Friday, March 21, 2014

காட்டூன்கள் எதை காட்டுகின்றன?

எனக்கு சின்ன வயசிலிருந்தே பிடித்த விடயங்களில் ஒன்று காட்டூன் பார்ப்பது. இது சின்ன வயசோடயே நின்றிருந்தா பரவாயில்ல… ஆனா இப்ப ஏழு கழுத வயசான பின்னும் (ஒரு கழுதைக்கு என்ன வயசு என்டு கேட்கப்படாது) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பதுண்டு. 

முதல் நல்ல ஞாபகம் ரூபவாஹினியில 6 மணிக்கு ஒரு கோழிக்காட்டூன் போடுவாங்க… ஒரு கோழி தன்னுடைய நாலைந்து குஞ்சுகளை சிறகுக்குள்ள வச்சுக்கொண்டு அதுகள் நித்திரை கொள்வதற்கு கதை சொல்லும். அது காட்டூனாக ஒளிபரப்பாகும்… இந்த 6 மணி காட்டூன் பார்ப்பதற்காகவே சில முன்னாயத்தங்கள் செய்துடுவன். இல்லாட்டி சரியா நான் டீவிக்கு முன்னுக்கு போய் குந்த அம்மா கத்துவா ஹொம்வேக் செய்ய சொல்லி…. ஆதால ஸ்கூல் ஹோம்வேக்குகளை ஸ்கூல் விட்டு  வந்தவுடனேயே மடமடவென்று செய்துவிடுவதுண்டு.

பிறகு கொஞ்சம் வளர தொடங்கின நேரம் தான் சீடிகள் அறிமுகமானது… அந்த நேரத்தில டிவிசன் கிளாஸ்களும் வந்துட்டுது. டிவிசன் முடிஞ்சதும் அம்மா தான் என்ன ஏத்திப்போக வருவா… இனி என்ன பைக்கில ஏறி அம்மாவ கட்டிப்பிடிச்சிட்டு தொணதொணக்க தொடங்குவன்…. கடைசில என்ட அரிப்பு தாங்காம அம்மா காட்டூன் சீடி வாங்கித்தந்ததும்…. இதை பயன்படுத்தி நல்ல மார்க்ஸ் எடுத்தா காட்டூன் சீடி வாங்கித்தருவன் என்டு ப்ளாக்மெயில் பண்ணினதும் வேற கதை…

பிறகு பெரிய வகுப்புகளுக்கு வந்ததால டீவி என்ட பெயரே வீட்டில் உச்சரிக்க முடியாம பொய்ட்டுது… இப்ப பழைய படி என் காட்டுல நல்ல மழை…. விடுதியில் சீடி வாங்கி பார்க்க எனக்கு யாரும் தடையில்லை…. காணாததற்கு யூடியுப்… வீட்ட போனா அங்க இப்ப சுட்டி டீவி இருக்கு…
ஆக என்னுடைய காட்டூன் பற்றிய அறிவு விருத்தியாக தொடங்கிட்டுது… பிங்கு, நிமோ, டொம் அன்ட் ஜெரி, லயன் கிங், பிரின்சஸ் காட்டூன்ஸ்…….. அப்பாடா சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் மோகுலி, சிம்பா போன்ற பல பாத்திரங்கள் என்னுள் பதிந்து போனதுமுண்டு. இந்த காட்டூன்கல பார்க்கும் போது இன்னொரு விடயமும் என் கருத்தினை கவர்ந்தது.. அது குறித்து தான் இந்த பதிவு…

சின்ரெலா (Cinderella) – சின்னம்மாவின் கொடுமைக்கு உள்ளாகி வருகின்ற ஒரு பெண். இளவரசனின் சுயம்வர நிகழ்விற்கு தேவதை ஒன்றின் உதவியுடன் போகின்றாள். நேரம் முடிந்து விரைவாக வரும் போது சப்பாத்து தவறவிடப்படுகிறது. பின்னர் எவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் அந்த இளவரசனை கைப்பிடிக்கின்றாள் என்பதாக அமைகின்றது

ஸ்னோவைட் (snow white)  - மாற்றாந்தாயினால் காட்டுக்கனுப்படுகின்றாள். ஏழு குள்ளர்கள் உதவியுடன் காட்டில் வாழ்கின்றாள். அங்கு அவளை காணுகின்ற இளவரசன் அவளுடன் மையல் கொள்கின்றான். தொடரும் மாற்றாந்தாயின் சூழ்ச்சிகளிலிருந்து எவ்வாறு இளவரசனுடன் இணைகின்றாள் என்பது இதன் சுருக்கம்.

பியூட்டி அன்ட் த பீஸ்ட் (Beauty and the beast) - தேவதையின் சாபத்தினால் அரக்கனாக உருமாறி காட்டில் வசிக்கின்றான் ஓர் இளவரசன். தவறுதலாக காட்டினுள் செல்கின்ற ஒருவர் அவனால் சிறைப்பிடிக்கப்படுகின்றார். அவருக்கான சரீர பிணையாக வந்து அரக்கனிடம் சேருகின்றாள் அவரது பெண். பின்னர் அந்த அரக்கனின் அசிங்கமான தோற்றத்தினையும் தாண்டி எவ்வாறு அவர்களுள் காதல் மலர்ந்த அவன் சாபம் நீங்குகின்றது என்பதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தாஷன் (Tarzan)  - காட்டினுள் தொலைகின்ற ஒரு ஆண் குழந்தை கொரில்லாக்களால் வளர்க்கப்படுகிறது. பல வருடங்களின் பின் அந்த காட்டிற்கு ஆராய்ச்சிக்காக வருகின்ற குழுவிலுள்ள பெண்ணுடன் காதல் மலர்கின்றது. கொரில்லா – மானிடர் என்ற இரு கரைகளை இணைக்கும் பாலமாக தாஷன் எவ்வாறு ஹீரோவாகின்றார் என்பது இதன் கதை

லயன்கிங் (Lion King) - சிம்பா என்கின்ற குட்டி சிங்கம் செய்கின்ற தனது வெகுளித்தனத்தினால் தந்தை உயிரிழந்து விட காட்டின் அரசாட்சியும் கைமாறிவிடுகிறது. இதை எவ்வாறு சிம்பா வளாந்து மீளப்பெறுகிறது என்பது லயன்கிங் என்ற காட்டூன் தொடரின் மையக்கரு
மூலான் (Mulan) - தன்னுடைய தந்தைக்கு பதிலான போரில் பங்கேற்பதற்காக மூலான் என்கின்ற வெகுளிப்பெண் ஆண் வேடமிட்டு போர்களம் போகின்றாள். அங்கு அவள் எவ்வாறு போர்ப்பயிற்சிகள் பெறுகின்றாள்… எதிர்நாட்டுப்படையை முறியடிக்கின்றாhள். இதன் போது ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையின் போது அவள் பெண் என அறியப்படுகின்றாள். இதனால் போர்க்களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றாள். ஆனாலும் தன்னால் தன் தந்தைக்கும் தன் கோத்திரத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்ற மனமுடைவில் வீட்டிற்கு போகாமல் மனம்போன போக்கில் போகின்றாள். இதன் போது முன்னர் முறியடிக்கப்பட்ட எதிரிப்படைகளில் சிலர் மீண்டும் தன் நாட்டிற்கு எதிராக சதி செய்வதை அறிகின்றாள். மீண்டும் அரண்மணைக்குப் போய் தன் நாட்டு வீரர்களை எச்சரிக்கின்றாள். ஆனால் யாரும் காதுகொடுத்து கேட்காத நிலையில் எதிரிகள் நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர். மறுபடியும் அவர்களை எவ்வாறு முறியடித்து வெற்றியுடன் வீடு திரும்புகின்றாள் என்பதாக இக்காட்டூன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல கதைகள்… இவற்றினை மாற்றுப்பார்வையுடன் நோக்குவோமானால் இங்கு பெரும்பாலானவை பெண்ணடிமை கருத்துக்களை விதைப்பதை நாம் உணரலாம்.
சிறுவயதில் விதைக்கப்படுபவை
சிறு பிள்ளைகளுக்கான இந்த காட்டூன் கதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பெரம்பான்மையான இளவரசி கதைகளாகட்டும் ஏன் விலங்குளை வைத்து உருவகப்படுத்திய கதைகளாகட்டும் எந்த கதையாகினும் களங்கள் மாறுகின்ற போதும் கருக்கள் ஒன்றாக தானிருக்கின்றன.

கஸ்டத்தில் இருக்கும் பெண்ணிற்கு ஒரு ஆண் பாத்திரம் ஊடாக தான் விடிவு பிறப்பதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சித்தரிக்கபடுகின்ற பெண் பாத்திரங்கள் அதீத அழகு உடையதாகவும் மென்மையானதாகவும், கண்ணீர் வடிக்கும் பாத்திரங்களாகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆண் பாத்திரங்கள் கம்பீரமானதானதாகவும் அதிபலம் வாய்ந்ததாகவும் மீட்பளிக்கும் ஒரு அதி உன்னத பாத்திரமாகவே காட்டப்படுகின்றன. ஓரிரு கதைகளில் மட்டுமே பெண் முக்கிய பாத்திரமேற்கின்றாள்.

சில விடயங்களையும் நாம் இதனூடு பட்டியல் படுத்தலாம்......
  • பெண் என்பவள் மென்மையும் அழகும் மட்டும் படைத்தவள் என்ற மாயை உருவாக்கப்படுகிறது
  • பெண்ணுக்கு பிரச்சினை பெண்ணாலயே ஏற்படுகிறது. (வில்லி மட்டும் தான் வில்லன் இல்லை) என்பதனூடான ஆண் என்பவன் நல்லவன் , அவன் பிழை செய்வதில்லை என்ற சித்தரிப்பு
  • ஆண் கம்பீரமானவன், உறுதியானவன் என்ற வலியுறுத்தல்
  • பெண்ணுக்கான மீட்பு ஆணால் மட்டுமே கிடைக்கும், அல்லது சாத்தியமானது என்கின்ற அச்சுறுத்தலுடனான எச்சரிக்கை

நான் நினைக்கின்றேன் அநேகமான குழந்தைகளின் மனதில் முதல் விதை இங்கு தான் விழுகின்றது என்று. இவ்வாறான கதைகளை பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களில் ஆண் - பெண் என்பது மென்மை – கம்பீரம் என்ற கருத்தாகவே பதிகின்றது. இங்கு விழுகின்ற விதை ஆண் குழந்தைகளிடம் எதிர்காலத்திலும் பெண் என்பவள் தனக்கு கீழானவள் என்ற விருட்சமாக உருவெடுகின்ற அதேவேளை பெண் குழந்தைகளின் மனதில் “தான் ஒரு ஆணிற்கு கீழ்ப்பட்டவள்” என்றும் ஆழமாக பதிந்து விடுகிறது.

இங்கு விதைக்கப்படுகின்ற இந்த கருத்துக்கள் குழந்தைகள் வளர வளர அவர்களுடன் கூடவே மனப்பதிவுகளாகவும் உருவெடுகின்றன. போதாமைக்கு திரைப்படங்களும் இவ்வாறான சிந்தனைகளுக்கு உரமிடுவதாகவே தோன்றுகின்றது. ஆக நாம் களையவேண்டியதும், மனதில் விதைக்க வேண்டியதுமான காலகட்டம் மாணவர் பருவத்திலோ அல்லது அதற்கு பின்னரான பல்கலைக்கழக காலமோ அல்ல அதுமட்டுமல்ல கூடவே பல படிகள் எம்மை விட முன்னுள்ளவர்கள், பெண் விடுதலைக்கான வித்திட்டவர்கள் என்று கருதப்படுகின்ற மேலைக்தேயத்தவர்கள் படைப்புகள் கூட பெண்ணடிமை கருத்துக்களை கொண்டதாகவே படைப்புக்களை தயாரிக்கின்றன என்ற யதார்த்தங்களும் சுடுகின்றன.


Monday, March 3, 2014

நனைந்திடவே விரும்புகின்றேன்…

கருமுகில்களை
மழைத்துளிகளையும் - அதில்
முழுவதுமான நனைதலையும்
நேசிக்கின்றேன்….
இயற்கையை அனுபவித்திடவல்ல!!!

அம்மாவின் திட்டுக்களை
பாட்டியின் அதட்டல்களை
கசாயத்தின் கசப்பையும் – மீறி
நனைந்திடவே விரும்புகின்றேன்…
பிடிவாதத்தினாலல்ல…..

பையில் குடை இருப்பினும்
ஒதுங்கிட இடமிருப்பினும்
அனைத்து செல்ல உறவிருப்பினும்
நனையவே முற்படுகின்றேன்
நனைதலை ரசிப்பதற்கல்ல

உன்னாலான வலிகளை – என்
நனைந்த விழிகள்
காட்டிட கூடாதென்பதற்காகவே
தினமும் நனைகின்றேன்!!!
(25.02.2014)

அதிகம் வாசிக்கபட்டவை