Monday, September 16, 2013

கா.மு – கா.பி


தலைப்பினை பார்த்ததும் ஏதோ வேற்று மொழி பேச தொடங்கிவிட்டேன் என்று விகல்பமாக யோசிக்காதீர்கள். கா.மு – என்பது காதலுக்கு முன் கா.பி என்பது காதலுக்குப் பின் என்பவற்றின் சுருக்கமே. இந்தப்பதிவினை இன்றைய காலகட்டத்துடன் சம்மந்தப்படுத்தியும் உளவியல் ரீதியாகவும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம். இப்பதிவினை என் கண்ணோட்டத்திலும் என் சார்ந்தவர்களை மையப்படுத்தியுமே எழுதுகின்றேன். யாரையும் காயப்படுத்துவதோ அல்லது பெண்ணியம் பேசுவதோ இதன் நோக்கமல்ல.

“காதல்” என்பது இன்று பலவித பரிணாமங்களை கடந்துவிட்டது. முன்னர் நம்முடைய தாத்தா – பாட்டி காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்களுக்கு இடையில் தொடர்பாடல் சாதனங்களும் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களது காதல் மிகவும் தூய்மையானதொன்றாக இருந்தது. அவர்கள் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது காலம் முழுவதும் ஒருவர் மற்றவருடைய நினைவுகளுடனேயே காலம் கழித்தார்கள். அக்காலத்தில் எல்லாம் ஒரே காதல் என்ற கருத்து தான் நிலவியது. காதலிக்கும் போது எவ்வாறானதொரு புரிந்துணர்வுடன் காதலித்தார்களோ அதே காதல் கைபிடித்த பின்னும் குறைந்திருக்கவில்லை.

இன்று சமூக ஊடகங்கள் மூலமாக நமக்குறியவர்களை தேடி திருமணம் செய்யுமளவிற்கு நாம் வளர்ந்திருக்கின்றோம். நம்முறவுகளை வளர்த்துக்கொள்ள பல தொடர்பாடல் நுட்பங்கள் நம்மிடையே பெருகிக்கிடக்கின்றன. ஆனாலும் தற்போதைய காதலர்களிடையே புரிந்துணர்வு என்பது பஞ்சமாகவே இருக்கின்றது. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தம் காதலை எதிர்பாலினர் ஏற்கும் வரை கொஞ்சிக்குழாவுகின்றோம், பல மணி நேரங்கள் காத்திருக்கின்றோம், சில தவறுகள் நம்மிடம் இல்லாவிட்டாலும் பொறுத்துப்போவோம், பல தியாகங்கள் செய்கின்றோம். ஆனால் இதுவே காதலிக்க தொடங்கிய பின் படிப்படியாக மாற ஆரம்பிப்பதேன்?

உளவியல் ரீதியாக நோக்கும் போது ஒரு பொருள் அல்லது நபர் நம்முடைய உடமையாகும் போது அதன் மீதான உரிமை அதிகரிக்கிறது. இதனால் கூட இவ்வாறானதொரு மனநிலை உருவாகக்கூடும். இதையே நமது மொழிநடையில் சொல்லப்பொனால் “கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்ற மனநிலையே இது. இப்படியானதொரு சிந்தனை நம்மில் பல மாற்றங்களை கூட ஏற்படுத்துகிறது. 
  • நமது காதலுக்கு முந்தைய குணவியல்புகளில் மாற்றம் (முன்னர் வழிகின்ற நாம் சிடுமூஞ்சாகின்றோம்)
  • சிறு பிழைகள் கூட பூதாகரமானதொன்றாக தோன்றும்
  • முன்னர் நாட்கணக்கில் அவள் அல்லது அவன் ஒரு வார்த்தை பேசமாட்டாரா என்று ஏங்கும் நாம் சிறுநேர தாமதத்தினை கூட பாரியதொரு பிரிவிற்கான தொடக்கபுள்ளியாக்குவோம்
நம்மில் ஏற்படுகின்ற இம்மாற்றங்கள் எதிர்பாலரிடமும் சில தாக்கங்களை உளவியல் ரீதியாக ஏற்படுத்த கூடும்.
  • திடீரென்றான மாற்றங்கள் ஒருவித பய மனநிலையை தோற்றுவிக்க கூடும்
  • தம்மில் தான் ஏதும் தவறோ என்ற குற்றவுணர்வினை ஏற்படுத்தக்கூடும்
  • தம் மீதான அன்பு குறைவடைகிறதோ என்கின்ற சந்தேகத்தினை உண்டாக்கும்.
  • சுற்றியுள்ளவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுகின்ற தன்மையை அல்லது மனவழுத்தத்தினை ஏற்படுத்த கூடும்
  • மாற்று அன்பை தேட கூடும்.
  • ஏனையவர்களுடன் தன் காதலை ஒப்பிட்டு பார்க்க தூண்டும்.
ஆகமொத்தத்தில் காதலில் சிறு கீறல்களை உண்டாக்க ஆரம்பிக்கும். நாம் எப்போதும் தோற்பது காதலில் அல்ல நாம் காதலிப்பவர்களை தெரிவுசெய்வதில் தான் தோற்கின்றோம். நம்முடைய எதிர்பார்ப்புகள் என்ன? நமது எதிர்பார்ப்பு ஏற்ற வகையில் காதலன் அல்லது காதலி அமைவாரா? என்று சிந்திக்க வேண்டும். எப்போதும் தெரிவுகள் நம் கையில் தானிருக்கின்றன.

பலவிடங்களில் “அன்புள்ள அல்லது உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் உண்டாகும்” என்று வாசித்தும், கேட்டுமிருக்கின்றேன். எனக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. அன்பை அன்பாக தான் காட்ட வேணுமுங்க…. ஏன் ஒருவரை காயப்படுத்தி தானா நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும்? சிறு தண்டணைகள், பழிவாங்கல்கள் மூலமாகத்தான் நமது உரிமையை நிரூபிக்க வேண்டுமா? அன்பால் இவற்றினை செய்தால் என்ன? காதலில் சம்மதங்களை தெரிவிக்கும் முன் அன்பை கொட்டுகின்றோம் தானே பின்னர் ஏன் அது குறைவுபடுகிறது? முன்னைய அன்பில் சிறு மாறல் ஏற்படுமாயினும் அது உண்மை அன்பில்லை என்பது என் கருத்து. நாம் சம்மதங்களை பெறுவதற்கு வேஷமிட்டிருக்கின்றோம் என்பது தான் இதன் அர்த்தம். ஒருவரை புரிந்துதான் காதலிக்க ஆரம்பிக்கின்றோம் என்றால் ஏன் நம் காதல் மாறுபட வேண்டும்?

  • நம்மவர் நம்மை சந்திக்க வராதவிடத்து “ஏன் நீ வரவில்லை?” என்று கேட்டதல்ல “ஏதோ நடந்துவிட்டது அதனால் தான் வரவில்லை” என்று சிந்தித்தோமென்றால் அதுதான் புரிந்துணர்வு.
  • “என்னைப்பற்றி நினைத்துப் பார்த்தாயா?” என்பதல்ல “என்னையே நினைத்துக்கொண்டிருப்பா(ள்)(ன்)” என்று சமாதானமாகிவிடுவோமே அது தான் பாசம்
  • “நீ செய்தாய் நானும் செய்கின்றேன்” என்பதல்ல “நீ என்ன செய்தாலும் நான் உண்னை அதே அன்புடன் நேசிப்பேன்” என்பதே அன்பு
  • எடுப்பதல்ல கொடுப்பதே காதல்
கல்யாணத்தில் முடிந்தால் மட்டும் காதல் இல்லைங்க…. அதே கா.மு இருக்கும் அன்புடன் கா.பி இருப்பார்கள் என்றால் அது தாங்க வெற்றியடைந்த உண்மைக்காதல். இந்தக்காதல் கல்லறை வரை தொடருமுங்க… (இது இல்லாட்டி தான் அம்மா,அப்பா கைகாட்டுபவருக்கு கழுத்தை காட்டலாமே… என்னத்திற்கு காதலிக்கனும்…….? அழுது அடம்பிடித்து மூக்கால் வடிந்து எல்லாம் கஷ்டப்பட்டு கைப்பிடிக்கனும்……????)

நம்மவர் மனதில் ஒரு கஷ்டம் என்றால் நமது இதயத்திற்கு வலிக்கனும்!!!!



Tuesday, September 10, 2013

பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்

இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றன பெண்ணுக்கு மறுக்கப்பட்டுள்ள மூன்று விடயங்கள்
இன்றைய சமூகக்கட்டமைப்பில் விளிம்புநிலையில் காணப்படுகின்ற பாலினமான பெண்கள் பல்வேறு வழிகளிலும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு போராடி வருகின்றனர். பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் முதல் தனி நபர்கள் வரை பலர் பெண்ணியத்திற்கு குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அன்று மூலையில் முடிங்கிக் கிடந்த காலம் போய் இன்று பெண்கள் பல தலைமைப்பதவிகளை வகிக்கின்ற நிலை தோன்றிவிட்டமை பெருமைக்குறியதொரு விடயமே. ஆயினும் அன்று தொட்டு இன்று வரை பெண் வெளிப்படையாக பேசிய முடியாத சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. இவற்றுள் முக்கியமானவை மூன்று..........பெண்ணியம் இணையதளத்தில்

வாழ்வெனும் மலர்……

அழகான பூவொன்றினை கவிஞன் ஒருவன் கண்டான். அரிய வகையான அம்மலரினை கண்டதிலிருந்து கவிஞனுக்கு கவிதை கொட்ட ஆரம்பித்தது. அவனது கவி வரிகளில் தம்மை மறந்த இரசிகர்கள் கற்பனையிலேயே அந்த மலரினை காணத்தொடங்கினதும் அல்லாமல் விரும்பவும் தொடங்கினர்.

இதே மலரினை ஆராய்ச்சியாளன் ஒருவனும் கண்டான். அந்த மலரை பிரித்து
 மேய்ந்து அதன் தாவரவியல் குடும்பம் தொடங்கி மகரந்தம் எப்படி பரவலடைகிறது என்பது வரை துல்லியமான ஆராய்ந்து பலவித ஆய்வுக்கட்டுரைகள் வரைந்தான். விருதுகளும் கிடைத்தன.


இவ்வகை மலரினை பக்தன் ஒருவன் கண்டான். அண்டாசராசரங்களையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் பாதகாணிக்கை ஆக்குவதே அம்மலருக்கான சிறப்பு என்று என்று எண்ணிணான். அம்மலரினை பறித்து இறைவனின் பாதமலர் சாற்றினான்.

 
ஓவியன் ஒருவன் கண்டான். பல கோணங்களிலும் நின்று பார்த்து அதன் அழகை கண்டு பிரமித்தான். தன் ஓவியத்திறமையால் அம்மலரினையே பிரதி எடுத்ததினை போன்று ஓவியம் தீட்டினான். பல கண்காட்சிகளிலும் காட்சிப்படுத்தினான். பலர் அவனை வியந்து பாராட்டினர்.

 
ஒரு பெண் இப் பூவினை பார்த்தாள். அதன் அழகில் ஈர்க்கப்பட்டாள். பறித்து தலையில் சூடிக்கொண்டாள். காலையில் சூடிய மலர் மாலையில் வாடியவுடன் தூக்கியெறிந்து விட்டாள்.




மேற்கூறிய உதாரணங்களை மீண்டும் வாசித்தீர்களாயின் ஒவ்வொரு உதாரணங்களிலும் பலவித ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்துள்ளதை விளங்கிக்கொள்வீர்கள்.

இப்படித்தாங்க நம் வாழ்க்கை எனும் மலரும். அதுவொரு அதிசய மலர். அரிதானதொன்று. மலர் எப்படி காலையில் மலர்ந்து மாலையில் வாடி விடுகிறதோ அப்படித்தான் நம்முடைய ஆயுட்காலமும். அதை நாம் எப்படி வாழ்கின்றோம் , எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுகின்றோம் என்பதில் தான் நமது வாழ்வின் பெறுமதியே இருக்கின்றது. எப்படியும் வாழலாம்….. இப்படியும் வாழலாம்…. ஆக வரையறைகள் கூட நம் கையில் தானுண்டு. வாழ்கின்ற இந்த சொற்பக் காலத்தில் அர்த்தமுள்ளதாக வாழ்கின்றோமா….? சிந்திப்போம்.

Friday, September 6, 2013

முயலாமையால்……


நிலை - 01

ஒரு காட்டில ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்திச்சாம். (ஒன்று ஒன்று தானா இருந்தது என்று எடக்குமுடக்கா கேட்க கூடாது சொல்லிப்புட்டன்). இரண்டுக்கும் இடையில் யாரு நல்லா ஓடுவாங்க ? என்ற விடயத்தில் பிரச்சினை வந்தது. இந்த சண்டை முடிவில் ஓட்ட பந்தயம் வைக்கிறது என்று முடிவானது.

பந்தயம் தொடங்கியதும் பாஞ்சு விழுந்து ஓடிய முயல் சற்று தூரம் போனதும் திரும்பி பார்த்தது. ஆமை ஆரம்ப புள்ளியிலிருந்து கொஞ்ச தூரம் தான் நகர்ந்திருந்தது தெரிஞ்சுது…..  சப்பா கொஞ்சம் டயடா இருக்கு… ரெஸ்ட் எடுத்துட்டு ஓடுவம் என்று மரத்திற்கு கீழ குந்தின முயல் அப்படியே தூங்கிட்டுது…. தடார் என்று எழும்பி பார்த்தா ஆமை கோல்ட் மெடலோட கையில் பிளவர் பஞ்சோட சிரிச்சுக்கொண்டு போட்டோக்கு போஸ் குடுத்துக்கொண்டிருந்தது. “ஐயோ சோம்பேறிதனத்தால தூங்கிட்டமே” என்று தன்னையே நொந்து கொண்டது முயல். அன்று இரவு புல் பொட்டில் சாராயம், சிக்ரட் பைக்கற் என்று கவலையை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டது.

இது முயல்  + ஆமை (யால்) =  முயலாமையால் தோற்கடிக்கப்பட்ட கதை
(வெயிட் நீங்க கடுப்பாவது புரியுதுங்க…..)

நிலை – 02

எப்படியோ வென்றிட்டமே இனி நான் ஒலிம்பிக்கில ஓடலாம் என்று நினைத்த ஆமை டெய்லி ப்ரக்டீசுக்கு போய்க்கொண்டிருந்தது. இத பார்த்த முயல் “ஹலோ ஏதோ ஒரு நாள் வெற்றி பெற்றிட்ட பட் இனி உன்னால் முடியாது” என்று ஆமையை வம்புக்கிழுத்தது. “ஏய் மிஸ்டர் வேனுமினா இன்னொருக்கா ஓடி பாரும்…..” என்று பதிலடி கொடுத்தது ஆமை. அவ்வளவு தான் முயல் “மீண்டும் ஓடி பார்ப்பமா?....” என்று கேட்டது. ஆமையும் ஓவர் கொன்பிடன்ஸ்ல மண்டையை ஆட்டியது.

இரண்டாவது பந்தயம் ஆரம்பமானது. முயல் மூச்சுப்பிடிச்சு ஓடியது. ஆமை ஒரு கிலோமீற்றர் தாண்டுறதுக்குல்ல அது போய் சேர்ந்துவிட்டது..... வெற்றி பெற்ற முயல்ற ஹாண்ட்சத்தை பார்த்து பல தயாரிப்பாளர்கள் கரட் யூஸ், டூத்பேஸ்ட் விளம்பரங்களுக்கு அப்பவே புக் பண்ணிட்டாங்க என்றால் பார்த்துக்கொள்ளுங்களன்….. இங்கே ஆமை ஓவென்று அழுதுகொண்டிருந்தது.

இது ஆமை முயற்சி செய்யாமையிலால் அதாவது “முயலாமையால்” தோற்ற கதை…

நிலை – 03

இந்த முறை ஆமையும் முயலும் சொப்பிங் செண்டர்ல கண்டும் காணாததும் போல இருந்தாலும் இருபக்க அள்ளக்கைகளும் சும்மா இருக்க முடியாம திரும்ப ஒரு ரேஸ் வைப்பமா என்று ஆளாளுக்கு உசுப்பேத்தின. இனி என்ன செய்வதென்று நம்ப ஹீரோ முயலும் ஹீரோயின் ஆமையும் (நோட் திஸ் பொயிண்ட்) சம்மதித்தன. பட் இந்த தடவை ஒரு நிபந்தனை போட்டது ஆமை. “ஒரே வீதியில் மட்டும் ஓடாம இந்த தடவை நீச்சல் போட்டியும் வைக்க வேண்டும்” என்றது. முயலக்கு இது தன்மான பிரச்சினையாகிவிட்டது. ஒரு பொண்ணுட்ட நான் தோற்பதா? என்று…. “என்ன நாங்க நீந்தமாட்டம் என்று நினைத்தீங்களா…. பொறுத்திருந்து பார்…..” என்று சவால் விட்டு சம்மதித்தது.

3வது போட்டி தொடங்கியது. தரையில் பாய்ந்தோடிய முயல். தண்ணீரை கண்டதும் அப்படியே நின்று விட்டது. அப்போது தான் முயலுக்கு ஸ்விம்மிங் கிளாஸ் போயிருக்கலாமோ என்று தோன்றியது. பட் இட்ஸ் டூ லேட்… ஆமை நல்லா ஸ்விம் பண்ணி போய் இலக்கை அடைந்துவிட்டது. இதிலென்ன ஆச்சரியம் என்றால் முயலும் போய் ஆமையை விஷ் பண்ணியது.
அன்றிலிருந்து எங்காவது கண்டால் இரண்டும் ஹாய் சொல்லிக் கொண்டன. முயல்ற கனவுல ஆமை ஸ்விம்மிங் டிரஸ்ல வாறதும்: ஆமையோட கனவுல கஜனி சூர்யா ரேஞ்சில் “சுட்டும் விழி சுடரே…..” என்று முயல் வாறதும் தொடர்ந்தன. ஒரு நாள் “ ஐ லவ் யூ டா செல்லம்…” என்று முயல் காட்டுப்பூ ஒன்றை கொடுக்க “மீ டூ டியர்” என்று ஆமையும் வாங்கிக்கொண்டது. ஆக மொத்ததில் மோதலில் தொடங்கிய உறவு காதலில் முடிந்தது.

இது முயல் + ஆமை இரண்டும் முயற்சி செய்யாமல் மோதி அதாவது “முயலாமையால்” காதலில் வென்ற கதை.

நிலை – 04

இப்படியே இருக்கும் போது நம்ம கதாநாயகர்கள் படிக்கும் யூனிவர் சிட்டியில் ஓட்டப்பந்தயம் ஒன்று ஏற்பாடாகியது. இருவரது விரிவுரையாளர்களும் தங்களது மாணவர்களது சம்மதத்தினை கேட்காமலேயே இருவரது பெயரையும் கொடுத்துவிட்டனர். இந்த முறை பலர் இதில் கலந்துகொண்டனர்.

4வது பந்தயம் தொடங்கியது. இந்த தடவை தரை வழிப்பாதையில் ஓடும் போது முயல் ஆமையின் கையை பிடித்துக்கொண்டு ஓடியது. நீர்வழிப்பாதையில் ஆமை முயலுக்கு உதவிசெய்தது. இருவரும் ஒரே நேரத்தில் இலக்கை அடைவதற்கு முன் ஆமை முயலுக்கு விட்டுக்கொடுக்க…. முயல் ஆமைக்கு விட்டுக்கொடுக்க…. என்று சென்டிமெண்ட் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது பின்னால் வந்த அனிமல் முன்னுக்குப்போய் மெடல் வாங்கியது. (மெடலா முக்கியம் செண்டிமென்ட் தான் முக்கியம்.)

இது முயல் ஆமையாலும் , ஆமை முயலாலும் ஆக மொத்தத்தில் “முயலாமையால்” தோற்ற கதை

நிலை – 05

இது அவங்க பேசனல் பந்தயம்… சொறி ஓட்டம் அதாவது இருவரது காதலும் இரு வீட்டுக்கும் தெரிய வந்து காட்டு நாட்டாமை சிங்கத்தின் தீர்ப்பினால் இருவரும் ஓடிப்போன கதை… அடுத்தவங்க தனிப்பட்ட விடயத்தினை பற்றி கதைப்பது நல்லதில்லைங்க… நமக்கேன் வம்பு? எந்தக் காட்டிலாவது பல்லாண்டு காலம் வாழட்டும்.

இதுவும் முயல் + ஆமை காதலால் அதாவது “முயலாமையால்” காடு தீப்பற்றிய கதை. 

என்னை கதை சொல்லு கற்பனையை வளர்த்துக்கொள் என்று பல்கலைக்கழக வாத்தியார் சொன்னாலும் சொன்னர்.... கற்பனை பிச்சுக்கொண்டு ஓடுது.... இனிமேலும் யாரும் குழந்தைகளை ஏமாற்றாமல் , இந்த பாட்டி வடை சுட்டா என்று அல்லது முயல் ஆமை என்று சொன்ன கதையையே திரும்ப சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா யோசிங்கப்பா....  இல்லாட்டி எனக்கு கோல் போட்டும் கதை கேட்கலாம்.....

Wednesday, September 4, 2013

அண்ணாவின் அழகி


அநேகமாக ஒரு காலத்தில் பலரின் தூக்கங்களை கெடுத்த பெண்கள் பின்னர் சப்பை பிகராவதும் பாடசாலைக்காலத்தில் சப்பை பிகரா இருக்கும் பெண்கள் சூப்பர் பிகராவதும் யதார்த்தமங்க.. ஆனால் பாருங்க எந்தப் பொண்ணும் அவங்க அண்ணன்களுக்கு எப்போதுமே அழகிகள் தான். அது உள்ளுர் கிழவி என்றாலும் அவ கூட ஒரு அண்ணாவிற்கு உலக அழகியாத் தான் இருந்திருப்பா!!!

பெரும்பாலும் இளைய சகோதரனுக்கு தன் சகோதரி மேல் இருக்கும் பாதுகாப்பு உணர்வை விட மூத்த சகோதரனுக்கு தங்கை மேல் இருக்கும் பாசமே தனி தாங்க… இதுக்கு உளவியல் காரணம் கூட உண்டு. பெரும்பாலும் நம்மை விட வயதில் மூத்த ஆண் சகோதரனுக்கு தன் வயதை ஒத்த நண்பர்கள் அடுத்த பெண்ணை எவ்வாறு பார்க்கின்றான் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும் என்பது தான் அது. (இவருக்கும் ஒரு நண்பன் இருந்திருக்கும்…. அவனுக்கு ஒரு தங்கச்சி இல்லாமலா இருந்திருக்கும்…. நம்ம அண்ணாவும் தன்னுடைய நண்பன் தங்கச்சிய லுக்கு விட்டிருப்பாரில்லையா????) 

இனி தான் நான் என் வீட்டுப்பிரச்சினைக்கு வரப்போகின்றேன். நமக்கும் ஒருவர் இருக்காரில்ல…. அவருடைய இம்சை இருக்குதே….. அதிலும் உயர்தரம் படிக்கும் போது பிரத்தியேக வகுப்புகளுக்கு அண்ணாவுடன் தான் போவேன். அக்காலகட்டத்தில் (2007)  நீண்டதாகவும் கரையோரம் முக்கோணமாக வெட்டியது போன்றதான அமைப்புடன் ஒரு புதுவடிவமைப்பான பெண்களுக்கான பாவாடை வந்திருந்தது. அன்று காலையில் தான் அம்மாவுடன் போய் வாங்கியிருந்தேன். ஆக வழமை போன்று புது உடைகளை உடனேயே அணிகின்ற எனது மேம்பட்ட கொள்கையுடன் மாலை வகுப்பிற்கு அணிந்து கொண்டு அண்ணாவின் பைக்கிள் கால் வைத்தது தான் தாமதம்… “இறங்குறிங்களா பைக்க விட்டு…” என்று அண்ணா கத்தினார். “ஏன் அண்ணா…?” என்று அப்பாவித்தனமாய் கேட்டேன்….. “இப்ப இந்த ஸ்கேட்டுடன் காலைத் தூக்கி பைக்கிள் ஏறும் போது பின்னால் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும்…” என்றாரே பார்க்கலாம்… இனி என்ன மூச்சை கொஞ்சம் தூக்கிப் பிடித்துக்கொண்டு போய் சல்வார் அணிந்து தான் வகுப்பிற்கு போனேன்….

நான் கொஞ்சம் கம்பியூட்டர் படிப்பில வீக் (வேறென்ன எல்லாத்திலயும் பிர்லியண்டா இருக்க முடியுமா?) அம்மா நான் கத்த கதற அதற்கு காது கொடுக்காம கிளாசில சேர்த்துவிட்டாவா…. அன்று தொடங்கியது அண்ணாவின் அழிச்சாட்டியம். “ரொம் என்டா என்ன? ரம் என்டா என்ன?” என்று உயிரை எடுத்தார். (சத்தியமா எனக்கு இன்றும் இதற்கு சரியான விளக்கம் தெரியாதுங்க) இப்பவும் நம்ம குடும்ப சங்கம் கூடும் போது அண்ணாவும் தம்பியும் சேர்ந்தார்கள் என்றால் இத இப்பவும் கேட்டு என் மானத்தை வாங்குவதுண்டு….

முன் பந்தியில் சொன்னது போல நம்ம அண்ணாவும் நம்மள வேவு பார்த்தாரே அத எப்படி சொல்வது?.... என்னை வகுப்பிற்கு கொண்டு விடும் போது ஒரு நிற டீசேட்டும் பின்னர் வேவு பார்க்க வேறு நிற டீசேட்டும் போட்டு மறைந்து நின்று பார்க்கும் பழக்கம் நம் அண்ணாவிற்கு இருந்தது. (பெரிய சி.ஐ.டி. சுப்ரமணியம் , 007 என்டு நினைப்பு). எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமுண்டு கொஞ்ச நாள் அத தேடித்திரிந்தாரு துப்பு துலக்குவதற்கு…

ஆனாலும் பாருங்க ஒவ்வொரு வில்லன் அண்ணாக்களுக்கும் (என்னை மாதிரி) ஒரு கிரிமினல் தங்கச்சி இருப்பா!! எங்களுக்கும் ஒளித்து வைக்கத் தெரியுமில்ல… எத்தனை தடவை பிழைகள் செய்து விட்டு அவர் தலைமீதே பொய்ச்சத்தியம் பண்ணியிருப்பன். (சத்தியம் பண்ணும் போது லைட்டா “அ” சேர்த்தா அது அசத்தியம் தானே…..) முட்டக்கண்ணீர் வடிச்சு சாதித்திருப்பன். எனக்கு தெரியும் அண்ணாக்கு நான் அழுதா பிடிக்காது என்று…. அவருக்கு தெரியாது அது பீலிங்கில் வந்ததுல்ல நான் ஒரே இடத்தை உற்றுப்பார்த்ததால வந்ததென்று… எது எப்படியோ நம்ம காரியம் ஆனால் சரிதானே.

இன்னொரு இரகசியம் தெரியுமா? எனக்குத் தெரியாமல் என் கைபேசியை நோண்டுவாரென்று எல்லா போய்ஸ் பெயரையும் பொம்பள ப்ரண்ட்ஸ் பெயரில தான் பதிந்திருந்தேன்… அல்லது “ரோங் நம்பர்” எப்புடி?

ஆனாலும் அண்ணா கொஞ்சம் பாசக்காரன் தான்…. காதலர் தினத்தில் யாராவது தங்கச்சிக்கு கிப்ட் குடுப்பாங்களா? ஆனா என் 007 எனக்கு தருவாரே… தம்பிக்கு தெரிந்து ஒன்று தெரியாமல் ஒன்று எனக்கு நிறைய சலுகைகள் காட்டுவார். நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொண்டிருந்தாலும் இருவருக்குமே “பொஸிவ்னஸ்” நிரம்ப இருக்குது. அண்ணாவை கடுப்பேத்த மற்ற அண்ணாக்களிடம் நான் ஓவரா அன்பு காட்டுவதும் என்னைக் கடுப்பேத்த ஒன்றுவிட்ட தங்கைகளை அண்ணா பைக்கிள் ஏற்றி ஊர் சுற்றுவதும் சகஜமானதொன்று…. இதற்காக அவள்களை நான் எத்தனை தடவை பழிவாங்கியிருப்பேன் தெரியுமா? அண்ணாவின் பைக்கை எத்தனை தடவை பஞ்சர் ஆக்கியிருப்பேன்….

இப்போதெல்லாம் நான் போகும் போது அண்ணா வீட்டிற்கு வருவதில்லை. அல்லது அண்ணா போகும் போது எனக்கு வேலையிருக்கும். இன்று நானிருக்கும் இடமும் அண்ணாவிருக்கும் இடமும் சில மைல் தூரங்கள் தான் என்றாலும் சந்தித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. எப்போதாது சந்தித்தால் நிச்சயம் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும். நான் புளுகு குணத்தில் இதையெல்லாம் தொலைபேசியில் உடனுக்குடன் சொல்லி தம்பியின் வயிற்றெரிச்சலினை கிளருவதுண்டு. வீதியென்றும் பார்க்காமல் கட்டிப்பிடித்து முத்தமிடும் பழக்கம் கூட இன்றும் தொடர்கிறது.இப்போதும் அண்ணா என்னை வழியனுப்பிவிட்டு தான் தன் விடுதிக்கு போவார். நூறு தடவை கவனம் என்று சொல்லுவார். அடுத்தவர்களுக்கு தான் எனது பதவி, படிப்பு என் தைரியம் பற்றிய பார்வை. என் அண்ணாவிற்கு நான் என்றும் அன்பு குட்டி தங்கச்சி தான்.

வளர வளர நம் பொறுப்புகள் அதிகரிக்க பாசம் காட்டுவதற்கும் செல்லச் சண்டைகள் போடுவதற்கும் நேரம் இருப்பதில்லை. ஆனாலும் பழைய நினைவுகள் தினம் ஒரு தடவையாவது மனதில் மோதாமல் அதன் சாரல் அடிக்காமல் இருப்பதில்லை.

மறுபிறவி எடுத்தால் மீண்டும் தங்கையாகவே பிறக்க வேண்டும். மொக்க பிகர் என்று தெரிந்தும் தன் தங்கை தான் உலக அழகி என்ற எண்ணத்தில் 007 ஆக அண்ணா என்னை தொடர வேண்டும். நானும் அண்ணாவை அதட்டி, வெருட்டி நான் நினைத்தவைகளை சாதிக்க வேண்டும். தூக்கத்தில் அலங்கோலமாக தூங்கும் என் போர்வையை இழுத்துவிட்டு சரி செய்கின்ற அந்த கைகளையே மீண்டும் பற்றி நடை பயில்கின்ற வரம் வேண்டும்.

அண்ணா எனக்காக பாடும் பாடல் - http://www.youtube.com/watch?v=_W7ueHUwyCA

(லைட்டா பாசமலர் சிவாஜி – சாவித்திரியை  பார்த்த பீலிங் உங்களுக்கு வரலயா???)      
 

Tuesday, September 3, 2013

மௌன நிமிடங்கள் அழகானவை





உணர்வுகளை கொல்லும்
உறவுகளை விட
ஊமைக் கணங்கள்
அர்த்தமானவை!
பாசங்கள் எல்லாம்
வேஷங்கள் ஆகி
புனிதங்கள் புதைவதை விடவும்
பொய்யான சிரிப்புகள்
புறமுதுகின் குத்தல்கள்
பழி தீர்க்கும் நட்புகள் - அது
கொடுக்கும் கண்ணீர் துளிகள்
இவைகளை விடவும்
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கின்றது……. - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!

இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளை தொலைவிட்டேன்
ஏமாற்றங்கள் பழக்கமாகி விட்டன
இவையாவும் - என்
நாட்குறிப்பின் வெறும்
புள்ளிகளே இன்று….  -
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!

மீண்டும் என்
வார்த்தைகளை தேடாதீர்கள்…
மீண்டாலும் அவற்றுள்
உயிர்ப்பிருக்கப் போவதில்லை
நீண்டாலும் அதில்
உணர்விருக்கப் போவதில்லை
கானல் நீரை விடவும்
காணாமல் இருப்பது நன்று…
என் புன்னகைக்காக
ஏங்குவதாக புழுகாதீர்கள்
புண்களை மறைத்து
நகைப்பதை விட
பூசிமெழுகி நடிப்பதை விட
புன்முறுவல் தொலைத்த – என்
உதட்டசைவுகள் போதுமானவை!!
எனக்கு புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!












அதிகம் வாசிக்கபட்டவை