அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……. 02

Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

இந்த உலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் விருப்பங்களின் வெளிப்படுத்தலே. ஆனால் நாம் எதை விரும்புகின்றோம் என்பதே தர்ம நியாயங்களை தீர்மானிக்கின்றன. இதில் மனிதர் மேலான அன்பு அலாதியானது. ஆனால் மனிதர்களுக்கிடையில் அன்பை வெளிப்படுத்துவதை விட கடினமானதொரு விடயம் வேறில்லை. நாம் ஒருவரை நேசிப்பதை சொல்லும் அல்லது புரியவைக்க முற்படும் போது எங்கே அவர் நம் அன்பை நிராகரித்துவிடுவாரோ அல்லுத நாம் வெளிப்படுத்தும் அன்பு அவர்களை சங்கடப்படுத்திவிடுமோ என ஏற்படுகின்ற உளவியல் பயமே முதல் எதிரி. 

அன்பை , உணர்வுகளை பரிமாறிக்கொள்வதற்கு பொருட்களையோ அதன் பெறுமதிகளையோ மட்டும் நம்பியிருக்காதீர்கள். சிறு வாழ்த்து, புன்னகை, அணைப்பு, கண்ணீரை துடைத்தல், முக்கியமாக உன்னை நான் தொடர்கின்றேன் என்று சொல்லில் செயலில் காட்டுவதும் கூட பேரன்பு தான். நம்மை ஒருவருவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அவரை எந்த விதத்திலும் தொந்தரவுசெய்யாமல் முற்றுமுழுவதும் விலகிக்கொள்வதும் இதே பேரன்பின் கனதியுடையதே!


அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 154

என் இனிய நாட்குறிப்பே! இன்று அம்மாவும் அண்ணியும் மாலை கடற்கரைக்கு போவோமா? ஏன்று கேட்கும் போதே புரிந்துவிட்டது. முக்கியமான விடயம் குறித்து பேசப்போகின்றார்கள் என்று. ஆனால் மாலை வரை எந்த சின்ன தடயமும் கிடைக்கவில்லை. பின்னேரம் கல்லடி கடற்கரைக்கு குடும்பமாக போய் கால் நனைத்து விளையாடி கொண்டு போனதை சாப்பிட்டு அமர்ந்திருக்கும் போது அண்ணா கண்ணசைத்ததில் புரிந்துவிட்டது. எல்லோரும் நடக்க போவதாக கூறி நகர அம்மாவும் பெரியண்ணியும் மட்டும் தங்கியிருந்தார்கள். என்னைப் பார்த்து பெரியண்ணி கேட்டுவிட்டார் எனக்கேதும் காதல் இருக்கின்றதாக என்று…. இறந்தகாலத்தில் கேட்கவில்லை தானே. இல்லை என்று தலையாட்டிவிட்டேன் நான். 

மகள் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு உங்களை பார்க்க வரப்போகின்றார்கள் என்றார் அம்மா. அதுக்கென்ன வரட்டுமே… என பகிடியாக பதில் சொன்னேன் நான். ஆனால் அந்த நிமிடத்திலிருந்து ஒருவித படபடப்பு என்னை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. அவர் எப்படியிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்கின்றேன்… பெயரை கேட்க வெட்கமாயிருந்தது. கேட்டிருந்தால் முகநூலிலாவது தேடிபார்த்திருக்கலாம்… பரவாயில்லை இன்னும் மூன்று நாட்கள் தானே இடையில் உள்ளன. வீட்டாக்கள் சொன்ன விடயங்களில் படிப்பு, குடும்பம் பற்றி தெரிந்துவிட்டது. ஆனால் அவரது இரசனைகளை எப்படி தெரிந்துகொள்வது? 

பக்கம்: 158

இன்று வெள்ளிக்கிழமை என்று காலையில் உணர்வு சொன்னதிலிருந்தே எனக்குள் ஒருவித படபடப்பு ஆரம்பித்திருந்தது. இன்று அனைவரும் விடுமுறையில் நிற்கின்றார்கள் என்பது காலை விடியலின் சோம்பலிலேயே விளங்கிவிட்டது. வீடு காலையிலிருந்து அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கின்றது. 10 மணியிலிருந்தே ஐயோ இப்போது வந்துவிடுவார்களே என்று அம்மா ஒவ்வொரு வாகனச்சத்தத்திற்கும் வாசலை பார்க்கின்றார். 

என்னுடைய பாதியும் மீதியும் தான் காலையிலிருந்தே என்னை வறுத்தெடுத்துவிட்டார்கள். நான் சும்மா சிரித்தாலும் அதற்கும் ஒரு கதை சொல்லிவிடுகின்றார்கள்.படங்களில் காட்டப்படுகின்ற பெண் பார்க்கும் படல காட்சிகள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதை எப்படி நான் எதிர்கொள்வது…;. என்னுள் படர்ந்திருக்கின்ற உணர்விற்கு என்ன பெயர் வைப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தேன் நான்.

வாசல் ஆரவாரிப்;பு சொல்லிவிட்டது வந்துவிட்டார்கள் என்று. அறைக்குள் ஒளிந்துவிட்டேன் நான். யாரும் வந்தால் ஏதும் நினைப்பார்கள் என மேசையிலிருந்து புத்தகத்தை கையில் வைத்து பக்கங்களை புரட்டினேன். ஆனால் என்ன வாசித்தேன் என்பது மண்டைக்குள் உறைக்கவில்லை. காதுகளும் புலனும் வெளியில் கேட்ட சத்தங்களை உள்வாங்கிக்கொண்டிருந்தன. திடீரென்று பெரியண்ணி அறைக்குள் வந்து என்னை வெளியே வரும்படி கூப்பிடுகின்றாள். எனக்கு பயமாகவிருந்தது. 

சிறுவயதிலிருந்தே கடல்புறா பார்த்தீபன் போன்ற கம்பீரமான, மண்ணை நேசிக்கின்ற ஒருவரை விரும்பி வீட்டில் அறிமுகப்படுத்தி திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் என்னை பார்த்து சிரித்தது. வீட்டில் ஐந்து சகோதரன்கள், நல்ல நண்பர்கள், கூடப்படித்தவர்கள் என எத்தனை ஆண்களை கடந்திருக்கின்றேன். இப்போது என்னவாகிற்கு எனக்கு என்று தோன்றியது…. 

அம்மாவிற்கும், சின்ன அண்ணாவிற்குமிடையில் இருந்த இடைவெளியில் வந்தமர்ந்தாயிட்டு. நேரெதிரே அவர் குடும்பம். அவர் அப்பா.. அது தான் என் வருங்கால மாமனார் தான் பேச்சை ஆரம்பித்தார். என் பல்கலைக்கழக படிப்பு, தங்கியிருக்கும் விடுதி என நீண்டுகொண்டேயிருந்தது பேச்சு. எங்கேயிருந்து தான் கள்ளத்தனம் வந்ததோ பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்துவிட்டேன். நல்ல உயரமாக, குண்டாக அடர்த்தியான முடியுடன் கம்பீரமாகத்தானிருந்தார். கறுப்பு டீசேட், நீல ஜீன்ஸ். தினமும் உடற்பயிற்சி செய்பவராயிருக்க வேண்டும். 

உணவருந்தி பத்தும் பலதும் கதைத்து அவர்கள் போகும் போது 3 மணியிருக்கும். மாமா- மாமி எனக்கென வாங்கியதென்று ஒரு பையை தந்தார்கள். போன பின் பிரித்துப்பார்த்தால் நிறைய பரிசுகள். மத்தியில் சிறுபையில் ஒரு பார்சல். அதில் அவரது பெயர். தம்பி அதையும் பிரித்துப்பார்ப்போம் என்றான். அம்மா தான் என்னை பிரிக்கவிடவில்லை. அது தனிப்பட்ட விடயம் என்கின்றாள். ம்ம்ம்ம்ம்……… 

ஆனால் அவர் தமிழ் வார்த்தை ஒன்று கூட பேசவில்லையே…. கடந்த 4 வருடங்களாகத்தானே இந்த அமெரிக்க வாழ்க்கை. அவ்வளவிற்கு எம் மொழி மறந்து போயிருக்குமா என்ன? அது சரி அதுவென்ன “ஆண்டி” தமிழில் மாமி என்று அழகாக பைந்தமிழில் என் அம்மாவை கூப்பிட்டால் தான் என்ன குறைந்துவிடுமாம்…. ல்லாம் சரி அண்ணாக்களிடம் தொலைபேசி இலக்கம் கொடுத்தவர் ஏன் என்னிடம் தரவில்லை. நான் பெண்… நானாக போய் கேட்பதெப்படி…  முதல் பரிசாக கொடுத்த நானே வரைந்த ஓவியம் அவருக்கு பிடித்திருக்குமா? சை நம்பர் கிடைத்திருந்தால் கேட்டுப்பார்த்திருக்கலாம். எனக்கு கேட்பதற்கு நிறையவுள்ளன…. பிடித்த நிறம், பிடித்த எழுத்தாளர், பிடித்த புத்தகம்... என்ன உணவு அவருக்கு பிடிக்கும்? … இன்னும் நிறைய நிறைய பிடித்த விடயங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு தான் ஒரு பெண் சகோதரி வேண்டும் என்பது…. 

கூடப்பிறந்த ஐவருமே ஒரே துறை… அவர்கள் கூட்டி வந்த மூவரும் அதே துறை… எனக்காவது வேறு துறையில் அமைய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் கிடைத்ததென்னவோ…. ஆனால் இன்று இன்னுமொரு அத்திவாரமும் இடப்பட்டுள்ளது. இது குறித்தும் ஒன்பது பேரும் பேசிக்கொண்டது சந்தோசமாயிருந்தது.. விரைவில் என் மண்ணில் அதி நவீன மருத்துவமனையொன்று உருப்பெறும். அந்தவகையில் என் குடும்பத்துடன் இணைந்து பயணிக்கின்ற ஒருவர் கிடைத்தது என் அதிஸ்டமே…. நிம்மதியுடன் தூங்கப்போகின்றேன்

குட்நைட் என் இனிய டைரியே….. 
 

பக்கம்: 197

இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு புறப்படப்போகின்றோம். நாளை அவர் குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா ஒன்று ஏற்பாடாகியிருக்கின்றது. நாளை மறுநாள் அவர் மீண்டும் புறப்படுகின்றார். இரு நாட்களுக்கு முன்னிருந்து என்ன கொடுப்பது என்று யோசித்து யோசித்தே என் மூளை குழம்பிவிட்டது. வீட்டாக்கள் உணவுப்பொருட்கள், உடை என கொடுக்கும் போது நான் என்ன கொடுப்பது….? என் கருவறை தோழனும் உற்ற நண்பனுமான என் பாதியை கேட்டேன். அவன் முத்தம் கொடு என்று நக்கலடிக்கின்றான். முடிவில் கடிகாரம், டீசேட்….என்றெல்லாம் அடுக்குகின்றான். எனக்கு பொருத்தமில்லை என்றே தோன்றியது. அவரிடம் இல்லாதவைகளா? இந்த ஒரு மாதகாலத்தில் அண்ணாக்கள் மூலம் அவர் ஒரு கிரிக்கற் வீரன் என்பதும் அதிலும் துடுப்பாட்டத்தில் சிறந்தவர் என்பதும் மட்டும் தான் தெரிந்திருக்கின்றது. என்னிடம் தான் இன்னும் பேசவில்லையே பிறகெப்படி அவரைப்பற்றி தெரிந்துகொள்வது? 

கடைசியில் இன்று காலை தான் சவக்காரத்தில் குட்டி வீணையொன்றினை செய்து கொடுப்பதென்று முடிவெடுத்தேன். பாதியுடன் போய் பொருத்தமான நிறத்தில் சவக்காரம் , பரிசு பெட்டியெல்லாம் வாங்கி வந்து செதுக்கி பெட்டியிலும் பொருத்தி விட்டேன். வீட்டில் காட்டினால் என்னை கஞ்சல் என்று பகிடி பண்ணுகின்றார்கள்.

கூடவே அரிசியில் இருவரது முன்னெழுத்துக்களையும் எழுதி Micro Art on Grains வைத்திருக்கின்றேன். வீணை மட்டும் தான் வீட்டாக்களுக்கு தெரியும். அரிசியில் செதுக்கியிருப்பது நம்மிருவருக்கிடையிலான இரகசியமாகவிருக்கட்டும்.  பரிசுகளின் பெறுமதி அதன் விலையிலில்லை தானே.. நாம் ஒருவருக்காக மெனக்கட்டு செய்யும் போது அதிலிருக்கும் அன்பும் அக்கறையும் தானே பெறுமதிமிக்கது.. விலையில்லாதது… காலையிலிருந்து 8 × 60× 60 = 28800 நொடிகள் அவருக்காக செலவழிந்துள்ளது. 

அது சரி கூடவே வைக்கும் வாழ்த்தட்டையில் என்ன எழுதுவது? எப்படி தொடங்குவது… டியர்…. என்றா?


 

Comments