Showing posts with label இராகங்கள். Show all posts
Showing posts with label இராகங்கள். Show all posts

பேரூந்து கிறுக்கல்கள்.......

வறுமை | vimalam 

 

பசி

அடுப்பின் சாம்பலில்
இன்றைய நாளைத் தேடி
ஒரு தாய் கைகளால் அலசுகிறாள்.....

அரிசி தீர்ந்த வீட்டில்
கனவுகள் மட்டும்
இன்னும் கொதிக்கின்றன.

பசியை
குழந்தைகள் அழுகையால் சொல்கின்றனர்,
பெரியவர்கள்
மௌனத்தால் மறைக்கிறார்கள்.

வயிற்றுக்குள் விழும் வெற்றிடம்
சாப்பாட்டின் இல்லாமை அல்ல— அது
மனித மதிப்பின் இடைவெளி.

விழாக்கால விளக்குகளுக்கு நடுவே
ஒரு தட்டு எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது,
அதில் - நீதியையே பரிமாற வேண்டும்
ஒரு நாள்..............

 

Sketch Of Eyes • 600+ reels on Instagram 

பிரிவு

பிரிவு
வாசல் மூடப்பட்ட சத்தமல்ல —
உள்ளே எதிரொலி மட்டும்
தங்கிப் போவதற்கு....

நாம் பகிர்ந்த
சிறிய சிரிப்புகள்
இப்போது பெரிய மௌனங்களாகி
அறைகளை நிரப்புகின்றன.

உன் பெயர்
என் நாள்காட்டியில் இல்லை,
ஆனால் - என் நினைவுகளில்
இன்னும் தேதி மாறவில்லை.

காலம்
எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறது.....
(உன்னை ) இழந்ததை
எப்படி இழக்காமல் இருக்கலாம்  -

என்கின்ற ஒன்றைத் தவிர....


(இன்றைய பேரூந்து கிறுக்கல்கள் 05.01.2026)

 

சில கிறுக்கல்கள்

"அம்மா" உயிர் கொடுத்து
மெய் காக்கும்
உயிர்மெய்யானவள்
அ – உயிர்
ம் - மெய்
மா – உயிர் மெய்




உன்னை நானும்
என்னை நீயும்
தூறலிலிருந்து
காக்க குடையை
விட்டொதுங்கிய
நிமிடங்களில்
யாரைக் காப்பது
என்ற குழப்பத்தில்
முற்றாக
நனைகிறது அதுவும்...
நம்மை போலவே.....





வீணையைத் தாருங்கள்……



என்னவர்களே!
நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்….

என் சோகங்களை
சகானாவாகவும்…
உங்கள் மீதான கோபங்களை
ஆரபியாகவும்
காட்டிட முடியா வீரத்தை
நாட்டையாகவும்…
உமிழ்ந்திடாத வெறுப்புக்களை
அடாணாவாகவும்
என் விழிகளில்
தெரிந்திடும் பயங்களை
அசாவேரியாகவும்…
சாரங்காவில்.....
காணும் அற்புதங்களையும்
சாமாவில் சாந்தத்தினையும்
சொல்லிடா காதலை
உசேனியாகவும் - என்
சிறு மகிழ்வுகளை
 ஸ்ரீராகமுமாக
இசைத்துக்காட்டுகின்றேன்…
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

கனவின் திடுக்கிடல்களுடனான
என் விடியல்களை
பௌளியாகவும்….
கண் விழிக்கும்
காலைப்பொழுதுகளை பூபாளமாகவும்…
பிலஹாரியில் முற்பகல்களையும்
நடிப்புகளுடன் தொடர்கிற
நண்பகல்களை மத்தியமாவதியிலும்
பின்பொழுதின் சோர்வுகளை
பேகடாவிலும்….
மந்தாரமான மாலை வேளைகளை
கல்யாணியிலும்…
கண்ணீருடனான இரவுகளை
நீலாம்பரியிலும்….
இராகமிசைக்கின்றேன்…..
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

நீங்கள் தந்தியறுந்த வீணையிலே
அபஸ்வரம் மீட்டுகின்றீர்கள்….
இராகங்கள் பிடிக்காவிடில்
கூறிடுங்கள்.. என்
உணர்வுகளை துறந்து
சங்கராபரணம் மட்டுமே
மீட்டுகின்றேன்;… - ஆனால்
என் விரல்களை வெட்டுமுன்
வீணையைத் தாருங்கள்……

மௌன நிமிடங்கள் அழகானவை





உணர்வுகளை கொல்லும்
உறவுகளை விட
ஊமைக் கணங்கள்
அர்த்தமானவை!
பாசங்கள் எல்லாம்
வேஷங்கள் ஆகி
புனிதங்கள் புதைவதை விடவும்
பொய்யான சிரிப்புகள்
புறமுதுகின் குத்தல்கள்
பழி தீர்க்கும் நட்புகள் - அது
கொடுக்கும் கண்ணீர் துளிகள்
இவைகளை விடவும்
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கின்றது……. - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!

இப்போதெல்லாம்
எதிர்பார்ப்புகளை தொலைவிட்டேன்
ஏமாற்றங்கள் பழக்கமாகி விட்டன
இவையாவும் - என்
நாட்குறிப்பின் வெறும்
புள்ளிகளே இன்று….  -
புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!

மீண்டும் என்
வார்த்தைகளை தேடாதீர்கள்…
மீண்டாலும் அவற்றுள்
உயிர்ப்பிருக்கப் போவதில்லை
நீண்டாலும் அதில்
உணர்விருக்கப் போவதில்லை
கானல் நீரை விடவும்
காணாமல் இருப்பது நன்று…
என் புன்னகைக்காக
ஏங்குவதாக புழுகாதீர்கள்
புண்களை மறைத்து
நகைப்பதை விட
பூசிமெழுகி நடிப்பதை விட
புன்முறுவல் தொலைத்த – என்
உதட்டசைவுகள் போதுமானவை!!
எனக்கு புத்தகங்களுள் தொலைவது
பிடித்திருக்கிறது - என்
மௌன நிமிடங்கள்
அழகானவை!!!












காதல் சின்னம்


யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அந்தப்புரத்தின் தேவதைகளுள்
தன் மனங்கவர்ந்தவளுக்காக
கட்டிய கட்டடமது…..
எந்தப்பெண்ணாவது
அவள் பாரே ஆண்டவளாயினும்
பல ஆண்களுடன்
தன்னை பகிர்ந்திருக்கின்றாளா?
தனக்கென்று அந்தப்புரம் தானில்லை
தன் அந்தரங்கத்திலாவது
பலரை நினைத்திருப்பாளா?
அந்தரப்புரமல்ல
அந்தரங்கத்திலும்
ஒருவரை நிறைத்துக்கொள்வதன்றோ
காதல்…….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
பணம் பாதாளம் வரையே
பாயும் போது
பாராண்ட வேந்தன்
பளிங்கினால் கட்டியதில்
பெருமையென்ன இருக்கிறது…?
வாழும் போது பகிர்ந்திட்ட
காதலுக்கு
சாவின் பின்
சமாதியை பளிங்கினால்
கட்டிப் பயனென்ன?
தன்னை பகிராமல்
இருந்திருந்தால் அதுவன்றோ
வாழும் காதல்….

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அவன் காதல்
கோட்டையை கட்டிய
கரங்களை அறுத்தானாம்…
இன்னொரு மஹால்
உருவாகிட கூடாதென்று….!
கையிழந்தவன் கதறியிருப்பான் - தன்
காதல் மனைவிக்கு
குடிசை கூட கட்டிட முடியவில்லையென்று..
கண்ணீர் வடித்திருப்பான்…
காதலை உணர்ந்து கட்டியிருந்தால்
அடுத்தவன் காதலை
துச்சமாய் நினைத்திருப்பானா…..?
காதல் என்பது
அரசனுக்கு மட்டுமா
ஆண்டிக்கில்லையா?

யார் சொன்னது
தாஜ்மஹால்
காதலின் சின்னமென்று?
அது கண்ணீரின் கோட்டை
காதலிக்கான கல்லறை
பகட்டை காட்டும்
பளிங்கு மாளிகை…
காலவோட்டத்தில்
நிலைத்திடும்
கல்லறைகளை விடவும்
இதயத்துள்ளான
உண்மைக் காதல் போதும்!
கற்களை நடவேண்டியதில்லை
கண்கலங்காமல் பார்த்தாலே போதும்…
காதல் என்பது
கல்லில் கட்டுவதல்ல
மனதில் செதுக்குவது…
சிறு காகிதம் கூட
காவியமாகும் - அதில்
களங்கமற்ற காதலிருந்தால்…..








உன் மடி மீது நான் உறங்க......

நல் உறக்கம் தரும் என் பஞ்சு மெத்தை மீது காதல்.
நித்திரையில் வரும் நல்ல கனவுகளின் மீது காதல்.

கண்ணில் படும் அத்தனையும் காதலிக்கிறேன்.
கட்டுக்குள் அடங்காத என் கற்பனை கொண்டு கவி வடிக்கிறேன்.

காதலிக்கிறாயா என்று என் கவி கண்டு கேட்டால்
எதை நான் சொல்வேன். எதை நான் மறைப்பேன்.

சுற்றி உள்ள அத்தனையும் என் மனமார காதலிக்கிறேன்.

சுற்றும் பூமி முதல் சூரியன் நிலவு வரை அத்தனையும் காதலிக்கிறேன் ஆத்தமார்த்தமாக..

உயிர் வாழும் கடைசி நொடி வரை உலகில் உள்ள ஒவ்வொன்றையும் காதலிப்பேன் உண்மையாக.
 ....................................................................................................................
 நிதமும் சேகரிக்கிறேன்
என் இரவுகளை
என்றேனும் ஓர் நாள்
உன் மடி மீது நான் உறங்க......

இமைகளிலே வலி
கண்ட போதும்
உறங்கவில்லை எனது நினைவுகள்...

என் நினைவுகள் அனைத்தும்
உன்னை எதிர்நோகியிருந்த காரணத்தினால்....

என் விழிகளோ
இமை மூட மறுக்கின்றது... - அந்த
இமை மூடும் நொடி பொழுதிலாவது
உன் முகம் காண்பேனா என்று....

விடியும் இரவு போல..
விழி மூடா கனவு வேண்டும் - அக்
கனவிலும் உன் முகம் வேண்டும்.....
 எனக்காக (என் வேண்டுகோளிற்காக) என் நண்பன் எழுதிய கவிகள் இரசித்ததில் பிடித்தது....... நன்றி வாசு

சுஜாதாவின் “பிரிவோம்… சந்திப்போம்” பற்றிய அலசல்....





இந்தியாவில் திருநெல்வேலியில் வேலையற்ற பொறியியல் பட்டதாரியான இளைஞன் ரகுபதியின் கனவுகளை அடுக்குவதுடன் ஆரம்பமாகின்றது “பிரிவோம்… சந்திப்போம்….”. ஓர் கிராமத்து இளைஞன் அவனது எல்லையற்ற சிறு சிறு கனவுகள்… தான் வேலையற்று இருப்பதால் தனது அப்பாவின் செலவில் புகைப்பிடிப்பதை கூட 100 பரிசீலித்து கடையில் வாங்குவது என பக்குவமான ,கம்பீரமான ரகுபதி முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றான். அடுத்தடுத்து மனைவியை இழந்து ஒரே மகனுடன் தனித்துவிடப்பட்ட நிலையில் தன்னைப் போலவே தன் மகனையும் பொறியியலாளருக்கு படிக்க வைத்து, அவனையும் வேலையிலமர்த்திப் பார்க்கும் இலட்சியத்துடன் ரகுபதியின் அப்பா கோவிந்தராஜன். பத்தொன்பது வயதிலும் குழந்தைத்தனம் மாறாது தம்பியுடன் செல்லச் சண்டைகள் போட்டுக்கொண்டு செல்வச் செழிப்புடன் வலம் வருகின்ற மதுமிதா என்கின்ற அழகுப் பெண். கணவன் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் கைக்குழந்தையுடன் வீடுகளுக்குச் சென்று வேலை செய்து வயிற்றைக் கழுவி, தன் குழந்தையின் கொஞ்சல்களில் கூட தன் கணவனைக் காண்பதாக சொல்வது முதல் மாறி மாறி கஷ்டங்களை கூறி பொருட்களை யாசிப்பது வரை சராசரி கீழ்மட்ட குடும்பப் பெண் ஜெயந்தி என முக்கியமான நான்கு பாத்திரங்களையும் அடுத்தடுத்து வசிப்பவர்களின் மனதில் குறைந்த இடைவெளி எனினும் இலகுவில் உட்புகுத்தி விடுகின்றார் சுஜாதா.

பார்த்தவுடனேயே மதுமிதாவுடன் காதல் கொள்கின்ற ரகுபதி அதை சொல்லமுடியாமல் திண்டாடுவதும் பழம் நழுவி பாலில் விழுந்தது போன்று மதுமிதாவின் வீட்டாரே ரகுபதியுடன் நிச்சயார்த்தம் செய்து வைப்பதும் ஏதோ வழமையானது போன்று போய்க் கொண்டிருந்தாலும் ரகுகுபதி திடீரென வேலை கிடைத்து நகரம் சென்று திரும்புகின்ற போது மாறிக்கிடக்கின்ற காட்சிக்கோலங்கள் நாவலிலிருந்து கண்னை எடுக்க விடாமல் செய்துவிட்டது.
அடுத்தடுத்து நடக்கின்ற திடீர் நிச்சயார்த்தத்தில் பட்டும்படாமலும் இருக்கின்ற கோவிந்தராஜன் மகனிடம் “காதல் என்கின்றது Nature’s way of ensuring a pregnancy! என்று சொல்லி கூடவே சற்றுப் பொறுத்து முடிவுகளை எடுக்கும்படி அறிவுரை கூறுவது அப்பா என்பதையும் தாண்டி ஒரு நிமிடம் நல்லதொரு நண்பனாகவும் அவரை பரிணமிக்கச் செய்கின்றது.

மதுமிதா – ரகுபதி நிச்சயார்த்த முடிவும், ரகுபதி அப்பாவித்தனமாக தேம்பி தேம்பி அழுவதும், மதுமிதா பெரும் பணக்காரன் ராதாகிஷனை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விடுவதும், ரகுபதி தற்கொலைக்கு முயன்று பலத்த அடியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடனும் முதல் அத்தியாயம் முடிவுறுகின்றது.

"அந்த அமெரிக்க ராதாகிஷனை விட நான் எந்த வiகையில் குறைந்துவிட்டேன்"  என்ற வைராக்கியத்துடன் ரகுபதி அமெரிக்கா சென்று படிப்பதும் ஏதோ வழமையாக நமது சினிமா ஹீரோக்கள் போல தானோ அல்லது ரமணிச்சந்திரனின் கதாநாயகனை போலவோ என்று அலுக்கின்ற போது மதுமிதாவே ரகுபதியை தொடர்புகொண்டு நட்பு பாராட்டுவதும் மதுமிதா-ராதாகிஷனின் குடும்ப வாழ்வின் அன்னியோன்யத்தையும் அவர்களது புரிந்துணர்வையும் பார்த்து ரகுபதியே திகைப்பதும் சுஜாதாவிற்கான பாணியை காட்டிவிடுகின்றது. தொடர்ந்து ராதாகிஷனின் முறையற்ற தொடர்புகளும் வழமையான நமது கதாநாயகனைப் போன்றே முன்னாள் காதலிக்காக ரகுபதி போராடுவதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்பாளிகளின் பாணி மாறுவதில்லையோ என சிந்திக்க வைக்கின்றது.
மதுமிதாவே தன்னை ரகுபதி மறக்க வேண்டும் என்று ரத்னா என்கின்ற இந்திய அமெரிக்க பெண்ணை அறிமுகம் செய்வதும் அதே “முன்னாள் காதலன்” என்கின்ற இந்திய பாணியாகவே அமைகின்றது. பின்னரான பல திருப்பங்களுடன் பயணித்து இறுதியில் மதுமிதாவின் இறப்புடன் நாவல் முற்றுப் பெறுகின்றது.

தன் மனைவிக்கு துரோகம் செய்கின்ற ராதாகிஷனுக்கு இறுதிவரை தண்டனை கிடைக்காமை சற்று ஏமாற்றமடைய வைத்திருந்தாலும் என்றோ ஒரு நாள் செய்தவை நம்மை நோக்கித் திரும்பும் என்ற யதார்த்தமான உண்மையை ஆங்காங்கே சுஜாதா முன் வைக்கத் தவறவில்லை. பணத்திற்காக ஆசைப்பட்டு தன் மகளிற்கு முடிவைத் தேடிக்கொடுத்த பெற்றோர்கள் ரகுபதியிடம் மன்னிப்பு கேட்பது நெகிழவைக்கின்றது.
இக்கதையில் பெயருக்கேற்ப மதுமிதா “மது” போதையாகவே ரகுபதியை ஆட்டிவைக்கின்றதால் பெயர் நன்றாகவே பொருந்துகின்றது.

என்னளவில் என்னை இந்த நாவலின் இரு விடயங்கள் கவர்ந்திருந்தது. ஒன்று ரகுபதியின் அப்பா. மிகவும் நிதானமான கதாப்பாத்திரமாக வள்ளுவர், பாரதி என பலரை தன்னுள் கொண்டவராக இறுதியில் வேலைக்கார பெண்ணிற்கு சமூக அங்கிகாரம் கிடைக்க வேண்டி மறுமணம் செய்து கொள்வதும், “உடம்பிற்காகவா அப்பா?” என ரகு கேட்கின்ற போது அதுவென்றால் வேறு பெண்களிடம் போயிருப்பேன் 25 வருடம் உனக்காகவே தனியே தூங்கினவன். ஆனாலும் அதுக்காக இல்லாமலும் இல்லை என கூறுவது உண்மையான ஒரு வெளிப்படையான மனிதனை காட்டுகிறது. இன்று சமூகத்தின் உயர் பதவிக்குள் ஒளிந்து இருமுகம் காட்டிக்கொண்டு பலருடைய வாழ்வில் விளையாடுகின்ற எத்தனையோ பேரை விட இவர் கருத்து என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதொன்று.

அடுத்த பாத்திரம் ரத்னா. தன் மண்ணை அதன் பெருமையை நேசித்துக் கொண்டு அதே வேளை அமெரிக்க சூழலுக்கு ஏற்பவும் வாழ்கின்ற ரத்னா மனதில் படுவதை வெளிப்படையாக கூறுவதும் நிதானமாக ஒவ்வொரு விடயத்தினையும் ஆராய்ந்த முடிவெடுப்பதும் தன்னுடைய குடும்பத்தினரை ரகுபதிக்கு அறிமுகம் செய்து வைப்பதும் மிகமிக பாராட்டத்தக்கதொன்றும் கூட. இன்றைய காலகட்டத்தில் ஒரே சமயத்தில் பலருக்கு தண்ணீர் காட்டுபவர்கள் மத்தியில் பொறுமையாக தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற ரத்னா இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரத்னா ரகுபதியிடம் “நீங்கள் மதுமிதாவை நேசித்த காதலின் புனிதம் தான் என்னை உங்களையும் நேசிக்க வைக்கிறது” என்று சொல்வது மிகவும் அழகிய வரிகள்….

சுஜாதாவின் எழுத்து நடை வழமை போன்று முன்னுக்கு ஒரு சம்பவம் நடப்பதாகவும் அதில் பார்வையாளராக நாம் இருப்பது போன்றும் செல்கிறது. ஆரம்ப அத்தியாயங்களில் பாத்திரங்களின் அறிமுகம் முதல் இறுதியில் ராதாகிஷனுக்கான தண்டணையை வாசகரின் கற்பனைக்கே கொடுத்து விடுவது வரை சுஜாதாவின் பாணி மாறவில்லை. ஆனாலும் தான் மிகவும் நேசித்த ,அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்த கணவன் பல பெண்களுடனும் தொடர்பு வைத்துள்ளான் என தெரிந்தவுடன் மதுமிதா தன் முன்னாள் காதலனிடம் தன்னை மறுமணம் செய்யும் படி கெஞ்சுவது சுஜாதா முன் அத்தியாயங்களில் தோற்றுவித்திருந்த மதுமிதாவிற்கும் இறுதியில் முடிக்கின்ற மதுமிதாவிற்கும் இடையில் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது. ஒரு சராசரி கிராமத்துத் தமிழ்ப் பெண்ணால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது அமெரிக்க நாகரீகத்திற்கமைய விவாகரத்து பெற்றிருக்க கூடும் அல்லது அழுது கொண்டு “கல்லானாலும் கணவன்” செண்டிமென்டுடன் வாழ்ந்திருக்கக் கூடும். அல்லது புரட்சிப்பெண்ணாக திருத்தியிருக்க கூடும்.

ஒரு வேளை மதுமிதா பத்திரத்தினை சாகடிக்காது ரகுபதியுடன் முறைப்படி இணைத்து வைத்திருந்தால் சபல புத்தியுள்ள ஆண்களுக்கு சுஜாதாவின் நாவல் சுட்டிருக்கும். பெண் நினைத்தால் அவளாலும் சபலப்பட முடியும் இன்னொரு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்று உணர்த்தியிருக்கலாம். எப்படியோ தன் பிரிவோம் சந்திப்போம் நாவல் மூலம் சிறந்ததை தேடி ஓடுகின்ற பெண்ணுக்கான முடிவுரை எழுதியிருக்கின்ற சுஜாதா அதே சிந்தனையுடன் ஓடுகின்ற ஆணுக்கான இறுதி வரிகளையும் படைத்திருக்கின்றாரா? அல்லது அவரும் பால்நிலை பேணுகின்ற சராசரி எழுத்தாளர் தானா? என்ற கேள்வியையும் தோற்றுவித்திருந்தது. அதிலும் ஒரு திருப்தி என்னவென்றால் தன்னுடைய சபலத்தினை நியாயப்படுத்த தன் மனைவியை முன்னாள் காதலனுடன் இணைத்துப் பேசி அவளை நோகடிக்கின்ற ராதாகிஷன் மூலம் சராசரி ஆண் ஆதிக்கத்தினை காட்டிவிடுகிறார். ( இப்போதெல்லாம் தன்னுடைய காதலுக்கு சம்மதிக்காத பெண்களை ,தன் விருப்புகளுக்கு இணங்காத பெண்களை பற்றி அவதூறு பேசுகின்றதும் இன்னொருவருடன் இணைத்துப் பேசி தம் குற்றங்களை மறைப்பதுவும் சமூகத்தில் இன்று நிறையவே உண்டு)

முதல் பாகம் மது – ரகு காதலில் தொடங்கி மது- ராதாகிஷன் திருமணத்தில் முடிய இரண்டாம் பாகம் ரகு – மது சந்திப்பில் தொடங்கி மது மரணத்தில் நிற்கிறது பிரிவோம் சந்திப்போம் ஆக மொத்தத்தில் எதையும் தீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி , அலட்சியமான நடத்தை கொண்ட அமெரிக்க இளைஞன் ராதாகிஷன் , மனதில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா , தீர்க்கமான அமெரிக்க தமிழ்ப் பெண் ரத்னா , நட்புடனும் யதார்த்தத்துடன் இணைந்ததாகவும் விடயத்தினை அணுகுகின்ற ரகுபதியின் அப்பா கோவிந்தராஜா என முக்கிய ஐந்து கதாபாத்திரங்களுடன் திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது சுஜாத்தாவின் பிரிவோம் சந்திப்போம்…

(“பிரிவோம் சந்திப்போம்…” வாசித்த போது நேரம் போனதும் தெரியவில்லை கூடவே சந்தர்ப்பங்கள் கிடைத்தும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட நேர்மையான ,நிதானமான , இறுதிவரை எந்த கட்டத்திலும் குழந்தை மனதை நேசிக்கின்ற ஒருவன் எனக்கும் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒட்டிக்கொண்டது மறுக்க முடியாத உண்மை )



I love u sometimes foolishly and at those moments I do not understand that I could not, would not and should not be so absorbing a thought for u as u are for me….  
 படித்தில் மிகப் பிடித்தது

என் வாழ்வின் பொன்நாள்…..


சில விடயங்கள் எதிர்பாராமல் இடம்பெறுவது தாங்க வாழ்க்கை… அது சிலவேளைகளில் விதியின் வலிதான கரங்கள் நமது கழுத்தினை பிடிப்பதாக இருக்கலாம் அல்லது திகட்ட திகட்ட அமுதம் தருவதாகவும் இருக்கலாங்க.. அதற்கான பிரதிபலிப்புக்கள் வேறுபடுகின்ற போதும் விதியின் விளையாட்டு வித்தியாசமானது. ஆனாலும் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான். எதிர்காலம் தான் தெரிந்துவிட்டால் தோல்விகளும் இல்லாமல் வெற்றிகளையும் தெரிந்து கொண்டதான வாழ்க்கை சப்பென்றாகிவிடும்.
சிறுவயதில் இருந்தே “சஸ்பென்ஸ்’ எனக்கு மிகவும் பிடித்த விடயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எனது கவிதைகளிலும் சரி இந்த “சஸ்பென்ஸ்” வைப்பதென்பது எனக்கு மிகவும் பிடித்ததொன்று. ராஜேஸ்குமாரின் திரில் மற்றும் இந்திராசௌந்தர்ராஜனின் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் நேற்று ஒரு சஸ்பென்ஸ் எனக்கு கிடைத்தது பாருங்க அது ரொம்ப ரொம்ப சுவீட்டானதுங்க..

வாழ்க்கையில் நான் நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பிய விரும்புகின்ற நபர்கள் சில பேர் தான். அதிலொருவர் நான் மிகச்சிறிய வயதில் எழுதிய ( அப்போது 13 வயது தான்) என்னுடைய கிறுக்கல்களுக்கு மதிப்பளித்த ஒரு பெரியவர். இந்த காலத்தில் பெரியவர்களே பெரியவர்களுடைய தரமான படைப்புகளுக்கு மதிப்பளிக்க யோசிக்கின்ற காலம். அப்படியிருக்கும் போது சிறியவள் எனக்காக கடிதமும் பரிசும் அனுப்பிய ஒருவர்.
அவர் அன்று அனுப்பிய கடிதத்தினை இன்றும் நான் வைத்திருக்கின்றேன். அதனை பார்க்கும் போது இவர் எங்கிருக்கின்றாரோ? என்னுடைய எழுத்தினை மதித்து பதில் எழுதிய முதலாமவர் “செல்வராஜா அங்கிளை” சந்திக்க மாட்டேனா என பல தடவை நினைத்ததுண்டு.

நேற்று(08.01.2013) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முருகபூபதி மற்றும் டொக்டர்.நொயல் நடேசன் என்பவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு சென்றிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் வாசித்து புத்தகம் வழங்குவதற்கு நூலக தேட்டம் - செல்வராஜா என்றழைக்கும் போது தான் வாழ்க்கையின் அழகிய தருணமொன்றினை உணர்ந்தேன்.  அவர் மீண்டும் வந்தமர்ந்தவுடன் ஓடிப்போய் கதைத்தபோது பழைய குட்டி கேஷாவாகவே(????) மாறிவிட்டேன். சில நிமிடங்கள் என்ன பேசுவதென்றே புரியவில்லை. நிகழ்வு முடிந்த பின்பும் போய் பேசினேன். அப்போதும் கூட “என்னிடம் ஒன்றும் இல்லேயே அம்மா உனக்கு தருவதற்கு” என்று சொன்னார். தவறாமல் அவரது தொடர்பிலக்கங்களை பெற்றுக்கொண்டு நேரம் போய்விட்டதால் விடுதி மூடப்பட்டுவிடும் என்றெண்ணி அவசரமாக வந்துவிட்டேன்.
சுpலவற்றினை எழுதிவிட்டாலே சிகரத்தினை தொட்டுவிட்டதாக எண்ணுகின்ற சிலர் மத்தியில் சிகரத்தில் கால்பதித்த பின்பும் பிறரை மதிக்கின்ற “செல்வராஜா அங்கிளை” போன்றவர்களும் இருக்கின்றார்கள். 

“மேன்மக்கள் மேன்மக்களேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்”

இந்நிகழ்வு எனக்கு மறக்கமுடியாத ஒன்று மட்டுமல்ல சில வேளை சில மனிதர்களின் விமர்சனங்களுக்கு பயந்து இலட்சியங்களை விட்டுவிட எண்ணுகின்ற வேளை இவ்வாறான மாமனிதர்கள் மூலம் இலட்சியவாழ்விற்கான பயணத்தினை தொடர்வதற்கான ஊக்கங்கள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும் உணர்கின்றேன்.
அழகுடன் கூடவே முள் குத்துவதால் வலி தருகின்ற ரோஜாவினைப் போன்று சில கவலைகளையும் கூடவே மறக்கமுடியாத இனிய தருணங்களையும் தருகின்ற என்னுடைய வாழ்க்கையை நான் மிகவும் இரசிக்கின்றேன்….

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்(01) – தெருத்தூசியோன்

எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டும். யாரையும் பாதிக்காது, சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும்'  என்கிறார் எழுத்தாளர் ஆர்.சி.ராஜ்குமார்.

'தெருத்தூசியோன்' என பலராலும் அறியப்பட்ட இவர், பிறவியிலே பார்வைப்புலனற்ற நிலையில் இருந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பல்வேறு தடைகளையும் தாண்டி இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிதை, கட்டுரை என தனது எழுத்தாற்றலை விரிவுபடுத்திக்கொண்ட இவர்,

'நாம் ஒளி இழந்த போது', 'ஆசைகளின் ஓசைகள்', 'சித்திர பூ வெளி', 'நினைவுகளின் நிழல்', 'நான் காணும் உலகம்', 'குமுறும்; குரல்கள்', 'என்னுடைய ஏக்கங்கள்', 'அனுமதிக்கப்பட்ட அனுபவங்கள்', 'உயிர்த்தெழுந்தவருடன் உறவுகொள்வோம்', 'உங்களை நோக்கி' (மாற்றுத்திரண் கொண்டவர்கள்), 'சிந்தனை செய்' (மாணவர்களை பற்றிய புத்தகங்கள்), 'கடகத்துக்குள் கிடுகுகள்' (இறையியல்), 'முழுதாய் முழுகுவோம்' (வெளியிடப்படவுள்ள புத்தகம்) என இதுவரை 14 நூல்களை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கிழக்குப் பல்கலைக்கழத்தில் கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்த பின், சமூக சேவைகள் திணைக்களத்தில் அபிவிருத்தி அலுவலராக பணியாற்றி வருகின்றார்.

ஐம்புலனும் சிறப்பாக அமையப்பெற்றவர்களாலும் சாதித்துவிட முடியாத இவரது சாதனையானது பார்வைப் புலனற்றவர்களுக்கேயான எழுத்து வடிவமாக காணப்படும் பிரெய்ல் எழுத்தின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக இவரை நேர்கண்ட போது அவர் பகிர்ந்துக்கொண்டவை...

கேள்வி:- பார்வைபுலனற்ற நிலையில் எவ்வாறு உங்களால் இத்தகையதொரு வளர்ச்சிப் படிநிலையை அடைய முடிந்தது..?

பதில்:- தன்னம்பிக்கை, விசுவாசம், விடாமுயற்சி இவ்வாறான எண்ணங்களினினூடாகவே இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. எதனையும் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கும் ஒரு மன உறுதிப்பாடு என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது என்று சொல்லலாம். சாத்தியமில்லை என்ற சிந்தனை இல்லாமல் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம் என்று சிந்திக்கும் மன உறுதிப்பாடு எம்மிடத்தில் இருக்கும்போது வரும் தடைகள் பெரியதொரு விடயமாக தெரியாது. இந்த சிந்தகைளினூடாகவே இவ்வாறு வளர்ச்சியடைய முடிந்தது.

கேள்வி:- இவ்வாறான வளர்ச்சி படிநிலைகளை அடைவதற்காக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அதிகமான நூல்களை வாசிக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முக்கியமாக எனக்கு பார்வைப்புலன் இல்லாத காரணத்தினால் அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இருக்கவில்லை. (பிரெய்ல் என்பது பார்வை புலன் அற்றவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எழுத்து முறைகள்) இவ்வாறு அதிகமான புத்தகங்கள் பிரெய்ல் என்ற எழுத்தில் இல்லாத காரணத்தினால் எப்போதும் ஒருவரில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

பிரெய்ல் எழுத்துக்களால் வடிவமைக்கப்படாத புத்தகங்களை ஒருவரை கொண்டு வாசித்து அறிந்துக்கொள்ள வேண்டிய தேவை எப்போதும் இருந்தது. அதிகமாக மற்றவர்களது உதவிகள் எனக்கு தேவைப்பட்டது. நான் எதிர்பார்த்த அளவில் பாரியளவிலான உதவிகள் கிடைக்கவில்லை. ஆனபோதும் கிடைத்த உதவிகளை வைத்துக்கொண்டு இவ்வளவு தூரம் வளர்ச்சியடைய முடிந்தது. ஆனால் அதிகமான நூல்களை வாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் பிரெய்ல் என்ற எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்காமல் போனதுதான். இருந்தாலும் இருந்த சிறிய புத்தகங்களை கொண்டு வாசித்தறிந்து இந்த நிலைமைக்கு வளர்ச்சியடைந்தோம்.

இப்போதும் கூட அந்த தடை இருந்துகொண்டுதான் இருக்கின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையத்தளத்தில் பல சொப்ட்வெயார்களை பதிவிறக்கம் செய்து அதனது உதவியை கொண்டு பலதேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

கேள்வி:- தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்களது எதிர்பார்ப்புகளை ஓரளவிலேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கான வசதிவாய்ப்புகள் இருக்கின்றனவா?

பதில்:- தொழில்நுட்ப வளர்ச்சி எனும்போது பொருளாதார பிரச்சினை எல்லோருக்கும் உள்ளது. நாங்கள் கடந்த ஆறுவருடங்களாக விஜயா பிரெய்ல் வாங்கியதை போன்று பிரெய்ல் பிரின்டர் இயந்திரத்தை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றோம். இந்த இயந்திரத்தை வாங்குவதற்காக பண வசூலிப்பு ஒன்றை செய்துக்கொண்டு வருகின்றோம். எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இந்த இயந்திரத்தை வாங்குவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

கேள்வி:- இந்த பிரெய்ல் இயந்திரத்தின் கொள்வனவினூடாக நீங்கள் மேற்கொள்ளப்போகும் செயற்றிட்டங்கள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- இதனூடாக தமிழ் பண்பாடு, காலசாரத்தை பின்பற்றும் பார்வை புலனற்ற சமூகத்தினருக்கு அறிவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான பல விடயங்களை பிரெய்ல் மூலமாக வழங்கமுடியும். ஏனென்றால் இலங்கையில் பார்வை புலனற்ற நிலையில் வாழும் தமிழ் மொழி பேசுபவர்கள் வாசிக்கக் கூடிய வகையில் பிரெய்ல் புத்தகங்கள் இதுவரை அச்சிடப்படவில்லை.

சிங்கள மொழியில் 'பீச் த பிரெய்ல்' செய்வது போன்றதொரு சாதனையை தமிழில் இதுவரை யாரும் செய்யவில்லை. உண்மையில் விஜய நிறுவனம் சிங்களமொழி பேசுபவர்களுக்காக வெளியிடும் பிரெய்ல் சஞ்சிகையானது ஒரு சாதனை என்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையில் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன. ஆனபோதும் பார்வை புலனற்றவர்களுக்கு ஒரு தேவை இருக்கின்றது என்பதை இந்த விஜய நிறுவனமே உணர்ந்துகொண்டுள்ளது.
கேள்வி:- உங்களது எழுத்துக்கு துணை நிற்பவர்கள் குறித்து கூறுங்கள்?

பதில்- ஆரம்ப காலத்தில் எனது நண்பர்கள். குடும்ப வாழ்வென்று வந்த பின் எனது மனைவி மற்றும் பிள்ளைகள். பல்வேறுபட்ட காலத்தில் பல்வேறுபட்டவர்கள் உதவிய வண்ணமே உள்ளனர். எங்களது தேவைகளை உணர்ந்து செயற்படுகின்றனர். ஆனால் எப்போதும் ஈடுசெய்ய முடியாத பிரச்சினையாக இருப்பது வாசிப்பு மட்டும்தான். எப்போதும் ஒருவரில் தங்கி இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆரம்ப வகுப்பில் கல்வி கற்பதற்கு ஆரம்பித்த நாள் முதல் பல்கலைக்கழக வாழ்க்கை வரை எனது நண்பர்கள் உதவியாக இருந்தார்கள். வாசிப்பு பிரச்சினை இன்றும் இருக்கவே செய்கிறது. ஆனாலும் வாசிக்க வேண்டும். அதற்காகத்தான் பிரெய்ல் இயந்திரத்தினை கொள்வனவு செய்யும் முயற்சியில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றோம். இதனை கொள்வனவு செய்தால் நூறு வீதம் இல்லாவிட்டாலும் எழுபத்தைந்து வீதமாவது இந்த வாசிப்பு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: எழுத்துக்களை நீங்கள் பார்க்கும் விதம் குறித்து கூறுங்கள்?

பதில்:- ஓர் எழுத்தாளன் என்று வரும்போது அவனுக்கு பார்வை என்பது அவசியமில்லை. இவ்வாறு பார்வை புலன் அற்றவர்களும் எழுத்து துறையில் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜோன் பில்டெர், ஹெலன் கெலர், இதேபோல் இன்னுமொரு பெண்ணொருவர் இருந்துள்ளார். அவர் 13,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். எனவே எழுத்துக்கு பார்வையென்பது அவசியமானது இல்லை.

அதிகமானவர்கள் தமது மன உணர்வுகளை உள்ளத்தில் வைத்துக்கொண்டே கண்ணீர்விட்டவண்ணமுள்ளனர்.

என்னுடைய வேதனைகளை, பிரச்சினைகளை சொல்லக்கூடிய ஓர் ஊடகமாக இந்த எழுத்தை நான் பார்க்கிறேன். இந்த எழுத்தானது தனிமனித புலம்பலாகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் சமூகம் சார்ந்த புலம்பலாகவும் இருக்கலாம். பிரச்சினைகளை கூறுவதற்கு தொடர்பாடல் என்ற ஒன்று உள்ளது. எழுத்தாளன் என்ற ரீதியில் எல்லோருடைய பிரச்சினைகளையும் எடுத்து அதற்கு வடிவம் கொடுத்து அதனை ஒரு படைப்பாக கொடுக்கின்றோம்.

கேள்வி:- இயற்கை சூழலை உணரமுடியாத நிலை காணப்பட்டாலும் எவ்வாறு இயற்கையை உள்வாங்கிக்கொண்டு எழுதுகின்றீர்கள்?

பதில்:- வெளியில் இருக்கும் விடயங்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. ஐந்து புலன்களில் ஒன்று இழக்கப்பட்டுள்ளது. இதில் மீதம் இருக்கும் நான்கு புலன் உணர்வுகளைகொண்டு கேட்டல், தொட்டுணர்தல் போன்ற செயற்பாடுகளினூடாக இயற்கை சூழலை உள்வாங்கிக் கொண்டு - பின் அதனை உணர்ந்து ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறேன்.

வெளிச்சூழல் பற்றி ஒருவர் எனக்கு தெளிவுபடுத்தி கூறவேண்டும். அதன்பின்புதான் ஒரு விடயத்தை பற்றி நான் தெளிவாக உணர்ந்து எழுத ஆரம்பிப்பேன். நேரடியாக முகத்துக்கு முகம் பார்க்கும் ஒரு புலன் இங்கு இழக்கப்பட்டுள்ளது. அதனால் சோர்ந்து இருந்துவிடவில்லை. அது ஓர் இழப்பாக இருந்தாலும் என்னுடைய முயற்சியால் நான் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன். மற்றவர்களைப் போல் இயங்குவது எனக்கு அவ்வளவு இலகுவானதல்ல. என்னைப்பொறுத்தவரை ஒருவிடயத்தை கேட்டு, அறிந்து அதனை உள்வாங்கிக்கொண்டு எழுத வேண்டும். இலங்கை சூழலில் இத்தகையதொரு நிலையிலிருந்து கொண்டு 14 புத்தகங்களை வெளியிட்டது பெரியவிடயம். நீங்கள் செய்வதைப் போன்று இல்லாமல் நாங்கள் பல மடங்கு முயற்சி எடுக்க வேண்டும்.
கேள்வி:- தற்போது வெளிவரும் படைப்புகள் குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்:- ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறக்கின்றான். களிமண்ணை பிடித்து உருவாக்குவது போன்று ஓர் எழுத்தாளனை உருவாக்க முடியாது. எழுத்தாற்றல் என்பது அவனது உணர்வில், இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். இல்லாவிட்டல் எல்லோரும் எழுதலாமே? சிறிது காலம் எழுதவிட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். பாரதிக்குப் பின் ஒரு பாரதி இன்னும் தோன்றவில்லை. கண்ணதாசனுக்குப் பின் ஒரு கண்ணதாசன் இன்னும் தோன்றவில்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக பிறப்பானானால் அவன் எழுதிக்கொண்டே இருப்பான். எந்த சூழ்நிலையையும் பார்க்க மாட்டான். இருள், வெளிச்சம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டதுதான் எழுத்து. ஒரு காலக்கட்டத்தில் வெளிச்சம் என்பதே இருக்கவில்லை. ஆனால் அந்த சூழலிலும் எழுதியிருக்கின்றார்கள். உணர்வுகளை தடைசெய்ய முடியாது. ஆனாலும் எழுதும் போது சமூகத்தை சற்று உணர்ந்து எழுத வேண்டும். ஒரு படைப்பை பத்துமுறை வாசிக்க வேண்டும். படைப்பென்று வரும்போது அதை வாசகர்களுக்கு வழங்கும் விதம் என்பது மிக முக்கியமானது. எல்லாவற்றையும் எழுதி, அதை படைப்பாக வழங்க முடியாது.

ஓர் எழுத்தில் கட்டுப்பாட்டு தன்மை என்பது கட்டாயமானது. ஒரு வரம்புக்குள் இருந்து எழுதவேண்டு;ம். யாரையும் பாதிக்காது சமூதாயத்தை பாதிக்காது ஒரு படைப்பாளனின் படைப்பு காணப்படவேண்டும். வரம்பு என்பது எதுவரை என்பதை ஒரு படைப்பாளனே தீர்மானிக்க வேண்டும். எழுத்தாளனின் படைப்பானது வாசகனை நல்ல வழியில் சிந்திக்க செய்யக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும். ஒழுக்கத்துக்குள் எழுத வேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணமாக உப்பு, விளக்கு, கோதுமையை கூறலாம். உப்பு காரமானது. அதிகமானாலும் பிரச்சினை, குறைந்தாலும் பிரச்சினை. எனவே உப்பை போன்று உபயோகமுள்ளதாக படைப்புகள் காணப்படவேண்டும். ஒளி என்பது எமக்கு இன்றியமைதாது. எனவே படைப்புகள் வழிகாட்ட கூடியதாக இருக்க வேண்டும். இதேவேளை கோதுமையை எடுத்துக்கொண்டால், கோதுமையின் விதைகள் மடிந்தால்தான் எமக்கு உணவாகின்றது.

எனவே ஓர் எழுத்தாளன் சமூதாயத்துக்கு உப்பாகவும் விளக்காகவும் கோதுமையைப் போன்றும் காணப்படவேண்டும். உப்புக்கு ஒப்பாய் படைப்புகள் காணப்படவேண்டும்.

கேள்வி:- உங்களது எழுத்துக்களுக்கூடாக நீங்கள் எவ்வாறான செய்திகளை கொடுக்க முனைந்தீர்கள்?

பதில்:- எனது எழுத்துக்களை வாசிக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தானது அவனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டுமென்றே நினைக்கின்றேன். ஒரு மனிதனின் காயங்களுக்கு கட்டுப்போடும் வகையிலான சிகிச்சை முறையாக எனது எழுத்துக்கள் அமையவேண்டும் என நினைக்கின்றேன். மருத்துவர் ஒருவர் ஒரு நோயாளனின் நோய்களை இனங்கண்டு அந்நோய்க்கு எவ்வாறு சிகிச்சை வழங்குகின்றாரோ அதேபோல் ஒரு வாசகன் படைப்பை வாசிக்கும் போது சிந்தனை செய்ய வேண்டும். அந்த எழுத்துக்கள் வாசகனின் வாழ்வில் திருப்பு முனையாக அமையவேண்டும்.
கேள்வி:- இன்றைய இளம் சமூகம் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்:- இன்றை இளம் சந்ததியினருக்கு சரியான வழிகாட்டல் இல்லையென்றே கூறவேண்டும். நல்ல வழிகாட்டல்  இருக்குமாயின் சிறந்த எதிர்கால சந்ததியினரை நாம் காணலாம். நல்லதொரு வழிகாட்டல் தற்போதைய இளம் சந்ததியினருக்கு தேவைப்படுகிறது.

ஆலயங்கள், ஒழுக்க நிலையங்கள் இந்த வழிகாட்டல்களை இன்றைய இளம் சந்ததியினருக்கு வழங்க முன்வரலாம்.

கேள்வி:- நீங்கள் இன்னும் சாதிக்க நினைக்கும் விடயம் எது?

பதில்:- என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு அதிகமான புத்தகங்களை பிரெய்ல் மூலமாக அச்சடித்துக் கொடுப்பதற்கு நினைக்கின்றேன். நான் இருக்கும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவ்வாறு உப்பாய், விளக்காய் அதிகமான விடயங்களை பார்வை புலன் அற்றவர்களுக்கு வழங்க நினைக்கின்றேன்.

கேள்வி:- தெருத்தூசியோன் என்ற பெயர் எவ்வாறு வந்தது..?

பதில்:- சிறுவயதில் 'சுவிப்பர்' என்றதொரு கவிதையை வாசித்தேன். அந்தக் கவிதையில் தெருவை கூட்டும் நிகழ்வு தொடர்பில் பலவாறு கவிஞன் எழுதியிருப்பார். இந்த கவிதையை வாசித்த பின் தெருத்தூசியோன் என எனக்கு நானே இந்த பெயரை இட்டுக்கொண்டேன்.

என் மானசீக குரு நடேசன் அங்கிள் புகலுடல் எய்தி இன்றுடன் 8 வருடங்கள் - 31.05.2012



தனது சமூகத்தின் நீதிக்காக பேனா முனை கொண்டு போர் தொடுத்த வீர ஊடகவியலாளனை நடு வீதியில் சுட்டுவீழ்த்திய நாள். கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறைத் தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமாகவும் துணிச்சலாகவும்  கட்டுரை எழுதி தொடரப்போகும் இவ்வாறான கல்விமான்களின் கொலைகளை பார்த்துக்கொண்டிருக்க போகிறோமா? என ஆருடம் கூறி இவர்களின் அடுத்த இலக்கு யார்? என வினா எழுப்பிய இவ்வீரனே விடையாகிப் போன நாள். உயிரைப் பாதுகாக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து தினம் செத்துப்பிழைக்கும் புலம்பெயர் வீரத்தமிழர்கள் மத்தியில் ஒரு நாள் ஒரு கணம் மட்டுமே மரணம் என ஊணுடல் அழிந்தாலும் ஈழத்திற்காகவே வித்தாகி போன என் நடேசன் அங்கிளிற்கு என் வீர அஞ்சலிகள்.

பதிவுகள்

தூரம்!

  சில நேரங்களில்  நமக்கான தூரங்கள்  அலகுகளிலிருப்பதில்லை - அது மிக அருகிலேயே இருக்கின்றது…. இரு அருகருகேயான  மண்டபங்களுக்கிடையான தூரம்…. சில...

அதிகம் பார்க்கப்பட்டவை