Made in Koria

இன்று பார்க்க கிடைத்த எளிமையானதொரு படம் "Made in Koria” . இயல்பான எளிமையான காட்சிகள், குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடியதொரு திரைப்படமாக அண்மையில் வெளிவந்தவற்றில் இதனை குறிப்பிடலாம். 

கிராமமொன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த செண்பாவிற்கு கொரியன் படங்கள், பாடல்கள் மிது சிறுவயது முதலே அதீத ஆர்வம். கொரியன் மொழியையும் கற்றக்கொள்ள ஆரம்பிக்கின்றார். இதற்கு முக்கிய காரணமாக அவர் சிறுவயதில் விநோத உடை போட்டியில் பங்குபற்றிய “செம்பவளம்” கதாபாத்திரமும் காரணமாக அமைந்துவிடுகின்றது. எப்படியாவது கொரியாவிற்கு சென்றுவர வேண்டும் என்கின்ற ஆர்வமும் மேலோங்கி காணப்படுகின்றது. வளரும் போது தன் கூடப்படித்த மணி மீதும் காதலாகி இருவரும் யாருக்கும் தெரியாமல் விரும்பிக்கொண்டிருப்பார்கள். மணிக்கு தன் தந்தையால் ஏற்பட்ட கடன், தொழில் பிரச்சினை என ஏகப்பட்ட பொருளாதார பிரச்சினைகள். இதேவேளை செம்பாவிற்கு திருமணம் பேச ஆரம்பிக்க தம் காதலை தன் தந்தையிடம் வெளிப்படுத்தி பேசுமாறு மணியிடம் நச்சரிக்க ஆரம்பிக்கின்றார். ஒரு கட்டத்தில் செம்பாவின் தந்தைக்கும் விடயம் தெரிய வர இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கிராமத்தினையுமு; விட்டு போய்விடுகின்றார்கள். அங்கு மணி செம்பாவின் விரும்பத்தினை நிறைவேற்ற கொரியாவில் செம்பாவிற்கான வேலை வாய்ப்பினையும் பெற்று இருவரும் அங்கு செல்ல ஆயத்தங்களை மேற்கொள்கின்றார். செம்பாவினை விமான நிலையத்திற்கு அனுப்பிவிட்டு மணி என்னவானார் என்பதும் செம்பா கொரியாவிற்கு யாருடன் சென்றார் என்பதும் கதையின் முதலாவது திருப்பம். 

கொரியாவில் செண்பாவின் கனவுகள் எவ்வாறு உயிர்கொள்கின்றது, அங்கு அவருக்கு ஏற்படும் நட்பு, அதன் பின்னர் நாடு திரும்ப வேண்டியே ஆகவேண்டி ஏற்படுகின்ற நிர்ப்பந்தம் என நகர்கின்றது கதை. பா.கார்த்திக்கின் இயக்கத்தில் சிறீநிதி தயாரிப்பில் இப்படம் வெளிவந்துள்ளது. முக்கிய பாத்திரமான செண்பா பாத்திரத்தில் பிரியங்கா மோகனும் மணி பாத்திரத்தில் ரிஷிகாந் கொரியா நாட்டின் இரு முக்கிய பாத்திரங்களில் Park Hye-Jin , Si-hun Baek  உம் நடித்துள்ளனர். 

பிரியங்கா மேனனின் நடிப்பு இயல்பாயிருக்கின்றது. ஆனாலும் இயக்குநர்களின் முக்கிய பிரச்சினையான கதாநாயகிகளின் வெண்தோல் மீதான நம்பிக்கை இந்த பாத்திரத்திற்கு பொருந்திப்போகவில்லை. கிராமத்தில் இருக்குமு; ஏனைய பெண்கள், செண்பாவின் அம்மா உட்பட அனைவரும் பொதுநிறத்தில் இருக்க வழமை போன்று கதாநாயகி மட்டும் ஏலியனாக இருப்பது இங்கும் முரணாகின்றது. அடுத்த இடைவெளியாக என் சிந்தனைக்கு எட்டியது கதையின் நகர்வு. சில நேரங்களில் தொய்வு இருப்பதாக உணரமுடிந்திருந்தது. மற்றுமொரு குழப்பம் செண்பா வேலைசெய்யுமிடத்தில் உள்ள வயோதிப பெண்ணுடன் ஊர் சுற்றிவிட்டு நேரத்திற்கு திரும்பும் போது அவர்கள் பயணிக்கின்ற மோட்டார் பைக் எப்படி வீட்டவர்களுக்கு தெரியாமல் மாயமாகிவிடுகின்றது என்கின்ற கேள்வி பார்வையாளர்களிடம் நிச்சயம் தோன்றியிருக்கும். இன்னுமொரு இடத்திலும் சறுக்கல்களை அவதானிக்கலாம். ஒரு கிராமத்திலிருந்து திடீரென கொரியா செல்லும் செண்பாவின் உடைகளின் திடீர் மாற்றமும் பாத்திரத்தின் உருமாற்றத்தில் முரணாக தெரிகின்றது. அவர் நவீன உடைக்கு மாறுவதற்கு சற்றுநேரமெடுத்திருக்கலாம்.  அதை கதையில் இயக்குநரும் கொடுத்திருக்கலாம் என்பது என் பார்வை 

எளிமையான கதை நகர்வு, ஒளியமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அருமை. குறிப்பாக படத்தில் அடிக்கடி சொல்லப்படுகின்ற “ எங்கு முடிந்துவிட்டது என்று நினைக்கின்றோமோ அங்கு தான் ஆரம்பமுள்ளது” என்கின்ற வசனம் நச்சென்று மனதில் நிற்கின்றது.  Si-hun Baek- செண்பா இடையேயான கெமிஸ்ரி அருமை. குறிப்பாக இடையில் ஓடிவிட்ட மணி, செண்பாவிற்கு வலிய வந்து உதவும்  Si-hun Baek என்கின்ற ஒப்பிடல் நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமானது. சிலவேளைகளில் நாம் நம்புபவர்கள் நம்மை ஏமாற்றுவதும் யாரோ முகமறியாத ஒருவர் நமக்கு உதவுவதும் பல இடங்களில் இன்று நடந்துகொண்டுதானிருக்கின்றது. ஒருவரை எடை போடுவதற்கு பாத்திரங்களை படைந்திருப்பது இந்த இடத்தில் அருமை. 

கொரியாவில் தமிழர்களின் இருப்பு குறித்த காட்சிகள் விரைவில் கொரியாவிற்கு நானும் பெட்டி கட்ட நினைக்கின்ற எண்ணப்பாட்டை உறுதிசெய்ய ஆரம்பித்திருக்கின்றது. மொத்தத்தில் படம் அருமை. குடும்பமாக அமர்ந்து பாருங்கள்.  இந்தப்படத்தில் எல்லாவற்றினையும் தாண்டி “செம்பவளம்” என்று வந்து போன பாத்திரம் பற்றி ஆராய ஆரம்பித்தேன். 

செம்பவளம் (Sembavalam)

செம்பவளம் என்பது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு இந்திய இளவரசி. கொரிய வரலாற்று நூல் Samguk Yusaவில் வரும் கதையின் அடிப்படையில், அவர் பின்னர் Heo Hwang-ok என்ற பெயரில் கொரியாவின் கயா (Gaya) அரசின் ராணியாக ஆனார். செம்பவளம் “அயுடா” (Ayuta) எனப்படும் தென் இந்திய அரசாட்சியில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.16 வயதில் கடல் மார்க்கமாக கொரியாவுக்கு சென்று, கயா அரசர் கிம் சுரோவை (King Suro) திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, அவர் கொரியாவின் முதல் ராணிகளில் ஒருவராக மதிக்கப்பட்டார்.இன்று கூட, பல மில்லியன் கொரியர்கள் தங்களை அவரது சந்ததியினர் எனக் கருதுகின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, இன்று சுமார் ஆறு மில்லியன் கொரியர்கள் — அதாவது கொரியா மக்கள்தொகையில் சுமார் 10% — தங்களது வம்சாவளியை இந்திய இளவரசியுடன் இணைக்கின்றனர் என்று நீங்கள் நம்ப முடியுமா? ஆம், இது உண்மையாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் 13ஆம் நூற்றாண்டில் ஒரு புத்த சந்நியாசியால் எழுதப்பட்ட Samguk Yusa என்ற கொரிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலில், 16 வயதான இந்திய இளவரசி செம்பவளம் (Heo Hwang-Ok என்றும் அழைக்கப்படுகிறார்) கொரியாவிற்கு தனது மணமகனைத் தேடி பயணம் செய்து, கிம் சுரோவை திருமணம் செய்து கொண்டு கயும்க்வான் கயா அரசின் முதல் ராணியாக ஆனார் என்று கூறப்படுகிறது.இந்த இளவரசி, தனது அடிமைகள் மற்றும் அரண்மனைச் சேவகர்களுடன் தமிழ்நாட்டிலிருந்து கொரியாவிற்கு பயணம் செய்தார். அவருடன் சென்ற குழுவினர் அங்கேயே தங்கியதால், தமிழர் பண்பாடு அங்குச் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், Heo, Lee மற்றும் Kim குலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை ராணி Heo Hwang-Ok அவர்களின் சந்ததியினராகக் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

Heo அவர்கள் தென் இந்தியாவில் அமைந்திருந்த அயுடா (Ayuta) இராச்சியத்தின் இளவரசி. சிலர் தவறாக அயுடா இராச்சியத்தை அயோத்தியாக (Ayodhya) இணைக்கின்றனர். ஆனால் அக்காலத்தில் அயோத்தியாவின் பழைய பெயர் “சாகேதா” (Saketa) என்பதாக இருந்தது. மேலும், Samguk Yusa 13ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது என்பதால், அது அயோத்தியாவைக் குறிக்கவில்லை. இங்கு “அயுடா” என்பது பண்டைய தமிழகம் பகுதியில் பாண்டிய வம்சத்திற்குச் சேர்ந்த “ஆய் இராச்சியம்” (Ay Kingdom) என்பதைக் குறிக்கிறது. இதற்கு ஆதாரமாக, இளவரசி Heo தன்னுடன் கொண்டு வந்த “இரட்டை மீன்” சின்னம் குறிப்பிடப்படுகிறது. பாண்டிய அரசின் கொடி, நாணயம் மற்றும் சின்னங்களில் இரண்டு மீன்கள் இடம்பெற்றுள்ளன. மீன் சின்னம், பாண்டிய நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் முக்கியமான அர்த்தம் கொண்டதாக கருதப்பட்டது. மேலும், Heo அவர்களை தமிழில் “செம்பவளம்” என்றும் அழைத்தனர்; இதன் பொருள் “சிவப்பு பவளம்” (Red Coral). அதேபோல், கொரிய பெயரான Heo Hwang-Ok என்பதிலும் இதே பொருள் இருப்பது சுவாரஸ்யமான ஒன்றாகும்.

ஆனால் இந்தப் பெயர் பழமையான கொரிய நூல்களில் இல்லை. பின்னாளில் உருவான பெயராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கதை வரலாற்று உண்மை என உறுதி செய்யப்படவில்லை. பல அறிஞர்கள் இதை ஒரு புராண/கதை எனக் கருதுகின்றனர். இருந்தாலும், இது இந்தியா–கொரியா கலாச்சார தொடர்பின் ஒரு முக்கிய சின்னமாக பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் பின்பற்றும் “நடுக்கல்” மரபு, ராணி Heo Hwang-Ok அவர்களின் கல்லறையிலும் காணப்படுகிறது. கொரியாவில் Heo Hwang-Ok ஒரு தெய்வமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலிருந்து வந்த ஒரு இளவரசி கொரியாவில் தெய்வமாக வழிபடப்படுவது பெருமைக்குரியது. அதே நேரத்தில், இந்த தகவலை பெரும்பாலான இந்தியர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

தமிழ்நாடு மற்றும் கொரியா இடையே காணப்படும் ஒரு தனித்துவமான ஒற்றுமை முத்து வேட்டையாகும் (Pearl hunting). பவள ஆபரணத் தொழிலுக்காக முத்து தேடும் செயல்கள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, இளவரசி Heo கிம் சுரோவை திருமணம் செய்த காலத்தில், பண்டைய தமிழ்நாட்டில் மட்டுமே பரவலாக அறியப்பட்டிருந்தன. ஆச்சரியமாக, இன்றும் தமிழ்நாடு மற்றும் தென் கொரியாவில் பெண்கள் ஆழ்கடலில் மூழ்கி முத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரியர்கள் பெரும்பாலும் அரிசி உணவையே உட்கொள்கின்றனர். அவர்களின் நெல் சாகுபடி முறையை தமிழர்கள் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தமிழர்களைப் போலவே, கொரியர்களும் வீட்டிற்குள் செல்லும் முன் செருப்புகளை வெளியே வைக்கும் பழக்கத்தையும், மூத்தவர்களுக்கு முன் வணங்கி மரியாதை செலுத்தும் மரபையும் கடைப்பிடிக்கின்றனர். இப்படி செம்பவளம் அரசி குறித்து ஆராய முற்பட்ட போது நீண்டுகொண்டே போகின்றது தமிழ்-கொரிய உறவு. இதைவைத்தே ஒரு நூல் எழுதும் அளவு தகவல்கள் என் தேடல்களில் கிடைத்துள்ளன. 

 

மரணம்

நான் முதல் SFCG இல் இணைப்பாளராக பணியாற்றிய காலத்தில் எமது திட்டத்தில் மதிப்பீட்டு அலுவலகராக பணியாற்றிய நானா ஒருவர் இருந்தார். மிகவும் மென்மையானவர். எமது திட்டம் இளம்பெண்களுடனானது. இந்த பிள்ளைகளையும் மிகவும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் அனுகிய ஒருவர் அவர். ஏறத்தாழ என் தந்தை வயது அவருக்கு. மூன்று பெண் பிள்ளைகள். எப்போதும் தன் பிள்ளைகள் பற்றியும் அவர்களது படிப்பு பற்றியும் பேசுவார். எமக்குள் அலுவலக விடயம் தவிர்ந்தும் உரையாடல்கள் நிகழ்வதுண்டு. குறிப்பாக எமது கால்நடை வளர்ப்பு பண்ணை குறித்து அடிக்கடி கேட்பார். பண்ணை தொழில், சவால்கள், பொருளாதார விடயங்கள் குறித்து நிறைய பேசுவார். தனக்கும் எதிர்காலத்தில் இது குறித்த எண்ணம் இருப்பதாக சொல்வதுண்டு. இவரது மூத்த பெண் மருத்துவ துறைக்கு தெரிவாகி இரண்டாம் வருடத்தில் படித்துக்கொண்டிருந்தார். கடந்த வாரம் இரு தினங்கள் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஊடக அறிக்கையிடலுக்காக என்னை அழைத்திருந்தார். நானும் சென்று வந்திருந்தேன். அப்போது தன்னுடைய இரண்டாவது பெண் மொறட்டுவ பொறியியல் பரிவிற்கு தேர்வாகியுள்ளதாக தெரிவித்திருந்தார். பல்கலைக்கழக விடயங்கள் குறித்தும் பேசிக்கொண்டோம். 

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சக ஊழியர் ஒருவர் தொடர்புகொண்டு இவரின் மூத்த மகள் திடீரென இறந்துவிட்டதாகவும் கொழும்பிலிருந்து சடலம் மட்டக்களப்பிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. அதிகாலை சடலம் கொண்டுவரப்பட்டதால் என்னால் செல்ல முடியவில்லை. அன்றைய தினம் மிகவும் முக்கியமான கலந்துரையாடலும் தூதுவராலயத்தில் இருந்திருந்தது. இதனையும் மாற்ற முடிந்திருக்கவில்லை. எனவே நேற்று அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  நான்கு நாட்களுக்கு முன்னர் சந்தித்திருந்தவருக்கும் நான் நேற்று சந்தித்தவருக்குமிடையில் நிறைய மாற்றங்கள். இழப்பென்பது இலகுவானதற்றதல்லவா? அவர்களது முறைப்படி பெண்கள் உள்சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். மனைவியை அழைத்து எம்மையும் உள்ளனுப்பி வைத்தார். அவரிடம் விசாரித்த மட்டில் இறந்த அன்று தான் அந்த பெண்ணின் பிறந்த நாளும் கூட. 12 மணிவரை வாழ்த்திவிட்டு தான் உறங்க சென்றிருக்கின்றார்கள். மீண்டும் அதிகாலை தொழுகைக்காக இந்த பெண் எழுந்திருக்கின்றார். தொழுகையை முடித்த பின்னர் பரீட்சைக்காக படிக்க ஆரம்பித்த போது தான் வலது பக்க தோளில் நோவினை உணர்ந்திருக்கின்றார். தாயை எழுப்பி “உம்மா வலிக்கின்றது” என்று சொல்லியிருக்கின்றார்கள். தாயும் தடவும் போது மகளின் தலை சாய்வதை உணர்ந்து கணவரை எழுப்பி சொல்லியிருக்கின்றார். அவரும் தெரிந்த வைத்தியருக்கு அழைப்பெடுத்து சொல்லியிருக்கின்றார். முதலுதவியை செய்த படியே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கும் ஆரம்பகட்ட சிகிச்சையை தொடங்கும் முன்னரே உயிர் பிரிந்துவிட்டது. வெறும் 40 நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டதாக தாய் சொல்லியழுதார். விடைபெறும் போது என் சக ஊழியரை மீண்டும் சந்திக்க கிடைத்தது. என்ன ஆறுதல் சொல்வது என புரியவில்லை. எனக்கே கேள்விப்பட்டதில் இருந்து இவ்வளவு வலி என்றால் அவர்களுக்கு எவ்வாறிருக்கும்? அதுவும் புத்திஜீவியானதொரு மகளை இழந்திருக்கின்றார்கள். எவ்வளவு கனவுகளை சுமந்திருப்பார்கள்? இவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லிட முடியும். காலத்திற்கு மட்டுமே இவர்கள் வலியை குறைக்கும் சக்தியிருக்கின்றது. 

இரு வாரங்களுக்கு முன்னர் நான் வேறொரு நாட்டில் நிகழ்விற்காக சென்றிருந்த போது அழைப்பெடுத்த வீட்டவர்கள் எம்முடைய தோட்டத்தில் பணிபுரியும் பெண்ணொருவரின் கணவர் இறந்துவிட்டதாக சொல்லியிருந்தார்கள். அங்கிருந்து உடனே வரமுடியாத நிலையில் அழைப்பெடுத்த மட்டும் பேசியிருந்தேன். உதவியாளரிடம் அவர்களுக்கான உதவிகளையும் அடக்க ஒழுங்குகளையும் கவனிக்கும் படியும் கூறியிருந்தேன். இந்த கணவனை இழந்த அம்மா எம்மிடம் வந்ததே தனிக்கதை. இரு வருடங்களுக்கு முன்னர் நாம் குடும்பமாக சுற்றுலா சென்றிருந்த போது இந்த அம்மா தூரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். நானும் தம்பியும் அருகில் போய் பேசிய போது குடும்ப பிரச்சினை என்று மட்டும் சொல்லிவிட்டார். நாமும் அவர் பகிர விரும்பவில்லை என்றால் வற்புறுத்த முடியாது என்று திரும்பிவிட்டோம். வீடு வந்த பின்னும் இருவருக்கும் இது குறித்து ஒருவித பதற்றம் இருந்திருந்தது. எனவே மீண்டும் நாமிருவர் மட்டும் பைக்கில் சென்ற போது அந்த அம்மா தற்கொலை செய்வதற்கு தயாராக நின்றிருந்தார். அவரை இழுத்த வந்து கதைத்து வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டோம். தனக்கு விட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்ததில் நான்கு பி;ள்ளைகள் என்றும் தற்போது கணவருக்கு வேறொருவருடன் தொடர்பென்றும் குடிப்பழக்கமும் சேர்ந்திருக்கின்றது என்றும் இதனால் வீட்டில் சாப்பிடுவதற்கு கூட வறுமை என்று அழுதார். நீங்கள் இறந்துவிட்டால் அந்தக்குழந்தைகள் என்னாவார்கள் என்றெல்லாம் சமாதானப்படுத்தி அவருக்கும் வேலை கொடுத்திருந்தோம். பண்ணை வீட்டிற்கும் குடும்பத்துடன் வந்துவிட்டார். மூத்த இரு பிள்ளைகளையும் விடுதியில் சேர்த்துவிட்டிருந்தோம். இளையவர்கள் இருவரும் சிறுவயதாகையால் தாயுடன் இருந்தார்கள். மூன்று மாதங்களின் பின்னர் பண்ணை வீட்டை கண்டுபிடித்து வந்து விட்டார் அந்த குடிகார கணவர். வந்து சண்டை போட்டு சென்றவர் விபத்தாகி காலிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தம்மா தான் அவரை பொறுப்பெடுத்துக்கொண்டார். கணவனின் வருமானத்தித்தை உறிஞ்சிக்கொண்ட அவர் தொடர்பு வைத்திருந்த பெண் அந்தப்பக்கம் கூட எட்டிப்பார்த்திருக்கவில்லை. இதன் பின்னரான கடந்த ஒன்றரை வருட காலம் படுக்கையிலிருந்த கணவரையும் பிள்ளைகளையும் பராமரித்தது அந்த அம்மா தான். 

நாடு திரும்பியதும் அவரை சந்திக்க சென்றிருந்தேன். இழப்பு குறித்து விசாரிக்கும் போது புன்னகைத்தபடி தான் இப்போது தான் நிம்மதியாகவிருப்பதாக கூறினார். எனக்குள் பெருத்த ஆச்சர்யம். ஏன் அம்மா நீங்கள் தானே வலிய அவரை பொறுப்பெடுத்து பார்த்தீர்கள் என்று கேட்டேன்.  “நான் அவரை விரும்பி கட்டியதால் என் குடும்பத்தினை இழந்தேன். பிறகு பணம், பிறகு இவரது குடியால் பிள்ளைகளும் நானும் நிம்மதியை இழந்திருந்தோம். ஆனாலும் நான் அவரை நேசித்திருந்தேன். படுக்கையிலிருந்த காலத்திலும் சந்தேகம், கடுமையான வார்த்தையாடல்கள், கால் இயலாமையுடனும் கூட சிகரெட்டினால் வைத்த சூடுகள் எல்லாம் அனுபவித்துவிட்டேன். அவர் இறந்தது அப்படியொன்றும் வலிக்கவில்லை. இனியாவது என் பிள்ளைகள் நிம்மதியாக படிப்பார்கள். நானும் அவரை விரும்பி திருமணம் செய்த கடமைக்காக அவரை என்னால் முடிந்தளவு கவனித்து பார்த்தேன். கடமையை முடித்துவிட்டேன் இப்போது நிம்மதியாகவுள்ளது என்றார். இந்த விளக்கத்தை கேட்டதிலிருந்து ஏன் இந்தக்கணவர் முதலே இறந்திருக்க கூடாது என்றிருந்தது. 

மரணம் என்பதும் மழை போன்றது என்று தோன்றுகின்றது. வரண்ட நிலத்தில் பெய்யும் மழையும் நெல் முற்றியிருக்கும் போது பெய்யும் மழையும் ஒன்று தான். ஆனால் கால, நேரம் தவறி பெய்யும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் வித்தியாசமானது. அவ்வாறே மரணமும் அது நிகழும் களத்தினை பொறுத்தே வலி தீர்மானிக்கப்படுகின்றது. அல்லது இறந்தவர் வாழ்ந்த நாட்களே சுற்றியிருப்பவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தி போகின்றது


Ainthinai Eco Habitat - ஐந்திணை இயற்கை வாழ்விடம்

கட்டட வடிவமைப்புத்துறையில் பலருக்கும் வடிவமைப்புக்களை செய்திருந்தாலும் இன்னும் செய்துகொண்டிருந்தாலும் நமக்கானது நிச்சயம் வித்தியாசமானதாக புத்தாக்கமானதாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக எதிர்காலத்தில் என்னவனுடன் வாழப்போகும் வீடு எம்முடைய குழந்தைகள் தவழப்போகும் வீடு என எனக்குள் நிறை;த கற்பனை இருக்கின்றது. தற்போது எத்தனை வீடுகள் சொந்தமானதாக இருந்தாலும் என்னவனும் நானும் இணைந்து கட்டப்போகும் இல்லம் இருவரும் பார்த்துப்பார்த்து நிர்மாணிக்க வேண்டும் என்பது என்னுடைய பேரவா. அதேபோன்று தொழில்ரீதியாக நாம் தொடங்கவுள்ள நிர்மாணங்களும் அ;வதறு இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காகவே என்ன தொனிப்பொருளினை எடுத்துக்கொள்ளலாம் என சிந்தித்த போது தட்டுப்பட்டதொரு விடயம் "ஐந்திணை" 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளையும் ஒருங்கிணைத்து நான் வடிவமைத்துள்ளது தான்  "Ainthinai Eco Habitat". 

  • குறிஞ்சி குடில் 
  • முல்லை மண்டபம் 
  • மருத நில மாளிகை 
  • நெய்தல் நீல இல்லம் 
  • பாலை பரப்பு 

என பெயரிட்டு அதனதன் இயல்புகளுக்கமைய அந் நிலங்களுக்கேயுரிய நுட்பங்களுடன் வடிவமைத்து வருகின்றேன். இதில் மருதநில மாளிகை வாகரைப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. சுற்றிலும் இயற்கையான சூழல் , மிருகங்களையோ சுற்றுச்சூழலையோ குழப்பாத உருக்குலைக்காத வடிவமைப்பு. இதில் பரிமாறப்படுகின்ற உணவுகளும் அந்நிலத்திற்கே உரியவை. என்னது உணவா? என ஆச்சர்யமாகவிருக்கின்றதா? ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு உணவு உண்டு. இன்று இந்தியன் உணவு இத்தாலியன் ரெஸ்டோரன்ட் என்று நாம் நாடுகள் சார்ந்து உணவுப்பதார்த்தங்கள், பதப்படுத்தல்களை பேசும் போது ஏன் அது நிலம் சார்ந்து அமையக்கூடாது? நிலம் சார் உணவுகள் எம் இலக்கியங்களில் உண்டு.   

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றித்து  வாழ்ந்தவர்கள். அவர்கள் உணவு முறையும் அவர்கள் வாழ்ந்த நில அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இதை “ஐந்திணைப் பகுப்பு” (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) என்று ஐந்திணை இலக்கியத்தில் விளக்குகின்றனர்மேலும், எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் உணவுப் பழக்கங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 குறிஞ்சி நிலம் (மலைப்பகுதி)

வாழ்வு: வேட்டை, காட்டு வாழ்க்கை
உணவு:

  • காட்டு விலங்குகளின் இறைச்சி (மான், காட்டு பன்றி)
  • தேன்
  • கிழங்கு வகைகள்
  • காட்டு பழங்கள்

இயற்கையில் கிடைக்கும் உணவுகளை நேரடியாக பயன்படுத்தினர். அதிகமாக வேட்டையாடி உணவுபெற்றனர்.

முல்லை நிலம் (காடு/மேய்ச்சல் நிலம்)

வாழ்வு: இடம்பெயரும் மாடு மேய்ப்பவர்கள்
உணவு:

  • பால், தயிர், நெய்
  • இறைச்சி
  • கம்பு, சோளம் போன்ற தானியங்கள்

பால்வள உணவு முக்கியம். மெதுவான வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவு

மருதம் நிலம் (வயல்வெளி)

வாழ்வு: விவசாயம்
உணவு:

  • அரிசி (முக்கிய உணவு)
  • காய்கறிகள்
  • பருப்பு வகைகள்
  • மீன் மற்றும் இறைச்சி

நாகரிகமான மற்றும் செழிப்பான உணவுமுறை. பலவகை சமையல் முறைகள் இருந்தன.

நெய்தல் நிலம் (கடற்கரை)

வாழ்வு: மீன்பிடி
உணவு:

  • மீன், நண்டு, இறால்
  • உப்பு
  • உலர்ந்த மீன்
  • கடல் உணவுகள்

கடல்சார் உணவுகள் அதிகம். உப்புச் சேர்க்கை முக்கியம்.

பாலை நிலம் (வறண்ட நிலம்)

வாழ்வு: பயணம், போரியல்
உணவு:

  • உலர்ந்த உணவுகள்
  • வறுத்த தானியங்கள்
  • எடுத்துச் செல்லக்கூடிய உணவு

கடின சூழலுக்கேற்ற எளிய உணவு. நீண்ட பயணங்களுக்கு ஏற்ற உணவு

இவ்வாறு நிலத்தன்மைகேற்ப வாழ்வியல், அந்த வாழ்வியல் சார் உணவு என வாழ்ந்தவர்கள் எம் முன்னோர்கள். மேலும் குறிப்புகளில் உணவில் சேர்க்ப்படுகின்ற காரம் அல்லது உறைப்பு குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன. எமது அறுசுவைகளிலும் இது அடங்குவது அனைவரும் அறிந்ததே.சங்ககாலத்தில் மிளகாய் (chili) இல்லை. காரத்திற்கு மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உப்பு, புளி போன்றவை சுவைக்காக பயன்படுத்தப்பட்டன. இது உணவின் இயற்கை சுவையை அதிகமாக வைத்தது என குறிப்புகள் உள. மொத்தத்தில், சங்ககால உணவு என்பது
“இயற்கை + நிலம் + வாழ்க்கைமுறை” என்ற மூன்றின் இணைப்பாக இருந்தது.

இதன் அடிப்படையில் வாகரை உணவகத்தில் உணவுகள் பரிமாறப்படுகின்றன. கட்டடங்களும் வடிவமைப்பும் வெறும் கல் , மண்ணாலானவை அல்ல. இவை எம் மண் சார்ந்தவை, எம் கலாசாரம் சார்ந்தவை எம் வாழ்வியல் சார்ந்தவை. என்னுடைய அடுத்த இலக்கு மருதம் நிலம் சார்ந்தது. இதற்காக வயல்பரப்பிற்கிடையிலானதொரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. விரைவில் யாழ் நோக்கி கனவுகளுடன் நகர இருக்கின்றேன்;. இன்னும் கட்டடம் சார் எம் வாழ்வியலை நாம் பேசிக்கொள்வோம்.



 

 

 

நீதிக்கதை !

என்னுடைய அம்மப்பா ஊடகவியலாளராக பணியாற்றிய காலங்களில் அவருடைய உற்ற நண்பனாக  இன்னுமொரு ஊடகவியலாளரும் இருந்தார். பால்ய காலத்தில் இவர்கள் நட்பு ஆரம்பித்தாக அடிக்கடி கூறிக்கொள்வார்கள். இந்த நட்பு பின்னர் அரசியல் கொள்கைகள் மாற்றடைந்ததன் பின்னர் சற்று ஆட்டம் கண்டிருந்தாலும் இவர்களால் உருவாகியிருந்த குடும்ப நட்பு இவர்கள் இறந்த பின்னரும் கூட தொடந்துகொண்டுதானிருந்தது. இதன் நீட்சியாக மூன்றாவது தலைமுறையானவர்களான நாமும் நண்பர்களாயிருந்தோம். இதற்கு இன்னுமொரு காரணம் நாங்களும் இதே துறையில் பயணித்தமை என்றும் சொல்லலாம். அம்மப்பாவின் பேரனும் முன்னாள் பத்திரிகையாசிரியர், ஓவியனும் கூட. எம் வீட்டிலும் ஏனையவர்கள் பேனையையும் அதற்கான விலையையும் அறிந்ததாலோ அல்லது வேறு துறைகளில் மூழ்கிப்போனதாலேயோ பேனையை இறுகப்பற்றிக்கொள்ளவில்லை. சிறுவதிலிருந்தே அதனை பற்றிக்கொண்டவள் நான் தான். இதனால் நண்பரின் பேரனும் நானும் நல்ல நண்பர்களாயிருந்தோம். நண்பர்களாயிருந்தோம் என்றாலும்  இருவருக்குமிடையில் பத்துவயது வித்தியாசம். நானும் வகுப்பேற்றங்களுடன் கற்றவள் என்பதால் என்னுடைய சம வயதினரையும் விட என்னை விடவும் வயதானவர்களே பெரும்பாலும் நண்பர்களாயிருந்ததுண்டு. எனவே இந்த நட்பு வயது தாண்டியும் பயணித்திருந்து.

அவர்கள் குடும்பமும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து என்  மண்ணில்  (இது மட்டக்களப்பா? யாழா என்று குழம்ப வேண்டாம்.; இரண்டும் என் மண் தான். இவ்விடத்தில் மட்டக்களப்பு)  குடியேறியிருந்தமையால் தலைமுறை தாண்டிய எம் நட்பும் மிகவும் ஆழமாயிருந்தது. அந்த நாட்களில் நான் வானொலி நிகழ்வுகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டும், எம்மால் நடாத்தப்பட்ட பத்திரிகையின் உப ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கட்டுரைகளுக்கான உதவிகள், தேவைப்படும் நேர்காணல்களை பெறுவதற்கான இலக்கங்களை பெறுவது என்பனவற்றிற்கு என்னுடைய இந்த நண்பர் தான் உதவிக்கொண்டிருந்தார். எம்முடைய வீடுகளும் சற்றுத்தூரங்களில் இருந்ததால் அடிக்கடி இருவரும் சந்தித்கொள்வதுமுண்டு. அப்போது நான் பல்கலைக்கு தெரிவாகி கொழும்பிற்கு போகவேண்டி வந்த போதும் கூட எனக்கான பொருட்களை அல்லது மீன்பொரியல், பலகாரங்களை மட்டக்களப்பிலிருந்து அனுப்பி வைப்பதற்கு அம்மா இவரிடம் தான் கொடுத்து விடுவதுண்டு. எனவே என்னுடைய விடுதி நண்பிகள், ஊடக நண்பர்களுக்கு நம்மிருவரின் நட்பு குறித்தும் நன்றாக தெரியும். 

இப்படியானதொரு நாட்களில் தான் பல்கலை விரிவுரையில் இருக்கும் போது திடீரென ஒரு புது இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்புக்கள் பலமுறை வந்திருந்தன. இடைவெளி இன்றி தொடர்ச்சியாக அந்த இலக்கத்திற்குரியவர் அழைத்ததால் எரிச்சலாகி விரிவுரையாளருக்கு தெரியாமல் இரகசிய குரலில் பின்னர் அழைப்பதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டேன். அதன் பின்னர் நானும் இதனை மறந்துவிட்டேன். மீண்டும் சில நாட்களின் பின்னர் இதே இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தக்கதைத்த போது என்னுடைய மேற்குறிப்பிட்ட நண்பன் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண்ணொருவர் அழுதார். தொடர்ச்சியான சில உரையாடல்களில் இருவரும் பத்திரிகையில் பணியாற்றி வந்ததாகவும் அதன் போது இந்தப்பெண்ணை நண்பர் பல வருடங்களாக காதலித்து வந்தாகவும் (அப்படி தான் அந்த பெண் சொன்னார்) தமக்குள் உடலியல் ரீதியான தொடர்புகள் இருந்ததாகவும் இதன் நிமிர்த்தம் தான் பல தடவை கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் தற்போது தன்னுடனான தொடர்பை துண்டிக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தன்னுடன் அவரை சேர்த்து வைக்கும் படியும் அழுதார். 

இந்த காலகட்டத்தில் நான் உப ஆசிரியராக இருந்தமையால் இப்படியான பல பாதிக்கப்பட்ட பெண்கள் என்னை தொடர்புகொள்வதுண்டு. பல இடங்களில் சட்டரீதியான நடவடிக்கை வரை கூட இப்பெண்களுடன் சென்றிருக்கின்றேன். ஆனால் இதில் பாதிப்புக்குட்படுத்தியவர் யாரோ முகம்தெரியாத நபராயிருப்பதுண்டு. ஆனால் இங்கு என் நண்பர். இந்த விடயத்தில் தலையிட்டால் எம் குடும்ப நட்பிலும் விரிசல் வரும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. போதாதற்கு அவர்கள் வீட்டிலும் சில பொருளாதார பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருந்தது எனக்குத் தெரியும். ஆனாலும் இதற்காகவெல்லாம் தட்டிக்கேட்காமல் இருக்க முடியுமா என்ன?

நண்பனுக்கு அழைப்பெடுத்து நடந்ததை சொல்லி கேட்டேன். அந்தப்பெண் தன்னுடன் பணிபுரிந்தது உண்மை ஆனால் மீதியெல்லாம் பொய் என்று விட்டார். மீண்டும் அந்தப்பெண்ணிடம் நண்பர் சொன்னதை சொன்னேன். நேரில் வந்தால் புகைப்பட ஆதாரங்கள் தருவதாக சொன்னார். இந்த காலப்பகுதியில் எங்கள் குடும்பத்திற்கும் எனக்கும் அரசியல் அழுத்தங்களும் இருந்திருந்தன. இது நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்கலையிலிருந்து வரும் போது இனந்தெரியாத ஒருவர் பேரூந்தில் என்னுடைய தலையை கம்பியில் மோதி மண்டை உடைந்து எட்டுத் தையல்களுடன் தப்பித்திருந்தேன். எனவே அந்தப்பெண் கூறியதை நண்பனிடம் சொல்லி என்னுடைய வருமாறு கேட்ட போது “உம்மை தாக்குவதற்கு அல்லது பணம் பறிப்பதற்கு இது திட்டமிடப்படுகின்றது. கவனம். என்னால் வரமுடியாது. ஏதாவது நடந்தால் உங்கள் வீட்டாக்கள் என்னை கொன்றுவிடுவார்கள். இவ்வளவு கால பழக்கம். அவ்வளவிற்கு என்னில் நம்பிக்கையில்லையா?” என்று கேட்டார். 

விடுதியில் நிதானமாக அமர்ந்து யோசித்த போது அவர் சொன்னதும் சரியெனப்பட்டது. ஒரு சிலநேரங்களில் என் தமையனாரிடம் சொல்வோமா என்றுமிருந்தது. ஆனால் இது பொய் என்றால் என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. அதேவேளை படிக்கும் போது இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டால் அம்மா எப்படி என்னை திட்டுவார், சத்தியம் வாங்குவார் என்றும் எனக்குத் தெரிந்திருந்தது. இரண்டிற்கும் நடுவில் நான் குழும்பிய நாட்கள் அவை. ஆனாலும் கடந்து போக என் போராட்ட புத்தி விடவில்லை. எனவே நண்பனை நேரில் சந்திக்க தீர்மானித்தேன். 

சிலநேரங்களில் ஆதாரங்கள் தீர்மானிக்க முடியாததை அல்லது அனுமானிக்க முடியாததை கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். எந்த உயிரினத்தினாலும் தவிர்க்க முடியாதது இந்த பார்வை தான். எந்தப்பெரிய கள்ளனாலும் சரி,துரோகியென்டாலும் சரி, பொறுக்கியெண்டாலும் சரி தீர்பிடுவது கண்கள் தான். ஆனால் ஆதாரமற்ற உறுதியான தீர்வு அது. எனவே கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் நண்பனை சந்தித்து கேள்விகளை கேட்டேன். ஏறத்தாழ ஒரு மணிநேரம் கதைத்திருந்தேன். அந்த ஒரு மணிநேர கலந்துரையாடலில் அவன் பார்வை ஒருதடவை கூட என் கண்களை சந்தித்திருக்கவில்லை. எனவே என் உள்ளுணர்வு கள்ளத்தனத்தினை எடைபோட்டுவிட்டது. 

எனவே அம்மாவிடம் விடயத்தினை சொல்லிவிட்டேன். அம்மாவும் இவ்வாறான பெண்கள் விடயம் என்றால் நிச்சயம் தீர்ப்பிட சுணங்க மாட்டார். எனவே இருவரும் நண்பரின் வீட்டிற்கு போனோம்.; அம்மாவின் நண்பியும் நண்பரின் தாயுமானவரிடம் பேசினோம். சொன்னதை கேட்டபின் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி அந்தப்பிள்ளை எந்தவிடம்? என்பது தான். மலையகப்பெண் என்றேன். நாங்கள் யாழ்ப்பாண ஆட்கள் அங்கு எப்படி பெண் எடுப்பது? என்றார். பெண் தானான கேட்பது வேண்டுமாயின் தவிர்க்கலாம் ஆனால் இங்கு உங்கள் மகன் ஏமாற்றியிருக்கின்றார். அந்தப்பெண்ணை விரும்பும் போது இதுவெல்லாம் தெரியாதா ? என்று கேட்டேன். இப்படித்தான் எங்கட பெடியன்களை அவர்கள் தங்கட பக்கம் எடுக்க நாடகமாடுவாள்கள் என்று விட்டார். நண்பனுக்கு ஒரு தங்கை. அப்போது மருத்துவருக்கு படித்துக்கொணடிருந்தார். அவரும் “அந்தப்பிள்ளை கல்யாணத்திற்கு முன் ரூமுக்கு போயிருக்கு என்கிறாள் எப்படிப்பட்ட பிள்ளை அது” என்று தன் அண்ணனை நியாயப்படுத்த தொடங்கிவிட்டார். என் அம்மா அதன் பின்னர் என்னை பேசவிடவில்லை. அங்கிருந்து வெளிக்கிட்டு வீடு வந்துவிட்டோம். அம்மா நிதானமாக “ அவன் அந்தப்பிள்ளையை ஏமாற்றிவிட்டான். அவன் வீடும் நியாயத்தினை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. பொடியன் கம்பீரமாக அந்தப்பிள்ளையை தான் கட்டுவேன் என்றாலோ அல்லது அவன் செய்தது பிழை அந்தப்பிள்ளையுடன் பேசுவோம் என்று குடும்பம் சொல்லியிருந்தாலோ நாமும் சேர்ந்து போராடலாம். இங்கு கதையே வேறு. அந்தப்பிள்ளை இவனை கட்டினாலும் நிம்மதியாகவிருக்காது” என்று சொல்லிவிட்டார். அன்றிலிருந்து நாம் அவர்கள் வீட்டிற்கு போவதனையும் குறைத்துக்கொண்டோம். அவர்களும் எம்மை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.

நான் திண்டாடிப்போனேன். வாழ்க்கை என்பது வழக்கின் தீர்ப்பை போன்றதல்ல. இருவர் சேர்ந்து வாழ்வதற்கு மனதில் அன்பிருக்க வேண்டுமல்லவா? தன் பிழையை ஒருவன் உணரவேண்டுமல்லவா? ஆனால் இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களும் அந்தப்பெண்ணை நன்றாக முடுக்கிவிட்டார்கள். நான் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையில் போராடிய காலப்பகுதியை தவறாக தீர்ப்பிட ஆரம்பித்தார்கள். நண்பனை பூசிமெழுக நான் முயல்கின்றேன். ஒருவேளை நான் தான் அவனை திருமணம் செய்யவுள்ளேன் என்றும் எண்ணியிருந்தார்கள். இதனை அந்தப்பெண்ணும் என்னிடம் கேட்டுவிட்டார். எனக்குள் இருந்த போராட்டம், அந்தப்பெண் பேசிய அவதூறு எல்லாம் சேர்த்து படுபயங்கரமாக திட்டிவிட்டு அழைப்பை நிறுத்திவிட்டேன். சில நாட்களில் சாந்தமாகி அந்தப்பிள்ளையில் புள்ளியில் என்னை வைத்து யோசித்து பார்க்கும் போது அவள் வலி புரிந்தது. ஆனால் தன் வலியை தீர்ப்பதற்காக இன்னுமொரு பெண் மீது சேறுபூசியதை என்னால் தாங்க இயலவில்லை. என்றாலும் குறைந்த பட்சமாக நண்பனிடம் பேசுவோம் என்று மீண்டும் பேசினேன். எமது குடும்ப சாமி மீது சத்தியம் பண்ணும் படி கேட்டேன். தயக்கமின்றி பண்ணிவிட்டார். இதற்கு மேல் இரு தரப்பிடமும் பேசுவது என் மீது பழிவிழ வைக்கும் என்று பயப்பட ஆரம்பித்து அத்துடன் இது போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்துவது என் உயர்வுகளை தடுக்கும் என நினைத்து விலகிவிட்டேன். ஆனால் அப்பப்போ என் மனச்சாட்சி என்னை சுடாமலுமில்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமான முயற்சி எடுத்திருக்கலாமோ என்று அவ்வப்போது நான் என்னையே நொந்துகொள்வதுமுண்டு. 

இதற்கு பின்னர் மூன்று வருடங்கள் கழித்து ஊடகவியல் பயிற்சிப்பட்டறையில் அந்தப்பெண்ணை முதன்முறை நேரில் சந்தித்தேன். என்னுடன் பெரிதாக முகங்கொடுத்து பேசவில்லை. ஆனால் என் நண்பியிடம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக சொல்லியிருந்ததை கேள்விப்பட்டேன். மனதில் ஒருவித நிம்மதியும் படர்ந்திருந்தது. இந்தப்பக்கம் மூன்று தலைமுறை நட்பு விலகிப்போயிருந்தது. பொதுவெளியில் கண்டால் மட்டும் வெளிப்புன்னகையுடன் பேசிக்கொண்டோம். இதற்கிடையில் நண்பனின் தங்கையை என்னுடைய தமையனாருக்கு திருமணம் பேச முயற்சியும் நடந்தது. என்னுடைய தாயார் மறுத்தே விட்டார். நேர்மையற்ற குடும்பத்தில் பெண்ணெடுத்தால் அது தலைமுறை அழிக்கும் என்று பேச வந்தவர்களுக்கும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார். இவ்வாறு அம்மா சொன்னதற்காகவே அவசரமாக பெரிய இடத்தில் மாப்பிளை எடுத்து திருமணம் செய்வித்தும் அனுப்பிவிட்டார்கள். எமக்கும் அழைப்பிதழ் வந்திருந்தது. அம்மா மட்டும் ஒப்புக்காக போய் வந்தார்.

இது நடந்து சில வருடங்களின் பின்னர் நண்பரின் திருமண புகைப்படம் முகநூலில் பகிரப்பட்ட போது பார்க்க கிடைத்திருந்தது. இக்காலப்பகுதியில் நான் இலங்கையில் இல்லை. வீட்டவர்களும் இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்திருந்தார்கள். எனவே அவர்களும் அழைத்திருக்கவில்லை. அல்லது எம்மை தவிர்த்திருந்தார்கள். இதற்கிடையில் நண்பனின் அம்மப்பாவின் இழப்பிற்கு குடும்பமாக போய் வந்தோம். நண்பன் தன்னுடைய துணையை எமக்கு இதன் போது அறிமுகம் செய்தார். பெண் இந்நாரின் மகள், …… ஆக இருக்கின்றார் என்றெல்லாம் புளுகாகவும் நக்கலாகவும் சொல்லியிருந்தார். வீட்டிற்கு வந்த பின்னர் எப்படி இவர்களால் இப்படியிருக்க முடிகின்றது என்று எமக்குள் பேசிக்கொண்டோம். ஆனால் அம்மா மட்டும் இன்னும் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. கடவுள் கணக்கு தப்பாது என்று விட்டார். நாமும் அப்படியெல்லாம் கடவுள் இருக்கின்றாரா என்று நாத்திக கேள்விகளையும் கேட்டிருந்தோம்.

நேற்று மட்டக்களப்பில் பட்டத்திருவிழா. வீட்டிலுள்ள குஞ்சான்களை கூட்டிப்போக திட்டமிட்டிருந்திருந்தோம். இடையில் கடையில் பொருட்கள் வாங்க இறங்கியிருந்தேன். கடைக்குள் என்னைக்கண்டு ஒரு உருவம் ஒளிப்பது போன்றிருந்தது. சும்மா நின்றிருந்தால் கூட கண்டுகொண்டிருக்க மாட்டேன் ஆனால் திடீரென தவிர்க்க முயன்றது தான் அவரைக் காட்டிக்கொடுத்தது. என் நண்பன். நன்றாக மெலிந்து தாடியுடன் கையில் சிகரெட். பார்க்கவே சகிக்கவில்லை. இனி கண்ட பின் முகந்திருப்புவது நாகரீகமில்லை என்று புன்னகைத்தேன். அவரே வலிய வந்து பேச தொடங்கினார். 

எப்படியிருக்கின்றீர்கள் என்று கேட்டேன். “ இப்போது விரிவுரையாளராக இருக்கின்றேன் என்றார். என்னது விரிவுரையாளர் இப்படி கோலமாகிவிட்டார் என்று கேட்டேன் நான். கடைக்கு வெளியில் நடந்துகொண்டே கொஞ்சம் வெளியே வாரும் என்றார். போனேன் “ என்ட வைப் என்னை விட்டுப்போய்விட்டா. வேறு ஒருவருடன் தொடர்பிருந்திருக்கின்றது. எனக்குத் தெரிந்து சண்டை போட்டேன். விவாகரத்தாகி விட்டது. பிள்ளையும் அவளிடம். இப்ப அண்மையில் வேறொருவரை திருமணம் செய்து வெளிநாடு போய்விட்டாள். தங்கச்சிக்கும் விவாகரத்தாகிவிட்டது. அந்தப்பொடியனுக்கு பலருடன் தொடர்பாம். அம்மாவும் நடக்க முடியாமல் வீட்டில் தான். நான் தான் அம்மாவை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இப்போது கடையில் தான் மூன்று வேளை சாப்பாடும்.  தங்கச்சியும் வேறொருவருடன் இருந்த புகைப்படங்கள் முகநூலில் வந்து எங்கட மானமே போய்விட்டது. சாகலாம் போலிருக்கின்றது ” என்றார். உண்மையில் இவ்வளவு நடந்திருந்தது எனக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் கோலம், சொன்ன விடயங்கள் கவலையாகவும் பரிதாபத்தினையும் ஒருங்கே தந்திருந்தது. அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்றும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. நல்ல காலம் சின்னன்கள் என்னை கூப்பிட தொடங்கிவிட்டார்கள். எனவே இதனை சாக்காக வைத்து விடைபெற்றுவிட்டேன். 

தீர்ப்புக்கள் பிந்தலாம் ஆனால் கிடைக்காமல் போவதில்லை. பெண் பாவம் எப்போதும் பொல்லாதது. நாம் சில நேரங்கள் ஆதாரங்கள் இல்லாத போது சத்தியத்திலிருந்து தப்பிவிட்டதாக நினைக்கின்றோம். கிடைக்கின்ற ஏற்றங்களை வைத்து சிறப்பாக வாழ்வதாக நினைக்கின்றோம். அல்லது நடிக்கின்றோம். ஆனால் நீதி நின்று சுடுவது. தலைமுறையழிக்கும் சக்தி அதற்குண்டு. சும்மாவா சொன்னார்கள் “தெய்வம் நின்றறுக்கும் என்று? ஒருவர் வருந்தி அழும் போது வழிகின்ற கண்ணீருக்கான சூடு தணிவதேயில்லை. 

வாகனத்தில் ஏறி சீட்பெல்ட் போடும் போது சின்னதுகள் மடியில் பாய முன்னிருந்த படம் இடிபட அதனை நிமிர்த்தினால் எம் குலச்சாமி படம். பல வருடங்களுக்கு முன் சத்தியத்தினை வாங்கிய சாமி. இறைவனும் காலமும் மிகப்பெரியன. அம்மா தீர்க்கதரிசி!


தயிரும் தமிழும்!

இப்போது கொளுத்துகின்ற வெயிலுக்கு மிகவும் சிறந்ததொரு உணவு இந்த தயிர். பசு எப்படி கோமாதாவோ அப்படி அதன் பாலும் பல்வேறு நிலைகளிலும் பயன்படுகின்றதொரு பதார்தம்.  பாலை குடிக்கலாம். நன்றாக காய்ச்சி உறையிட்டால் தயிராக்கலாம், தயிறை மோராக உப்பு காரம் சேர்த்தும் பருகலாம், நெய்யாக்கலாம். இப்படி பாலின் பயன்கள் நீண்டுகொண்டே செல்லும். 

சிறுவயதிலிருந்தே என்னுடைய கல்வித்துறை தவிர்ந்து எனக்கிருந்த கனவுகளில் ஒன்று மாடு வளர்ப்பது. என்னளவில் யாருக்காவது ஒரு பசு மாடு இருந்தால் அவன் தான் பணக்காரன் என்பேன். அந்தளவு வீட்டிற்கு மாடு என்பது செல்வங்களுள் சேர்த்தியாகின்றது. நான் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே என்னுடைய தாயாருக்கு சுவாதக்குணம் ஏற்பட்டு விட்டதால் பால் சுரப்பில் மாற்றம் ஏற்பட்டதுடன் அம்மாவிற்கு வைத்தியம் செய்ய வேண்டியிருந்ததால் குழந்தைக்கு பாலூட்டுவதை வைத்தியர் தவிர்க்க சொல்லிவிட்டாராம். இதனால் தாய்ப்பாலுக்கு நிகராக பசுப்பால் கொடுக்க சொல்லியிருக்கின்றார்கள. மற்றவர்களிடம் பால் வாங்குவதை விட நம் வீட்டிலேயே பசு இருந்தால் கலப்படமற்ற பால் கிடைக்கும் என வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது தான் எம்முடைய பசு லட்சுமி. லட்சுமிக்கும் ஒரு கன்று என் வயதில் இருந்தது அதற்கு சீதா என்று பெயர். இரு மாதங்களிலேயே தாய்ப்பால் நிறுத்தப்பட்டு நான் இரு வயது வரை குடித்தது லட்சுமியின் பால் தான். எனவே எனக்கு லட்சுமியும் ஒரு தாய் தான். சிறுவயது முதலே நான் கொழுமொழு என்று இருக்கின்றேன் என்றால் லட்சுமியம்மா தான் முக்கிய காரணம். சிறு வயதில் சில வேளைகளில் அம்மாவின் பெயரென்ன என்று கேட்டால் லட்சுமி என்றும் நான் சொல்வதுண்டாம். ஆனால் பெரியவளாகிய பின் நளினியுடன் முரண்பட்டு விட்டால் நீங்கள் என் அம்மா இல்லையே என்னுடைய அம்மாவின் பெயர் லட்சுமி என்றும் நான் கூறிக்கொள்வதுண்டு. 

இன்னுமொரு ஒற்றுமையும் உண்டு. என்னுடைய பெயரான கேஷாயினி வடஇந்தியாவில் புழக்கத்திலுள்ளதொரு பெயர். இப்பெயர் பார்வதியினை குறிக்கின்றதாம். என் பெயரின் சொற்பிரிப்பும் சக்தி நிறைந்தவள் என்பதை குறிக்குமாம். இந்தப்பெயரில் பல சுலோகங்களும் உண்டு. இப்போது கோர்த்துப்பாருங்கள். லட்சுமி, பார்வதி என்று தொடர்பிருப்பது புரியும்.  எனவே இதில் ஆரம்பித்து மாடு வளர்பில் ஆர்வம் ஏற்பட்டு. இன்று பண்ணையில் பால் உற்பத்தி செய்யப்படுகின்றதுடன் தயிர், நெய் தயாரிப்புகளையும் நாம் மேற்கொள்கின்றோம். போதாதற்கு மட்டக்களப்பார்கள் உணவில் தயிரின் பங்கு உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரும்பாலும் மதிய உணவின் பின்னர் தயிர் சாப்பிடுவது என்பது எம் ஊரின் மரபும் கூட.  

வீட்டில் பானையில் தான் தயிர் உறையிடப்படும். நானிருக்கும் நேரங்களில் அப்படியே தயிராடையை எடுத்து சீனியும் கொஞ்சம் உப்பும் போட்டு சாப்பிடுவதுண்டு....... ம்ம்ம்ம் அமிர்தம். அநேகமான நாட்களில் உணவின் பின்னர் அம்மா சோற்றுடன் தயிர் போட்டு பிசைந்து அனைவருக்கும் ஊட்டிவிடுவதுமுண்டு. வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் போகும் போது தயிர்ப்பானையும் கொடுத்துவிடுவதுண்டு. இதுவும் மட்டக்களப்பாரின் விருந்தோம்பலின் மரபாகும்.

சிலநேரங்களில் நான் தயிராடையில் கொஞ்சம் முகத்தில் பூசிக்கொள்வதும் உண்டு. பூசி ஒரு மணிநேரத்தின் பின்னர் இளஞ்சுட்டு நீரில் முகத்தினை கழுவிப்பாருங்கள் முகம் அவ்வளவு தெளிவாயிருக்கும்.  நிறைவுணவான தயிரும் தமிழரின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். இதற்கு பல இலக்கிய சான்றுகளுமுள்ளன.

ஆகக் குறைந்தது 4500 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் தயிரின் பயன்பாடு தொடங்கிவிட்டதாகவும் இயற்கையான நுண்ணுயிரிகளால் தயிரானது நொதிபட்டிருக்கலாம் என்பதுவும் உலகளாவிய பொதுக் கருத்துகள். அதே வேளை சிந்துவெளி நாகரிகம் சிறப்புற்றிருக்கும் போதே, பாற் பொருட்கள் சிந்துவெளி மக்களின் உணவில் முகன்மை வகித்தது பற்றியும் ஏராளமான சான்றுகளுண்டு. சிந்துவெளி மக்களின் முதன்மையான உணவுகளாக இறைச்சியும் பாற்பொருட்களுமே இருந்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றன {Akshyeta Suryanarayan et al. 2021. Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India. Journal of Archaeological Science }. இவை எல்லாம் ஆரியர்களும் அவர்களது சமஸ்கிரத மொழியும் இன்றைய இந்திய நிலப்பரப்புக்கு வருவதற்கு முன் நடந்தவையாகும். 
 
சங்காலப் பாடல்களிலேயே தயிருக்கான சான்றுகளுண்டு. 
  • தயிர் செய்யும் முறை உவமையாகக் கூறப்பட்டிருப்பதனை புறநானூறு 276 வது பாடலில் "குட பால் சில் உறை போல"  என்கின்ற வரிகள் உறைமோர் ஒரு துளி எவ்வாறு பாலின் தன்மையினையே மாற்றுகின்றது `என்பது பற்றியே குறிப்பிடுகின்றது. 
  • "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" (குறுந்தொகை 167 :1 பாடல்)  தயிர்   என்கின்ற சொல்லாடலிலேயே குறிப்பிடுகின்றது 
"செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து" (புறநா 119:3) ஈசலைத் தயிருடன் போட்டுக் கிளறி, உருவாக்கப்பட்ட உணவு பற்றி புறநானுறில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு பழந் தமிழ் இலக்கியச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.                                      
 
 `தயிர்` என்பது `தை` என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது என்பது அறிஞரின் கருத்து. முள் தைப்பது போல (முள் குத்துவது போல) பிரைமோர் (உறைமோர்) பாலினைத் தைப்பதால் ஏற்பட்ட பெயராகும். இங்கு `பிரைகுத்துதல்` / ``உறைமோர் குத்துதல்` எனப் பாலில் உறைமோர் கலக்கும் செயலினைக் கூறுவதனை உற்று நோக்குக {குத்துதல் =தைத்தல்}.

தை> தயி > தயிர் எனவே `தயிர்` என்பது தமிழிலேயே வேர்ச்சொல்லினைக் கொண்ட தமிழ்ச் சொல்லே! வேண்டுமானால் தயிரிலிருந்து `ததி` என்ற சமஸ்கிரதச் சொல்லும் பின் அதன் வழி `தஹி` என்ற இந்திச் சொல்லும் வந்திருக்கலாம். 
 
தயிருக்கான பால் பசுவிலிருந்தும் எருமை மாட்டிலிருந்தும் எடுக்கப்படுவதண்டு. இரண்டுக்கும் கெட்டித்ன்மை மற்றும் மணத்தில் தான் வித்தியாசம் காணப்படும். பாரம்பரியமான இந்த தயிர் உடல் சூட்டினையும் தணிக்கின்றதானதொரு உணவு. மட்டக்களப்பில் திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல், சாவீட்டின் சடங்கு என்பவற்றிலெல்லாம் தயிருக்கு இடமுண்டு. கோயில் நிகழ்வுகளிலும் தயிர்த்தண்ணி கொடுக்கும் வழக்கத்தை மட்டக்களப்பின் பெரும்பாலான இடங்களில் காணலாம். அதிலும் மட்டக்களப்பு படுவான்கரைத் தயிருக்கு நிகர் வேறில்லை. 
 
சுத்தமான தயிர் வேண்டுமென்றால் என்னுடைய மண்ணுக்கு வாருங்கள்.  ஆனாலொன்று நல்லா தயிரை வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்து நடக்கமுடியாமல் சுருண்டு படுத்து விட்டு நாம் தான் பாயோடு ஒட்ட வைத்தோம் என்று மட்டும் சொல்க்கூடாது. 

அவர்கள் அப்படித்தான்......

எப்போதுமே என் வீட்டவர்கள் எனக்கு சொல்கின்ற அல்லது எச்சரிக்கின்ற விடயங்களுள் ஒன்று நான் சில நேரங்களில் மிகவும் பரிதாபப்பட்டு ஒருவரிடம் இரக்கம் காட்டுவது, இரண்டாவது யாரோடாவது முரண்பட்டுவிட்டால் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காமலிருப்பது. ஆனால் இதற்கு பின் நம்முடைய சுயகௌரவம் தாக்கப்படும் போது என்ன செய்வது.........?  எதிரிகள் கூட அருகில் இருக்கும் போது கடந்த சில தினங்களில் நான் என்றுமில்லாதவாறு நான்கு பேரை எல்லா தளத்திலிருந்தும்  Block செய்துள்ளேன். 

ஒருவர் அனாவசியமாக விளக்குப்பிடிக்கும் வேலை செய்பவர். இந்தாளுக்கு வேலையே முகநூலில் கம்பு சுழற்றுவது தான். தான் சுழற்றிக்கொண்டிருந்தால் பரவாயில்லை தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டது தான் என்னுடைய பிரச்சினை. இந்த அக்காவிற்கு வேலையே இது தான் போல. அதாவது வெங்காய கூட்டிற்கு காற்றடிப்பது. ஆனால் எனக்கு இதற்கு நேரமுமில்லை. சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்ள விருப்பமுமில்லை. ஏற்கனவே இவரால் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட குழப்பங்கள் போதுமானது. இவற்றினை விட முக்கியமானது தன்னுடைய மனதைப்போல் அடுத்தவர் மனதையும் கரும்பலகை என நினைப்பது. அதாவது ஒருவரை நினைப்பது அழித்து மாற்றுவது பிறகொன்றினை மறுபடி எழுதுவது ... அழிப்பது. இது நியாயமான இல்லையா என்பது அவரவர் மனதை பொறுத்தது. ஆனால் நாம் மாற்றி மாற்றி எழுதுகின்றோம் என்பதற்காக மற்றவர்களை அவ்வாறு எதிர்பார்ப்பதும் அனாவசியமான தூதுவிடும் படலம் விடுவதற்கும் நான் ஆளில்லை. 

இதே ஆள் போன வருடம் செய்த கலகமே இன்னும் முடியவில்லை. புதிதாக ஒருவரை இதில் இழுத்துவிட்டு புறா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்தாளும் எனக்கு கறுப்பு பிடிக்கும் எனும் காரணத்தினால் தன்னுடைய புரைபைல் முதல் இன்ஸ்ரா போட்டோ வரை கறுப்பு வெள்ளையில் படங்களை போடுகின்றார். காலையில் வணக்கம் அனுப்புகின்றார். இடைக்கிடை சாப்பிட்டீங்களா என்று அக்கறை வேறு. போதாதற்கு பைபிள் வசனங்கள் வேறு.... இதற்கு காரணம் இந்த வெண்புறா தான். இதற்கு என்னவர் பற்றியும் நன்றாக தெரியும். தெரிந்தும் நேர்மையில்லாமல் நடந்தால் என்ன செய்வது? தினம் தினம் எத்தனை ஆண்களை கடக்கின்றோம் அத்தனை ஆண்களிடமுமா மனம் இலயித்துப்போகும். நாலைந்து தடவை அக்காவிடமும் சொல்லிப்பார்த்தாகிற்கு. தொடந்ததால் Block செய்தாகிற்று! 

வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் சிலர் நம் இதயத்திற்கு நெருக்கமானவர்களாக மாறுகிறார்கள். ஆனால், எல்லா உறவுகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. குறிப்பாக, ஒரு உறவில் நம்முடைய சுயமரியாதை (Self-respect) கேள்விக்குறியாகும் போது, அந்த உறவின் தன்மையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

"யாரோ ஒருவரின் ஓய்வு நேரத்தில் உன் இருப்பைத் தேடாதே" என்ற வரி, உறவுகளில் நிலவும் கசப்பான உண்மையை உணர்த்துகிறது. சிலர் தங்களுக்கு வேலை இருக்கும்போது நம்மை மறந்துவிடுவார்கள், ஆனால் அவர்களுக்கு சலிப்புத் தட்டும் போதோ அல்லது பொழுது போகாத போதோ மட்டும் நம்மைத் தேடி வருவார்கள். ​நாம் ஒருவருக்கு "முன்னுரிமையாக" இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் "ஓய்வு நேரக் கருவியாக" இருக்கக் கூடாது. நம்முடைய நேரமும் உணர்வுகளும் விலைமதிப்பற்றவை என்பதை நாம் உணர வேண்டும்.
​"யாரும் இல்லாத போது வரும் அழைப்பிற்குப் பதில் சொல்லாதே.." என்பது ஒரு எச்சரிக்கை மணி. ஒருவருக்குத் தேவைப்படும்போது மட்டும் நாம் நினைவுக்கு வருவது அன்பல்ல, அது சுயநலம். சுற்றியுள்ள அனைவரும் சென்ற பிறகு, வேறு வழியின்றி நம்மைத் தேடி வருபவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. ஒருவர் நம்மை ஒரு Choice ஆக வைத்திருக்கும்போது, நாம் அவர்களை நம்முடைய "உலகமாக" கருதுவது முட்டாள்தனம். இது காலப்போக்கில் நம் மன அமைதியைக் குலைத்து, நம் மதிப்பைக் குறைத்துவிடும். அன்பு என்பது இருபக்கமும் சமமாக இருக்க வேண்டும். நம்மை மதிக்காத இடத்தில் நாம் இருப்பது, நமக்கே நாம் செய்யும் துரோகம். நம்மைத் தேடி வராதவர்களுக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும், நம்மை மதிப்பவர்களுக்காகவும், நம்முடைய சுய முன்னேற்றத்திற்காகவும் நேரத்தைச் செலவிடுவது சிறந்தது. உறவுகளை விடவும் மேலானது ஒரு மனிதனின் சுயமரியாதை. நம்மை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களிடம் இருந்து விலகி நிற்பதே நமக்குப் பெருமை. நானும் விலகித்தான் போனேன். எதுவும் இருக்கும் போது தெரிவதை விடவும் இழக்கும் போது தானே சிலருக்கு புரிகின்றது. 1360 நாட்கள் புரியாத அன்பு கடந்த 240 நாட்களுக்குள் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் பாருங்கள் எனக்கு இப்போது தான் உலகம் புரிய ஆரம்பித்திருக்கின்றது. 
 
​"உன்னைத் தேடுபவர்களுக்கு உயிராக இரு; உன்னைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு அந்நியனாக இரு" என நாமும் அடுத்தவரை காயப்படுத்த கூடாது என்று விலகி மௌனமாக நடந்தால் அதற்கு பயம் என்று அர்த்தமல்ல. ஆலமரத்தினை விடவும் நாணல் உறுதியானது. இனி பேசிப்பயனில்லை Block பண்ணியாகிட்டு!
 
என்னைச் சூழ எத்தனை ஆண்கள் இருக்கின்றார்கள். எனக்கு தொழில்ரீதியான, குடும்ப ரீதியான, கருத்தியல் ரீதியான எதிரிகளும் இதற்குள் அடங்குகின்றார்கள். ஆனால் இதுவரை என் ஒழுக்கத்தினை அல்லது சுயத்தினை எந்த ஆணும் விமர்சித்தில்லை. அந்தளவு நேர்மை என்னிடமுள்ளது என நான் நினைக்கின்றேன். அதே போன்று யாரும் அனாவசியமான அல்லது நெருக்கமான கதைகள் என்னிடம் பேசுவதில்லை. என் தொலைபேசியை பொதுவில் வைக்குமளவு அல்லது  Chat ஐ அழிக்க வேண்டிய தேவையில்லாதளவு தான் என் சமூக ஊடக உறவுகளுண்டு. 
 
ஆனால் ஒரு பிள்ளை கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட நபர் தன்னிடம் வழிவதை அடிக்கடி எனக்கு படம்பிடித்து போட ஆரம்பித்தது. என்னிடம் இப்படியொருவர் பேசுவதற்கு முதலில் தைரியம் வேண்டும். அப்படியே பேசினால் அவர் எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் நீக்கிவிடுவேன். வழிஞ்சல்களுடன் நமக்கு என்ன தேவையுள்ளது.? ஆனால் இந்தாள் தன்னிடம் அவர் வழிவதை போன்று அந்த குறிப்பிட்ட நபர் வழியும் ஆட்களிடமிருந்தெல்லாம் Screen Shots சேமித்து எனக்கு அனுப்ப தொடங்கியது. 

முதலில் ஆலோசனை செய்து அவரை நீக்கும் படி சொன்னேன். கேட்கவில்லை. அப்படியே தொடர்ந்தால் நீங்கள் தொடருங்கள் எனக்கு அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. அந்த "வழிஞ்சலும்" சும்மா ஆளில்லை. 10, 11 மணிக்குத்தான் அண்ணன் நெளிவு சுழிவு பற்றியெல்லாம் பேசியிருக்கின்றார். அவ்வளவு பாலியல் வறட்சி. தராதரம் தெரியாமல் எல்லோரிடமும் கடலை தான். சரி ஏதாவது செய்து தொலையுங்கள் என்னை இழுத்துவிட வேண்டாம் என்று சொன்னாலும் அந்த பிள்ளையும் கேட்பதாயில்லை. நான்கு தினங்களுக்கு முன்னரும் வழிஞ்சல் நெளிப்பு பற்றி பேச அதை எனக்கு அனுப்ப.... அந்த அழகியையும் Block பண்ணியாச்சு 
 
நாம் குறிப்பிட்ட பதின்மவயதில் எதிர்பால் கவர்ச்சியில் எதிர்பாலாரிடம் கடலை போட்டிருப்போம். அப்படி போடவில்லை என்றால் நமக்கு ஹோமோன் வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம். அதன் பின்னர் இருபதில் ஈர்ப்பு வந்திருக்கும். அதேவேளை பல்கலைக்கழகம், பணி என்று பலரை கடக்கும் போது ஒரு நிதானம் நம்மில் வந்திருக்க வேண்டும். அதிலும் 25 க்கு பின்னரும் கண்டவர்களிடமெல்லாம் சுணங்குகின்றோம் என்றால் நாம் என்ன தெருநாய் வகையா? உறவு நேர்மை வேண்டாமா? 
 
ஒரு பிள்ளை போட்டோ போட்டால் போதும். அந்த போட்டோக்கு பொதுவெளியில் பதிலளித்தால் நீங்கள் நேர்மையாளர். உள்பெட்டியில் போய் நெஞ்சை நக்குவதெல்லாம் தெரு நாய்க்குணம். அதுவுமில்லாமல் பொதுவில் "நல்லவர்" உள் பெட்டிக்குள் பேசி தண்ணி கழட்டுவதெல்லாம் என்னளவில் சைக்கோதனம். அப்டியொரு தேவையிருந்தால் யாராவது ஒருவரை தேர்ந்து வாழ்வது தானே. இப்படியானவர்கள் நிச்சயம் பிறப்பில் அல்லது வளர்ப்பில் தான் இதனை கற்றிருப்பார்கள். நன்றாக ஆராய்ந்தால் இதனை கண்டுபிடிக்கலாம்.  
 
இப்படியான சைக்கோக்கள் தர்மம் எல்லாம் பார்ப்பதில்லை. தராதரம் பார்ப்பதில்லை. யாரு? எவர்? பொருத்தமா? நேர்மையான உறவா? எதுவும் கிடையாது. அப்படியென்ன இருந்திடப்போகின்றது. பெண்ணென்றால இரு முலைகள் , பெண்ணுறுப்பு. ஆணென்றால் குறி. அவ்வளவு தான் வாழ்க்கை. என்ன நிறம் அளவில் தான் மாற்றம். 

இந்த தெளிவும் நிதானமும் இல்லாமல் பொதுவாழ்க்கையில் முட்டையில் முடி பிடுங்கி என்ன பயன்?  இவ்வாறான நேர்மையற்ற தொடர்பிருப்பவர்கள் நாளை ஒரு உறவு நிலையில் மட்டும் நேர்மையாகவா இருந்திடப்போகின்றார்கள். வாழ்க்கைத்துணை இருக்கும் போதே இவர்கள் அடுத்தவர்களிடம் போனாலும் வியர்ப்பிருக்காது.  இப்படி நேர்மையற்று இருக்க போகும் உறவிற்காகவா இவ்வளவும்? Block பண்ணியாகிட்டு...! ஆனால் ஏதோவொரு புள்ளியில் இது வலிக்காமலில்லை 
 
மனிதர்களையும் அவர் தம் குணங்களையும் காலம் உணர்த்திப்போகின்றது!   
 

பதிவுகள்

நேர்கோடு வட்டமாகலாம்!

எங்களது தலைமுறை ஒரு வகையில் மிகவும் முரண்பட்ட மனநிலையுடையதொன்று. நாங்கள்  வாழ்ந்த போரியல் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று எம்...

அதிகம் பார்க்கப்பட்டவை