Friday, June 24, 2016

கடக்கின்றேன்......


சமூக ஊடகங்கள் செய்திகளை சேர்ப்பதும் பெறுவதும் என்கின்ற நிலை மாறி இன்று பாலியல் தொந்தரவு கொடுக்கின்ற இடமாக அல்லது பெண்ணோ ஆணோ பாலியல் சேட்டைகளை புரிவதற்கான தளமாகிக்கொண்டிருக்கின்றது. இத்தகையானதொரு சம்பவத்தினை நானும் நேற்றிலிருந்து கடந்துகொண்டிருக்கின்றேன்.

பொதுதளமொன்றில் பணியாற்றும் போது எமது தொடர்புகள் சமூக ஊடகங்களின் ஊடாக தான் விரிவடைகின்றது.  இங்கு ஒருவரை நண்பராக அல்லது செய்திபெறுநராக அங்கீகரிக்கும் போது அந்நபருடைய சுயமுகங்கள் நமக்கு தெரிவதில்லை. தொடர்பில் இணைக்கின்ற போது யாரும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதை அறிந்துகொள்வதுமில்லை. இப்படியாக என்னுடைய முகநூலில் இணைந்த நபர் ஒருவர் நேற்றிரவு மரியாதையற்ற முறையில் தகாத வார்த்தைகளுடன் செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவருடைய முகநூலினை போய் பார்த்த போது மனைவி பிள்ளைகளுடன் போட்டோக்களும் போடப்பட்டிருந்தன. “மரியாதையுடன் பேசுங்கள் அண்ணா அல்லது உங்கள் மனைவிக்கு செய்தியனுப்புவேன் என கூறியதற்கு என்னை கண்டுபிடிக்க முடியாது என்று பதிலளிப்பினார். இதற்காகவே நேற்றைய சமூக ஊடகங்களில் படங்களை போட்டு இவர்களை தெரியுமா? என பதிவிட்டிருந்தேன். பலர் தொடர்புகொண்டு தகவல்களை கொடுத்தார்கள். இதன் பின்னர் என்ன நடந்தது என்பது ஒருப்பக்கமிருக்க அவரை தெரிந்த நபர்கள் சிலர் நியாயப்படுத்த முனைந்தவற்றினை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

·         அவனுடைய முகநூல் கணக்கு ஏற்கனவே ஹக் செய்யப்பட்டுவிட்டதாம். பலருக்கும் இப்படி செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாம்.

·         நீங்கள் பொம்பள பிள்ளை அதனால் இதை படிப்பவர்கள் உங்களை பற்றி பிழையாக நினைக்க கூடும்.

·         பொடியனுகள் அப்படித்தான்... நாம் தான் விலகிப்போக வேண்டும்.


எங்கே நான் முந்திடுவன் என்றோ அல்லது தன்னுடைய செல்வாக்கை சொல்லவோ குறித்த நபர் முறையிட்டதன் பெயரில் மட்டக்களப்பு பொலிஸார் பேசினார்கள். நிலைமையை விளக்கியதும் அவர் மன்னிப்பு கேட்பதாகவும் படங்களை நீக்கும் படியும் வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் அவற்றை நீக்கினேன். ஆனாலும் இந்நிமிடம் வரை கூட மனதில் கொதிப்பு பரவிக்கொண்டுதானிருக்கின்றது. இவர்களிடம் எல்லாம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

1.   ஹக் செய்யப்பட்டதாக தான் மாட்டின எவனுமே சொல்றான். சுரி உண்மையாக தான் இருக்கட்டுமே இது குறித்து முறைப்பாடு செய்துள்ளீர்களா?

2.   அதெப்படி நீ கேவலமாக கதைக்கும் போது என் மேல் தப்பான அபிப்பிராயம் ஏற்படும்?

3.   ஆக வன்முறை புரிந்தவன் நல்லவன் பாதிக்கப்பட்டு உரக்க கத்துபவள் நடத்தை கெட்டவளா?

4.   போடியன்கள் அப்படித்தானென்றால் உன் தங்கையை அல்லது உன் அம்மாவை அல்லது மனைவியை தவறாக பேசினால் நீயும் கடப்பாயா இதே கொள்கையுடன்?

5.   ஒரு முறைப்பாடு வந்தால் உண்மை நிலையறியாமல் சமரசம் எதற்கு? முடிந்தால் கண்டுபிடிக்கலாம் அல்லது காசை வாங்கி சமரசம் பேசலாம் அதுவே சாதாரண பாமரன் என்றால் விரட்டலாம் என்பதை தான் “பொலிஸ் உங்கள் நண்பன் என்கின்ற வாக்கியம் சொல்கின்றதா?

6.   இதை விடுங்கள் தூசு போன்ற விடயம். இதுவே நாளை ஒருவன் வன்முறை புரிந்துவிட்டு உங்கள் முன் வந்தமர்ந்தால் சமரசம் தான் செய்ய போகின்றீர்களா?

7.   ஏல்லா மரத்தையும் கொத்திய குருவி வாழை மரத்தினை கொத்தி சிக்கியதாம் என்று இன்று என்னிடம் மாட்டிக்கொண்டுள்ள ஒரு பண்பற்றவனை பெண் பொறுக்கியை நானும் கடக்க வேண்டுமா?


இதைவிடவும் கொடுமை என்ன தெரியுமா? சும்மா படங்களில் மட்டும் தான் வன்முறை புரிந்த ஒருவனை விஜய் தட்டிக்கேட்பார்… அஜித் மூக்கில் குத்துவார் ஆனால் நிஜவாழ்க்கையில் கையாலாகாமல் , முதுகெலும்பில்லாமல் அண்ணாக்கள் பலர் தாண்டித்தான் போகின்றார்கள் அல்லது கள்ள மௌனம் சாதிக்கின்றார்கள். முகுகெலும்பிலிகள்.


எத்தனையோ பெண்களது பிரச்சினை பேசியிருக்கின்றேன்… வன்முறைகளை உரத்து சொல்லுமாறு அவர்களையும் பணித்திருக்னி;றேன். இன்று எனக்கு நடந்ததையும் உரத்த சொல்லிக்கொண்டிருக்கின்றேன்………. இதைவிடவும் நானும் கவனிக்க வேண்டிய ஏளாரமான விடயங்கள் உண்டு. ஆனாலும் முதுகெலும்பிலிகளின் முகத்தில் காறி உமிழ்ந்து நான் கம்பீரமாக கடப்பதுடன் அந்த அண்ணாக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகின்றேன்…. உனக்கும் பெண் குழந்தைகள் உண்டு.


அதிகம் வாசிக்கபட்டவை