Monday, October 21, 2013

வீணையைத் தாருங்கள்……



என்னவர்களே!
நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்….

என் சோகங்களை
சகானாவாகவும்…
உங்கள் மீதான கோபங்களை
ஆரபியாகவும்
காட்டிட முடியா வீரத்தை
நாட்டையாகவும்…
உமிழ்ந்திடாத வெறுப்புக்களை
அடாணாவாகவும்
என் விழிகளில்
தெரிந்திடும் பயங்களை
அசாவேரியாகவும்…
சாரங்காவில்.....
காணும் அற்புதங்களையும்
சாமாவில் சாந்தத்தினையும்
சொல்லிடா காதலை
உசேனியாகவும் - என்
சிறு மகிழ்வுகளை
 ஸ்ரீராகமுமாக
இசைத்துக்காட்டுகின்றேன்…
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

கனவின் திடுக்கிடல்களுடனான
என் விடியல்களை
பௌளியாகவும்….
கண் விழிக்கும்
காலைப்பொழுதுகளை பூபாளமாகவும்…
பிலஹாரியில் முற்பகல்களையும்
நடிப்புகளுடன் தொடர்கிற
நண்பகல்களை மத்தியமாவதியிலும்
பின்பொழுதின் சோர்வுகளை
பேகடாவிலும்….
மந்தாரமான மாலை வேளைகளை
கல்யாணியிலும்…
கண்ணீருடனான இரவுகளை
நீலாம்பரியிலும்….
இராகமிசைக்கின்றேன்…..
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
இராகங்கள் பிடிக்காவிடில்
கூறிடுங்கள்.. என்
உணர்வுகளை துறந்து
சங்கராபரணம் மட்டுமே
மீட்டுகின்றேன்;… - ஆனால்
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

Friday, October 11, 2013

என் மௌனம்….



என் மௌனங்களின்
வலி நீயறிவாயா?
என் வலிகளையெல்லாம்
பெருக்கித்தந்தால்
வைத்திருக்க முடியுமா
உன்னால்……

சிறு சந்தேகங்களும்
வார்த்தை அம்புகளும்
என்னிதயம்
துளைத்ததை நீயறிவாயா?
உன் புறக்கணிப்புக்கள்
என்னை புண்படுத்தியதை
நீயறிவாயா…..

நம்மிடையான ஊடல்களும்
அதன் கடுமைகளும்
என் தலையணையறியும்…..
நாட்குறிப்பேடு அறியும்……
விடுதி குளியலறை அறியும்……
என் பேனையறியும்….
கடதாசி கிறுக்கல்களில் புரிந்திடும்….
நீயறிவாயா…..?
சேர்த்து தந்திடவா
இவற்றையெல்லாம்…….?

வலி வாங்கும் எனக்கு…
வலிக்கும் வார்த்தைகளை
தந்திட முடியும்…
வாங்கிட முடியுமா
உன்னால்…..?

என்றோ ஒருநாள்
என் கையளவான
வார்த்தைகளை மட்டும்
தந்திடுவேன்….
பாறையின் கனத்தோடும்…..
குழந்தையின் மென்மையோடும்….
பூவின் வாசனையோடும்….







அதிகம் வாசிக்கபட்டவை