Tuesday, April 30, 2013

சில சில உறவுகள் பிரிவதேன்?


பொதுவாக உறவுகள் பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. புரிந்துணர்வு இன்மை, வீண் வரட்டு கௌரவங்கள், சந்தேகங்கள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நம்மைத் துரத்தி துரத்தி வந்தவர்கள் திடீரென விலகுவதற்கு ஒரு சில காரணங்களே இருக்க கூடும்.

•    நம்மை விட ஏதோவொரு வகையில் சிறந்தவர்கள் கிடைத்திருக்க கூடும். இது உடல் தேவைகள், பணம், பதவி என நீளும். ஆனால் நிச்சயம் மனதாக இருக்க முடியாது நாம் ஒருவருடைய மனதை மட்டுமே நேசித்தவர்கள் எனின் நிச்சயம் அவர்களை விட்டு விலகிட முடியாது.

•    தாழ்வு மனப்பான்மை கூட சில வேளை ஒருவர் எம்மை விட்டுப் பிரிந்துசெல்ல ஏதுவாகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த மனப்பாங்கு உண்டு தாம் எவ்வளவு தான் ஒரு பெண்ணை நேசித்தாலும் அவள் தன்னை விட ஏதோவொரு வகையில் உயர்வாயிருந்தால் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. பிறர் அவளைப் பற்றி பேசும் போதோ அல்லது புகழும் போதோ ஏற்படும் இந்த மனோபாவம் அந்தப் பெண்ணிடம் சிறு சிறு விடயங்களுக்கு கூட எரிந்து விழுவதில் தொடங்கி இன்னொருவருடன் இணைத்து பேசுவது வரை வக்கிரமாக தொடரும். ஒரு சிலரால் மட்டுமே தங்களவர்களை தட்டிக்கொடுத்து பாராட்ட முடிகிறது. இவர்கள் மனித உருவில் வாழும் புனிதர்கள்

•    இறுதியான விடயம் நாம் பழகும் ஒருவருக்கு நம்முடைய போலியான இன்னொரு முகம் தெரிய வரும் போது விலகிட முற்படுவோம். அதுவும் அவர்களிலேயே பழியைப் போட்டு உறவுகளை இலகுவில் முறித்து நமது சுயம் வெளிப்படாமல் தவிர்க்க முயல்வோம்.

எதுவாயிலும் ஒருவரை நன்கு அறிந்து அவருடன் உறவுகளை ஏற்படுத்த வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறுத்துக்கொண்டு ஓடிவிடுவது நல்லவர்களுக்கு அழகில்லைங்க. நாம் பலருடனும் பழகுவதால் சில வேளைகளில் பிரிவுகள் நம்மை தாக்குவதில்லை. நமக்குத்தான் ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று இருக்கிறதே… எதுவும் நாம் நிரந்தரமாக வைத்துக்கொள்வதில்லையே…. ஆனால் எதிர்பக்கத்தினரிடமான வலிகள், காயங்கள் பற்றியும் நினைக்கும் போது தான் தாம் மனிதர்களாகின்றோம்.

இதன் மறுபக்கத்தில் எதிர் தரப்பினர் நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்று. தெளிவற்ற மாறுகின்றதானவர்கள் வாழ்க்கையில் என்றும் நம்மோடு வருவார்கள் என்று எப்படி நம்புவது? வாழ்க்கை என்பது மண் விளையாட்டில்லை கல்லிலான செதுக்கள். இன்று நம்மை காயப்படுத்துபவர்கள் நம்மை நாளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்களா என்பது பெரியதொரு கேள்வியும் கூட….நம்மவர்கள் நமது கரம் கோர்த்து என்றும் கூடவே வரவேண்டும் அது தாங்க வாழ்க்கை. இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்…. இதெல்லாம் விபசார வாழ்க்கைங்க…. இங்கு விபச்சாரம் உடலளவில் அல்ல மனதளவில்….. எல்லாம் நன்மைக்கே! திரும்பவும் சொல்கின்றேன் வாழ்க்கையை தெரிவு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிழை செய்தவர்கள் நாம் தப்பிவிட்டோம் அல்லது நம்மை நியாயமானவர்களாக காட்டிவிட்டோம் என்று நாம் நமக்குள் கூறிக்கொள்ளலாம். ஆனால் நாம் செய்த ஒவ்வொன்றிற்கும் மறுதாக்கம் நிச்சயம் உண்டு. கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான். காலமும் பதில் சொல்லும். தர்மம் எப்போதும் நின்று தான் கொல்லும்........

Monday, April 29, 2013

நான்கு கட்டங்கள்

அண்மையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான கலந்துரையாடல் ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதில் பங்குபற்றிய வேளை அறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களில் மிகமுக்கியமானவற்றினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்

பல உயிர்கள் உலகில் வாழ்கின்றன. இவற்றில் மனிதனின் வாழ்க்கையினை வேறுபடுத்திக்காட்டுவது “பகுத்தறிவு” என்பதே. “பகுத்தறிவு"; என்கின்ற ஒன்றை வைத்துக்கொண்டும் கூட சிலவேளைகளில் நமது வாழ்க்கையின் தெரிவுகளை சரியாக தெரிவு செய்வதற்கு தவறிவிடுகின்றோம். இதன் விளைவால் பாதை மாறியும் சென்றுவிடுகின்றோம். நமது வாழ்க்கையில் இவ்வாறு நாம் தெரிவுசெய்து கொள்ள வேண்டியவை மற்றுமு; அவற்றினை தெரிவுசெய்து கொள்ளவேண்டிய தருணங்கள் பல. ஆயினும் மிக மிக முக்கியமாக தெரிவுசெய்ய வேண்டியவை 4 என சாதித்தவர்களின் வாழ்க்கை எமக்குத் தெரிவிக்கின்றது

•    நல்ல நண்பர்கள்
•    தொழில்
•    நல்ல வாழ்க்கைத்துணை
•    பெற்றோர் அல்லது பிள்ளைகள்


நல்ல நண்பர்கள்
குழந்தைப் பருவத்தினை கடந்து அடுத்து நாம் காலடி வைக்கும் பருவம்; மாணவப்பருவம். எமது வாழ்க்கையினை அமைக்கப்போகும் கல்வி மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளும் பருவம். இப்பருவத்தில் இடப்படுகின்ற அடித்தளம் தான் எமது பிற்காலத்தினையும் சமூகத்தில் எமது அந்தஸ்த்தினையும் தீர்மானிக்கின்றது. இக்காலத்தில் எமக்கு உருவாகின்ற நண்பர்கள் தான் எமக்கான அடித்தளத்தினை அமைப்பதில் முக்கிய அங்கம் வகிக்கின்றார்கள். “உன் நண்பனை யார்? ஏன்று தெரிந்தால் உன்னைப் பற்றிக் கூறலாம்” என்ற முதுமொழி ஒன்றுள்ளது. உண்மையான நண்பன் என்பவன் நாம் பிழை செய்யும் தனக்கு இலாபம்; கிடைக்குமாயின் பேசமால் கூடவே இருந்து கூத்தடிப்பவனல்ல. அல்லது துன்பம் வந்தவுடன் தூர ஓடுபவனுமல்ல. தவறும் போது தட்டிக் கேட்க வேண்டும். இன்னல் ஏற்படும் போது கைகொடுக்க வேண்டும் இதைத்தான் வள்ளுவர் கூட “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்கின்றார்.
இன்னொரு விடயம் ஆண் - பெண் நட்பு. அன்றைய சமூகம் போன்று பிழையான கண்ணோட்டத்தில் நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடைப்பிடித்தல் சாலசிறந்தது. நமது நட்பு சமூகத்தில் மதிக்கப்படத்தக்கதாக நமது வாழ்கைத்துணைக்கு அறிமுகப்படுத்தக் கூடியளவு இருக்குமாயின் அது தான் உண்மையான பால் வித்தியாசம் கடந்த நட்பு அல்லது போனால் அந்த ஆண் - பெண் உறவில் எங்கோ ஓர் மூலையில் கள்ளத்தனம் ஒளிந்துள்ளது என்பது கண்கூடு. ஒருவேளை நமது உண்மையான நட்பினை எமது வாழ்க்கைததுணைவரோ காதலர்களோ புரிந்து கொள்ளாவிடின் அவர்களுக்கு நிச்சயம்  ஒரு இருண்ட பக்கமுண்டு.
எமது நண்பன் என்பதில் அடுத்து அடங்குவது நல்ல புத்தகங்கள். அதற்காக புத்தகங்கள் எல்லாமே நல்லது என்பது பொருளல்ல. விடயங்களை கற்கும் போது “அன்னப்பட்சியாக” இருக்க வேண்டும். நல்ல விடயங்களை தேடிக் கற்க வேண்டும்.




தொழில்
ஒருவனை சமூகத்தில் அந்தஸ்துள்ளவனாக காட்டுவது அவனது தொழில் மற்றும் பதவி. இங்கு தொழில் பதவி என குறிப்பிடுவது நேர்மையாக கிடைக்கப்பட்டவை மட்டுமே. காக்கா பிடித்து அடிவருடி பல்லிளித்து கிடைத்தவை அல்ல. அத்துடன் இங்கு அந்தஸ்தை கொடுக்க வேண்டுமென்பதால் அவை கட்டாயமாக  றூவைந உழடநச துழடி ஆக தான் இருக்க வேண்டுமென்பதுமல்ல. “செய்யும் தொழிலே தெய்வம்” நமது வயிற்றினை வளர்க்கும் தொழிலை மதிக்க வேண்டும். உயர்விற்காக பாடுபட வேண்டும். அதேவேளை தொழிலுக்காக குடும்ப அன்பை இழந்துவிடக் கூடாது. சிலர் பதவிக்காக ஓடி பாசத்தினை தவறவிட்டு விடுகின்றார்கள். அதிக செல்வமும் ஆபத்தானது. தூக்கத்தினை கெடுத்துவிடும். அளவான சம்பாத்தியம் அன்பான உறவுகள் கடனற்ற வாழ்க்கை இவற்றை ஒரு தொழில் பெற்றுத் தருமென்றால் அது தான் “நல்ல தொழில்”

பெற்றோர் அல்லது பிள்ளைகள்.
“குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்” என்று கூறுவார்கள். உண்மை தாங்க ஒரு பிள்ளை பிழை செய்யும் போது அதை தட்டிக்கேட்பதற்கு பெற்றோர் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பெற்றோரை எதிர்த்துப் பேச மாட்டாகள். அடுத்த விடயம் அவர்கள் முதல் பயில்வது தம் பெற்றோரிடமிருந்து தான். அவர்கள் முன் மாதிரியாக இருந்தாலே போதும் பிள்ளைகள் தானாகவே நல்வழியில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அடுத்த விடயம் பெண்களுடைய குரல் என்று வீட்டில் உயர்கின்றதோ அங்கு நிச்சயம் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அங்கு தான் பிள்ளைகளுடைய குரலும் பெற்றோரை விட உயர ஆரம்பிக்கின்றது. பிள்ளைகளுடைய குரல் உயரும் போது நிச்சயம் அவர்களை திருத்த பெற்றோரால் முடியாது போகும். இதற்கான பெண்களை , பிள்ளைகளை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென்பதல்ல கருத்து. “ஆண் கொழுவாகவும் பெண் கொடியாகவும்” இருக்க வேண்டும் என்பது தான் கருத்து

நல்ல வாழ்க்கைத்துணை

நமது வாழ்வின் அடுத்த முக்கியமான கட்டம் நம்மவர்களை தெரிவு செய்தல். நாம் எமது வாழ்க்கைத்துணையை தெரியும் போது நமக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர் , ஏன் எதிர்கால சந்ததியினை உருவாக்கும் போது நமது பிள்ளைகளுக்கு ஒருவர் நல்ல தந்தையாக அல்லது தாயாக இருப்பாரா என்பதையும் சிந்தித்து தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். மிகமுக்கியமான விடயம் “காதல்”. நாம் காதலில் தோற்பதென்பது நமது காதலில் உள்ள பிழைகளால் அல்ல நம்மவர்களை தெரிவு செய்வதில் தான். நேர்மையாக, வெளிப்படையாக எவர் ஒருவர் இருக்கின்றாரோ அவரை தெரிவுசெய்யுங்கள். இதற்காக சிந்தித்து முடிவுகளை எடுக்க நிறைய நேரம் ஒதுக்குங்கள். உங்கள் காதலை பெற்றோருக்கு மறைக்காதீர்கள். காதலைக் கூட கடவுளுடன் ஆரம்பியுங்கள் (அட நானும் இதை தான் நினைத்தேன்) துணை சிறந்தவர்களாக அமையும் போது தான் நம் இலட்சியங்களும் வெற்றி பெறும் குடும்பமும் கோயிலாக மதிக்கப்படும்.

 (ம்ம்ம்ம்……. முதல் மூன்றும் ஓகே கடைசி தான் கொஞ்சம் இடிக்குது…)

Wednesday, April 24, 2013

குழந்தையும் குருவாகின்றான்


என்னவனுடன்
சண்டையிட்டு
வார்த்தைகள் சிதறி பின்
மௌனமாக
அழுதுகொண்டிருந்தேன்….

மூடிய முகத்தில்
மெல்லிய மூச்சு
ஸ்பரிசிக்க
நிமிர்ந்து பார்த்தேன் - என்
சின்னவன்… கையில்
ஓவியத்துடன்
நின்றிருந்தான்

கண்ணிரூடே
அணைத்து உச்சிமோர்ந்து
என்னடா கண்ணா..?
என்றேன் சற்றே கேவலுடன்
அவன் தன் சிறு கிறுக்கலை
என் முன் காட்டினான்

அதில் குச்சியுருவமாய்
சற்றே உயரமாக என்னவனாம்
குடும்பி வைத்த
உருவமாய் நானாம்..
இருவர் நடுவிலும்
குட்டியுருவமாய் தானாம்… - அவன்
மழலையில் சொல்ல
ஓவியத்தை உற்றுப் பார்த்தேன்
மூவரின் கைகளும்
பின்னியிருந்தது – அந்த
கிறுக்கலில் ஏதோவொன்று
உறுத்த என்னவனை
அழைபேசியில் அழைத்தேன்
மன்னிப்பு கேட்க…..


Tuesday, April 23, 2013

விதி போலும்….


தொடர்ந்தவன்
தொலை தூரம்
சென்ற போது தான்
மனதையே
தொட்டது
ஏதோவொன்று …..

துரத்தியவன் தூர விலகிய
போது தான் - என்
காதலே எனக்கு
வலித்தது…

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரிந்தது….

மீராவின் காதல்
கவிதையிலேயே
கருவாகி
கருகிட
வேண்டுமென்பது
விதி போலும்….

Monday, April 22, 2013

ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

Tuesday, April 16, 2013

“குலமும் குணமும்”


எனக்கொரு உற்ற நண்பனிருக்கின்றான். எனது குடும்ப நண்பனும் கூட. சமூகத்தில் பொறுப்பானதொரு பதவியிலிருப்பவர். நல்லதொரு ஓவியன். நாமிருவரும் அநேகமாக பல விடயங்கள் பற்றி பேசி விவாதித்துக் கொள்வோம். அரசியல் அறிவில் எனக்கு குருவும் கூட. அரசியல், கலை , இசை பற்றி இருவருக்கும் பல ஒன்றுபட்ட எண்ணங்கள் உண்டென்றாலும் எனக்கு பிடிக்காத ஒரு விடயம் அவரது “சதி வெறி” இது தொடர்பில் நாமிருவரும் முரண்பட்டுக் கொண்டாலும் இந்த சித்திரை புத்தாண்டன்று நடந்த ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள் வேண்டும்.
எனக்கு கவிஞர் நண்பர் ஒருவர் இருக்கின்றார். இந்த கவிஞருக்கும் ஓவியருக்கும் என்ன பிரச்சினை எனக்குத் தெரியாது (தனிப்பட்ட முறையில் ஏதுமுண்டோ???) அவரைப் பற்றி இவரும் இவரைப் பற்றி அவரும் பேசி ஒரே மோதிக்கொள்வதுண்டு. நேரடியாகவல்ல இவர்களிருவரினதும் வீரமும்  என்னிடம் தான். (இருதலைக் கொள்ளி எறும்பு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்போது தான் புரிகிறது அந்த எறும்பின் அவதி எப்படியிருக்குமென்று). ஆரம்பத்திலிருந்தே என் ஓவிய நண்பனுக்கு அவர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லை. “எல்லாம் கொஞ்ச காலம் தான் இன்னொன்றை கண்டவுடன் எல்லாம் போய்விடும்…. கவிஞரா? வழிஞ்சலா? என்பது கொஞ்ச நாளில் தெரியும்” என்று ஒரே கூறுவார்.

கடந்த சில நாட்களாக கவிஞர் நண்பர் என்னுடன் பேசுவதில்லை எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டிக்கின்றார் என்பது உண்மை தான். புதுவருடத்தன்று கூட “ என்னை இனி அழைக்க வேண்டாம் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். இது நடக்கும் போது எனது குடும்பத்தினருடன் ஓவிய நண்பன் வீட்டில் விருந்திற்கு சென்றிருந்தோம். கவிஞரின் குறுஞ்செய்தி பார்த்து நான் கண்கலங்கியவுடன் இந்த ஓவியருக்குள் சாத்தான் புகுந்துவிட்டது. “என்ன நான் சொன்னது நடந்து விட்டதா?” என்று தான் கேட்டார். எனக்கு கவிஞரை விட்டுக்கொடுக்க மனமில்லை. “அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் வேலையாக இருக்கிறாராம்” என்று முடித்துக்கொண்டேன். ஆனாலும் இந்த சாத்தான் விட்டதா? திரும்ப திரும்ப “குலத்தளவே குணம்” என்று சொல்லி கடுப்பேத்திக்கொண்டிருந்தது.

இந்த நீண்ட சம்ப விபரித்தலுக்குப்பின் ஒரு விடயத்தினை தான் சொல்ல வருகின்றேன். அதென்ன குலம்….? ஒருவனது குலம் அவனது பிறப்பினால் முடிவாகிவிடுவதல்ல குணத்தினால் முடிவாகும் விடயம். ஒரு வேளை அவர் வேலைப்பளுவினாலோ அல்லது வேறொரு கோபத்தினாலோ அவ்வாறு கூறியிருக்க கூடும். அவரும் பொறுப்பானதொரு பதவியிருப்பவர். அதற்காக அவரது குலம் எப்படி காரணமாகிட முடியும். நான் அவருடன் பல மாதங்களாக நண்பியாக இருக்கின்றேன்.. நான் கூட வேலைப்பளுவினால் அதனால் ஏற்பட்ட அழுத்தங்களினால் பலமுறை  காயப்படுத்தியிருக்கின்றேன். அதற்காக வேறொருவருடன் புது உறவு ஏற்பட்டுவிட்டது என்றோ அல்லது பதிதாக நல்லதொன்றை பார்த்துவிட்டேன் என்பதா அர்த்தம்? அல்லது ஏமாற்றப் போகின்றேன் என்பதா பொருள்?
ஆகவே சும்மா சாதிகளை கொண்டு மனித மனங்களை எடை போடாமல் புரிந்துகொள்ளப் பழகவேண்டும். ஒருவனது பண்பும் அவன் அடுத்தவர் மேல் கொண்டிருக்கின்ற அன்பும் தான் அவனது சாதியை தீர்மானிக்கின்றதே அன்றி ஒருவனது பிறப்பல்ல. படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாதுங்க அடுத்தவரை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியத்தினை கிறுக்குவதை விட மனிதத்தினை மதியுங்கள் நண்பரே…..

Thursday, April 11, 2013

கூண்டுக்கிளி.....

பஞ்சவர்ண கிளி எனக்கு
பட்டு மெத்தை
பால் பழம்
பகட்டான வாழ்க்கை - கூடவே
தங்கத்திலான கூண்டு

சுதந்திரம் வேண்டி
சிறகடித்து ஆர்ப்பரித்தால்
என் கால் விரல் நுனிகள்
கட்டப்பட்டு - கூண்டுக்
கதவுகள் திறக்கப்படுகின்றன – ஆனால்
எல்லைகள் அவர்களாலேயே
தீர்மானிக்கப்டுகின்றன….

இந்தக் கூண்டுக்கிளியையும் - ஓர்
கிளி சுற்றி வட்டமிட்டு
நேசித்தது – என்
மழலைக்காகவல்ல – என்
தங்கக்கூண்டிற்காக….

தங்கள் வீட்டு
செல்லக்கிளியை
மதம்,ஜாதி,குலம்
அறியாமல் கொடுத்து விடுவார்களா?
பஞ்சவர்ண கிளியும்
தங்க கூண்டும்
தான் கிடைக்கவி;ல்லை
பச்சைக்கிளியும் வெள்ளிக்கூண்டும்
போதும் என நினைத்து – ஆண்கிளி
பார்த்திருக்கும் போதே
பறந்து போனது
வலிக்க வலிக்க – என்
சிறகுகள் வெட்டப்பட்டன…
முன்னைய வாழ்க்கையே
இனிப்பாக தோன்றியது
“காலம் கடந்த ஞானம்” – ஒரு வகையில்
பறப்பதை விடவும்
சிறையில் இருப்பது
பிடிக்கிறது….
பாசமில்லாவிட்டாலும்
பாதுகாப்பு கிடைக்கிறதே….

இப்போதெல்லாம் என்னை
இடம்மாற்றுவது பற்றி
கலந்தாலோசிக்கின்றார்கள்
சற்று விசாலமான
வைரக்கூண்டாம்…
பேரம் பேசப்பட்டுவிட்டது
வாங்கப் போகிறவனின்
பதவி
பட்டறிவு
பணவளவு – எல்லாம்
பரீட்சிக்கப்பட்டுவிட்டது
பாசமில்லாத பகட்டான கூண்டு

என் கூண்டு
திறக்கப்படுமென்ற நம்பிக்கை
செத்துவிட்டது…
இன்னொரு கிளியை
நினைக்கவும் தெம்பில்லை –
அதுவும் பறந்துவிட்டால்….?

கற்பனையில் மட்டும்
கனா காண்கின்றேன் - மறு
ஜென்மத்திலாவது கானகக்கிளியாக
காடெல்லாம் சுற்றிவர
வேண்டுமென்று….  

Tuesday, April 9, 2013

ஏன் விலகுகிறாய்?

விலகி விலகி
ஓடும் போது துரத்திய நீ – ஏன்
இன்று விலகுகின்றாய் என்பது – என்
மரமண்டைக்கு புரியவில்லை…

நான் செய்தது பிழையென்றால்
என் பதவியை விட்டும்
உனக்காக உன்
நண்பன் காலில் விழ கூட
நான் தயார்….

ஒரு வேளை உன்னிடம்
பேசியது தான் பிழையென்றால்
உன்னிடம் ஒரு கேள்வி…..?
என்னைப் பேச உனக்கு
முழு உரிமையுண்டு – என்
நண்பன் என்றாலும் அவன்
அடுத்தவள் கணவன்
அவனை பற்றி பேச
உனக்கு என்ன உரிமையுண்டு?

உன் நண்பனின்
கோபங்களை ஏற்கின்றாய் - ஏன்
என்னிடம் மட்டும்
அழுகின்றாய் என்று கேட்டாய்…
இன்னொருத்திக்கான தோள் மேல்
நான் எப்படி சாய முடியும்? – உன்
தோளில் தான் என் சுமைகள்
சுகமாகின்றன……

உன் தமையன்கள்
உனக்கு நல்ல நண்பர்கள்
என்றாய் - அதுவே
முகநூலில் “அம்மு” என்றால்
பிழையாக புரிவார்கள் என்கிறாய்….
கேள்வி கேட்டால் கோபப்படுகிறாய்
ஏன் உன்னை விடவும் -நான்
உன் குடும்பத்தினை நேசிப்பது
உனக்குப் புரியவில்லை……?

உன் ஆயிரம் நண்பிகள்
பற்றி பேசுகின்றாயே – ஏன்
என் ஒரே நண்பனை பற்றி
பேசிவிட்டால்
மூஞ்சை சுருக்கிக் கொள்கின்றாய்?
மனம் என்பதும்
உணர்வுகள் என்பதும்
இருவருக்கும் பொதுவல்லவா…..

அடுத்தவள் பற்றி – நீ
பேசும் போது - நான்
பொறாமைப்படவில்லை என்பதால்
உன்னில் எனக்கு
அன்பில்லை என்பதல்ல அர்த்தம்… - உன்
ஒழுக்கத்தை ஆழமாக
உணர்ந்தவள் என்பதை ஏன்
புரிய மறுக்கின்றாய்…?

உன் முன்னவள் போல்
என்னையும் துரத்தி
காதலிக்க சொல்கிறாயா…?
காதல் என்பது துரத்துவதல்ல
இரு மனங்களை தொடுவது…

உன்னை நேசிக்க
நேரம் கடத்துகின்றேன் என்றால்
அது அவனில் உள்ள அன்பாலல்ல – என்
மனம் அழுக்கின்றி
ஏற்க வேண்டுமென்று நினைக்கின்றேன்…
நான் வரும் போது – உன்
மனமும் எனக்கு மட்டுமாக
இருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றேன்
அது ஏன் உனக்கு புரியவில்லை…

தெரியாமல் தான்
கேட்கின்றேன்….
“முந்தானை தொட
திராணியில்லை” என்றெழுதிய
உனக்கு – என்
மறுகாதல் பற்றி பேச
மட்டும் எவ்வாறு முடியும்?

என் பேனையின்
சுதந்திரம் - என்
தனி வாழ்வில் இல்லையென்பது
பழகிய உனக்கு கூட
தெரியவில்லையா…?

எதற்கெடுத்தாலும் நான்
உன்னைப் புரியாதவள் என்கிறாய்...
முன் பின் முரணான
உன்னை யாரால் தான்
புரியமுடியும்?
புரிந்துகொள்வதைப் போல்
உள்ளொன்று வைத்து
நடிக்கவும் முடியாது என்னால்…
நடிக்க முடிந்திருந்தால்
பல ஞாபகங்களை தொலைத்துவிட்டு
பல ஆண்களை நாடியிருப்பேனே….

பலமுறை முயன்று விட்டேன்..- ஒருவேளை
என் பேச்சு
உனக்கு பிடிக்கவில்லை
என்பது வெறும் பொய்யோ
என்ற நப்பாசையில்…
மீண்டும் மீண்டும்
நீ விலகும் போது
வலித்தாலும் புரிகிறது
அது உண்மை என்று…
மீண்டும் வந்து
அருகில் நிற்க – என்
குழந்தை மனம்
துடித்தாலும் - அது
என் பெண்மைக்கு இழுக்கு….

என் எழுத்தில் என்னை
கண்டுகொள்ளும்
கவிஞன் உன்னிடம்…
கவிதையிலேயே வாழ்த்துக் கூறி
பிரிகிறேன்…
கவிதையில் பிறந்த
நம் உறவு
கவிதையிலேயே நட்பாக மரணிக்கட்டும்…

என்றும் அன்புடன்
மீரு






ஆண் - பெண் நட்பு

எனது முன் பதிவானது “புரிதலும் பிரிதலும்” என்ற பதிவில் என் நண்பனின் நட்பை நியாயப்படுத்தியிருந்தேன். இது தொடர்பில் என் முகநூல் நண்பி ஒருவர் “உங்கள் காதலருக்கோ/கணவனுக்கோ பெண் ஒருவருடன் நட்பு இருந்தால் உங்கள் கருத்து என்ன?” என்று வினவி அதை அடுத்த பதிவாக எழுதும் படியும் கேட்டிருந்தார்.

நல்லதொரு வினா: நான் இந்த வினாவிற்கான பதிலை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய வயதில் தான் இருக்கின்றேன். (இதற்காக எனக்கு திருமணமாகிவிட்டது / காதல் உண்டு என்று நினைத்து கடலை போடுவதை நிறுத்தி விடாதீர்கள்)

உளவியல் ரீதியாக ஒரு ஆணோ, பெண்ணோ பாலர் பருவத்தில் எதிர்பாலாரின் கவனத்தினை தம்மிடம் திருப்ப முயற்சிப்பது முதல் பருவவயதில் பெண்ணாயின் தந்தையிடமும், ஆணாயின் அம்மாவிடமும் மற்றும் பாடசாலைப் பருவத்தில் எதிர்பாலானவரிடமான ஈர்ப்பு வரை எதிர்பால் கவர்ச்சி இருப்பது தான் சாதாரண மனித இயல்பென்றும் இல்லாதுவிடின் அது அதாதாரண நிலை (Disorder) என்றும்  சொல்லப்படுகின்றது.

அத்துடன் என்னை எடுத்துக்கொண்டால் நான் ஊடகவியல் மற்றும் பொறியியல் துறையில் இருக்கின்றேன். நிச்சயம் ஒரு பெண்ணாக ஆயிரம் ஆண்களையும், அது போல் ஓர் ஆண் இருப்பின் அவர் ஆயிரம் பெண்களையும் தாண்டிப் போகவேண்டியிருக்கும். இப்போது அன்றைய காலம் போல் நாம் தனியுலகமாக இருக்க முடியாது. உலகத்தை கைக்குள் உள்ளடக்கியுள்ள நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே என்னளவில் என் கணவருக்கோ/காதலருக்கோ ஒரு பெண் நண்பி இருந்தால் அதனை நான் நிச்சயம் வரவேற்பேன். ஆனால் அதற்கான எல்லைகளை என்னவர் எவ்வாறு வரையறுத்துள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள தவறமாட்டேன். ஒரு நல்ல நண்பியுடன் என்னவர் பழகும் போது தான் ஒரு பெண்ணுடைய உள, உடல் ரீதியான பிரச்சினைகள் பற்றி நிச்சயம் தெரிந்து கொண்டு மனைவியை/காதலியை அணுசரித்து போவார் என்பது என் கருத்து. ஓர் ஆண் - பெண் நட்பு எங்கே பிழையாக நோக்கப்படுகிறதென்றால் அவை இருவருக்கும் பொதுவானதாக இல்லாத போதுதான்.

என்றுடைய கணவர்/காதலன் தன் நண்பியை எனக்கு அறிமுகம் செய்தால் நிச்சயம் அவர்கள் நட்பை வரவேற்பேன் அணுசரித்தும் போவேன். (இடைக்கிடையில் கொஞ்சம் செல்ல சண்டைகளும் பிடிப்பேன். அதற்காக சொக்கலேட்டும் வாங்கி தரவேண்டும்.)

என்னவனின் நட்பு எல்லையை தாண்டாமல் இருக்கும் வரை நிச்சயம் அதை புரிந்துகொண்டு அந்த நட்பிற்கு மதிப்பளிப்பேன். ஏன் அதை பிளஸ் ஆக கூட பயன்படுத்தி கொள்வேன். ஒரு வேளை என்னவன் என்னுடன் சண்டை போட்டால் அவர் நண்பியிடமே சொல்லி (நல்லா நிறைய குட்டுகள் போட்டு) என்னுடன் சமாதானப்படுத்த வைப்பேன். என்னவன் நட்பையும் காதலையும் வேறுபடுத்திப் பழகக்கூடிய நிதானமானவனாக அமைவான் என்பது நிச்சயம். எனக்கும் ஆண் சகோதரர்கள் இருக்கின்றார்கள் அவர்கள நல்ல நண்பிகள் நிறையப் பேருடன் பழகுகின்றார்கள். அதற்காக அவர்கள் பிழையா செய்கிறார்கள்?. என்னவனை பயமுறுத்தி அவர் நட்புகளுக்கு தடை போட்டு அவரை Disorder Person ஆக மாற்ற நான் தயாரில்லை.

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை”  போன்று (நான் Sweet தான் சும்மா ஒரு கதைக்கு)  என்னை மட்டும் கண்டு நட்பாகி அது காதலாகி கடைசியில் கடுப்பாகுவதை விட நிறைய இனிப்பை பார்த்தவன் போல் பல நல்ல நண்பிகளுடன் பழகியும் என்னில் ஏதோ இருப்பதாக எண்ணி என்னை தெரிவுசெய்பவனைத் தான் எனக்கு பிடிக்கும். ஏன் அது தான் நிலைக்கும். ஆகமொத்தத்தில் பக்குவப்பட்ட ஒருவனைத் தான் நானும் வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்வேன்.

எதுவும் நாம் பார்க்கின்ற முறையிலும், அனுகுகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் என்னவனுக்கும் நிறைய நல்ல நண்பிகள் இருந்தால் நிச்சயம் வரவேற்பேன். கூடவே நல்ல கணவர்/காதலன் கிடைக்கப் போகின்றான் என்று நினைத்து சந்தோசமும் அடைவேன். அவ்வப்போது பெண்மைக்கே உரிய பொறாமை எட்டிப்பார்த்தாலும் குட்டிச் சண்டை போட்டு விட்டு அடுத்த நிமிடமே மறந்திடுவேன்.

என்னவனுக்கு நல்ல நண்பி இருக்கின்றாள் என்றால் இது என்னவனின் பண்பையும், அதை புரிந்து கொண்டு நான் நடக்கும் போது அது எம்மிருவருக்கான அன்பையும் அந்நியோன்னியத்தையும் காட்டும் நண்பி

எப்படி எனது பதிலில் உங்களுக்கு திருப்தியா நண்பி???

Monday, April 8, 2013

புரிதலும் பிரிதலும்

எனது இறுதிப்பதிவில் சந்தேகம் எனும் நோய் என்ற தலைப்பில் சில உளவியல் தொடர்பான விடயங்களை கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியானதான மேலும் சிலதை இன்று பகிர விரும்புகின்றேன். நான் அந்தப் பதிவினை பதிந்த வேளை சந்தேகத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்த என் பல்கலைக்கழக நண்பன் - நண்பியின் காதலினையும் அவர்களிடையான பிரிவிற்கான சில விடயங்களையும் கருத்தில் கொண்டு முன்வைத்திருந்தேன்.

உண்மையில் பல்கலைக்கழக காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டிருக்கும். பரீட்சைகள் , விரிவுரையாளர்களின் அறுவைகள் , ஆய்வுகூடத்தில் நடத்தும் கூத்துக்கள் என பல சுவாரஸ்யங்களுடன் பல நல்ல நண்பர்கள் சில வேளை அந்த நட்புகளே காதலாகி கனிவது முதல் பல இனியவைகள் என்றும் மறக்கமுடியாதவை. 
எங்களது பொறியியல் பிரிவிலும் ஒரு குழாம்; இருக்கின்றது. மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக மொத்தம் ஆறு பேர். அதில் ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று விட மீதியாக நாங்கள் ஐந்து பேர். எங்கள் குழுவிலும் ஒரு காதல் சோடி இருந்தது…( இங்கு இறந்தகாலத்தினை பாவிப்பதற்கு காரணம் அவர்கள் காதல் கடந்த கிழமையுடன் இறந்து விட்டது) நாங்கள் ஐவருமே சமூகத்தில் பொறுப்பான பதவி வகிப்பபவர்கள். எங்கள் இலட்சியங்களுக்காக மட்டுமே பொறியியலினை தெரிவு செய்துள்ளவர்கள். அனைவரும் கட்டடப்பொறியியல் தான் பயில்கின்றோம். பொறியில் என்றாலே பெரிய சுமை அதிலும் கட்டடப்பொறியியல் கேட்கவே வேண்டாம். கூடவே எங்கள் பணிகளும் எம்மை அழுத்துவதால் சில வேளைகளில் ( 24 வயதில் இது பெரியதொரு தியாகம்) கடலை போட கூட நேரம் கிடைப்பதில்லை. எம் குழுவில் நானும் இன்னொருவரும் கொஞ்சம் அமைதியானவர்கள் மற்ற நண்பன் கொஞ்சம் கலகலப்பானவர். அவரும் இன்னொரு நண்பியும் தான் காதலித்துக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு சந்தேகங்களினால் இன்று பிரிந்தும் விட்டார்கள். என்னவில் என் நண்பனைப் பிரிந்தது என் நண்பியின் துரதிஷ்டம் என்று தான் கூறுவேன். நான் கூட அவருடைய புரிந்துணர்வு, சிறு விடயங்களில் கூட காட்டும் அக்கறைகள், எவ்வளவு வேலைப்பளு இருப்பினும் அவளுடன் கதைக்காது இருப்பதில்லை போன்ற விடயங்களைப் பார்த்தும் பொறாமைப்பட்டிருக்கின்றேன். இவ்வாறு அக்கறையான, பாதுகாப்பான ,புரிந்துணர்வுடைய காதலை இன்று பார்ப்பது மிகமிக அரிது. ஏன் இவருடைய முகநூல் பாஸ்வேட்டை கூட தன் காதலிக்கு கொடுக்கின்றளவு நேர்மையான ஒருவர்.

நான் முன்னரே கூறியது போல் இரவு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்பினால் வந்த சந்தேகம், அவனின் நண்பியினுடனான உறவில் ஏற்பட்ட சந்தேகம் என்பன இன்று விரிசலாகவே மாறிவிட்டது. இங்கு பார்வையில் தான் பிழை இருந்ததே தவிர என் நண்பனில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று இரு துருவங்களாகிவிட்ட இவர்களின் காதலை கனக்கும் மனதுடன் வேடிக்கை பார்க்கத்தான் எம்மால் முடிகிறது.
ஆனால் இதிலும் கூட பல பாடங்கள் உண்டு. ஒருவரை தெரியும் முன் யோசிக்க வேண்டும். நாம் கலகலப்பான பல ஆண் பெண்களுடன் பழகுபவர்களாயின் நம்மைப் புரிந்துகொள்பவர்களாக தெரிவுசெய்ய வேண்டும். நல்ல நட்புகளைக் கூட வேறு அர்த்தம் கொள்பவர்கள் நமக்கும் நமது தொழிலுக்கும் பொருத்தமற்றவர்களாயின் ஆரம்பத்திலேயே விலகிவிட வேண்டும்.

பழகிய பின் பிழை பிடித்து அடுத்தவர்களுக்கு வலிகொடுத்து விலகுவதை விட பழகும் முன்பே புரிந்துகொண்டு பழகுவது நல்லது

(யாரை முன்வைத்து எழுதினேனோ அவர்கள் என் எழுத்தினை வாசித்தும் இருவரையும் என் எழுத்து கூட சுடவில்லை என்பதும், நன்றாக புரிந்துகொண்டு உண்மையாக நேர்மையாக நடப்பவர்களுக்கு காதல் வாழ்க்கை அமைவதில்லை பலமுகங்களுடன் பலருடன் பழகுபவர்களது காதல் தான் கடைசி வரை நிலைக்கின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. கடவுளை ஒரு வேளை கண்டால் அவனிடமும் இதற்கான காரணத்தினை நான் கேட்க வேண்டும்)

Thursday, April 4, 2013

சுஜாதாவின் “பிரிவோம்… சந்திப்போம்” பற்றிய அலசல்....



இந்தியாவில் திருநெல்வேலியில் வேலையற்ற பொறியியல் பட்டதாரியான இளைஞன் ரகுபதியின் கனவுகளை அடுக்குவதுடன் ஆரம்பமாகின்றது “பிரிவோம்… சந்திப்போம்….”. ஓர் கிராமத்து இளைஞன் அவனது எல்லையற்ற சிறு சிறு கனவுகள்… தான் வேலையற்று இருப்பதால் தனது அப்பாவின் செலவில் புகைப்பிடிப்பதை கூட 100 பரிசீலித்து கடையில் வாங்குவது என பக்குவமான ,கம்பீரமான ரகுபதி முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றான். அடுத்தடுத்து மனைவியை இழந்து ஒரே மகனுடன் தனித்துவிடப்பட்ட நிலையில் தன்னைப் போலவே தன் மகனையும் பொறியியலாளருக்கு படிக்க வைத்து, அவனையும் வேலையிலமர்த்திப் பார்க்கும் இலட்சியத்துடன் ரகுபதியின் அப்பா கோவிந்தராஜன். பத்தொன்பது வயதிலும் குழந்தைத்தனம் மாறாது தம்பியுடன் செல்லச் சண்டைகள் போட்டுக்கொண்டு செல்வச் செழிப்புடன் வலம் வருகின்ற மதுமிதா என்கின்ற அழகுப் பெண். கணவன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வயிற்றைக் கழுவி, தன் குழந்தையின் கொஞ்சல்களில் கூட தன் கணவனைக் காண்பதாக சொல்வது முதல் மாறி மாறி கஷ்டங்களை கூறி பொருட்களை யாசிப்பது வரை சராசரி கீழ்மட்ட குடும்பப் பெண் ஜெயந்தி என முக்கியமான நான்கு பாத்திரங்களையும் அடுத்தடுத்து வசிப்பவர்களின் மனதில் குறைந்த இடைவெளி எனினும் இலகுவில் உட்புகுத்தி விடுகின்றார் சுஜாதா.

பார்த்தவுடனேயே மதுமிதாவுடன் காதல் கொள்கின்ற ரகுபதி அதை சொல்லமுடியாமல் திண்டாடுவதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று மதுமிதாவின் வீட்டாரே ரகுபதியுடன் நிச்சயார்த்தம் செய்து iவைப்பது ஏதோ வழமையானது போன்று போய்க் கொண்டிருந்தாலும் ரகுகுபதி திடீரென வேலை கிடைத்து நகரம் சென்று திரும்புகின்ற போது மாறிக்கிடக்கின்ற காட்சிக்கோலங்கள் நாவலிலிருந்து கண்னை எடுக்க விடாமல் செய்துவிட்டது.

அடுத்தடுத்து நடக்கின்ற திடீர் நிச்சயார்த்தத்தில் பட்டும்படாமலும் இருக்கின்ற கோவிந்தராஜன் மகனிடம் “காதல் என்கின்றது Nature’s way of ensuring a pregnancy! என்று சொல்லி கூடவே சற்றுப் பொறுத்து முடிவுகளை எடுக்கும்படி அறிவுரை கூறுவது அப்பா என்பதையும் தாண்டி ஒரு நிமிடம் நல்லதொரு நண்பனாகவும் அவரை பரிணமிக்கச் செய்கின்றது.




மதுமிதா – ரகுபதி நிச்சயார்த்த முடிவும், ரகுபதி அப்பாவித்தனமாக தேம்பி தேம்பி அழுவதும், மதுமிதா பெரும் பணக்காரன் ராதாகிஷனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விடுவதும், ரகுபதி தற்கொலைக்கு முயன்று பலத்த அடியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடனும் முதல் அத்தியாயம் முடிவுறுகின்றது.

"அந்த அமெரிக்க ராதாகிஷனை விட நான் எந்த வiகையில் குறைந்துவிட்டேன்"  என்ற வைராக்கியத்துடன் ரகுபதி அமெரிக்கா சென்று படிப்பதும் ஏதோ வழமையாக நமது சினிமா ஹீரோக்கள் போல தானோ அல்லது ரமணிச்சந்திரனின் கதாநாயகனை போலவோ என்று அலுக்கின்ற போது மதுமிதாவே ரகுபதியை தொடர்புகொண்டு நட்பு பாராட்டுவதும் மதுமிதா-ராதாகிஷனின் குடும்ப வாழ்வின் அன்னியோன்யத்தையும் அவர்களது புரிந்துணர்வையும் பார்த்து ரகுபதியே திகைப்பதும் சுஜாதாவிற்கான பாணியை காட்டிவிடுகின்றது. தொடர்ந்து ராதாகிஷனின் முறையற்ற தொடர்புகளும் வழமையான நமது கதாநாயகனைப் போன்றே முன்னாள் காதலிக்காக ரகுபதி போராடுவதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் பாணி மாறுவதில்லையோ என சிந்திக்க வைக்கின்றது.
மதுமிதாவே தன்னை ரகுபதி மறக்க வேண்டும் என்று ரத்னா என்கின்ற இந்திய அமெரிக்க பெண்ணை அறிமுகம் செய்வதும் அதே “முன்னாள் காதலன்” என்கின்ற இந்திய பாணியாகவே அமைகின்றது. பின்னரான பல திருப்பங்களுடன் பயணித்து இறுதியில் மதுமிதாவின் இறப்புடன் நாவல் முற்றுப் பெறுகின்றது.

தன் மனைவிக்கு துரோகம் செய்கின்ற ராதாகிஷனுக்கு இறுதிவரை தண்டனை கிடைக்காமை சற்று ஏமாற்றமடைய வைத்திருந்தாலும் என்றோ ஒரு நாள் செய்தவை நம்மை நோக்கித் திரும்பும் என்ற யதார்த்தமான உண்மையை ஆங்காங்கே சுஜாதா முன் வைக்கத் தவறவில்லை. பணத்திற்காக ஆசைப்பட்டு தன் மகளிற்கு முடிவைத் தேடிக்கொடுத்த பெற்றோர்கள் ரகுபதியிடம் மன்னிப்பு கேட்பது நெகிழவைக்கின்றது.
இக்கதையில் பெயருக்கேற்ப மதுமிதா “மது” போதையாகவே ரகுபதியை ஆட்டிவைக்கின்றதால் பெயர் நன்றாகவே பொருந்துகின்றது.

என்னளவில் என்னை இந்த நாவலின் இரு விடயங்கள் கவர்ந்திருந்தது. ஒன்று ரகுபதியின் அப்பா. மிகவும் நிதானமான கதாப்பாத்திரமாக வள்ளுவர், பாரதி என பலரை தன்னுள் கொண்டவராக இறுதியில் வேலைக்கார பெண்ணிற்று சமூக அங்கிகாரம் கிடைக்க வேண்டி மறுமணம் செய்து கொள்வதும், “உடம்பிற்காகவா அப்பா?” என ரகு கேட்கின்ற போது அதுவென்றால் வேறு பெண்களிடம் போயிருப்பேன் 25 வருடம் உனக்காகவே தனியே தூங்கினவன். ஆனாலும் அதுக்காக இல்லாமலும் இல்லை என கூறுவது உண்மையான ஒரு வெளிப்படையான மனிதனை காட்டுகிறது. இன்று சமூகத்தின் உயர் பதவிக்குள் ஒளிந்து இருமுகம் காட்டிக்கொண்டு பலருடைய வாழ்வில் விளையாடுகின்ற எத்தனையோ பேரை விட இவர் கருத்து என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்று.

அடுத்த பாத்திரம் ரத்னா. தன் மண்ணை அதன் பெருமையை நேசித்துக் கொண்டு அதே வேளை அமெரிக்க சூழலுக்கு ஏற்பவும் வாழ்கின்ற ரத்னா மனதில் படுவதை வெளிப்படையாக கூறுவதும் நிதானமாக ஒவ்வொரு விடயத்தினையும் ஆராய்ந்த முடிவெடுப்பதும் தன்னுடைய குடும்பத்தினரை ரகுபதிக்கு அறிமுகம் செய்து வைப்பதும் மிகமிக பாராட்டத்தக்கதொன்றும் கூட. இன்றைய காலகட்டத்தில் ஒரே சமயத்தில் பலருக்கு தண்ணீர் காட்டுபவர்கள் மத்தியில் பொறுமையாக தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற ரத்னா இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரத்னா ரகுபதியிடம் “நீங்கள் மதுமிதாவை நேசித்த காதலின் புனிதம் தான் என்னை உங்களையும் நேசிக்க வைக்கிறது” என்று சொல்வது மிகவும் அழகிய வரிகள்….

சுஜாதாவின் எழுத்துநடை வழமை போன்று முன்னுக்கு ஒரு சம்பவம் நடப்பதாகவும் அதில் பார்வையாளராக நாம் இருப்பது போன்றும் செல்கிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பாத்திரங்களின் அறிமுகம் முதல் இறுதியில் ராதாகிஷனுக்கான தண்டணையை வாசகரின் கற்பனைக்கே கொடுத்து விடுவது வரை சுஜாதாவின் பாணி மாறவில்லை. ஆனாலும் தான் மிகவும் நேசித்த ,அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்த கணவன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துள்ளான் என தெரிந்தவுடன் மதுமிதா தன் முன்னாள் காதலனிடம் தன்னை மறுமணம் செய்யும் படி கெஞ்சுவது சுஜாதா முன் அத்தியாயங்களில் தோற்றுவித்திருந்த மதுமிதாவிற்கும் இறுதியில் முடிக்கின்ற மதுமிதாவிற்கும் இடையில் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. ஒரு சராசரி கிராமத்துத் தமிழ்ப் பெண்ணால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது அமெரிக்க நாகரீகத்திற்கமைய விவாகரத்து பெற்றிருக்க கூடும் அல்லது அழுது கொண்டு “கல்லானாலும் கணவன்” செண்டிமென்டுடன் வாழ்ந்திருக்கக் கூடும். அல்லது புரட்சிப்பெண்ணாக திருத்தியிருக்க கூடும்.

ஒரு வேளை மதுமிதா பத்திரத்தினை சாகடிக்காது ரகுபதியுடன் முறைப்படி இணைத்து வைத்திருந்தால் சபல புத்தியுள்ள ஆண்களுக்கு சுஜாதாவின் நாவல் சுட்டிருக்கும். பெண் நினைத்தால் அவளாலும் சபலப்பட முடியும் இன்னொரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்று உணர்த்தியிருக்கலாம். எப்படியோ தன் பிரிவோம் சந்திப்போம் நாவல் மூலம் சிறந்ததை தேடி ஓடுகின்ற பெண்ணுக்கான முடிவுரை எழுதியிருக்கின்ற சுஜாதா அதே சிந்தனையுடன் ஓடுகின்ற ஆணுக்கான இறுதி வரிகளையும் படைத்திருக்கின்றாரா? அல்லது அவரும் பால்நிலை பேணுகின்ற சராசரி எழுத்தாளர் தானா? என்ற கேள்வியையும் தோற்றுவித்திருந்தது. அதிலும் ஒரு திருப்தி என்னவென்றால் தன்னுடைய சபலத்தினை நியாயப்படுத்த தன் மனைவியை முன்னாள் காதலனுடன் இணைத்துப் பேசி அவளை நோகடிக்கின்ற ராதாகிஷன் மூலம் சராசரி ஆண் ஆதிக்கத்தினை காட்டிவிடுகிறார். ( இப்போதெல்லாம் தன்னுடைய காதலுக்கு சம்மதிக்காத பெண்களை ,தன் விருப்புகளுக்கு இணங்காத பெண்களை பற்றி அவதூறு பேசுகின்றதும் இன்னொருவருடன் இணைத்துப் பேசி தம் குற்றங்களை மறைப்பதுவும் சமூகத்தில் இன்று நிறையவே உண்டு)

முதல் பாகம் மது – ரகு காதலில் தொடங்கி மது- ராதாகிஷன் திருமணத்தில் முடிய இரண்டாம் பாகம் ரகு – மது சந்திப்பில் தொடங்கி மது மரணத்தில் நிற்கிறது பிரிவோம் சந்திப்போம் ஆக மொத்தத்தில் எதையும் தீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி , அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இளைஞன் ராதாகிஷன் , மனதில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா , தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப் பெண் ரத்னா , நட்புடனும் யதார்த்தத்துடன் இணைந்ததாகவும் விடயத்தினை அணுகுகின்ற ரகுபதியின் அப்பா கோவிந்தராஜா என முக்கிய ஐந்து கதாபாத்திரங்களுடன் திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது சுஜாத்தாவின் பிரிவோம் சந்திப்போம்…

( “பிரிவோம் சந்திப்போம்…” வாசித்த போது நேரம் போனதும் தெரியவில்லை கூடவே சந்தர்ப்;பங்கள் கிடைத்தும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட நேர்மையான ,நிதானமான , இறுதிவரை எந்த கட்டத்திலும் குழந்தை மனதை நேசிக்கின்ற ஒருவன் எனக்கும் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒட்டிக்கொண்டது மறுக்க முடியாத உண்மை )



I love u sometimes foolishly and at those moments I do not understand that I could not, would not and should not be so absorbing a thought for u as u are for me….  
 படித்தில் மிகப் பிடித்தது

அதிகம் வாசிக்கபட்டவை