Friday, November 18, 2016

அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு......

அன்புள்ள அப்பா, அம்மாவிற்கு...

இன்றுடன் என் வாழ்க்கையின் புதியதொரு வருடத்தில் காலடி வைக்கின்றேன். இதற்கு முதற்கண் அந்த இறைவனுக்கும் எனது உள பலமாயிருந்து வழிநடத்திக்கொண்டிருக்கின்ற உங்கள் இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். இத்தனை வருடங்கள் என் ஆயுளை கடந்துவிட்டேன் என்பது சற்றே வலி கலந்த மகிழ்ச்சியே. வலி - இன்னும் சில காலம் தான் உள்ளது என்பதற்கு மகிழ்ச்சி- இத்தனை வருடம் வாழ்ந்துவிட்டேன் என்பதால்…. 

கடிதங்கள் என்பது தூரங்களின் வடிவம்…. அதனால் தான் என்னை விட்டு தூரங்களில் இருக்கின்ற உங்களிருவருக்கும் விடுதியிலிருந்து கடிதம் எழுதுகின்றேன். என்னால் வார்த்தைகளை விடவும் வரிகளில் தான் உணர்வுகளை கொட்ட முடிகின்றது என்பது இன்னுமொரு காரணம். அப்பா, அம்மா உங்களிருவருக்கும் என் மீதான இரு தனித்தனி கனவுகள் உண்டு. அதில் அப்பா உங்களது என் கல்விசார் கனவினை மிகவும் அண்மித்துவிட்டேன். அம்மா உங்களின் என் வாழ்க்கைத்துணை குறித்த கனவிற்கு விரைவில் என் சம்மதங்களை அளிப்பேன். ஆனால் அதற்கு எனக்கு சில காலங்கள் தேவை சில காயங்களை ஆற்றுவதற்கு…..  நானும் தம்பியும் ஒவ்வொரு பிறந்த தினத்திலும் உங்களுக்கு எழுதுகின்ற கடிதங்களில் போட்டி போட்டுக்கொண்டு எங்களது சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் முதல் சாதனைகள் வரை எழுதியிருக்கின்றோம். …தூரங்களில் இருக்கும் உங்களிருவருக்கும் எமது சின்ன வலிகளை கூட மிகவும் வேதனை தரும் என்பதால் வலிகளை நாம் சொல்வதில்லை….இம்முறையும் தம்பியின் கடிதம் அப்படித்தானிருக்கும் என நம்புகின்றேன். ஆனால் என்னால் முடியவில்லை… அல்லது உங்களிருவருடமும் என்னால் நடிக்க முடியவில்லை.; கதைக்கும் போது குரல் இடறினால் தடுமல் என்று சமாளிப்பேனே அப்படி சுயபரிசோதனைக்காக எழுதுகின்ற இக்கடிதத்திலும் சமாளிக்க எனக்கு விருப்பமில்லை. இவற்றிக்கெல்லாம் முன் உங்களிருவரிடம் நான் இருவேறு கேள்விகளையும் பொதுவான கேள்வியொன்றினையும் கேட்க விரும்புகின்றேன். எனக்கு கட்டாயம் பதிலும் வேண்டும். 

அப்பா பேண் இல்லாத உங்கள் தலையில் பேண் எடுக்கச்சொல்லி நான் தலைபார்க்கும் நேரத்தில் கண்ணயவீர்களே அப்போதெல்லாம் “அப்பா… அப்பா” என்று எழுப்பி கேள்விகளை கேட்பேனே நீங்களும் சிரித்துக்கொண்டு பதிலளிப்பீர்களே அப்படியொரு சந்தர்ப்பமாக இதையும் நினைத்து நீங்கள் புன்னகைப்பது எனக்கு அருகில்  நீங்கள் இல்லாவிட்டாலும்  எனக்குத் தெரிகிறது. “நாம் போகின்ற பாதை சரியானால் நம்மை காப்பதற்கும் நம்மோடு கைகோர்த்து நடப்பதற்கும் பலர் இருப்பார்கள்” என்று ஒரு நாள் சொன்னீர்களே அப்பா. இந்த சமூகத்தின் பிரதிநிதியொருவர் என்னை நன்றாக அறிந்தவர் நான் நடத்தை கெட்டவள் என்று உரக்கச்சொன்ன போது நீங்கள் சொன்ன அந்த பலர் மௌனமாக தான் கடந்தார்கள். மௌனங்கள் என்பது சம்மதம் தானே…. இதுவரை கவலைகளால் நான் தலையணை நனைத்த நாட்கள் உண்டு. ஆனால் உறுத்தல்களால் புரண்டு படுத்த நாட்கள் என் இரவுகளில் இருந்ததில்லை. அப்படியென்றால் நீங்கள் சொன்ன சமூகமும் அதன் தர்ம நீதிகளும் மாறிவிட்டதா அப்பா?

நீங்கள் தானே அம்மா கோபம் -ரௌத்ரம் இரண்டிற்கும் வேறுபாடுண்டு. கோபம் என்பது இடம், பொருள், நபர் பார்த்து வருவது… ரௌத்ரம் என்பது நம்மவர்கள் என்றாலும் காய்வது என்று சொல்லித்தந்தீர்கள். நான் அண்ணா என்று மனசார பழகியவர். வயது வந்த குழந்தையின் தந்தை. விவாகரத்து கூட ஆகாதவர். என்னை தன்னுடைய கடைசித்தங்கையாக அல்லது முதல் குழந்தையாக கொள்ள வேண்டியவர். எப்படி தன் காமத்தை காதல் என்ற பெயரில் என்னிடம் சொல்லலாம்??. அவர் அனுப்பியவற்றினை விளங்கிக்கொள்ள எனக்கு விடுதி அக்காக்களின் உதவி தேவைப்படும் அளவுக்;கு என் முதிர்ச்சியின்மை இருந்திருந்தது. நீங்கள் சொன்ன ரௌத்ரம் என்னுள் இருந்ததால் தான் அவர் எவ்வளவு பெரிய போராளி என்கின்ற போதும் உரத்துக்கத்தினேன். ஆனால் ரௌத்திரங்களுக்கான தீர்ப்புக்களும் பக்கசார்பானவை என ஏன் எனக்கு சொல்லித்தரவில்லை? 

அம்மா- அப்பா உங்களுக்கு சிலவருடங்களுக்கு முன்னைய சம்பவம் ஞாபகம் இருக்கின்றதா? நாம் அருவரும் கூடியிருந்த பொழுதில் “அதெப்படி ஏழு வருடங்கள் அடிக்கடி பேசாமல் காதலித்து காத்திருந்து கல்யாணம்; கட்டினீர்கள்?” என்று தம்பி கேட்டதற்கு “காதல் என்பது இரு மனங்களுக்கிடையான ஒலி” என்று அம்மா பதிலளித்தது இன்றும் என்னுள் பதிவாக பத்திரமாக இருக்கின்றது. நீங்கள் அதை புன்னகையால் ஆமோதித்ததையும் என்னுள் சேமித்து வைத்திருக்கின்றேன். என்னுள்ளும் ஒரு ஒலி கேட்டிருந்தது அப்பா… ஆனால் அது என்னை எல்லோரிடமும் விட்டுக்கொடுத்தது, நான் பெரிதாக நினைக்கின்ற ஒழுக்கத்தை எல்லோர் முன்னிலையிலும் கேள்விக்குட்படுத்தி விட்டு மௌனித்திருக்கின்றது. அன்பும் நம்பிக்கையும் தான் நம்முள்ளான ஒலிக்கு அத்திவாரம் என்றால் என்னுள் கேட்ட ஒலி பொய்யா? இதற்கு நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுத்தந்ததை போல் சேர்ந்து தான் பதிலளிக்கவும் வேண்டும். 

முன்பெல்லாம் விடுதி வாழ்க்கை என்பது உங்களனைவரையும் பிரிந்து வாழ்வதலான வலி மட்டுமே… இப்போதெல்லாம் ஏதோவொரு தனிமை, வெற்றிடம், சொல்லிட முடியாத வேதனை எல்லாம் என்னை சூழ்ந்திருப்பதாக படுகின்றது. எனக்கு மட்டும் சொந்தமான உரிமையுடனான தோள் எனக்குத் தேவைப்படுவதாக உணர்கின்றேன். என் கோபங்களிலுள்ள நியாயங்களையும் மௌனத்திலுள்ள வலிகளையும் உணர்கின்ற உள்ளமொன்று தேவைப்படுகின்றது. அப்பா! மட்டக்களப்பை சேர்ந்த நீங்கள் யாழ்ப்பாணத்திற்காகவும், அம்மா! யாழ்ப்பாணத்தை சேர்ந்த நீங்கள் மட்டக்களப்பிற்காகவும் சண்டை போடுவீர்களே அப்படி மண்ணைக்கூட காதலுக்காக மாற்றி நேசிக்கின்ற ஒருவர் எனக்கு வேண்டும். என்னவருடனான அந்த குட்டிச் சண்டைகளில் கூட மண் மீதான காதல் மட்டுமல்ல என் மீதான காதலும் இருக்க வேண்டும். அந்தக்காதல் என்னை மேலும் மேலும் செதுக்க வேண்டும். நான் நடக்க தொடங்கிய பின்னும் கீழே விழுந்துவிடுவேன் என்று கைபிடித்து கூட்டிப்போய் சேர்ப்;பீர்களே இப்போதும் உரிய கைகள் என் விரல்களை உரிமையாக பற்றும் வரை என்னை என் விரல்களை விட்டு விடாதீர்கள். விழுந்துவிடுவேன்…..சிறு வலியை கூட தாங்கும் சக்தி எனக்கில்லை. 

அப்பா! நடித்து வாழ்தலின் வெற்றி, அதனால் கிடைக்கும் சலுகைகள், என் முதுகில் குத்துபவர்கள் யார்? என்னுடன் இறுதி வரை பயணிக்கப்போகின்றவர்கள் யார்? தேவைகளுக்கு மட்டும் என்னை பயன்படுத்திக்கொண்டவர்கள் யார்? எவ்வளவு தான் நச்சுப்பாம்பிற்கு பால் வார்த்தாலும் அது தன் பிறவி குணத்தை விடுவதில்லை என்று  கடந்த வருடங்களை விடவும் பல படிப்பினைகளை இந்த கடைசி 365 நாட்களும் எனக்கு கற்றுத்தந்திருக்கின்றது. அம்மா! நான் சீதையின் தீக்குளிப்பை வியர்ந்ததுண்டு ஆனால் எப்போதும் நேர்மையானவர்கள் தான் தீக்குளிக்கின்றார்கள். தீயென்பது ஹோமம் வளர்த்து மட்டும் குதிப்பதல்ல வலியுடனான மௌனங்களும் ஒருவகையில் தீக்குளிப்பு தான். 

என் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன்பும்…என் விரல்களை என்னவனிடம் கோர்ப்பதற்கு முன்பும் எனக்கு உங்களிருவரிடமும் இருந்து சிறு அணைப்பு தேவையாயிருக்கின்றது. அந்த அணைப்பின்போதும் அழுதுகொண்டு “எங்கள் குழந்தைகளுக்கும் ரௌத்திரம், நீதி, அந்த ஒலி….மௌனம் இதைத்தான் சொல்லிக்கொடுப்போம்” என்று தான் உறுதியுடன் முனுமுனுப்பேன். நீங்கள் என் குழந்தைகளை வளர்க்க நேரும் போதும் இவற்றினையே சொல்லிக்கொடுங்கள். மௌனங்களின் வலிமையையும் மரியாதையையும் கற்றுக்கொடுங்கள். ஆனால் அதீத மென்மையாக என்னைப்போலல்லாமல் அவர்களை சற்று கடினமானவர்களாக வளருங்கள். இந்தளவு வலிகள் என் குழந்தைகளுக்கும் வேண்டாம். 

என் ஆயிரம் அன்பு முத்தங்களுடன் இம்மடலை முடித்துக்கொண்டு கடவுளிடமும் காலத்திடமும் கொடுத்துவிட்டு நகர்கின்றேன். உங்களிருவரிடமும் இருப்பதை போன்று; நிச்சயம் இந்த மீராவின் கேள்விகளுக்கான பதில் நான் வணங்குகின்ற கடவுளிடமும் என்னை நகரவைக்கின்ற காலத்திடமும் இருக்கும். பதில்களுக்காக காத்திருக்கின்றேன். இந்த வலிகளும் ஒரு நாள் என்னைக் கடந்து போகும்.
 
உங்கள் அன்பு மகள்
மீரா

அதிகம் வாசிக்கபட்டவை