Thursday, January 31, 2013

என்னவனே எங்கிருக்கின்றாய்?

என் விடியல்களை பகிர்வதற்கும்
பொழுதுகளில் கைகோர்ப்பதற்கும்
கனவுகளின் கதவை திறப்பதற்கும்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

என் சிறு நகர்வுகளை கூட கூற
பருவ சந்தேகங்களை வினவ
காலைக் கனவுகளையும் - என்னைக்
கடக்கின்ற ஒவ்வொரு கணங்களையும்
உன்னிடம் சொல்ல ஆசிக்கின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

அடுத்தவர்கள் என்னை
விமர்சிக்கும் போதும்
சந்தேகிக்கும் போதும்
என்னவன் இங்கிருக்கின்றான் என
சுட்டுவிரல் நீட்ட தேடுகின்றேன்….
கைகோர்த்து நடப்பதற்கும்
கவலைகளில் தோளில் சாய்வதற்கும் - என்
கஷ்டங்களில் கைநீட்டுவதற்கும்
வலிபட்ட இடங்களை
வருடி விடுவதற்கும் - உன்னை தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சீண்டுவதற்கும்
சிறு சண்டைகள் போடுவதற்கும் - அடுத்தவள்
உன்னைப் பார்க்கும் போது
உரிமைச்சட்டம் வாசிப்பதற்கும்…
ஊடல் கொள்வதற்கும்
கூடல் செய்வதற்கும்
கெஞ்சுவதற்கும் - குழந்தையாக
உன்னைக் கொஞ்சுவதற்கும்
தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

சிறு காயம்பட்ட இடத்தில்
வருடுகின்ற அம்மாவின் பரிவையும்
கண்டிப்பாக பேசி - என்னை
வழிநடத்துகின்ற அப்பாவின் சாயலையும்
கூட்டத்தில் கூட பார்வையால் - என்னை
தொடர்கின்ற அண்ணாவின் பாசத்தையும்
சீண்டல்களால் கவலைகளை மறங்கடிக்கும்
தம்பியின் அன்பையும் - சேர்த்து
செய்த கலவையான ஒருவனாய்..
உன்னைத் தேடுகின்றேன்
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

உன் தோளில் சாய்ந்து – என்
கண்ணீரால் மனச்சுமைகளை கரைத்து- உன்
உதடுகள் என் நெற்றியை
ஈரப்படுத்தப் போகும் - அந் நாளுக்காக
காத்திருக்கின்றேன் கண்ணா….
என் நண்பர்களில் ஒருவனா நீ?
எதிரிக் கூட்டத்தில் இருக்கின்றாயா?
இல்லை அன்புள்ள எதிரியா?
தினம் தினம் - உன்னைத்
தேடியே தொலைகின்றேன்…..
என்னவனே எங்கிருக்கின்றாய் நீ?

Thursday, January 24, 2013

அன்பானவர்களுக்காக சில நிமிடங்கள்


இன்று உலகம் ரொம்ப சுருங்கி விட்டது என்கின்றோம். ஆனால் அதனுடன் கூடவே அன்பும் சுருங்கிவிட்டது என்று நினைக்கத் தோன்றுகின்றது. முன்னர் எல்லாம் தொடர்பாடல் வசதிகள் ஈரக்கவில்லை ஆனாலும் அன்பு பறிமாற்றல்கள் நிறைந்திருந்தன. எனது குடும்பத்தில் அநேகமானவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்கள் தங்களவர்களுக்கு செய்த அன்பின் பரிமாற்றங்களை இன்றும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கின்றேன். ( அம்மா கூட அப்பா தன்னை கிறிக்கட் விளையாடும் சாட்டில் சைட் அடித்ததாக கூறியிருக்கிறார்) எனினும் இன்று பலவித தொழில்நுட்ப தொடர்பாடல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் அன்புப்பறிமாற்றல்கள் மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது.
அன்புக்கு “நீர்த்தன்மை” இருக்குதுங்க. மரத்திற்கு ஒரு வேளை நீர் ஊற்றாவிட்டால் இறந்து விடாதாயினும் வாடல் நிச்சயம் ஏற்படும் அதேபோன்று எந்த உறவுமுறையிலும் அவர்களுக்கான நேர ஒதுக்கல்கள் குறையும் போது புரிந்துணர்வுகள் குறைந்து அன்பில் விரிசல்கள் ஏற்பட தொடங்குகின்றன.
நாம் எவ்வளவோ பெரிய மேலதிகாரியாக கூட இருக்கலாம் ஆனால் குடும்பத்திற்கும் , நமது நண்பர்களுக்கும் , உறவுகளுக்கும் அது அப்பாற்பட்ட விடயம். அலுவலத்தில் மட்டும் தான் நமக்கு கீழ் பலர் நமது பதவிக்கு தலைவணங்க கூடும் ஆனால் உறவில் அன்பு தாங்க பிரதானம். “எனக்கு வேலைப்பளு இருக்கின்றது” என கூறுகின்றபவர்களின் தலையில் நூறு தடவையாவது குட்ட வேண்டும். நம் அன்பைக் கூட வெளிப்படுத்த முடியாதளவு ஒரு அலுவலகப்பணியோ அல்லத நமது பதவியோ அமைகின்றது என்றால் அதைவிட கூலி வேலையாவது செய்து கூழ் குடித்துக்கொண்டு அன்பான , ஆரோக்கியமன வாழ்க்கை வாழ்வது மேல்.
ஆனால் இன்று பல வழிகள் அன்பை வளர்க்க இருக்கின்ற போதும் மனதில் தான் இடமில்லாமல் இருப்பதாக தோன்றுகின்றது. எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் ஒரு நிமிடம் கிடைக்காமல் தான் போய் விடுமா என்ன? இதில் இன்னொரு வகையும் இருக்கின்றது. இன்று அநேகர்கள் மதுவைப் போன்று சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகவுள்ளனர். அதிலும் சிலருக்கு முகநூலிற்கு (FaceBook) போகாவிட்டால் தூக்கமே வராது. அதிலும் தன் குடும்பத்தினருடன் ஒரு வார்த்தை பேச நேரமில்லை: அன்பானவர்களுடன் பேசுவதற்கு நேரமில்லை. சிலருக்கு குடும்பத்தில் என்ன தான் நடக்கிறது என்பதும் தெரிவதில்லை. அவர்களை சார்ந்த உறவுகள் தம்மை நினைத்து வருந்துவதையோ தமக்காக ஏங்குவதையோ உணர்வதுமில்லை. ஆனால் முதுகு சொறிவதை கூட முகநூலில் இடுவதற்கு நேரம் எப்படியாவது கிடைத்துவிடுகிறது. பலநேரங்களில் அவர்களை பற்றி தெரிவதற்கு முகநூல் கணக்கினை தான்  திறக்க வேண்டியிருக்கின்றது இதென்ன வாழ்க்கை?  “நமக்காக தான் சமூக ஊடகங்களே தவிர அவற்றிற்காக நாமில்லை” என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஊடகங்களை நீங்கள் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
அதற்காக எந்த நிமிடமும் நம்மவர்களை கொஞ்சிக்கொண்டிருப்பதுவும் வாழ்க்கையல்ல. ஆனால் அதுவும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை மறவாதீர்கள்.
தினமும் எம் அன்பானவர்களுக்கு “Good Morning ” சொல்வதற்கோ அல்லது ஒரு “Hai ” சொல்வதற்கோ எவ்வளவு நேரம் செலவாகிடப் போகின்றது? பணத்திற்காக மட்டும் ஓடிக் கொண்டிருக்காமல் பாசத்திற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். முன்னரெல்லாம் மார்க்கங்கள் இருக்கவில்லை ஆனால் நிறைய பாசம் மனிதரிடையே இருந்தது இன்று நிறைய மார்க்கங்கள் இருக்கின்றன ஆனால் பாசம் காட்டுவதற்கு தான் நேரம் கிடைக்கவில்லை என்கின்றோம். நாம் எவ்வளவு தான் சாதித்தாலும் அன்பினால் உறவுகளை கட்டியெழுப்பாது விட்டால் மிஞ்சுவது எதுவுமில்லை.
நேரம் மீதமாக இருக்கும் போது நம்மவர்களுக்காக ஒதுக்குவதை விட வேலைப்பளுவின் போதும் ஒரு நொடியாவது அவர்களுக்காக செலவளிப்பது தான் உறவுகளுக்கிடையில் பிணைப்பினை வலுப்படுத்தும். அவர்களுக்காக பணம், பொருட்களை கொடுப்பதை விட சில அன்புப்பறிமாற்றங்கள் தான் அன்பை அதிகரிக்கும். ( இது அன்பிற்காக ஏங்குபவர்களுக்கு மட்டும் பணம், பதவி பார்த்து பழகுபவர்களுக்கல்ல )
வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்கள் உறவிலும் சாதிக்க நினைக்க வேண்டும். குடும்பம் மற்றும் எம்மை சூழவுள்ளவர்களுடன் அன்பானதொரு உறவை கட்டியெழுப்பும் போது அது கூட நம்மை இன்னும் சாதிக்க வைக்கும்.
வாழ்க்கையை வாழ்ந்து கடந்த கால பக்கங்களை புரட்டும் போது பல சந்தோஷங்கள் , சில துக்கங்கள், இனிய நினைவுகள் இருக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு “பாட்டி வடை சுட்ட கதை” சொல்வதை விட நமது அன்பின் நிமிடங்களை சொல்ல வேண்டும். “இது என்ன வாழ்க்கை?” என்று இருக்க கூடாது “இது தான் வாழ்க்கை” என்று இருக்க வேண்டும். வாழ்க்கை என்பத அழகிய கவிதையாக இருக்கவேண்டும் வாழ்தல் என்பது கலையாக இருக்க வேண்டும்.

Tuesday, January 22, 2013

மாலைநேரம் கடற்கரையில்….


நினைவு தெளிந்த நாளிலிருந்து –
ஓர் ஆசை…..
கடற்கரையில் மாலைநேரமொன்றை
செலவிட வேண்டுமென்று
பலமுறை குடும்பத்தினருடன்
சென்று விட்டேன் - ஆனால்
அந்த தனிமை
அந்த கவிதைப் பொழுது
இதுவரை கிடைத்ததில்லை

அப்பாவிடம் கேட்டுவிட்டேன்
அவருக்கு அலுவலக வேலையாம்
அம்மாவிடம் கேட்டேன்
அவருக்கு வீட்டுவேலை அதிகமாம்
அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை
தம்பிக்கு தன் நண்பர்களுடன்
செல்வது தான் பிடித்திருக்கின்றதாம்
நண்பிகளை கேட்டால் - தம்
ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம்
நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக…
என் நண்பனிடம் கேட்னே;
எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார்
தனியே போவதற்கும் தைரியமில்லை

சில நேரங்களில் சில வினாக்களுக்கு
விடை கிடைப்பதில்லை….
இங்கும்
எனக்கு மட்டும் ஏன்?
யாருடன் தான் நான் போவது?
பல வினாக்கள் …- ஆனால்
இனிமேல் யாரிடமும்
கேட்கப்போவதில்லை..

என்றோ ஒரு நாள்
பௌர்ணமி தினத்தில்
கடற்கரை மணலில்
இனியதொரு மாலைப்பொழுதில்
என்னவனின் விரல்களை பிடித்தபடி
வெண்ணலைகள் எம் கால்களை
செல்லமாக மோத – அவன்
தோளில் முகம் புதைத்து – அவன்
வியர்வை மணம் சுவாசித்து
ஆரவாரங்களுக்கு மத்தியிலும்
மௌன மொழி பேசிக்கொண்டு
ஒரு கவிதைப்பொழுது
எனக்கும் கிடைக்கும் - என்ற
என் நிறைவேறாத
சின்ன சின்ன ஆசைகளுக்கான
(வழமையான) சமாதானத்தினை - என்
கடற்கரைப் பொழுது…
கற்பனைக்கும் - கூறி
கடிவாளமிடுகின்றேன்.



Sunday, January 20, 2013

இனக்கவர்ச்சி, காதல், நட்பு


பொதுவாகவே பருவ வயதில் அனைவருக்குமே தோன்றும் இயல்பான உணர்வுகளே இவை. எதிர்பாலாரிடம் எமக்கு இவ்வாறான உணர்வுகள் தோன்றுகின்றன. இவற்றினை நாம் எவ்வாறு கையாள்கின்றோம் என்பதில் தான் இவற்றின் வெற்றி தங்கியிருக்கின்றது இவற்றிற்கான ஆயுளும் தங்கியிருக்கின்றது. அதிலும் இன்றைய சினிமா மற்றும் பொழுது போக்கு ஊடகங்களும் இவற்றிற்கான அடிப்படைகளை அமைத்து கொடுக்கின்றன.
ஒரு பெண்ணைப்பார்க்கின்றோம் அவளுடைய ஏதோவொன்று எம்மைக் கவர்கின்றது அவளுடனான தொடர்பை ஏற்படுத்துவோ அல்லது அதனை வலுப்படுத்தவோ அடிக்கடி கதைக்கின்றோhம் அல்லது நம் பக்கம் அவள் கவனத்தினை திருப்ப முயற்சிக்கின்றோம் அதேவேளை இன்னொரு பெண்ணைக்காணும் போது முன்னவளுடனான உறவைக் குறைக்கவோ அல்லது அவளில் குறை கண்டுபிடித்து உறவை கழற்றிவிடவோ முயற்சிக்கின்றோம். அதுவும் எப்படியென்றால் அவளுக்கு இன்னொருவனுடன் உறவு இருப்பதாக கற்பனைக் கதைகளையோ அல்லது அவள் நம்மிலும் தகுதியில் உயர்ந்தவனை தான் விரும்புகிறாள் என்றோ நம்மைப் போலவே அடுத்தவர்களையும் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம் அவ்வாறான கவாச்சிகளும் இதன் விளைவுகளையும் பழகத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உணரலாம் அல்லது உண்மைச் சாயம் வெளுக்கத்தொடங்கும். ஒருவரால் நீண்ட காலத்திற்கு நல்லவராக நடிப்பதென்பது கடினம். இந்த கவர்ச்சிகளை நம்பி பெண்களே உங்கள் குடும்ப பெயர், படிப்பு என்பவற்றினை இழந்து விடாதீர்கள். எதுவுத் குறுகிய காலத்தில் வருகிறதென்றால் மீண்டும் குறுகிய காலத்திலேயே சென்று விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். “மணலில் எழுதுவது எளிது ஆனால் விரைவில் அழிந்து விடும். பாறையில் எழுத அதிக நேரமெடுக்கும் ஆனால் காலங்காலமாக நிலைத்திருக்கும்.”


அடுத்தது நட்பு. இன்று மெல்ல மெல்ல ஆண் - பெண் நட்பினை சமூகம் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. நட்பு என்பது தூய்மையான ஒரு விடயம். பெற்றோரிடமோ அல்லது சகோதரங்களிடமோ சொல்லத் தோன்றாத எத்தனையோ விடயங்களை நண்பர்களிடம் தான் சொல்லத் தோன்றும். அதற்காக அந்த நண்பர்கள் நம் வாழ்நாள் முழுவதும் எம்முடன் வரவேண்டுமென நினைப்பதும் நமது நண்பியுடன் இன்னொருவரை இணைத்துக்கதைப்பதும் அபர்த்தமான விடயம். நுண்பர்களை தெரிவு செய்யும் போது நல்லவராக தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்து பழகிக் கொண்டே கெட்டவள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் அவளுடன் உறவாடாதீர்கள். அதற்கு சமூக ஊடக காலமிது எல்லோரும் நண்பர்கள் என்று கதையளக்காதீர்கள். ஆண் என்பதால் எவ்வாறும் நடக்கலாம் நமக்கு நல்லதை கணிக்க தெரியும் பெண்ணென்றால் “முள் மேல் சேலை” என்று சிந்திக்க வேண்டுமென்று நியாயப்படுத்தாதீர்கள் “நண்பனை வைத்துத் தான் நம்மையும் கணிப்பார்கள்” இது ஆண் - பெண் இருபாலாருக்கும் பொருந்தும்

இறுதியானது காதல் சில வேளைகளில் புரிந்துணர்வு நிறைந்த நட்புகள் காதலாக மாறுவதுண்டு இவ்வாறானவை வரவேற்கத்தக்க விடயங்களும் கூட அதுவும் அவள் காதலில் தோற்றுவிட்ட பெண்னென்று தெரிந்த பின்பும் குறுகிய காலத்தில் நமது காதலை ஏற்கவில்லையே என நினைத்து அவளை சந்தேகப்படுவதும்  வார்த்தைகளினால் கொல்வதும் நமது அன்பையே கொச்சைப்படுத்திவிடும். பெண்களில் பலவகையுண்டு பலர் பலவித தேவைகளுக்காகவும் காதலிக்கின்றார்கள். ஆனால் நல்லதொரு குடும்பத்திலிருந்து வந்த மென்மையான உணர்வுகளைக்கொண்ட பெண்னென்றால் தனக்கு வரப்போகிறவரிடமிருந்து அன்பையும் பாதுகாப்பையும் நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பாள். மீண்டும் ஒருவரில் நம்பிக்கையினை பெறுவதற்கு சற்று நீண்ட காலம் எடுக்கலாம். அவள் காலம் தாமதிக்கும் போது அவள் ஏற்கவில்லை என்பதற்காக அவளை தவிர்க்க நினைப்பதும் குறைகளை கண்டுபிடிப்பதும் “உனக்கு ஈகோ” என்று கூறுவதும் நல்லதல்ல. எல்லோராலும் இலகுவில் ஒன்றை பிரதிபண்ண முடியாது. ஆனால் காலம் தாமதித்த எடுக்கும் முடிவுகள் சீரானதாக அமையும் என்பதை மறக்கக்கூடாது. நமது அன்பையும் . அக்கறையையும் தொடர்ந்தளிப்பதன் மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்த முயல வேண்டும். என்றொவொரு நாள் உங்கள் அன்பு அப்பெண்ணின் மனதை தொடும் உங்களில் ஏற்படுகின்ற நம்பிக்கை உங்கள் தோளில் சாயவைக்கும்.
எவருக்கும் தம் காதலில் தோற்கும் போது உடனடியாக இன்னொரு காதலில் ஈடுபட தோன்றும். நம்மிடம் புதிதாக காதலை தெரிவிப்பவர்கள் அருகில் போய் நிற்கத் தோன்றும். காதலை மறுத்து நட்புகள் பிரியும் போது மிகவும் வலிக்கும் ஏன் நம்மை நேசித்த ஒருவர் இன்nனொரு பெண்ணை பற்றி கதைக்கும் போது பொறாமைப்பட தோன்றும். அதையும் தாண்டி ஒரு இளவயது பெண் மறுக்கின்றாள் என்றால் எவ்வளவு வலிகள் இருக்கும் என யோசித்துப்பாருங்கள். ஏன் என்றால் வலிகளை நினைக்கும் போது மனம்; சுவரில் அடிபட்ட பந்தாக மீண்டுவிடும் என்பதால் தான். “ எவரும் தோற்றுவிடுவோம் என நினைத்து காதலிப்பதில்லை ஆனால் தோற்றுவிட்டால் காதலை மறுபடி நினைப்பதுமில்லை.” (இது உண்மையாக நேர்மையாக காதலித்து தோற்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.பலருடனும் நட்பு என்ற பெயரில் நேரம் கடத்தி கடலை போடுபவர்களுக்கல்ல அதன் பின் கழற்றிவிடும் போது “நட்பு” பற்றி வரைவிலக்கணம் படிப்பவர்களுக்கும் அல்ல)

உங்கள் காதல் உண்மையானது என்றால் மாற்றத்திற்காக காத்திருங்கள். தொடர்ந்தும் அன்பு செய்யுங்கள். “உண்மைக்காதல் என்றும் தோற்பதில்லை காதலிப்பவர்களை தெரிவு செய்வதில் தான் தோற்கின்றோம்”. எமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பழிவாங்காதீர்கள். வார்த்தைகளால் வதைக்காதீர்கள் காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்.

Wednesday, January 9, 2013

என் வாழ்வின் பொன்நாள்…..


சில விடயங்கள் எதிர்பாராமல் இடம்பெறுவது தாங்க வாழ்க்கை… அது சிலவேளைகளில் விதியின் வலிதான கரங்கள் நமது கழுத்தினை பிடிப்பதாக இருக்கலாம் அல்லது திகட்ட திகட்ட அமுதம் தருவதாகவும் இருக்கலாங்க.. அதற்கான பிரதிபலிப்புக்கள் வேறுபடுகின்ற போதும் விதியின் விளையாட்டு வித்தியாசமானது. ஆனாலும் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான். எதிர்காலம் தான் தெரிந்துவிட்டால் தோல்விகளும் இல்லாமல் வெற்றிகளையும் தெரிந்து கொண்டதான வாழ்க்கை சப்பென்றாகிவிடும்.
சிறுவயதில் இருந்தே “சஸ்பென்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்த விடயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எனது கவிதைகளிலும் சரி இந்த “சஸ்பென்ஸ்” வைப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்ததொன்று. ராஜேஸ்குமாரின் திரில் மற்றும் இந்திராசௌந்தர்ராஜனின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் நேற்று ஒரு சஸ்பென்ஸ் எனக்கு கிடைத்தது பாருங்க அது ரொம்ப ரொம்ப சுவீட்டானதுங்க..

வாழ்க்கையில் நான் நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பிய விரும்புகின்ற நபர்கள் சில பேர் தான். அதிலொருவர் நான் மிகச்சிறிய வயதில் எழுதிய ( அப்போது 13 வயது தான்) என்னுடைய கிறுக்கல்களுக்கு மதிப்பளித்த ஒரு பெரியவர். இந்த காலத்தில் பெரியவர்களே பெரியவர்களுடைய தரமான படைப்புகளுக்கு மதிப்பளிக்க யோசிக்கின்ற காலம். அப்படியிருக்கும் போது சிறியவள் எனக்காக கடிதமும் பரிசும் அனுப்பிய ஒருவர்.
அவர் அன்று அனுப்பிய கடிதத்தினை இன்றும் நான் வைத்திருக்கின்றேன். அதனை பார்க்கும் போது இவர் எங்கிருக்கின்றாரோ? என்னுடைய எழுத்தினை மதித்து பதில் எழுதிய முதலாமவர் “செல்வராஜா அங்கிளை” சந்திக்க மாட்டேனா என பல தடவை நினைத்ததுண்டு.

நேற்று(08.01.2013) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முருகபூபதி மற்றும் டொக்டர்.நொயல் நடேசன் என்பவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் வாசித்து புத்தகம் வழங்குவதற்கு நூலக தேட்டம் - செல்வராஜா என்றழைக்கும் போது தான் வாழ்க்கையின் அழகிய தருணமொன்றினை உணர்ந்தேன்.  அவர் மீண்டும் வந்தமர்ந்தவுடன் ஓடிப்போய் கதைத்தபோது பழைய குட்டி கேஷாவாகவே(????) மாறிவிட்டேன். சில நிமிடங்கள் என்ன பேசுவதென்றே புரியவில்லை. நிகழ்வு முடிந்த பின்பும் போய் பேசினேன். அப்போதும் கூட “என்னிடம் ஒன்றும் இல்லேயே அம்மா உனக்கு தருவதற்கு” என்று சொன்னார். தவறாமல் அவரது தொடர்பிலக்கங்களை பெற்றுக்கொண்டு நேரம் போய்விட்டதால் விடுதி மூடப்பட்டுவிடும் என்றெண்ணி அவசரமாக வந்துவிட்டேன்.
சுpலவற்றினை எழுதிவிட்டாலே சிகரத்தினை தொட்டுவிட்டதாக எண்ணுகின்ற சிலர் மத்தியில் சிகரத்தில் கால்பதித்த பின்பும் பிறரை மதிக்கின்ற “செல்வராஜா அங்கிளை” போன்றவர்களும் இருக்கின்றார்கள். 

“மேன்மக்கள் மேன்மக்களேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்”

இந்நிகழ்வு எனக்கு மறக்கமுடியாத ஒன்று மட்டுமல்ல சில வேளை சில மனிதர்களின் விமர்சனங்களுக்கு பயந்து இலட்சியங்களை விட்டுவிட எண்ணுகின்ற வேளை இவ்வாறான மாமனிதர்கள் மூலம் இலட்சியவாழ்விற்கான பயணத்தினை தொடர்வதற்கான ஊக்கங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் உணர்கின்றேன்.
அழகுடன் கூடவே முள் குத்துவதால் வலி தருகின்ற ரோஜாவினைப் போன்று சில கவலைகளையும் கூடவே மறக்கமுடியாத இனிய தருணங்களையும் தருகின்ற என்னுடைய வாழ்க்கையை நான் மிகவும் இரசிக்கின்றேன்….

அதிகம் வாசிக்கபட்டவை