Showing posts with label என் நாட்குறிப்பு பக்கங்கள். Show all posts
Showing posts with label என் நாட்குறிப்பு பக்கங்கள். Show all posts

கடலன்னை!

பொங்கலிலிருந்து இன்று வரை ஏழு நாடுகளை கடந்துள்ளேன். இப்போதெல்லாம் மனிதர்களுடன் உறவாடுவதை விடவும் இயற்கையுடன் பேசுவது, இரசிப்பது, ஆழ்ந்த வாசிப்பு, எழுத்துக்கள் என்று என் நாட்களை நானே வடிவமைத்திருக்கின்றேன். முன்னரெல்லாம் பொங்கல், நத்தார் என்று பண்டிகைக்காலங்களில் வீட்டில் யாராவது தொலைபேசி பாவித்தாலோ சமூக ஊடகங்களில் மெனக்கெட்டுக்கொண்டிருந்தாலோ உரிமையுடன் கண்டித்து அவர்களை கலைக்கும் நான் தான் இன்று முக்கிய நாட்களில் கூட வீட்டைவிட்டு தூரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றேன். அல்லது கவனத்தினை வர்ண கிறுக்கல்களிலும் எழுத்துக்களிலும் செலவளித்துக் கொண்டிருக்கின்றேன். 

தற்போது தாய்லாந்திற்கு என் இரு ஓவிய நண்பர்களுடன் வந்திருக்கின்றேன். அவர்கள் இருவரும் இம்முறை இங்கிருந்து சில பொருட்களை தத்தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் பயணித்துக்கொண்டும் நபர்களை சந்தித்துக்கொண்டுமிருக்கின்றார்கள். எனக்கு யாரையும் சந்திக்காமல், யாருடனும் பேசாமல் , யாருமே இல்லாத தீவுக்கு போனால் என்ன….. அல்லது செவ்வாய் கிரகம் போன்றதொரு இடத்திற்கு போனால் என்ன என்றிருக்கின்றது. இது ஒருவித விரக்தியான மனநிலை என்பதை தாண்டி எனக்குள் தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த தனிமை வேண்டியிருக்கின்றது. ஆனால் கேட்டவுடன் அல்லது நினைத்தவுடன் கிடைத்து விடுகிறதா இந்த தனிமை….? 

என்னளவில் கடற்கரை என்பது மூன்று நிலைகளை கொண்டது. வானம், கடல், மணல் மூன்றும் படலமாக கோடிட்டதை போன்று காணப்படுகின்றதொரு பரப்பு. மென்நீல வானம், கருநீல கடல், கருமையான நிலம் என்று நிற அழகியலும் அலாதியானது. அதீத இரசனைக்குறியது. முகத்தில் காற்று மோதும், கால்களை நீர் நனைக்கும், உதடுகளில் சற்று உவப்பு சுவை தொட்டுப்போகும். என்னவொரு இரசனைக்குறிய பொழுதிது.மனிதர்களிலும் கடலை நேசிக்கும் மனிதர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் பரந்த அறிவும், மனமும் கொண்டவர்கள் என்பது என் கணிப்பு!

என்னுடைய கனதியான நாட்களுக்கும் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கும் கடற்கரையின் பங்களிப்பு அளப்பெரியது. என்னுடைய பதின்ம வயதில் எனக்கு வகுப்பெடுத்த வீணையாசிரியர் குரல் நன்றாக இருப்பதால் சங்கீத வகுப்பில் சேரும்படி பணித்திருந்தார். நான் பாடசாலையில் பரதநாட்டியத்தினை தேர்வுக்குறிய பாடமாக எடுத்திருந்ததாலும், அம்மாவின் விருப்பத்தால் நான்கு வயதிலிருந்தே பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்ததாலும் சங்கீதத்தினையும் படிக்க சொன்ன போது  என்னளவில் முடிந்திருக்கவில்லை. வீணை வகுப்பு கூட மாலை ஆறு மணிக்கு பின்னர் அண்ணாவின் துணையுடன் தான் போய் வந்துகொண்டிருந்தேன். அத்துடன் என்னுடைய விளையாட்டு நேரமும் அடிபடும் என்பதால் இந்த புதிய வகுப்பு குறித்து எனக்குள் பெரிதான விருப்பம் இருந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் தான் வீணையாசிரியர் கையாண்டதொரு உத்தி கடற்கரையில் போய் குரல் பயிற்சி செய்வது. காலையில் ஐந்தரைக்கு அம்மா அல்லது வீட்டில் இருப்பவர்கள் கூட்டிப்போய் விடுவதுண்டு. குறிப்பாக வார இறுதி நாட்களில். இவ்வாறு ஆரம்பித்தது தான் கடலுக்கும் எனக்குமான பற்றுதல். முதலில் கரையில் அமர்ந்த படி ஆரம்பித்த பயிற்சி பின்னர் நடந்த படி , அதன் பின்னர் கால்கள் நனைந்த படி என்று நீளத்தொடங்கியது. மட்டக்களப்பார் என்றாலே நீர் என்பது எம்முடன் தொடர்புபட்டிருக்கும். இந்த மட்டக்களப்பாளும் கடலுடன் ஐக்கியமாக ஆரம்பித்ததில் ஆச்சர்யம் இல்லை தானே!

இந்த தொடர்பு எந்தநாட்டிற்கு போனாலும் கடற்கரையை தேடுவதில் என்னை கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. எப்படியாவது பயணிக்கின்ற நாட்டின் (இருந்தால்) கடற்கரைக்கு போய் கால்களை நனைத்தபடி நடந்துகொண்டே பாடலை பாடும் போது ஒருவித அமைதி என்னுள் படர்வதை உணர்ந்திருக்கின்றேன். என்னுடைய திருமணம் கூட பெரிய மண்டபம், ஆட்ம்பரங்கள் இன்றி கடற்கரை மணலில் இயற்கையான பூக்களின் அலங்காரத்துடன் மெல்லிசையுடன் எளிமையாக நடந்தால் நன்றாகவிருக்கும் என்ற கற்பனையும் எனக்குண்டு. 

இந்தப்பயணத்திலும் நண்பர்கள் அந்தப்பக்கம் போக இந்தப்பக்கம் கடற்கரைக்கு புறப்பட்டுவிட்டேன். கடற்கரையில் ஆட்களும் ஆரவாரமுமற்ற ஒதுக்குபுறமான இடத்தில் வந்தமர்தாயிற்று. தொலைபேசியில் நிறுவனங்கள் சார் விடயங்களை என்னுடைய உதவியாளர் ஒலிப்பதிவில் அனுப்பியிருந்தார். மின்னஞ்சல்களும் குவிந்திருந்தன. முக்கியமானவற்றிற்கு பதிலளித்து விட்டு கட்டளைகளையும் அனுப்பிவிட்டு நேரத்தினை பார்த்தால் இதிலேயே ஓரு மணித்தியாலம் கடந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பஸ் நிலையத்தில் இருந்த சிவப்பு நிற பூ மரம் குறித்து பகிடியான பதிவிட்டிருந்தேன். அந்த மரத்தின் இரு கன்றுகள் எம் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தாகவும் அனுப்பியவர் பெயர், விலாசம் இல்லையென்றும் படத்துடன் குறுஞ்செய்தியும் வீட்டிலிருந்து வந்திருந்தது. கடந்த சில மாதங்களாக இவ்வாறான அநாமதேய விடயங்கள் என்னை வந்தடைகின்றன, அநாமதேய முகநூல் கணக்குகளிலிருந்து நட்பழைப்புக்கள் வருகின்றன. யாரிந்த முகமூடி மனிதன் அல்லது மனிதர்கள் என்கின்ற கேள்வியொருபுறம் என்னை சூழ்ந்திருக்கின்றது.  

மாலை நேரம் மங்கி இனி இரவு வருவதற்கான முன்னாயத்தங்களில் வானமிருந்தது. யோசனையுடன் போர்வையில் மல்லாந்து வானத்தை பார்க்க ஆரம்பித்திருந்தேன். சிறுவயதில் இப்படித்தான். வீட்டில் நாம் விளையாடுவதற்கென கடல் மண் மேடையாக பரவப்பட்டிருக்கும். சிலநேரங்களில் நாம் இந்த மண் குவியலில் மல்லாந்து படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதுண்டு. அல்லது விஞ்ஞானத்தில் படித்த துருவ கரடிகள், ஓராயனை மனக்கண்ணில் வரைந்து பார்ப்பதுண்டு. அழகிய நாட்கள் அவை!

நினைவுகளுடன் மல்லாந்து வானத்தை எவ்வளவு நேரம் பார்த்திருந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை , என் மௌன பொழுதை கலைக்க ஆரம்பித்தது பாடல் ஒலி! மென்மையான தாள ஒலி மட்டும் தான்…. இந்த வாத்தியம் நிச்சயம் எனக்கு பரிச்சயமானதில்லை. ஆனால் அந்த மெல்லிசை எனக்கு பிடித்திருந்துத. கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிந்தது. சிறிது நேரம் இசையை மட்டும் கண் மூடி கேட்டுக்கொண்டிருந்தேன். திரும்பிக்கூட பார்க்கவோ அந்த இனிய பொழுதை கலைக்கவோ எனக்கு பிடிக்கவில்லை. யாராயிருந்தால் என்ன இசை பிடித்திருந்தது. கொஞ்ச நேரத்தில் சிறு விசும்பல் ஒலி! படுத்திருந்தபடியே தலையை திருப்பிப் பார்த்தேன். சற்று தொலைவில் ஒருவர் தன் கால்களை மடித்து அதில் தலையை புதைத்தபடி அமர்ந்திருப்பது தெரிந்தது. சுற்றி யாருமில்லை. ஆகவே இவர் தான் அழுதிருக்க வேண்டும். அவரது தனிமையில் குறுக்கிடுவது முறையல்ல என்று மறுபடி தலையை திருப்பி அண்ணார்ந்து வானத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் சிறு விசும்பல் கொஞ்ச நேரத்தில் அழுகையாக மாற ஆரம்பித்துத. அவர் குலுங்கியழுவது அந்த கருக்கல் நேரத்திலும் தெரிந்தது. ஒருவர் அழும் போது தொடர்ந்தும் வேடிக்கை பார்த்தால் என்ன மனுஷி நான்?

எழுந்து அருகில் போய் பேச ஆரம்பித்தேன். தென்னாபிரிக்காவில் இவர் மருத்துவராக பணிபுகின்றார். இவர் தென்னாபிரிக்காவின் ஆதிகுடிகளில் ஒருவர். இவர்களது சமூகத்தில் படித்து பட்டம்பெற்ற முதலாமவர் இவர் தான். நகரத்தில் வேலை கிடைத்தும் அதனை மறுத்துவிட்டு தன் சமூகத்தினருக்காக மருத்துவமனையொன்றினை கட்டி நடாத்தி வருகின்றார். ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தன் சமூகத்தினை முன்னேற்றுவதற்காக ஆதிவாசி குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம் போன்றவற்றினையும் கற்பித்து வருகின்றார். இரு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்த்தில் இவரது தாய்- தந்தை , இரு சகோதரர்கள், தாத்தா – பாட்டியென முழுக்குடும்பமுமே அழிந்துவிட்டது. இவர் அந்தநேரம் வேறுநாட்டிற்கு ஆய்வுமாநாட்டிற்கு போய் இருந்ததால் தப்பித்துள்ளார். இந்த நாட்கள் அவர்களது இறந்த நினைவு நாட்கள். அங்கிருந்தால் தனக்கு கவலையதிகரிக்கும் என இங்கு வந்திருக்கின்றார். 

வாழ்க்கையில் முதன் முறை என்னருகில் ஓரு ஆண் குலுங்கியழுததை பார்த்திருக்கின்றேன். அவர் சென்றிருந்த மாநாட்டின் தகவல்கள் அடிப்படையில் விசாரித்ததில் அந்த ஆய்வு மாநாட்டிற்கு சகோதரனும் நண்பனும் சென்றிருந்திருக்கின்றார்கள். அவர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. இரவாகி விட்டதால் என்னைத்தேடி வந்த இரு நண்பர்களும் இவருடன் நண்பர்களாகிக்கொண்டார்கள். அன்றிரவு எம்முடன் தான் இரவுணவு எடுத்துவிட்டு தன் அறைக்கு திரும்பியிருந்தார். அடுத்த நாள் காலை வணக்கத்துடன் இன்றும் கடற்கரையில் சந்திப்போமா என்று கேட்டனுப்பியிருந்தார். மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தோம். அவர் முன்னெடுக்கின்ற குழந்தைகளுக்கான கல்விச்செயற்பாடுகளை குறித்து நிறைய பேசினார். பேசும் போது அவர் கண்களில் விரிந்த கனவுகளை முன்னாலிருந்து என்னால் உணர முடிந்திருந்தது. தங்களுடைய பாரம்பரிய ஓவிய வர்ணங்கள் உருவாக்கும் விதங்களையும் விபரித்திருந்தார். தான் வரைந்த ஓவியங்களையும் தொலைபேசியில் காட்டினார். அன்றிரவு நாம் நால்வரும் கடந்கரையில் மொழுவர்த்தி இரவினை அனுபவித்திருந்தோம். 

பயணங்கள் நமக்கு புதுப்புது நண்பர்களை அறிமுகம் செய்கின்றது. நாம் எதை விரும்புகின்றோமோ அதனுடன் தொடர்புடையவர்களை இயற்கையே நம்மை நோக்கி அனுப்பி வைக்கின்றது. ஓவியங்களை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வர்ணங்களை தயாரிப்பது குறித்து அறிந்துகொள்ள மட்டுமல்ல அந்த குழந்தைகளை அவர் எப்படியெல்லாம் பராமரிக்கின்றார் என்பதை பார்ப்பதற்காகவும் அங்கு போகவேண்டும். எமது வீதியில் கையேந்தும் குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற அவா எனக்குள் ஏற்படுவதுண்டு. கடவுளும் இயற்கையும் இதற்காகத்தான் இவரை அனுப்பி வைத்திருப்பார்கள் போலும்….. அற்புதமான மனிதனை சந்திருக்கின்றேன்.  கடல் என்னுடைய வாழ்வில் பல புள்ளிகளை தீர்மானித்திருக்கின்றது.



மெழுகென உருகும் இரவுகள்

1/3PCS LED Black Candle Lamp Creative Simulation Flame Candle Night Light  Tea Light for Party Home Decoration | Daraz.lk இந்த நாட்கள் உலகின் பல வடிவமைப்பாளர்களுடன் கழிந்துகொண்டிருக்கின்றது. பொதுவாகவே இரு பெண்கள் அல்லது பெண் குழு என்றாலே உடை, நகை பற்றித்தான் பேசுவார்கள் எனும் கற்பிதங்களை உடைத்துக்கொண்டிருக்கின்றோம் நாம். நிகழ்விற்காக அழைக்கப்பட்டு எமக்கு வழங்கப்பட்ட தனித்தனி சிறு வீடுகளில் நால்வர் வீதம் தங்கியிருக்கின்றோம். யார் அந்த நால்வர் என்பது எம்முடைய தேர்வு. சிலர் ஆண்கள்- பெண்கள் என கலப்பாகவும் இருக்கின்றார்கள். எமது வீட்டில் நாம் இருவர். என்னுடன் தங்கியிருக்கும் வடிவமைப்பாளர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். எல்லோரும் கூட்டுச் சேர்ந்த பின்னர் எஞ்சிய நாம் இருவரும் இந்த வீட்டில் தங்கியிருக்கு முடிவுசெய்தோம். எனக்கும் ஒரு ஆணுடன் தங்குவதை விடவும் இவருடன் தங்கியிருப்பது இலகுதன்மையாக இருக்கும் என்று தான் தோன்றியது. 

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வடிவமைப்பாளர்கள் இங்கு வந்து குமிந்துள்ளோம். கடந்த வருடங்களில் விருது வாங்கிய முதல் நூறு வடிவமைப்பாளர்களுக்கும் இவ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்துத. அத்துடன் இம்முறை விருது பெறும் புதியவர்களும் இணைந்துள்ளார்கள். என்னைப் போன்று சிலர் இவ்வருடமும் விருது பெறுகின்றார்கள். ஆக மொத்தமாக 140 பேரவளவில் இணைந்துள்ளோம். சிறிய நகரமொன்றில் எமக்கான தங்குமிடங்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இந்த தங்குமிட ஒழுங்கமைப்பில் முக்கியமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் உண்டு.

1.    பொதுவாக நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் போது பாலின அடிப்படையில் ஆண்களுக்கு தனி பெண்களுக்குத. தனியென தான் தங்குமிட வசதிகள் ஒழுங்கமைக்கப்படுவதுண்டு. ஆனால் இந்த நிகழ்வில் அப்படியல்ல. நாம் யாருடன் தங்கப்போகின்றோம் என்பது எம்முடைய தனி விருப்பு மட்டுமல்ல பொறுப்பும் கூட. அதாவது யாருடனாவது தங்கிவிட்டு அவர் என்னை வலுக்கட்டாயப்படுத்தினார் என்றெல்லாம் புலம்ப முடியாது. நமது விருப்பும் பொறுப்பும் ஏற்கனவே எமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. 

2.    இங்கு ஆண் - பெண் என்கின்ற பாலின வேறுபாடு, தேர்வினை விடவும் பாலியல் விருப்புகள் தான் மோலோங்கி நிற்பதாகபடுகின்றது. அதாவது எமது குழுவில் lesbian and Gay போன்றவர்கள் தம்முடைய தேர்விற்கு முக்கியத்துவமளித்துள்ளார்கள். இரு ஆண்கள் தாம் வெளிப்படையாகவே Gay என்று சொல்லிவிட்டு தங்குகின்றார்கள் அல்லது பெண்களும் அவ்வாறு செய்கின்றார்கள். ஆனால் நம் ஊர்களிலுள்ளவர்கள் போன்று அதனை கேலி செய்வதுமில்லை. முறைத்துப்பார்ப்பதும் இல்லை. 

இதெல்லாம் பார்க்கவும் கேட்கவும் நன்றாகவிருந்தாலும் இந்த விடயம் எனக்கு கொடுத்துள்ள டுவிஸ்ட் இருக்கே அதனை சொல்லியே ஆகவேண்டும். ஏற்கனவே எமக்கு இந்த ஒழுங்கு குறித்து மின்னஞ்சலில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போதிருந்தே பலரும் தம்முடைய தங்குமிட தோழர்களை தெரிவுசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னர் இந்நாட்டிற்கு வந்திறங்கிய போது விமான நிலையத்திற்கு வந்திருந்த ஒழுங்கமைப்பாளர்களுடன் இணைந்து தங்குமிடங்களுக்கு போகும் போது நானும் இன்னுமொரு பெண்ணும் இன்னும் பதில் சொல்லவில்லை என்பதால் எஞ்சியிருக்கும் எம்மிருவரையும் ஓரு வீட்டில் தங்கவைப்பதற்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக எனக்கு சொல்லப்பட்டு விருப்பம் கேட்கப்பட்டுத. நானும் இன்னுமொரு பெண்ணுடன் தானே தங்கவுள்ளேன் என்பதால் தலையை சந்தோசமாக ஆட்டியும் விட்டேன். என்னுடைய தங்கவுள்ள மற்ற பெண் வடிவமைப்பாளர் ஏற்கனவே தன்னுடைய நாட்டிலிருந்து முதல் நாள் வந்துவிட்டதாகவும் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் என்னுடைய தங்க அவரும் சம்மதம் தெரிவித்தாகவும் மேலதிகமாக சொல்ல எனக்கும் அப்பாடா என்று தானிருந்தது.

தங்குமிடத்தில் இறக்கிவிட்டு அழைப்பு மணியை அழுத்தினால் குட்டை முடியுடன் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பக்கில் சூர்யா மாதிரி ஒருவர் கதவை திறந்தார். அப்போது கூட என்னுடன் தங்க வந்துள்ள பெண்ணின் உறவினர் போல என்று தான் நினைத்து கையை குலுக்கிவிட்டு வீட்டுக்குள் வந்து அந்த பெண்ணின் பெயரைச்சொல்லி எங்கவர் என்று விசாரித்தால் இடி சிரிப்புடன் நான் தான் என்றார் இவர். முதன் முதல் என் ஆசியா புத்தி மண்டையில் குட்டிக்கொண்டது. எமக்குள் ஆண் என்றால் இப்படி பெண்ணென்றால் இப்படியென எழுதாவிதிகள் வைத்துள்ளோம் தானே. அதிலும் இவ்வாறான சமூகத்தினருடன் நீண்டகாலமாக இணைந்து பயணிக்கும் என்னைப்போன்றவர்கள் இன்னும் இவ்வாறான விடயங்களை தலைக்குள் வைத்திருப்பதனை என்னவென்று சொல்வது. எனக்கே என்னை நினைத்து வெட்கமாகவுள்ளது. 

மாற்றுப்பாலினர், பாலின விருப்புள்ளவர்களுடன் தொடர்பும் முன்னெடுப்புகளும் இருந்தாலும் இவ்வாறு தனியே தங்குவது இதுவே முதல் தடவை. வந்தவுடன் குளித்துவிட்டு வெளியே வந்தால் கையில் கோப்பியுடன் நிற்கின்றார் என் அறைத்தோழி. கதவைத்திறந்தவுடன் அவர் நின்ற தோரணையில் பயந்து கையில் கோப்பிக்கோப்பையை வாங்கியவுடன் நன்றி சொல்லி கதவை அடைத்துவிட்டேன் நான். சில நிமிடம் கழித்து தான் நான் செய்த மடத்தனம் புரிந்தது. மெதுவாக கதவைத்திறந்து வெளியில் எட்டிப்பார்த்தால் அவர் தொலைக்காட்சியில் குத்துச்சண்டை பார்த்துக்கொண்டிருந்தார். அருகில் போனவுடன் சனலை மாற்றவா என்று கேட்டார். எனக்கும் இந்த குத்துச்சண்டை, கிறிக்கெட் எல்லாம் பெரிதாக பிடிப்பதில்லை. எனவே நடிக்காமல் “யெஸ் பிளீஸ்” என்றேன். ஆங்கில திரைப்படத்திற்கு மாற்றிவிட்டார். ஒரு சோபாவில் சுருண்டு படுத்தபடி நானும் மற்றதில் அமர்ந்தபடி அவரும் பார்த்துக்கொண்டிருந்தோம். எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியாது. எழும்பிய போது போர்வை போர்த்தப்பட்டு தலைக்கு தலையணையும் செருகப்பட்டிருந்தது. 

எழும்பிய பின்னர் தான் வீட்டவர்களுடன் கதைக்கவில்லை என்று தோன்றியது. வந்தவுடன் ஒலிச்செய்தி அனுப்பிவிட்டு கும்பகர்ணி மாதிரி தூங்கிவிட்டேன். வந்து நான்கு மணித்தியாலத்தின் பின் தான் இந்த ஞானோதயம் வந்துத. பறந்தடித்து வீட்டிற்கு அழைத்தால் அனைவரும் வீடியோ அழைப்பிற்கு வந்துவிட்டார்கள். கதைக்கும் போது என்னுடைய தோழி பின்னால் நடப்பதையும் பார்த்துவிட்டார்கள் .முதலில் யார் இந்த பொடியன் என்று தான் கேட்டார்கள். பொடியனில்லை பெட்டை பொறுங்கள் கதைக்க சொல்கின்றேன் என்று ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கதைக்கவும் கொடுத்தேன். கதைத்த பின் கூட என்ன இது ஆம்பிள்ளை போலுள்ளது குரலும் அப்படியே தான் என்றார்கள். நல்ல காலம் நம்மட ஆக்கள் இப்படியான நேரத்தில் தமிழில் பேசுகின்றார்கள். அல்லது நானும் மாட்டியிருப்பேன். முடிவில் பகிடியாக இவர் என்னுடைய Boy Friend என்று சொல்லிவிட்டு நானும் கட் பண்ணிட்டன். 

சிறிது நேரத்தில் அவரும் வந்து அமர்ந்து தன்னுடைய வீட்டாக்களுக்கு அழைப்பெடுத்து கதைக்க கொடுத்தார். கதைக்கும் போது அவரின் சகோதரி Are you .....'s Girl friend? என்று கேட்டார். என்னடா இது எமது ஊரில் வாயைப்பிளந்து பார்க்கும் விடயத்தினை இலகுவாக கேட்டு விட்டார் அதுவும் முதல் முறை பேசும் போதே என்பது ஆச்சரியம் தான். எமக்கும் அவர்களுக்குமான கலாசார இடைவெளியும் விளங்காமலில்லை. ஆனால் இதற்கு பின் தான் மதுரைக்கு ஏற்பட்டது சோதனை.  

அழைப்பை துண்டித்த பின்னர் இருவரும் சமைப்போமா என்று கேட்டார். சரியென்று எமக்கு வைக்கப்பட்டிருந்தவற்றினை வைத்து இலகுவான சமையலை இருவரும் செய்து முடித்தோம். சாப்பிடும் போது ஒரு மாறுதலுக்கு எனக்கு விருப்பமான candle light dinner இன்று தயார் படுத்துவமா? என்று கேட்டேன். தலையசைத்து விட்டார். வீட்டில் போதியளவு மொழுகுதிரிகள் இருந்தன. அவற்றினையும் நாம் சமைத்தவற்றினையும் வைத்து முன்னறையை தயார் செய்தோம். எனக்கு இங்கு வைக்க பூக்கள் கிடைத்தால் நன்றாயிருக்கும் எனக்கும் பிடிக்கும் என்றேன். அருகில் கடையிருக்கின்றது. நேற்று இங்கு வந்தபின் மாலையில் உலாத்தப் போகும் முன் பார்த்தேன் என்றார். பத்து நிமிடம் பொறு வருகின்றேன் என்று உடனடியாக வெளிக்கிட்டும் போய்விட்டார். வரும் போது கையில் அவ்வளவு பூக்கள். அவற்றினையும் வைத்து அலங்கரித்து மின்குழிழ்களை அணைத்துவிட்டு எம்முடைய மெழுகுதிரி இரவை கொண்டாட ஆரம்பித்தோம். வழமை போன்று நான் மென்பானத்தினை அருந்த தனக்கு பியர் பிடிக்கும் என எமக்கு வைக்கப்பட்டதில் இருந்து எடுத்து அருந்த ஆரம்பித்தார். 

அதுவரை எம்முடைய பயணம் நாம் சமர்ப்பித்த வடிவமைப்புக்கள் குறித்து பேசியபடி இருந்த உரையாடல் தனிப்பட்ட விடயத்திற்கு திரும்பியது. போதையும் அவருக்கு சற்று ஏறிவிட்டதால் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்ததை நானும் உணரத்தொடங்கினேன். தான் குடும்பத்தில் கடைசி பிள்ளை என்றும், தான் படிக்கும் போது காதல் இருந்ததாகவும் அவள் தன்னை விட்டு போய்விட்டதாகவும் கூற ஆரம்பித்தார். அவரது காதல் கதையில் "She" வந்தது முன்னர் உறைக்கவில்லை. அடிக்கடி வர ஆரம்பித்த போது தான் கேட்டேன். தான் லெஸ்பியன் என்றும் தனக்கு காதலி இருந்ததாகவும் அவள் நினைவாக கையில் பச்சை குத்தியதாகவும் பின்னர் அந்த பிள்ளை வேறொரு ஆணை விரும்பி திருமணம் செய்துவிட்டதாகவும் கூறினார்.. கடைசியில் சொன்னது தான் ஹலைட். “ நான் உன்னைப் போன்ற தமிழ்ப்பெண்ணை காதலித்திருந்தால் என்னை விட்டுப்போயிருக்க மாட்டாள்” என்பது தான் அது.

சில ஆண்களிடம் இந்த வசனத்தினை கேட்டிருக்கின்றேன். ஒரு பெண் என் முன்னால் அமர்ந்து சொன்னது இது தான் முதல் தடவை. எனக்குள் பிரளயம் ஆரம்பித்துவிட்டது. சாப்பிட்டதும் சமிபாடடையாமல் இடையில் நின்றுவிட்டது. போதாதற்கு எழுந்து அருகில் வர ஆரம்பித்தார். எனக்கு டென்சனாகி சடாரென எழுந்து அறைக்குள் போய் கதவை மூடிய பின் தான் போன உயிர் வந்தது. இரவுத்தூக்கமும் தொலைந்து போனது. எவ்வளவு நேரம் தான் போனை பார்ப்பது…? எப்போது தூங்கினேன் என்று தெரியாது விழிக்கும் போது அறை முழுவதும் நல்ல வெளிச்சம். கதவைத்திறந்து வந்து தானே ஆகவேண்டும். அன்று நிகழ்வின் ஆரம்ப நாள் வேறு…. 

வெளியில் வந்தால் சாப்பாட்டு மேசையில் கோப்பியுடன் ஒரு சிவப்பு நிற ரோஜாவும் இருந்தது. பின்னால் இருந்து காலை வணக்கத்துடன் மன்னிப்பும் கோரப்பட்டது. எந்தத் தவறும் உணரப்பட்டு மன்னிப்பு கேட்கப்பட்ட பின் மறுக்க என்னவிருக்கின்றது…? காலையுணவின் பின்னர் சிறிது நேரம் அமர்ந்து பேசினோம். நானும் என்னுடைய ஈர்ப்பு ஒரு பெண்ணின் மீது வருவதில்லை. நாம் நல்ல தோழிகளாயிருப்போம் என்று நேருக்குநேரே சொல்லிவிட்டேன். 

கடந்த நான்கு நாட்களாக இருவரும் நிகழ்விற்கு ஒன்றாகவே சென்று வருகின்றோம். அன்றும் நிகழ்வு முடிந்து வந்த பின்னர் நேற்று இரவு என்னிடம் பேச வேண்டும் என்றார். மீண்டும் வேதாளம் முருங்கை ஏறிவிட்டதோ என கொஞ்சம் பயமாகத்தானிருந்தது. இன்றும் ஏதாவது எடக்குமுடக்கு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கைகளை பற்றி அழுதார். மீண்டும் மன்னிப்பு கேட்டார். என்னை விரும்புவதாகவும் சொன்னார்.

என்னை விரும்புவது அவர் தெரிவு. நான் விரும்பவில்லை என்பது என் தெரிவு. ஆனால் அவருடன் அமைதியாக அன்று காலையில் அமர்ந்து பேசியது தனக்குப்பிடித்திருந்ததாக தெரிவித்தார். எனக்கு உண்மையில் ஒன்று மட்டும் புரியவில்லை. ஒருவர் மீதான ஈர்ப்பு சில நாட்களில் வந்து விடுமா…? ஒருவேளை முன்னைய தோல்விக்கும் இவ்வாறான அவசரங்கள் தான் காரணமா…? எதுவாகிலும் ஒரு பெண் என்னை நேசிப்பதாக சொன்னது இது முதல் தடவை. இதே விடயத்தினை நம்முடைய ஊர்களில் பொருத்திப்பாருங்கள். எவ்வாறு நாம் அவர்களை அணுகியிருப்போம்? 
ஆண்- ஆண், பெண்- பெண், ஆண்- பெண் காதல் எல்லாமே ஒன்றுதானென தோன்றுகின்றது. இவர் அழுவது அதனை நிரூபிக்கின்றது. ஏன் இந்த உறவுநிலையில் ஒருவரையொருவர் ஏமாற்ற நினைக்கின்றார்கள்…? நிதானமாக கையாண்டால் தான் என்ன? எல்லாம் அன்பு தானே…. இவரது அன்பின் தன்மை எனக்கு இன்னும் சரியாகப்புரியவில்லை. ஆனால் அன்றிலிருந்து என்னிடம் இது பற்றி பேசாத நேர்மை எனக்குப்பிடித்திருக்கின்றது. ஒருவேளை ஆணாயிருந்தால் மறுத்ததற்காக ஏதாவது ஏடாகூடமாக செய்திருக்க கூடும். அல்லது என்னைக் குறித்து கதை கட்டியிருக்க கூடும். குறைந்த பட்சம் என்னை கண்டுகொள்ளாமல் கூட இருந்திருக்க கூடும். ஆனால் இது எதுவுமே இங்கு நிகழவில்லை. 

General Wax & Candle | Valentine's Day! 8 romantic candlelight dinner ideas  - General Wax & Candle – General Wax Candles 

தினமும் காலையில் சாப்பாட்டு மேசையில் எனக்குப்பிடித்த ….. உடன் ஏதாவதொரு நிறத்துடனான ரோஜா காத்திருக்கின்றது.. குளித்து விட்டு வரும் போது உணவுடன் அவரும் காத்திருந்து முந்தைய நாள் நிகழ்வினை கதைக்கின்றோம் நிறைய வடிவமைப்புக்கள் குறித்து பேசிக்கொள்கின்றோம்…. மாலையில் ரோம் நகரைச் சுற்றி வருகின்றோம். எனக்கு பிடிக்கும் என்று சொன்னதற்காகவே அநேக இரவுகள்       ஒழுங்குசெய்யப்படுகின்றது. 

ஆனால் கண்டதும் உடையை வைத்து ஆணென்றும், லெஸ்பியன் என்றவுடன் பாலுறவு வரையும் சிந்தித்த நான் இன்னும் “திருந்த இடமுண்டு” என்று எமது தேர்ச்சியட்டைகளில் குறிப்பிடப்படுவது போல் எனக்குள் சொல்லிக்கொள்கின்றேன். 

சொல்ல மறந்துவிட்டேன். “முதல் இளம் ஆசிய தமிழ்ப்பெண் கட்டட வடிவமைப்பாளர்” எனும் தலைப்பில் அடுத்த மாத "DWell" இதழில் என் பேட்டி வருகின்றது. கடந்த வருடம் 100 ற்குள் இருந்து இவ்வருடம் 75 ற்குள் வந்திருக்கின்றேன். என் தோழி இம்முறை .......  ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். உடை , நகைகளை குறித்து பேசுவதை தவிர்த்து வடிவமைப்புக்கள், வாய்ப்புக்கள், இயற்கையை நாசப்படுத்தாமல் உருவாக்கும் வடிவமைப்புக்கள் என்று நாம் பேசிக்கொண்டேயிருக்கின்றோம். உண்மையான அன்பென்பது நம்மை செதுக்கும் ஒன்று தானே

Dinner in Candle light மட்டுமல்ல ஒரு உறவை Handle with Care ஆக அணுகுவதும் இனிமையானதொரு அனுபவம் தான் 





நுனிகளில் தொக்கி நிற்கின்ற கலாசாரங்கள்

நண்பர்கள் எல்லாம் சுற்றுலா சென்றிருந்தோம். பேசிக்கொண்டிருக்கும் போது நண்பன் ஒருவன் சைகையால் தன்னுடைய டீசேட் கழுத்து நுனியை தூக்கித்தூக்கி காட்டினார். முதலில் எனக்கு இது எனக்கான சைகை தான் என்பதே புரியவில்லை. ஆனால் திரும்பத்திரும்ப கண்களாலும் சைகை கொடுத்த போது தான் எனக்கென்றே எனக்கு புரிய ஆரம்பித்தது. எனினும் எனக்கு சைகை புரியாதததால் எனக்கேதும் சொல்ல வருகின்றீர்களா என்று பொதுவில் கேட்டுவிட்டேன். சிரித்து மழுப்பியவர் மீண்டும் சைகையால் கைத்தொலைபேசியை பார்க்கும் படி கூறினார். சரியென்று போய் பார்த்தால் Adjust ur B….. என்றொரு குறுஞ்செய்தி. விளங்காததால் நானும் Means? என்று மறுசெய்தி அனுப்பினேன். பதிலில்லை. திடீரென தனக்கு வேலையொன்று வந்திருப்பதாகவும் தான் போக வேண்டும் என்றும் கூறி என்னைப்பார்த்து முறைத்துவிட்டு போய்விட்டார். முதலில் சபையில் இரகசியம் பேசுவது அநாகரீகம் அதை விட அதனை தெளிவுபடுத்தாமல் கோபப்பட்டு போவது சுற்றுலா மனநிலையை மாற்றும் என்கின்ற பொதுபுத்தி இல்லாதவர்களிடம் நான் என்ன பேசமுடியும் என்று நானும் பேசாமல் இருந்துவிட்டேன். 

மாலையுடன் சுற்றுலா முடிந்து எனதறைக்கு திரும்பிய பின்னர் தொலைபேசியை பார்த்தால் ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் தனக்கு அழைப்பெடுக்கும் படி. ஏதோ பிரச்சினை போல என்று அழைப்பெடுத்தால் எடுத்தவுடனேயே உரத்த குரலில் சடசடவென ஏச்சும் பேச்சும்.

“ நீர் தமிழ் பிள்ளையல்லவா இப்படியா உள்ளுடுப்பு ஓரத்தில் தெரிவது கூட தெரியாமல் மரக்கட்டை மாதிரி இருக்கின்றீர்…. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள். இப்படியா காட்டுவது…..” என நீண்டுகொண்டே போனது உரையாடல். இந்தப்பக்கம் ஒன்றும் புரியாமல் "தயவுசெய்து என்ன என்று தெளிவாக சொல்லுங்க...." என்று இடையிட்டேன் நான். நான் போட்டிருந்த மேற்சட்டையின் விளிம்பின் ஓரத்தில் உள்ளாடையின் விளிம்பு தெரிந்துள்ளது. அதனை பொறுக்க முடியாமல் தான் என்னை பாதுகாக்க இந்த கலாசாரத்தின் காவலர் இவ்வளவு கோபப்படுகின்றாராம். முக்கியமாக வடக்கு கிழக்கின் கலப்பு குழந்தையாகிய நான் தமிழ்க்கலாசாரத்தினை பாதுகாக்க வேண்டுமாம். சரியான தமிழ் ஆணால் இதனை சகிக்க முடியாதாம். தமிழ்ப்பெண் ஊரெல்லாம் இப்படி காட்டித்திரியக்கூடாதாம். சிறிது நேரத்தின் பின்னர்  "Becourse I like you lot Darling, U mean to me...." என்கின்ற சாட்டு வேறு 

அழைப்பை துண்டித்த பின்னும் எரிச்சல் தொடர்கின்றது . அதெப்படி கலாசாரம் என்பது எப்போதும் பெண்ணின் உடையில் மட்டும் தொங்கித் திரிகின்றது என்பது எனக்கு புரியாத புதிர். சமூக ஊடகங்களிலும் பார்க்கின்றேன். விளம்பரங்களுக்கு டூ புpஸில் பெண்ணைக்காட்டும் போதும் சினிமாவில் ஐட்டம் சோங் வைத்து பெண்ணின் இடுப்பை சூம் செய்யும் போதும் மார்வை குளோஸ் அப்பில் காட்டும் போதும் போகாத மானம் கலாசாரம் எப்படி என்னுடைய Bra, Panty  இல் தொங்கி நாசமாகின்றது.? 

உடுப்புகளை காயப்போடும் போதும் பெண்ணின் உள்ளாடைகளை மறைத்து போடுவதை விடுதியில் உறவினர் வீடுகளில் அவதானித்திருக்கின்றேன். ஒரு தடவை என்னுடைய இளைய சகோதரன் வீட்டில் உடைகளை காயப்போட்டிருந்த போது “ அக்காச்சி உங்கட உடுப்புகள மறைச்சு போடலயா….” என்று கேட்டதற்கு அம்மா கொடுத்த விளக்கம் பின்வருமாறு இருந்தது. "உண்மையில் பெண்களின் உள்ளாடைகள் தான் சூரிய ஒளியில் முறையாக போடப்பட்டு உலத்தப்பட வேண்டும் என்பதும் இதனால் கிருமித்தொற்றல்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதும் மருத்துவவியல் உண்மை."  என்னுடைய சகோதரன்களிடம் கேட்டுப்பாருங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பு கூட தமக்கு ஏனைய கண், மூக்கு, வாய் போன்றதொரு மனித உறுப்பென்பார்கள்.

பார்வை தான் எல்லாமே…. துணியை துணியாக, உடலை என்பும் தசையுமாக, உணர்வுகளை உணர்வாக அணுகப்பழகுங்கள். அதுவும் உலகின் நாகரீகத்தின் உச்சத்திலுள்ளதொரு நாட்டில் முக்கியமானதொரு விடயத்தினை பட்டப்பின் படிப்பாக தேர்ந்தெடுத்திருக்கும் நாம் இவ்வாறெல்லாம் பிற்போக்காய் பேசுவது தும்புக்கட்டைக்கு குஞ்சம் வைத்தது போல பொருத்தமற்றதொன்று…. எனக்கென்ன சந்தேகமென்றால் உள்ளாடை வெளியில் தெரிந்தது ஒரு பக்கமிருக்கட்டும்,  அது குறித்த உங்கள் பார்வை இன்னொரு பக்கமிருக்கட்டும் உங்களது எல்லைகள் என்ன?  


எல்லா பெண்களையும் இவ்வாறு தான் பார்க்கின்றீர்களா? உங்கள் பார்வை பற்றி கூறுவதற்கும் அதனை திணிப்பதற்கும் நீங்கள் யார்? என்னளவில் ஆடை என்னுடைய சுதந்திரம். எங்கு எவ்வாறு உடுக்க வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். என்னைப்பொறுத்தளவில் எங்கு நிற்கின்றீர்கள்? எங்கு போகின்றீர்கள்? இதென்ன உடை? என்றெல்லாம் கேட்பதுவே ஒருவித வன்முறை தான். 

எந்த உறவிலும் நடுவில் ஒரு கோடு போட்டு இருப்பது மிகவும் நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து. ஏதோ கணிதத்துறையில் இருப்பதால் கோடு பற்றி பேசுவதாக நீங்கள் நினைத்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. ஆனால் நான் இப்படி யோசிக்கின்றேன். நெருங்கிய உறவுநிலையில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட விடயங்கள் , விருப்பங்கள், இலக்குகள் உண்டு. இந்த விடயங்கள் மதிக்கப்படும் போது அல்லது காயப்படுத்தப்படாமல் இருக்கும் வரை மட்டும் தான் உறவுநிலை நிலைக்கும். அல்லது முரண்களை தோற்றுவிக்கும். என் வரையில் என்னவரிடம் கூட நீங்கள் கறுப்பு டீசேட் போட்டால் நல்லாயிருக்கும் (Note this Point) என்று தான் என்னுடைய உச்சபட்ச விருப்பத்தை கூட சொல்வேனே தவிர, அல்லது பரிசளிப்பேனே தவிர வற்புறுத்த மாட்டேன். இது தான் என்னுடைய எல்லை என நினைக்கின்றேன். இதே எல்லையை எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றேன்.  ஒரு ஆழ்ந்த உறவுநிலையில் இந்த கோட்டினை நடுவில் வைத்துக்கொள்ளுங்கள். தம்பதிகள் கூட சில நேரங்களில் இந்தக் நடுக்கோட்டின் அருகில் இருவரும் நெருங்கி வரலாம் அல்லது ஒருவர் நெருங்கி வரலாம். ஆனால் தாண்ட முயலாதீர்கள். அப்படித்தாண்டுவது தான் உறவுகள் உடைவதற்கான முதற்காரணம்.

குறிப்பு 01. என்னுடைய உடை குறித்து பேசுவதற்கான உரிமை என் துணை மற்றும் குடும்பத்தினருக்கே உண்டு. இது வரை குடும்பத்தினர் தலையிட்டதில்லை. என்னுடைய துணைத்தெரிவும் அவ்வாறே இருக்கும்.


குறிப்பு 02. ஏன்,எங்கு, யாருடன், எப்படி போன்ற வினாக்களுக்கான பதில்களை என்னவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னுடைய அன்பின் மற்றும் மதிப்பின் நிமிர்த்தமே தவிர யாரும் கோட்டை தாண்டுவதை நான் அனுமதிப்பதில்லை. அல்லது எனக்கு பிடிப்பதில்லை. நேர்மை என்பது மனதில் இருந்தால் போதுமானது. விளக்கங்கள் கொடுத்து ஏற்படுத்த முடியாது.


குறிப்பு 03. என்னுடைய துறைகள் எல்லாமே ஆண்கள் மயப்படுத்தப்பட்டவை. வேலை நேரங்கள் சூரியனின் அட்டவணையில் தங்கியிருப்பதில்லை. நடு இரவில் அருகருகே இருந்து வேலை செய்தாலும் என்னுடைய எல்லை, என்னில் நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு நான் கொடுக்கவேண்டிய நம்பிக்கை பற்றி எனக்கு தெரியும். இது குறித்த தெளிவும் உண்டு. காணும் ஆண்களிடமெல்லாம் உரசுமளவு பலவீனமானவளில்லை. இதுவரை ஒரேயொருவரிடம் தான் மிஸ் யூ கூட சொல்லியிருக்கின்றேன். அவருக்காக சாப்பிட காத்திருந்திருக்கின்றேன். குறித்துக்கொள்ளுங்கள் அவருடன் பேசாத நாட்களை கூட கணக்கு வைத்திருந்திருக்கின்றேன்.


குறிப்பு 04. என்னுடைய வாழ்க்கைத்துணையே ஆனாலும் இந்த பாஸ்வேட் கேட்டு ஆராய்வது, கைத்தொலைபேசியை நோண்டுவது, யாருடன் இருந்தாய், என்ன செய்தாய் என கேள்விகேட்டு ஆளைத்துளைப்பது பின்பு உன்னில் உள்ள அதீத அன்பு தான் இந்த சந்தேகங்களுக்கு காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுவதெல்லாம் எனக்கு பிடிக்காததொன்று. இதனையே என்னுடைய துணையிடமும் எதிர்பார்க்கின்றேன்.


குறிப்பு 05. படிப்பென்பது பதவிக்கல்ல. அது எமக்குள் முதிர்ச்சியை நாகரீகத்தினை உருவாக்க வேண்டும். ஒருவேளை என் துணை இன்னொருவருடனான நெருக்கமான படத்தினை போட்டால் கூட நான் கேட்க மாட்டேன். அது தான் நம்பிக்கை. அது தான் முதிர்ச்சி. அது அவராகவே தெளிவுபடுத்த வேண்டியதொன்று. அன்பை, நம்பிக்கையை என்னளவில்  நீங்கள் சொல்லிக்கொள்கின்ற கலாசாரங்கள் அல்லது படுக்கை தீர்மானிப்பதில்லை.

சந்தேகம் 01. அதெப்படி பார்த்து 60 நாட்களுக்குள் (கண்டதும்) காதல் வருகின்றது? ஒரு நல்ல ஆண் ஒரு பெண்ணின் உள்ளுடை பற்றி பேசலாமா? பேசுவதை விடுங்கள் நோக்கலாமோ அம்பி? 


சந்தேகம் 02  Victoria's Secret, Calvin Klein , Amante, Senorita நுனியில் கலாசாரத்தினை தேடும் நீங்கள் ஜீன்ஸ் இனுள் XYXX, Jockey, Boxer  இல்லாமல் கோவனமா அணிந்திருக்கின்றீர்கள்?


சந்தேகம் 03. நுனி தெரிந்ததிலேயே கலாசாரம் சரிந்திருக்கென்றால் டெனிஸ் உடையில் விளையாடும் போது கவிழ்ந்திருக்குமா? நுனிக்கே குதிப்பவர் நல்ல காலம் டெனிஸ் உடையைப் (யில்) பார்த்தால் நம்முடைய தொடைகளையும் மார்பு குலுங்கல்களையும் மூட பின்னாலேயே போர்வையுடன் வந்திருப்பாரோ? 


சந்தேகம் 04. நம்முடைய தமிழ் கூறும் நல்லுலகில் பெண்ணின் உடை, மாதவிடாய், உறுப்புகள் குறித்து வெளிப்படையாக பேசும் பகுத்தறிவுள்ள, நேர்மையான, முற்போக்கான ஆண்கள் உண்மையில் இருக்கின்றார்களா? இல்லையா? 


குறிப்பு (+) சந்தேகம்: Instagram இல் போட்டுள்ள போர்வையுடன் தூங்கும் படத்தை பிடித்தது யார் என்பது குறித்தும் காவலர் கேட்டிருந்தார். பிடித்தது என் தமையனார். இதுவரை என் குடும்பம் மட்டுமே என் படுக்கையறையில் நுழைந்திருக்கின்றது. இதுவரை 2 லைக்குகள் தான் கிடைத்துள்ளது ஆனால் பார்வையிடல் 398 ஐ கடந்திருக்கின்றது. இவர் தான் திரும்ப திருப்ப பார்த்திருப்பாரோ?

கழுவி காயப்போடுகின்ற உள்ளாடை நுனிகளில் இல்லாத கலாசாரம் , பண்பு எங்கிருக்கின்றது தெரியுமா? மனதில் ஒருவரை மட்டும் நினைப்பதில்... ஆயிரம் பேர் வந்து நின்றாலும் ஒப்பிட்டுப்பார்க்காமல் அவர் தான் வேண்டும் என்று  ஒற்றைப்பிடியில் நிற்பதில்...  அந்த அன்பை அடைய நேர்மையான வழியில் உணர்வுகளை காயப்படுத்தாமல் போராடுவதில்... நம்மவர்களுக்காக அவர்கள் சார்ந்த பொறுப்புக்களை , அவர்கள் குடும்பத்தை  நேசிப்பதில்... அவர்கள் மண்ணை மதிப்பதில்... அடுத்தவர்கள் முன் விட்டுக்கொடுக்காததில் .....பல லட்சம் மைல் தாண்டி நின்றிருந்தாலும் காட்டுகின்ற அக்கறையில் இருக்கின்றது... எல்லாவற்றினையும் விட நமக்கானவர்களுடன் சமூகத்தில் தலைநிமிர்ந்த வாழ்கின்ற அந்த திமிரில் இருக்கின்றது என் கலாசாரம். 















 


மனசாட்சி


Vintage Lady Justice Oil ' Poster, picture, metal print, paint by Muntwalt  | Displate 

கடந்த ஒரு வருடமாக வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றேன். விரிவுரையாளர் என்றாலே முகத்தை உர் என்று வைத்துக்கொள்ள வேண்டும், பாடத்தை மட்டும் விளங்கப்படுத்த வேண்டும், பாடத்தில் சந்தேகமிருந்தால் விரிவுரையாளருக்கான அறைக்கு வந்து தான் விளக்கம் கேட்க வேண்டும் என பல வழமையான “வேண்டும்” என்னுடைய கற்பித்தல் அகராதியிலில்லை. ஒரு மாணவியாக மேற்குறித்த “வேண்டும்” களை கடந்தவள் என்ற வகையில் எனக்கு இவற்றில் உடன்பாடில்லை. எமது ஆசிய நாடுகளில் ஒரு பிள்ளை வீட்டை விட்டு 4 அல்லது 5 வயதில் கற்றலுக்காக அடுத்த வட்டத்தினுள் நுழைகின்றது. பதின்மவயது வரை ஆசான்கள் தான் இவர்களது பண்புகளை, கற்றலின் கொள்ளளவினை தீர்மானிக்கின்றார்கள். அதன் பின்னர் தொழிற்பயிற்சி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழையும் போது விரிவுரையாளர்கள் இவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றார்கள். ஆனால் எல்லா ஆசான்களும் மாணவர்களை வழிநடத்துகின்றார்களா என்றால் அது கேள்விக்குறியானதே. என்னைப்பொறுத்தளவில் பாடங்களை கற்பித்தலை விடவும் முக்கியமானது மாணவர்களுக்கான ஆளுமை விருத்தியும் வழிநடத்தலும் என்பேன். இதனை நான் வளவாளராக பயணிக்கும் அல்லது விரிவுரையாற்றும் தரப்பினரிடையேயும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். என் மாணவர்களிடம் தோழியாக இருக்கவே நான் விரும்புவதுண்டு. 


இதனால் தானோ என்னவோ என் மாணவர்கள் தங்களுடைய அந்தரங்கங்கள், தனிப்பட்ட விடயங்களை கூட என்னிடம் பகிர்வதுண்டு. வகுப்பில் நுழைந்தவுடன் பாடம் எடுப்பதை விடவும் பதினைந்து நிமிடங்களாவது அன்று மனதில் எமக்கு தோன்றிய விடயங்களை நாம் பகிர்ந்துகொள்வதுண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற உளவியல் அழுத்தங்கள் மற்றும் இதன் போதான உடல் நோவினை கூட என் மாணவிகளின் முகத்தினை பார்த்து ஓரளவாவது விளங்கிக்கொள்ள என்னால் முடிவதுண்டு. இதனை தாண்டி தனிப்பட்ட விடயம் சார் பிரச்சினை என்றாலும் கூட அவர்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும். ஏதாவது பேச வேண்டுமாயின் என் மாணவர்களும் தயங்காமல் என்னிடம் பேசுவார்கள், விரிவுரையாளர்களுக்கான அறை தாண்டி நூலகத்தில், தோட்டத்தில் அமர்ந்து கூட நாம் பேசிக்கொள்வதுண்டு, இதற்கு எம்மிடையான குறைந்தளவு வயது வித்தியாசமும் காரணமாயிருக்கலாம். என் சக விரிவுரையாளர்கள் கூட சில நேரங்களில் நான் மாணவர்களுக்கு அதிக இடம் கொடுப்பதாக பேசிக்கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் மரியாதைக்குறை ஏற்டும் என்பதும் மாணவர்கள் எம்மை மதிப்பது குறைந்துவிடும் என்பதும் அவர்கள் வாதம். ஆனால் வெளிநாடுகளில் மாணவர்கள் ஆசானை பெயர் சொல்லி கூப்பிடுவது போன்று நாமும் ஆரம்பித்தால் நல்லது என்பதே என்னுடைய கருத்து.

இவை ஒரு புறமிருக்க கடந்த மாதத்திலிருந்து நான் கற்பதற்காக நாடு கடந்து வந்துவிட்டேன். எனினும் இணையவழி மூலம் விரிவுரையாற்றி வருகின்றேன். என்ன தான் பேசினாலும் நேரில் என் மாணவர்களுடன் பேசுவதையும் அவர்களை அவதானிப்பதையும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நான் அங்கு விரிவுரையாற்றி வந்த காலப்பகுதியில் என் மாணவியொருத்தி நல்ல கெட்டிக்காரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவள் திடீரென சில நாட்களாக யோசனையுடன் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனியாக சந்தித்து பேசிய போது தான் ஒருவரை நேசிப்பதாகவும் அவரும் தன்னுடைய செய்கையில் தன்னை நேசிப்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆனால் இருவரும் நேரிடையாக சொல்லிக்கொள்ளவில்லை எனவும் இது தனக்குள் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் பகிர்ந்துகொண்டாள். நேசிப்பென்பது தடால் என்று போய் ஐ லவ் யூ என்று சொல்லிவிடும் விடயமல்ல. இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுங்கள். அந்தப்புரிதல் ஆழந்த அன்பை, முதிர்ச்சியை இருவருக்குள்ளும் தோற்றுவிக்கும். அது ஒரு கணத்தில் தன்னை பரிமாறிக்கொள்ளும் என்றெல்லாம் பேசி ஒருவிதமாக அவளை தேற்றியிருந்தேன். அதன் பின்னர் நேரடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பரீட்சை, என்னுடைய தனிப்பட்ட விடயங்கள், பயணங்கள் என இரு மாதங்களாக அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. ஆனூல் முகநூலில் “மிஸ் நீங்க சொன்னது சரி. நான் இப்போது படிப்பில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றேன்…” என்று கடந்த பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய பின் அனுப்பியிருந்தாள். இன்று அதிகாலையில் எழுப்பி தொலைபேசியினைப் பார்த்தால் அவளிடமிருந்து பல அழைப்புக்கள், ….. என்று குறுஞ்செய்தி வேறு.  இலங்கைக்கும் நான் தங்கியுள்ள நாட்டிற்கும் நேர வித்தியாசமுண்டு. நான் அழைப்புக்களை பார்த்த போது அங்கு இரவாயிருக்கும். பரவாயில்லை என்று எடுத்துப்பார்த்தால் அழைப்பு எடுக்கப்பட்டாலும் அந்தப்பக்கம் விம்மல் சத்தம். நானும் சில நிமிடங்கள் பேசாமலிந்த பின்னர் என்னவென்று வினவினால்…….. 

“மிஸ் நான் உங்களிடம் சொன்னேனே அவர் என்னைப் பற்றி ஒருவரிடம் தவறாக கதைத்துள்ளார்….. எனக்கு அவமானமாகவும் கவலையாகவுமிருக்கு….”


ஏன் அவருக்கு உங்களை பிடிக்கவில்லையா……? 

“ தெரியாது.. ஆனால் அவர் செய்தவை நடந்துகொண்டவை அப்படித்தான் இருந்தது…. திடீரென என்னை பொதுவில் அவமானப்படுத்த அல்லது நான் ஏதாவது சொன்னால் மட்டந்தட்டி பேச ஆரம்பித்தார். ஒருவேளை நான் விருப்பத்தினை வெளிப்படையாக சொல்லவில்லை என்பதால் தான் புரிதல் இன்றி அல்லது இயலாமையில் பொறுமையின்றி கதைக்கின்றார் என்று நினைத்தேன். ஆனால் அவர் என் நண்பியிடம் தான் என்னை விரும்பவில்லை என்றும் நான் தான் அவர் பின்னால் விருப்பம் கேட்டுத் திரிந்ததாகவும் அவர் என்னிடம் இல்லை என்று சொன்னதாகவும் சொல்லியிருக்கின்றார். எனக்கு அவமானமாக இருக்கு…….”


இடையில் இருப்பவர்கள் கதைப்பது இருக்கட்டும் நீங்க இது பற்றி அவரிடம் பேசலையா….?


வட்ஸ்அப்பில் வொயிஸ் போட்ட நான் மிஸ், பார்த்திருக்கின்றார் என்று காட்டுகின்றது…ஆனால் அவர் பதில் போடல….   

இதே மாதிரியொரு சந்தர்ப்பம் என்னையும் கடந்திருக்கின்றது. இங்கு வட்ஸ்அப் அங்கு மின்னஞ்சல். வுpத்தியாசம் அவ்வளவே. வுலியெல்லாம் ஒன்று தான்…. ஆனால் இதற்காக மனவருத்தப்பட்டு, அழுது சற்று நாள் கழித்து யோசித்துப்பாருங்கள்… ஒருவருடன் வாழ்தல் என்பது சில நாட்களான விடயமல்ல. இன்றைய நாட்களில் சமூக ஊடக ஆதிக்கம் மற்றும் மனிதத்தொடர்புகள் மலிந்துபோய் விட்டன. உறவுகளுக்கிடையான நேர்மை தன்மை குறைந்துவிட்டது.


1.    முதலாவது நாம் ஒருவரை நேசித்தால் அவரை மட்டந்தட்டுவது, அவமானப்படுத்துவது , கோபப்பட்டு கத்துவது எல்லாம் எதனால்…? நீங்கள் அந்த உறவிற்கு நேர்மையில்லாவிட்டால் தான் இந்த இயல்புகள் உங்களை ஆக்கிரமிக்கும். கோபம் என்பது ஆண்மையல்ல. அது அதைரியத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் உச்சம்.  
2.    நாம் ஒருவரை நேசிக்க முன் அல்லது உறவுநிலைக்கு தேர்ந்தெடுக்க முன் ஆழமாக யோசிக்க வேண்டும். நம் வார்த்தைகளாலோ செய்கைகளாலோ ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பின்னர் அதை பூசிமெழுகுவது ஈனசெயல்.
3.    நம்பிக்கையை ஏற்படுத்தும் அதேவேளை திறந்த உரையாடல்களை மேற்கொள்வது, ஒருவேளை உங்களுக்கு கடந்தகால முரண்கள் இருப்பின் அதனை துணையாக வர இருப்பவரிடம் பகிர்வதே நாகரீகம். மற்றும் படி நுனிநாக்கு ஆங்கிலமும் உடுத்துகின்ற உடைகளும் அல்ல
4.    நமக்கு சரியென்று சொன்னால் புகழ்வதற்கும் இல்லை என்றால் அவமானப்படுத்துவதற்கும் அன்பு என்பது வியாபாரமல்ல. நம்மைவிட்டு பிரிந்தாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் ஒதுங்குவதே மனிதம். 
5.    தவறான புரிதல், இடையில் நிற்பவர்களால் சொல்லப்படும் விடயங்கள் உங்களை ஏதோவொரு கணத்தில் உங்களை நேசிப்பவரைப்பற்றி பிழையாக பேச தூண்டிவிட்டது என வைத்துக்கொண்டாலும் ஒருவர் தன்னுடைய வலியை கண்ணீருடன் சொல்லும் போது உங்கள் மனச்சாட்சி உங்களை உறுத்தவில்லையா? குறைந்தபட்சம் என்னை மன்னித்தவிடு என்று சொல்வதில் நீங்கள் ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. 
6.    ஒருவiர் அதுவும் நம்மை நேசித்தவர்களை (நீங்கள் நேசிக்கவில்லை என்றாலும்) காயப்படுத்தி விட்டோம் என்று தெரிந்தும் உலகத்திற்கும் சமூக ஊடகங்களிலும் நடிக்கின்றீர்கள் என்றால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளலாம். நீங்கள் மகாநடிகர். நீங்கள் இன்று செய்திருப்பது முதல் தடவையாக இருக்காது. பழக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர் வலியை இலகுவாக கடக்க முடியும். 
7.    நீங்கள் அடுத்தவர் கௌரவத்தினை குறைக்கும் போதும் அவர்கள் மீதும் கறைபூசும் போதும் இதனை நினைவில் வையுங்கள். இன்று நீங்கள் வென்று விட்டதாக தோன்றலாம் அல்லது நீங்கள் விம்பத்தினை உருவாக்கலாம். பிழையே செய்யாத நல்லவனாக நடிக்கலாம். ஆனால் காலம் சிறந்த நீதிபதி. அதன் கணக்கு என்றும் தப்புவதில்லை. நீங்கள் யாரை காயப்படுத்தினீர்களோ அவர்கள் வாழப்போகும் வாழ்வு உங்களை சுட்டெரிக்கும். நீங்கள் இழந்த வாழ்வை இன்னொருவர் வாழ்ந்துகொண்டிருப்பார். இதை விடவும் தண்டணை உங்களுக்கு ஏது….?
8.    சமூகஊடகமும், அதில் நீங்கள் வாழும் இரட்டை அர்த்த வாழ்வும் அல்ல வாழ்க்கை. ஒருவருடன் கைகோர்த்து நீண்ட பயணம் போவதும் வளமான தலைமுறையை உருவாக்குவதுமே வாழ்க்கை. இன்றைய விம்பங்கள் ஒரு நாள் உடையும், முதுமை உங்களை தழுவும். ஒரு பொழுதில் சாய்ந்திருக்கும் போது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கும். அதில் ஆனந்தமும் இருக்கும் வருத்தமும் இருக்கும். இந்த இரண்டில் வருத்தம் இருக்குமென்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று மட்டுமே அர்த்தம். 

9.ஒருவேளை ஒருவர் உங்களை நேசித்து கேட்டால் கூட ஆம்/ இல்லை என்று சொல்கின்றதை மட்டும் செய்யுங்கள். உங்களை கதாநாயகர்கள் என்று மற்ற ஆண்கள், பெண்கள் என நீங்கள் வழிபவர்களிடம் காட்டிக்கொள்வதற்காக மற்றவர்களை, அவர்களது சுயகௌரவத்தினை காயப்படுத்தாததீர்கள்.  


அன்புத்தோழியே, அதிகம் அழாதே.. கண்ணீர் விலை மதிக்க முடியாததொன்று அதனை உயரிவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும். கண்ணீர் இன்றி ஒரு உண்மைக்காதல் இருப்பதில்லை. ஆனால் அந்தக்கண்ணீரை துடைக்குமளவு கம்பீரமான, முதிர்ச்சியான ஒருவரை நாம் நேசிக்க வேண்டும். முதலில் மூன்றாம் நபரிடம் பேசியிருக்க கூடாது, அல்லது சுட்டிக்காட்டப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது இதனை சீர்செய்ய முதிர்ச்சியான நண்பர்கள், உறவுகளை வைத்து உன்னை தொடர்புகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத ஒருவரை தேடாதே அன்பே. இன்று நடுவில் விட்டுவிட்டு கறைபூசுபவர்கள் நாளை வாழ்க்கை நடுவிலும் விட்டுவிட்டு ஓடுவார்கள். அழகு, பணம், செல்வாக்கு, படிப்பு இவற்றைவிட பண்பும் மனச்சாட்சியும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு முக்கியம் தோழி. காலத்திடம் விட்டுவிடு. உண்மையில் அன்பிருப்பின் அது நம்மை சேர வழிதேடும். ஒருவேளை நம்மை தேடவில்லை எனில் நம்மை தேடாத அன்பு நமக்கெதற்கு……. ஒருவர் மீதான அன்பிற்காக குடும்பத்தை இழக்கலாம், பதவி, பணம், புகழ் இழக்கலாம் ஆனால் சுயகௌரவத்தினை மட்டும் இழக்கவே கூடாது. 


இதெல்லாம் தாண்டி இந்த உறவை உங்களால் தாண்ட முடியவில்லை என்றால் சற்று பொறுத்திருங்கள்.  இது உண்மையான அன்பு என்றால் அது வழியை கண்டுபிடித்து தானே வந்து சேரும். இது மனதை மட்டும் சாட்சியாக கொண்ட அன்பென்றால்.....
 


குட்டி சைக்கிள்!

   

Happy cute teen girl riding bicycle cartoon vector illustration | Premium  AI-generated vector

நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்கானதொரு சந்தர்ப்பம். பேசிக்கொண்டிருக்குமு; போது எழுத்துப்பிழைகள் விடுவது குறித்து பேச்சு திரும்பியது. இன்று பெரும்பாலும் பலருக்கு எந்தவிடத்தில் ண, ன வரவேண்டும் ல,ழ,ள வரவேண்டும் என்பதெல்லாம் சற்று குழப்பமாகிவிட்டது. சில அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள் கூட எழுத்துப்பிழையின் காரணமாக கருத்துப்பிழையாக எழுதுவதை அவதானிக்க முடிகின்றது என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்பட்டன. எனக்கும் பொதுவாக எழுத்துப்பிழைகள் இருப்பது பிடிப்பதில்லை. இப்படி எழுத்துபிழைகள் விடுதல் நாம் மொழிக்கு செய்கின்ற துரோகம் என்று சிறுவயதிலேயே எனக்குள் தலையில் குட்டி ஏற்றிவிட்டார் என் ஆசான்.  என்னுடைய நண்பர் “ நான் அவதானித்த வரையில் உங்கள் படைப்புக்களில் எழுத்துப்பிழைகளை தேடிப்பார்க்க வேண்டியுள்ளதே. ஏப்படி மீரா உங்களால் முடிகின்றது என்று வினவினார்.. இதற்கு காரணம் ஒரு குட்டி சைக்கிலும் அதன் மீதான மோகமும் தான் என்றேன் நான். எப்படியென்று கேட்கின்றீர்களா….?

எனக்குச் சிறுவயதில் இருந்தே இந்த வாகனங்கள் மீதான மோகம் அதிகம். அதிலும் சைக்கிள் மோட்டார் வண்டி போன்ற இருசக்கர வாகனங்கள் மீது அலாதியானதொரு மோகமுண்டு. இந்த ஆசையில் எண்ணெய் ஊற்றுவது போல் மாமி தன்னுடைய மகனுக்கொரு சைக்கிள் வாங்கிக்கொடுத்திருந்தார். மச்சானுக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். மாமியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் தான். மாலையில் அம்மா வேலை விட்டு வந்த பின்னர் அப்போதைய நிலையில் சுற்றியிருந்த பிரச்சினைகளுக்கு நடுவில் நாம் காற்றாட செல்லும் இடம் மாமியின் வீடு தான். அவருக்கும் மூன்று பிள்ளைகள். நாமும் போனால் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் விளையாடிக்கொண்டிருப்பதுண்டு. இந்த சைக்கிள் வாங்கப்பட்டதிலிருந்து மச்சானின் வேலையே நம்மை இருத்திவிட்டு அந்த சைக்கிளை வீட்டு முன்னறையில் அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று ஓடிக்காட்டுவது தான். வாங்கியதை சும்மா ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. இப்படியப்படி ஓடிக்காட்டும் போது அதை ஓடிப்பார்க்க வேண்டும் என்பது விஸ்வரூபமாகிவிட்டது. அவர்கள் வீட்டிற்கு போய் வரும் வழியெல்லாம் அம்மாவிடம் எனக்கும் சைக்கிள் வாங்கித்தாங்க என்று அழுதுகொண்டுதான் வருவதுண்டு. அம்மா ஒவ்வொரு நாளும் அதற்கொரு சாட்டு வைத்திருப்பார். சின்னப்பிள்ளை தானே கொஞ்சம் வளர்ந்த பிறகு வாங்கித்தாறன் என்பார் ஒரு நாள்........, 5 ஆம் ஆண்டு கொலர்ஷிப் பாஸ் பண்ணினால் வாங்கித்தருவேன் என்பார் மற்றொரு நாள்........, சைக்கிள் ஓடி கீழே விழுந்தால் காயம் வரும் மகள் என்பார் இன்னொரு நாள். இவையெல்லாம் சாட்டுக்கள் என்றும் அப்பா இல்லாத குடும்பத்தில் தலைமைதாங்குகின்ற ஒரு தாயினால் அப்போது அந்த சைக்கிளை வாங்கித்தருமளவு பொருளாதாரம் இருக்கவில்லை என்பது தான் உண்மை என்று நான் உணர்ந்துகொள்ளுமளவு வயதில்லை எனக்கும். 

இப்படியானதொரு நாளில் தான் அவர்கள் வீடு சென்றிருந்த போது வழமை போன்று புளுகு குணத்தில் சைக்கிளிலில் வலம் வர ஆரம்பித்தார் மச்சான். ஒரு தடவை ஓடிப்பார்க்க கேட்டேன். மறுப்பில்லாமல் தந்துவிட்டார். அந்த குட்டி சைக்கிளை ஓடும் பிள்ளைகள் விழாதிருக்க இரு பக்கமும் சில்லுகள் பொருத்தப்பட்டிருந்தன. (உண்மையில் அது இரு சக்கர வாகனமல்ல நான்கு சக்கர வாகனம்). நானும் ஏறி இரண்டு தரம் ஓட ஆரம்பிக்க திடீரென சைக்கிளை தரும் படி மச்சான் கேட்க ஆரம்பித்து விட்டார். அவர் கேட்க நான் இறங்க மாட்டேன் என்று சொல்ல இருவருக்கும் சண்டையாகிவிட்டது. இந்த அடிபுடியில் வீட்டுக்குள் இருந்த மாமி வெளியில் வந்து செய்தது தான் ஹலைட். வந்த வரத்தில் எனக்கு முதுகில் அடித்து சைக்கிளிலிருந்து இறக்கிவிட்டார். அம்மா எப்போதும் சின்ன சின்ன விடயங்களுக்கு அடிப்பதில்லை. அடித்தாலும் காலுக்கு கீழ்தான் வெளுப்பார். அதுவும் பாடசாலை ரிப்போட் வரும் போது தான் நிகழும். எங்கிருந்து தான் நளினி (அம்மா) பிரசன்னமானார் என்று தெரியாது. மாமி என் மேல் கைவைத்த கோபம், தன்னுடைய இயலாமை எல்லாம் சேர்ந்து அருகிலிருந்த பிரம்பால் நன்றாக வெளுத்துவிட்டார். வெளுத்ததும் இல்லாமல் தரதர என்று இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். அழுதபடியே தூங்கிவிட்டேன் நான். இதெல்லாம் நடக்கும் போது எனக்கு 9 வயதிருக்கும். அதற்கு பின் நான் அம்மாவிடம் சைக்கிள் கேட்டதில்லை. 

ஆனால் அடித்த இரவு என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியும். நான் உறங்கிய பின் அம்மா பல தடவை என்னுடைய கால் தழும்புகளை தடவிப்பார்த்து அழுதிருப்பார், சகோதரன்கள் அம்மாவை எதிர்த்து பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் சாப்பாட்டில் காட்டியிருப்பார்கள். அம்மம்மா இப்படியா "மாட்டடிக்கின்ற மாதிரி அடிப்பாய்" என்று அம்மாவை திட்டியிருப்பார்.  ஆனால் எப்படியோ இது நடந்த சில நாட்களில் எனக்கு அம்மா சைக்கிள் வாங்கி தந்துவிட்டார். ஆனால் இந்தப்பிரச்சினையின் தாக்கத்தால் மாமி வீட்டிற்கு போவது தடைப்பட்டுவிட்டது. தான் அடுத்த பிள்ளைகளில் கைவைப்பதில்லை அப்படியிருக்கும் போது தன் பிள்ளையில் மாமி கைவைத்துவிட்ட கோபம் அம்மாவிற்கு….. 

இவ்வளவு அமளிதுமளியின் பின் தான் சைக்கிளும் வந்தது. அதற்கிருந்த மரியாதையே தனி. யாரும் அதை தொடக்கூடாது. அதில் பாபி ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி அதுவொரு இந்திரலோக வாகனம் போன்று மரியாதையாக தான் வைக்கப்பட்டிருந்தது. இதில் குஞ்சமாக அண்ணா செய்து தந்த காற்றாடி  செருகப்பட்டிருந்தது முன்பக்கம். சைக்கிள் ஓடும் போது அது வேறு சுழலும். ஆனால் சைக்கிள் வந்த பிறகு தான் அடுத்த பிரச்சினையும் வந்தது. சைக்கிளை எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள் ஓடுவது? நாலு வாகனங்களுக்கு நடுவில் வீதியில் ஓட வேண்டாமா..? அது தானே சைக்கிள் வாங்கினதுக்கும் அதனை ஓடும் எனக்கும் மரியாதை… இப்படியான நேரத்தில் தான் சாரங்கபாணி வாத்தியார் என் வாழ்க்கையில் என்டர் ஆகினவர். 

சாரங்கபாணி வாத்தியார் (அவருக்கு மாஸ்டர் என்ற ஆங்கில வார்த்தை பிடிக்காது) அதீத தமிழ் பற்றாளர், தமிழ் புலவர்…. அவரது அன்றாட வாழ்க்கையும் இயற்கையோடு அமைந்ததொன்று. இவர் மட்டக்களப்பின் பாடசாலையொன்றில் அதிபராகவிருந்தவர். இவர் அதிபராகவிருந்த காலத்தில் என்னுடைய அம்மம்மாவும் அதிபராக பணியாற்றியதில் எம்முடைய குடும்பத்தினருக்கு அவரை நன்கு தெரியும்.  சைக்கிள் வாங்கிய இக்காலப்பகுதியில் தான் எமது வீட்டிற்கு இருபது வீடுகள் அளவில் சற்றுத்தள்ளி வாடகை வீட்டிற்கு இவர் வந்திருந்தார். முதன் முறை வீட்டிற்கு அவரது மனைவியுடன் வந்த போது நான் வீணை வாசித்துக்கொண்டிருந்தேன். (மாலையில் சாமி விளக்கேற்றி வீணை வாசிப்பது இன்று வரையானதொரு பழக்கம்) அப்போது தான் சாரங்கபாணி வாத்தியார் பிள்ளைக்கு நல்ல உச்சரிப்பு ஏன் தழிழை கற்க என்னிடம் அனுப்ப கூடாது என்று தூண்டலை போட்டுவிட்டு போய்விட்டார். அம்மா என்னிடம் கேட்கும் போது நான் சைக்கிளில் போவதென்றால் தான் போவேன் என்று சொல்லிவிட்டேன். அம்மாவின் தமிழ் பற்றும் என் சைக்கிளை றோட்டில் ஓடும் ஆசையும் சங்கமித்தது இப்படி தான். ஆனால் இந்த 20 வீட்டை கடந்து போவதற்கு எனக்கு வீட்டிலிருந்த அக்கா அல்லது அம்மம்மா காவல் வருவார்கள். அவர்கள் நடக்கும் போது அவர்களை முந்திப்போய் திரும்ப திருப்பிக்கொண்டு வந்து மீண்டும் போய் என்று நான் பல தடவை ஓடி முடிப்பதுண்டு. எப்படியே இப்படி ஆரம்பித்தது தான் தமிழ் கற்றல். 


சாரங்கபாணி வாத்தியார் எப்போதும் சுத்த தமிழில் எந்த மொழி கலப்படமும் இல்லாமல் தான் பேசுவார். லகரம் , ணகரம் எல்லாம் அவர் வாயில் தாண்டவமாடும். ஓவ்வொரு நாளும் போனவுடன் வணக்கம் சொல்லி ஒரு திருக்குறளை பாவோதல் செய்ய வேண்டும். கருத்தும் சொல்ல வேண்டும். அவரது வீடு முழுவதும் நிறைய புத்தங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த தட்டில் 5 வது புத்தகம் தான் மகாவம்சம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு போய் எடுக்கலாம். அவ்வளவு நேர்த்தி. செம்பில் தான் நீர் தருவார். “தண்ணீர்” என்று கேட்க கூடாது. “தண்” என்பது குளிர். தண்ணீர் என்றால் குளிர் நீரை குறிக்கும். குடிக்க நீர் தான் கேட்க வேண்டும் என்பார். அவ்வளவு மொழிச்சுத்தம் கொண்ட மனிதர். எழுதும் போது எழுத்துப்பிழை விட்டால் அழித்து எழுத விடமாட்டார். மீண்டும் எழுத வைப்பார். இப்போது கூட எனக்கு இந்தப்பழக்கம் உண்டு. அழிக்காமல் வெட்டிவிட்டு மீண்டும் எழுதுவேன். இது அப்போது விழுந்த அடிப்படை தான். பிழை விட்டால் தலையில் நானே குட்ட வேண்டும். என்ன சீழ்தலைசாத்தனார் போன்று கையில் எழுத்தாணி இருந்திருக்கவில்லை இல்லாவிடில் என் தலையில் பல புண்கள் உண்டாகியிருக்கும். ஒன்றரை மணிநேர வகுப்பின் இறுதியில் இதிகாச கதைகளை சொல்லி முடிப்பார். அவர் ஒரு நல்ல கதைசொல்லியும் கூட. 

வீதியில் சைக்கிள் ஓட வேண்டும் என்பது இறுதியில் தமிழை கற்றுத்தேர்வதில் வந்து நின்றது. என்னை சித்தவைத்தியம் படிக்க வைக்க வேண்டும் என்பதிலும் வாத்தியார் குறியாயிருந்தார். சித்தர் புத்தகங்களை என்னிடம் தந்து வாசிக்க வைப்பார். ஏறத்தாழ ஏழு வருடங்கள் அவரிடம் கற்றிருக்கின்றேன். உயர்தரத்தில் நான் கணிதத்துறையை தேர்ந்ததில் அவருக்கு அவ்வளவு விருப்பமில்லை. அவரிடம் ஆசீர் பெற போன போது சரி "கணிதத்திலும் தழிழைக்காண்" என்று தான் வாழ்த்தினார். இன்று எனக்கு தெரிந்திருக்கின்ற கைமருத்துவம், மூலிகையறிவு, கட்டக்கலையில் வாஸ்து குறித்த கற்றல் எல்லாமே அவர் போட்ட அத்திவாரம் தான். பல எழுத்தாளர்கள் தங்களுடைய புத்தகங்களை எழுத்துப்பிழை, கருத்துப்பிழை பார்க்க அனுப்பிவைப்பார்கள். நான் சரிபார்த்த பின்னர் பல புத்தகங்கள் அச்சாகியிருக்கின்றன. இவையனைத்தின் பெருமையும் அவரையே சாரும். இன்று அவர் உயிருடன் இல்லை. ஆனாலும் என்னைச் சேர்கின்ற அனைத்து பெருமைகளிலும் என் தமிழ் ஆசான் வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றார். சிலருக்கு சாவென்பதேயில்லை… அதில் இவரும் ஒருவர். 

இப்போது புரிகிறதா என்னுடைய குட்டி சைக்கிள் எங்கு என்னை இழுத்துப்போனதென்று… (இந்த குட்டி சைக்கிள் இன்று எவ்வாறு என்பீல்ட் இல் வந்து நிற்கின்றதென்பது வேறு கதை…) நமக்கு பிடித்தவர்கள் விடுகின்ற தமிழ்ப்பிழைகளை அவர்களிடம் சொல்லி திருத்திப்பாருங்கள்.... இதுவும் காதல் என்பார்கள் ... இல்லை இது தான் அவர் மீதானதும் தமிழ் மீதானதுமான காதல் என்பேன் நான்...... 







ஓ.... 2026


 புதுவருடம் பல புதிய அனுபவங்களுடன் ஆரம்பித்துள்ளது…

 



01.    நீதிமன்றம் உள்ளும் புறமும்

எல்லாவிடங்களுக்கும் பயணிக்க வேண்டும் அனுபவம் பெற வேண்டும் என்ற என்னுடைய கொள்கை இறைவனுக்கும் தெரிந்துவிட்டது போல சம்பந்தமில்லாத விடயத்தில் நானும் கோர்க்கப்பட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியாகிவிட்டது. வீட்டிற்கு இது குறித்த பதிவுத்தபால் வந்த போது வீட்டாக்களுக்கும் பதட்டமாகி அவர்களது பதற்றம் என்னையும் தொற்றி அது ஒருவித பயம் கலந்த பதற்றத்தினை என்னுள் விதைத்துவிட்டது. எத்தனை படம் பார்த்திருப்போம் எத்தனை சட்டத்தரணிகள் கைகாலை அசைத்து பொயின்ட்டை பிடித்து குற்றவாளியை வாங்கு வாங்கு என்று வாங்கியிருப்பார்கள். சட்டத்தரணிகள் என்று நினைத்து கண்ணை கொஞ்சம் மூடினாலும் சிவாஜி, விஜய், நம்மட ஆள் சூர்யா என்று எத்தனை லோயர்கள்……  சரி இவர்கள் மாதிரி இல்லாட்டியும் வீட்டாக்கள் தேடிப்பிடித்த சட்டத்தரணியுடன் பேசி சகலதையும் சொல்லி …(வைத்தியரிமும் சட்டத்தரணியிடமும் பொய் சொல்லக்கூடாதாம்) தயாராகியாயிட்டு. நாளை வழக்கு என்றால் இன்றே எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அன்றிரவு நித்திரையும் இல்லை. காலையில் போட்ட கோப்பியை குடிப்பது கூட மறந்துவிட்டது. மனதுள் அவ்வளவு பதட்டம் இருந்தாலும் அவ்வளவு நாளும் காட்டி வந்த கெத்து லைட்டா என்னை விட்டு போறமாதிரி வேற இருந்தது. நான் இருந்த நிலையை பார்த்து ஏதாவது சாப்பிட்டு போ அல்லது நீதிமன்றத்தில் மயங்கிவிட்டால் என்று நச்சரிப்பு வேறு.. ஒரு மாதிரி சாப்பிட்டு தண்ணி குடித்து நெஞ்சைப்பிடித்த படி போனால் நடுப்பகுதியில் போய் அமரும் படி என்னுடைய சட்டத்தரணியும் சொல்லி விட்டார். நேரம் 9 மணி உள்ளே போய் பார்த்தால் ஏகப்பட்ட சனம். ஒரு பக்கம் ஆண்கள் மறு பக்கம் பெண்கள். போய் அமர்ந்தால் அவர்கள் ஏதோ வெளிநாட்டால் வந்து நடுவில் குந்தின மாதிரி என்னிடம் நூறு கேள்விகள் கேட்கிறார்கள். பதட்டத்தினை மறைத்து எப்போ ஆரம்பிக்கும் என்று காத்திருந்தால் 10 மணிக்கு திடீரென உரத்த குரலில் அறிவிப்பு. சற்று நேரம் கழித்து நீதிபதி உள்ளே வர அனைவரும் எழுந்துநின்று அவர் அமர்ந்த பின் அமர ஒரு சின்ன சத்தம் கூட இல்லை. 

முன்னாலிருப்பவர் வழக்கெண் மற்றும் பெயர்களை உரத்த குரலில் சொல்ல சட்டத்தரணிகள் அங்கு போகின்றார்கள் மெல்லிய குரலில் பேசுகின்றார்கள். கூப்பிட்ட வழக்காளியும் பிரதிவாதியும் எழுந்து அருகில் போகுமுன்னரே அடுத்த வழக்கிற்கான திகதி நீதிபதியால் வழங்கப்படுகின்றது. எழுந்து போனவர்கள் அப்படியே வெளியே போகின்றார்கள். என்னுடைய பெயரும் வாசிக்கப்பட்டு கிட்ட போகுமுன்னரே எல்லாம் சொல்லி முடிந்தாயிட்டு. அப்பாடா என்றிருந்தது. ஆனால் ஒரு கேள்வி இந்த படத்தில் காட்டுவது போல் நம்முடைய சட்டத்தரணிகள் குரலெழுப்பி, பொயிண்ட்ஸ் கண்டுபிடித்து கிழிகிழி என்று கிழித்து தொங்கவிடுவதெல்லாம் பொய்யாடா….. எத்தனை சினிமா எத்தனை வழக்கு எம்மை கதிரை நுனியில் அமர்ந்து பார்க்க வைத்திருக்கும். சட்டத்தரணி, எதிர்கட்சி வக்கீல், கள்ள பொலீஸ், நடுவில் அடிபட்டு தப்பிவந்து வாயால் இரத்தம் ஒழுக சாட்சி சொல்லும் ஹீரோ…………. சை சப்பென்றாகிவிட்டது எனக்கு…இனி எத்தனை வழக்கிற்கு கூப்பிட்டாலும் சங்கத்தின் சார்பில் ஆஜராக நான் தயார். 

02.    நடிப்பு…

இம்முறை இந்தியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற திரைப்பட விழாவில் என்னுடைய இரு ஆவணப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதற்காக இங்கு நின்றுகொண்டிருக்கின்றேன். மன்னிக்கவும் இதை தட்டச்சு செய்யும் போது காவா சாய் குடித்துக்கொண்டிருக்கின்றேன். கடையில் இல்லை நண்பனின் கைகளால் தயாரிக்கப்பட்டது. இவ் ஆவணப்படம் மற்றும் இது பெற்றுள்ள விருதுகள் குறித்து பத்திரிகை நிரூபர் என்னிடம் பல கேள்விகளை அடுக்கியிருந்தார். அதில் இரு வினாக்களும் பதில்களும்…..

நீங்கள் ஏன் ஆவணப்படங்களில் மட்டும் கவனஞ்செலுத்துகின்றீர்கள்? திரைப்படத்தில் ஆர்வமில்லையா?
இல்லை குறுந்திரைப்படங்கள் சில இயக்கியுள்ளேன். ஆனால் பிறரை நடிக்க வைப்பதில் எனக்கு பிடித்தம் இல்லை. தனிப்பட்ட முறையிலும் எழுத்திலும் கருத்திலும் என்னால் நடிக்க முடிவதில்லை. உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்தல், தரவுகளை சேகரித்தல் எனக்கு பிடித்துள்ளது. அதிலும் எனக்கு மருத்துவம் சார் ஆவணப்படங்கள் இயக்குவதில் தான் ஆர்வம். இதற்காக நிறைய மனிதர்களை சந்திக்கின்றேன். அவர்களுடன் பேசுகின்றேன். அவர்கள் மொழியிலேயே கலைப்படைப்பை நெறியாள்கை செய்கின்றேன்……கலையென்பது பிடித்ததை செய்வது தானே… அதை செய்கின்றேன். 

உங்கள் நாட்டில் இடம்பெறுகின்ற விழாக்களில் உங்கள் திரைப்படங்களை காணவில்லையே….?
முதலில் சில படங்களை அனுப்பியிருந்தேன். என்னுடைய படம் தெரிவுசெய்யப்பட வேண்டுமாயின் பலரிடம் சிரித்து பேசவேண்டியிருந்தது…. அங்கிருப்பவர்கள் அல்லது தெரிவு குழுவில் இருப்பவர்களின் இரட்டை அர்த்த பேச்சுகளை சகிக்க வேண்டியிருந்தது. எனக்கு இதில் உடன்பாடில்லை. என்னுடைய திறமை தான் மதிக்கப்பட வேண்டுமேயன்றி என்னுடைய மனம், முகம் அல்ல. படைப்பென்பது படைத்தவனுக்காக மதிக்கப்பட கூடாது. அல்லது தன்னுடைய படைப்பு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக படைப்பாளி முகங்காட்டக்கூடாது. ஒரு காதல் எப்படி இனம், மதம், பணம், சாதி சக்கட்டு பாராமல் எம்மை கடக்குமோ அப்படி கலையும் படைத்தவனுக்காகவன்றி பிடித்துப்போக வேண்டும். ஒருவேளை என்னுடைய துணைவரே கூட தேர்வுக்குழுவில் இருந்தாலும் எனக்காகவோ எம்முடைய காதலுக்காவோ அன்றி  கருத்தியல் , காட்சியமைப்பு, கலைக்காக தான் என்னுடைய படைப்பு தேர்வுசெய்யப்பட வேண்டும் என விரும்புகின்றேன். எந்த விழா என்றாலும் நேர்மையாக தேர்வுகள் இடம்பெறுகின்றதென்றால் என்னுடைய படைப்பு அனுப்பிவைக்கப்படும். முகப்பூச்சு விருதுகள் எனக்கு வேண்டாம்.  என் மானம் சுயகௌரவம் விற்று தான் என் படைப்புக்களை காட்சிப்படுத்தவேண்டும் என்பதில்லை. 

3. குடையில்லா பொழுதில் கொட்டித்தீர்க்கும் மழை….


சும்மாயிருக்கும் போது எதுவும் நடக்காது அதேவேளை வாய்ப்புக்கள் வந்தால் குடையில்லாத நேரத்து மழை மாதிரி கொட்டித்தீர்த்து விடுகின்றன. ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பிற்காக வாய்ப்புக்கிடைத்து தயாராகிக்கொண்டிருக்கும் போது அடுத்தடுத்து நிறைய வாய்ப்புக்கள் என் அறைக்கதவினை தட்டோ தட்டென்று கட்டுகின்றன. திரைப்படத்துறை சார் பயிற்சியினை பெறுவதற்கு உலகலாவியரீதியில் 20 பேரில் ஒருவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளேன். இதற்கு 03 மாதகாலம் தேவை. அடுத்தது கடந்த ஆண்டு கட்டடத்துறை சார் விருதும் உலகின் முதல் 100 வடிவமைப்பாளரில் ஒருவர் என்ற பெருமையும் விருதும் இத்தாலியில் இடம்பெற்ற விருதுவிழாவில் கிடைத்திருந்தது. இதன் போது பல்வேறுப்பட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். எம்முடனும் கலந்துரையாடியிருந்தனர். புத்தாண்டு அன்று அதிகாலையில் ஓர் இனிய மின்னஞ்சல். குறிப்பிட்ட நிறுவனம் அடுத்த 03 ஆண்டுகளில் ஐந்து திட்டங்களை வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கவுள்ளதாம். அதற்கான வடிவமைப்புக்குழுவில் இணைந்துகொள்வதற்கான அழைப்பு அது. கூடவே இதில் ஈடுபடும் போது குடும்பத்தவர்களுடன் (துணைவர் மற்றும் குழந்தைகள் மட்டும் - அட ஒரு வருடத்திற்கு முன்னர் சொல்லியிருந்தால் ரெடியாகிருக்கலாம்..) பயணிப்பதற்கான பயண செலவு மற்றும் தங்கியிருப்பதற்கான பொறுப்பு அனைத்தும் அவர்களே முன்னெடுக்கின்றார்களாம். 

இப்படியே ஊர் உலகம் சுற்றினால் வீட்டில் இருப்பது எப்போது… குடும்பம், குழந்தை எப்போது என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் வீட்டாக்கள்…. முடிவெடுக்க முடியாமல் ஒதுங்குவதா அல்லது நனைந்துவிடுவதா என்று தடுமாறிக்கொண்டிருக்கின்றேன் நான்... 

 4. வெள்ளை முக கற்பிதங்கள்

அண்மையில் பழைய மாணவர் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அங்கு போனால் எல்லாம் புதுமுகங்கள். அட நம்முடன் 12, 13 வருடங்கள் படித்தவர்கள் எங்கே என்று தேடினால்…. பெரும்பாலானோரை மதிக்கவே முடியவில்லை. எல்லாம் வைட்னிங் கிறீம் உபயம்…. அட கடவுளே வெள்ளை முகங்கள் தான் அழகு என்ற கற்பிதங்கள் எப்போது தான் இவர்களை விட்டுப்போகுமோ…. ஏன் இப்படி இரசாயனங்களை போட்டு இயற்கையழகை கெடுக்கின்றீர்கள் என்று பகிடியாக கேட்டால் “நீ வெள்ளையாக இருப்பதால் இப்படி பேசுகின்றாய்..” என்று மறுமொழி கிடைக்கின்றது. நான் கருப்பாயிருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பேன். நிறத்தில் முகத்தில் என்ன இருக்கின்றது. பொதுவாக இந்த அழகுபடுத்தல்கள் எல்லாம் பெரும்பாலும் இன கவர்ச்சியக்கானவை தானே. என்னைப்பொறுத்தளவில் நான் ஓர் ஆணை என்னுடைய படிப்பு, திறமையால் குணத்தால் தான் கவரநினைப்பதுண்டு. அதேபோன்று ஓர் ஆண் என்னை கவரவேண்டுமென்றாலும் இவை தான் என்னை ஈர்க்கும். முற்போக்கு சிந்தனையும், முதிர்ச்சியும் ஆளுமையும் தான் தேவையேயன்றி வெளிப்பூச்சுகள் அல்ல… இதை சொல்லப்போனால் என்னை வித்தியாசமாக பார்க்கின்றார்கள்… அப்படியென்றால் இவரை பிடிக்குமா அவரைப்பிடிக்குமா என்று அவர்கள் எதையெல்லாம் இழிவென நினைக்கின்றார்களோ அதனை முன்னிருத்தி ஆண்களை சுட்டி என்னிடம் கேட்கின்றார்கள். இவ்வாறானவர்களிடம் சில விடயங்களை பேசாமல் கடப்பதே மேல்…..

"உன் கையிலா கடிகாரம்.......?
கடிகாரத்தின் கையில் நீ ....." - காசி ஆனந்தன்












வினாக்களுக்கான பதில்கள் 02



 முற்பகுதி 

 
வினா 03: 
மீரா நீங்கள் கோவக்காரி, பிடிவாதக்காரி என்றறிந்தேன் இதில் உண்மையுள்ளதா? கோபம் போன பின் என்ன செய்வீர்கள்? உங்கள் சமூகஊடகங்களை பின்தொடர்ந்த வகையில் அப்படித்தெரியவில்லையே அன்பே….

பதில் : சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்தால் தெரியாது தான். என்னை நேரில் தொடர்ந்தால் தான் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எல்லோரும் நடத்தைப் பிறழ்வு காட்டுவது போன்று நானும் சிலநேரங்களில் அந்நியன் போல் நடப்பதுண்டு. நீங்கள் அறிந்ததை போன்று கோபம், பிடிவாதம் கொஞ்ஞ்ஞ்ஞ்…….சம் கூட தான். ஆனால் எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் நான் கோபம் கொள்வதில்லை, பிடிவாதம் பிடிப்பதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது மாதிரி எப்போதாவது கோபத்தின் உச்சத்திற்கு போவதுண்டு. நிச்சயம் இச்சந்தர்ப்பங்களில் சுற்றியுள்ளவர்களை ஆழமாக காயப்படுத்துவதும் உண்டு. ஆனால் பிடிவாதம் மட்டும் எப்போதும் உண்டு. சின்னச்சின்ன விடயங்களில் கூட பிடிவாதம் பிடிப்பதுண்டு. நான் குழப்படி செய்து அம்மாவிடம் வாங்கிய அடிகளை விட பிடிவாதம் பிடித்து வாங்கிக்கட்டிக்கொண்டவை அதிகம். 


அநேகமாக கோபத்தில் யாரையாவது காயப்படுத்திவிட்டால் கோபம் குறைந்த பின் தனியே இருந்து அழுவதுண்டு. இன்னும் மனதிற்குள் சஞ்சலம் இருந்தால் கடற்கரைக்குச் சென்று காலார நடப்பதுண்டு. அதுவே நெருக்கமானவர்களை காயப்படுத்தி விட்டால் ஏதாவது கிறுக்குவதுண்டு. 
மிகவும் சலிப்பான நேரங்களில் ஏதாவது பேரூந்தில் ஏறி அது பயணிக்கும் கடைசி இடம் வரை பயணித்து அங்கு இறங்கி எங்காவது ஓரிடத்தில் நல்ல கோப்பி ஒன்று குடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வருவேன். எப்போதும் மன சஞ்சலங்களை காயப்படுத்தல்களை ஆசுவாசப்படுத்துவதில் கோப்பி, பயணம், கடல், வர்ணங்கள் என்பவற்றிற்கு பாரிய பங்குண்டு.
 

என்னுடைய கோபம் பற்றி அறிய வேண்டும் என்றால் என்னுடைய அலுவலகங்களில் கேட்டுப்பாருங்கள். கோபத்தில் விசிறியடிக்கின்ற தாள்களை அநேகமாக சேர்த்தெடுப்பவர்கள் அவர்கள் தான். இனிமேல் என்னைத் தெரிந்துகொள்ள சமூக ஊடகங்களிலன்றி நேரில் தொடருங்கள் அன்பே…. சிலநேரங்களில் நீங்களும் வாங்கிக்கட்டிக்கொள்ள கூடும். 


வினா 04: எப்போது நல்ல செய்தி சொல்லப்போறீர்கள்? மனம் + மனம் திருமணம் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும்?

பதில்: அநேகமாக அடுத்த வருடம் பல நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். மகரராசிக்கு இனித்தான் நல்ல காலம் பிறக்கவுள்ளதாம் என்று சோதிடரும் சொல்கின்றார். வாழ்க்கை நடப்பும் அப்பிடித்தான் சொல்கின்றது. 

விரைவில் எழுதுகின்றேன் நண்பி. காலம் நேரமும் கூடி வரவேண்டுமல்லவா……. முதல் இரு பாகங்களும் இரு தலைமுறையின் கதைகள். முடிந்து போன பின் எழுதப்பட்ட கதைகள். ஆனால் இனி எழுதவுள்ள மூன்றாம் பாகம் நடந்துகொண்டிருக்கும் கதை. முடிவினை அறுதியிட்டு கூற முடியாத கதை. எனவே மூன்றாம் தலைமுறையினதை எழுத நேரம் அதிகம் தேவைப்படுகின்றது. அதனால் தான் தாமதமாகின்றது.

வினா 05: முன்னைய காலங்கள் போன்று தற்போது கவிதைகள் எழுவதில்லையா மீரா? உங்கள் கவிதைகளின் வரிகளைத் திருடி காதல் வளர்த்தவன் நான்….. 

பதில்: கவிதை எழுத மனதுள் மெல்லிய உணர்வு வேண்டும். தற்போதெல்லாம் வன் உணர்வகள் தான் பெரும்பாலும் தலைதூக்கி நிற்கின்றன. ஊடகவியலும் பொறியியலும் தான் தற்போது என்னை நீரோட்டத்தில் இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன. பரபரப்பும் அழுத்தமும் நிறைந்ததாக என் நாட்கள் நகர்கின்ற இதில் கவிதை வருவதெப்படி? 

பரவாயில்லையே தெரிந்தோ தெரியாமலோ பல காதல்கள் என் கவிதையால் வாழ்ந்துள்ளன, வளர்ந்துள்ளன என்பது பெருமையே… அதுசரி நீங்கள் இன்னும் கவிதைகளை மட்டுமா கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள்… வளர்ந்த / வளர்த்த காதல் என்னாச்சு?  ஆத்மார்த்தமாக கதைப்பதென்றால் இதில் சில கவிதைகள் என் நண்பர்கள் தங்கள் காதலர்களுக்கு கொடுப்பதற்காக கேட்டு நான் எழுதிய கவிதைகள். சிலது எனக்கே எனக்கானவை….. 





வினாக்களுக்கான பதில்கள் -01

 

வணக்கம் நண்பர்களே>

நீண்ட நாட்களின் பின்னர் நேரங்கிடைத்துள்ளது. பயணங்களினாலும் குடும்பத்திற்கான நேர ஒதுக்கல்களினாலும் நிரம்பிவிட்டது என்னுடைய நாட்குறிப்பு. இந்த இடைவெளியில் 177 வினாக்களை அனுப்பியுள்ளீர்கள். அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிகள். அதில் பெரும்பாலானவை ஒத்த தொனியிலானவை மேலும் சில பதிலளிக்க முடியாதவை.  எனவே அனுப்பியவற்றிலிருந்து பதினைந்து முக்கிய கேள்விகளை தேர்ந்து அதற்கு பதிலளிக்க விழைகின்றேன். 

வினா 01: மீரா நீங்கள் இரு கைகளாலும் எழுதுபவர். வரைபவர் என்று அறிந்தேன் உண்மையாகவா? AK எனும் பெயரில் நீங்கள் பல வருடங்களாக வரைந்து வந்ததாகவும் தற்போது வரைவதில்லை என்றும்> உங்கள் ஓவியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் அறிகின்றேன். இது உங்கள் காதலுடன் தொடர்புடையது என்றும் கூறப்படுகின்றதே இவையெல்லாம் உண்மையா?

பதில்: பரவாயில்லையே நண்பரே என்னை குறித்து ஆய்வே செய்துள்ளீர்கள் போல. நீங்கள் அறிந்தது உண்மையே. ன்னால் இரு கைகளாலும் வரைய முடியும். ஆனால் இடது கையால் தெளிவாக எழுத முடியாது. இவ்வாறு இரு கைகளாலும் எழுதுபவர்கள் உலகில் ஒரு சதவீதமானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. எம்மைப் போன்றவர்கள் 

Ambidexterity என்று அழைக்கப்படுகின்றார்கள்.  AK  எனும் பெயரில் கிறுக்கியுள்;ளேன். பpன்னர் அவற்றினை முற்றாக நீக்கியதும் நானே. கடந்த வருடம் சில கிறுக்கியுள்ளேன். என்னுடைய இன்ஸ்ராகிராமில் உள்ளது. அதனை மீண்டும் கடந்த ஆகஸ்ட் 8 உடன் நிறுத்தி விட்டேன். ஓவியம் என்பது என்னளவில் மனதுடன் இணைந்த விடயம். மேலும் கட்டடப்பொறியில் சார் ஓவியங்கள் மட்டும் வரைகின்றேன். வரைவேன். ஆக நீங்கள் அறிந்தவை உண்மையே. எப்போதும் கலைஞர்கள் ஒவ்வொருவருள்ளும் ஒரு கிறுக்குபுத்தி ஒளிந்திருக்கும் என்பதையும் உங்களுக்கு சுட்டவிரும்புகின்றேன். இவ்வாறு நான் மட்டுமல்ல வரலாற்றில் பலர் செய்துமுள்ளார்கள். சுய அழிப்பு இது. 

வினா 02: நீங்கள் உங்கள் வாழ்வில் மிகவும் கேவலமான மனிதரை சந்தித்தித்துள்ளீர்களா?

பதில்: நான் கேவலமான மனிதரை சந்திக்கவில்லை. நான் சந்தித்தவர் கேவலமானவர். ஓரு கதை சொல்லவா? 

ஒரு இளம் பெண்> படித்த> பண்பான குடும்பத்தினை சேர்ந்தவள், குடும்பத்தில் பல ஆண் சகோதரர்களுக்கு ஒரு பெண்ணாக பிறந்தவள் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒருவரை அடிக்கடி சந்திக்கின்றாள். அவரைப் பற்றிவிசாரிக்கும் போது அவருக்கு காதலி இருப்பதாக அறிகின்றாள். தனக்கும் அவருக்குமான வயது வித்தியாசம் பற்றியும் தெரிந்துகொள்கின்றாள். விலகி நடக்கின்றாள். இருவருமே ஒரு தளத்தில் இயங்குபவர்கள். ஆக விரும்பியோ விரும்பாமலோ குறித்த நபர் பற்றிய விடயங்கள் அவளுக்கு அறியக்கிடைக்கின்றது. சில மாதங்களின் பின்னர் அவர் வேற்றின பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அறிகின்றாள். திருமணம் அன்றும் யாருக்கும் தெரியாமல் அந்த நிகழ்வில் அண்மித்திருந்து அழுகின்றாள் கடந்து விடுகின்றாள். ஆனால் சிலரின் மனம் கண்ணாடி இல்லை தானே மாற்றி மாற்றி முகம் பார்த்துக்கொள்வதற்கு. இதே காலப்பகுதியில் அரசியல் காரணங்கள், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகளால் வெளிநாடு சென்று விடுகின்றாள். மீண்டும் அவள் நாடு திரும்பும் போது நிகழ்வொன்றில் அவளைக்காணும் குடும்பமொன்று தானாகவே வீடேறி பெண் கேட்க வீட்டவர்களின் விருப்பத்திற்கு தலையசைத்துவிடுகின்றாள். ஆனால் எல்லாம் பொருந்திய அந்த திருமண ஒழங்கில் இருவருக்கும் மணப்பொருத்தம் குறைவாகவிருக்கின்றது. இதனால் நிச்சயார்த்தம் பிற்போடப்படுகின்றது. தளும்பலுடன் நகர்கின்றது இந்த உறவு. இப்படியிருக்கும் கால கட்டத்தில் ஒரு பயிற்சியில் மீண்டும் அந்த முதல் நபரை எதிர்பாராமல் சந்திக்கின்றாள். அந்த பயிற்சியின் மூன்று நாட்களும் மிகுந்த பதற்றத்துடன் எதிர்கொள்கின்ற அவள் அந்த நபர் விவாகரத்து பெற்றுவிட்டதை எதேச்சையாக அறிகின்றாள். மீண்டும் மனம் முருங்கை மரமேறி விடுகின்றது. ஆனால் எந்த கட்டத்திலும் காயப்படுத்திவிடவோ அவரது பழைய காயங்களை பற்றி பேசிடவோ விரும்பாது பழக ஆரம்பிக்கின்றாள். பின்னர் தான் அவருக்கும் பல பெண்களுக்குமான உறவுகளை புரிந்தும் தெரிந்தும் கொள்கின்றாள். இதனால் அவர் மனஆழுத்தங்களால் காயப்படுத்தும் போதெல்லாம் தாங்கிக்கொள்கின்றாள். இதன் போது அவரின் கடுஞ்சொற்கள்> தூக்கியெறிதல்கள் > அவமானப்படுத்தல்கள் என எல்லாவற்றினையும் கடக்கின்றாள்.

ஆனால் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? ஓரிரவு இந்தப்பெண் விருது பெறும் நிகழ்வில் தன் மாணவியுடன் கலந்துகொள்கின்றாள். இதன் போது முகநூலில் அந்த நபர் மாணவியுடன் உரையாடுவதை அறிகின்றாள். அந்த மாணவியும் வேற்றினத்தை சேர்ந்தவர்> விவாகரத்து > பல தொடர்புகள் என பிரச்சினைகளுக்குறியவர். இருவரும் நள்ளிரவில் உரையாடுகின்றனர். இங்கு அந்தப் பெண்ணைப்பற்றி அந்த நபரும் அந்தப்பெண்ணின் மாணவியும் பேசிக்கொண்டது மிக முக்கியமானது. ஆனால் அறமும் நேர்மையுமற்ற உரையாடல் அது. தன்னிடம் அந்தப்பெண் விருப்பம் கேட்டதாகவும் தான் இல்லையென்று சொன்னதாகவும், அந்தப்பெண்ணுக்கு வேறு யாரும் கிடைக்காமல் தன் பின்னால் அலைவதாகவும் சொல்லிவிடுகின்றார் அந்த நபர். இதனை அந்த மாணவி அந்தப்பெண்ணை அவமானப்படுத்தும் நோக்குடன் பொதுவில் சொல்லி விடுகின்றாள்.

போராட்ட குணம் கொண்ட அந்தப்பெண் தனக்கு நடந்ததை உரத்துசொல்லியிருக்க முடியும். ஆனால் அந்த நபர் பிறந்தநாளன்று காயப்படுத்திவிடக்கூடாதென நினைத்து சில நாட்களின் பின்னர் இது குறித்து மின்னஞ்சல் செய்கின்றாள். இன்று வரை அந்த நபர் அந்தப் பெண்ணிடம் ஒற்றை மன்னிப்பு கூட கேட்கவில்லை. இதை விட முரண் என்னவென்றால் சமூக ஊடகங்களில் நீதி. நேர்மை என்று வெட்டிப்பிளக்கும் அந்த நபர் தான் செய்த நேர்மையற்ற செயலை எண்ணி தலை குனியாதது.

ஆனால் இதற்குப் பின்னரும் சமூக ஊடகத்தில் இந்த நபரைப்பற்றி தரக்குறைவாக பேசப்பட்ட போது அந்தப்பெண் தன்னுடைய சுயகௌரவத்தினையும் மீறி இந்த நபருக்கு அழைப்பெடுத்துள்ளார். அதற்கும் பதிலளிக்கவில்லை. கள்ளமனங்கள் அப்படித்தானிருக்கும். தன் முன்னால் தான் விரும்பிய நபர் அவமானப்படுவதை பொறுக்காது தற்காலிகமான தன்னுடைய சமூக ஊடகங்களை அப்பெண் நிறுத்தி விடுகின்றாள். அப்போது கூட தன்னுடைய முகநூலில்  “எல்லாம் சுபம்” என்று அந்த நபர் பதிவிடுகின்றார்.

நீங்களும் கூட அவர் சொன்னது போல அவளுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லை என்பது தான் சரி என்று நினைக்கின்றீர்களா? அல்லது அந்தப்பெண்ணுக்கு குறையுள்ளது என்பது உங்கள் அபிப்பிராயமா? அந்தப்பெண் இந்த வருடம் உலகில் உள்ள வடிவமைப்பாளர்களில் 100 பேருக்குள் வந்துள்ள அறிவாளி> அவளுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளவர் இன்னும் சில வருடத்தில் உலகின் தலைசிறந்த சந்திரசிகிச்சை நிபுணராகவுள்ளவர். பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நம்மிடம் எளிமையாக நடமாடுபவர்களை> எளிமையாக உடுத்துபவர்களை> அதீத அன்பாக உள்ளவர்களை குறைத்து மதிப்பிட்டு விடுகின்றோம். தில் கறைபட்டாலும் கழுவிவிட இரசாயனம் இருக்கின்றது. ஆனால் மனதில் ஒரு கேவலமானவனை நினைத்து அதற்காக சுயகௌரவம் இழந்து இன்று வருத்தப்படுகின்ற அந்த பெண்ணின் மனதை கழுவ ஏதும் மருந்திருக்கின்றதா? இப்போது சொல்லுங்கள் அந்த மனிதன் கேவலமானவர் இல்லையா? குறைந்த பட்சம் தான் செய்த தவறை கூட உணராதவன் மனிதனுள் அடங்குவானா? இது நமக்கு தெரிந்ததொரு சம்பவம். இதனைப் போன்று எத்தனை பெண்களின் வாழ்க்கை இவரால் சீரழிக்கப்பட்டிருக்கும்? இரவில் 10.45க்கு ஒரு பிரச்சினைக்குறிய பெண்ணிடம் தன்னை நேசித்த பெண்ணைப் பற்றி அறமின்றி கதைப்பவன் எப்படி நேர்மையாளனாக இருக்க முடியும்?

இவரைத்தான் நான் சில வருடங்களுக்கு முன்னர் வீதியோர போராட்டத்தில் முதன்முறை சந்தித்திருந்தேன்.

மீதி வினாக்களுக்கான விடை சில தினங்களில்....  

 

 

 

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை