பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு


கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவிடம் இதனை நாட்டிவிடுகள் என்று கொடுத்து விட்டு நான் மீண்டும் கிளம்பி விட்டேன். இந்த தொடர் பயணங்களில் பிரண்டையும் மறந்து போய்விட்டது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் எங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்கும் போது இதென்னது இதனை இங்கு வைத்துள்ளீர்கள் என்று அலறின அலறரில் என்ன தான் அப்படிப் பார்த்தார்கள் என்று பார்த்தால் மதிலருகில் ஏலெட்டு பிரட்டைச் கொடிகள் அழகாக துளிர்த்து வளர்ந்திருந்தன.  அழகாக வளர்ந்திருக்கும் கொடிகளைப் பார்த்து இவர்கள் ஏன் அலறவேண்டும் என கேட்டேன். பிரண்டையை யாராவது வீட்டில் வளர்ப்பார்களா? வீட்டுக்கு நல்லதல்ல என்று வெடியை கொளுத்திப் போட்டு விட்டார்கள். இப்படித்தான் எங்கள் வீட்டில் நன்றாக வளர்ந்திருந்த அகத்தி மரம் ஆட்களின் கதையால் அகற்றப்பட்டிருந்தது. எனவே பிரண்டை பற்றி வீட்டில் யாரின் காதிலாவது விழுந்தால் பிரண்டையும் பிய்த்து எறியப்படும் என்று நினைக்கும் போதே வீட்டின் நாரதர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்.  

அடுத்த நாள் விட்டில் பிரண்டைத் தாக்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மாலை பார்க்கும் போது பிரண்டைக்கொடிகள் அகற்றப்பட்டிருந்தன. தமிழர்களின் இடங்களில் புத்தர் முளைப்பது போல் அதற்கு பதில் வேறு புமரகொடிகள் சில நடப்பட்டிருந்தன. அட அறியாயமே என்று மனதிற்குள் நினைத்து, வீட்டிலும் ஒரு கத்து கத்திய பின் பிரண்டை எல்லோராலும் மறக்கப்பட்டுப் போனது. இப்போது கொஞ்ச நாளைக்கு முன்னர் பலருக்கும் ஏற்பட்டுள்ள மூட்டுவலி போன்று நம்முடைய வீட்டாக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஊரில் இருக்கின்ற வயதானவர்கள் சொன்ன பரிகாரம் தான் பிரண்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. பிரண்டையை தேடினால் கிடைத்தால் தானே. பல நாள் தேடல்களுக்கு பின்னர் தான் சில இடங்களில் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதனை வைத்து இப்போதெல்லாம் அடிக்கடி பிரண்டை தொக்கினை எம்முடைய  மதிய உணவு தட்டுக்களில் காணக்கிடைக்கின்றது. பிரண்டை தொக்கு செய்வதென்பது அப்படியொன்றும் வேலைப்பளுவான விடயமல்ல  

பிரண்டை துளிர்களை எடுத்து வாழையிலையில் சுற்றி நீராவியில் சற்று வதங்க வைக்க வேண்டும். வதங்கிய பிரண்டை துளிர்களை தேங்காய்பூ, பச்சைகொச்சிக்காய், வெங்காயம், சிறிய துண்டு இஞ்சி வைத்து நன்றாக விழுதான அரைக்க வேண்டும். அரைக்கும் போதே தேவையானளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக அரைத்த பின்னர் தேசிப்புளி விட்டு பிசைந்தெடுத்தால் பிரண்டை தொக்கு தயார். இனியென்ன சுடுசோறுடன் இதனையும் வைத்து உண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும் கூடவே கீரி மீன் பொரியலும் இருந்தால் சுவை இன்னும் அதிகம். 

பிரண்டை என்பது நமது முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறந்த மூலிகையாகும். கிராமப்புறங்களில் வேலிகளில் எளிதாக வளரக்கூடிய இந்த தாவரத்திற்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரண்டையின் மருத்துவப் பயன்கள் சில.....

  • பிரண்டையின் மிக முக்கியமான குணம் எலும்புகளை வலுப்படுத்துவது. முறிந்த எலும்புகள் விரைவில் கூடுவதற்கும், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தேய்மானப் பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.
  • மூட்டு வலி, முதுகு வலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
  •  பிரண்டை பசியை நன்கு தூண்டக்கூடியது. செரிமானக் கோளாறுகளை நீக்கி, வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்தும்.
  • வாயுத் தொல்லை (Gastric problems) மற்றும் அஜீரணத்தை போக்கவல்லது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது
  • உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பைக் (LDL) கரைக்க பிரண்டை உதவுகிறது.
  • வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
  • மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். இது இரத்த மூலத்தைக் கட்டுப்படுத்தி, மூல முளைகளைச் சுருங்கச் செய்யும். மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கும்.

இது எல்லாவற்றினையும் விட நமக்கே நமக்கென்று மாதாந்தம் வருகின்ற மாதவிடாயின் போது ஏற்படுகின்ற வயிற்நுவலி மற்றும் இடுப்புவலிக்கும் பிரண்டையை உணவில் சேர்ப்பது நல்லது. மேற்சொன்ன வலிகள் குறைந்துவிடும்.  

பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பலவகை இருக்கின்றதாம். 

எனக்கென்னமோ பிரண்டை என்பதை விடவும் வச்சிரவல்லி என்ற பெயர் மிகவும் பிடித்திருக்கின்றது.  அவற்றின் வகைகளை எப்படி இனங்காண்பது என்பதை அறிந்துகொண்டு இந்த வகைகளை நாமும் உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தில் பல மூலிகைகளை நாம் தொலைத்துக்கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே பலதை தொலைத்தும் விட்டுவிட்டோம்..... வச்சிரவல்லி போல தூய அன்புகொண்ட மனிதர்களையும் தான்! . 

சுருளிடு தாடி.....

அண்மையில் ஒரு ஆடைவடிவமைப்பு நிறுவனத்திற்கு சில ஆடைகளில் வடிவமைப்புக்களை வரைந்துகொடுத்திருந்தேன். இந்நிறுவனத்தின் தலைமை என் தமையனார் என்பதாலும் அவருக்கு தங்கையின் இரசனை மேல் இருந்த நம்பிக்கையிலும் வடிவமைப்புகளுக்கான மொடல்களையும் தெரியும் குழுவில் என்னையும் உள்வாங்கியிருந்தார். என்னுடைய பரிந்துரைகள் அல்லது தெரிவில் பெரும்பாலும் தாடி வைத்த ஆண்களை தேர்ந்தெடுத்திருந்தேன். என் கற்பனையிலும்  ஆண்களுக்கான உடை வடிவமைப்பில் கற்பனை பண்ணும் போது ஆண் என்பவன் தாடியுடன் தான் உலா வந்திருந்தான். அண்ணா உட்பட குழுவில் இருந்தவர்கள் இது குறித்து கேட்ட போது ஆண்கள் எப்போதும் தாடியுடன் இருக்கும் போது மிக அழகாகின்றார்கள். மீசையுடன் இருக்கும் போது பேரழகாகின்றார்கள் என்று குறிப்பிட்டேன்.  சரி தாடி பற்றி நம்முடையவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போமா?    

 தாடிக்கு அணல் என்ற பெயரும் உண்டு, தாழ்ந்திருப்பதால் தாடி எனப்பட்டது, எனவே தாடி என்பது தூய தமிழ்ச்சொல்தான்!

  • ' சுருளிடு தாடி... ' - (சிலப்பதிகாரம் ) .
  • ' மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி... ' - (கலித்தொகை ).

கலித்தொகையில் வரும் "மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி" என்ற தொடர், யானையின் வளைந்த தந்தங்கள் தாடி போலத் தொங்குவதை விவரிக்கிறது. இத்தொடரின் மூலம் சங்க காலத்திலேயே 'தாடி' என்ற சொல், தாடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது. 

  • கம்பராமாயணத்தில் 'தாழ்சடை' - என்று தாடியைக் குறிப்பிடுகிறார் கம்பர். தாழ்தல் - என்றால் தாழ்ந்திருத்தல், தொங்குதல். தாழ் கழுத்து மயிர் = தாடி. தாழ்ந்து, தொங்கும் மயிர் = தாடி.
  • தாடி என்பது அன்றைக்கு ஆண்மையின் அடையாளமாக விளங்கியதை புறநானூறு குறிப்பிடுகிறது. 
  • சங்க இலக்கியங்கள் தாடியை 'அணல்' என்றும் குறிப்பிடுகிறது. அணல் - என்ற சொல் மனிதர்களின் தாடியை மட்டும் குறிப்பிடாமல், கோழி, சேவல், மந்தி, குரங்கு ஆகியவற்றின் தாழ் கழுத்து மயிரையும் குறிப்பிடுகிறது. 
     
    தாழ் என்பது எப்படி மருவி தாடி ஆகியுள்ளது என்பதற்கும் எமது இலக்கணங்களுள் விளக்கமுண்டு
    தாழ் > தாழி > தாடி.

    தாழ் > தாழை > தாடை.

    தாழ் + வாய் = தாழ்வாய் > தாவாய். ( தாவாங்கட்டை).

    (ஒப்பு நோக்குக : தாவாய், மோவாய்) .

    ( ழகரம் > டகரம் ஆவது இயல்பான திரிபே!
     
    இதே போன்றே  மீசை - மேலிட மயிர். மீ - என்றால் மேலிடம் /மேல்புறம்
தாடி - என்ற தமிழ்ச்சொல்லே திரிந்து வடமொழியில் 'தாடிகா' - ஆகிவிட்டது.
சேவலின் கழுத்தில் அமைந்த தொங்கு சதைக்கும் தாடி என்று பெயர். ஆடு, மாடுகளின் கழுத்தின் கீழே தொங்கும் சதைக்கு 'அலைதாடி' - என்று பெயர். (ஆங்கிலத்தில் dewlap).
 
நம்முடைய தமிழ் ஆண்கள் மூன்று தருணங்களில் தான் அழகாகின்றார்கள். ஒன்று வேட்டியுடுத்தி கம்பீரமாக வலம் வரும் போது, இரண்டாவது மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் போது மூன்றாவது ஒரு பெண்ணை மட்டும் முழுதாக நேசிக்கும் போது.... என்ன நான் சொல்வது சரிதானே... விரைவில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் புகைப்படங்களை எதிர்பார்த்திருங்கள். 
 
பிற்குறிப்பு: நம்முடைய ஆள் சூர்யாவை கறுப்பு சேட் வேட்டியுடன் தேடித்தேடியே என்னுடைய டைப்பண்ணின விரல்கள் சற்று தேய்ந்து போய்விட்டன. 

 

பதிவுகள்

பிரண்டை (வச்சிரவல்லி) தொக்கு

கொஞ்ச நாளைக்கு முன்னர் நான் ஊர் சுற்றிய போது பிரண்டைச் கொடிகள் கிடைத்திருந்தன. சரிடியென்டு அதனை விட்டுக்கொண்டு வந்து வீட்டிலிருக்கும் அக்காவ...

அதிகம் பார்க்கப்பட்டவை