எனக்கு மிகவும் குழப்பமாக விடயம் இது தான். ஏன் ஒரு வீட்டில் பெண் விஞ்ஞானியாகவே இருந்தாலும் சமைக்கும் போது கேள்வி கேட்காத இந்த அழுமந்த சமூகம் அப்பெண் பொதுவெளியில் கரண்டியை கையிலெடுக்கும் போது பேந்த பேந்த விழித்தபடி பார்க்கின்றது என்பது தான். என்னைப் பொறுத்தளவில் சமைத்தல் என்பதும் கலையின் ஒரு வடிவமே. எப்படி கலையை குறிப்பிட்டவர்கள் மட்டும் தம்முடைய தொடர் முயற்சிகளால் தம் வசப்படுத்திக்கொள்கின்றார்களோ அதேபோன்று தான் சமையலும் தொடர் பயிற்சியினால் நம்மிடம் வசப்பட்டு விடுகின்றதானதொரு கலை. என் நினைவறிந்து நான் சிறுவயதிலேயே நேசிக்கத்தொடங்கிவிட்டதொரு விடயம் இந்த சமையல். பல பெண்களுக்கு சமையல் ஒரு வகையில் அவர்களை அடக்கி குசினிக்குள் வைக்க சமூகம் வைத்துள்ள சாட்டை. வீட்டில் சமைக்கும் போது அவளுக்கு கிடைக்காத அங்கீகாரம் அதுவே ஓர் ஆண் தன்னுடைய தொழிலாக சமையலை கையிலெடுக்கும் போது உயர்வாகவும் பெறுமதிமிக்கதுமான தொழிலாக பார்க்கப்படுகின்றது.
என்னை பொறுத்தளவில் சமையல் மீதான என் காதல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அது சிறுவயதிலேயே என்னை பற்றிக்கொண்டதொரு விடயம். இந்த பிளாஸ்டிக் துவக்கு, பொம்மைகள் வைத்து விளையாடும் காலத்திலேயே குட்டி குட்டி பாத்திரங்களில் “இது சோறு…. இது கறி என்று…” கற்பனை சமையலுக்குள் நுழைந்தவிட்ட ஆள் நான். பிறகு கொஞ்சம் வளர்ந்த பின்னர் சிரட்டைகளில் ஈரமண்ணை நிரப்பி அதனை பலகைகளில் பரப்பி இது கேக் என்று வீட்டில் பூத்திருந்த பூக்களை வைத்து அலங்காரம் செய்தவள்.செங்கல்லை அரைத்து கொச்சிக்காய் தூள் தயாரித்தவள்.
அதற்கும் பிறகு வீட்டில் சமையல் நடக்கும் போது கெஞ்சி, அடம்பிடித்து கொஞ்சம் அரிசி, ஒரு வெங்காயம், கொஞ்சம் பச்சகொச்சிக்காய், ஒரு பிடி பருப்பு என்று வாங்கி குட்டி மண் சட்டிகளில் பல மணித்தியாலங்கள் மெனக்கெட்டு சமைத்து, அதை புளுகுடன் வீட்டாக்களுக்கு கொடுத்து அழிச்சாட்டியம் பண்ணியவள். இந்தக் காலத்தில் மாமாங்கம் தொடங்கினால் என் அழிசாட்டியங்களும் ஆரம்பித்துவிடும். சின்ன சின்ன மண் சட்டிகள், ஒரு பானை என அடுக்கி ஒரு தூக்கில் கோர்த்து மாமாங்கத்தில் விற்பதுண்டு. பூந்தியும் இந்த மண்சட்டி கோர்வையும் இல்லாட்டி எனக்கு மாமாங்கம் என்பதே இல்லை. மாமாங்க பிள்ளையாரை கும்பிடுவதோ அல்லது மாமாங்க கீரை வாங்குவதோ இரண்டாம்பட்சம் தான். இது குறித்த சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு.
ஒரு முறை பாடசாலை பரீட்சை காரணமாக எம்மை மாமாங்கம் கூட்டி போகவில்லை. அம்மாவிடம் கூட்டிப்போகும் படி அழுததற்கு தீர்த்தம் அன்று கட்டாயமாக கூட்டிப்போவதாக வாக்களித்து விட்டார் அம்மா. கடைசி நாள் தீர்த்தமன்று காலையிலேயே என் குட்டிச்சட்டி கற்பனைகள் ஆரம்பமாகிவிட்டது. அங்கு மாமாங்கம் போய் பார்த்தால் கீழே விழுந்த பொருட்களை கூட குனிந்து பொறுக்க முடியாதளவு சனக்கூட்டம். “பிறகு வாங்கித்தாறேனே மகள்…” என்று அம்மா என்னைப்பார்த்து கேட்க எனக்குள் இருந்த பிடிவாதம் விடவில்லை. இல்லை வாங்கித்தாருங்கள் என ஒரே பிடியில் அழத்தொடங்கினேன். என் அரியண்டம் பொறுக்க முடியாமல் கூட வந்த அனைவரையும் மாமாங்க கோவில் மரத்தடியில் அமர்த்திவிட்டு என் கைகளை பற்றி அம்மாவும் நானும் கூட்டத்தில் நீந்த ஆரம்பித்தோம். ஒரு மாதிரியாக முட்டி மோதி சட்டி பானை விற்கும் அம்மாவின் கடையில் ஒரு தூக்கு சட்டி வாங்கி மீண்டும் சன நெரிசலில் நீந்தி கரைசேர்ந்து பார்த்தால் கையில் இரு சட்டி மட்டும் தான் எஞ்சியிருந்தது. மீண்டும் அழுத்தொடங்க அம்மா பத்ரகாளி அவதாரமெடுத்து முதுகில் போட்ட அடியில் வீடு வந்தும் நான் அழுகையை நிறுத்தவில்லை. சும்மாவே முகம் குண்டாக கொழுக்கட்டை மாதிரித்தான் இருப்பதுண்டு. இதில் தொடர் அழுகையால் முகம் மாப்பிள்ளை கொழுக்கட்டையாகவே ஆகிவிட்டது. போதாதற்கு சாப்பிடாமல் வேறு பிடிவாதம் பிடிக்க கடைசியில் சந்தையடிக்கு போய் சட்டிகள் வாங்கிவரப்பட்டது. சந்தையில் கூட குட்டி சட்டிகள் வாங்கலாம் என்பது அன்று தான் எனக்கும் தெரியவந்தது. இப்படியொரு வழியிருக்கின்றதென்றால் ஏன் மாமாங்கம் ஆவணியில் வரும் வரை காத்திருந்தோம் என்று அப்போது தான் யோசித்தேன்.
இப்படி சமையலை மண், கூட்டான் சோறு என்று விரிவுபடுத்திக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் அம்மா வேலை விடயமாக வெளியில் போக அன்றன்று பார்த்து சமையல் செய்யும் ஆளும் வராமல் போக உண்மையாகவே கரண்டியை கையில் எடுக்க வேண்டியதாகிட்டு. முதன் முதலாக என்ன சமைத்தேன் என்பது இன்றுவரை எனக்கு நினைவுண்டு. சோறு, பருப்பு வெள்ளைக்கறி, டின் மீன் குழம்பு, சொதி, பப்படம் என்பன தான் என் முதல் சமையல் cuisine ஐ என் சகோதரன்களும் விரும்பி உண்ண அன்றிலிருந்து ஆரம்பமாகிது என் வித்தைகள். இப்படி வீட்டில் வித்தைகள் காட்டிக்கொண்டு பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் தான் சமையல் Suprime Chef வாய்ப்பு என் வீட்டுக்கதவை flyer வடிவில் தட்டியது. சும்மா கலந்துகொண்டு பார்ப்போமே என்று ஆரம்பித்த இந்த பயணம் இறுதியில் மேடை வரை கொண்டு வந்துவிட்டது. இதில் பல Chef களை சந்திக்கவும் அவர்களுடன் சமையல் குறிப்புகளை கலந்துரையாடவும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் Chef பீற்றர் குருவிட்ட. சிறுவயதில் தன்னுடைய பாட்டியிடம் பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட வேளையில் அவர் மூலமாக தன் சமையல் கலைக்கான முதற்படி ஆரம்பிக்கப்பட்டதாக அடிக்கடி கூறுவார். தன்னுடைய பாட்டியின் பெயரில் சோஸ் ஒன்றும் வைத்துள்ளார்.
அடுத்தது சமையல் பெண்ணுக்கானது அவள் கடமை என்பதை உங்கள் சிந்தையிலிருந்து அகற்றுங்கள். யாரால் ஒருவருக்கு வயிறார உணவளிக்க முடியுமோ அவர்கள் இக்கலையை வீட்டிலும் சரி தொழிலாகவும் சரி தொடரலாம். எனக்கு என் வருங்கால குசினி குறித்த கனவும் உண்டு. அது நிச்சயம் “Grate India Kitchen” போன்று ஆணாதிக்க சிந்தை நிறைந்ததாக இருக்காது என நம்புகின்றேன். பாரம்பரிய மற்றும் நவீன உபகரணங்கள் உள்ளடக்கியதாக என்னால் வடிவமைக்கப்படும். எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் நிச்சயம் ஏதாவது சாப்பிட்டுவிட்டே போகவேண்டும் எனும் எழுதாத விதி வைக்கப்படும்.
எனக்கு என் வாழ்க்கைத்துணை நன்றாக உண்பவராக , உணவின் இரசிகராகவிருக்க வேண்டும். இந்த துணைவி சமைத்துக்கொடுப்பதை உண்டு கொஞ்சம் தொந்தி வைக்க வேண்டும். ஆனால் ஒன்று எல்லாம் எல்லோராலும் முடிவதில்லை என்பதற்கிணங்க எனக்கு எவ்வளவு முயன்றும் பாயாசமும், உளுந்து வடையும் இன்னும் வசப்படவில்லை. ஆயக்கலை 64 யும் கூட பிரயோகித்துப்பார்த்து விட்டேன். ஆக என் துணைவருக்கு இது இரண்டும் பிடித்திருக்க கூடாது இறைவா என்பதே என் வேண்டல். மற்றும் படி மஞ்சள், உப்பு , மிளகு போன்றவற்றுடன் சற்றே அன்பினையும் தூவி நமக்கானவர்களுக்காக சமைக்கும் போது அது அமிர்தமாகிவிடாதா என்ன? சரி நண்பர்களே உங்களுக்கெல்லாம் என்ன சமையல் பிடிக்கும்?


No comments:
Post a Comment