்கும், பல சந்தர்ப்பங்களில் சங்கடப்படாமல் இருப்பதற்கும் சில வினாக்கள் எம்முள் தினம் எழ வேண்டும்

•    (நான்) யார்?
•    எங்கு?
•    ஏன்?
•    எப்போது?
•    எதற்காக?
•    விளைவு என்ன?

இவை எம் மனதில் ஒன்றை செய்யும் முன்போ அல்லது ஒரு விடயத்தை பேசும் முன்போ எழுமாகவிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம். வீண் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் அல்லது மிகமுக்கியமாக அடுத்தவர் மனதை புண்படுத்துவதை தடுக்கலாம்.

கல்வியில் கேள்விக்கான பதில்கள் எம் அறிவை பெருக்குகின்றன. வாழ்க்கையில் எம்முள்ளான கேள்விகள் எம்மை செதுக்குகின்றன.


Wednesday, February 27, 2013

எதை புரிதல் என்கிறாய்......?


எடுத்ததற்கெல்லாம் - என்னை
புரியாதவள் நீ என்கிறாய்
உன்னளவில் புரிதல் என்றால் என்ன?

என்னை விட நீ
முகநூலிற்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தினை
முணுமுணுக்காமலிருப்பதா?
உன் அருகில் நிற்கும்
கணங்களில் கூட – நீ
அடுத்தவளை விமர்சிப்பதை
இரசிக்காமலிருப்பதா…?
நீ என் அழைப்புக்களை
அலட்சியப்படுத்துவதை பற்றி
அலட்டாமல் இருப்பதா..? - இல்லை
அடுத்தவனை என்னுடன் நீ
இணைத்துப் பேசுவதை கூட
பொறுக்காமல் துடிப்பதையா?
எதை புரிதல் என்கின்றாய்?

எனக்கு மட்டுமான உன்னை
உன் அன்பை
அடுத்தவர்களுடன்
பகிர்வது தான் - புரிதல்
என்றால்…
உன்னளவில் உன்னை
புரியாது – என்னளவில்
உன்னை பகிராத
மௌனங்களே போதும்
இறுதிவரை - நம்
இருவருக்கிடையான புரிதல்களுக்கு…(பகிர்தல்களுக்கு)




Monday, February 25, 2013

பெற்ற வயிறு


என் பெற்ற வயிறு குளிர்ந்தது – நான்
ஈரைந்து மாதங்கள் சுமந்தவனை
என்னுள் இருந்து கொண்டு
அவன் அசைவுகளால் சிறுகதை பேசி – தான்
என்னுள் இருப்பதை - சிறு
உதைகள் மூலம் உணர்த்தியவனை
எனக்கும் என்னவனுக்குமான - அன்பின்
பரிசாக வந்துதித்தவனை – என்
தாய்மையை நிரூபித்து – அம்மா
என்ற ஸ்தானம் தந்தவனை
துணிகளில் சுற்றி - உதிர
மணம் மாறாமல் சிறு மலராக
தந்த போது -என்
பெற்ற வயிறு குளிர்ந்தது

அவன்
சிறு நெளிவுகள்...
திணுக்கிடல்கள் - நான்
பட்ட வேதனைகள்,
வலிகளை - கூட
சுகமான சுமைகளாக்கின

என் கைகளில் தவழ்ந்தவனை
கண்ணுறக்கம் தொலைக்க வைத்தவனை – என்
கரம் பற்றி நடை பயின்றவனை
சுட்டித்தனங்களால் பிறரை கவர்ந்தவனை
முதலாம் மாணவனாக பரிசுகளுடன் - என்
முத்தங்களையும் வென்றவனை
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி
வைத்தியராகிடுவான் - என
எதிர்பார்க்க வைத்தவனை
இப்போதும் தந்தார்கள்....
இரத்தம் தோய்ந்த துணியில் சுற்றி – என்
கரங்களிலல்ல சவப்பெட்டியில் - வெறும்
சதைப்பிண்டமாக.....

(பெண்கள் அமைப்பொன்றினால் நடாத்தப்பட்ட கவிதையில் பரிசு பெற்று பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை - 2012 இதை அரசியல் கைதிகளாக இருந்து உயிர் நீத்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் . இதன் கருப்பொருள் கூட அரசியல் கைதி நிமலரூபனின் மரண சடங்கினை பார்த்த போது உதிர்த்ததே.)







நிறம் மாறும் மனிதர்கள்





சூழலுக்கேற்ப மாறும்
பச்சோந்திகள்..
படித்ததுண்டு பாடசாலையில் -
தன்னைப் பாதுகாக்க தான்
மாறுகின்றன.. விஞ்ஞான ஆசிரியர்
அளித்தார் விளக்கம்
மேற்கோள் காட்டினார்
டாவின்சி கோட்பாட்டை

விஞ்ஞானம் கற்றுக் கொடுத்தது
ஐந்தறிவுகளின் மாறலை – என்
அனுபவங்கள் கற்றத் தருகின்றது
ஆறறிவுகளின் வேடமிடல்களை…

பிறப்பு முதல் இந்நாள் வரை
காதல் முதல் நட்பு வரை
காலை முதல் மாலை வரை
சலித்துவிட்டன (மா) மனிதர்களின்
நிறம் மாறல்களைப் பார்த்து….

புகழ்ந்த வாய்கள் இகழ்கின்றன
சிரித்த முகங்கள் முறைக்கின்றன
அணைத்த கைகள் நேரம் பார்க்கின்றன
அடிப்பதற்கு
நட்புகள் கூட மறைகின்றன
சூழலிலிருந்து தப்புவதற்கு

ஐந்தறிவு மாறலுக்குக்குக் கூட
இயற்கை சூழல்
எதிரியிடமிருந்து பாதுகாப்பு
உணவுச் சங்கிலி - என
காரணங்கள் பலவுண்டு
நிறம் மாறும் மனிதர்களுக்கு….?

பணமா?
கவர்ச்சிகளா?
உயர்ந்ததை தேடுகின்ற இயல்பா?
காமமா?
காரிய சித்திகளா? - இல்லை
காரணமில்லா கர்மங்களா?

கேள்வி கேட்க
வாழ்க்கைப் பாட ஆசிரியரில்லை
கோட்பாடெழுத டாவின்சி இல்லை
இப்போதெல்லாம் - கடவுள்
கூட சிலையாகி – சில
வேளை நிற்பதால் - என்
கேள்விகளுக்குப் பதில்களும்
கிடைப்பதில்லை
கிடைத்தாலும் ஏற்பதற்கு
மனதில் சக்தியில்லை…

முகமூடி மனிதர்களிடையே
விடைகளை விட
விடையில்லா வினாக்கள்
மேலெனத் தோன – விளைகின்றேன்
நானும் நிறம் மாற… -  அல்லது
மௌனமாக தடம் மாற…



Friday, February 15, 2013

கனக்கின்றது மனம்.....


இன்று காலை முதல் இந்நிமிடம் வரை என் மனதில் பாரமாகவே அமைந்துவிட்ட ஒரு விடயத்தினை பகிந்துகொள்ள விரும்புகின்றேன்.
காலையில் கொழும்பு பொறளை – பலவத்தை வீதியில் பேரூந்தில் பயணிக்கும் போது இடம்பெற்றதொரு சம்பவம். நூன் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து ஐந்தாறு வரிசைகளுக்கு முன்பாக ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார். தீடீரென நான் ஜன்னலோரம் அமர்ந்து இரசனையிலும் தொலைபேசியில் பாட்டும் கேட்டுக்கொண்டிருந்த போது பெரிய சத்தம் போட்டு ஏதோ கதைத்தார். ஏதோ காசுப் பிரச்சினை போல என்று நினைத்து பழைய படி நானும் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டேன். பின்னர் அவர் அவரது தந்தையாரிடம் தொலைபேசியில் சொல்லி அழுத போது தான் புரிந்தது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன் மறைகேடாக நடந்திருக்கின்றான். இந்த பெண் அடித்து விட்டு கூச்சல் போட அவன் இறங்கி போய் விட்டான். ஆனால் அருகிலிருந்த யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. (நானும் உட்பட பாழாய் போன பாட்டு என்ன வேண்டியிருக்கின்றது எனக்கு)

அவன் ஒரு குற்றவாளியென்றால் சுற்றியிருந்தும் தட்டிக் கேட்காமல் விட்ட நாமெல்லோரும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான். ஒரு ஆண் கூட இருக்கவில்லையா?.  இல்லை சமவுரிமை பேசுகின்ற பெண்கள் இருக்கவில்லையா? நமது தாய்க்கு , சகோதரிக்கு , மகளுக்கு , காதலிக்கு , மனைவிக்கு நிகழ்ந்திருந்தால் சும்மா இருந்திருப்போமா? வெட்கப்பட வேண்டிய தருணங்கள்….
இல்லை தெரியாமத் தான் கேட்கின்றேன்… அதென்ன பேரூந்தில் ஒரு பெண்ணுடன் உரசல் வேண்டியிருக்கின்றது? அப்படியென்ன இன்பம் கண்டுவிடுகின்றீர்கள்? உங்களுக்கு உரசுவதற்குத் தான் எத்தனையோ வழிகள் இருக்கின்றதே.. இரவு விடுதிகள் எத்தனை உண்டு அங்கு போய் உரசிப்பாருங்கள். இல்லை உங்கள் பிறப்பு உண்மையென்றால் உங்கள் அம்மாவிடம் கேளுங்கள்… ஒரு ஆணுக்கு பெருமையே பெண்ணை பாதுகாப்பது தான். எத்தனை பெண்களுடன் உரசினீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் ஆண்மை கணிக்கப்படகிறதா?
இங்கே ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் பிழை இருக்கின்றது. முதல் தடவையிலேயே நீங்கள் தட்டிக் கேட்டிருந்தால் இன்று எவ்வளவோ விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். சம உரிமை என்ற பெயரில் ஆடைக்குறைப்புக்கள் , மாலை நேர களியாட்டங்கள் என்று எப்போது படி தாண்டினீர்களோ அன்றே தொடங்கிவிட்டது இவ்வாறான வியாதிகள். பெண்ணியம் என்ற பெயரில் பெண்மைக்கு எதிரியும் நீங்கள் தான்…
அடுத்தது இந்த பாழாய்ப் போன சமூகம். யார் பிழை செய்தாலும் முதல் அடி பெண்ணுக்குத்தான். காலையில் கூட பக்கத்தில் இருந்த ஒன்று சொல்கிறது “ஏன் இந்த பிள்ளை இதை பெரிதாக்குகின்றதென்று?” உங்களுடைய இரத்த உறவுகளுக்கு நடந்தால் இப்படி கேள்வியெழுப்புவீர்களா? இல்லை எல்லோரும் சேர்ந்தாவது தட்டிக் கேட்க நினைத்தீர்களா? ஆறறிவு படைத்த உங்களை விட குறைந்தளவு அறிவுள்ள உயிர்களை பாருங்கள்… அதுகளுக்குள்ள ஒழுக்கங்கள் கூட உங்களிடமில்லை.  மனிதம் எங்கே போகின்றது…?

இந்த கொழும்பிற்கு வந்து நான் படிக்கின்றேனோ இல்லையோ நிறைய விடயங்களுக்கு பயப்படுகின்றேன். எனது ஊரிலெல்லாம் 6 மணிக்கு முதல் வீடு திரும்ப வேண்டும். அல்லது அப்பா அல்லது சகோதரங்களுடன் தான் செல்ல வேண்டும். அன்று ஒரு நண்பி மூலம் அறிந்தேன் இங்கு இரவு விடுதிகள் இயங்குவதாகவும் அங்கு யாரும் யாருடனும் செல்ல முடியும் என்று. இன்னொரு விடயம் அறிந்தேன் “காதல்” என்பது இப்போது வேறு மாதிரியாம். ஒரு பெண்ணுடன் ஒரு ஆணுடன் ஊர் சுற்றி, எல்லாவிடமும் போய் திரியலாமாம். ஆனால் அது திருமணம் முடிப்பதற்கு இல்லையாம். ஆச்சரியமாக உணர்கின்றேன். கூடவே சில அப்பாவிகளும் பாதிப்படைகிறார்கள் என்று கவலையுடன் தட்டிக்கேட்ட முடியவில்லை என்ற இயலாமையும் நெஞ்சை அடைக்கின்றது. 
ஏன் நண்பர்கள் கூறுவது போன்று உலகம் முன்னோக்கி போக நான் தான் பின் தங்கி விட்டேனா? இல்லை என் பாதை சரியாகத் தான் உள்ளதா? ஆயிரம் வினாக்கள் கூடவே காலையில் நானும் சூழ்நிலைக் குற்றவாளியாகி விட்டேன் என்ற மன உளைச்சல்…..



கனக்கின்ற இதயமுடன் மீரா


ஆண் எனப்பிறந்ததை பெருமையாய் கூறுவேன் !
பெண்ணைக்காக்கும் பெருங்கடமை !
எனக்கும் உண்டென்பதால் ......
மீண்டும் மீண்டும் ஆணாய் பிறக்கவேண்டும் !
பெண்மைக்கென்றே மீண்டும் வாழ வேண்டும் !
பெருமையுடன் பாரதி !!!


Thursday, February 14, 2013

கவிதையாக காதலியுங்கள்


இன்று காதலர் தினம். உள்ளவர்கள் என்ன செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருக்க இல்லாதவர்கள் யாராவது கிடைக்க மாட்டர்களா? ஏன எதிர்பார்த்துக் கொண்டிருக்க இழந்தவர்கள் தம்மவர்களுடனான இனிய நினைவுகளை (???) நினைத்து கண்களை கசக்கிக்கொண்டுமிருக்க இவ்வருட காதலர் தினம் வந்துவிட்டது. நடைபாதை எங்கும் இயற்கை. செயற்கை ரோஜாக்கள் கண்ணைப் பறிக்க கூடவே சிந்தையிலுதித்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன்.

காதலென்பது தாக்காத உள்ளங்கள் நிச்சயம் இருக்காது. நிச்சயம் ஒருதலைக் காதலாகவென்றாலும் ஒருவரை இது தழுவிச் சென்றிருக்கும் .“எனக்கு காதலே வந்ததில்லை “ என்பவர்கள் நிச்சயம் பொய்தான் சொல்கிறார்கள். அல்லது சிந்தைக்குழப்பத்தில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். துறவியினுள்ளும் கூட காதலென்ற ஒன்று எட்டிப்பார்த்திருக்கும். ஆனால் அந்தக்காதல் எவரில்? ஏன்? எப்போது? என்பதில் தான் ஆளாளுக்கு வேறுபடுகிறது.

இதில் முதலாவது விடயம் நாம் ஏதோவொன்றை எதிர்பார்த்து தான் ஒருவரை விரும்புகின்றோம். அவர்கள் பதில் தரும் வரை பின் தொடர்கின்றோம். அதுவே அவர்களை துன்பப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. “ இவன் இவள் என்னைத் தொந்தரவு செய்ததால் தான் காதலித்தேன் “ என்று ஒருவர் கூறுவாராயின் அது காதலே இல்லைங்க. அங்கே நிச்சயம் காதல் செத்திருக்கும். இரு மனங்கள் ஒன்றிணைந்து ஒரு புள்ளியில் அழகிய மலரொன்று மலர்வது தான் காதல். அதை சொல்வதை விட பரிசுகளால் காட்டுவதை விட இரு பக்கத்திலும் உணர வேண்டும். எனக்கு இவள் தான் மனைவி அல்லது இவர் தான் என் கணவர் என்று தீர்மானித்துவிட்டால் அதற்காக போராட வேண்டும். இடையில் விட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது இன்னொன்றினை கண்டவுடன் “ நானெங்கே உன்னைக் காதலித்தேன். எனக்கு அவ்வாறான எண்ணமில்லை “ என்று சொல்வதெல்லாம் கோழைத்தனம். இது ஆண்மைக்கும் அழகில்லை பெண்மைக்கும் அழகில்லை.

இரண்டாவது காதலிக்கும் காலத்தில் வரும் ஊடல்களும் கூடல்களும். செல்லச் சண்டைகள் இல்லாமல் சிறு சிறு சேட்டைகள் இல்லாமல் ஒரு காதல் இருந்தால் அது நிச்சயம் இரு ரோபோக்கிடையில் தான் ஏற்பட்டிருக்கும். சில இனிமைகள் சில கசப்புக்கள் நிறைந்தது தான் காதல். இருவருக்குமிடையான பொறமைச் சண்டைகளும் அன்புத் தொல்லைகளும் தான் இதனை சுவாரஸ்யமாக்குகின்றன. ஆனால் அவையே எல்வை கடக்குமாயின் வலியாகிவிடும் என்பதை மறக்காதீர்கள். நம்மவர்களை கடுப்பாக்குகின்றோம் என்ற பெயரில் காயப்படுத்திவிடாதீர்கள். “காதல் என்பது கண்ணாடி போன்றது” இன்றைய சிறு கீறல்கள் கூட நாளை வெடிப்பாக மாறி உடைந்து போய்விடலாம்.

அடுத்த விடயம் “ஈகோ” பார்க்காதீர்கள். “நீ எனக்குத் தான்” என்று சொல்லிச் சொல்லியே சண்டை போடுங்கள். பிழை செய்துவிட்டால் “நான் ஏன் இறங்க வேண்டும்” என்றில்லாமல் மன்னிப்புக் கேட்டுவிடுங்கள். நம்மவர்களிடம் இறங்கிப்போவதில் நமது கௌரவம் ஒன்றும் தாழ்ந்துவிடப் போவதில்லை. அதற்காக ஒரேடியாக உங்கள் சுயகௌரவங்களை இழந்த விடாதீர்கள். சின்ன சின்ன திமிர் கூட காதல் என்ற இலக்கணத்தில் வேண்டும். அல்லது சப்பென்றாகிவிடம்.

இன்னுமொரு விடயம் உண்மையாயிருங்கள். யார் நினைத்தாலும் சாட்சியில்லாமல் தவறுகளை செய்யக் கூடிய காலமிது. அதற்காக அவள் அல்லது அவனுக்கு எங்கே தெரியப் போகின்றது என்றெண்ணி தவறான விடயங்களை செய்யாதீர்கள். “கற்பு’ என்பது மனசுக்குத்தான். ஒருவருள்ள மனதில் இன்னொருவரையும் கூடவே நினைக்கின்றோம் என்றால் அங்கே நாம் விபச்சாரம் செய்கின்றோம். நம்பிக்கையாயிருங்கள். நம்மவர்கள் கேள்வி கேட்கும் போது நமது பக்கத்தில் நியாயமிருந்தால் கண்ணைப் பார்த்து பதில் சொல்லுங்கள். நம்மவர் கேள்வி கேட்டால் ‘என்னை உன்னிடம் நிரூபிக்க வேண்டியதில்லை” என்று கூறுகின்றீர்கள் என்றால் உங்கள் பக்கத்தில் நிச்சயம் தவறிருக்கின்றது. நம்முடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என நினைப்பவர்கள் தான் நம்மை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக கேள்வி கேட்பார்கள். பணத்திற்காக பதவிக்காக அழகிற்காக நேசிப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்களது தேவை வேறு என்பதால்  செய்வதற்கெல்லாம் தலையாட்டி அனுமதிப்பார்கள். “மனம்’ என்பதை நேசிப்பவர்கள் தான் அதில் இன்னொருவர் அமரக் கூடாது என்பதற்காக நூறு கேள்வி கேட்பார்கள். ஆனால் அதுவே சந்தேகமாகி விடாமல் இருசாராரும் பார்த்துக்கொள்ளுங்கள்.

மற்றது உங்களவருக்காக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் சமூகத்தில் எவ்வளவு பெரியவரானாலும் உங்களவர் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது “அன்பு” மட்டும் தான் தினமும் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் சில நிமிடங்கள் அவர்களக்காக ஒதுக்குங்கள். நீங்கள் வேலையில்லா நேரங்களில் கடலை போடு;வதை விட வேலைகளுக்கு மத்தியிலும் ஒதுக்கும் சில நிமிடங்கள் உங்கள் அன்பை பன்மடங்கு உயாத்திக் காட்டும்.
மிகமுக்கியமான விடயம் “காதல்” உங்கள் இலட்சியங்களை தடைசெய்வதை அனுமதிக்காதீர்கள். எவர் உங்களிடம் உங்கள் இலட்சியங்ளை அறிந்து காதலிக்கின்றாறோ அல்லது உங்கள் இலட்சியங்களுக்கு உதவுகின்றார்களோ அவர்களிடம் தான் உண்மையான காதலுண்டுங்க. இது தாங்க சாதிக்க வைக்கின்ற காதல்.  அவ்வாறான காதலை தேடிப் பிடித்து காதலியுங்கள். காதலென்பது நம்மை செதுக்க வேண்டும்.சறுக்க வைக்க கூடாதுங்க.

இறுதியான விடயம் உங்களவர் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பதை உணர்ந்தால் காரணத்தினை ஆராய்ந்து திருத்த முயற்சியுங்கள். அதையும் தாண்டி உங்களை விட வேறு விடயங்கள் தான் அவருக்கு பெரிதாயிருக்கின்றது என்றால் இது பாலியல் ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் கூட இருக்கலாம். காதலிலேயே நிலையில்லாதவரை நம்பி எவ்வாறு கழுத்தை நீட்டுவது. இதை வருமுன் காத்தலாக நினைத்து போய்விடுங்கள். அவர் தான் நல்ல வாழ்க்கைத்துணையை மிஸ் பண்ணிவிட்டார் என நினைத்துக் கொள்ளுங்கள். “நம்மை பிரிவது தான் நம்மவருக்கு பிடிக்கும் “ என்றால் நமது அன்பை நிரூபிப்பதற்காகவே வலித்தாலும் விலகிவிடுங்கள்.

“காதல் என்பது குழந்தை மாதிரி அழுதாலும் சிரித்தாலும் குழந்தை மாதிரி இருக்க வேண்டுமுங்க. தோற்றாலும் ஒரு நிமிடம் ஒரு துளி கண்ணீர் ஏற்படுகிறதென்றால் அது தாங்க உண்மைக்காதல் வரிக்குவரி கவிதையாக காதலியுங்கள் கடைசி வரை போராடுங்கள். இருபக்க காதலும் உண்மையாகவிருந்தால் காலம் அது கடந்தும் வாழும்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் மீரா

( கடந்த வருடம் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கட்டுரை)



Tuesday, February 12, 2013

சூர்யாவும் காந்த கண்களும்…..


எத்தனை நடிகர்கர்கள் வந்தாலும் இந்த சூர்யா இருக்காரே அவரோட அழகுக்கு யாருமே வரமுடியாதுங்க…. அழகெண்டா அப்படியொரு அழகு… பெண்களே பொறாமைப்படுகின்றளவுக்கு அழகு….கைகொள்ளா முடி.. சிவந்த உதடுகள், கொஞ்சமாக இருக்கின்ற தாடி, சிக்ஸ் பக்ஸ்.. ஐயோ……….அந்தக் கண்கள் இருக்கே அப்படியொரு காந்தக்கண்கள் ம்ம்ம்ம்……….பார்த்ததுமே பத்திக்கொள்ளும் கண்கள்….வாவ் என்னா அழகு

பொதுவாகவே எனக்கு சூர்யா என்றால் ரொ..ம்….ம்ம்ம…ப பிடிக்குமுங்க. (வீட்டில சூர்யா படம் ஒட்டி வச்சதும் அத பார்த்து அம்மம்மா யாரோ பொடியன்ட படம் என்டு கிழிச்சு எறிந்ததும் தனிக் கத) அதிலயும் கௌதம் மேனனின் “காக்க காக்க “ பார்த்தில இருந்து சூர்யா என்றோலே ஒரு பைத்தியம்.. இதற்கு இன்னொரு காரணமும் இருக்குது இந்த காக்க காக்க “அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்” கரெக்டர் இருக்குதே அப்படியே எனக்கு வரப்போகிறவர் பற்றி எனக்குள்ள கற்பனையை கௌதம்மேனன் கண்டுகொண்டு உருவாக்கியது போல் தான் அமைந்திருந்தது.



அமைதியான அதேவேளை ரிஸ்க்கான ஐ.பி.ஸ் ஆக என்கவுண்டர் செய்துகொண்டு அந்த த்ரிலிங்கான பாத்திரமேற்றுக்கொண்டு அன்பை காட்டத் தெரியாமல் ஆனால் கண்களால் ( வாவ் கண்களா அது) பேசிக்கொண்டு கூடவே மாயா (ஜோதிகா) விடம் “ ப்ரண்டெண்;டா? ” என்று பொறாமைக் கேள்விகள் கேட்டுக்கொண்டு வேறு பெண்களை நிமிர்ந்து கூட பார்க்காமல்.. சூப்பருங்க…அந்த பொலிஸ் உடையும் கம்பீர நடையும்…. அடடடடா… ஜோதிகா ரொம்ப குடுத்து வச்சவ தான்.. எனக்கு “ஜோ” வோட  கொஞ்சம் “ஜே“ இருக்குது… நமக்கும் அப்ளிக்கேஷன் போடுதுகள் பாருங்க கொஞ்சமாவது சூர்யா மாதிரி இருக்க வேணாம்.. அட்லீட்ஸ் மாதவன்…எல்லாமே வடிவேல் மாதிரியே இருக்குதுகள்… (ஸ்கூல்ல நான் கொஞ்சம் (????) குண்டாயிருக்கன் என்று “ஜோ” என்று தான் கூப்பிடுவார்கள். இப்ப கொஞ்சம் இளைச்சிட்டதால் யூனிவ சிட்டியில் ஹன்சிக்காவாம்…அதவிடுங்க ….என்ன கொஞ்சம் வயசு இடிச்சிட்டு இல்லாட்டி சூர்யாக்கு அப்ளிகேசன் போட்டிருக்கலாம்….Now i am just in 24)


அட இந்தப் பதிவுக்கான கரணம் சொல்ல மறந்துட்டனே.. வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்று நண்பனிடம் கூறிய போது கேட்டார் பாருங்க ஒரு கேள்வி “அவர் ஸ்மார்ட்டா இருப்பாரா?” என்டு அதற்கு தாங்க இந்த பதில்… இரசிப்பதெல்லாம் வாழ்கையாகிட முடியாது. திருமணம் என்பது வாழ்வதற்காக சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சடங்கு. ஆயிரங்காலத்துப் பயிர் இதுக்கு அழகு எதற்கு? ஸ்மார்ட் எதுக்கு? ஒரு பொண்ணுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டியவை மூன்று விடயங்கள் தான்.
•    அன்பு
•    பாதுகாப்பு
•    புரிந்துகொள்ளல்
இதை பெண்கள் உணர்ந்து கொள்வது மிக முக்கியம். அதே போல் ஆண்களும் தன் மனைவியிடமிருந்து
•    அரவணைப்பு
•    பண்பு
•    அணுசரனை
என்பவற்றை மட்டும் கொண்டவளாக தெரிவுசெய்யும் போது வாழ்க்கை நிச்சயம் சிறக்கும்.


அழகு. ஸ்மாட் எல்லாம் பார்த்து என்ன படமா எடுக்க போகின்றோம். இது வாழ்க்கைங்க… பெற்றோரை இறைவன் தீர்மானிக்கின்றார். நமது துணைகளையும் நண்பர்களையும் நாம் தீர்மானிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மிஸ் பண்ணிடாதீர்கள்


Friday, February 8, 2013

நானும் ஒரு தாய்

ஆலயத்தில் புறமுதுகு காட்டி
விளக்கேற்றிக் கொண்டிருந்தேன்
என் சேலை நுனியில் - ஓர்
தூண்டில் இழுவை
திரும்பிப் பார்த்தேன்
யாருமில்லை – சற்றே
குனிந்து பார்த்தேன்…
ஓர் பூக்குவியல் என்
சேலையை தொட்டபடி…

யாரிந்த செல்லக்கண்ணன்…
மீராவின் சேலை தொடுவது..
வாரியெடுத்து உச்சிமோர்ந்து – அதன்
கூர் விழிகளை பார்த்தேன்
மூளையில் சிறு மின்னல்
இந்தக்கண்கள்….?
இதனுடன் கனவுகளில் வாழ்ந்திருக்கின்றேன்
இதே கண்களுடன்
மௌமொழிகள் பேசியிருக்கின்றேன்.
எங்கே…..? – என்
சிந்தைத்தேடலுக்கு பதிலாக
குழந்தையை தேடியபடி
அதன் அன்னை…

சந்தேகமேயில்லை..- இக்
கண்கள் என்னுடையவனுடையது….
அட இது என்னவனின்
குழந்தையா…?

உன் குழந்தைக்கு கூட
தெரிகிறது என்னை..-
என் நினைவுகளுடன் - உண்மையில்
ஒருநாளாவது – நீ
வாழ்ந்திருந்தால்…- மனதால்
நானும் உன் குழந்தைக்கு
தாய் தான்…

இதோ உன் மனைவி – அன்று
உன்னிடமிருந்து என் நினைவுகளை
கொள்ளை கொண்டவள் - இன்று
அவள் குழந்தைக்காக
கரம் நீட்டுகின்றாள்

உனக்கான என்
கனவு முத்தமொன்றை – அவன்
பட்டுக்கன்னங்களில் கொடுத்து
அதன் மொட்டு உதடுகளினால்
செல்லக்கடி வாங்கி
என் கன்னத்து
எச்சில் துடைத்தபடி கலைகின்றேன்….

அன்று போல் இன்றும்
தூரத்தில் - கைகளை
கட்டியபடி நீ……

அதிகம் வாசிக்கபட்டவை