எலிகள் தினம்

 

நேற்று எலிகள் தினம் ! சிறுவயதிலிருந்தே ஒரு விடயம் என்னை பாதிக்கின்றது என்றால் அதிலொன்று இந்த “எலி”. குழந்தையில் பேச்சு பழகும் காலத்தில் வீட்டில் இருந்த வாலொன்று சுவற்றில் நகருகின்ற பல்லியை எலியென்றும், எலியை பல்லியென்றும் வேண்டுமென்றே எனக்கு பழக்கிவிட்டார். பகியாக ஆரம்பித்த இந்த பெயர் மாற்றம் அப்படியே மனதில் பதிந்து இன்றும் திடீரென கேட்டால் பெயர் சற்று தாமதித்து தான் வரும். பாசாலை காலங்களிலும் எனக்கும் ஆசிரியர்களுக்கும் முரணும் இதனால் பல தடவை ஏற்பட்டதுண்டு. இப்படி ஆரம்பித்த எலித்தொல்லை எலியை வாகனமாக கொண்ட பிள்ளையார், பிள்ளையார் பெயரைக்கொண்ட ஆட்கள் என இன்றும் நீளுகின்றது. 

சின்னாக இருக்கும் போது இவர் முதன் முதல் என்னை குரஸ் பண்ணிணது “புத்தகங்களை கடிப்பதில்”. நான் அன்று முதல் புத்தகப்பூச்சி. டொயிலட்டில் கூட புத்தகம் இல்லாமல் அமர்ந்திருக்க முடியாது. அந்தக்காலத்தில் “பிஞ்சு” என்றொரு சிறுவர் பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. அதில் வெளிவந்துகொண்டிருந்த தொடர்கதைகள், புதிர்கள், குறுக்கெழுத்து போட்டிகளுக்கு நான் அடிமை. மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருந்த இந்த பத்திரிகைகள் சேர்ந்தவுடன் ஒன்றாக சேர்த்து கட்டி எம்முடைய வீட்டு நூலகத்தில் வைத்திருந்தோம். இதில் சில ஆக்கங்களையும் நானும் சகோதரன்களும் எழுதி வந்ததால் இவ்வாறு சேகரித்து வந்தோம். ஒரு முறை உறவினர்களின் குடும்பம் வீட்டிற்கு வந்திருந்தது. அதில் இரு சிறுவர்களும் அடங்கும். எனவே நாம் எல்லோரும் விளையாடும் போது புளுகுக்கதைகள் ஆரம்பித்தன. இந்த பிஞ்சுப் பேப்பரில் வெளிவந்த திறமைகளை அவர்களுக்கும் காட்ட நினைத்து பிஞ்சு புத்தக கட்டினை தூக்கி வந்து திறந்தால் வெட்டுப்பட்ட பேப்பர் தூள்கள் தான் முதலில் கொட்டியது. ஒரு மாதிரி கட்டி பக்கங்களை திருப்பினால் என்னுடைய பெயர், ஆக்கங்கள் வந்திருந்த இடங்களிலெல்லாம் இருந்த அடையாளமே இல்லை. நான் நினைக்கின்றேன் இந்த எலி அநேகமாக தமிழ் எலியாகவும் என் மீது வஞ்சகம் கொண்ட எலியாகவும் தானிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேடித்தேடி என்னுடைய வரலாற்று சான்றுகளையா கடித்து துப்பியிருக்கும்?

பள்ளிக்காலத்தில் பாடசாலை தவணை தொடங்கும் போது அம்மா எம்மை புத்தகக்கடைக்கு கூட்டிப்போய் பொருட்களை எம்மை தேர்ந்தெடுக்க வைப்பதுண்டு. இல்லாவிட்டால் நம்மை சரிப்படுத்த பல நாள் அலைய வேண்டியிருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. மற்றவர்கள் அட்லஸ் உறையிட்ட அழிறப்பர், எச்.பி பென்சிலுடன் பெரும்பாலும் நிறுத்திவிடுவார்கள். ஆனால் எனக்கு மீன்குஞ்சு அழிறப்பர், அன்னம் வடிவிலான அழிறப்பர், கூர் மாற்றும் பென்சில், கலர் பென்சில், நட்சத்திரங்களும் குட்டி மீன்களும் நீந்துகின்ற அடிமட்டம், பார்பி ஸ்டிக்கர் என்று பட்டியல் அம்மா மறைமுகமாக அருகில் வந்து உறுக்கும் வரை விரியும். இன்று வடிவமைப்புகளின் நிமிர்த்தம் என் மேசைகளில் இப்பொருட்கள் எப்போதும் இருப்பதுண்டு. சில நேரங்களில் இன்றைய இந்த தொழில்தேர்விற்கு அப்போது அடித்தளமிட்டவை இவை தானோ என்றும் சிந்திப்பதுண்டு. அது ஒரு புறமிருக்க இந்த அழிறப்பர் தெரிவுகளுள் அன்னாசிபழம், தோடம்பழம் என பழவகை அழிறப்பர்களும் அடங்குவதுண்டு. இவை அவ்வவற்றின் வடிவம், நிறத்துடன் வாசனையும் கொண்டிருப்பதுண்டு. அது எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி வாங்கியவற்றினை வீட்டில் உள்ள எதிர் நாட்டு மன்னர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக இரகசிய இருப்பிடம் ஒன்று இளவரசியாரிடம் இருந்திருந்தது. அதில் துணியை விரிந்து மீன்குஞ்சை படுக்க வைத்து அதற்கருகில் இவை பதுக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் வைத்திருந்த மீன்குஞ்சு அழிறப்பறை காணவில்லை. வீட்டில் இருந்தவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்று அழுதுபுலம்பி அவர்களும் அடித்து சத்தியம் பண்ணி அம்மாவும் அரியண்டம் தாங்க முடியாமல் மீண்டும் வாங்கித்தந்து பிரச்சினை தீர்ந்தது. சில நாட்களின் பின் குசினிக்குள் எலி நடமாட்டம் என்று துப்புரவு செய்யும் போது பார்த்தால் என்னுடைய அழிறப்பர், அம்மாவின் கைகுட்டை, கச்சான் கோதுகள் என்று அது ஒரு இரகசிய அறையில் வைத்திருந்தது. 

பதின்மவயதில் பெடியன்கள் நம்மை நோக்கி கல்லெறிந்த காலகட்டத்தில் ஒரு வாலிப இளசு கடிதத்துடன் ஒரு புத்தகத்தினையும் என் கைக்கு கிடைக்கும் படி தூதனுப்பியிருந்தது. கடிதத்தினை தூதுவிடமே கொடுத்து விட்டு (இந்த தூது தான் இப்போது அந்த இளசின் மனைவி) அந்த கவிதைப்புத்தகத்தினை மட்டும் வைத்திருந்தேன். முன் பக்கத்தில் கிறுக்கினால் தெரிந்துவிடும் என்று போல அந்த இளசு ஐந்தாம் பக்கத்தில் இதயம் வரைந்து அதில் அம்பால் கிழித்து அந்த அம்பில் என் பெயரை எழுதியிருந்தது. “கே” க்கு பதிலாக “கோ” எழுதியிருந்த கடுப்பு இருந்தாலும் பரவாயில்லை என்று அடிக்கடி புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தை பார்ப்பதுண்டு. ஒரு நாள் புத்தகத்தினை தூக்கினால் கொட்டிய தாள் தூள்களுள் ஐந்தாம் பக்கம் மட்டுமல்ல ஆறு, ஏழு பக்கங்கங்களும் அரியப்பட்டிருந்தன. காதலில் தோற்றுப்போன எலி அல்லது பொறாமை பிடித்த போல அது தான் கடுப்பில் அரிந்திரிக்கும் என்று சபித்ததுடன் விட்டுவிட்டேன். ஆனால் இத்தோடு விட்டதா அது என்னை?

21 வது பிறந்த நாளுக்கு அழகான இளஞ்சிகப்பு நிறத்தில் புடவையொன்று பரிசாக கிடைத்திருந்தது. கறுப்பு, நீலம் தவிர வேறு நிறங்கள் பிடிப்பதில்லை என்றாலும் இந்த புடவை நிறத்தினை தாண்டியும் பிடித்திருந்தது. இதனை அலுமாரியில் மடித்து வைத்துவிட்டேன். சில வாரங்களின் பின் தேவாலயத்தின் நிகழ்விற்கு அணிவதற்கு என முதல் நாள் ஓரங்களை தைப்போம் என்று எடுத்தால் சில பகுதிகளை கொறித்து வைத்திருந்தது. 
இவ்வாறு எனக்கு மட்டுமல்ல வீட்டில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு வகையில் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. இதற்கு பொறி வைப்பதென முடிவெடுக்கபட்டு இரவில் கருவாட்டுத்துண்டை சூடு படுத்தி பொறியில் வைத்தோம். காலையில் கருவாடும் காணாமல் போய் விட்டது. இதுவும் பல தடவை பரிசோதிக்கபட்டதன் பின்னர் புதிய பொறிமுறையை கையாண்டோம். சிறு அசைவை எலி ஏற்படுத்தினாலும் பொறியின் வாய் மூடிவிடும் படியான பொறி வைக்கப்பட்டது. அதுவும் முதற்தடவை சரிவரவில்லை. மீண்டும் வைத்த போது ஒராள் மாட்டி விட்டார். ஆனால் பொறிக்குள் அவர் அலைந்ததும் அவதிப்பட்டதும் கண்களை உருட்டியதும் பார்க்க பாவமாகவிருந்தது. பாவம் விடுவோம் என்றேன். வீட்டுச்சண்டியன்கள் ஒத்துக்கொள்ளவில்லை. 

 

இறுதி ஆயுதமாக “இந்த எலிக்கும் ஒரு குடும்பம் இருக்கும், அதற்காக தான் சாப்பாடு எடுக்க வந்திருக்கும். குஞ்செலிகள் இது தாயாகவிருந்து போகாவிட்டால் பாவம் செத்துப் போகும்” என்ற பிரம்மாஸ்திரத்தினை பிரயோகித்தேன். நளினி தடுமாறிவிட்டார். கட்டளையும் இடப்பட்டு எலியும் ரிலீஸ் ஆகிட்டுது. 

சில வருடங்களுக்கு முன்னர் “மொன்ஸ்டர்” தமிழ்த்திரைப்படம் பார்க்க கிடைத்தது. நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இது பொதுவானது என்று தோன்றுகின்றது. இப்போதும் வீட்டின் குளியலறையில் வைக்கின்ற என்னுடைய சவக்காரத்தினை பதம் பார்க்கின்றது. பல்வேறு முறைகளில் சவக்கார மூடியையும் மூடிவைத்து, பாரம் வைத்தெல்லாம் பார்த்துவிட்டேன். எப்படியாவது சவக்கார ஓரத்தைகடித்துத்தான் விடுகின்றது. ஏன் எலிகளுக்கான தினம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயுங்கள். தேடிப்பாருங்கள். உலகில் எலிகளும் வாழத்தானே வேண்டும்.


No comments:

Post a Comment

பதிவுகள்

சமையல் கலை

அண்மையில் மட்டக்களப்பில் உணவு உற்பத்திகள் சார் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில்  Chef பய...

அதிகம் பார்க்கப்பட்டவை