Showing posts with label கானங்கள். Show all posts
Showing posts with label கானங்கள். Show all posts

தலைப்பிலி

 



அலுங்கல்களுடன் சிலநாள்
ஆத்திரங்களுடன் சிலநாள்
இருத்தல்களுடன் சிலநாள்
ஈர்த்திடாத அன்புடன் சிலநாள்
உறுத்தல்களுடன் சிலநாள்
ஊரறியா வலிகளுடன் சிலநாள்
எட்டதா உயரங்களில் சிலநாள்
ஏற்றம் கொண்டவர்களுடன் சிலநாள்
ஐயங்களுடன் சிலநாள்
ஒவ்வாமைகளுடன் சிலநாள்
ஓய்தல் இன்றி சிலநாள்
ஓளடதங்களுடன் சிலநாள்
(அ) ஃது எதுவுமின்றி  சிலநாள்
 
தீக்குளித்தல்களுக்கு மத்தியில்
பொறுமையோடு  சிலநாள்......
தாண்டவம் சிலநாள்
சக்தி லாஸ்யம் சிலநாள்
கோபப்பட்டு சிலநாள்
பாவப்பட்டு சிலநாள்
சொற்களோடு சிலநாள்
சொற்களற்று சிலநாள்
பக்தியுடன் சிலநாள் 
புத்தியோடு சிலநாள்
பூடகமாக சிலநாள்
இருப்பின் அடையாளமாக சிலநாள்
இருண்மையில் சிலநாள்
 
எப்படியும்
நாளை காலை 
விடியும் தானே 
 
ஆனால் அவள் மட்டும் 
சதா சாந்தமாக
இருப்பது எப்படி சதாசிவா?
 
 

வீணையைத் தாருங்கள்……



என்னவர்களே!
நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்….

என் சோகங்களை
சகானாவாகவும்…
உங்கள் மீதான கோபங்களை
ஆரபியாகவும்
காட்டிட முடியா வீரத்தை
நாட்டையாகவும்…
உமிழ்ந்திடாத வெறுப்புக்களை
அடாணாவாகவும்
என் விழிகளில்
தெரிந்திடும் பயங்களை
அசாவேரியாகவும்…
சாரங்காவில்.....
காணும் அற்புதங்களையும்
சாமாவில் சாந்தத்தினையும்
சொல்லிடா காதலை
உசேனியாகவும் - என்
சிறு மகிழ்வுகளை
 ஸ்ரீராகமுமாக
இசைத்துக்காட்டுகின்றேன்…
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

கனவின் திடுக்கிடல்களுடனான
என் விடியல்களை
பௌளியாகவும்….
கண் விழிக்கும்
காலைப்பொழுதுகளை பூபாளமாகவும்…
பிலஹாரியில் முற்பகல்களையும்
நடிப்புகளுடன் தொடர்கிற
நண்பகல்களை மத்தியமாவதியிலும்
பின்பொழுதின் சோர்வுகளை
பேகடாவிலும்….
மந்தாரமான மாலை வேளைகளை
கல்யாணியிலும்…
கண்ணீருடனான இரவுகளை
நீலாம்பரியிலும்….
இராகமிசைக்கின்றேன்…..
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
இராகங்கள் பிடிக்காவிடில்
கூறிடுங்கள்.. என்
உணர்வுகளை துறந்து
சங்கராபரணம் மட்டுமே
மீட்டுகின்றேன்;… - ஆனால்
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

உன் மடி மீது நான் உறங்க......

நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல்.
நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல்.

கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன்.
கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன்.

காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால்
எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன்.

சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன்.

சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக..

உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.
 ....................................................................................................................
 நிதமும் சேகரிக்கிறேன்
என் இரவுகளை
என்றேனும் ஓர் நாள்
உன் மடி மீது நான் உறங்க......

இமைகளிலே வலி
கண்ட போதும்
உறங்கவில்லை எனது நினைவுகள்...

என் நினைவுகள் அனைத்தும்
உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்....

என் விழிகளோ
இமை மூட மறுக்கின்றது... - அந்த
இமை மூடும் நொடி பொழுதிலாவது
உன் முகம் காண்பேனா என்று....

விடியும் இரவு போல..
விழி மூடா கனவு வேண்டும் - அக்
கனவிலும் உன் முகம் வேண்டும்.....
 எனக்காக (என் வேண்டுகோளிற்காக) என் நண்பன் எழுதிய கவிகள் இரசித்ததில் பிடித்தது....... நன்றி வாசு

அசைய மறுக்கிறது என் மனம்…….





அயல் நாட்டு இனிப்புகளை விடவும் - என்னவன்
வரிசையில் நின்று வாங்கிக்கொடுத்த
ஐந்து ரூபா மிட்டாயின்
சுவை மிகுந்திருந்தது என்னளவில்

ஆயிரம் அன்புமொழிகளை
முகத்துதிக்காக கூறுபவர்களை விடவும் - அவன்
கோபத்தில் கூறிய “என்னடா”வின்
அர்த்தம் அன்பின் எல்லை…

கட்டியணைத்திட அலைபவர்கள் நடுவில்
நடக்கும் போது உரசுகின்ற – அவன்
மேல் சட்டை நுனியின் ஸ்பரிசம்
அழகிய கவிதை…
முன் நடந்தாலும்
பின் தொடர்கின்ற – அவன்
பார்வை அலாதியானது

என்னவனுக்கு
பதவியில்லை பண்பிருக்கின்றது
பையில் பணமில்லை
மனதில் பாசமிருக்கின்றது..
தூக்கியெறிகின்ற உறவுகள் மத்தியில்
பட்டும் படாமலும் தொடர்கின்ற
கரிசனைகள் சொல்லும்
ஆயிரம் தத்துவங்கள்
இடையில் நிற்பவைகளை விடவும்
இடையறாது தொடர்வது சுகமல்லவா?


அப்பாவின்
அரண்மனையை விடவும் - அவன்
அருகாமை வேலியாகின்றது
அவன் அன்பிற்காக மட்டுமே
அருகில் மண்டியிட்டு
அசைய மறுக்கிறது
என் மனம்…….

நீரில் வாழும் மீனின் தாகம்....


என் பணம்
அழகு
படிப்பு
புதவி உன்னை
வாங்கியதற்கான விலை
என்றெல்லாம்
ஊர் பேசியது…

என் விடுதியின்
ஓவ்வொரு சுவர்களும்
என் நாட்குறிப்பின்
ஒவ்வொரு பக்கங்களும்
என் தலையணையின்
ஈரமும் சொல்லும்….
எதற்காக உன்னை
நேசித்தேன் என்று
நீரில் வாழும்
மீனின் தாகம்
மீன் மட்டுமே
அறியும்…..

அடுத்தவள்
கேட்டாள் என்னை
உன் முன் நிறுத்தி
யாரை நீ விரும்புகிறாயென்று
கேட்க வேண்டுமென்று….
ஒரு வேளை நீ என்
நோக்கி கைகாட்டியிருந்தாலும்
பணம்
புதவி
அழகு
படிப்பு என்று பல காரணம் கூறி
என் அன்பு தோற்றிருக்கும்…..
எதில் தோற்றாலும்
மீராவின் அன்பு
தோற்க கூடாது
என்னளவில் பெறுமதியற்றது
அதுவொன்றே

அவள் ஒதுங்கிடவா
என்றும் கேட்டாள்….
உன் அன்பிற்காக மட்டுமே
உன்னை யாசித்திருப்பேன்
அப்போதும் உன்னை
வாங்கி விட்டேன்
என்று தான் உலகம் கூறும்….

அன்பிற்கான ஏக்கம்
மீராவிற்கு புதிதல்ல….
கண்ணீரின் சூடு
பழகிவிட்டதொன்று…. – என்
பெண்மையின் மென்மை
உன்னை பகிராது…  பகிர்தலின்
வலி தெரிந்தே
இன்னொருத்திக்கு வலி கொடுக்காமல்
திமிராக விலகிவிட்டேன் -

என்னளவில்
உறவுகள்
தோற்றாலும்
என் உணர்வுகள்
தோற்க வேண்டாமென்று
ஒதுங்கி
ஊமையாக அழுகின்றேன் நண்பனே….

பேசுகின்றான் பாலச்சந்திரன்......


தப்பிக்கத் தெரியாமலா
கடைசி வரையில்
களத்தில் நின்றோம்?
பதுங்க வழியின்றியா
பகைவனிடம் சிக்கினோம்?
பிரபாகரனின் இன்னொரு பிள்ளை
எங்கோ ஓடி
ஒளிந்து கொண்டான் - என
எள்ளி நகையாட
அந்த ஈனக்
கும்பலுக்கு எப்படி இடம்
கொடுக்க முடியும்?
அந்த பயந்தாங்கொள்ளிகளை
அவர்களின் பதுங்கு குழிகளிலேயே சந்தித்தோம்

பாவம்
பாலச்சந்திரன்!
பசிக்கு ஏதோ
சாப்பிடுகின்றான் என்று
என் மீது உங்களுக்கு பரிதாபம்!
நாங்கள்
சயனைட் நஞ்சைக் கூட
அப்படித் தான் சுவைத்துத்
தின்போம்!
சாவுக்கு அஞ்சினால் தானே
பகை கண்டு
அச்சம் வரும்?



என் விழிகளில் அவனுக்கு
மிரட்சி தெரியவில்லை
புரட்சி அனல் வீசியிருக்கின்றது
என் முகத்தில் அவன்
ஒரு அப்பாவியை பார்க்கவில்லை!
என் அப்பாவை பார்த்திருக்கின்றான்!

ஈழ மண்ணில் முளைக்கும்
புல்லும் அவனுக்கு புலியாய் தெரியும்
வன்னிக் காட்சியும்
வன்னிக் காட்டில் மலரும்
காந்தள் பூக்களும்
அவனுக்கு புதர்களிலிருந்து
நீளும் புலிகளின் நாக்குகளாய் தெரியும்
புலிகளுக்கு பிறந்த குட்டிப்புலியை
அவனால் எப்படி
குழந்தையாய் பார்க்க முடியும்?
பனிக்குடத்தில் புரளும்
பிஞ்சுக்கும் அஞ்சி
கர்ப்பிணிகளின்
அடிவயிறு கிழித்த
கோழைகளுக்கு
வளரும் என் மீது
எப்படி கருணை வரும்?

நாங்கள் களமாடியது
கருணைக்காக அல்ல விடுதலைக்காக…
என் துணிச்சலின் அழகு
அவனைத் துளைத்திருக்கும்!
தன் நெருப்புத் துண்டுகளால்
என் நெஞ்சைத் துளைத்தான்!
என் குருதியில் குளித்த
குண்டுகள் யாவும்
இவன் குட்டி புpரபாகரன் என
கூவிச் சொன்னது!
வீரச்சாவை தழுவிக்கொண்டே
ஈழத்தாயின் மடியில் விழுந்தேன்

எனக்கு
இரக்கம் வேண்டாம்
என் குடும்பத்தின் மீது
பரிவு வேண்டாம்
பரிவு போராளிகளுக்கு இழிவு
என் குடும்பத்தின்
உறுப்பினர்கள்
ஐந்து பேரல்ல
எட்டுக் கோடிப் பேர்
எனக்கு பாசம் வேண்டும் அதைவிட
என் இனத்திற்கு தேசம் வேண்டும்!

தொல் திருமாளவன்

படித்ததில் பிடித்த கவிதை. இதன் ஒவ்வொரு வரிகளிலும் என் ஈழத்திற்கான அடித்தளம் இருப்பதாக தோன்றியது. வீரகேசரியில் பிரசுரமாகியிருந்தது. இந்தியாவிலிருந்து தொல் திருமாளவன் இதனை எழுதியிருந்தார்.








வார்த்தைகள் தேவையில்லை என்னவனே……


என்னவன் அருகில்
குழந்தையாய் ஆயிரம்
கேள்வி கேட்டு பதிலிற்காக
நச்சரிப்பேன்…….

உனக்கு
ஏன்?
எதற்கு?
எவ்வளவு என்னை பிடிக்கும் ?- என்று
கேட்டு தினம்
ஆழிச்சாட்டியம் பண்ணுவதில்......
அன்பை கைகளால் காட்டும் படி
பிடிவாதம் பிடிப்பதில்…. – என்னில்
அன்பில்லையா உனக்கு? - என்று
அதட்டுவதில்– எனக்குள்
எல்லையற்ற ஆனந்தம்….

அதிகம் பேசியறியாத – என்னவன்
மழுப்புவான் அல்லது
சிரித்தே நழுவிவிடுவான் - அதை
இரசிப்பதை விடவும்
இன்பம் வேறில்லை எனக்கு…

என் இறுதி கணங்களில்
மருந்திற்கு முகஞ்சுழிக்கும் போதான
அவன் தடுமாற்றங்களும்
மாபெரும் வைத்தியனவன் - எனக்கு
ஊசியேற்றும் போதான விரல் நடுக்கங்களும்
என் கண்கள் சொருகும் போது
கலங்குகின்ற அவன் கண்களும் - என்
வலிகளின் போதான அவன்
திடுக்கிடல்களும் - நான்
கண் விழிக்கும் போது தெரிகின்ற
அவன் கன்னத்து தாடியும்
என் பல வினாக்களுக்கு
பதிலாகின்றன….

தடுமாற்றமாய்…
நரம்பின் நடுக்கமாய்
கண்ணீராய்…
திடுக்கிடலாய்….
உடல் மொழியென சகலமுமாய்
நானிருக்கும் போது – வார்த்தைகள்
தேவையில்லை என்னவனே……



தேவதைகள் அதிகம் வாழ்வதில்லை


இறைவா
என் கவியால் ஓர் மடல் உனக்கு
பொன் தந்தாய்
பொருள் தந்தாய் - அன்பு
குடும்பம் தந்தாய்
நண்பர் ஆயிரம் தந்தாய் - நல்
சுற்றமும் தந்தாய்
நன்றி

மூளையில்
எண் வைத்தாய்
எழுத்து பதித்தாய்
இசை வைத்தாய்
இரசனை வைத்தாய்
கூடவே ஏன்
புற்றும் வைத்தாய்…?
எல்லாம் வைத்து விட்டேன்
இதையும் வைக்கின்றேன் என்றா?
இல்லை நிறம் மாறும் சில மனிதரிலிருந்து
நிரந்தரமாய் பிரித்திடவா?

அந்தஸ்து தந்த நீ – ஏன்
அன்பு தரவில்லை…?
என்று உன்னை கேட்க நினைத்தேன்…
பதிலளிக்கவா என்னை பக்கம் அழைக்கின்றாய்…?
இல்லை தேவதைகள் அதிகம்
வாழ்வதில்லை என்பதால் – உன்
குட்டி தேவதை என்னை
கூப்பிடுகின்றாயா?

எழுத்தாளன் மகள்
வயிற்றில் உதிக்க வைத்தாய்
எழுத்தால் என்னை தாலாட்டினாய்
எழுத்தாளர்களையே குருவாக்கினாய்
எழுத்தையே காதலாக்கினாய்
எழுத்துக்காகவே என் காலத்தினை எடுத்தாய்
என் எண்ணறிவால் கட்டிய கோட்டைகளை விடவும்
காகித்தில் வடித்த கவிகளே அதிகம்..
என் பிணமேட்டில் கூட
பூக்களை விடவும்
பேனாக்களே அதிகம் வேண்டும்…
கண்ணீர் துளிகளை விடவும்
பேனா மை சிந்துவதே பெருமை எனக்கு….
உன்னிடம் இறுதியாய்
யான் யாசிப்பதெல்லாம்
எழுத்துக்காகவே என்னை
இறக்க விடு… என்
பேனாவின் கூர்மைக்காகவே
நான் சாகவேண்டும்… இன்னொரு
ஜென்மம் நீ தந்தாலும்….
அதிலும் பேனை தான்
பிடிக்க வேண்டும்
என் பிஞ்சு விரல்கள்  





மூச்சிலும் என் வாசம் மட்டுமே....


என்னவனின்
மறுபக்கத்தினை கேள்விப்பட்டு…
கோபம்; பின்
அழுகையாயிருந்தது
அதுவும் மறைமுகமாக…
அடுத்தவன் சொன்ன போது தான்
மரமண்டையில் ஏறியது…
கேட்டதிலிருந்தே
வெம்பி வெடித்திருந்தது
மனம்…..

எந்தப் பெண்ணால் தான்
முடிந்திடும்…?
நமக்கு மட்டுமேயான
எம்மவர்களை பகிர…?
அதுபற்றி அறிந்ததிலிருந்து
ஆத்திரம் ஆற்றாமையாகியிருந்தது….

இன்று சிக்கிவிட்டான்
கள்ளத்தனமாய்….
எதிர்பார்க்கவில்லை
எதிரே வந்து நிற்பேனென்று…
அருகில் நெருங்கி –
எனக்கு மட்டுமேயான
என்னவனின்
உதட்டில் - அவன்
பற்றவைத்திருந்த சிக்ரேட்
சனியனை பறிந்தெறிந்தேன்…..
பற்றியெரிதலுடன்.. – என்னவனின்
உள்ளம்
உதட்டில் மட்டுமல்ல
மூச்சிலும் என் வாசம் மட்டுமே
வேண்டும்…..

திராட்சை தோட்டத்து நரியாக…

என்னவனை முத்தமிட
முயன்று தோற்பதே
வுhடிக்கையாகிவிட்டிருந்தது…

ஒவ்வொரு முறையும்
முயல்கையில் - அவன்
கேசம் என்னை ஸ்பரிசிப்பதும்…
மூக்கு நுனிகள் மோதிக்கொள்வதும்
என் உதட்டில் - அவன்
வியர்வை கரிப்பதும்
என்னவனின் கன்னத்து முடி
உறுத்துவதும்…..
அழகான கவிதை…

சில நேரம் மனம் கூட
தோற்பதை தான் விரும்புகிறது..
முயலும் போது அழகாக
என்னவனில் முட்டிக்கொள்ளலாம்
என்பதால்….. – அவன் கூட
அதனால் தான் என்னவோ
முயற்சிகளுக்கு கூட சொக்கலேட்டுகளை
விலை பேசியிருந்தான்…. என்
தோல்விகள் கூட என்னவனுக்கு
இன்ப அவஸ்தையாம்… ஆனால்
அவன் ஆறடி உயரத்திற்கு
எம்பி – அவன்
முன்நெற்றியில் - என்
இதழ் பதிப்பதென்பது
அன்று வரை
முயற்கொம்பாகவேயிருந்தது…

எட்டி சலித்த ஒரு நாள்
திராட்சை தோட்டத்து நரியாக…
எனக்கு பிடிக்கவில்லை என்று
ஒதுங்கிய வேளை…
அவன் சற்றே வளைந்து
இட்ட கன்னத்து முத்தம்….
அதன் சத்தம்….
கனவின் திடுக்கிடல்களிலும்
இனிக்கிறது…

இறந்திருந்தது என்னுள் ஒளிந்திருந்த குழந்தை…


உன்னிடம் மட்டும் தான்
அழ பிடிக்கிறது…
உன்னுடன் நடக்கும் போது
மஞ்சள் கோடுகள் கூட
எனக்குத் தெரிவதில்லை – நீ
என்னைப் பார்த்துக்கொள்வாய்…
பேரூந்தில் கூட – நீ
அருகிலிருந்தால் தூக்கம் எங்கிருந்தோ
தழுவிக்கொள்கிறது – உன்
தோளில் சாய்ந்துறங்கலாம் என்பதால்…
சந்திக்கும் போதெல்லாம்
சொக்லட்டுக்காய் உன்னிடம் மட்டும் தான்
இரந்து நிற்கப் பிடிக்கிறது…..
வீட்டாரின் கண்டிப்பை மீறியும்
கடற்கரையில் பட்டம் விட
உன்னிடம் தான்
கெஞ்ச முடிகிறது..
உன்னுடன் மட்டும்
ஊர் சுற்றுவது பிடிக்கிறது – நீ
விடுதி வரை வருவாய் என்பதால்….
சண்டைகள் கூட
தினம் உன்னிடம்
போடாவிட்டால் சாப்பாடு சமிபாடடைவதுமில்லை
நீ கன்னத்தில்
தட்டிவிட்டால் மட்டும்
கலங்கித் தொலைகிறது கண்கள்
ஏதோ உன்னருகில் மட்டும்
குழந்தையாகிவிடுகிறது என் மனம்….

ஆனாலும்;;;;
என்று என்னை
ஆபத்தானவள் - முன்
தெரிந்திருந்தால்
பழகியிருக்க மாட்டேன்….
நீ குழந்தையுமல்ல என்றாயோ…
அந்த நொடியே
இறந்திருந்தது – என்னுள்
ஒளிந்திருந்த குழந்தை…

திகதி – 20.04.2013
நேரம் - 12.55

குழந்தையும் குருவாகின்றான்


என்னவனுடன்
சண்டையிட்டு
வார்த்தைகள் சிதறி பின்
மௌனமாக
அழுதுகொண்டிருந்தேன்….

மூடிய முகத்தில்
மெல்லிய மூச்சு
ஸ்பரிசிக்க
நிமிர்ந்து பார்த்தேன் - என்
சின்னவன்… கையில்
ஓவியத்துடன்
நின்றிருந்தான்

கண்ணிரூடே
அணைத்து உச்சிமோர்ந்து
என்னடா கண்ணா..?
என்றேன் சற்றே கேவலுடன்
அவன் தன் சிறு கிறுக்கலை
என் முன் காட்டினான்

அதில் குச்சியுருவமாய்
சற்றே உயரமாக என்னவனாம்
குடும்பி வைத்த
உருவமாய் நானாம்..
இருவர் நடுவிலும்
குட்டியுருவமாய் தானாம்… - அவன்
மழலையில் சொல்ல
ஓவியத்தை உற்றுப் பார்த்தேன்
மூவரின் கைகளும்
பின்னியிருந்தது – அந்த
கிறுக்கலில் ஏதோவொன்று
உறுத்த என்னவனை
அழைபேசியில் அழைத்தேன்
மன்னிப்பு கேட்க…..


விதி போலும்….


தொடர்ந்தவன்
தொலை தூரம்
சென்ற போது தான்
மனதையே
தொட்டது
ஏதோவொன்று …..

துரத்தியவன் தூர விலகிய
போது தான் - என்
காதலே எனக்கு
வலித்தது…

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரிந்தது….

மீராவின் காதல்
கவிதையிலேயே
கருவாகி
கருகிட
வேண்டுமென்பது
விதி போலும்….

ஆணழகனடா நீ

இதுவரை உன்னை – நான்
நிமிர்ந்து பார்த்ததில்லை – என்
பெண்மைக்கான நாணமும்
விட்டதில்லை….

வீதியில் உன்னை
இன்னொருத்தி பார்த்த போது தான்
நானும் பார்த்தேன்
கடைக்கண்ணால்….

ஆறடி உயரம்
அகன்ற தோள்
அடர்ந்த கேசம்
கூர் நாசி
குழிவிழும் கன்னங்கள் – அதை
மூடிய தாடி….
ஆணழகனடா  நீ….

இப்போது தான்
புரிகிறது வீதியே
ஏன் எம்மை பார்க்கின்றதென்று…..
நிச்சயம் எரிந்திருக்கும்
பல வயிறுகள் - நம்
பொருத்தம் பார்த்து…
சற்றே நெருங்கி கைகோர்த்து
சரணாகின்றேன் என்னவனிடம்…

கூண்டுக்கிளி.....

பஞ்சவர்ண கிளி எனக்கு
பட்டு மெத்தை
பால் பழம்
பகட்டான வாழ்க்கை - கூடவே
தங்கத்திலான கூண்டு

சுதந்திரம் வேண்டி
சிறகடித்து ஆர்ப்பரித்தால்
என் கால் விரல் நுனிகள்
கட்டப்பட்டு - கூண்டுக்
கதவுகள் திறக்கப்படுகின்றன – ஆனால்
எல்லைகள் அவர்களாலேயே
தீர்மானிக்கப்டுகின்றன….

இந்தக் கூண்டுக்கிளியையும் - ஓர்
கிளி சுற்றி வட்டமிட்டு
நேசித்தது – என்
மழலைக்காகவல்ல – என்
தங்கக்கூண்டிற்காக….

தங்கள் வீட்டு
செல்லக்கிளியை
மதம்,ஜாதி,குலம்
அறியாமல் கொடுத்து விடுவார்களா?
பஞ்சவர்ண கிளியும்
தங்க கூண்டும்
தான் கிடைக்கவி;ல்லை
பச்சைக்கிளியும் வெள்ளிக்கூண்டும்
போதும் என நினைத்து – ஆண்கிளி
பார்த்திருக்கும் போதே
பறந்து போனது
வலிக்க வலிக்க – என்
சிறகுகள் வெட்டப்பட்டன…
முன்னைய வாழ்க்கையே
இனிப்பாக தோன்றியது
“காலம் கடந்த ஞானம்” – ஒரு வகையில்
பறப்பதை விடவும்
சிறையில் இருப்பது
பிடிக்கிறது….
பாசமில்லாவிட்டாலும்
பாதுகாப்பு கிடைக்கிறதே….

இப்போதெல்லாம் என்னை
இடம்மாற்றுவது பற்றி
கலந்தாலோசிக்கின்றார்கள்
சற்று விசாலமான
வைரக்கூண்டாம்…
பேரம் பேசப்பட்டுவிட்டது
வாங்கப் போகிறவனின்
பதவி
பட்டறிவு
பணவளவு – எல்லாம்
பரீட்சிக்கப்பட்டுவிட்டது
பாசமில்லாத பகட்டான கூண்டு

என் கூண்டு
திறக்கப்படுமென்ற நம்பிக்கை
செத்துவிட்டது…
இன்னொரு கிளியை
நினைக்கவும் தெம்பில்லை –
அதுவும் பறந்துவிட்டால்….?

கற்பனையில் மட்டும்
கனா காண்கின்றேன் - மறு
ஜென்மத்திலாவது கானகக்கிளியாக
காடெல்லாம் சுற்றிவர
வேண்டுமென்று….  

ஏன் விலகுகிறாய்?

விலகி விலகி
ஓடும் போது துரத்திய நீ – ஏன்
இன்று விலகுகின்றாய் என்பது – என்
மரமண்டைக்கு புரியவில்லை…

நான் செய்தது பிழையென்றால்
என் பதவியை விட்டும்
உனக்காக உன்
நண்பன் காலில் விழ கூட
நான் தயார்….

ஒரு வேளை உன்னிடம்
பேசியது தான் பிழையென்றால்
உன்னிடம் ஒரு கேள்வி…..?
என்னைப் பேச உனக்கு
முழு உரிமையுண்டு – என்
நண்பன் என்றாலும் அவன்
அடுத்தவள் கணவன்
அவனை பற்றி பேச
உனக்கு என்ன உரிமையுண்டு?

உன் நண்பனின்
கோபங்களை ஏற்கின்றாய் - ஏன்
என்னிடம் மட்டும்
அழுகின்றாய் என்று கேட்டாய்…
இன்னொருத்திக்கான தோள் மேல்
நான் எப்படி சாய முடியும்? – உன்
தோளில் தான் என் சுமைகள்
சுகமாகின்றன……

உன் தமையன்கள்
உனக்கு நல்ல நண்பர்கள்
என்றாய் - அதுவே
முகநூலில் “அம்மு” என்றால்
பிழையாக புரிவார்கள் என்கிறாய்….
கேள்வி கேட்டால் கோபப்படுகிறாய்
ஏன் உன்னை விடவும் -நான்
உன் குடும்பத்தினை நேசிப்பது
உனக்குப் புரியவில்லை……?

உன் ஆயிரம் நண்பிகள்
பற்றி பேசுகின்றாயே – ஏன்
என் ஒரே நண்பனை பற்றி
பேசிவிட்டால்
மூஞ்சை சுருக்கிக் கொள்கின்றாய்?
மனம் என்பதும்
உணர்வுகள் என்பதும்
இருவருக்கும் பொதுவல்லவா…..

அடுத்தவள் பற்றி – நீ
பேசும் போது - நான்
பொறாமைப்படவில்லை என்பதால்
உன்னில் எனக்கு
அன்பில்லை என்பதல்ல அர்த்தம்… - உன்
ஒழுக்கத்தை ஆழமாக
உணர்ந்தவள் என்பதை ஏன்
புரிய மறுக்கின்றாய்…?

உன் முன்னவள் போல்
என்னையும் துரத்தி
காதலிக்க சொல்கிறாயா…?
காதல் என்பது துரத்துவதல்ல
இரு மனங்களை தொடுவது…

உன்னை நேசிக்க
நேரம் கடத்துகின்றேன் என்றால்
அது அவனில் உள்ள அன்பாலல்ல – என்
மனம் அழுக்கின்றி
ஏற்க வேண்டுமென்று நினைக்கின்றேன்…
நான் வரும் போது – உன்
மனமும் எனக்கு மட்டுமாக
இருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றேன்
அது ஏன் உனக்கு புரியவில்லை…

தெரியாமல் தான்
கேட்கின்றேன்….
“முந்தானை தொட
திராணியில்லை” என்றெழுதிய
உனக்கு – என்
மறுகாதல் பற்றி பேச
மட்டும் எவ்வாறு முடியும்?

என் பேனையின்
சுதந்திரம் - என்
தனி வாழ்வில் இல்லையென்பது
பழகிய உனக்கு கூட
தெரியவில்லையா…?

எதற்கெடுத்தாலும் நான்
உன்னைப் புரியாதவள் என்கிறாய்...
முன் பின் முரணான
உன்னை யாரால் தான்
புரியமுடியும்?
புரிந்துகொள்வதைப் போல்
உள்ளொன்று வைத்து
நடிக்கவும் முடியாது என்னால்…
நடிக்க முடிந்திருந்தால்
பல ஞாபகங்களை தொலைத்துவிட்டு
பல ஆண்களை நாடியிருப்பேனே….

பலமுறை முயன்று விட்டேன்..- ஒருவேளை
என் பேச்சு
உனக்கு பிடிக்கவில்லை
என்பது வெறும் பொய்யோ
என்ற நப்பாசையில்…
மீண்டும் மீண்டும்
நீ விலகும் போது
வலித்தாலும் புரிகிறது
அது உண்மை என்று…
மீண்டும் வந்து
அருகில் நிற்க – என்
குழந்தை மனம்
துடித்தாலும் - அது
என் பெண்மைக்கு இழுக்கு….

என் எழுத்தில் என்னை
கண்டுகொள்ளும்
கவிஞன் உன்னிடம்…
கவிதையிலேயே வாழ்த்துக் கூறி
பிரிகிறேன்…
கவிதையில் பிறந்த
நம் உறவு
கவிதையிலேயே நட்பாக மரணிக்கட்டும்…

என்றும் அன்புடன்
மீரு






நானும் காதலிக்கின்றேன்…

ஏன் நீ காதலிக்கவில்லை
என் நண்பர்கள் கேட்கிறார்கள்?
யாரோ இரசியமாக இருக்கிறார்கள்….
திமிர்…
ஈகோ…
உயர்ந்தவனை தேடுகிறேன்…
அழகானவனை தேடுகின்றேன்…
வீண்பிடிவாதம் - என
என் சுயம் பற்றிய
வாதங்கள் ஆயிரம்
அவர்களிற்குள்…

யார் சொன்னது
நான் காதலிக்கவில்லையென்று
நானும் காதலிக்கின்றேன்…
உயிர்வரை காதலிக்கின்றேன்…

இயற்கையை காதலிக்கின்றேன்
எனக்கு மனவமைதி தருவதால்
புத்தகங்களை காதலிக்கின்றேன்
என்னுடன் அவை மௌனமாக பேசுவதால்
இசையை காதலிக்கின்றேன்
காயங்களை வருடிவிடுவதால்
என் வீட்டு செல்லப்பிராணிகளை காதலிக்கின்றேன்
அவை என் அன்பை சந்தேகிப்பதில்லை
பொம்மைகளை காதலிக்கின்றேன் -அவை
என்னை இன்னொருவருடன் இணைத்துப் பேசுவதில்லை
என் தொழிலை நேசிக்கின்றேன்
அது உண்மையாக இருப்பதால் - ஏன்
என் வலிகளை கூட காதலிக்கின்றேன்
என்னை அவை செதுக்குவதால்….

உயர்ந்த
அழகான
அறிவுள்ள
பகுத்தறிவுள்ள மனிதனை
காதலித்து ஏமாறுவதை விட
என்றும் நிறம்மாறிடாத
என் காதல் அழகானது…..
அர்த்தமுள்ளது….


உன்னுள் நான் இருக்கின்றேனா?




நீ இல்லை என்பது
நிதர்சனமான பின்பும்
தொலைய மறுக்கிறது
உன் நினைவுகள்….

உன் முன்பும் - என்
மனதில் எவனும்
புதிந்ததில்லை
பின்பும் முயன்று
தோற்றுவிட்டார்கள்….

ஆனால் என்னுள் ஒரு
சிறு கேள்வி…
உன்னுள் நான்
இன்றும் இருக்கின்றேனா…?
பல நாள் வினாவிற்கு
பதிலாகியது…- உன்
மனைவி அருகில்
இருக்கும் போதும் - அவளைக்
கடந்து பார்வையை
என்னில் பதித்து – நீ
உன் குழந்தையின் கன்னத்தில்
அழுந்தப் பதித்த
முத்தம்……

கருவாகிறது மௌனம்….

இப்போதெல்லாம்
வார்த்தைகள் தோற்கும் போது தான்
மௌனத்தின் வலிமை புரிகின்றது.

மனதிலுள்ளதை கொட்டிவிடுவது
அழுகி நாற்றமெடுப்பதை விட
அப்பட்டமாக சொன்னால்
வாயாடி என்கிறார்கள் - சற்றுக்
குரலுயர்த்தி விட்டால்
திமிர் என்கிறார்கள்
குறைத்துச் சொன்னால்
முனுமுனுக்கின்றேனாம்…
இவற்றையெல்லாம் விட
மௌனமே மேலெனத் தோன்றுகின்றது..

தட்டிக்கேட்டால்
தற்பெருமை என்கிறார்கள் - அதையே
தடவிக்கேட்டால்
காக்காய் பிடிக்கிறேனாம்
தட்டியும் தடவாமலும்
மௌன மொழிகளே – எனக்குப்
பிடிக்கின்றன இப்போதெல்லாம்….

மலர்கள் மௌனமாகத் தான்
மணம் வீசுகின்றன
மணற்தரை மௌனமாகத் தான்
தாங்குகின்றது….
மரங்கள் கூட மௌனமாகத்தான்
வளர்கின்றன..
எனக்குள் மட்டும் - ஏன்
மௌனமில்லை…?

எதிர்பார்ப்புகள் புதைந்திருப்பதாலா…?
ஆறறிவு படைத்திருப்பதாலா…?
மனதினுள் பதிந்துவிட்ட – பாரதியின்
புதுமைப்பெண் எட்டிப்பார்ப்பதாலா?
அதனால் தட்டிக்கேட்க
நினைப்பதாலா…?

என்னுடைய கனவுகளுக்கு
என்றும் மொழிகளிருந்ததில்லை
என்னுடன் எந்த காலதேவதையும்
பேசியதுமில்லை….
சித்தன் முதல்
சிறுபிள்ளை வரை
தொட்டுவிட்ட மௌனத்தினை
பார்க்கின்றேன்…

குற்றங்களாகி
குட்டப்பட்டு விட்ட
வார்த்தைகளை விட
மௌனங்களே அழகாக
தெரிகின்றன…

பாடலவன் விஜயின்
“ஆமைக்கு ஓடு அலங்காரமுமல்ல
சுமையுமல்ல…
மௌனமும் மனிதனுக்கு அஃதே”
வரிகள் அர்த்தமுள்ளதாகவே
தெரிகிறது….

இக்கணம் மதலே
வார்த்தைகள் மௌனிக்க
கருவாகிறது என்னுள்
மௌனமெனும் குழந்தை….






திகதி -   04.03.2013

நேரம் - 19:26:01

பெற்ற வயிறு


என் பெற்ற வயிறு குளிர்ந்தது – நான்
ஈரைந்து மாதங்கள் சுமந்தவனை
என்னுள் இருந்து கொண்டு
அவன் அசைவுகளால் சிறுகதை பேசி – தான்
என்னுள் இருப்பதை - சிறு
உதைகள் மூலம் உணர்த்தியவனை
எனக்கும் என்னவனுக்குமான - அன்பின்
பரிசாக வந்துதித்தவனை – என்
தாய்மையை நிரூபித்து – அம்மா
என்ற ஸ்தானம் தந்தவனை
துணிகளில் சுற்றி - உதிர
மணம் மாறாமல் சிறு மலராக
தந்த போது -என்
பெற்ற வயிறு குளிர்ந்தது

அவன்
சிறு நெளிவுகள்...
திணுக்கிடல்கள் - நான்
பட்ட வேதனைகள்,
வலிகளை - கூட
சுகமான சுமைகளாக்கின

என் கைகளில் தவழ்ந்தவனை
கண்ணுறக்கம் தொலைக்க வைத்தவனை – என்
கரம் பற்றி நடை பயின்றவனை
சுட்டித்தனங்களால் பிறரை கவர்ந்தவனை
முதலாம் மாணவனாக பரிசுகளுடன் - என்
முத்தங்களையும் வென்றவனை
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி
வைத்தியராகிடுவான் - என
எதிர்பார்க்க வைத்தவனை
இப்போதும் தந்தார்கள்....
இரத்தம் தோய்ந்த துணியில் சுற்றி – என்
கரங்களிலல்ல சவப்பெட்டியில் - வெறும்
சதைப்பிண்டமாக.....

(பெண்கள் அமைப்பொன்றினால் நடாத்தப்பட்ட கவிதையில் பரிசு பெற்று பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை - 2012 இதை அரசியல் கைதிகளாக இருந்து உயிர் நீத்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் . இதன் கருப்பொருள் கூட அரசியல் கைதி நிமலரூபனின் மரண சடங்கினை பார்த்த போது உதிர்த்ததே.)







பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை