Tuesday, April 21, 2015

அன்பின் அம்மாவிற்கு.......



அன்பின் அம்மாவிற்கு

நான் இங்கு விடுதியில் நலம். நீங்க > அம்மம்மா> தம்பி எல்லோரும் எப்படியிருக்கிறீங்க? அப்பா இரண்டு நாளைக்கு முதல்ல என்னோட ஸ்கைப்பில கதைச்சவர். இந்த ஏப்பிரல்ல எப்படியும் லீவுக்கு ஒரு தடவை வந்து போக நினைக்கிறாராம். வீட்டுக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை கோல் பண்ணி கதைப்பாராம். அண்ணாவும் இரண்டு தரம் போனில் பேசினவர். எனக்கு எப்போது யுனிவர்சிற்றி லீவு விடும் என்றிருக்கின்றது. உங்கள் கையால் சாப்பிட்டு எத்தனை நாளாகின்றது அம்மா. லீவு விட்ட உடனேயே பஸ் ஏறிடுவேன்.

அம்மா இப்போதெல்லாம் காலையில் எழும்பும் போதே ஏதோவொரு பாரம் நெஞ்ச அழுத்துகின்ற மாதிரி உணர்கின்றேன். நீங்கள் சொன்ன விடயத்தை திரும்ப திரும்ப யோசித்து பார்த்த நான் அம்மா. எனக்கு கல்யாணம் கட்டின பிறகு வெளிநாடு போக விரும்பம் இல்லாமல் இருக்கு. இதத்தான் அன்டைக்கும் அப்பாட்ட சொன்ன நேரம் எனக்கு ஏசினவர். திரும்பவும் அப்பாட்ட சொல்ல எனக்கு பயமாக இருக்கு.
 

அம்மா முதல் ஒரு தடவை மாமாவுடன் அம்மமாக்கு மனத்தாங்கல் வந்த நேரம் “அம்மா என்னோட வந்து இருங்கோவன். நீங்க பொம்பிள பிள்ளையோட தானே இருக்கனும் என்னோட வந்து இருங்கம்மா” என்டு தானே சொல்லி நம்மட வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தனீங்க. நாளைக்கு நானும் வெளிநாட்டுக்கு போய்ட்டா நீங்க யாரோட போய் இருக்க போறீங்க? எனக்கு வெளிநாட்டுக்கு போய் படிக்க சான்ஸ் கிடைச்ச நேரம் நீங்களும் அப்பாவும் அங்க தனியா பொம்பள பிள்ளைய அனுப்பேலா என்டு தானே என்ன தடுத்தனீங்க? இப்ப மட்டும் தனியா அனுப்ப போறீங்களா? இத அண்டைக்கும் நான் சொன்ன நேரம் “அது வேற இது கலியாணம் கட்டிப்போற விஷயம் வேற” என்டு அப்பா சொன்னவர். என்னோட ஸ்கூல்ல படிச்ச வித்யாவ உங்களுக்கு ஞாபகம் இருக்கு தானே. அவளுக்கும் வெளிநாட்டாள் ஒராள தான் கல்யாணம் கட்டி அனுப்பினவங்க. அங்க போன பிறகு தான் அந்தாளுக்கு வேற ஒரு குடும்பம் இருக்கிறது தெஞ்சதாம். இப்ப அவள் தனியா வேறயா தான் இருக்கா. எனக்கு அவள்ட கதைய கேட்டதுல இருந்து பயமாயிருக்கு அம்மா.

நான் ஒருக்கா தனியா இரவு பஸ்ல கொழும்புல இருந்து மட்டக்களப்புக்கு வந்ததுக்கே அண்ணாச்சி எனக்கு ஏசினவன். இப்ப எப்படி என்ன அவ்வளவு தூரத்திற்கு அனுப்ப போறீங்க? புதுசா வந்தவற நம்பியோ அனுப்ப போறீங்க? அண்டைக்கு அவங்கட ஆக்கள் வீட்ட வந்த நேரம் அவரு படிச்சிருக்காரு , பீ.ஆர் இருக்கு என்டெல்லாம் சொல்லி கூட சீதனம் கேட்டவங்க என்டும் சாதியப் பத்தி விசாரிச்சவங்க என்டும் அவங்க கதைச்சத தம்பி சொன்னவன் அம்மா.  என்னத்த படிச்சி என்ன? வெளிநாட்டில இருந்தென்ன இன்னம் சாதிய, சீதனத்த பத்தி கதைக்கிறவங்களோடயா என்ன தனியா அனுப்ப போறீங்க? அவரும் இஞ்ச மொறட்டுவயில தானே எஞ்சினியறிங் முடிச்சவர். நானும் அதே யுனிவசிற்றில அவர் படிச்சத தானே படிக்கிறன். பிறகென்ன? ஒரே படிப்பு, ஒரே யுனிவர்சிற்றி அப்பென்டா ஒரே செலவு தானே? பிறகென்னத்துக்கு அவருக்கு படிப்பிச்ச செலவென்டு சீதனம் கேக்கிறாங்க?

என்ட போட்டோவ பார்த்து நிறங்குறைவா இருக்கன்னு சொன்னவங்க என்டு நீங்க வாங்கித் தந்த கீறீம் ரெண்டு மூனு நாள் போட்ட நான் அம்மா. படுக்கக்குள்ள பிசுபிசுப்பா இருக்கு இப்ப நித்தாட்டிட்டன். அவர்ட போட்டோவயும் நான் மெயில்ல பார்த்த நான். அங்கத்தைய கிளைமெட்டால அவர் கொஞ்சம் கலரா இருக்காரு. நம்ம ஊரு வெயிலுக்கு நான் இந்த கலர்ல தானே இருப்பன். அவங்களுக்கு வெள்ளப் பிள்ள தான் வேணுமென்டா வெள்ளக்காரிய கட்றது தானே. என்னத்துக்கு நம்மட நாட்டுல தேடுறாங்க? அல்லாட்டி இங்சருந்து போய் இப்ப வெளிநாட்ல இருக்கிற பிள்ளைய பார்க்கிற தானே..?

அண்டைக்கு வீடு மாறின நேரம் அம்மிய இறக்கக்குள்ள கீழ விழுந்ததுக்கு கவலப்பட்ட நீங்க தானே இது பரம்பர சாமான் என்டு. என்னத்துக்கு இதெல்லாம் சேத்து வச்சிருக்கீங்க? என்னைய வெளிநாட்டுக்கு தான் அனுப்ப போறீங்க என்டா இந்த அம்மி, உரல் எல்லாம் என்ன செய்யப் போறீங்க? இப்பவே யாருக்கும் குடுங்களன். இஞ்ச எனக்கு காச்சல் என்டா ஓடி வந்து கூட்டிட்டு போறீங்க… அங்க போனா என்ன செய்யப் போறீங்க?

நான் தர்க்கம் செய்றன் என்டு நினைக்காதீங்க அம்மா. எனக்கு உங்கள எல்லாம் விட்டுட்டு போக விருப்பமில்ல. அண்ணாக்கு நம்மட நாட்டில தானே கலியாணம் பாக்கிறீங்க.. அத போல எனக்கும் இஞ்சயே பாருங்க.. நான் எப்பவும் அண்ணாவோட பைக்கில ஊர் சுத்தனும், தம்பியோட நிறைய சண்ட பிடிக்கனும்,  அப்பாட்ட பிடிவாதம் பிடிச்சி சாதிக்கனும், உங்கட கையால சாப்பிடனும்.

எல்லாத்தயும் விட என்ட பிள்ளையல நீங்களும் அப்பாவும் வளர்த்து தறனும். உங்க இருவருக்கும் வயசான காலத்தில நான் உங்கள வைச்சு பார்த்து என் கடன் தீர்க்கணும். ப்ளீஸ் அம்மா அப்பாட்டயும் பேசிப்பாருங்களன்.

அம்மா கிணத்தடில நான் நாட்டின வாழ மரம் குலை போட்டிருக்கென்டு தம்பி சொன்னவன். ஒருக்கா முத்திட்டா என்டு பாத்துக்கொள்ளுங்க. உங்களுக்கு போன முற சுகர் கூடவாம் என்டு கேள்விப்பட்டன். நிறைய இனிப்பு சாப்பிடாதீங்க… வந்து குறிஞ்சா சுண்டல் செஞ்சு தாறன். இதோட ஆயிரம் முத்தங்கள் தந்து இந்த கடிதத்த முடிக்கிறன்.

அன்பு மகள்

மீரா

(கடந்த கால யுத்தத்தினாலும் அதனை சாக்காக கொண்டும் புலம்பெயர்க்கப்பட்ட எம்மினத்தின் இருப்பு வேறாகிவிட்டதால் இந்த தலைமுறையில் திருமணத்தினால் புலம்பெயர்க்கப்படவுள்ள என் இன பெண்களுக்கு இது சமர்ப்பணம்)


பிரான்ஸ்லிருந்து வெளிவருகின்ற ஆக்காட்டி இதழில் வெளியாகிய என்னுடைய படைப்பு... 

அதிகம் வாசிக்கபட்டவை