Showing posts with label என்னவன். Show all posts
Showing posts with label என்னவன். Show all posts

தூரம்!

 
சில நேரங்களில் 
நமக்கான தூரங்கள் 
அலகுகளிலிருப்பதில்லை - அது
மிக அருகிலேயே இருக்கின்றது….
இரு அருகருகேயான 
மண்டபங்களுக்கிடையான தூரம்….
சில காலடி எட்டுகளில்
அடைந்துவிடும் தூரம்…
கண்ணாடி கதவுகளினூடு
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் தூரம்…
உன் பேச்சொலி - என்
செவிகளை வந்தடைகின்ற தூரம்…. 
அதற்கு 
அலகில்லை….
இடைவெளி அதிகமில்லை…
நிமிடங்கள் கூட தேவையில்லை….
கனதிகளில்லை…..
கடப்பதற்கு சிரமமில்லை….

ஆனாலும் - நான்
திரும்பிப்பாராமல் நடப்பதென்பது
மீண்டும் என்னை நானே
இழக்காமலிருப்பதற்கான 
முதற்பிடிமானம்…
அதீத கோபம்…. - என் 
பிடிவாதத்தின் நீட்சி….. 

(02.08.2026) 
 

இல்லாதிருக்கின்றாய் ( = இல்லை + இருக்கின்றாய்) - 02

இருக்கின்றாய் என்பதற்கும் - நீ
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……
அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுமக்கின்றேன்

பேசும் போது  வார்த்தைகளால்
காயப்படுத்துகின்றாய்  - நீ
பேசாத போது
மௌனங்களால் தொலைகின்றேன் நான் 

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும் - என் 
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

20.04.2026 



ஏன் இந்த அன்பில் இவ்வளவு முட்டாள்தனம்?


பேசவதற்கென – என்
நிமிடங்களுக்கு சிலர் விலைபேசுவதுண்டு….
பூங்கொத்துடன் காத்திருப்பவர்களுண்டு…..
பேசியே என் விரல்களை
பற்றிட பலருண்டு….. – நான் 
இன்று விலை மதிக்க முடியாத
நிமிடங்களை 
வெறுமனே வீணடித்துக்கொண்டிருக்கின்றேன்
உன் குரலை கேட்பதற்காக…. 

தினமும் என்னை 
பார்ப்பதற்கென….
என் குரல் கேட்பதற்கென….
மனதில் பொருத்திற்கொள்வதற்கென…. 
எத்தனை மனிதர்கள்…
எத்தனை அழைப்புக்கள்…
எத்தனை வற்புறுத்தல்கள்…  - ஆனால்
உன் முகம் பார்ப்பதற்கும்
குரலை கேட்பதற்குத்தானே
என் - இத்தனை எத்தனங்களும்….. 

இன்று மட்டும் நிகழ்த்துகின்ற 
நாடகமல்ல இது…. 
அன்றிலிருந்து….
தொடர்கின்ற தொடர் நாடகம்…. 

உன் குரல் கேட்பதென்பது……
வறண்டிருக்கும் மனத்தரையில்
சட்டென்று விழுகின்ற கோடை மழை

உன் குரல் கேட்பதென்பது….
பசித்திருப்பவர் முன்
வைக்கப்படுகின்ற இலைச்சோறு…..

உன் குரல் கேட்பதென்பது….
நெரிசலில் கிடைத்துவிடுகின்ற
ஜன்னலோரத்து பேரூந்து இருக்கை…..

ஏன் இந்த அன்பில்
இவ்வளவு முட்டாள்தனம்?

( 22.02.2026 : பி.ப 9.30)


வினாக்களுக்கான பதில்கள் - 03

Valentine Heart Arrow Images – Browse 157,241 Stock Photos, Vectors, and  Video | Adobe Stock 

வினா 06: 
மீரா டார்லிங் உனக்குப் பிடித்த விடயங்கள் 10 ஐ எனக்காக பட்டியலிட முடியுமா? நான் என்ன செய்தால் என்னை திரும்பிப்பார்ப்பாய்? திரும்பத்திரும்ப பார்க்க நான் என்ன செய்ய வேண்டும்.? 

 
பதில் : அதெற்கென்ன இதோ அந்த பட்டியல்……..
1.    காட்டூன்  மற்றும் க்ரைம் திரைப்படங்கள் பார்ப்பது
2.    புத்தகங்கள் வாசிப்பது
3.    குழந்தைகள் மற்றும் குட்டி நாய்கள் 
4.    மழையில் நனைவது, அதற்காக வீட்டில் திட்டு வாங்குவது
5.    குடும்பத்தினருக்காக சமைப்பது, அவர்கள் சாப்பிடுவதற்கு பரிமாறுவது
6.    கடற்கரையில் காலார நடப்பது 
7.    முழு நாளும் இசை கேட்பது
8.    குளிக்கும் போது சத்தமாக பாடல் பாடுவது
9.    ஓவியக் கண்காட்சிகளுக்குப் போய் மணிக்கணக்கில் ஓவியநுட்பங்களை இரசிப்பது
10.    பேரூந்து ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிப்பது

10 மட்டும் தான் கேட்டிருப்பதால் இத்தோடு நிறுத்தி விடுகின்றேன். உண்மையில் 1000 பிடித்தவைகள் உண்டு. 

நான் திரும்பிப்பர்க்கனும் என்றால் என்னை பின்னால் இருந்து கூப்பிட வேண்டும். :P நான் திரும்பத்திரும்ப உங்களை பார்க்க வேண்டும் என்றால் கறுப்பு அல்லது கருநீல நிறத்தில் டீசேட் அணிந்து ST Dupont Paris Saint Germain for Men or Amouage Opus V for Men இந்த இரண்டு Perfume இல் ஒன்றை பாவியுங்கள்  போதும்……. But எனக்கு நீங்கள் ஒருமையில் அழைப்பது மட்டும் பிடிக்கவில்லை. 

வினா 07: உங்களை எப்படி அன்பாக அழைப்பது பிடிக்கும்? உங்களவர் எப்படியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

 
பதில்: “கண்ணம்மா” என விளிப்பது மிகவும் பிடிக்கும். அம்மா என்னை பெரும்பாலும் “ராஜாத்தி” என்று அழைப்பார் அது மிகப்பிடிக்கும். மற்றும் படி என்னுடைய க்ரஸ்கள் லட்டு, ஹனி, டார்லிங், டியர், செல்லம் என்று அழைக்கின்றார்கள். இவைகளும் பிடிக்கும். என்னை மீரா என்றழைப்பது அனைத்தையும் விட மிக பிடிக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒருவர் என்னை “கேஷாயினி” என்று முழுபப்பெயர் சொல்லி அழைப்பதுண்டு. மின்னஞ்சலில் கூட ஆங்கிலத்தில் ஒரு எழுத்து கூட விடாமல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இது மிகமிக பிடித்திருந்தது கடந்த ஆவணி மாதம் வரை.


என்னவன் பற்றி சொல்வதென்றால்…………….? ம்ம்ம்ம்……. எனக்கு பெரிதாக ஒருவரின் உருவம் அல்லது அவரது இயக்கதிறன் சார் எதிர்பார்ப்பில்லை.  மற்றப்பெண்களைப் போல் தலையில் முடியில்லை, கருப்பு அல்லது முகவெட்டில்லை என்றெல்லாம் ஒருவரை அவரது வெளித்தோற்றம் கொண்டு நேசிக்கவோ அல்லது நிராகரிக்கவோ நான் தயாரில்லை. ஆனால் ஒழுக்கம் , உணர்வுகள் சார் எதிர்பார்ப்புக்கள் நிறையவே உண்டு. முக்கியமாக மண் பற்று உள்ளவராக, உரிமைகளுக்கும் விளிம்புநிலையினருக்காகவும் குரல் கொடுப்பவராயிருக்க வேண்டும். பெண்களை மதிப்பவராகவும் பெண்கள் அவரை மதிப்பவராகவும் இருக்க வேண்டும். 
 

மெல்லுணர்வு என்று பார்க்கும் போது கடல், நிலவு, இசை, ஓவியங்களை இரசிப்பவன், பயணங்களை விரும்புபவன், முரட்டுத்தனங்களுடன் பாசமாயிருப்பவன், என் குடும்பத்திற்கு இன்னுமொரு மகனாயிருப்பவன்….. முக்கியமாக என்னுடைய கிறுக்கல்களை இரசிப்பவன். தவறுகளை சுட்டி காட்டுபவன்.  நிறைய குட்டி குட்டி சண்டைகள் போடுபவன். என்னைச் செதுக்குபவன்...... யாராவது பெண்கள் அவனது பதிவுகள் அல்லது புகைப்படத்திற்கு hearten போட்டு அதற்காக நான் சண்டை போட்டால் பொறுத்துக்கொள்பவன். 

பிற்குறிப்பு : தொடுக்கப்படுகின்ற பெரும்பாலான கேள்விகள் என்னுடைய சுயம் பற்றியதாக இருக்கின்றதை பார்க்கும் போது யாரோ ஒருவர் தான் பல்வேறு மின்னஞ்சல்களிலிருந்து கேள்விகளை கேட்கின்றீர்களோ என்றிருக்கின்றது

 




நமக்குள் பெரிதான தூரங்கள் இருப்பதில்லை அன்பே…..

              Distance Between Us, Love That Holds Us – Panther Prints 

நமக்குள் பெரிதான தூரங்கள்
இருப்பதில்லை அன்பே…..

தொலைவில் உள்ள நிலவு
மனதிற்குள் நெருக்கமாவதில்லையா….?
பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிலுள்ள
சூரியன் சுட்டெரிப்பதில்லையா…? 
அது போல் நமக்குள்
பெரிதான தூரங்கள் இருப்பதில்லை….

அன்றும்..
இன்றும்…
என்றும்….
கூட்டத்தில் ஒருவனாக நீ
சற்றே மறைவில்
கூடுவிட்டு பாய்ந்து கொண்டிருக்கின்றேன் நான்…
நமக்குள் பெரிதான தூரங்கள்
இருப்பதில்லை அன்பே…
அறமும்…
பிடிவாதங்களும்…
கொஞ்சமான ஈகோவும்….
போதும் - நம்
இடையான தூரங்களை 
அளப்பதற்கு…..
மற்றும் படி…
நமக்குள் பெரிதான தூரங்கள்
இருப்பதில்லை அன்பே…

அரியாலை (08.10.2025)



நனைந்திடவே விரும்புகின்றேன்…

கருமுகில்களை
மழைத்துளிகளையும் - அதில்
முழுவதுமான நனைதலையும்
நேசிக்கின்றேன்….
இயற்கையை அனுபவித்திடவல்ல!!!

அம்மாவின் திட்டுக்களை
பாட்டியின் அதட்டல்களை
கசாயத்தின் கசப்பையும் – மீறி
நனைந்திடவே விரும்புகின்றேன்…
பிடிவாதத்தினாலல்ல…..

பையில் குடை இருப்பினும்
ஒதுங்கிட இடமிருப்பினும்
அனைத்து செல்ல உறவிருப்பினும்
நனையவே முற்படுகின்றேன்
நனைதலை ரசிப்பதற்கல்ல

உன்னாலான வலிகளை – என்
நனைந்த விழிகள்
காட்டிட கூடாதென்பதற்காகவே
தினமும் நனைகின்றேன்!!!
(25.02.2014)

மௌனப் பொழுதுகளில்....


வார்த்தைகள் கேட்டிடாத......
சுவாசங்கள் சுட்டுவிடாத..... – பல
மைல் தொலைவில் நாம்…. – உன்
நினைவுகள் மட்டும்
பேரூந்தின் ஜன்னல் ஓரத்து நிலவாக
என்னைத் தொடர்கிறது.....
.



எழுத்தில் மட்டுமே
தொடர்கின்ற பிரியங்களில்
உணர்ந்திடா தூரங்கள்…..
மடல் வரைந்திடாத
மௌனப் பொழுதுகளில் மட்டும்
இடைவெளிகளை இடையறாது
இதயத்துள் இழையோடிய படி!!!

இல்லாதிருக்கிறாய்….(இல்லை + இருக்கிறாய்)







நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……

அருகில் இருக்கும் போது
உன் வாசனை நுகர்கின்றேன்
இல்லாத போது
காற்றில் உணர்கின்றேன்

காணும் போது
கண்களுள் நிறைக்கின்றேன்
காத்திருக்கையில்
கனவுகளில் சுவைக்கின்றேன்

பக்கத்தில் இருக்கும் போது
ஸ்பரிசிக்கின்றேன்
தொலைதூரமாகும் போது
உன் நினைவுகளை
சுவாசிக்கின்றேன்

நேரில் நீ தருகின்ற
பூக்களை இரசிக்கின்றேன்
இல்லாத போது
உன் புகைப்பட
சிரிப்புக்களுள் சங்கமமாகின்றேன்

இருக்கும் போது
கார் சத்தம் கேட்டு
விடுதி கதவருகில்…..
இல்லாத போது
வரும் நாளுக்காய்
கலண்டரருகில்……..

அருகிலிருக்கும் போது
காதோரம் கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்…
இல்லாத போது
காது வரை மூடிய
கம்பளிக்குள் கற்பனைகளின் தொல்லை….

நீ உள்ள போது
உன் துணி துவைக்கின்றேன்
இல்லாத போது
உடைகளில் - உன்
வாசம் பிடிக்கின்றேன்

இரவில்…
உனக்குள் தொலைகின்றேன் - நீ
இல்லா ராத்திரிகளில்
தலையணைகளை
இறுக்கிக் கொள்கின்றேன்

நீ உடன் இருப்பதும் சுகம்
அருகில் இல்லாதிருப்பதும் ஒரு சுகம்….
உள்ள போது சேமித்தவை
இல்லாத போது கனவுகளாக…. ஆக
நீ இருக்கின்றாய் என்பதற்கும்
அருகில் இல்லை என்பதற்கும்
தூரம் காற்றிடையே……










மடிப்பிச்சை கேட்டு நிற்கின்றேன்…..




அன்பே
பிரியங்களை புரிய வைக்க
பொருட்களை – அதன்
தரங்களை
பெறுமதியை….. தேடாதே!
உன் அருகிலான நொடிகளின்றி
வேறு விலைமதிப்பற்ற பொருள்
எனக்கேது….?

உன் காதலை காட்ட
கார்ப் பயணங்கள் வேண்டாமே…..
சாரதியாக நீயும்
சற்றுத் தள்ளி நானும்…
சிறு இடைவெளிகள் கூட
அண்டத்தின் இரு
அந்தங்களாக….
பேரூந்து போதுமே
உன் தோளில்
செல்லமாக சாய்ந்து …
நான் கண்ணயர்வதற்கு..
உன் வாசத்தினை
உள்ளிழுத்துக் கொள்வதற்கு…

நம் சந்திப்புக்களுக்கு கூட
நட்சத்திர சத்திரங்களுக்கு
கூட்டிப் போகிறாய்….
நுனி நாக்கு ஆங்கிலமும்
பெயரறியா உணவுகளும்….
அதிரும் இசையும்…- நம்
உணர்வுகளுக்கு
கடிவாளமிடுவதை
கண்டுகொள்ள நீ மறுப்பதேன்?
சாலையோரத்தில்
மழைச்சாரலில்
ஒற்றைக் குடையில்
முட்டிக் கொள்ளும்
ஸ்பரிசத்தின் இன்பம் - ஏசி
அறையிலில்லை அன்பே…..

உன்
மேல்த்தட்டு நண்பர்களிடம்
என் திறமைகளைச் சொல்லி
மார்தட்டிக்கொள்கிறாய்…..
என்றாவது என்னை – நீ
வாய்விட்டு
வாழ்த்தியிருக்கின்றாயா?
ஆயிரம் பேர்
அவையில் புகழ்வதை விட
உன் ஒற்றைச் சொல்லில்
இருக்கிறது எனக்கான விருது…

உன்னவர்கள்
என்னழகை விமர்சிப்பதை
இரசிக்கின்றாய்…
காலையிலிருந்து
கண்ணாடி முன்னான
என் தவம்-  உன்
வர்ணனைகளுக்காக
மட்டுமே….
என் விழி பார்த்து – "நீ
அழகியடி" என்று
சொல்லப்போகும் கணத்திற்காகவே
காத்திருக்கின்றன – என்
கண்களின் மைதீட்டல்கள்…

இன்னொருவன்
காதலியான பின்பும்
காதல் கடிதங்களுடன் - பலர்
என்னருகில்…
நீ மட்டும் உன்
நிமிடமொன்றைக் கூட
தரமறுக்கின்றாய்…
வெட்டி வேளைகளிலான
பல மணி பேச்சுகளை விடவும்
வேலைப்பளுவின் போது – என்
சிறு நினைப்பாவது
உனக்கு வராதா….?
கேட்டால் கடமை என்கிறாய்
காதலிலும் கடமையிருக்கின்றதல்லவா?
கண் கெட்ட பின்
நமஸ்காரமும் - காலத்தில்
தோன்றா காதல் நினைவுகளும்
பயனற்றதன்பே…

என்னிடம் நீ
ஒரு வேளை
என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால்…
உன் அருகாமை கேட்டிருப்பேன்
உன்னுடனான தனிமை கேட்டிருப்பேன்
உன் ஒற்றை முத்தம் கேட்டிருப்பேன்
உன் விரல்களின் ஸ்பரிசம் கேட்டிருப்பேன்
என் இரவுகளில் உன் கனவுகள் கேட்டிருப்பேன்…
கேட்கும் அந்த நொடி கூட
என் கவியின் கருவாயிருக்கும்….

ஆனால் நீ தான்
கேட்கவேயில்லையே….
இதைக் கேட்கக் கூட
உனக்குத் தான் நேரமில்லையே…
இறுதியாய்
உன் ஒரு நொடியையாவது
எனக்காக – நம்
காதலிற்காக
மடிப்பிச்சை கேட்டு
நிற்கின்றேன்…..



















அசைய மறுக்கிறது என் மனம்…….





அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன்
வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த
ஐந்து ரூபா மிட்டாயின்
சுவை மிகுந்திருந்தது என்னளவில்

ஆயிரம் அன்புமொழிகளை
முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன்
கோபத்தில் கூறிய “என்னடா”வின்
அர்த்தம் அன்பின் எல்லை…

கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில்
நடக்கும் போது உரசுகின்ற – அவன்
மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம்
அழகிய கவிதை…
முன் நடந்தாலும்
பின் தொடர்கின்ற – அவன்
பார்வை அலாதியானது

என்னவனுக்கு
பதவியில்லை பண்பிருக்கின்றது
பையில் பணமில்லை
மனதில் பாசமிருக்கின்றது..
தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில்
பட்டும் படாமலும் தொடர்கின்ற
கரிசனைகள் சொல்லும்
ஆயிரம் தத்துவங்கள்
இடையில் நிற்பவைகளை விடவும்
இடையறாது தொடர்வது சுகமல்லவா?


அப்பாவின்
அரண்மனையை விடவும் - அவன்
அருகாமை வேலியாகின்றது
அவன் அன்பிற்காக மட்டுமே
அருகில் மண்டியிட்டு
அசைய மறுக்கிறது
என் மனம்…….

ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

மாலைநேரம் கடற்கரையில்….


நினைவு தெளிந்த நாளிலிருந்து –
ஓர் ஆசை…..
கடற்கரையில் மாலைநேரமொன்றை
செலவிட வேண்டுமென்று
பலமுறை குடும்பத்தினருடன்
சென்று விட்டேன் - ஆனால்
அந்த தனிமை
அந்த கவிதைப் பொழுது
இதுவரை கிடைத்ததில்லை

அப்பாவிடம் கேட்டுவிட்டேன்
அவருக்கு அலுவலக வேலையாம்
அம்மாவிடம் கேட்டேன்
அவருக்கு வீட்டுவேலை அதிகமாம்
அண்ணாவிடம் அனுமதியே கிடைக்கவில்லை
தம்பிக்கு தன் நண்பர்களுடன்
செல்வது தான் பிடித்திருக்கின்றதாம்
நண்பிகளை கேட்டால் - தம்
ஆண் நண்பர்களுடன் தான் வருவார்களாம்
நான் எதற்கு அங்கே சிவபூஜை கரடியாக…
என் நண்பனிடம் கேட்னே;
எதிர்பார்ப்பை  விதைத்துவிட்டு
கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விட்டார்
தனியே போவதற்கும் தைரியமில்லை

சில நேரங்களில் சில வினாக்களுக்கு
விடை கிடைப்பதில்லை….
இங்கும்
எனக்கு மட்டும் ஏன்?
யாருடன் தான் நான் போவது?
பல வினாக்கள் …- ஆனால்
இனிமேல் யாரிடமும்
கேட்கப்போவதில்லை..

என்றோ ஒரு நாள்
பௌர்ணமி தினத்தில்
கடற்கரை மணலில்
இனியதொரு மாலைப்பொழுதில்
என்னவனின் விரல்களை பிடித்தபடி
வெண்ணலைகள் எம் கால்களை
செல்லமாக மோத – அவன்
தோளில் முகம் புதைத்து – அவன்
வியர்வை மணம் சுவாசித்து
ஆரவாரங்களுக்கு மத்தியிலும்
மௌன மொழி பேசிக்கொண்டு
ஒரு கவிதைப்பொழுது
எனக்கும் கிடைக்கும் - என்ற
என் நிறைவேறாத
சின்ன சின்ன ஆசைகளுக்கான
(வழமையான) சமாதானத்தினை - என்
கடற்கரைப் பொழுது…
கற்பனைக்கும் - கூறி
கடிவாளமிடுகின்றேன்.



உன் முதல் குழந்தை



என்னைப் பார்த்த அன்றே கூறினாய் - என்
முகம் போன்றே மனமும் குழந்தையென்று..
தினமும் அழ வைத்தே வேடிக்கை பார்ப்பாய் - என்
குழந்தை சிணுங்கல்களை…

அதிகாலை அழைப்புக்களில் - இரசித்திருக்கின்றாய்
என் உறக்கத்தின் மழலை உளறல்களை…
என் பிடிவாதங்களில் கூட குழந்தைதனமிருப்பதாக
சாடியிருக்கின்றார் - உன்
முதல் குழந்தையும் நானென சத்தியம் செய்திருக்கின்றாய்

நீ என்னை குழந்தையாகவே நடத்துவதால்
பல தடவைகள் ஊடல் கொண்டிருக்கின்றேன் உன்னிடம்…

இன்று அதை காலம் கடந்த பின்
ஒப்புக்கொள்கின்றேன் - தாயின்
காலைச் சுற்றும் குழந்தையாய் - நீ
இன்னொருத்திக்கு சொந்தமாகிவிட்ட பின்பும்
உன்னையே – என்
நினைவுகள் சுற்றி – உன்
ஞாபகங்களுடனேயே வாழ – என்
மழலை மனம் அடம்பிடிப்பதால்….


எங்கே வைத்துவிட்டேன்..



அதிகாலையில் கண் திறவாமல்
தலையணையின் கீழ் - நான்
தேடும் அது….- என்
கனவுலகின் ஆதாரம் - என்
சோகங்களின் வடிகால் - அதை
எங்கே வைத்து விட்டேன்?

என் பருவகாலத்து பொக்கிஷம்
என் மனதின் முதற் சித்திரம் -என்
இராக் கனவின் மூலதனம் - அதை
எங்கே வைத்துவிட்டேன்?

புத்தக அடுக்குகளை புரட்டியாகிவிட்டது
தலையணைகளை தட்டியாகிவிட்டது
உடைகளை உதறிப்பார்த்தாகிவிட்டது
குப்பைக் கூடையைக் கூட கொட்டிப்பார்த்தாகிவிட்டது

எங்கேயது…..? – என்னளவிலான
மனித தேடல் முடிவுபெற
இறை நேர்த்தியும் வைத்தாகிவிட்டது
தேடுகிறேன்…
தேடுகிறேன்….

உள்ளுணர்வு ஏதோ சொல்ல – என்
நாட்குறிப்பைத் திருப்புகின்றேன் - இதோ
கிடைத்துவிட்டது
என்னவனின் புகைப்படம்….

தொலைத்து விட்டேன்...

எத்தனை கைக்குட்டைகளை தொலைத்திருப்பேன்
எத்தனை சவரன் நகைகளை தொலைத்திருப்பேன் - ஏன்
எத்தனை எத்தனையோ ஆயிரம் ரூபா தாள்களைக் கூட
தொலைத்திருக்கின்றேன் - அப்போதெல்லாம்
அம்மாவின் கடுஞ்சொற்களை விட எதுவும்
வலித்ததில்லை

இன்று உன் கரம்பட்ட
பத்து ரூபா தாளை தொலைத்துவிட்டேன்
வழிகளிலெல்லாம் அலைகின்றன – என்
விழிகள் வலியுடன்

மீண்டும் கிடைக்கவில்லை – அது
உன்னைப்போல் என் வாழ்வில்
எவ்வளவோ முயற்சித்தும்....

இப்போதெல்லாம் - உன்
நினைவுகளைப் போலவே
என்னிலிருந்து தொலைகின்றன – நம்
(காதல்) சின்னங்களும்

மிஸ் பண்ணப் போவதில்லை

இன்று அதிகாலையில் படுக்கையை விட்டெழவே எனக்கு பிடிக்கவில்லை... காரணம் நள்ளிரவு முதல் பெய்கின்ற பலத்த மழை... ஆனாலும்  அலுவலகத்திற்கு செல்வதற்காகவது எழுந்தாகவேண்டிய கட்டாயம். விடுமுறை எடுப்பது கூட இன்று சாத்தமியமில்லை முடிக்கவேண்டிய எனது கடமைகள் மீதம் இருக்கின்றன. பஸ் பிடித்து செல்வதையும் வீதியின் மழை அழுக்கு நீரில் கால் நனைய நடக்கப்போவதை நினைக்கவே மனதுள் இனம் புரியாத ஒரு வெறுப்பு. இன்று குளிப்பதா வேண்டாமா? என்ற சோம்பல் மனதின் வினா மனதில் எழ போர்வையை விலக்காமலேயே தலையணையருகில் துழாவுகின்றேன் என் செல்லிடப்பேசியை. இரவு “அதிர்வு” க்கு மாற்றப்பட்டதன் விளைவு பார்க்கப்படாமல் குவிந்திருக்கின்றன குறுஞ்செய்திகள். அம்மாவின் “எழுந்து விட்டாயா?” பல்கலைக்கழக நண்பர்களின் “காலை வணக்கங்கள்” மற்றும் “கடிகள்” அண்ணாவின் “ நேற்றிரவு படித்தாயா?” என் மேலதிகாரியின் “நான் இன்று வரமாட்டேன் மீதங்களை முடிக்கவும்” என நீளும் பட்டியலில் தேடுகின்றேன் என்னவனின் குறுஞ்செய்தியை....

விடுதி வாழ்க்கையில் தவறவிடுகின்ற அம்மாவின் அதிகாலை முத்தம், சூhடான கோப்பி, அதை தோட்டத்திலமர்ந்து பருகும் இன்பம், சோபாவில் அண்ணாவின் அருகில் அமர்ந்து உணரும் இளஞ்சூடு, நாய்க்குட்டின் பரிஸம்ஈ பல்துலக்காமல் உண்னும் காலையுணவு இப்படியாக தொடரும் என் மழைநாள் பணிகளை ஒரு கணம் நினைத்தவளாக கட்டிலை விட்டு இறங்குகின்றேன். புதிதான இப்புதிய நாளை வரவேற்பதற்கு....

ஆனாலும்  இன்று மாலை அடைமழையிலான எனது நனையலையோ தேங்கி நிற்கும் நீரில் காகித கப்பல்களை விடுவதையோ அம்மாவின் தொலைபேசியினூடான ஏச்சுக்களையோ காய்ச்சல் வராமல் தலையில் ஓடிகொலோன் போட்டு பனடோல் குடிக்கப்போவதையோ நிச்சயம் மிஸ் பண்ணப்போவதில்லை....

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை