Thursday, May 22, 2014

நம்மவர் குறுந்திரைப் படங்கள் ஒரு பார்வை - வைச்சாக் குடும்பி

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணிநேர படபிடிப்பு போட்டியில் தயாரிக்கப்பட்ட “வச்சா குடும்பி” குறுந்திரைப்படத்தின் இணைப்பினை பலர் முகநூலில் பதிந்திருந்தனர். என்னடா பேரே வித்தியாசமாயிருக்கே என்ன தானிருக்கு என்டு பார்ப்பம் என்று யு – டியுப்புக்கு போனா….. 8 நிமிடங்களுள் பல டென்ஷன்கள் குறைஞ்சத போலதொரு பீலிங்…. இதையும் தாண்டியும் “வச்சா குடும்பி” பற்றி சில சொல்லியே ஆகவேண்டும்.

நேரடியான நகைச்சுவை படைப்பாக இல்லாது இருண்ட நகைச்சுவை (Dark Comedy) ரீதியிலான கதையமைப்பு முறையில் கருவை மையப்படுத்தி நகைச்சுவையை இரண்டாம் பட்சமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதானதொரு படைப்பு இது.

இத் திரைப்படத்தின் பலமாக நான் கருதுவது இப்படத்தின் கருப்பொருள் மற்றும் திரைக்கதையமைப்பும் (மையப்) பாத்திர படைப்பும் ஆகும். இதன் கருப்பொருள் இன்று பொதுவாக உள்ள பிரச்சினையாகும். நிச்சயம் அண்ணன், தம்பி என்று எமக்கருகில் உள்ள ஒரு பாத்திரத்தின் உளப்பிரச்சினையை “வச்சா குடும்பி” வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. இளைஞர்களது “வழுக்கை விழல்” என்னும் இந்தப்பிரச்சினை பல இளைஞர்களின் ஆளுமையையும் ஆற்றலையும் மட்டுப்படுத்தும் பிரச்சினையாக இன்று மாறிவருகின்றது. அந்த வகையில் இக்குறும்படத்தின் மையப்பாத்திரமான நிரோஷ் ஏதோவொரு பாத்திரமாகவன்றி எம்மைக்கடக்கின்ற ஒரு நபராகவே குறும்பட முடிவில் மாறிவிட்டிருந்ததை உணரமுடிந்தது.

அடுத்து இதன் திரைக்கதையானது 3 ஆக்ட் (3 யுஉவ) கட்டமைப்பை பேணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது இக்குறுந்திரைப்படம் அது பே சவந்த விடயத்தை தெளிவாக சொல்லி ஒரு கதையை அனுபவிக்கும் உணர்வை பார்ப்பவர்களுக்கு கொடுக்க உதவியாக அமைந்துவிட்டது.  பல குறுந்திரைப்படங்களில் இந்த 3 ஆக்ட் கட்டமைப்பு இருப்பதில்லை. இது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இந்த ஆக்ட் கட்டமைப்புக்களை உடைத்தும் திரைப்படங்கள் வரவேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள படைப்பாளிகளுக்கு கதையைச் சரியாக சொல்ல இதுவே உசிதமான வழி. ஏனெனில் வதிகளைத் தெரிந்தவர்களாற் தான் விதிகளை உடைக்க முடியும். அத்துடன் இந்த 3 ஆக்ட் செந்நெறிக் கட்டமைப்பு எடுத:துக்கொண்ட கதையை தாக்கபூர்வமாக சொல்ல ஒரு இலகுவான வசதியானதொரு கருவி. அந்த வகையிழல் இக்குறுந்திரைப்படத்தில் மையப்பாத்திர அறிமுகம் படத்தின் பேசுபொருளை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தல், கதையின் திருப்புமுனை, மையப்பாத்திரத்தின் போராட்ட காலகட்டம், கிளைமாக்ஸ், முடிவு என்பன சரியான காலப் பரிணாமங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இது பார்ப்போருக்கு சௌகரியமாகவும் கதையோடும் மையப்பாத்திரத்தோடும் நாம் பயணிக்கவும் வசதி செய்து கொடுக்கிறது. உதாரணமாக படம் ஆரம்பித்து 20 ஆவது செக்கனிலேயே இந்தப்படம் இளவழுக்கை பற்றியது எனவும் இதன் மையப்பாத்திரம் இவர் தான் எனவும் தெளிவாக தெரிந்துவிடுகிறது. எமது சூழலில் வெளிவரும் பல குறுந்திரைப்படங்களில் இதற்காக படத்தின் அரைவாசி நேரம் வரையும் காத்திருக்க வேண்டியுள்ளது. சில படங்களில் கிளைமாக்சின் போது தான் “அட இது இதைப்பற்றித்தான்” என்பது தெரிய வருகின்றது.

அடுத்தது இப்படத்தின் முக்கிய அம்சம் படத்தின் பாத்திரப்படைப்பு ஆகும். இதுவும் உண்மையில் திரைக்கதை சார்ந்த விடயம் தான். அதேவேளை அந்தப்பாத்திரத்தை சரியாக புரிந்துகொண்டு அதன் அக மற்றும் புறவய பண்புகளை வெளிப்படுத்திய நடிகரின் நடிப்பாற்றல் சார்ந்த விடயமும் ஆகும். வெளிப்பார்வைக்கு இக்குறுந்திராப்படம் முடி அல்லது மொட்டை பற்றிய படமாக இருந்தாலும் இது மையப்பாத்திரத்தின் அகமுரண் பற்றிய படமாகும். காலகாலமாக திரைப்பட படைப்பாளிகள் அனைவரதும் சவாலாக இருந்து வரும் விடயம்.”பாத்திரங்களின் அகமுரணை எவ்வாறு காட்சிப்படுத்துவது?” மற்றும் “அகவயத்தை புறவயமாக்குவது” என்பனவாகும். இவை நாவல் அல்லது சிறுகதை எழுத்தாளர்களுக்கு வாய்பாகவும்  திரைப்படைப்பாளிகள், திரைக்கதை எழுத்தாளர்களுக்கு சாபமாகவும் இருந்து வரும் விடயம். இந்த முயற்சியில் தோற்றுப்போன பல படைப்பாளிகள் உண்டு. பெரும்பாலான வர்த்தகப்படங்கள் லாவகமாக அகவயப் (Introvert) பாத்திரங்களை தவிர்த்து குறிப்பாக மையப்பாத்திரங்கள் புறவய (Extrovert) வெளிப்பாடு அல்லது பிரச்சினைகளை கொண்ட பாத்திரங்களின் கதையோடு அல்லது பிரச்சினைகளை கொண்ட பாத்திரங்களின் கதைகளையே தொடுவதுண்டு. வச்சா குடும்பி அகமுரணை காட்சிப்படுத்துவதிலும் அகவயத்தை புறவயப்படுத்துவதிலும் ஓரளவு வெற்றியைக்கண்டுள்ளது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அகப்பிரச்சினையை வெளிக்கொணரும் வகையில் அந்தப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்படும் செயற்பாடுகள் ஆகும். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு செயலும் யதார்த்தமானதாகவும் அகத்தை வெளிப்படுதுவதாகவும் அமைந்துள்ளன. இது பார்வையாளர்கள் அவர்களையே அறியாது  Sub-Conscious Mind இல் பாத்திரத்தின் உளப்பிரச்சினையோடு தம்மை தொடர்படுத்திச்செல்ல வழிசெய்கிறது.

இப்படத்தில் நான் கவனித்த இன்னொரு விடயமும் உள்ளது. மற்றவர்கள் இதை கவனித்தார்களோ தெரியாது. இதில் 3 ஆண் பாத்திரங்களும் 4 பெண் பாத்திரங்களும் வருகின்றார்கள். இந்தப் பெண்கள் நான்கு பேரும் கலகலப்பானவர்களாகவும், உணர்வுகளை வெளிப்படையாக பகிர்பவர்களாகவும், கரார் ஆனவர்களாகவும், எனஜெர்டிக்கானவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆண் பாத்திரங்கள் அனைவரும் டல்லானவர்களாகவும், உம்மென்று முகத்தை வைத்திருப்பவர்களாகவும், இறுக்கமானவர்களாகவும், எனேர்ஜி குறைந்தவர்களாகவும், மூன்று பேருமே மொட்டந்தலைகளாகவும் உள்ளனர். தெருவில் மோட்டார் சைக்கிளில் கடந்து போகும் ஆண்கள் கூட (Extras) சமூகத்தின் வக்கிரத்தினை பிரதிபலிப்பவர்களாகவும் இருக்கின்றனர். அந்த வகையில் இக்குறுந்திரைப்படத்தில் ஒரு பெண்ணியம் கலந்திருக்கின்றதோ என்ற சந்தேகம் வருகின்றது.

இப்படத்தில் சில ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரைக்கதை சார்ந்து சொல்வதாயின் பார்மசி முதலாளிதான் மையப்பாத்திரத்தின் தந்தை என்பது பார்மசிக் காட்சியிலேயே காட்டப்பட்டிருக்க வேண்டும். திடீரென பார்மசிக்குள் நுழைகின்ற மையப்பாத்திரம் கடையிலுள்ள பொருட்களை அள்ளி பையில் போடுகின்றார். கடையிலுள்ள பெண்கள் அவரை வலு கஷ_வலாக கிண்டல் பண்ணுகிறார்கள். இது எப்படி நடக்க முடியும்? என்ற அசௌகரியம் இந்நேரத்தில் பார்ப்போருக்கு வருகின்றது. கடை முதலாளி நிரோஷின் தந்தை என்கின்ற முடிச்சு திரைப்படத்தின்மையப்பகுதியில் தான் அவிழ்கிறது. இது தயாரிப்பு குழு வைத்த சஸ்பென்ஸா அல்லது கதையமைப்பில் உறவு நிலையை முன்னரே தெரியப்படுத்தியிருக்க வேண்டியது விடுபட்டு விட்டதா? என்பது தெரியவில்லை. எது எவ்வாறாயினும் Dark Comedy  குறுப்படத்திற்கு இவ்வாறானதொரு சஸ்பென்ஸ் அநாவசியம் மட்டுமல்ல பார்ப்போரையும் சற்று குழப்பத்திற்கு உள்ளாக்கிவிடுகிறது

அதே போன்று, தமது வீட்டிற்கு வரும் அந்தப் பெண்ணை நிரோஷின் தாயார் மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று தடவை கட்டிப்பிடித்து முத்தமிடுகின்ற காட்சியும் பார்ப்போருக்கு சற்று அசௌகரியமாகவுள்ளது.. இது நடிப்பு, இயக்கம் சார்ந்த குறைபாடாகக் கூறலாம். இதில் இதன் இயக்குனர் கவனம் எடுத்திருக்கலாம். அல்லது எடிட்டிங்கிலாவது அதனைச் சரிப்படுத்தியிருக்கலாம். இதைவிட தேவைக்கு அதிகமாக கோணங்களில் பல இடங்களில் ஷொட்கள் வைக்கப்பட்டுள்ளன. அளவுக்கதிமான ஷொட்களும் கோணங்களும் கூட பார்ப்போருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியனவே.

இசை பற்றி சொல்வதாயின் இதற்கு இசையமைப்பாளர் என யாரும் குறிப்பிடப்படவில்லை. இசை ஆலோசகர்கள் என மூவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தபேலாவை மட்டும் வைத்து இசையை கொடுத்திருக்கின்றார்கள். இது எமது தாளலய நாடகங்களை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது. கறுப்பு நகைச்சுவைக்கும் தாளலய நாடகங்களுக்கும் நியை சம்பந்தம் உண்டு என்னும் வகையில் அது ஓரளவு பொருத்தமானது தான். ஆனால் சில இடங்களில் இசை அதிகமாகவும் சில இடங்களில் பொருத்தமானதாகவும் உள்ளது. இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
எல்லாற்றையும் விட, இக் குறுந்திரைப்படத்தின் மிக முக்கிய குறைபாடாக நான் கருதுவது, இப்படத்தின் வேகம் கூடிவிட்டது. ஒன்றன் பின் ஒன்றாக காடசிகள் மாறிக் கொண்டேசெல்கின்றன. பார்ப்போருக்கு மூச்சுவிட நேரமில்லாதவாறு விடயங்கள் ஓடிக்கொண்டு போகின்றன. சுமார் ஏழு நிமிடப்படங்களைக் கொண்ட படம் ஒரு நிமிடத்துக்குள் முடிந்துவிட்டது போன்ற ஒரு பீலிங். ஒரு வகையில் இப்படத்துக்கு இது ஒரு சாதமான விடயமாக இருந்தாலும் ஒரு நகைச்சுவைப் படம் இவ்வளவு வேகவேகமாக நகர்வது பொருத்தமானதாக இல்லை. இதன் இயக்குனர், எடிட்டர்கள் ஒரு நகைச்சுவைப் படத்தைவிட த்ரிலர் படத்துக்கே பொருத்தமானவர்கள் என நான் நினைக்கிறேன். 

எது எப்பிடியிருப்பினும் காதல், நட்பு, போர் வரலாறு என ஒரு வட்டத்தில் சூழன்று கொண்டிருக்கின்ற எமது படைப்புக்களில் புதியதொரு கருவினைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'வச்சா குடும்பி' குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். 'வச்சா குடும்பி' இலங்கை குறும்பட முயற்சியில் ஒரு மைல்கல்.

Link -  https://www.youtube.com/watch?v=Y-baFhnASyk&list=UUtAmpJWHFElO60H8g9nrmcQ

Friday, May 2, 2014

ஒற்றையடி பாதை.....

தொலைந்து….
தொலை தூரம்…
போய்விட துடிக்கின்ற இதயம் - உன்
தொலைபேசி பிரியங்களில்
மீண்டும் உனக்கான
அடம்பிடித்தல்களில் தான்
புதைந்து போகின்றது….

ஊமைப் பொழுதுகளில்
தனிப்பாதை வகுக்க
நினைக்கும்
நிமிடங்களில்
ஆழ்மனதிலிருந்து
அமிழ்ந்திருந்த பந்தாக
விளிம்பை
எட்டிப்பிடிக்கின்றன - உன்
நினைவுகள்…..

பாலைவனத்தில்….- என்
பாதச்சுவடுகள்
பாதி தூரம்
கடந்த பின்….
பசுமை கரங்கள்
நீட்டுவாய்
அந்த
தழுவல்களுள்
ஒளிந்து கொள்கின்றேன் நான்…..

கோபங்களும் - என்
வலிகளுடனான
உணர்வுகளும் - உன்னை
வலிக்க வைக்க
கோர்த்த வார்த்தைகளும்
கண்ட பொழுதில்
கண்ணீராகித்தான்
கரைகின்றது……

எப்படியோ....
பாதைகளற்ற – என்
வனாந்தர வாழ்விற்குள்
புகுவதற்கான
ஒற்றையடி பாதையை
கண்டறிந்து கொள்கின்றவன்
 நீ….

மீண்டும்
விலகுவாய்…
வலி தருவாய்….
அலட்சியம் செய்வாய்....
என்று புரிந்தும் - நீ
கண்டுபிடித்து வரும்
ஒற்றையடி பாதையின்
முடிவில் காத்திருப்பேன்….. – உன்
நிமிட பிரியங்களுக்காக….

அதிகம் வாசிக்கபட்டவை