அம்மா கணக்கு!

                  Is A Level Maths Hard? | Tutorful 

நேற்றைய தினம் முகநூலில் பிரபலமானதொரு ஊடகம் வினாவொன்றினை பகிர்ந்திருந்தது. “நீங்கள் கணிதபாடத்தில் வாங்கிய குறைவான புள்ளி என்ன?” என்கின்ற கேள்வி. எனக்கு கணக்கு என்றாலே முதலில் வந்து நிற்பது அம்மாவின் முகம் அடுத்தது சசி சேரின் முகம். அதுவும் தெரிகின்ற இரு முகங்களுக்கும் பக்கத்தில் கூடவே அவர்களது மூங்கில் கம்பும் வந்து நிற்கும்.  

எங்கள் வீட்டில் பொங்கல், கிறிஸ்மஸ் போன்று தான் ரிப்போட் தரும் நாளும். அவ்வளது சம்பவங்கள் அன்றைய நாளில் காத்திருக்கும். வழமையாக எல்லா வீடுகளிலும் தங்களுடைய பிள்ளைகள் வகுப்பில் முதலாவதாக வந்தால் எப்படியெல்லாம் பூரித்து போவார்கள். ஆனால் நளினிக்கு (அம்மா) மட்டும் வாய்ப்பேயில்லை. அம்மாவின் கணக்கே வேறு. முதலாம் பிள்ளை என்பதை விட புள்ளி மேல் தான் கவனம் இருக்கும். அநேகமாக நாமனைவரும் மூன்றாம் பிள்ளைக்குள் வந்துவிடுவதுண்டு. ஆனாலும் வாங்கிக்கட்டுவதுண்டு. காரணம் புள்ளி! 

ரிப்போட் தரும் நாளின் பாதிப்பு வகுப்பில் வினாத்தாள் காட்டத்தொடங்கியதுமே ஆரம்பித்துவிடும். ரிப்போட் தரும் நாளின் காலையில் எல்லா மாணவர்களும் அன்றிலிருந்து தொடங்கும் பள்ளி விடுமுறையில் குதுகலிப்பில் இருக்கும் போது நமக்கு மட்டும் வேப்பிலை உருண்டை சாப்பிட்டது போல ஏதோவொன்று தொண்டைக்குள் வந்து போகும். ஆனால் வீட்டில் இருவர் மட்டும் வழமை போன்றே இருப்பார்கள். அவர்களுக்கு பாடங்களின் புள்ளியும் 95 விட்டு இறங்குவதில்லை. ஜீனியஸ்! அவர்களை பற்றி சொல்லத்தேவையே இல்லை. புத்தகம்- விளையாட்டு, புத்தகம்- சாப்பாடு, புத்தகம் - இசை என்று புத்தகத்ததையே கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்போது நரம்பையும், மூளையையும் வெட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இருவர் தவிர்ந்த மற்றவர்களுக்கு கனவிலும் அம்மா கம்போடு தான் நிற்பார். 

ரிப்போட் நாளன்று மதியம் பாடசாலை விட்டு வந்ததும் முன் மேசையில் அனைவரது ரிப்போட்டும் வைக்கப்படும். புத்தகங்களின் ஓரம் மட்டுமல்ல ரிப்போட்டின் ஓரமும் கசங்கியிருந்தாலோ அல்லது ஊத்தை பட்டிருந்தாலோ அதற்கு வேறு கேர்ணல் நளினியிடம் வாங்கிக்கட்ட வேண்டியிருக்கும். அன்று மதிய உணவின் போது வழமை போன்று சேட்டைகள் இருக்காது. மாலை 4.30 மணியிலிருந்து எப்போது அம்மாவின் பைக் சத்தம் கேட்கும் என்று காது உன்னிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். கிறிக்கட் கொமன்றி மாதிரி வந்து விட்டார், பைக்கை வைத்துவிட்டார், ரிப்போட்டை பார்க்கின்றார், விளாசப் போகின்றார் என்று மனம் வாசித்துக்கொண்டேயிருக்கும். 

வந்ததும் தன்னுடைய கைப்பையை வைத்துவிட்டு சாறியை தூக்கி இடுப்பில் ஒரு சொருகி சொருகிவிட்டு ரிப்போட்களை கையிலெடுப்பார் பாருங்கள் அப்படியே சொர்ணாக்கா தான். பிறகென்ன அகரவரிசைப்படி விழும். கையால் கிள்ளுவது நுள்ளுவது எல்லாம் கிடையாது. நல்ல மூங்கில் பிரம்பொன்று அந்த நாட்களில் வீட்டில் இருந்தது. கிட்டத்தட்ட நாட்டாமையின் அங்கவஸ்திரத்திற்கான மதிப்பு அதற்கிருந்தது. அதனை இரகசியமாக கைப்பற்ற சூழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு முறியடிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.   

முழங்காலுக்கு கீழ் தான் அடிவிழும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி மெனு. 90 எடுத்தாலும் மிச்ச 10 என்னாகிட்டு என்று தான் விழும். நளினியின் நல்ல காலம் அந்த காலத்தில் “சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்” என்பதெல்லாம் கணக்கில் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களுள் ஒரு சிறுமி தான் நான். அம்மாவிடம் தங்களுடைய கைகளை நீட்டி டீசன்டாக அடி வாங்கிய ஒருசிலரும் இருந்தார்கள். ஆனால் கம்மை ஓங்கும் போதே கத்த ஆரம்பிப்பவர்களாகிய நாங்களும் இருந்தோம். இதற்கிடையில் அடிவாங்கி கத்தும் போது தன்னார்வத்தில் எம்மை காப்பாற்ற நடுவில் புகுந்து அடிவாங்கவும் அம்மம்மா என்றொருவர் இருந்தார். அம்மா அடித்த தடங்கள் அழியும் வரை “பிள்ளைகளுக்கு எருமைமாட்டை அடிப்பது போல ஏன் பிள்ளை அடிக்கிறாய்…?” என்று சட்டம் பேசி ஆஜராகின்ற வக்கீலும் அவரே!

இப்படியான நேரத்தில் தான் ரிப்போட் தருவதற்கு முன்னர் பெற்றோர்கள் திருத்திய வினாத்தாளினை பார்ப்பதற்கானதொரு முறைமை ஏற்பட்டது. ஏற்கனவே படிப்பித்த ஆசிரியர்களுள் பலர் அம்மம்மா அதிபராகவிருந்த காலத்தில் அவரிடம் படித்தவர்கள், மீதம் சிலர் அம்மா வலயக்கல்வி பணிப்பகத்தில் இருப்பதால் அவருக்குத் தெரிந்தவர்கள். இனி கேட்கவா வேண்டும். பள்ளி வாழ்க்கையே கத்தி விளிம்பு போல தான். சின்ன பிழை விட்டாலும் அவ்வளவு தான். போதாததற்கு இந்த முறைமை வேறு வந்து தொலைத்தது. 

அப்போது நான் 6 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் திருத்திய வினாத்தாள்கள் பார்க்க வந்திருந்தார். பிழை விட்ட இடங்களில் என்ன பதிலளித்திருக்க வேண்டும் என்று சொல்லித்தந்துகொண்டிருந்தவர்கள் கணித வினாத்தாளில் புள்ளியை பார்த்ததும் விட்டார் பாருங்கள் ஒரு அறை. என்னுடைய 6ஆம் ஆண்டு வகுப்பறையே சுற்றி வந்தது. அதன் பின் அம்மா கதைத்தவைகளும் விளங்கவில்லை. பெருத்த அவமானமாக போய்விட்டது. அம்மா வீட்டில் என்னை ஊறவைத்து அடித்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு நோ வந்திருக்காது. ஆனால் அன்று கொடுத்த அறை அவமான அடி. சக மாணவிகள், அவர்களது பொற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் முன் விழுந்த அவமான அடி. ஆனால் சத்தியமாக அன்று தான் என் வாழ்க்கை மாறியது. 

நான் சின்னனில் இருந்தே கொஞ்சம் ஈகோ பிடித்த ஆள். அலப்பறை பிடிச்ச ஆள். பிடிவாதம் பிடிச்ச ஆள்,  யாராவது சொன்னால் அதை மட்டும் செய்ய மாட்டேன்.  இப்படிப்பட்ட அழிச்சாட்டியங்கள் நிரம்பிய என்னை உசுப்பிட்ட புள்ளி இது தான். பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள், கொஞ்சம் சிவப்பு கலந்த வெள்ளை என்றிருப்பேன். அதனால் அம்மா அறைந்ததில் அவரது விரல்கள் தெளிவாக என் கன்னத்தில் பதிந்துவிட்டன. மதியம் வீட்டிற்கு வந்த பின்னும் அம்மம்மா இதனை பார்த்து பார்த்தே அம்மாவை திட்டிக்கொண்டிருந்தார்கள். 

மாலை அம்மா வரும் போது எனக்கு பிடித்தவற்றினை வாங்கி வந்திருந்தார். (அந்தக்காலத்தில் தேன்குழல் தான் என் உயிராகவிருந்தது என்பதை இங்கு பதிவு செய்கின்றேன்.) உடை மாற்றிய பின் அருகில் வந்து கன்னத்து தழும்பை தொட்டுப்பார்த்தார். அமைதியாக கணக்கில் என்ன பிரச்சினை என்று கேட்டார். நாளையிலிருந்து டியுசன் கிளாஸ் போகவேண்டும் என்றார். இப்படி அறிமுகமானவர் தான் சசி சேர். லெப்டினன் கேர்ணல் சசி சேர்.

அம்மா கொண்டு போய் சேர்த்த அடுத்த நாள் முதல் வகுப்பு. ஒரு நீண்ட கொட்டகை ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம். ஏறத்தாழ ஒவ்வொரு வகுப்பிலும் 100 ற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள். வகுப்பிற்குள் வாத்தியார் நுழைந்தவுடனேயே கேட்ட முதல் கேள்வி டியுட் செய்து வராதவர்கள் எழுந்து நில்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் தானே வந்திருக்கின்றேன். எனவே செய்து வரவில்லை தானே என்று எழுந்து நின்றேன். கையை நீட்டச்சொல்லி விழுந்தது அடி. இதென்ன அக்கிரமம். போனன்றே அடியா? அன்றைய நாள் அழுதழுதே வகுப்பு போனது. வகுப்பு முடியும் போது தன்னை வந்து சந்திக்கச் சொன்னார் சசி வாத்தியார். தனியே சந்திக்க போனேன். ஏன் பிள்ளை அழுது கொண்டிருந்தனீ? ஏன்று கேட்டார். நான் இன்று தான் முதல் நாள் வருகின்றேன். டியுட் பற்றி தெரியாது. ஆனால் அடி வாங்கினேன் அது தான் அழுகின்றேன் என்றேன். அதை அப்போது சொல்லிருக்கலாமே என்றார். பிறகு தவணையில் பெற்ற புள்ளியை கேட்டார். இறுதியில் கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான் என்றார். இனி விளங்கவில்லை என்றால் கேட்டு படிக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்பிவிட்டார். 

அன்று ஆரம்பித்தது கணக்கு மீதான பைத்தியம், பித்து, இன்னும் என்ன வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இது தான் அம்மா ஆரம்பித்து வைத்த என்னுடைய கால கணக்கும் கூட. அம்மாவின் அறையும் சசி சேரின் வழிகாட்டலும் இல்லாட்டி இன்று இங்கு நின்று கொண்டிருக்க மாட்டேன். அம்மாவும் சேரும் என்னை அடித்த போது அவ்வளவொரு ஆற்றாமை கோபம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இன்று இவ்வளவு தூரம் வந்த பின் திரும்பிப்பார்த்தால் கடந்த தடங்கள் எல்லாவற்றிலும் என்னை செதுக்கியது இவை தான் என்று தோன்றுகின்றது. அம்மாவிடம் அன்று வாங்கிய அறைக்கு பின்னர் இதுவரை கணக்கின் பெயரில் அடிவாங்கியதில்லை. ஒரு கட்டத்தில் கணிதம் என்றாலே என் பெயரை அடுத்ததாக நினைக்குமளவிற்கு கணக்கும் என் வசப்பட்டு போய்விட்டது.  

           Thenu - Combined A/L Maths, Electronics and Robtics Tuition Class 

இப்போது சசி சேருக்கு வயதாகிவிட்டது. அவ்வப்போது காணுவதுண்டு. நானாக போய் தான் கதைக்க வேண்டும். அவருக்கு எம்மை ஞாபகமிருப்பதில்லை. ஒவ்வொரு தடவையும் யார் பிள்ளை நீ என்று புதிதாக காணுவது போல் தான் கேட்கின்றார். மறக்க கூடிய மனிதரா இவர். நான் பல்கலைக்கழகத்தில் திரவ இயற்பியல் மற்றும் நீரியல் இயந்திரவியல் (hydraulic and fluid mechanics) இனை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றேன். கணிதத்துறையில் மிகவும் சிரமமான பகுதியிது. ஆனால் முதல் வகுப்பில் மறக்காமல் என் ஆசான் எனக்கு கற்றுத்தந்த “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்” என்பதை மறக்காமல்… மறைக்காமல் சொல்கின்றேன். 

இவையொரு பக்கமிருக்க அநேகமாக மட்டக்களப்பில் நான் பங்குபற்றுகின்ற விமர்சன அரங்குகள், புத்தக வெளியீடுகளுக்கு அம்மாவும் என்னுடன் வருவதுண்டு. அதே போன்று அம்மாவினை அழைக்கும் சந்தர்ப்பங்களில் நானும் செல்வதுண்டு. இப்படியானதொரு நிகழ்வில் நம்முடை தாயார் செய்ததொரு அலப்பறையும் நான் கணக்கு பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஞாபகம் வருவதுண்டு. 

கேர்ணல் நளினிக்கு நேரம் மிக முக்கியமானது. வேலைக்கும் காலை 7.20 க்கே போய்விடுகின்ற ஆள் அவர்.  சிலர் நளினா மிஸ் வருகின்றார் என்றாலே நேரம் இது தான் என்று அடித்துப் பேசமளவு நேர ஒழுங்கில் சுத்தபத்தமானவர். பற்றரி பழுதாகி கடிகாரம் கூட அப்பப்போ பிந்தும் ஆனால் நளினி…..  Never! Ever! 

இப்படியான ஆளை சொந்த காசில் சூனியம் வைப்பது போல் வீட்டிற்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து வருந்தி கூப்பிட்டிருந்தார்கள். வழமை போன்று நிகழ்விற்குரிய நேரத்திற்கு முன்னரே காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் அடித்துப்பிடித்து அம்மாவும் நானும் போய் விட்டோம். நிகழ்வு தொடங்க இருந்த நேரத்திற்குத் தான் ஒழுங்கமைப்பாளர்களே வர ஆரம்பித்தார்கள். நிகழ்வு ஆரம்பிக்கும் போது குறிப்பிட்ட நேரத்திலும் 40 நிமிடங்கள் பிந்திவிட்டன. அம்மா தான் அதிதி வேறு. துனது உரையின் போது அம்மா போட்ட கணக்கு இருக்குதே அது வரலாற்றில் பதியப்பட வேண்டியது.

இங்கு ஏறத்தாழ 100 ற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளீர்கள். சரி நூறு என்று வைத்துக்கொண்டால் 100 ஐ 40 ஆல் பெருக்கினால் 4000 நிமிடங்கள். 4000 ஐ 60 பிரித்தால் 66.6 மணித்தியாலங்கள். 66 என்று எடுத்துக்கொண்டு 24 ஆல் பிரித்தால் ஏறத்தாழ 3 நாட்கள். இன்று 40 நிமிட தாமத்தினால் 3 மனித நாட்களை வீணாக்கிவிட்டோம்” என்றார். சபையில் சத்தமே இல்லை. இவ்வாறு பொன்னான நேரத்தினை வீணடித்த இந்த நிகழ்வில் நான் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்று வெளியேறி விட்டார். இது தான் என் அம்மாவின் கணக்கு! 

பிற்குறிப்பு 01: கன்னத்தில் அறை வாங்கும் முன்னர் எடுத்திருந்த ஆகக்குறைந்த புள்ளி 72! 

பிற்குறிப்பு 02: “பாடசாலை காலத்தில் குண்டுக்கன்னங்கள்…..” என்று எழுதியிருக்கின்றேன். ஆனால் இப்போதும் அப்படித்தான் இருக்கின்றது. மிகவும் அரிதான நேரங்களில் மட்டும் கன்னக்குழி தென்படும். இதனை அண்மையில் நண்பரொருவர் அழகாக படம் பிடித்துள்ளார். 

பிற்குறிப்பு 03: என்னுடைய அடுத்த கற்கையினை (seismology)  நிலநடுக்கம் சார் விடயமாக மேற்கொள்ளவுள்ளேன். துல்லியமான கணக்கிடல் உள்ளவர்கள் இதனை மேற்கொள் முடியும். நீங்களும் முயற்சியுங்கள் ஏன் என்றால்  “கணக்கு அப்படியொன்றும் கஸ்டமானதில்லை. கூட்டலும் கழித்தலும் தான் கணக்கு. பெருக்கல் கூட கூட்டல் தான் பிரித்தல் கூட கழித்தல் தான்”

உலகில் எல்லாமே கணக்கு தான் அன்பு உட்பட 
 










கருக்கல், ஊதுமாக்கஞ்சி, தூதுவளை சம்பள் மற்றும் முட்டைக்கோப்பி

இப்போது தான் சின்னன்கள் முதல் பெரிசுகள் வரை சின்னதாக தூறல் விழுந்தால் போதும் அல்லது கொஞ்சம் வெயிலுக்குள் போய் வந்தால் போதும் சளி, காய்ச்சல், தும்மல் என்று ஆயிரத்தெட்டு வருத்தம் வந்துவிடுகின்றது. நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்தில் பனடோல், விக்ஸ் எல்லாம் பாவிப்பதும் இவ்வாறான சளி காய்ச்சலில் அல்லல்படுவதும் மிகவும் அரிதானது.

எங்கட வீட்டைப்பொறுத்தளவில் இருப்பவர்களிலேயே மருந்துக் கள்ளி என்றால் அது நான் தான். கையில் மருந்தைத்தந்து கண்ணசைக்காமல் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்து மயமாகிவிடும். இப்படிப்பட்ட எனக்கே மருந்து பிடித்திருந்தது என்றால் அது ஊதுமாகஞ்சி தான்.எமது வீட்டில் பிள்ளைகள் மணல் அளைவதற்கோ மழை வெயிலில் நனைவதற்கோ பெரிதளவில் கட்டுப்பாடு இருந்ததில்லை. இதையொரு நல்ல விடயமாக கூட கருதினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எவ்வளவு விளையாடினாலும் சரி விளையாடாவிட்டாலும் சரி இரு விடயம் கட்டாயம் தவறாமல் வீட்டில் இருக்கும். ஒன்று கருக்கல் மற்றது ஊதுமாக்கஞ்சி.  

நாம் குழந்தைகளாக இருக்கும் போது கொத்தமல்லியை சற்று வறுத்து அதனுடன் வேர்கொம்பு அல்லது இஞ்சி துண்டுகள் , மிளகு நான்கைந்து போட்டு தண்ணீர் ஊற்றி நீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து சற்று ஆறவைத்து சூடு போகும் முன்னர் கொஞ்சம் சீனி அல்லது தேன் சேர்ந்து கலக்கி சூப்பி போத்தலில் போட்டு எமக்கு காலை பத்து மணியளவில் தரப்படும். அதுவே கொஞ்சம் வளர்ந்த பின்னர் கோப்பைகளில் வழங்கப்படும். குடித்தேயாக வேண்டும். அந்தக்கால அண்டீபயற்றிக் இது தான். எவ்வளவு தான் புழுதியில் உருண்டு பிரண்டாலும் சரி, ஈரத்துடன் திரிந்தாலும் சரி சளி நம்மட பக்கம் எட்டிக்கூட பார்க்காது. 

              உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி... | Lifestyle News (வாழ்க்கை  முறை செய்திகள்) - News18 Tamil 

அப்படியே தப்பித்தவறி சளி பிடித்து நெஞ்சுத்தடுமல் ஆகிட்டுது என்றால் அடுத்த ஆயுதம் ஊதுமாக்கஞ்சி. அம்மம்மா மதியமளவில் இரண்டு கைபிடி பச்சரிசியையும் அதனுடன் நாலைந்து மிளகையும் நீரில் ஊறப்போட்டுவிடுவார். மாலையளவில் வீட்டு வேலியோரங்களில் இருக்கும் தூதுவளை இலைகளை கொய்து அதன் விளிம்பில் இருக்கும் முட்களை நீக்கி உப்பு நீரில் கழுவுவார்கள். ஆறுமணியளவில் குளித்து, விளக்கேற்றி படிக்க அமறவேண்டும் என்கின்ற எழுதாத சட்டம் எம் வீட்டில் உண்டு. அதற்கமைய அனைவரும் படிக்க அமர்ந்த பின் ஊறவைத்த இளகிய அரிசி, மிளகு, தூதுவளை இலை அனைத்ததையும் ஆட்டுக்கல்லில் அரைத்தெடுப்பார்கள். அரைத்தெடுத்த கலவைக்கு சற்று உப்பிட்டு கொஞ்சம் நீர் ஊற்றி அடுப்பில் வைப்பார்கள். மையாக அரைக்கப்பட்ட அரிசி சற்று வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடுவார்கள். கொதித்த கஞ்சில் கொஞ்சமாக சீனி அல்லது சக்கரை சேர்க்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். அதனை சூடாற முன்னர் ஊதி ஊதிக் குடிக்க வேண்டும். இதனால் தான் ஊதுமாக்கஞ்சி என்ற காரண பெயரும் வந்திருக்கும் போல. சூடாக குடிக்கும் போது நெஞ்சுக்குள் இருக்கும் அடைப்பு விலகுவது விளங்கும். அடுத்த நாள் சளி மலத்துடன் வெளியேறி இருமலும் நம்மை விட்டு தொலைந்திருக்கும்.  

                           தூதுவளை - தமிழ் விக்கிப்பீடியா 

நம் ஊர்களில் நாம் இழந்துள்ள பல மூலிகைகளுள் தூதுவளையும் ஒன்று. முன்னர் வேலியோரங்களில் கள்ளி, நித்தியகல்யாணிக்கு அடுத்ததாக இருந்தது தூதுவளை கொடி தான். இன்று சில கிராமப்புற இடங்களில் மட்டுமே இதனை காணமுடிகின்றது. இந்த தூதுவளை இலைகளை சில நேரங்களில் கருக்கல் கலவையினுள்ளும் போடுவதுண்டு. அடுத்ததான விடயம் தூதுவளை சம்பள். தூதுவளை இலைகளை முள் நீக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைகொச்சிக்காய், உப்பு, தேங்காய் பூ கொஞ்சம் வைத்து அம்மியில் நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் சுளீரென தேசிக்காய் புளிவிட்டு சுடுசோறுடன் சாப்பிட்டால் போதும் சளி நம்மை அண்டாது.  

அடுத்தது முட்டை கோப்பி. தமிழர்களது பாரம்பரியம் எனும் போது கோப்பி அதற்குள் எப்படி வந்தததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரில் சுக்கு, வறுத்த மிளகு, கொத்தமல்லி வறுத்து இடித்த தூள் தான் முன்னர் பாவிக்கப்பட்டதாக வயதானவர்களிடமிருந்து அறிய முடிகின்றது. இந்த கொத்தமல்லி கலவைக்குள் நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவினை நன்றாக கலக்க வேண்டும். சூடாறும் முன்னரே குடித்துவிட்டால் நெஞ்சுச்சளி ஓடிப்போய்விடும். 

ஆனால் எனக்கு இந்த முட்டைப்கோப்பி சிறுவயதில் இருந்தே அருக்குளிப்பான விடயம். ஆனால் சளி , தடுமல் போன்ற விடயங்களை பூமாலை போட்டு வரவழைக்கும் ஆளும் நான் தான். நன்றாக புழுதியில் புரள்வது, சமையல் செய்கின்றேன் எனும் பெயரில் மண் அளைவது, ஈரமான உடுப்புடன் விளையாடுவது, நீரில் தாரா போன்று ஊறிக்கொண்டிருப்பது எல்லாமே நான் தான். மருந்து விடயத்தில் மட்டும் வரிசையில் கடைசியில் நிற்பதும் நானே. முக்கியமாக மேல் சொன்னவற்றில் முதல் மூன்றும் பரவாயில்லை. ஆனால் இந்த முட்டைக்கோப்பி இருக்கின்றதே….. இதற்கு பதிலாக முட்டையை தனியாக பொரித்தும் கோப்பியை பெரிய வாளியில் ஊற்றியும் தந்திருந்தால் கூட நன்றாகவிருக்கும். ஆனால் முட்டைக்கோப்பி குடித்தால் ஓங்காலம் வருவதுண்டு. இங்க தான் நான் ஒரு டீல் வைத்திருந்தேன். தம்பி என்னுடையதையும் சேர்த்துக்குடிக்க வேண்டும். அப்படி செய்து நான் தப்பித்தால் என்னுடைய விளையாட்டப்பொருட்கள் சில மணி நேரங்கள் தம்பிக்கு பகிரப்படும்.  என்ன ஒரு கவலையென்றால் இதனால் நான் மட்டும் இருமித்திரியும் போது வீட்டாக்கள் அம்மம்மாவிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்கள். “மற்றாக்களுக்கு நெஞ்சு சளி போயிட்டுது பிள்ளைக்கு மட்டும் ஒழுங்கா முட்டைக்கோப்பி குடுபடல போல அதுதான் இன்னும் இருமுகிறா” என்று…. சில நேரங்களில் மீண்டும் நான் இந்த முட்டைக்கோப்பி குடிக்கும் வலையில் சிக்கிகொள்வதுமுண்டு. 

இன்றெல்லாம் என் பயணங்களின் போது Vitamin C, Cough syrup, Piriton Syrup  என்று வாங்கி இரசாயனங்களை அருந்தும் போது என் குழந்தைப்பருவத்தினையும் என்னை சூழ இருந்திருந்தவர்களது கைப்பக்குவத்தினையும் உணவிலேயே எம்மை மருந்துண்ண வைத்த அன்பினையும் அதன் நினைவுகளையும் மீட்டிப்பார்க்கின்றேன். 
 

மெழுகென உருகும் இரவுகள்

1/3PCS LED Black Candle Lamp Creative Simulation Flame Candle Night Light  Tea Light for Party Home Decoration | Daraz.lk இந்த நாட்கள் உலகின் பல வடிவமைப்பாளர்களுடன் கழிந்துகொண்டிருக்கின்றது. பொதுவாகவே இரு பெண்கள் அல்லது பெண் குழு என்றாலே உடை, நகை பற்றித்தான் பேசுவார்கள் எனும் கற்பிதங்களை உடைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம். நிகழ்விற்காக அழைக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட தனித்தனி சிறு வீடுகளில் நால்வர் வீதம் தங்கியிருக்கின்றோம். யார் அந்த நால்வர் என்பது எம்முடைய தேர்வு. சிலர் ஆண்கள்- பெண்கள் என கலப்பாகவும் இருக்கின்றார்கள். எமது வீட்டில் நாம் இருவர். என்னுடன் தங்கியிருக்கும் வடிவமைப்பாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். எல்லோரும் கூட்டுச் சேர்ந்த பின்னர் எஞ்சிய நாம் இருவரும் இந்த வீட்டில் தங்கியிருக்கு முடிவுசெய்தோம். எனக்கும் ஒரு ஆணுடன் தங்குவதை விடவும் இவருடன் தங்கியிருப்பது இலகுதன்மையாக இருக்கும் என்று தான் தோன்றியது. 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வடிவமைப்பாளர்கள் இங்கு வந்து குமிந்துள்ளோம். கடந்த வருடங்களில் விருது வாங்கிய முதல் நூறு வடிவமைப்பாளர்களுக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துத. அத்துடன் இம்முறை விருது பெறும் புதியவர்களும் இணைந்துள்ளார்கள். என்னைப் போன்று சிலர் இவ்வருடமும் விருது பெறுகின்றார்கள். ஆக மொத்தமாக 140 பேரவளவில் இணைந்துள்ளோம். சிறிய நகரமொன்றில் எமக்கான தங்குமிடங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்த தங்குமிட ஒழுங்கமைப்பில் முக்கியமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் உண்டு.

1.    பொதுவாக நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பாலின அடிப்படையில் ஆண்களுக்கு தனி பெண்களுக்குத. தனியென தான் தங்குமிட வசதிகள் ஒழுங்கமைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்வில் அப்படியல்ல. நாம் யாருடன் தங்கப்போகின்றோம் என்பது எம்முடைய தனி விருப்பு மட்டுமல்ல பொறுப்பும் கூட. அதாவது யாருடனாவது தங்கிவிட்டு அவர் என்னை வலுக்கட்டாயப்படுத்தினார் என்றெல்லாம் புலம்ப முடியாது. நமது விருப்பும் பொறுப்பும் ஏற்கனவே எமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. 

2.    இங்கு ஆண் - பெண் என்கின்ற பாலின வேறுபாடு, தேர்வினை விடவும் பாலியல் விருப்புகள் தான் மோலோங்கி நிற்பதாகபடுகின்றது. அதாவது எமது குழுவில் lesbian and Gay போன்றவர்கள் தம்முடைய தேர்விற்கு முக்கியத்துவமளித்துள்ளார்கள். இரு ஆண்கள் தாம் வெளிப்படையாகவே Gay என்று சொல்லிவிட்டு தங்குகின்றார்கள் அல்லது பெண்களும் அவ்வாறு செய்கின்றார்கள். ஆனால் நம் ஊர்களிலுள்ளவர்கள் போன்று அதனை கேலி செய்வதுமில்லை. முறைத்துப்பார்ப்பதும் இல்லை. 

இதெல்லாம் பார்க்கவும் கேட்கவும் நன்றாகவிருந்தாலும் இந்த விடயம் எனக்கு கொடுத்துள்ள டுவிஸ்ட் இருக்கே அதனை சொல்லியே ஆகவேண்டும். ஏற்கனவே எமக்கு இந்த ஒழுங்கு குறித்து மின்னஞ்சலில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பலரும் தம்முடைய தங்குமிட தோழர்களை தெரிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வந்திறங்கிய போது விமான நிலையத்திற்கு வந்திருந்த ஒழுங்கமைப்பாளர்களுடன் இணைந்து தங்குமிடங்களுக்கு போகும் போது நானும் இன்னுமொரு பெண்ணும் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதால் எஞ்சியிருக்கும் எம்மிருவரையும் ஓரு வீட்டில் தங்கவைப்பதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக எனக்கு சொல்லப்பட்டு விருப்பம் கேட்கப்பட்டுத. நானும் இன்னுமொரு பெண்ணுடன் தானே தங்கவுள்ளேன் என்பதால் தலையை சந்தோசமாக ஆட்டியும் விட்டேன். என்னுடைய தங்கவுள்ள மற்ற பெண் வடிவமைப்பாளர் ஏற்கனவே தன்னுடைய நாட்டிலிருந்து முதல் நாள் வந்துவிட்டதாகவும் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் என்னுடைய தங்க அவரும் சம்மதம் தெரிவித்தாகவும் மேலதிகமாக சொல்ல எனக்கும் அப்பாடா என்று தானிருந்தது.

தங்குமிடத்தில் இறக்கிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினால் குட்டை முடியுடன் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பக்கில் சூர்யா மாதிரி ஒருவர் கதவை திறந்தார். அப்போது கூட என்னுடன் தங்க வந்துள்ள பெண்ணின் உறவினர் போல என்று தான் நினைத்து கையை குலுக்கிவிட்டு வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணின் பெயரைச்சொல்லி எங்கவர் என்று விசாரித்தால் இடி சிரிப்புடன் நான் தான் என்றார் இவர். முதன் முதல் என் ஆசியா புத்தி மண்டையில் குட்டிக்கொண்டது. எமக்குள் ஆண் என்றால் இப்படி பெண்ணென்றால் இப்படியென எழுதாவிதிகள் வைத்துள்ளோம் தானே. அதிலும் இவ்வாறான சமூகத்தினருடன் நீண்டகாலமாக இணைந்து பயணிக்கும் என்னைப்போன்றவர்கள் இன்னும் இவ்வாறான விடயங்களை தலைக்குள் வைத்திருப்பதனை என்னவென்று சொல்வது. எனக்கே என்னை நினைத்து வெட்கமாகவுள்ளது. 

மாற்றுப்பாலினர், பாலின விருப்புள்ளவர்களுடன் தொடர்பும் முன்னெடுப்புகளும் இருந்தாலும் இவ்வாறு தனியே தங்குவது இதுவே முதல் தடவை. வந்தவுடன் குளித்துவிட்டு வெளியே வந்தால் கையில் கோப்பியுடன் நிற்கின்றார் என் அறைத்தோழி. கதவைத்திறந்தவுடன் அவர் நின்ற தோரணையில் பயந்து கையில் கோப்பிக்கோப்பையை வாங்கியவுடன் நன்றி சொல்லி கதவை அடைத்துவிட்டேன் நான். சில நிமிடம் கழித்து தான் நான் செய்த மடத்தனம் புரிந்தது. மெதுவாக கதவைத்திறந்து வெளியில் எட்டிப்பார்த்தால் அவர் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் போனவுடன் சனலை மாற்றவா என்று கேட்டார். எனக்கும் இந்த குத்துச்சண்டை, கிறிக்கெட் எல்லாம் பெரிதாக பிடிப்பதில்லை. எனவே நடிக்காமல் “யெஸ் பிளீஸ்” என்றேன். ஆங்கில திரைப்படத்திற்கு மாற்றிவிட்டார். ஒரு சோபாவில் சுருண்டு படுத்தபடி நானும் மற்றதில் அமர்ந்தபடி அவரும் பார்த்துக்கொண்டிருந்தோம். எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியாது. எழும்பிய போது போர்வை போர்த்தப்பட்டு தலைக்கு தலையணையும் செருகப்பட்டிருந்தது. 

எழும்பிய பின்னர் தான் வீட்டவர்களுடன் கதைக்கவில்லை என்று தோன்றியது. வந்தவுடன் ஒலிச்செய்தி அனுப்பிவிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்கிவிட்டேன். வந்து நான்கு மணித்தியாலத்தின் பின் தான் இந்த ஞானோதயம் வந்துத. பறந்தடித்து வீட்டிற்கு அழைத்தால் அனைவரும் வீடியோ அழைப்பிற்கு வந்துவிட்டார்கள். கதைக்கும் போது என்னுடைய தோழி பின்னால் நடப்பதையும் பார்த்துவிட்டார்கள் .முதலில் யார் இந்த பொடியன் என்று தான் கேட்டார்கள். பொடியனில்லை பெட்டை பொறுங்கள் கதைக்க சொல்கின்றேன் என்று ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கதைக்கவும் கொடுத்தேன். கதைத்த பின் கூட என்ன இது ஆம்பிள்ளை போலுள்ளது குரலும் அப்படியே தான் என்றார்கள். நல்ல காலம் நம்மட ஆக்கள் இப்படியான நேரத்தில் தமிழில் பேசுகின்றார்கள். அல்லது நானும் மாட்டியிருப்பேன். முடிவில் பகிடியாக இவர் என்னுடைய Boy Friend என்று சொல்லிவிட்டு நானும் கட் பண்ணிட்டன். 

சிறிது நேரத்தில் அவரும் வந்து அமர்ந்து தன்னுடைய வீட்டாக்களுக்கு அழைப்பெடுத்து கதைக்க கொடுத்தார். கதைக்கும் போது அவரின் சகோதரி Are you .....'s Girl friend? என்று கேட்டார். என்னடா இது எமது ஊரில் வாயைப்பிளந்து பார்க்கும் விடயத்தினை இலகுவாக கேட்டு விட்டார் அதுவும் முதல் முறை பேசும் போதே என்பது ஆச்சரியம் தான். எமக்கும் அவர்களுக்குமான கலாசார இடைவெளியும் விளங்காமலில்லை. ஆனால் இதற்கு பின் தான் மதுரைக்கு ஏற்பட்டது சோதனை.  

அழைப்பை துண்டித்த பின்னர் இருவரும் சமைப்போமா என்று கேட்டார். சரியென்று எமக்கு வைக்கப்பட்டிருந்தவற்றினை வைத்து இலகுவான சமையலை இருவரும் செய்து முடித்தோம். சாப்பிடும் போது ஒரு மாறுதலுக்கு எனக்கு விருப்பமான candle light dinner இன்று தயார் படுத்துவமா? என்று கேட்டேன். தலையசைத்து விட்டார். வீட்டில் போதியளவு மொழுகுதிரிகள் இருந்தன. அவற்றினையும் நாம் சமைத்தவற்றினையும் வைத்து முன்னறையை தயார் செய்தோம். எனக்கு இங்கு வைக்க பூக்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் எனக்கும் பிடிக்கும் என்றேன். அருகில் கடையிருக்கின்றது. நேற்று இங்கு வந்தபின் மாலையில் உலாத்தப் போகும் முன் பார்த்தேன் என்றார். பத்து நிமிடம் பொறு வருகின்றேன் என்று உடனடியாக வெளிக்கிட்டும் போய்விட்டார். வரும் போது கையில் அவ்வளவு பூக்கள். அவற்றினையும் வைத்து அலங்கரித்து மின்குழிழ்களை அணைத்துவிட்டு எம்முடைய மெழுகுதிரி இரவை கொண்டாட ஆரம்பித்தோம். வழமை போன்று நான் மென்பானத்தினை அருந்த தனக்கு பியர் பிடிக்கும் என எமக்கு வைக்கப்பட்டதில் இருந்து எடுத்து அருந்த ஆரம்பித்தார். 

அதுவரை எம்முடைய பயணம் நாம் சமர்ப்பித்த வடிவமைப்புக்கள் குறித்து பேசியபடி இருந்த உரையாடல் தனிப்பட்ட விடயத்திற்கு திரும்பியது. போதையும் அவருக்கு சற்று ஏறிவிட்டதால் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்ததை நானும் உணரத்தொடங்கினேன். தான் குடும்பத்தில் கடைசி பிள்ளை என்றும், தான் படிக்கும் போது காதல் இருந்ததாகவும் அவள் தன்னை விட்டு போய்விட்டதாகவும் கூற ஆரம்பித்தார். அவரது காதல் கதையில் "She" வந்தது முன்னர் உறைக்கவில்லை. அடிக்கடி வர ஆரம்பித்த போது தான் கேட்டேன். தான் லெஸ்பியன் என்றும் தனக்கு காதலி இருந்ததாகவும் அவள் நினைவாக கையில் பச்சை குத்தியதாகவும் பின்னர் அந்த பிள்ளை வேறொரு ஆணை விரும்பி திருமணம் செய்துவிட்டதாகவும் கூறினார்.. கடைசியில் சொன்னது தான் ஹலைட். “ நான் உன்னைப் போன்ற தமிழ்ப்பெண்ணை காதலித்திருந்தால் என்னை விட்டுப்போயிருக்க மாட்டாள்” என்பது தான் அது.

சில ஆண்களிடம் இந்த வசனத்தினை கேட்டிருக்கின்றேன். ஒரு பெண் என் முன்னால் அமர்ந்து சொன்னது இது தான் முதல் தடவை. எனக்குள் பிரளயம் ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டதும் சமிபாடடையாமல் இடையில் நின்றுவிட்டது. போதாதற்கு எழுந்து அருகில் வர ஆரம்பித்தார். எனக்கு டென்சனாகி சடாரென எழுந்து அறைக்குள் போய் கதவை மூடிய பின் தான் போன உயிர் வந்தது. இரவுத்தூக்கமும் தொலைந்து போனது. எவ்வளவு நேரம் தான் போனை பார்ப்பது…? எப்போது தூங்கினேன் என்று தெரியாது விழிக்கும் போது அறை முழுவதும் நல்ல வெளிச்சம். கதவைத்திறந்து வந்து தானே ஆகவேண்டும். அன்று நிகழ்வின் ஆரம்ப நாள் வேறு…. 

வெளியில் வந்தால் சாப்பாட்டு மேசையில் கோப்பியுடன் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் இருந்தது. பின்னால் இருந்து காலை வணக்கத்துடன் மன்னிப்பும் கோரப்பட்டது. எந்தத் தவறும் உணரப்பட்டு மன்னிப்பு கேட்கப்பட்ட பின் மறுக்க என்னவிருக்கின்றது…? காலையுணவின் பின்னர் சிறிது நேரம் அமர்ந்து பேசினோம். நானும் என்னுடைய ஈர்ப்பு ஒரு பெண்ணின் மீது வருவதில்லை. நாம் நல்ல தோழிகளாயிருப்போம் என்று நேருக்குநேரே சொல்லிவிட்டேன். 

கடந்த நான்கு நாட்களாக இருவரும் நிகழ்விற்கு ஒன்றாகவே சென்று வருகின்றோம். அன்றும் நிகழ்வு முடிந்து வந்த பின்னர் நேற்று இரவு என்னிடம் பேச வேண்டும் என்றார். மீண்டும் வேதாளம் முருங்கை ஏறிவிட்டதோ என கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. இன்றும் ஏதாவது எடக்குமுடக்கு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கைகளை பற்றி அழுதார். மீண்டும் மன்னிப்பு கேட்டார். என்னை விரும்புவதாகவும் சொன்னார்.

என்னை விரும்புவது அவர் தெரிவு. நான் விரும்பவில்லை என்பது என் தெரிவு. ஆனால் அவருடன் அமைதியாக அன்று காலையில் அமர்ந்து பேசியது தனக்குப்பிடித்திருந்ததாக தெரிவித்தார். எனக்கு உண்மையில் ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருவர் மீதான ஈர்ப்பு சில நாட்களில் வந்து விடுமா…? ஒருவேளை முன்னைய தோல்விக்கும் இவ்வாறான அவசரங்கள் தான் காரணமா…? எதுவாகிலும் ஒரு பெண் என்னை நேசிப்பதாக சொன்னது இது முதல் தடவை. இதே விடயத்தினை நம்முடைய ஊர்களில் பொருத்திப்பாருங்கள். எவ்வாறு நாம் அவர்களை அணுகியிருப்போம்? 
ஆண்- ஆண், பெண்- பெண், ஆண்- பெண் காதல் எல்லாமே ஒன்றுதானென தோன்றுகின்றது. இவர் அழுவது அதனை நிரூபிக்கின்றது. ஏன் இந்த உறவுநிலையில் ஒருவரையொருவர் ஏமாற்ற நினைக்கின்றார்கள்…? நிதானமாக கையாண்டால் தான் என்ன? எல்லாம் அன்பு தானே…. இவரது அன்பின் தன்மை எனக்கு இன்னும் சரியாகப்புரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து என்னிடம் இது பற்றி பேசாத நேர்மை எனக்குப்பிடித்திருக்கின்றது. ஒருவேளை ஆணாயிருந்தால் மறுத்ததற்காக ஏதாவது ஏடாகூடமாக செய்திருக்க கூடும். அல்லது என்னைக் குறித்து கதை கட்டியிருக்க கூடும். குறைந்த பட்சம் என்னை கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்க கூடும். ஆனால் இது எதுவுமே இங்கு நிகழவில்லை. 

General Wax & Candle | Valentine's Day! 8 romantic candlelight dinner ideas  - General Wax & Candle – General Wax Candles 

தினமும் காலையில் சாப்பாட்டு மேசையில் எனக்குப்பிடித்த ….. உடன் ஏதாவதொரு நிறத்துடனான ரோஜா காத்திருக்கின்றது.. குளித்து விட்டு வரும் போது உணவுடன் அவரும் காத்திருந்து முந்தைய நாள் நிகழ்வினை கதைக்கின்றோம் நிறைய வடிவமைப்புக்கள் குறித்து பேசிக்கொள்கின்றோம்…. மாலையில் ரோம் நகரைச் சுற்றி வருகின்றோம். எனக்கு பிடிக்கும் என்று சொன்னதற்காகவே அநேக இரவுகள்       ஒழுங்குசெய்யப்படுகின்றது. 

ஆனால் கண்டதும் உடையை வைத்து ஆணென்றும், லெஸ்பியன் என்றவுடன் பாலுறவு வரையும் சிந்தித்த நான் இன்னும் “திருந்த இடமுண்டு” என்று எமது தேர்ச்சியட்டைகளில் குறிப்பிடப்படுவது போல் எனக்குள் சொல்லிக்கொள்கின்றேன். 

சொல்ல மறந்துவிட்டேன். “முதல் இளம் ஆசிய தமிழ்ப்பெண் கட்டட வடிவமைப்பாளர்” எனும் தலைப்பில் அடுத்த மாத "DWell" இதழில் என் பேட்டி வருகின்றது. கடந்த வருடம் 100 ற்குள் இருந்து இவ்வருடம் 75 ற்குள் வந்திருக்கின்றேன். என் தோழி இம்முறை .......  ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். உடை , நகைகளை குறித்து பேசுவதை தவிர்த்து வடிவமைப்புக்கள், வாய்ப்புக்கள், இயற்கையை நாசப்படுத்தாமல் உருவாக்கும் வடிவமைப்புக்கள் என்று நாம் பேசிக்கொண்டேயிருக்கின்றோம். உண்மையான அன்பென்பது நம்மை செதுக்கும் ஒன்று தானே

Dinner in Candle light மட்டுமல்ல ஒரு உறவை Handle with Care ஆக அணுகுவதும் இனிமையானதொரு அனுபவம் தான் 





மௌனராகம்!

இன்று வரையான திரைப்படங்களில மௌனராகம் திரைப்படம் பல தலைமுறைகள் கடந்தும் நிற்கின்றதொரு படமொன்றென நான் நினைக்கின்றேன். 1986 இல் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்ததொரு திரைப்படம் இது. இதில் முக்கிய பாத்திரங்களாக மோகன், ரேவதி, கார்த்திக் நடித்திருப்பார்கள். மணிரத்தினம், மோகன், ரேவதி மூவருக்குமே இதுவொரு அடையாளம் என்று கூட சொல்லாம். ஆனால் மௌனராகம் என்றவுடன் முதலில் நினைவுக்கு பெரும்பாலும் வருவது மோகன் தான். இத்திரைப்படத்தின் இன்னுமொரு ஹலைட் என்றால் இளையராஜாவின் இசையமைப்பு. மன்றம் வந்த தென்றல்….. சின்ன சின்ன வண்ணக்குயில்….., நிலாவே வா…. என்று மூன்று பாடலுமே டிவைன். 

MounaRagam Click to see 150 All-Time Best Cult Tamil Films. URL:  https://t.co/OmgBTqiLxj #Mohan #Revathi #Karthik #ManiRatnam  #GVenkateswaran #GVFilms #BehindwoodsCult 

இத்திரைப்படம் அப்படியொன்றும் சிக்கலானதோ, அதிக பாத்திரங்களை உள்ளடக்கியதோ, என்னாகும் என்று இருப்புக்கொள்ளாமல் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்க தூண்டும் கதையுமல்ல. ஒரு சாதாரண கதை. திவ்யா (ரேவதி) எனும் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு நகர்கின்றது கதை. திருமணத்திற்கு முன் சமூக போராளியான மனோவினை சண்டையொன்றில் சந்திக்கின்றாள். மனோ திருடன் என நினைத்து பொலிஸாரிடம் அடையாள அணிவகுப்பில் காட்டிக்கொடுத்து விடுகின்றாள் பின்னர் இதன் மறுபக்கம் தெரிந்து தானே முன்னின்று ஜாமீனில் மனோவை வெளியே எடுக்கின்றாள். இப்படியே நீள்கின்ற உறவு காதலாகி இரகசியமாக பதிவுத்திருமணம் செய்யுமளவிற்கு வந்து நிற்கின்றது. பதிவு திருமணத்திற்காக காத்திருக்கும் போது கைதாகிய மனோ தன் நிலையை திவ்யாவிடம் சொல்ல தப்பியோடி வரும் போது சுட்டுக்கொல்லப்பட்டுவிடுகின்றான். இச்சம்பவங்களால் திருமணத்தினை வெறுக்கின்ற திவ்யா தந்தையின் சுகவீனத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கின்றாள். விருப்பமின்றி சந்திரகுமாருடன் திருமணம் நடந்தேறிவிடுகின்றது. எப்படி தம்பதியினரிடையே இக்கடந்தகால வாழ்க்கை, திருமண வாழ்க்கையை ஏற்க முடியாத நிலை விவாகரத்து வரை போய்விடுகின்றது என்பதும் அதன் பின் என்னாகியது என்பதுமே கதை.

 இத்திரைப்படம் வெளிவந்த போது நான் பிறந்திருக்கவில்லை. ஆனால் பருவ வயதில் வீட்டில் இப்படம் பார்க்கப்பட்ட போது அதெப்படி மௌனத்தில் மொழியற்ற நிலையில் இராகம் இருக்க கூடும் என்ற கேள்வியை கடந்திருக்கின்றேன். பின்னர் பல்கலைக்கழக காலத்தில் “மௌனராகம்” மோகன் மாதிரி கூட நிதானமான, புரிந்துணர்வுள்ள ஆணொருவர் இருப்பாரா என்பது கேள்வியாகவிருந்தது. என்னைப் போன்ற பெண்கள் மௌனராக மோகனை இரசிப்பதற்கு இரு காரணங்கள் இருக்ககூடும் என நினைக்கின்றேன். ஒன்று சமூகத்தில் உண்மையிலேயே இல்லாத ஹீரோயிசம் என்ற பெயரில் அடிதடி , சண்டை, பெண்ணொருவர் பாதிக்கப்படும் போது பாய்ந்தோடி வந்து காப்பாற்றுவது என்றில்லாமல் நூற்றில் ஒருவராக சாதாரணமாக இருக்கின்ற மோகன், அடுத்தது தாத்தா வயதில் மேக்கப்போட்டு விக் வைத்து “இளங்குமரனாக” நடிக்கும் நடிகர்கள் நடுவில் கன்னத்தில் காணப்படும் பருக்களுடன் யதார்த்தமாக இருக்கும் மோகன். 
இப்படத்தில் எனக்குப்பிடித்த கதை வசனங்களும் இத்திரைப்படத்தினை அடிக்கடி பார்க்க வைப்பதற்கான இன்னுமொரு காரணம். 

நமக்குத் திருமணமாகி உனக்கு எதுவுமே வாங்கித்தரவில்லை. என்ன வேண்டும் என்றாலும் கேளு…”
என்ன கேட்டாலும் வாங்கித்தருவீங்களா…?
நிச்சயமாக….
அப்போ விவாகரத்து வாங்கி தருவீங்களா…?


கையை விட்டுட்டு பேசுங்கள்…
ஏன் தொடுவது பிடிக்கலயா……?
நீங்கள் தொட்டால் கம்பளிப்பூச்சி ஊர்வது போலிருக்கு…..


ஏன் நான் போட்ட Coffee குடிக்க மாட்டீங்களா…?
இன்றைக்கு நீ தாறதை குடித்தால் பழகிடும். ஒரு வருசத்திற்கு பின் நீ போய்விட்டால் யார் போட்டுத்தருவார்கள்…? 

Mouna Ragam (1986)

இப்படி இருவரும் வாய்த்தர்க்கம் செய்துகொள்ளும் இடங்களில் வருகின்ற வசனங்கள் குறுகியவை என்றாலும் அர்த்தம் நிறைந்தவையாகவிருக்கும். இந்த மௌனராகத்தில் கதை நகர்வாகட்டும். பாத்திரங்களது உள்ளக மாற்றங்களாகட்டும் மிகவும் அழகாக செதுக்கப்பட்டிருக்கும். மணிரத்தினத்திற்கு இது மைல்கல்லாக அமைந்ததற்கு இதுவும் ஓரு காரணம். 
எனக்கு இத்திரைப்படத்தின் குறையாக தெரிவது இரு விடயங்கள் தான். ஒன்று விவாகரத்திற்கு விண்ணப்பிக்கும் வரையான திருமணமாகியதிலிருந்து ஏழு நாட்களுக்கும் விண்ணப்பித்த பின்னரான ஓர வருடத்திலுமான சம்பவங்கள் ஏறக்குறைய ஒரே நீளத்திலேயே படமாக்கப்பட்டிருக்கும். விவாகரத்திற்கு விண்ணப்பித்ததன் பின்னரான ஒரு வருட இடைவெளிக்கு இன்னும் சில காட்சிகளை இணைத்திருக்கலாம். அடுத்த விடயம் “Killing Dears!” எனும் தியறி. இது நம்முடைய தமிழ்திரையுலகில் வழமையாகவுள்ளதொரு விடயம். விருப்பத்திற்குறியவர்களை நாம் சாகடிக்க விரும்புவதில்லை. ஆனால் இது யதார்த்தத்திலும் சேர்த்தியில்லை. எத்தனை படங்களில் தான் புகையிர நிலையத்திலும், விமான நிலையத்திலும் சேருவது. இது நிஜ வாழ்வில் சாத்தியமா? அப்படியென்றால் தான் நம்மிடையே இத்தனை விவாகரத்துக்கள் வந்திருக்குமா என்ன…? 

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் கதாபாத்திரங்களின் பொருந்திணைவு. குழந்தை போன்ற குணமுடைய திவ்யா, வற்புறுத்தி பணிய வைக்கின்ற மனோ, எதையும் பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் அணுகுகின்ற சந்திரகுமார். இணையர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிர்மறையானவராக இருந்தாலெயே பொருந்திப்போவதுண்டு.. இது தான் வாழ்விலும். ஒரே தொழில், ஒரே குணம், இயல்பு, இரசனை உடையவர்களைப் பாருங்கள். எப்போதும் முட்டிக்கொண்;டேயிருப்பார்கள். ஆனால் ஊருக்கெல்லாம் முரடன் குழந்தைத்தன்மையுடவளிடம் பணிந்து போவான். ஆர்ப்பாட்டமான இயல்புடைய பெண்ணுடன் முதிர்ச்சியான ஒருவர் அணுசரித்துப்போவார். சும்மாவா விஞ்ஞானம் சொல்கின்றது ஒத்த முனைகள் தள்ள எதிர் முனைகள் தானே கவரப்படுவதுண்டு என. கதை, பாத்திரங்கள், வசனம், இசை தாண்டியும் இப்படத்துடன் நான் ஒன்றிக்க இன்னுமொரு காரணமுண்டு.

நிலாவே வா… பாடல் எனக்கு மிகவும் பிடித்ததொரு பாடல். ஏப்போதும் என் பாடல் வரிசையில் இதற்கு இடமுண்டு. இந்தப்பாடலை என்னுடைய மூத்த சகோதரனுக்கும் பிடிக்கும். நாம் சுற்றுலா செல்லும் போது பெரும்பாலும் பாட்டுக்குப்பாட்டு பாடுவதுண்டு. இதில் நிச்சயம் அண்ணா இந்தப்பாடலை பாடியே ஆகுவார். ஒரு வகையில் பார்த்தால் அவரும் இந்த மௌனராக மோகன் போல் தான். எதையும் முதிர்ச்சியுடன், ஆர்ப்பாட்டம் இன்றி அணுகுவார். இந்தக்காரணங்களுக்காகவே இப்பாடலை மிக…மிக பிடிக்கும். வரிகளும் தான். இதைப்படித்து முடிக்கும் போது எனக்காக நீங்களும் இப்பாடலை இன்னுமொரு தடவை கேட்டுப்பாருங்களேன். SPB பாடலை பாடியிருப்பார். வரிகள் வாலி. கன்னத்துப் பருக்களுடனும் வெள்மையான குருத்தாவிலும் வருகின்ற மோகன் அப்படியொரு அபாரம். ரேவதியும் கறுப்புப்புடவையில் குழந்தை முகத்துடன் அவ்வளவு அழகாயிருப்பார். இரவு நேர காட்சிகள் இன்னும் அழகாக்கின்றது.... 

https://www.youtube.com/watch?v=xMI_MhrYmSI&list=RDxMI_MhrYmSI&start_radio=1






அடிவழிச்சப்பம்

The Complete Guide to Sri Lankan Hoppers - Experience Travel Group 
உணவினை பலவிதமாக சாப்பிடலாம் என்பதற்கு அப்பம் நல்லதொரு உதாரணம். பால் விட்டு பாலப்பம், முட்டை போட்டு முட்டப்பம், சக்கரை வைத்து சக்கரையப்பம் எதுவுமே போடாமல் வெறும் அப்பம் என்று முன்னர் பல முறைகளில் அப்பம் சாப்பிட்டிருப்பீர்கள். இப்போது புதிதாகவும் பல வந்துவிட்டன. சொக்கலேட்டை உருக்கி போட்டு சொக்கலேட் அப்பம், இறைச்சி வகைகளை பிய்த்து வெங்காயத்துடன் கலந்து உறைப்பும் போட்டு பிரட்டிய அடப்பத்தினை அப்பம் மேல் போட்டு இறைச்சியப்பம் , மில்க்மெயிட் அப்பம் என்று அப்பமும் காலத்திற்கேற்ப மாறுபட்டும் நவீனமடைந்தும் கொண்டிருக்கின்றது. ஆனால் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் நான்கு அப்பங்களின் வகை தான் எனக்குத் தெரிந்திருந்தது. 

இப்போது அப்பத்திற்கான மா கூட பக்கற்றுக்களில் வந்துவிட்டன. வாங்கி வந்து தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்தால் நொதித்துவிடும். எடுத்து வாயு அடுப்பில் வைத்து இறக்கினால் போதும். அப்பம் ரெடி ஆனால் சுவைதான் கொஞ்சமுண்டு மதி…. முன்னரெல்லாம் அப்பத்திற்கான பதம் எடுப்பதும் அதனை சுட்டு அடுக்குவதும் வீடுகளில் இடம்பெறுகின்ற பெரிய்ய்ய்யதொரு சம்பவம். இதனால் தான் பெரும்பாலும் வீடுகளில் அப்பம் பெரும் பாலும் சுடப்படாமல் கடைகளில் வாங்கப்படுவதுண்டு. நான் சொல்கின்ற பத்துப்பதினைந்து வருடங்களுக்கு முன்னரான காலப்பகுதியில் அப்பம் சுடுவதற்கென்றே ஊரில் ஒருசிலர் இருப்பார்கள். அறிந்த வரை பெண்கள் தான். இதனை தம்முடைய சுயதொழிலாகவும் செய்து வந்துள்ளார்கள். 

பச்சரிசியை சில மணிநேரங்கள் நீரில் ஊறவைத்து இளகிய பின் அதனை இடித்து மாவாக்கி அரிந்தெடுப்பார்கள். அரித்த மாவினுள் இளம் தென்னங்கள்ளு ஊற்றி புளிக்க வைப்பார்கள். பெரும்பாலும் இன்று மாலை புளிக்க வைத்தால் காலையில் பதம் சரியாகவிருக்கும். தேங்காய் துருவி முதல் பாலை நல்ல கெட்டியாக எடுத்துக்கொள்வார்கள். இனி விறகடுப்பை பற்றவைத்து அதில் பழக்கப்படுத்திய அப்பச்சட்டியை வைத்து மாவை ஊற்றி சற்று வெந்ததும் நடுவில் கெட்டிப்பாலினை அகப்பையால் ஊற்றி ஒரு நிமிடம் மூடி விடுவார்கள். பின்னர் இறக்கி சீனி தூவி இளம் சூட்டுடன் சாப்பிடலாம். அல்லது பாலினை ஊற்றும் போது சக்கரைத்துண்டுகளையும் போட்டு மூடினால் அதுவும் உருகி சாப்பிட நன்றாகவிருக்கும். அல்லது முட்டப்பம் வேண்டியவர்கள் பாலுக்குப்பதிலாக முட்டையை உடைத்து போட்டு மேலாக சற்று உப்பும் மிளகுத்தூளும் தூவியும் சாப்பிடலாம். அல்லது வெறும் அப்பம் விரும்பிகள் இருந்தால் வெங்காயத்தினை நன்றாக அரிந்து மாசியுடனும் சம்பள் தூளுடனும் போட்டு இடித்து சுர் என்று புளிவிட்டு பிசைந்து எடுத்த கட்டச்சம்பளுடன் சாப்பிடுவார்கள். 

egghopper
முட்டப்பம்

நான் சிறுமியாக இருக்கும் காலத்தில் என்னுடைய வீட்டில் அனைவரும் வேலைக்குச்செல்பவர்கள். எனவே அப்பம் செய்வதற்கான நேரங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை அல்லது மெனக்கெட நேரமிருப்பதில்லை. எனவே அப்பம் என்றால் எனக்கு எதலின் அன்றி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு. எம்முடைய வீட்டிலிருந்து இருபது வீடு தள்ளிதான் அவரின் வீடு அமைந்திருந்தது. தினமும் காலையில் அப்பம் சுடுவதும் மாலையில் இடியப்பம் அவித்துக்கொடுப்பதும் தான் அவரது வருமானத்திற்கான வழி. வார நாட்களில் என்னுடைய வீடு அல்லோலகல்லோலப்படுவதால் வார இறுதியில் அதுவும் பெரும்பாலும் சனிக்கிழமை காலையில் எதலின் அன்றியின் அப்பம் தான் எம் காலை உணவு. அவரிடம் போய் அப்பம் வாங்கும் பொறுப்பிற்கு வீட்டால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் நானும் தம்பியும். காலையில் ஆறு மணிக்கு வீட்டில் தரப்படுகின்ற நாட்டுக்கோழி முட்டைகளையும் எடுத்துக்கிளம்பினால் திரும்ப எப்படியும் ஒரு மணி நேரமாவதாகும். நான் எதலின் அன்றி என்றால் எந்தளவிற்கு அப்பம் ஞாபகம் வருகின்றதோ அதேயளவு அவர் அமர்ந்திருக்கும் பாங்கும் அவர் முன்னால் எப்போதும் எரிந்துகொண்டிருக்கின்ற அடுப்பினையும் தவிர்த்து என்னால் அவரை கற்பனை செய்ய முடியாது. காணும் போதெல்லாம் குத்துக்காலிட்டு இடுப்பில் பாவாடை, மேற்சட்டையுடன் தான் அமர்ந்திருப்பார். அவர் எழுப்பி காசினை உயரமான அடுக்கில் இருக்கும் பேணிக்குள் வைப்பதை மட்டும் தான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர் வேறு வேலைகளை எப்போது செய்வாரோ என்ற கேள்விக்கான பதில் இன்று வரை தெரியாது. 

வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட ஐந்தாறு முட்டைகள் அதிகமாகவே உமியில் வைத்து வீட்டிலுள்ளவர்கள் எம் கையில் தருவார்கள். அத்துடன் எத்ததை பாலப்ப சோடிகள் வேண்டிவர வேண்டும் என்றும் சொல்லப்படும். தமக்கையும் தம்பியும் எம்முடைய குட்டி சைக்கிள்களில் வெளிக்கிடுவது ஏதோ பெரிய எடுவையுடன் தான் ஆரம்பிக்கும். அங்கு போனால் எதலின் அன்றியின் வீட்டில் ஏழுமலைகளை கடப்பது போது இரு தடைகளை தாண்ட வேண்டும். ஒன்று அவர் வீட்டு வாசலில் சர்வகாலமும் யாரையாவது முறைத்தக்கொண்டிருக்கும் அவர்கள் வீட்டு நாய். யாரையும் கடித்ததாக நானறியேன். ஆனால் அது பல்லைக்காட்டுவது ஏதோ கடிக்க வருவது போன்றிருக்கும். யாருக்குத்தெரியும் அதன் சிரிப்பே அப்படித்தானோ தெரியாது. சூ...சூ... என்று எத்தனம் காட்டி இவரை தாண்டிவிட்டால் அடுத்த தடை அவர்களது மகன். அந்த நாட்களில் ஆட்டிசம் குறித்த புரிதல் இல்லை. எனவே அந்த அண்ணாவைப்பார்த்தால் பயங்கர பயம். சிறுவதில் இவரது பெயரைச்சொல்லி பயப்படுத்தி சோறு ஊட்டியதன் பிரதிபலிப்பாகவும் இருக்க கூடும். கதிரையில் சாதுவாக அமர்ந்தபடி இருக்கும் இவர் எம்மை எதுவும் செய்யாவிட்டாலும் அவரைத்தாண்டி முடியும் வரை மனதுள் அப்படியொரு பீதி எமக்கு. பெரும்பாலும் தம்பி வீதியிலேயே நின்று விடுவான். நூன் தான் இந்த வியூகங்களை பிளந்துகொண்டு செல்லும் அபிமன்யு நான் தான். போய் எதிலின் அன்றிக்கும் அப்பச்சட்டியுள்ள அடுப்பிற்கும் அருகில் அமர்ந்து முட்டைகளையும் கொடுத்துவிட்டு கதைத்துக்கொண்டிருப்பது சுவாரஸ்யமான விடயம்.

இந்த அப்பம் செய்பவர்களுக்கு தம் சொத்தில் பங்கு கேட்டால் கூட கோபம் வராது ஆனால் அப்பத்திற்கு பழக்கப்படுத்தப்பட்ட சட்டியை யாராவது தொட்டால் போதும்.  எதிலின் அன்றிக்கும் பல தடவை இவ்வாறு தலைப்கொதி வருவதை பார்த்திருக்கின்றேன். மூன்று சட்டிகள் வைத்திருப்பார். மேலே தணல் வைப்பதற்கென மூன்று மண் சட்டிகள் பிரிம்பாக இருக்கும். சுடான சட்டியில் அப்பக்கலவையை ஊற்றும் போதும் கேட்கும் சுர் என்ற சத்தம் கேட்கும் போதே பசிக்க ஆரம்பித்துவிடும். இனி அவர் அப்பம் சுடும் வரையில் பள்ளிக்கதை கேட்பார், பாட்டுப்பாட சொல்வார். மிக முக்கியமானது ஒரு பாலப்பமும் பாட்டுப்பாடி முடிய தருவார். ஒரு உணவை ஆறவைத்து சாப்பிடும் போது ஒரு சுவை என்றால் இளம் சூட்டில் சாப்பிடுவது ஒருவித சுவை. அதையே சுடச்சுட ஊதிச்சாப்பிடுவது வேற சுவை. இந்த பாலப்பமும் இதில் தான் சேர்த்தி. சுட்டி பாலப்பங்களை நாம் கொண்டுபோன பாத்திரத்தின் அடியில் வாழையிலை பரப்பி சோடி சோடியாக அடுக்குவார். இறுதியாகத்தான் முட்டை அப்பங்கள் சுட ஆரம்பிப்பார். முட்டையப்பங்களுக்கு சோடி எப்போதுவே வெறும் அப்பங்கள் தான். கொண்டு போன நாட்டு முட்டைகளில் இரண்டு அல்லது மூன்று மீதியாக இருக்கும் போது அதுவைர சுட்ட அப்பங்களை தம்பியிடம் கொடுத்து வீட்டுக்கனுப்பி விடுவேன். இதில் ஒரு தந்திரமும் இருந்தது. 

எல்லா அப்பங்களும் சுட்ட பின்னர் இறுதியாக மீந்திருக்கும் கப்பிகள், சக்கரை, பால் அனைத்தையும் கலந்து இறுதியாகவொரு அப்பம் சுடப்படும். சாதாரண அப்பங்களிலும் விட சற்று தடிப்பாகவிருக்கும். இதற்குத்தான் அடிவழிச்சப்பம் என்று பெயர். பெயரிலேயே பொருள் இருக்கின்றது. மீந்த அனைத்தையும் அடிவரை வழித்து சுடப்படும் இறுதி அப்பம். இதற்கான மௌசே வேற… கலவையை ஊற்றியவுடன் அடுப்பை முழுவதும் அனைத்துவிடுவார். மெல்லிய தணலில் தான் வேகும் இந்த அடிவழிச்சப்பம். சற்று நேரமாகும். இறக்கியவுடன் ஒரு துண்டை என்கையில் வாழையிலையில் வைத்து தருவார். மீதியையும் பொட்டலாம கட்டி எனக்கே தந்துவிடுவார். பிட்டுக்கு மண் சுமந்த சிவனார் மாதிரி பாடல்பாடி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் மாதிரி நான் எதலின் அன்றியிடம்  பாட்டுப்பாடி பெறுவது இது தான் 

கடைசியாக சுட்ட இரண்டு மூன்று முட்டையப்பங்களுடன் இதனையும் வைத்து குட்டிச்சைக்கிளில் வீடு திரும்பிய பின் ஆரம்பிக்கும் என் கனகாட்டங்கள். வீட்டுக்குள் வந்து கதவை சாத்துகின்றேனோ இல்லையோ யாருக்கு வேணும் இந்த அப்பம் என்று கூவுவதில் தொடங்கும் என் அழிச்சாட்டியம். இனி இதனை வைத்து பேரம் பேசி, ஆறவைத்து இறுதியில் எல்லோருக்கும் சிறு சிறு துண்டுகள் கொடுத்து சாப்பிடுவதில் இருக்கின்ற சந்தோசம் வேறெதிலும் இருக்காது. எப்படியும் எதிலின் அன்றியிடம் போய் வருகின்ற இடைவெளியில் வீட்டில் கட்டசம்பள் இடிக்கப்பட்டிருக்கும். முதல் நாள் மீந்த குழம்பு இருந்தால் அதனையும் பொறுபொறுக்க சூடாக்கி அப்பத்துடன் தொட்டுச்சாப்பிட்டால் அன்றைய நாள் நிறைந்துவிடும். என்னவொரு பிரச்சினையென்றால் அப்பம் சாப்பிட்டால் நல்லா நித்திரை தூங்கும் என்பது தானது. 

இப்போதெல்லாம் அரை மணியில் அப்பம் செய்திட முடியும், நாட்டு முட்டைக்குப்பதிலாக லெகோன் முட்டை வந்துவிட்டது. என்ன தான் சொன்னாலும் அந்தக்காலத்தில் உணவில் சத்துக்கள் இருந்தன உணவு நிறைவாகவிருந்தது. ஒவ்வொரு உணவிற்குப்பின்னும் நினைவுகள் இருந்தன... அன்பான நபர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்று எல்லாமே கலப்படமாகிவிட்டது உணவு மட்டுமல்ல அன்பும் கூட 




அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து……08

 

 Feb 07th - Rose Day:  Expression on Admiration  

Feb 08th - Propose Day:  Sharing feelings and Commitment 

Feb 09th - Chocolate Day:  Symbol of Joy  

Feb 10th - Teddy Day:  Gesture of warmth and care

Feb 11th - Promise Day:  Focus on trust and Intention  

Feb 12th - Hug Day:  Emotional closeness and Reassurance 

Feb 13th - Kiss Day: Expression of affection 

Feb 14th - Valentine’s Day: Celebration of love and companionship 

உலகத்தில் எவ்வளவோ நினைவுகூறல் நாட்களுண்டு. ஆனால் காதலர் தினம் போன்று பரந்தளவில் கொண்டாடப்படுகின்ற தினம் ஏதாவது இதுவரை உண்டா? இது ஒருவகையில் வர்த்தரீதியான நிகழ்ச்சி நிரலும் கூட. ஆனால் சில விடயங்களின் பின்னால் எந்த நிகழ்ச்சிசிரல் இருந்தாலும் அதில் உணர்வுரீதியானதொரு விடயம் இருக்குமென்றால் அது நல்லதே. ஆனால் பாருங்கள் “LOVE” என்பதை யார் நேரடி மொழிபெயர்ப்பாக “காதலர் தினம்” என்று மொழிபெயர்த்தார்களோ தெரியவில்லை நம்மில் பலரும் இதனை நாம் ஆண்- பெண் காதலுக்கான நாளாக மட்டும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இதனை "அன்பு நாள்” என்று தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் அன்பு என்புத காதலுடன், பாசம், நட்பு, ஜீவகாருண்யம், கருணை என நேசித்தலின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதொன்றாகவுள்ளது.

Celebrating Love on Valentine's Day: A Guide to Showing Affection | Humans 

அன்பு மனதிலிருந்தால் பொதும் என்பதெல்லாம் வெறும் பம்மாத்துக்கதை. அன்பை நமக்கு வெளிப்படுத்த தெரிய வேண்டும். இன்னொரு விதமாக பார்த்தால் அன்பு மனதில் இருந்தால் ஆத ஏதாவதொரு வடிவில் வெளிப்பட்டே ஆகும். ஆன்பையும் கர்ப்பத்தினையும் மறைத்திட முடியாது. சரி எப்படி அதை வெளிக்காட்டுவது…..? வார்த்ததைகளில் காட்டலாம், சிறு சிறு செயல்களில் காட்டலாம், அணைப்பு, முத்தம், பரிசு என வெளிக்காட்டலாம், பின் நின்று ஒருவரை வழிநடாத்துவதில் காட்டலாம், தூரத்தில் நின்று அவர்கள் கூட அறியாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். குறித்த நபரிடம் வெளிப்படையாகவிருக்கலாம், விடயங்களை பகிர்வதன் மூலம், ஏன் கண்ணீர் டூலம் கூட அன்பு சட்டென்று வெளிப்பட்டு விடுகின்றுத. இன்னுமொரு வழியிலும் அன்பை காட்டலாம். அது “விலகல்”. நம்மை ஒருவருக்கு பிடிக்கவில்லை, நம் அருகாமை அவருக்கு பிடிக்கவில்லை, அல்லது அவருக்கு நம்மை விட இன்னுமொருவரை பிடித்திருக்கென்றால்; அவரை காயப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், அல்லோலகல்லோலப்படுத்தாமல் விலகுவது. இது ஒருவகையில் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடும் கூட. 

அனன்யாவின் நாட்குறிப்பிலிருந்து…….

பக்கம்: 1690

இனிய நாட்குறிப்பே….
சிலநேரங்களில் இந்த விதியென்பது என்னிடம் என்ன சொல்ல வருகின்றதென்பது எனக்கு புரிவதேயில்லை. இன்று “ அன்பின் தினம்” வழமை போன்று சில நண்பர்களின் வேண்டுகோள், அன்புத்தொல்லைகள், அரியண்டங்கள் என தான் என் நாட்கள் கடந்துசென்று கொண்டிருந்தது. திடீரென்று மதியமளவில் வாகனமொன்று சடார் என்று வந்து நிற்க எட்டிப்பார்த்தால் நிச்சயம் செய்யப்பட்டவரும் அவர் குடும்பமும் வந்திருந்தார்கள். இவர் எப்போது நாட்டிற்கு வந்தார்….?

என்ன தான் கடுப்பிருந்தாலும் வீடு வரை வந்தவர்களை வரவேற்றாகத்தானே வேண்டும். பண்பாடு அதுதானே… அமர வைத்தாயிட்டு…. மேசை முழுவதும் பூக்கள், பரிசுகள் என ஏராளமாக நிரம்பிக்கிடக்கின்றன. தான் இன்றைய நாள் என்னை பார்க்க வேண்டுமென்றே தன் வேலைகளை ஒத்திப்போட்டு, நாடு கடந்து வந்ததாக என் அம்மாவிடம் அவர் அம்மாவும் அவரும் பல தடவை கூறுவதைக்கேட்டேன்.

அதெப்படி நான் அமைதியாக சகித்துக்கொண்டு மனதால் வாழ்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் வராத காதல் நான் வேண்டாம் என்று தூக்கியெறிந்த பின்னர் வந்திருக்கின்றுத? அருகில் நிற்கும் போது ஒதுக்கிட முடியாத சில நிமிடங்கள் எப்படி இப்போது நாள் கணக்கில் நீண்டிருக்கின்றுத.? ஒரே நாட்டில் அருகருகான நகரத்தில் நாம் படிக்கும் போது ஓரு மணிநேரம் ஒதுக்கி வந்து என்னை பார்க்க வேண்டும் என்று துடிக்காத இதயம் இப்போது பல மைல் கடந்து வந்து என்னை பார்க்க வைக்க எது நெட்டித்தள்ளியிருக்கும்…..? தனியே பேச வேண்டும் என்றார். அட இது கூட முதல் தடவை தான்.

தனியே வந்ததும் முதல் கேட்ட கேள்வி “ யாருடன் நின்று இன்ஸ்டாவில் படம் போட்டுள்ளாய்…?” என்பதாக இருந்துத. என் நண்பேன் என்றேன் நான். 

நண்பனின் தோளில் சாய்ந்து தான் போட வேண்டுமா….? அதுவும் பொதுவில் ஏன் போட்டோ போட வேண்டும்?

"நீங்கள் தானே சொன்னீர்கள் நான் பட்டிக்காடு மாதிரியிருக்கின்றேன் என்று….. அதனால் தான் என் நாகரீகத்தினை காட்ட போட்டேன். உங்கள் நண்பன் உங்கள் வருங்கால மனைவிக்கு முத்தம் தருவது நாகரீகத்தில் சேர்த்தியென்றால் இதுவும் அதனுள் அடங்கும்…. " இது நான்..

“தயவுசெய்து இப்படியான விசர்தனங்கள் இனிமேல் வேண்டாம்…”

“விசர்தனமா… நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நடுவில் கத்தி.., அதனை வைத்து ஒருவன் எனக்கு அழைப்பு விடுத்த போது என்ன சொன்னீர்கள்…. இதெல்லாம் இப்போது சகஜம் என்று … து போல் தான் இதுவும்… அவர் என் நண்பர், இருவரும் பாடல் ஒன்றின் காட்சியில் நடிக்கும் போது எடுத்ததை போட்டேன்…” 

 “ஓ நான் பயந்திட்டேன்….."
ஆக இவ்வளளவும் இந்த பயத்தில் தானா…. சிரித்துவிட்டேன் நான். ஆனாலும் இறுதியாக சொல்லிவிட்டேன் என் முடிவில் மாற்றமில்லை என்று. கோபமாக கத்தினார். “என்ன விலை கொடுத்தாவது உன்னை வாங்குவேன்…” என்று இறுதியாக உறுமினார். இப்போதும் விலை தானா….? “என்னால் நீயில்லாமல் இருக்க முடியாது என்றோ…. உன்னை மிஸ் பண்றன் என்றோ சொல்லியிருக்கலாம்… வானிலை மாறியிருக்கும்.

இறுதியாக போகும் போது “ என்னைப்போன்ற அல்பா ஆண் கிடைக்க மாட்டான். நாம் இருவரும் சேர்ந்தால் நமக்குள் ஈகோ வராது. இன்னொருவனால் உன் உயரங்களுடன் உன்னை ஏற்க முடியாது” சொல்லிவிட்டு போய்விட்டார். 

அவர் குடும்பம் விடைபெற்று இந்நிமிடம் வரையில் ஐந்து மணிநேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை மணிநேரங்களில் நான் இரு விடயங்களை நன்றாக புரிந்திருக்கின்றேன். ஒன்று நம் நிச்சயார்த்தம் நிறுத்தப்பட்டால் அவருக்கும் எனக்குமான பிரிவு சாதாரணமாக இருக்காது. அது இரு சக்திகளுக்கான மோதலாக இருக்கும். இதற்கான விளைவுகளை என் வருங்கால துணைவர் உட்பட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இரண்டாவது இந்த நிச்சயார்த்தம் எனக்கும் ரு  Toxic ஆன ஆளுக்கும் நடந்திருக்கின்றது. இவர் எண்ணம் நேசிப்பதல்ல என்னை அடைவது… அம்மா இப்போதே பயப்பட ஆரம்பித்துவிட்டார். 

ஆனால் இதில் பல முரண்நகையுண்டு. அநேக இளவரசிகள் இளவரசன்களை விட படைத்தளபதிகளையே நேசித்ததுண்டு. காரணம் தளபதிகளாலேயே மண்ணையும் தனக்கான துணையையும் இறுதிவரை, உயிர்மாயும் வரை உயிராக நேசிக்க முடியும். இளவரசிகள் வேண்டுவது பதவியோ அல்பா ஆணோவல்ல அன்பும் பாதுகாப்பும் மட்டுமே….. நானும் வேண்டுவது! நீ எவ்வளவு உயரமான நீர்வீழ்ச்சியாக இருந்தாலும் நான் நீந்த ஓடையாகித்தானாக வேண்டும், வான் முட்டும் மலையாகவே இருந்தாலும் நான் ஆட மேடையாகித்தானாக வேண்டும்.
குட்நைட் 

பக்கம்: 1710

இனிய டைரியே
இன்றுடன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பி ஐந்து நாளாகின்ற
து. என்னிடம் எத்தனையோ பேர் நேசிப்பதாக சொல்லியிருக்கின்றார்கள், ஆனால் நான் ஒருவரிடம் என் அன்பை சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதாவது நிகழ்ந்துவிடுகின்றது.  எட்டு மாதங்களுக்கு முன்னர் பல வருடங்களின் பின் பயிற்சியில் கண்டிருந்தேன். பயிற்சியின் போதும் சரி பின்னர் ஒரு மாதம் வரையிலும் சரி அவரது முன்னைய வாழ்க்கை உடைந்திருப்பது எனக்கு சத்தியமாக தெரியாது. அறிந்த பின்னர் நான் சந்தோசப்பட்டேனா? கவலைப்பட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. முடிந்த பயிற்சியின் நோட்ஸ் கேட்பதாக பாசாங்கு செய்து குறுஞ்செய்தி அனுப்பி….. பின்னர் எமது நிறுவன நிகழ்வுகளுக்கு வளவாளராக கூப்பிட்டு, ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, நிமிடங்களை சேமித்து…. குட்டுக்கள் வாங்கி…. முதன் முதல் ஓரு ஆணின் கண்களை வரைந்து… “Keeping my distance………” இல் வலி வாங்கி… பல வருடங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் சந்தித்த போது எடுத்த புகைப்படம், தவறிவிழுந்த கைகுட்டையும் பேனையும் , நிகழ்வுகளின் போது கைபட கிறுக்கிய தாள்கள் உட்பட பல சேமிப்புக்கள்……பைத்தியகாரத்தனங்கள்….  

ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை. இது எனக்கு மட்டும் தெரிந்த இரகசியம். ஏப்படி என் அலுவலகத்திலுள்ள வால்களுக்கு தெரிந்துத… பகிடி பண்ணவும் ஆரம்பித்துவிட்டார்கள்…. கண்கள் காட்டிக்கொடுத்திருக்குமோ….? ஏப்படியென்றாலும் இந்தப்பகிடிகள் அவரை காயப்படுத்தக்கூடாது.  ஆனால் ஒன்று என்னால் ஏற்கனவே உடைந்திருக்கும் மனதை காயப்படுத்தவோ… தூக்கியெறியவோ முடியாது. எனக்கு இந்த உறவை நீடிக்கும் போது அல்லுத திருமணம் எனும் பந்தத்திற்குள் கொண்டுவரும் போது எதிர்கொள்ளவுள்ள இழப்புகள், முரண்பாடுகள் குறித்தும் தெரியும். இதனை அங்கும் புரிய வைக்க வேண்டும். உணர்வுகள் விளையாட்டல்ல தானே… நேர்மையும் அறமும் அது தானே இதற்காகத்தான் எமக்கிடையில் இருக்கும் ஓரு அக்காவிடம் சொல்லி உதவிகேட்க போயிருந்தேன். அப்போது தான் இந்த விபத்து என்னை முத்தமிட்டது. 

விபத்தின் முத்தமிடலில் காயம்பட்டு சுயநிலை இழக்கும் முன் என்னை தாங்கிப்பிடித்த , அணைத்துத்தூக்கிய கைகளுக்கு சொந்தகாரனின் முகத்தை அந்த இறுதி நிமிடத்திலும் நிமிர்ந்து பார்த்தேன். இவர் ஏன் இப்படியழுகின்றார். எதற்காக இந்த கண்ணீர்? ஏன் அந்த இறுதிநேர இமை மூடல்களின் முன் பார்த்த கடைசிக்காட்சி இதுதான். சுயநினைவு வர இரு நாட்கள் ஆனது என அம்மா தான் பின்னர் சொன்னார். இமை திறந்த போதும் சுற்றி நின்றவர்கள் நடுவில் அந்த கண்களை நான் மீண்டும் பார்த்தேன். அந்த கண்களின் உணர்வுகளை படிக்கும் சக்தி எனக்கில்லை என தோன்றுகின்றது… 

எனக்கு ஊசேற்றும் போது தாதியர்களை அனுமதிக்காது தாங்களே குத்தும் போது என் பாதியினதும், என் மீதியினதும் கைளில் நடுக்கத்தினை உணர்ந்திருக்கின்றேன். நெருக்கமானவர்களை அணுகும் போது நிபுணர்களே தடுமாறித்தான் போகின்றார்கள். ஆனால் ஊசிப்பயத்தில் நான் அழும் போது அவன் உதடுகள் நடுங்குவதை, பார்வையை திருப்பிக்கொள்வதை இங்கிருந்தே கண்ணாடி சுவரைத்தாண்டியும் என்னால் பார்க்க முடிகின்றது. இவ்வளவு நாட்களும் நம்மருகில் நம்மை நேசிக்கின்றவர் இருந்தும் அவதானிக்க முடியாதளவு இருந்த முட்டாளா நான்? இது என்ன…. எனக்கு உடல் வலியுடன் மனக்குழப்பமாகவும் இருக்கின்றது. 

பக்கம்: 1740 

வணக்கம் நாட்குறிப்பே….
என் வாழ்நாளில் நான் பயணிக்காமல் ஒரே இடத்தில் நின்றிருப்பது இந்த நாட்களில் தான். ஏறத்தாழ 90 நாட்களாகின்றன. இப்போதெல்லாம் மருந்துக்களும் புத்தங்களுமே என் நாட்களை பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றன. கூடவே ஆறு சிறு கரங்கள். இந்த விபத்தில் பல நட்டங்கள், வலிகள், கவலைகள் இருந்தாலும் என் அண்ணா குழந்தைகளின் முகத்தில் அப்படியொரு மகிழ்வை நான் அவதானிக்கின்றேன். முன்பெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கும் போது இவர்களுக்கு உணவூட்டுவதற்கு பெரும்பாடு படவேண்டியிருக்கும். இப்போதெல்லாம் மூவரும் என்னருகில் வந்து சாய்ந்தவாறு குழப்படி செய்யாமல் சாப்பிடுகின்றார்கள். எனக்கும் தங்கள் குட்டிக்கைகளால் ஊட்டிவிடுகின்றார்கள். அருகிலிருந்தே விளையாடுகின்றார்கள், அம்மா அறுவை சிகிச்சை காயங்கள் தாக்கப்பட்டுவிடும் என்று இவர்களை இழுத்துச்சென்றாலும் ஆழது ஆர்ப்பாட்டம் செய்து என்னருகில் வந்து தூங்குகின்றார்கள். என்னறை முழுவதும் விளையாட்டுப்பொருட்கள் தான் இறைந்து கிடக்கின்றன. 

நேற்று தான் என் தொலைபேசியின் அழைப்புக்கள் குறுஞ்செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன். அல்பா ஆணின் தவறவிட்ட அழைப்புக்கள் சில இருந்தன. வீட்டு தொலைபேசியில் ஓரு தடவை பேசியதாக அம்மா சொன்னார். நிபுணர்களுக்கு பேச நேரமிருப்பதில்லை தானே… ஆனால் பணத்தால் வாங்க முடியும்.  என்னை நேசிப்பதாக, சம்மதிக்காவிட்டால் கையறுக்கவுள்ளதாக, நீயில்லை என்றால் நானில்லை என்று சொன்ன ஒருவரிடமிருந்தும் தகவல்கள் இல்லை. காணாமல் போய்விட்டார்கள் போல… மீண்டும் வெளியில் நான் தலைகாட்ட தொடங்கும் இவர்கள் ஓரு தலைக்காதல்கள். நான் நேசித்தவரிடம் இருந்து ம்கும் ஓரு வசனம் கூட இல்லை…. குறைந்த பட்சம் காணவில்லை என்ற பதைபதைப்பு….. ஒருவர் என்றால் தானே ஞாபகம் இருப்பதற்கு….. அன்பு ஓரு இடத்தில் மட்டும் குவிந்திருந்தால் தானே அங்கு இழப்பு குறித்த வருத்தமுண்டாகும்.?  நல்லகாலம் மனதை அந்த அக்காவிடம் கொட்டவில்லை. இப்படியான ஓரு நேர்மையற்ற அன்பிற்கு தானா போராட நினைத்தேன் என்றிருக்கின்றது…… 
ஆனால் ஒருவர் மட்டும் தினமும் காலை வணக்கத்துடன் இடைவிடாமல் தினம் தவறாமல் அனுப்பியிருக்கின்றார். அன்று என்னை வீதியில் அணைத்துத்தூக்கிய கண்களுக்குறியவன் ….. 

குழந்தைகளுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள், கவனிப்புக்களை விட அணைப்பும் அருகாமையும் தேவை என்பதை எப்படி என் கட்டில் நாட்கள் புரியவைக்கின்றதோ அதேயளவு கனதியுடன் நாம் நேசிப்பவர்கள் எல்லாம் நம்மை நேசிப்பவர்கலல்ல என்பதை இந்த விபத்தின் காயங்கள் சொல்கின்றன. சில நேரங்களில் விபத்தும் நல்லதே….. 

பக்கம்: 1750 

இனிய நாட்குறிப்பே,
வருத்தமுள்ளவர்கள் வைத்தியர்கள் உள்ள வீட்டில் இருக்க கூடாது. என்னை என் குடும்பம் பாடாய்படுத்துகின்றது. ஓடிக்கொண்டேயிருக்கும் எனக்கு இது சிறை போன்றிருக்கின்றது. பொழுது போகவில்லை என்று சொன்னதற்காகவே என்னருகில் புத்தகங்களை குவிக்கின்றார்கள். இசை, புத்தகங்கள், குழந்தைகள் என்று நாட்கள் நகர்கின்றன. ஆனால் என் பொறுப்புக்கள் நான் மீளும் நாளுக்காக பல்லிளித்துக்கொண்டிரு
க்கின்றது.  

இன்று காலையில் சுவாரஸ்யமானதொரு விடயம். என்னுடைய கைத்தொலைபேசிக்கு புது இலக்கத்திலிருந்து அல்பா ஆண் குறுஞ்செய்திகளில் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். அவரது அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் என்னுடைய பரதநாட்டிய படம், தன்னுடைய கைத்தொலைபேசியின் முன்படத்தில் உள்ள நான்… தன்னுடைய பேர்சில் தன்னுடைய தாயின் படத்திற்கு அருகில் செருகியிருக்கும் என்னுடைய படம்… நான் எங்கும் நிறைந்துள்ளேனாம் என்று குறுஞ்செய்தி வேறு…. ஏனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை. அருகில் இருக்கும் போது அன்பை காட்டாத நாம், அன்பாக நடாத்தாத நாம் எப்படி இவ்வாறான விடயங்களை காட்டி ஒருவரை அவர்கள்பால் திருப்ப நினைக்கின்றார்கள்…….?   

பக்கம்: 1755 

நாட்குறிப்பே,
இன்று காலையிலேயே உன்னில் கிறுக்குகின்றேன். ஒரு நிச்சயார்த்தத்தில் இருந்து தப்பி அப்பாடா என்று மூச்சு விட முன்னர் அடுத்தவர்கள் எம் வீட்டுக்கதவை தட்டிவிட்டார்கள். இன்னுமொரு உறவு, அதன் நீட்சி தாங்குமளவு என்னுள் திடமில்லை. நான்கு வருடங்கள் குடும்பம் நிச்சயம் செய்த ஒருவருடன் மனரீதியாக வாழ்ந்துவிட்டு சடுதியாக என்னால் தூக்கியெறிய முடியாது. இது ஏறத்தாழ விவாகரத்திற்கு ஒப்பானது. இதில் உடலுறவு மட்டும் தான் இல்லை. இந்த உறவில் மகிழ்வாக உணரவில்லை என்றாலும் உறவு என்பது உறவு தானே. எனக்கு சிந்திக்க நேரம் வேண்டும். என் வருங்கால துணைவராக வர இருப்பவரை எடைபோட சிறிது காலம் வேண்டும். என்னளவில் என் வாழ்க்கை காசை விடவும் காதல் நிறைந்ததாக இருக்க வேண்டும். திருமணம் என்பது கலாசாரம், தாம்பத்தியம் என்கின்ற விடயங்களையும் தாண்டி பொறுப்புக்களை ஏற்றல், சுயமரியாதையை இருவரும் பரஸ்பரம் பேணுதல், கடமைகளை நேசித்தல் என நிறைய விடயங்களை சுமப்பது… 

எனக்குள் என்னவராக வர இருப்பவர் குறித்த எதிர்பார்ப்புக்கள் உண்டு. இது பற்றி நான் இன்று அம்மாவிடமும், அண்ணாக்களிடமும் பேச போகின்றேன். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வாழ்க்கையை தெரிவுசெய்ய முடியாது தானே. சிலர் எப்படியும் வாழலாம் என நினைக்கின்றார்கள் நான் இப்படித்தான் வாழ வேண்டும் என நினைக்கின்றேன்…… 

பக்கம்: 1756 

இனிய டைறி!
இன்றைய நாள் அதிகாலை எழும்பும் போது மனம் பாரமின்றி இருக்கின்றது. முழித்துவிட்டாலும் அருகில் படுத்திருக்கும் பிஞ்சுகள் மூன்றினதும் முகங்களை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். இந்த முகங்களில் எவ்வளவு அமைதி, தெளிவு, ஏதோ கனவு கண்டு இடைக்கிடை உதடுகள் சுழிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றது. குழந்தைகளின் கழுத்தருகில் முகர்ந்து பார்த்திருக்கின்றீர்களா? என்னவொரு மயக்கம் தரும் வாசனையது……. 

நேற்று வீட்டாரிடம் பேசிய பின்னர் கனத்த மௌனம் சில நிமிடங்கள் எம்மை சூழ்ந்திருந்தது. மௌனங்கள் எப்போதும் முக்கியமானதொன்று. தீர்வுகளை, புயல்களை, வன்முறைகளை, ஆழ்ந்த உண்மை இதெல்லாம் வெளிப்படுமுன் இந்த மௌனம் தேவையாகவிருக்கின்றது. அம்மா தான் முதலில் மௌனத்தை உடைத்தார். ஏன் மகள் யாரையாவது விரும்புகின்றாயா என்கின்ற கேள்வியுடன். தெரியவில்லை என்றேன் நான். சொன்ன பின் தான் புரிந்தது இதற்கு ஆம் அல்லது இல்லை தானே பதிலாயிருக்க வேண்டும். அதன் பின் அம்மா எதுவும் பேசவில்லை. 

இரவு தூங்கும் முன்னர் என்னறைக்கு வந்து பேச ஆரம்பித்தார். பொதுவாக எங்கள் முன்னறை தான் அரசமண்டபம். கூடி பேசுவது அங்கு தான். அம்மா தனியாக எம்முடைய அறைக்கு வந்து பேசுகின்றார் என்றால் அம்மா சாணக்கியம் பேச போவதாக அர்த்தம். அம்மா எனக்கு அப்பா  ஸ்தானத்தினை நிரப்பியவள் மட்டுமல்ல என் நல்ல சிநேகிதி… இருவரும் புத்தகங்கள், திரைப்படங்கள் பற்றி விவாதம் பண்ணுவதுண்டு…. என் அனைத்து விடயங்களையும் நான் பகிரும் ஓர் இடம் அம்மா தான். அம்மா நிதானமானவள், கவித்துவமானவள், வீட்டில் இருக்கின்ற நீதிபதி. பிழையென்றால் அது தன் பிள்ளைகள் செய்தாலும் பிழைதான் என வாதிடுபவள். ஏம் மனச்சாட்சியை தட்டுபவள். ம்முள் நிதானத்தினை விதைத்திருப்பவள். நாம் படிக்கும் போது நானும் கூட அமர்ந்து படித்து எம்மையும் தன்னையும் செதுக்கிக்கொண்டவள். நாம் இன்று பேசிக்கொண்டிருக்கின்ற பெண்ணியத்தினையும் சுதந்திரத்தினையும் முற்போக்கினையும் தன் வாழ்க்கையாகவே கொண்டிருப்பவள். என்னுடைய நண்பர்களுக்கும் கூட அம்மா நல்ல நண்பியாக இருக்கின்றாள். அம்மாவிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். மனதில் இருந்த ஏதோவொரு பாரம், அழுத்தம் , சுமை ….. குறைந்ததை உணரமுடிந்தது. அவள் சொன்னதின் சாரம் மட்டும் மறுபடி மறுபடி எனக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது





 

 

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை