தொதல்
இப்படித்தான் அண்மைய பயணத்திலும் நாக்குச்செத்துப்போன என் நண்பர்கள் என்னுடைய இருப்பிடத்திற்கு வந்து சாப்பிட ஆசைப்பட்டு தாங்கள் சொல்லும் உணவை சமைத்துத்தரும்படி கேட்டார்கள். சரி என்ன வேண்டும் என்று கேட்டு அவர்கள் தந்த பட்டியலில் இனிப்பு வகைக்குள் தொதலும் அடங்கியிருந்தது. முதல் நாளே கடைத்தெருவிற்கு போய் இலங்கை இந்திய கடைகளை உருட்டி பொருட்களை வாங்கினால் எண்ணெய் தேங்காய் மட்டும் இல்லை. இங்கு சிரட்டையுடனேயே தேங்காயை காணுவது அரிது. துருவிய பொதி செய்யப்பட்ட தேங்காய் பூ தானுண்டு. சரி ஆலையில்லா ஊரில் இலுப்பம்பூ என்று இதனை வாங்கி வந்து சேர்ந்தாகிட்டு. இரவு பயறை வறுத்தல், கச்சான் வறுத்தல், என இதர வேலைகளும் செய்தாகிட்டு. படுக்கைக்கு வந்து சேர்ந்த போது தான் வீட்டு நினைவுகள் என்னை அழுத்த ஆரம்பித்தன. முக்கியமாக தொதல் கிண்டும் போது அம்மா ஒவ்வொரு முறையும் என் வீரதீர கதையை சொல்லி என்னுடைய மானத்தை வாங்குவதுண்டு. இப்போதும் அச்சம்பவத்தினை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு வருவதுண்டு.
மட்டக்களப்பாரை பொறுத்தவரை தொதல் கிண்டுதல் (செய்வது.. தயாரிப்பது என்பன போன்ற வினைச்சொற்களை தவிர்த்து கதைக்கும் போது மிகநெருக்கமாக இருப்பதால் "கிண்டுதல்" பதத்தினையே தொடர்கின்றேன். ) என்பது கிட்டத்தட்ட குட்டி மாமாங்கம் போன்றது. ஒரு கொத்தில் கிண்டுவதாகட்டும் பத்து கொத்தில் கிண்டுவதாகட்டும் “நம்மட வீட்ட தொதல் கிண்டுறம்” என்பதை ஊரே தெரிந்துகொள்ளும். அந்தளவிற்கு இருக்கும் அலப்பறைகள். கிண்டுவதற்கு முதல் இரு நாட்களில் நல்ல எண்ணெய்த்தேங்காய் கிடைக்குமா? என்று ஊரில் தேடித்திரிவதில் பாதிப்பேருக்கு தெரிந்து போய்விடும். அடுத்து தொதல் கிண்டுவதற்கான உலவாரம் தாருங்களன் என்டு கேட்பதில் மீதி சொந்தக்காரர்களுக்கும் தெரிந்து விடும். இப்படி பல அலப்பறைகளுடன் ஆரம்பமாகின்ற இந்த தொதல் கிண்டுதல் என்பது இரண்டு மூன்று நாட்கள் தொடரும் சடங்கு என்பது நம்மட ஆட்களுக்கும் நல்லாத்தெரியும்.
முதல் நாளே பயறு, அரிசி இடித்தல், வறுத்தல், புடைத்தல் என வீடு அல்லோலகல்லோலப்படும். அடுத்த நாள் அதாவது தொதல் கிண்டும் நாளன்று காலையில் எல்லோரையும் எழுப்பும் போதே “கெதியா எழும்புங்க இன்று தொதல் கிண்டுற வேல இருக்கு…” என்று வீட்டு பெரியவர்கள் ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் இரண்டொருவர் அன்றைய நாளுக்கான சமையல் வேலைகளைச் செய்ய ஏனையவர்கள் தொதல் கிண்டும் சடங்கிற்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பார்கள். யார் தேங்காய் துருவுவது? எத்தனை தேங்காய் துருவுவது..? என்று தொடங்கி நீண்டுகொண்டேயிருக்கும் அல்லோலகல்லோலங்கள்….
அநேகமாக மதிய உணவிற்குப்பின்னர் தான் இந்த சடங்கு ஆரம்பமாகும். தேங்காய் பாலினை பிழிந்து பெரிய தாச்சியில் ஊற்றி விறகடுப்பில் வைத்து கிண்டுவார்கள் பின்னர் கரைத்த மாவினை அதனுள் போட்டு “கையெடுக்காமல்” கிண்டுவார்கள். (இதற்காகவே வீட்டில் இரண்டு இளந்தாரிகள் இருப்பார்கள்.) ஒருவர் மாற்றியொருவர் உலவாரத்தினால் கிண்டுவார்கள். தேங்காய் பால் வற்றி எண்ணெய் விட ஆரம்பிக்கும். இதைக்கண்டால் பிறை கண்ட மாதிரி ஒருவித குதூகலம் பரவும். “நல்ல எண்ணெய்த்தேங்காய்” வாங்கி வந்தவருக்கும் பாராட்டு வேறு கிடைக்கும். இந்த நேரம் இருக்கும் பதத்தில் கொஞ்சம் சிரட்டையில் வாங்கி சாப்பிடுவதற்கென்றே என்னைப் போன்றதொரு கூட்டம் துருவிய புது தேங்காய்ச் சிரட்டையுடன் வலம் வருவதுண்டு, இந்த இளம் தொதலின் ருசி ஒருவிதமானது. சிட்டையில் அள்ளி வைக்கும் இளம் தொதலை ஊதி ஊதி சுடச்சுட சாப்பிடுவது வேற லெவல் சந்தோசம். தாச்சியிலுள்ள கலவை பொன் நிறத்திற்கு வரும் போது கச்சான், பயறு மற்றும் கருவா ஏலம் போன்றவற்றினை தூவுவார்கள். இந்தப் பொன்னிறம் சற்று கருமையாக மாறும் போது சவ்வரிசியினை தூவி இறக்குவார்கள். இறக்கிய கலவையை பாத்திரங்களில் பரவி ஒரு பக்கத்தினை எண்ணெய் வடிவதற்காக உயர்த்தி வைப்பார்கள்.
பிறகென்ன சற்று ஆறத்தொடங்க மணம் நம்மை அருகே அழைக்கும். இனியென்ன வெட்டி வெட்டி சாப்பிடுவது தான் வேலை. இதுவே வெளிநாடு செல்பவர்களுக்காக அனுப்பப்படவுள்ளது எனில் அதனை பழஞ்சீலையில் சுற்றி எடுத்து வேறாக வைப்பதுண்டு. இதற்கும் பிறகு தான் இருக்கிறது காவல் வேலை. புதுவருசம், கொண்டாட்டங்களுக்கு என்று பகிர்வதற்காக செய்யப்பட்ட இந்த தொதலை எறும்பு, பல்லியிடமிருந்து காப்பாற்றுவதை விடவும் நம்மிடமிருந்து காப்பாற்றுகின்ற வேலை………
இவ்விடத்தில் ஒரு விடயத்தினை குறிப்பிட்டேயாக வேண்டும். தொதல் என்பது நான்கு நிலைகளில் சாப்பிடுவதற்கு உகந்தது. ஒன்று இளம் பருவமாக இருக்கும் போது அதாவது இள கபில நிறத்தில் இருக்கும் போது சிரட்டையில் வாங்கி சுடச்சுட சாப்பிடுவது தனிச்சுவை. இரண்டாவது நன்றாக முறுகி பாத்திரத்தில் பரப்பப்பட்ட பின்னர் ஆறவைத்து எண்ணையை ஒற்றியெடுத்து சாப்பிடும் பருவம். மூன்றாவது சுற்றி நிற்பவர்கள் விளாரு கதைகள் கதைத்து தொதலை கவனிக்காமல் விட்டால் முறுகி கட்டிகளாக மொறுமொறு என்றிருப்பதை பல்லுப்போனாலும் பரவாயில்லை என்று இதனை சாப்பிடுவது. அடுத்த முக்கியமான நிலை தொதல் தாச்சியை, உலவாங்கினை ஒட்டியுள்ளதை சுரண்டி சாப்பிடுதல்.
இதற்கிடையில் இரண்டாம் பந்தியில் குறிப்பிட்டுள்ளது போன்று நம்முடைய சிறுவயது சாகச செயல் ஒன்றும் நினைவுகூறப்படும். அப்போது எனக்கு 4 வயதாம். புதுவருடத்திற்காக நாலைந்து பேர் சேர்ந்து அப்போது தொதல் கிண்டியிருக்கின்றார்கள். அப்போது அருகில் நானும் புதுச்சிரட்டையுடன் இளம்தொதல் கேட்பதற்காக நின்றிருக்கின்றேன். இரண்டு மூன்று தடவைகள் கேட்டும் அதில் நின்ற கஞ்சல் எனக்கு ஒரு துளி கூட தரவில்லையாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அதே சிரட்டையால் மண்ணையள்ளி தொதல் தாச்சிக்குள் போட்டிருக்கின்றேன் நான். அருகில் இருந்தவர்கள் என்னை விரட்டியிருக்கின்றார்கள். இதனால் அங்கிருந்து நான் ஓடிவிட்டேனாம். அம்மாவும் என்னை வெளுப்பதற்காக பிரம்புடன் என்னை தேடியிருக்கின்றார். என்னைக்காணவில்லையாம். இதனால் பதற்றமடைந்தவர்கள் எல்லாவிடமும் தேடிப்பார்த்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 3 மணிநேரமாவது தேடியிருப்பார்களாம். அப்போது யுத்த காலம், குழந்தை கடத்தல்கள் இடம்பெற்ற காலம் இனி கேட்கவா வேண்டும்….. அழுதுபுலம்பி கடவுளுக்கு நேர்த்தியெல்லாம் வைத்து அடுத்த கட்டம் முறைப்பாடு செய்ய நினைக்கும் போது பெரிய அண்ணா ஒரு சந்தேகத்தில் சாப்பாட்டு மேசையில் இருந்த உணவு மூடியை திறந்து பார்த்துள்ளார். நான் அதற்குள் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தேனாம். நீண்ட நேர தேடுதலில் கோபம் போய் அழுதுகொண்டிருந்த அம்மா என்னை தூக்கியணைத்து முத்தமிட்டாராம்.
இன்று வரை தொதல் பதம் சரியாக வருகின்றதோ இல்லையோ தொதல் கிண்டும் போது இந்த கதை பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நாளை காலையில் வீட்டாக்களுடன் பேசும் போது இங்கு நண்பர்களுக்கு குட்டிச்சட்டியில் தொதல் கிண்டவுள்ளதை நான் சொல்லும் போது நிச்சயம் இந்த கதையும் பேசப்படும்….. நினைவுகள் எவ்வளவு அழகானவை…. இனிமையானவை…
பிற்குறிப்பு: அந்த மண் விழுந்த தொதல் என்னாச்சு என்று நீங்கள் கேட்பது எனக்கு இங்கு வரை கேட்கின்றது. நான் மண் அள்ளி போடுவதற்கு மூல காரணமான அந்த கஞ்சல் மண் விழுந்த பகுதியை மட்டும் அள்ளி வீசிவிட்டு மற்றதை அநியாயமாக்காமல் சாப்பிட்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment