கடலன்னை!

பொங்கலிலிருந்து இன்று வரை ஏழு நாடுகளை கடந்துள்ளேன். இப்போதெல்லாம் மனிதர்களுடன் உறவாடுவதை விடவும் இயற்கையுடன் பேசுவது, இரசிப்பது, ஆழ்ந்த வாசிப்பு, எழுத்துக்கள் என்று என் நாட்களை நானே வடிவமைத்திருக்கின்றேன். முன்னரெல்லாம் பொங்கல், நத்தார் என்று பண்டிகைக்காலங்களில் வீட்டில் யாராவது தொலைபேசி பாவித்தாலோ சமூக ஊடகங்களில் மெனக்கெட்டுக்கொண்டிருந்தாலோ உரிமையுடன் கண்டித்து அவர்களை கலைக்கும் நான் தான் இன்று முக்கிய நாட்களில் கூட வீட்டைவிட்டு தூரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றேன். அல்லது கவனத்தினை வர்ண கிறுக்கல்களிலும் எழுத்துக்களிலும் செலவளித்துக் கொண்டிருக்கின்றேன். 

தற்போது தாய்லாந்திற்கு என் இரு ஓவிய நண்பர்களுடன் வந்திருக்கின்றேன். அவர்கள் இருவரும் இம்முறை இங்கிருந்து சில பொருட்களை தத்தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் பயணித்துக்கொண்டும் நபர்களை சந்தித்துக்கொண்டுமிருக்கின்றார்கள். எனக்கு யாரையும் சந்திக்காமல், யாருடனும் பேசாமல் , யாருமே இல்லாத தீவுக்கு போனால் என்ன….. அல்லது செவ்வாய் கிரகம் போன்றதொரு இடத்திற்கு போனால் என்ன என்றிருக்கின்றது. இது ஒருவித விரக்தியான மனநிலை என்பதை தாண்டி எனக்குள் தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த தனிமை வேண்டியிருக்கின்றது. ஆனால் கேட்டவுடன் அல்லது நினைத்தவுடன் கிடைத்து விடுகிறதா இந்த தனிமை….? 

என்னளவில் கடற்கரை என்பது மூன்று நிலைகளை கொண்டது. வானம், கடல், மணல் மூன்றும் படலமாக கோடிட்டதை போன்று காணப்படுகின்றதொரு பரப்பு. மென்நீல வானம், கருநீல கடல், கருமையான நிலம் என்று நிற அழகியலும் அலாதியானது. அதீத இரசனைக்குறியது. முகத்தில் காற்று மோதும், கால்களை நீர் நனைக்கும், உதடுகளில் சற்று உவப்பு சுவை தொட்டுப்போகும். என்னவொரு இரசனைக்குறிய பொழுதிது.மனிதர்களிலும் கடலை நேசிக்கும் மனிதர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் பரந்த அறிவும், மனமும் கொண்டவர்கள் என்பது என் கணிப்பு!

என்னுடைய கனதியான நாட்களுக்கும் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் கடற்கரையின் பங்களிப்பு அளப்பெரியது. என்னுடைய பதின்ம வயதில் எனக்கு வகுப்பெடுத்த வீணையாசிரியர் குரல் நன்றாக இருப்பதால் சங்கீத வகுப்பில் சேரும்படி பணித்திருந்தார். நான் பாடசாலையில் பரதநாட்டியத்தினை தேர்வுக்குறிய பாடமாக எடுத்திருந்ததாலும், அம்மாவின் விருப்பத்தால் நான்கு வயதிலிருந்தே பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்ததாலும் சங்கீதத்தினையும் படிக்க சொன்ன போது  என்னளவில் முடிந்திருக்கவில்லை. வீணை வகுப்பு கூட மாலை ஆறு மணிக்கு பின்னர் அண்ணாவின் துணையுடன் தான் போய் வந்துகொண்டிருந்தேன். அத்துடன் என்னுடைய விளையாட்டு நேரமும் அடிபடும் என்பதால் இந்த புதிய வகுப்பு குறித்து எனக்குள் பெரிதான விருப்பம் இருந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் தான் வீணையாசிரியர் கையாண்டதொரு உத்தி கடற்கரையில் போய் குரல் பயிற்சி செய்வது. காலையில் ஐந்தரைக்கு அம்மா அல்லது வீட்டில் இருப்பவர்கள் கூட்டிப்போய் விடுவதுண்டு. குறிப்பாக வார இறுதி நாட்களில். இவ்வாறு ஆரம்பித்தது தான் கடலுக்கும் எனக்குமான பற்றுதல். முதலில் கரையில் அமர்ந்த படி ஆரம்பித்த பயிற்சி பின்னர் நடந்த படி , அதன் பின்னர் கால்கள் நனைந்த படி என்று நீளத்தொடங்கியது. மட்டக்களப்பார் என்றாலே நீர் என்பது எம்முடன் தொடர்புபட்டிருக்கும். இந்த மட்டக்களப்பாளும் கடலுடன் ஐக்கியமாக ஆரம்பித்ததில் ஆச்சர்யம் இல்லை தானே!

இந்த தொடர்பு எந்தநாட்டிற்கு போனாலும் கடற்கரையை தேடுவதில் என்னை கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. எப்படியாவது பயணிக்கின்ற நாட்டின் (இருந்தால்) கடற்கரைக்கு போய் கால்களை நனைத்தபடி நடந்துகொண்டே பாடலை பாடும் போது ஒருவித அமைதி என்னுள் படர்வதை உணர்ந்திருக்கின்றேன். என்னுடைய திருமணம் கூட பெரிய மண்டபம், ஆட்ம்பரங்கள் இன்றி கடற்கரை மணலில் இயற்கையான பூக்களின் அலங்காரத்துடன் மெல்லிசையுடன் எளிமையாக நடந்தால் நன்றாகவிருக்கும் என்ற கற்பனையும் எனக்குண்டு. 

இந்தப்பயணத்திலும் நண்பர்கள் அந்தப்பக்கம் போக இந்தப்பக்கம் கடற்கரைக்கு புறப்பட்டுவிட்டேன். கடற்கரையில் ஆட்களும் ஆரவாரமுமற்ற ஒதுக்குபுறமான இடத்தில் வந்தமர்தாயிற்று. தொலைபேசியில் நிறுவனங்கள் சார் விடயங்களை என்னுடைய உதவியாளர் ஒலிப்பதிவில் அனுப்பியிருந்தார். மின்னஞ்சல்களும் குவிந்திருந்தன. முக்கியமானவற்றிற்கு பதிலளித்து விட்டு கட்டளைகளையும் அனுப்பிவிட்டு நேரத்தினை பார்த்தால் இதிலேயே ஓரு மணித்தியாலம் கடந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பஸ் நிலையத்தில் இருந்த சிவப்பு நிற பூ மரம் குறித்து பகிடியான பதிவிட்டிருந்தேன். அந்த மரத்தின் இரு கன்றுகள் எம் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தாகவும் அனுப்பியவர் பெயர், விலாசம் இல்லையென்றும் படத்துடன் குறுஞ்செய்தியும் வீட்டிலிருந்து வந்திருந்தது. கடந்த சில மாதங்களாக இவ்வாறான அநாமதேய விடயங்கள் என்னை வந்தடைகின்றன, அநாமதேய முகநூல் கணக்குகளிலிருந்து நட்பழைப்புக்கள் வருகின்றன. யாரிந்த முகமூடி மனிதன் அல்லது மனிதர்கள் என்கின்ற கேள்வியொருபுறம் என்னை சூழ்ந்திருக்கின்றது.  

மாலை நேரம் மங்கி இனி இரவு வருவதற்கான முன்னாயத்தங்களில் வானமிருந்தது. யோசனையுடன் போர்வையில் மல்லாந்து வானத்தை பார்க்க ஆரம்பித்திருந்தேன். சிறுவயதில் இப்படித்தான். வீட்டில் நாம் விளையாடுவதற்கென கடல் மண் மேடையாக பரவப்பட்டிருக்கும். சிலநேரங்களில் நாம் இந்த மண் குவியலில் மல்லாந்து படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதுண்டு. அல்லது விஞ்ஞானத்தில் படித்த துருவ கரடிகள், ஓராயனை மனக்கண்ணில் வரைந்து பார்ப்பதுண்டு. அழகிய நாட்கள் அவை!

நினைவுகளுடன் மல்லாந்து வானத்தை எவ்வளவு நேரம் பார்த்திருந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை , என் மௌன பொழுதை கலைக்க ஆரம்பித்தது பாடல் ஒலி! மென்மையான தாள ஒலி மட்டும் தான்…. இந்த வாத்தியம் நிச்சயம் எனக்கு பரிச்சயமானதில்லை. ஆனால் அந்த மெல்லிசை எனக்கு பிடித்திருந்துத. கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிந்தது. சிறிது நேரம் இசையை மட்டும் கண் மூடி கேட்டுக்கொண்டிருந்தேன். திரும்பிக்கூட பார்க்கவோ அந்த இனிய பொழுதை கலைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை. யாராயிருந்தால் என்ன இசை பிடித்திருந்தது. கொஞ்ச நேரத்தில் சிறு விசும்பல் ஒலி! படுத்திருந்தபடியே தலையை திருப்பிப் பார்த்தேன். சற்று தொலைவில் ஒருவர் தன் கால்களை மடித்து அதில் தலையை புதைத்தபடி அமர்ந்திருப்பது தெரிந்தது. சுற்றி யாருமில்லை. ஆகவே இவர் தான் அழுதிருக்க வேண்டும். அவரது தனிமையில் குறுக்கிடுவது முறையல்ல என்று மறுபடி தலையை திருப்பி அண்ணார்ந்து வானத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சிறு விசும்பல் கொஞ்ச நேரத்தில் அழுகையாக மாற ஆரம்பித்துத. அவர் குலுங்கியழுவது அந்த கருக்கல் நேரத்திலும் தெரிந்தது. ஒருவர் அழும் போது தொடர்ந்தும் வேடிக்கை பார்த்தால் என்ன மனுஷி நான்?

எழுந்து அருகில் போய் பேச ஆரம்பித்தேன். தென்னாபிரிக்காவில் இவர் மருத்துவராக பணிபுகின்றார். இவர் தென்னாபிரிக்காவின் ஆதிகுடிகளில் ஒருவர். இவர்களது சமூகத்தில் படித்து பட்டம்பெற்ற முதலாமவர் இவர் தான். நகரத்தில் வேலை கிடைத்தும் அதனை மறுத்துவிட்டு தன் சமூகத்தினருக்காக மருத்துவமனையொன்றினை கட்டி நடாத்தி வருகின்றார். ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தன் சமூகத்தினை முன்னேற்றுவதற்காக ஆதிவாசி குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம் போன்றவற்றினையும் கற்பித்து வருகின்றார். இரு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்த்தில் இவரது தாய்- தந்தை , இரு சகோதரர்கள், தாத்தா – பாட்டியென முழுக்குடும்பமுமே அழிந்துவிட்டது. இவர் அந்தநேரம் வேறுநாட்டிற்கு ஆய்வுமாநாட்டிற்கு போய் இருந்ததால் தப்பித்துள்ளார். இந்த நாட்கள் அவர்களது இறந்த நினைவு நாட்கள். அங்கிருந்தால் தனக்கு கவலையதிகரிக்கும் என இங்கு வந்திருக்கின்றார். 

வாழ்க்கையில் முதன் முறை என்னருகில் ஓரு ஆண் குலுங்கியழுததை பார்த்திருக்கின்றேன். அவர் சென்றிருந்த மாநாட்டின் தகவல்கள் அடிப்படையில் விசாரித்ததில் அந்த ஆய்வு மாநாட்டிற்கு சகோதரனும் நண்பனும் சென்றிருந்திருக்கின்றார்கள். அவர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இரவாகி விட்டதால் என்னைத்தேடி வந்த இரு நண்பர்களும் இவருடன் நண்பர்களாகிக்கொண்டார்கள். அன்றிரவு எம்முடன் தான் இரவுணவு எடுத்துவிட்டு தன் அறைக்கு திரும்பியிருந்தார். அடுத்த நாள் காலை வணக்கத்துடன் இன்றும் கடற்கரையில் சந்திப்போமா என்று கேட்டனுப்பியிருந்தார். மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தோம். அவர் முன்னெடுக்கின்ற குழந்தைகளுக்கான கல்விச்செயற்பாடுகளை குறித்து நிறைய பேசினார். பேசும் போது அவர் கண்களில் விரிந்த கனவுகளை முன்னாலிருந்து என்னால் உணர முடிந்திருந்தது. தங்களுடைய பாரம்பரிய ஓவிய வர்ணங்கள் உருவாக்கும் விதங்களையும் விபரித்திருந்தார். தான் வரைந்த ஓவியங்களையும் தொலைபேசியில் காட்டினார். அன்றிரவு நாம் நால்வரும் கடந்கரையில் மொழுவர்த்தி இரவினை அனுபவித்திருந்தோம். 

பயணங்கள் நமக்கு புதுப்புது நண்பர்களை அறிமுகம் செய்கின்றது. நாம் எதை விரும்புகின்றோமோ அதனுடன் தொடர்புடையவர்களை இயற்கையே நம்மை நோக்கி அனுப்பி வைக்கின்றது. ஓவியங்களை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வர்ணங்களை தயாரிப்பது குறித்து அறிந்துகொள்ள மட்டுமல்ல அந்த குழந்தைகளை அவர் எப்படியெல்லாம் பராமரிக்கின்றார் என்பதை பார்ப்பதற்காகவும் அங்கு போகவேண்டும். எமது வீதியில் கையேந்தும் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற அவா எனக்குள் ஏற்படுவதுண்டு. கடவுளும் இயற்கையும் இதற்காகத்தான் இவரை அனுப்பி வைத்திருப்பார்கள் போலும்….. அற்புதமான மனிதனை சந்திருக்கின்றேன்.  கடல் என்னுடைய வாழ்வில் பல புள்ளிகளை தீர்மானித்திருக்கின்றது.



No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை