பொதுவான திருமணம் பேசப்பட்டு அச்சடங்கு நடைபெறும் வரை இணையர்களுக்கு கொடுக்கப்படுகின்ற காலம் இருக்கின்றதே இது அலாதியானது. இருவர் நட்பிலிருந்து பின் காதல் செய்யும் போது ஓரளவாவது ஒரவரையொருவர் புரிந்திருப்பார்கள், அல்லது தெரிந்துவைத்திருப்பார்கள். ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் இதற்கான அவகாசம் இருப்பதில்லை. ஆனால் சிலருக்கு படிப்பு, குடும்ப நிலையை முன்னிருந்தி சிலநேரங்களில் இவ்வதிஷ்டம் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட இருவரின் கதையிது. இனம், சாதி, குடும்ப நிலை, படிப்பு, பதவி என்று நீண்ட வரிசையான விடயங்கள் ஒப்பிட்டு பார்த்து இருவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஜாதகம் பார்த்த சோதிடர் கூட ஆபூர்;வ பொருத்தம் 10 இல் 9 பொருந்துகின்றது என்று சொல்லிவிட்டார். பங்குத்தந்தையும் தேவாலயத்தில் மோதிரம் மாற்றி விட்டு பின்னர் இந்து முறைப்படி தாலி கட்டுங்கள் பிரச்சினையில்லை என்று பச்சைகொடி காட்டிவிட்டார். ஆனால் இந்த 10 இலும் சரி முன்னர் ஆராயப்பட்ட வரிசையிலும் சரி “மனம்” இருந்திருந்ததா என்பது குறித்த கேள்வியை காலம் போக போக தான் ஆராயத்தொடங்கியது.
நிழலின் அருமை வெயிலில் தானே தெரிவதுண்டு! இவ்வளவு காலமும் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இன்று அந்த பெண்ணின் முகநூலில் பழைய படங்களை எல்லாம் இரசித்து “சிவப்பு இதயம்” ஐ தட்டிவிடுகின்றார், தன்னுடன் இருந்த நாட்களில் “படம் வரைவதை விட வேறு உருப்படியானதை பாரும், எனக்கு இந்த ஓவியங்கள் புரிவதில்லை" என தூக்கியெறிந்து பேசிய அதே ஆண் தான் அந்த பெண் நடாத்துகின்ற ஓவிய கண்காட்சிகளின் போது பூங்கொத்துக்களை அனுப்பி வைக்கின்றார். ஆங்கிலத்தில் பேசு, எழுது .. தமிழ் சோறு போடாது என்று சொன்னவர் தமிழில் கவிதையாக அந்தப்பெண்ணுக்காக எழுதித்தள்ளுகின்றார். இதுவென்ன சத்தம், பாம்புக்கு மகுடி போல என்று தூக்கிவீசிய அந்த பெண் இசைத்த வீணை பாடல்களை இன்று தேடி தன்னுடைய அழைப்போசையாக வைத்திருக்கின்றார். இன்னும் ஒருபடி மேலே போய் டிவிட்டரில் “கண்ணம்மா” என்று பதிலளிக்கின்றார். அந்தப்பெண் தேடியலைந்து வாங்கி கழுத்துப்பகுதில் எம்ரோயிட் செய்தனுப்பிய உடைகளை பிறகு போடுகின்றேன் என்று அலட்சியப்படுத்தியவர் இன்று தினமும் போட்டு இன்ஸ்ராவில் பதிவிடுகின்றார்.எத்தனை நாள் அந்தப்பெண் ஒன்றாக சாப்பிடுவதற்கும், தான் சமைத்த உணவை பற்றி பேசமாட்டாரா என்றும் தவித்திருந்தது, அழுதிருந்தது. இப்போது பல முறை ஒன்றாக போவோமா என்று கெஞ்சிக்கொண்டிருக்கின்றார். பூரணை நாளுக்கு கூட 12 மணிக்கு அந்தப்பெண்ணுக்கு குறுஞ்செய்தியனுப்புகின்றார். புரியாத பிரியங்கள் பிரியும் போது புரியும் என்பார்கள் அவருக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.
முன்னரெல்லாம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பி பதிலுக்கு காத்திருந்து அந்தப்பெண் அழுதிருக்கின்றாள். முதலாக வாழ்த்திவிட்டு கைத்தொலைபேசி சத்தமிடும் போதெல்லாம் ஓடிப்போய் பார்த்துமிருக்கின்றாள். ஒரு நாளில் இருக்கின்ற 1440 நிமிடத்தில் ஒரு நிமிடம் பேசலாமே என்று கெஞ்சியிருக்கின்றாள். இன்று இதெல்லாம் கடந்துவிட்டது. நேசிப்பென்பது மண் மீதும் இருக்கலாம் தான்.
நீங்கள் உங்கள் இணையரோடு அல்லது வருங்கால துணையோடு நடக்கும் போது சற்று வந்த பாதையை திரும்பி பாருங்கள். ஆங்காங்கே சில பூக்கள், முட்கள், சின்ன சந்தோசங்கள், நினைவுகள் இருந்தால் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே கார்ப்பேட் வீதியும், சொகுசு வீடுகளும், பிராடோவும் மட்டும் தான் தெரிகின்றது என்றால் கடந்திருக்கின்றீர்கள் என்றே அர்த்தம். வாழ்தலுக்கும் கடத்தலுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வாழக்கற்றுக்கொள்ளுங்கள்!
அல்பா ஆண்களுக்குத்தான் வாழ்க்கையமைக்க அசாதாரண பெண் மனைவியாக வேண்டும்! அசாதாரண பெண்களுக்கு சாதாரணமானவனின் குட்டி இதயம் போதும் வாழ்வதற்கு. கைகோர்த்து நடப்பதில் உள்ள சுகம் விரலில் அணிகின்ற வைரமோதிரத்தினை விட அலாதியானது. ஸ்கோப்பியனிலும் பிராடோவிலும் ஓரடி தள்ளியிருந்து பயணிப்பதை விட மோட்டார்பைக்கிள் அருகருகே இதயத்துடிப்பு உணர பயணிப்பது கனதியானது!
இருக்கும் போது பிடித்தவற்றினை கொடுக்காது இறந்த பின் மாலயம் செய்வதில் என்ன பயன்? நம்மவர்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்காத நாம் இன்று LinkedIn இல் வந்து அடிக்கடி பார்த்து என்ன பயன்? பிரியங்களை பிரியங்களால் நிரப்ப பாருங்கள். சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கின்றது!
பிற்குறிப்பு 01: ஏற்கனவே பல கவிஞர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் இம்சையே போதுமானது. இன்னுமொரு கவிஞர் வேறு இப்போது தான் உருவாகிக்கொண்டிருக்கின்றார். பரவாயில்லை கவிதைத்தொகுப்பை வெளியிட்டால் புதிய நூலகத்தில் வைத்திட முடியும்!
பிற்குறிப்பு 02: இந்த AI காலத்திலிருந்தாவது இனி வரும் சோதிடர்கள் 11ஆவது பொருத்தமாக "மனதை"வைக்க யோசிக்கலாம். காலம் மாறிவிட்டது தானே

No comments:
Post a Comment