எள்ளென்றால் எண்ணெய்யாக.....
எள்ளு காயுதென்று எலிப்பிழுக்கையும் காயுது.....
எள்ளவு சந்தேகம்....
எள்ளவும் குறையாது..
எள்ளுக்குள் எண்ணெய்
எள்ளென்றாலும் ஏழாய் பிரித்து....
என எள் குறித்து தமிழ் சொற்றொடர்கள் பலவுள்ளன எள் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய எண்ணெய் விதை. இது தமிழர்களின் உணவிலும், மருந்திலும் முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவம் முறையில் எள் முக்கிய மருந்துப் பொருளாக கருதப்படுகிறது. அத்துடன் எம்முடைய சமய சடங்கு முறைகளிலும் எள் எரித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுவதில் இருந்து எள்ளுக்கான புனிதத்தன்மையும் கவனிக்கப்படத்தக்கது.
எள்ளில் உள்ள சத்துக்கள் (Nutritional Value)
- கால்சியம் 🦴 → எலும்பு வலிமைக்கு
- இரும்புச் சத்து 🩸 → இரத்த சோகை தவிர்க்க
- மெக்னீசியம் & பாஸ்பரஸ் → நரம்பு மற்றும் தசை செயல்பாடு
- நார்ச்சத்து (Fiber) → செரிமானம் மேம்பாடு
- சத்தான கொழுப்பு (Healthy fats) → இதய ஆரோக்கியம்
- புரதம் (Protein) → உடல் வளர்ச்சி
எள் குறித்து இலக்கியங்களில் இருந்து சில மேற்கோள்கள் வருமாறு
“எள் நிறைந்த நெய் ஒத்து நின்றானை
நீல மிடற்றானை என் கை ஒத்து நேர் கூப்புக”
- புறப்பொருள் வெண்பாமாலை
“எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே”
“எள் உண் உயிர் வளரும்”
சித்தர் தத்துவ உவமை இலிருந்து
“எள் உண்டால் எலும்பு வளரும்,
உடம்புக்கு ஊக்கம் தரும்”
“எள் எண்ணெய் தலையில் தேய்த்தால்
வாதம் தணியும், சூடு குறையும்”
“எள்ளும் வெல்லமும் சேர்ந்தால்
இரத்தம் பெருகும், பலம் பெருகும்”
“எள்ளினுள் எண்ணெய் போல்
உள்ளினுள் உயிர் ஒளி”
எனக்கு மிகவும் பிடித்ததொரு உணவு எள்ளுருண்டை. அதுவும் கருப்பெள் உருண்டை. இதில் எனக்கு மோகம் ஏற்பட காரணம் என்னுடைய மாமியார் தான். எனது பெற்றோரின் திருமணத்தால் பிரிந்திருந்த யாழ்- மட்டு உறவு மீளுயிர் பெற்றது நான் சாமர்த்தியப்பட்ட நேரம் தான். எப்படியோ விசயம் அறிந்து என்னுடைய யாழ்ப்பாண மாமியார் எம் வீட்டை தேடிக்கண்டுபிடித்து வந்துவிட்டார்கள். வாசலில் வந்து நிற்கும் ஒருவரை வரவேற்பது தானே முறை. கோபதாபங்கள் மனதில் இருந்தாலும் இரு கட்சிக்காரர்களும் மேம்போக்காக சரி வரவேற்க அறையினுள் இருத்தி வைக்கப்பட்டிருந்த என்னை மாமி வந்து பார்த்தது நல்லெண்ணெய் போத்தல், எள்ளுருண்டை சகிதம் தான். அன்றிலிருந்து நல்லெண்ணெய்யில் வதக்கிய கத்தரிக்காய், நல்லெண்ணெய்யில் பொரித்த ஊர்முட்டை, நல்லெண்ணெய் புட்டு, எள்ளுருண்டை என என்னை பாடாய்படுத்திவிட்டார்கள். இப்படி உறவுக்குள் பாலம் போட எள்ளும் இருந்திருந்தது
தலையில் எண்ணெய் தேய்த்து உலாத்தும் போது அது வழிந்து கண்ணில்பட்டு எரிச்சல் மூட்டுவதுமுண்டு. அடுத்தது அவ்வாறு எண்ணெய்யில் விழுந்த எலி மாதிரி இருக்கும் போது "ஒராள் கருப்பாகப்போறா... கருப்பி " என்று என் சகோதரன்கள் என்னை சீண்டுவதுண்டு. உடனே மாமி "பரவாயில்லை நல்லெண்ணெய் கருப்பன் என்ட பிள்ளைக்கு கிடைப்பான்..." என்று பதிலளிப்பா... எங்கடா இருக்கிற (என்) நல்லலெண்ண கருப்பா.....


No comments:
Post a Comment